Friday, 19 June 2020

இசையோடு வாழ்பவன் -6


26,                                உதிர்காலம்

அம்மாவின் ஊரிலிருந்து அத்தையின் ஊருக்கு
கூப்பிடு தூரம்தான்
அப்பச்சியூரில் தூங்கியெழுந்து
அத்தையின் வீடுபோய் உணவு உண்டதும்
அத்தையின் தோட்டக் கிணற்றில் குளித்து முடித்து
அப்பச்சியின் வீடுவந்து உடை மாற்றியதும்
பள்ளிப்பிராயத்தின் விடுமுறைநாள் அனுபவங்கள்
நோன்புநொடி நலம்பொலமென
போய்வரக் காரணங்கள் எப்போதுமிருந்தன
சிலநேரங்களில் அப்பச்சியூர் போய்விட்டு
அத்தையூர் போகாமலேயே வந்துவிடும் அம்மா
ஒருபோதும் அத்தையினூருக்குச் சென்றுவிட்டு
அப்பச்சியினூருக்கும் போகாமல்
திரும்பியதில்லை
அப்பச்சியின் காலத்துக்குப்பின்
மாமன்கள் நகரம் பெயர்ந்துவிட
அம்மாவின் ஊருக்கான வழித்தடங்களில்
புல் முளைக்கத் துவங்கிற்று
என்றாலும் அத்தையின் ஊருக்குப் போகும் அம்மா
தான்பிறந்த நிலத்தையும்
கண்டுவிட்டே திரும்பிக் கொண்டிருந்தாள்
ஒன்றுவிட்ட அப்புச்சிமார் வீடுகளின் திண்ணையமர்ந்து
காபி தேநீர் அல்லது மோரோ அருந்தியபடி
சற்றேயமர்ந்துவிட்டு வருவாள்
கூரைசரிந்து காரைபெயர்ந்த அப்புச்சியின் வீட்டை
கண்கள் வெறித்திருக்க
அதேவேலையாக கடந்துபோகும் சாலையை
கடக்க முடியாமல் தோற்றுப்போன அப்பாவை
எடுத்துக்கொண்டுபோய் எரியூட்டிவந்த பிற்பாடு
அம்மா எங்குமே போவதில்லை
நேற்று திடீரென கூறினாள்
இந்த ஒரு வருசத்துல அத்தை
எத்தனையோதரம் வந்துட்டுப் போயிட்டா
நாமளும் ஒருநடையாவது
போயிட்டு வந்துரலாம்
விருந்து உபசாரங்கள் முடிந்து
விடைபெற்றுத் திரும்புகையில்
அப்பச்சியின் ஊருக்கான தடம் வந்ததும் நினைத்தேன்
அம்மாவாகச் சொல்லும் பட்சத்தில்
அங்கேயும் போகலாம்
அம்மா கூறினாள்
நேரா நம்மூருக்கே  போ.

27,             
யாருமற்றவனின் உலகில்
எல்லோரும் இருக்கிறார்கள்
கொம்புகளோடு

28,
இதுவொன்றும் ராஜபாட்டை
அல்லதான்
அதனாலென்ன
இந்த பாட்டைக்கு
நான்தான் ராஜா.

29,
வெறும் வெளியி சிறு கால்கள்
பிடிமானங்களை
தேடித் தவிக்க
மல்லாந்து கிடந்தது
நிலைதிரும்ப உதவினேன்
சற்று நேரத்தில்
கருகும் வாசனை

30,
உட்சிவந்த பிஞ்சு அலகை
திறப்பதும் பின் மூடுவதுமாய்
எறும்புகள் மொய்க்கக் கிடக்கிறது
சற்று நேரத்தில்
செத்துவிடும்தான்
சற்றுநேரம் ஏன்
யுகநீளம் நீள்கிறது.

31,
மேல் ஏறி சிகரம் தொட
மூட்டுவலி முடியாது
சாய்ந்தமர்ந்து அலங்கரிக்க
நாற்காலி கிடைக்காது
குதிரையில் போய் நின்றாலும்
சம்யுக்தை வரமாட்டாள்
போய்
சேர்ந்து விடலாம்தான்
பிறகிந்த பகலிரவுகளையெல்லாம்
யார் பரிபாலிப்பது.

32,
சிறு செடியின்
கிளையளாவும் ஆகாயமும்
அண்ணாந்து பார்க்கும்
உயரமுடையதுதான்
அண்ணாந்து பார்க்க
தெரிந்திருக்க வேண்டும்.

33,
ரத்தம் உறைந்த தலைக்காயங்களுடன்
உள் அணைய அஞ்சி
கொடாப்பையே சுற்றிச்சுற்றி வரும்
இளஞ்சேவற்குஞ்சை
தனியாகவோர் கூடையில் அடைத்தவன்
கூறினான்
வலிமையும் எளிமையும்
சந்திக்கும் புள்ளியில்
கடவுளும் சாத்தானும்
உற்பத்தியாகின்றனர்.

34,
இழவு வீட்டில்
எதேச்சையாகச் சந்தித்துக்கொண்ட
நம் கண்களில் ஊற்றெடுத்த துயரம்
செத்துப் போனவருக்கானதல்ல.

35,
திருவிழா பதாகையின் பின்புலத்தில்
திடீரென பிரசன்னமாகிய நீ
வலதுபாதம் நிலம் ஊன்றி
பார்வையை சுழல விடுகிறாய்
தலைகிரீடம் இறக்கி வைத்து
தோள்கிளியை பறக்க விடுத்து
உன்போலவே பதாகை மாரியம்மனும்
உருமாறத் துவங்கிய கணத்தில்
சட்டென பிரதானசாலைப் புகுந்து
எதிர்திசை விரைகிறாய்
வந்துகொண்டும் போய்க்கொண்டுமிருக்கும்
வாகனங்களையெல்லாம் மறைக்கிறது
நீல வண்ணத்து ஸ்கூட்டி.

36,
இரவு உணவை உட்கொண்டுவிட்டு
குறுக்கிமொடக்கி படுத்திருக்கும் நீயும்
புகைத்தபடி அமர்ந்திருக்கும் நானும்
வாசலென அறியுமிந்த நிலம்
இதுபோல எத்தனை இரவுகளை
பார்த்திருக்கும்
இன்றைய பகலேபோல எத்தனை
பகற்பொழுதுகளையும் பார்த்திருக்கும்
ஐம்பது மாசிகளுக்கு முன்
இந்த நிலம் இருந்தது
நீயும் நானும் இல்லை
ஐம்பது மாசிகளுக்குப் பின்னும்
இந்த நிலம் இருக்கும்
நீயும் நானும் இருக்கப் போவதில்லை
இப்போது புரிகிறதா ஜிம்மி
இந்த நிலம் ஏன்
குரைப்பதுமில்லை
கவிதையெழுதுவதுமில்லையென.


37,
எஸ் எஸ் எல் சியை தாண்டமுடியாதவனும்
முப்பத்தியேழு காதலர் தினங்களை
கடந்து விட்டவனுமாகிய உனக்கு
கடைசியாய் வந்த வரனும்
தட்டிப் போயிருக்கும்
பனியன் கம்பனி பஞ்சுமில்
தறிவேலை என
பலதொழில்கள் தெரியுமுனக்கு
ஆனாலும் உன் அப்பா
இன்னமும் ஆடுதான் மேய்க்கிறார்
உன் அம்மாவின் மாங்கல்யம்
இன்னமும் வெறும் கயிற்றில்தான்
கோர்க்கப்பட்டிருக்கிறது
உடன்படித்த சிலர்
வெளிநாடுகளில் சம்பாதிக்கின்றனர்
உடன் பணிபுரிந்த பலர்
முதலாளி ஆகிவிட்டனர்
மற்றவர்களும் குறைந்தபட்சம்
திருமணமாவது செய்திருக்கின்றனர்
மீசை முளைத்த வயதில்
ஆசைப்பட்ட ருக்குமணி
பெற்றெடுத்த பெண்பிள்ளை
பெரியமனுசி ஆகிவிட்டாளாம்
பத்திரிக்கை வரும்
போய்
சாப்பிட்டுவிட்டு வா.

38,
கொண்டையூசி வளைவின்
தடுப்புச்சுவர்மேல் நின்று
பார்த்தபடியேயிருக்கும் அதன் கண்களுக்கு
எவ்விதம்தான் தோற்றம் காட்டுமோ
இப்பள்ளத்தாக்கு எனும்
யோசனையின் முடிவாக எனக்கும்
முளைத்திருந்தது வால்.

39,
பெட்ரோல் தீர்ந்துவிட்ட மொபட்டை
ஓரங்கட்டி நிறுத்திவிட்டு
கிடக்கும் மதுப்புட்டிகளிலொன்றை
பொறுக்கியெடுத்துக் குறுக்காட்ட
நிற்காமல் போன வண்டிகளிடையே
நிற்கும் பல்சரின் பின்சீட்டில்
நீ அமர்ந்திருக்கிறாய்.

40,
வானவில்
புதுவெள்ளம்
பாப்பாத்திப் பூச்சிகள்
மரவட்டை
பொன்வண்டு என
தொடர்புபடுத்திக்கொண்டே வந்த சிறுமி
சற்றே மவுனித்து
இடிந்தவீடு
பரிதாபச்சாவு
பொட்டலஞ்சோறு
என்றெல்லாம் தொடர்புபடுத்தத் துவங்கியதும் தான்
பெருமின்னல் வெட்ட
அப்பேரிடி இடித்தது
அறம் கூற்றானதேபோல.



 

Sunday, 14 June 2020

இசையோடு வழ்பவன் -5


21,                       பெட்ரமாக்ஸ் லைட்

ஆதியில் ஒரு
பெட்ரமாக்ஸ் லைட் இருந்தது
கோவணோத்தோடு ஊருக்குள்
நுழைந்த புதியவர்களை
குறுக்காட்டிய பண்ணையார் மகன்கள்
தரையிலே நீச்சலடிக்கப் பணித்தார்கள்

இடுப்பிலே குடமேந்திய பெண்கள்
ஆற்றங்கரைக்கு நடந்தார்கள்
சிறுவர்கள்தம் அஞ்சு ஹார்ஸ்பவர்
மோட்டார் தண்ணீரை
ஆற்று நீரில் கலந்தார்கள்

கோழி குருடானாலும்
கொழம்பு ருசியாக இருந்தது
மல்லிகைப் பூவும் அல்வாவும்
வாங்கிச் சென்ற ஓரிரவு
அழகுராஜா கவிஞராய் ஆனார்

கைகுழந்தைக்கு முலைப்பால் கொடுத்து
உறங்கவைக்கும் முன்னிரவுகளில்
கால்தண்டைகளைத்தட்டி
ஓசையெழுப்பிய வெள்ளைச்சாமி
அந்த கவிதைகளையெல்லாம்
பாடத் துவங்கினான்

பெட்ரமாக்ஸ் லைட்டுகள்
இரவைப் பகலாக்குவதில்லை
அழகாக்குகின்றன.
22,                        செம்பொற்காலம்

பால்யத்தின் பொழுதொன்றில்
தொலைந்து போய்
அன்றிரவு முழுதும் அழவைத்த செம்பொன்வண்டு
இதோ இவ்விலந்தைச்செடியில் மேய்கிறது
பிடித்துப்போ என்றது காலம்
அவன் மீண்டும் அழத்துவங்கினான்
வாழ்வின் பொழுதொன்றில்
தொலைந்திருந்தது பால்யம்.
                                              -ஓலைச்சுவடி2016

23,                           போர்-ஜி  4G


கொமரனின் அம்மாவைப் போலவும்
மனைவி மகளைப் போலவும்
அல்லாத கொமரனின் பேத்தி
வந்திருக்கின்றாள்
கூட்டுறவு அங்காடிக்கு


கத்திரிப்பூவின் நிறத்தில்
செம்பருத்தி மலர்கள் அச்சிட்ட நைட்டியில்
ஓரிழைத் துண்டை தோளோடு போர்த்தியவளாய்
நின்றுகொண்டிருக்கிறாள்

மண்ணெண்ணையின் வாசம்
நுகர் நாசிகளுக்கு காற்று
சுழுத்துத் திரும்பும் கணங்களில் வாய்க்கிறது
பேர் அண்ட் லவ்லியின் நறுமணம்

ஆண்கள் வரிசையிலிருந்து ஒருவரும்
பெண்கள் வரிசையிலிருந்து ஒருவருமாக
ரசீதைப் பெற்று நகர
நிழலுக்கு வந்திருந்தாள்

யாரோ கேட்டார்கள்
அதற்கு கொமரனின் பேத்தியும்
பதில் கூறினாள்

அது கொமரனின் அம்மாவும்
மனைவியும் மகளும்
எக்காலத்திலும் கூறியிருக்க முடியாத
பதிலாக இருந்தது
கூற விரும்பிய பதிலாகவும்.
                                  
24,                         பிறழ்வுசூழுலகு

சந்நியாசிகளெல்லாம் வியபாரிகளாக
மாறிவிட்ட காலத்தில்
வியபாரியான நீ
ஒரு சந்நியாசியேபோல அலைந்து திரிகிறாய்
கிளுவைகள் மருங்கமைந்த
வெயில்காயும் இத்தார்ச்சாலையில்
மேலும்சில மைல்கள் நடக்கவேண்டும் நீ
சிறுவர்கள் தெருவாடும் எங்கள் கிராமத்தை அடைய
பாஷை தெரியாத ஊரில் வந்து
பாஷையே தேவைப்படாத குழந்தைகளுக்கு
அவர்தம் விருப்பப் பண்டம் விற்பவனே
உந்தோள்சுமக்கும் மூங்கிற்கழியை
சிலுவையெனவும்
அதில் பொட்டலமாய்த் தொங்கும் பஞ்சுமிட்டாய்களின் வண்ணத்தை
நீர்த்து வெளிறிய குருதியின் நிறமெனவும்
கற்பனை செய்து
உழைத்துண்டு வாழும் உன் ஜீவிதத்தின்மேல்
பரிதாபத்தின் உமிழ்நீரைத் துப்ப விரும்பவில்லை
என்றாலும் தவிர்க்கவே முடியவில்லை
ஆடுதிருடிகளின் உளவாளியாய் யாரேனும் உன்னை
பார்த்துவிடுவார்களோ எனும்
அச்சத்தின் இரக்கத்தை.
                                                    -ஓலைச்சுவடி

25,                         படியாத கண்

இரண்டாவது வரிசை இடமிருந்து வலம் மூன்றாவது இருக்கை
அமர்ந்திருக்குமந்த மாணவிக்கு
தன்னம்பிக்கை டானிக் தேவையில்லைபோல
என்னையே பார்த்தபடியிருகிறாள்
அதாவது கேமராவையே கவனித்துக்கொண்டு இருந்திருக்கிறாள்
அல்லது படம் பிடித்தவனை
புகைப்படம் தாண்டியும் வெளிப்பாய்ந்த
விழிகளின் வீச்சில்
அடுத்த பக்கத்தை திருப்பவும் தோணாது
சமைந்திருந்த கணம்
வசந்த காலத்தின் மழைதரும் மேகம்
எனும் வரிகளுக்கு யேசுதாஸ் வந்திருந்தார்
ஆகவே அவளுக்கு
பைரவி என பெயர் சூட்டினேன்
நிழற்படத்தின் சட்டகத்துக்குள் வராத
பயிலரங்கத்து மேடையில்
யாரோவொருவர் தன்னம்பிக்கை லேகியம் கிண்டியிருப்பார்போல
அருகமர்ந்திருந்த தோழிமார் வதனமெல்லாம்
ஜெயிக்கவும் ஜொலிக்கவுமான வைராக்கியத்தில்
இறுகியிருக்க
பைரவியை வினவினேன்
உனக்கு அவ்வித சபதங்கள் இல்லையா
இறந்த காலத்தின் சாம்பலும்
எதிர் காலத்தின் புழுதியும்
படியாத பைரவியின் கண்கள் கூறின
நானொன்றும் வித்தை காட்டும்
குரங்கு அல்ல.                                        




 

இசையோடு வாழ்பவன் -4


16,                          காப்பு
நடுநிசி உயிர்க்கும்
புரவிமேல் அமர்ந்து
போகுமாம் வேட்டை
வான்வரை வளர்ந்து
ஊரெல்லை அமர்ந்து
புரியுமாம் காவல்
மாசி அமாவாசை
மயான பூசையில்
கேட்குமாம் காவு
ஆணிகள் பதித்த
குரட்டினிலேறி
வழங்குமாம் ஆசி
பொய்யேயாயினும்
போய் நிற்கின்றேன்
கருப்பன் சந்நிதி
புள்ள தலையெடுக்க
விடியும்போ எனும் வாக்கில்
உயிர்த்து
வீடு சேர்ந்தாளாம் அம்மா
அவ்வரளிச்செடி தாண்டி.                     –மணல் வீடு 2008

17,                                 கொம்பு

சற்றே தயங்கி
நீ கடந்து செல்கையில்
குதூகல காற்றினிசை
கிளைகளுட்புகுந்து வெளிப்படும்
விசும்பலாய்

பெருவிருட்சம் பருத்த கிளையுமென
துக்கித்த மனம் கற்பித்திருக்க
வெடித்தலறும் நெஞ்சினளாய்
ஓடோடி வந்தவள்
சிறுகொம்பும் சின்னஞ்சிறு கிளையுங்கண்டு
மவுனமாகினாய்

அதன்பிறகு நீ அழவேயில்லை

நெடுந்தோளன் பருவுடலை
குழந்தையின் கையொத்த
கிளைதாங்கும் திறன்பற்றி
ஊர்
பச்சாதாபத்தினூடே வியந்து களியெய்த
வெறித்தமர்ந்திருந்தாய்
தொங்கும் கால்களுக்கும் நிலத்துக்குமான
விரலளவே இடைவெளியை

விடமுண்ட தேகம்போல்
நிறமாற்றம் கண்டது அவ்வெயில்
முயல்துரத்தும் நாயாய்
விரந்தோடுகிறது காலம்

நீயும்
உன் மலரும் பருவத்து மகளும்
பனியன் கம்பனி பேருந்துவிட்டு இறங்கி
வீடு திரும்பிக் கொண்டிருக்கும் இவ்விரவில்
நீர்த்திரையிட்ட கண்களென மினுங்கிறது
நிலவொளியில் காயுமதன்
ஆயிரமாயிரம் பசிய இலைகள்.
                                             -மணல்வீடு -2008  


18,         
சுவர்களெங்கும்
பதிக்கப்பட்டுள்ளது
நீள்சதுரக் கண்ணாடிகள்
உள் நுழைந்த
நாய் நான்.

19,                       ஸ்மெல்ட்
அந்த  கழுத்து ரிப்பை
ஜாயிண்ட் செய்கையில்
ஓவர்லாக் டெய்லர் மோகனாவுக்கு
போய் முகம் கழுவிவர
தோன்றியது

அந்த கழுத்து ரிப்பை
ஜாயிண்ட் செய்கையில்
பேட்லாக் டெய்லர் சுப்ரமணிக்கு
தம்மடிக்க நினைப்பு வந்தது

முகம் கழுவிவிட்டும்
தம்மடித்துவிட்டும்
வந்தமர்ந்த
சிங்கர் டெய்லர் செந்தில்
லேபிள் வைப்பதற்காக
அந்த கழுத்து ரிப்பை எடுத்து
மார்க் செய்தான்

ஏனோ அவனுக்கு
மூக்கில் வேர்த்தது.
                                          -மணல் வீடு

20,                       புகைபடுபடலம்

கட்டு நடக்கும் மரத்தடியில்
கட்டு நடக்காத நாளொன்றில்
அமர்ந்திருந்த மேய்ப்பன்
பீடியை பற்ற வைத்தான்

பாவமேபோல ஆடுகள்
மேய்ந்து கொண்டிருந்தன
கூட்டிப் போகும் திருட்டுஆடு
கண்முன்னால் படுத்துக் கிடந்தது

கரையாத பீடிப்புகை
சேவலெனத் தோற்றம் கொண்டது
மேலும் புகை ஊதி
மற்றொன்றை எதிர் நிறுத்தினான்

சண்டையிடத் துடித்த சேவல்களிரண்டும்
கட்டுக்கத்திகளையும் ஜாக்கிகளையும்
பந்தயக்காரர்களையும்
வேடிக்கை பார்ப்போரையும் கோரின
மீண்டும் மீண்டும்
பீடிகளை பற்றவைத்தான்

கட்டுக் காட்டின் புழுதி
சாம்பல் நிறமாய் பறந்தது
கத்திக் காயங்களில் குருதி
கருஞ்சாம்பலாய் வடிந்தது
தோல்வியின் ஓலமும்
வெற்றியின் எக்காளமும்
எல்லை மீறிய கணம்
கடைசி பீடியை உருவினான்

துரத்தி ஓடுகையில்
தடுக்கி விழுந்த ஏட்டய்யாவை
மனதில் இருத்தி புகையை ஊதினான்
கைகால் முகம் வயிறென
உருக்கொண்டுவந்த ஏட்டய்யா
சட்டென நிலை மாறினார்

வெள்ளாமை மேயும் திருட்டாடாய்.
                                                   -மணல் வீடு.






Saturday, 13 June 2020

இசையோடு வாழ்பவன் -3


11,                     உயிரருமை

மழைத்துளி மேகமாய்
ஈசல்கள் கரையானாய்
இவையெல்லாம் என்னவாய்

துளிவிழுந்த மறுநாளே
நிலமெங்கும் ஊருமிவற்றின்
உயிர்மூலம் யாது

முளைவிட்ட கேள்விகட்கு
விடைகாணும் ஆவல்
குத்துக்காலிட்டமர வைக்க
கூர்ந்து கவைத்தேன்
ஊர்ந்தபடி நகரும் அதை

விழி இருந்தால் காட்சி இன்பம்
செவி இருந்தால் ஓசை இன்பம்
சிறகிருந்தால் பறத்தல் இன்பம்

எதுவுமே இல்லாமல்
எப்படித்தான் இது
கண் இன்றி மண் தின்று
என்ன பிறவி இது
என்ன கொடுமை இது

விசாரத்திலாழ்ந்த மனம்
எண்ணமற்றுப் போக
வெளிப்பட்டது பெருமூச்சு
எண்ணமிடை சர்ப்பச் சீறலாய்

அதிர்வில் ஆபத்தையுணர்ந்ததுவாய்
மெல்ல உடல் சுருட்டி
சக்கரம் போலாகியது
மரவட்டை

இவ்வுயிரும் வாழ்வும்
தனக்கு அற்பமல்ல
அற்புதம் என்பதாய்.
                             -வடக்கு வாசல்-2008


12,                      நெடுஞ்சாலை நதி

அவதானிப்பின் நொடிபிசகி
முட்டிக்கொண்ட ஊர்திகளின்
முகப்புக் கண்ணாடிகள்
தரையெங்கும் சிதறித் தெறிக்க
தேங்கத் துவங்கிற்று
வாகனப் பெருவெள்ளம்

செத்திருப்பின் யுத்தம் ஏது
தப்பியதால் இறங்கிவந்து
நடக்கிறது வார்த்தைச் சமர்

தம்தரப்பு ஒழுங்கினையும்
எதிர் தரப்பின் பிழைகளையும்
நிறுவும் பொருட்டாய்
சாட்டையென நா சுழட்டி
வீசப்படும் சொற்களெல்லாம்
எதிரான பலன்களையே
ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது

வேடிக்கையின் சுவராஸ்யம்
வடிந்துவிட்ட ஓர்கணத்தில்
பீடிக்கும் பெரும் பதட்டம்

அலுவலக நேரம்
ஆரம்பமாகியிருக்கும்
தொழிற்சாலைச் சங்கு
ஊதி ஓய்ந்திருக்கும்
ஊர் செல்லும் பேருந்து
கிளம்பிப் போய்விடலாம்
வாடிக்கையாளரை இந்நேரம்
வேறொருவன் கவர்ந்திருப்பான்
தரமானது விற்றிருக்கும்
அழுகல்களே காத்திருக்கலாம்
அலங்காரம் முடிந்திருக்கும்
ஆராதனைகளும் நடந்திருக்கலாம்

செக்குமாட்டின் புற்கட்டாய்
முன் தொங்கும் அடுத்த கணம்
யாவரையும் ஆட்டுவிக்க

சாக்கடை உணவை
மரத்தடி புசித்து
அமர்ந்திருக்கும் அவனிடம்
நிரம்பி வழிகிறது

இக்கணத்தின் ருசி.
                            -தூறல்- 2013

13,                      தருணம்

தோளைத்தொட திரும்பியது
நீ அல்ல
வேறு யாரோ

என்றாலும் இக்கணத்தில்
நீயும் திரும்பிப் பார்த்திருப்பாய்
நான் என்று
வேறு ஒருவரை`.
                                   -தூறல்-2014

14,                      பிராயசித்தம்

கொறங்காடுகள்
காய்ந்து போனதால்
காசுக்கு தீனி வாங்கி

வேர்பிடிக்கும் வெங்காயம்
காயாகும் முன்னரே
கருகிடுமோ எனும்பயத்தில்
கிணற்றைத் தூர்வாரி

மட்டைதொங்கும் தென்னைகளை
காண மனம் சகியாது
ஆழ்துளை கிணறு தோண்டி

நொடிந்து போனார் அப்பா
கெடுவிதித்துப் போன கடன்காரன்
வருவதாய்ச் சொன்ன நேரம்பார்த்து

பெய்து காக்கிறது மழை.
                              -தூறல்-2014
15,                        லாவகம்

துகில் விலக்கி
உறங்கும் குழந்தையை
காணுதலே போல

மும்முறமாய் பசியாறும்
அதன் தலைபற்றித் திருப்பி
ஈ மொய்க்கும் அவ்வுணவை
பார்த்துவிட்டு நகர்கிறாய்

நீ
ஞானியாகத்தான் இருக்கவேண்டும்
அல்லாது போனால்
உனைக் கடிக்காமல் விட்ட அது.

                                       -தூறல்-2014








  

இசையோடு வாழ்பவன் -2


6,                           வாசனை

வெண்மேகம்
செம்பழுப்பாய் நிறம் மாறும்
இவ்வந்திப் பொழுதில் நிகழ்ந்தபடியிருக்கிறது
உன் சாகசப் பயணம்

அப்பச்சியின் ஊருக்கும்
உனது ஊருக்குமான தூரம்
அதிகமில்லை என்றாலும்
அதுவுன் பிஞ்சு மனதிற்கு ஏழு கடலளவிற்கும்
ஏழு மலையளவிற்கும் ஏழு உலகளவிற்குமான
தூரத்திலும் தூரம்தான்

விடுமுறையைக் கழிக்க சென்றிறங்கியது முதல்
துணை யாரும் வாராது
நீயாகவே ஊர் திரும்பிக் கொண்டிருக்கும்
இப்பேரனுபவப் பிரயாணம் வரை
திகைப்பும் வியப்புமான அனுபவங்கள் அநேனகமுண்டு
அம்மாவிடம் போய் பகிர்ந்துகொள்ள


ஏதேனுமொரு எழுத்தை
விட்டுவிட்டு உச்சரிக்கும் வார்த்தைகளாலும்
இடையிடையேயொரு வார்த்தையினை
மறந்துவிட்டுப் பேசுகின்ற வாக்கியங்களாலும்
நீ சொல்லப் போகும் கதைகளை
கேட்கப்போகும் ஆவலுடன்
காத்துக் கொண்டிருக்கிறாள் உன் அம்மா
நீ வந்துகொண்டிருக்கும் பேருந்தை எதிர்நோக்கி

உடனே போய்விடலாம் சீக்கிரம் வரவும்
எனும் குறுஞ்செய்தியை அவளுக்கு அனுப்பிவிட்டு
எனதறையின் சன்னல்களை சாத்தத் துவங்குகிறேன்

விருப்பமின்மையோடும்
தவிர்க்கமுடியாமையோடும்
தடுமாறும் பாதங்களை இழுத்துக்கொண்டு வருகிறது
நிர்பந்தத்தின் துர்காந்தம்




காற்றும் வெளிச்சமும் குறைந்த அறையினுள்
மோகமும் மூர்க்கமும் மிகுந்த கரங்களால்
பூவும் பொட்டும் அற்ற கைம்மையை
இழுத்தும் அணைத்தும் தடவியும் வருடியும்
இச்சையின் உச்சம்போய் இறப்பையெய்துங் கணம்
சட்டென இருதயத்தில் துடித்தெழுந்து
உன் அம்மாவின் ரத்த நாளங்களிலெல்லாம்
பாய்ந்தோடத் துவங்குகிறாய் நீ

விறத்து நீண்டிருந்த காமம்
அக்கணமே வேரறுந்து வீழ்ந்துவிட
யானும் கண்டுய்ந்தேன்
பரிசுத்தமாம் குழந்தமையை

பின்வரும் ஏதேனுமொரு நாளில்
கொடுங்கனவொன்றிற்கு வீறிட்டலறியோ
இடிமின்னலுக்கு மன மருட்சியுற்றோ
தாய்மடிபோய் அடைக்கலம் புகுகையில்
நீ உணரநேரலாம் உன் அம்மாவின்மேல் படிந்திருக்கும்
எனது வாசனையை

பிறகு நீயும் தேடத் துவங்குவாய்
அப்போதுமுதல் தொலைந்துபோகும் உன் குழந்தமையை
வேறுவேறு பெண்களிடம். 
                                    -கணையாழி 2013.


7,                          காஞ்சிமாநதி

இறந்து கொண்டிருக்கும்
பேருயிர் ஒன்றின்
கண்களென
சலனமற்றுக் கிடக்கிறது
சாயம் அருந்திய நீர்

அனிச்சையாய் கையுயர்ந்து
மூக்கை பிடித்துக் கொள்ள
அவசரமாய் கடக்கின்றனர்
பாதசாரிகள்


மண்பெற்ற மைந்தர்களின்
சொகுசு ஊர்தியெல்லாம்
ஒலியெழுப்பி விரைகின்றன
ரத்தம் உறிஞ்சி பறக்கும் கொசுக்களாய்

இரக்கமற்று சிதைக்கப்பட்ட ஆற்றின்
பாலத்துமேல் ஓர் முடவன்
யாசித்த படியேயிருக்கிறான்
இரக்கத்தை

நதிநடுவே பாறைமுனை
அமர்ந்திருந்த கொக்கு
பறந்து மேலெழும்பி
விண்ணேகிக் கொண்டிருக்கிறது

பிரிந்து செல்லும் உயிர்போல.
                                         -கனவு- 2013





8,                                 ஆனந்த நடனம்

மின்னலும்
இடியும்
திரளும் கருமேகங்களுமாய்
நுண்மைப் பட்டுக் கொண்டிருந்தது
சூழலின் அமைதி

மரணிக்குங்கணம் விழிகளெய்தும்
பிரகாசமாய் மனம் ஊமையாகும்
கனவு ஒளியில் அலைந்த படியிருந்தேன்
கொறங்காடுகளில்

வெளிச்சம்பெற்ற விழியுருட்டி
பறந்த ஆந்தை சென்றமர்ந்தது
ஒற்றைப் பனையில்
மயிலினெச்சங்கள் கண்ட ஓரிடத்தில்
நின்றேன்


எருக்கலம் புதர்விட்டு
வெளிப்பட்டது முயல்
காரைமுள் உள்ளிருந்து
குறுக்கிட்டன காடைகள்

தாழ்ந்த கிளைபற்றி மரம் ஏறி
வேலியைத் தாண்ட
கூச்சலிட்டோய்ந்தன கொன்னவாய்க் குருவிகள்
பட்டி திரும்பிய ஆடுகளின் குளம்படிகளோடு
இட்டேறியின் மெண்மணலில்
மிதியடியையும் பதித்து நடந்த பாதங்கள் விரைவுபட்டன
அகவல் ஒலித்த திசையின் மிசை

அச்சமும் பதட்டமுமாய் தாழப் பறந்தன
குஞ்சுகளோடு பெண்மயில்கள்
மரங்களின் செடிகளின் கொடிகளின்
இலைகளில் ஆடக்கண்டேன்
ஆயிரக்கணக்கில் மயில்கள்
விரிந்த அன்பின் விரல்நுனிப் ஸ்பரிசமாய்
விழுந்திருந்தது ஓர்
ஒற்றைத்துளி.                        –கனவு இலக்கிய வட்டம் -2008.

9,                         வலியின் நிறம்

உயரே வந்துவிட்டது சூரியன்
சாட்சியாய்
கடை வீதியில் கழிகிறது
இம்முற்பகல்

நின்றிருந்த மினிஆட்டோ
செல்கிறது கிளம்பி
வெறிச்சிட்ட இடம் மனதுள்
தருகிறது கணச்சூன்யம்

அலட்சியமாய் கடக்கிறாள்
பெருமித யுவதி
சலூனிலிருந்து கசிகிறது
வானொலியின் பாடல்
மிதித்து நசுக்கிப் போகிறது
லாரியின் இரைச்சல்


ஈக்களாய் மானுடர்
நிணமும் சாணமும்
மிதித்துப் பார்த்திருக்க
அமுக்கிப் பிடித்திருக்கிறது
முரட்டுக் கரங்கள்

அலறவும் துடிக்கவும் ஏலாது
பாதியறுத்த சங்கின் வழி
பொங்கி வழிந்து
கிண்ணம் நிரப்புகிறது ரத்தம்

கண்ணீராய்.                           –கனவு-2008










10,                       பனியன் மாநகரத்தில்

கனவுகளும் தேவைகளும்
சாண்வயிற்றின் பெரும்பசியும்
கொணர்ந்திங்கு சேர்ப்பிக்க
யாவர்க்கும் காத்துள்ளது
ஏதேனும் ஓர் வேலை

தந்தையோடு பிணக்குற்று
படிப்புவரா பால்பாண்டி
ஓடிவந்த மறுநாளே
சேர்ந்திருப்பான் அடுக்கிக் கட்ட
பிசிருவெட்டி கைமடித்து
தீபாவளிப் போனசுக்குப் பின்
டைலர் எனப் பணியமர்வான்
வேறு ஒரு கம்பனியில்




காட்டுவேலை கந்தனுக்கு
சலவப்பட்டறை வாய்ப்பளிக்கும்
உடன்வந்த சம்சாரம்
செங்கல் சுமப்பாள் சித்தாளாய்
வயசான அப்பன்
வாட்ச்மேனாய் கேட்திறக்க
அம்மாக்காரி வீடமர்ந்து
கட்டிங் வேஸ்ட் நூல் பிரிப்பாள்

படித்த இளைஞர்களும்
படைபடையாய் வந்திடுவர்
கணக்குப்பிள்ளை சூபர்வைசர்
டையிங்மாஸ்டர் என்றாய் ஆவர்

டெய்லர் பால்பாண்டி
செல்போன் அடைந்திருப்பான்
நண்பரொடு பார்ஏகி
சனிக்கிழமை சரக்கடிப்பான்
ஒடுங்கிய கன்னங்கள்
உப்பி மினுமினுக்க
சுலபத் தவணை பைக் ஏறி
சொந்த ஊர் சென்றிடுவான்
திரும்புகையில் அவனோடு
கிராமமே கிளம்பி வரும்

இடம்பெயர்ந்து வருவோர்க்கு
லைன்வீடு காத்திருக்கும்
ஒரேயொரு அறையோடு
புறாக்கூடு போலிருக்கும்
ஊர்ப்புறத்து வீடுகளில்
ஆடப்பாட வசித்துவந்த
விறகும் தண்ணீரும்
இலவசமாய் பெற்றுவந்த
குடும்பங்கள் குடியேறும்
சிரமங்கள் அரங்கேறும்

தீபாவளி பொங்கல்வரின்
நகர் ஆகும் காலியாய்
பத்துநாள் இருபதுநாள்
கழித்தபின்னர் திரும்பிடுவர்
பர்ஸ் இருக்கும் காலியாய்

பவர்டேபிள் கான்ராக்ட்டர்
ஆயிருப்பான் பால்பாண்டி
சகடைலர் இளம்பெண்மேல்
காதல்வரும் கைகூடும்
புறநகரில் நிலம்வாங்கி
வீடுகட்ட ஆசைவரும்
சிறுகச்சிறுகச் சேர்ப்பார்கள்
புறநகரின் நிலமதிப்பு
பெருகிப்பெருகிக் கொண்டிருக்கும்

அரிசிக்காரர் சீட்டுக்காரர்
வந்துவந்து பார்த்துப்போவர்
மாரியம்மன் சாட்டுக்காய்ச் சென்ற
கந்தன்வீடு பூட்டிக் கிடக்கும்
பொறுமையிழக்கும் வீட்டுக்காரர்
மாதத்துக்குப்பின் பூட்டை உடைப்பார்
பழையபாய் ஒன்றுமட்டும்
மூலையிலே சுருண்டிருக்கும்
ஆத்திரத்தில் கிழித்தெறிவார்
வாடகைபாக்கி காகிதத்தை


வாகனங்களின் நெரிசலும்
புழுதியும் புகையும்
பரபரப்பு மனிதர்களும்
பகல்பொழுதின் வெம்மையும்
சாக்கடையும் கொசுக்கடியும்
வசிப்பிடத்தின் நெருக்கடியும்
தினம் ஆகும் பெருஞ்செலவும்
சகிக்கமுடியா ஒருவன்
ஊருக்கு கடிதமெழுதினான்

எல்லா நேரமும் வேலை நேரமாய்
எல்லா நாட்களும் வேலை நாட்களாய்
இயங்கிக் கொண்டிருக்கும் இந்நகரத்தில்

நான் பிழைத்துக் கொண்டிருக்கிறேன்
வாழாமல்.                      
                                     -திருப்பூர் மக்கள் அமைப்பு -2007










இசையோடு வாழ்பவன் -1


1,                                                      குறையொன்றுமில்லை

வழக்கம்போல் இம்முறையும்
வானம் பொய்த்திருக்கும்
இருக்கும் தண்ணிக்கு வெச்சுள்ள கத்தரியில்
இலைச்சுருட்டை விழுந்திருக்கும்

நிலவள வங்கியின் நகைஏல அறிவிப்பு
தபால் கார்டில் வந்து சேரும்
காதுகுத்தும் பிள்ளைக்கு தோடுபோட வேண்டுமென
இளைய தங்கை சொல்லிப்போவாள்

முகம்கண்ட மறுகணமே
அம்மாவென குரலெழுப்பும் காளைகளை
விற்றுவிட்டு ஊர்திரும்புவாய்

நீ விரும்பிய பெண்
தான்விரும்பும் புருசனுடன்
பஸ் ஸ்டேண்டில் எதிர்படுவாள்


திரும்பி நிற்கும் உன்னிடத்தே
வலியவந்து உரையாடி
செளக்கியமா எனக்கேட்பாள்

நல்ல செளக்கியம் என்று சொல்.

                           ஆனந்த விகடன் – 07-07-2002.



2,                      இசையோடு வாழ்பவன்

நாளின் புதிய பொழுது
டிஆரின் பழைய பாடல்களோடு
விடியத் துவங்கும் பூபதிக்கு

வைகைக்கரை காற்றும்
வாசமில்லா மலரும்
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரியும்
நினைவுஅட்டை சமேத கைப்பேசியில் ஒலிக்க

காலைக் கடன் முடித்து
குளித்து உணவருந்தி
வீட்டை விட்டு புறப்படுவான்

வருமானம் தரும் ஊரை வடக்கிலும்
வலிதரும் ஊரை தெற்கிலும்
கண்டடைந்திருக்கும் அவன்

பஸ் நிறுத்தம் போய்ச் சேருகையில்
நூலுமில்லை வாலுமில்லை என
உயிரின் ஓலமேபோல டிஎம்எஸ் கதறத் துவங்குவார்

இனி அவன் வடக்கேகுவதும்
தெற்கேகுவதும்

முதலில் வரும் பேருந்தைப் பொறுத்தது.

                       -ஆனந்த விகடன் - 2014 



 3,                     கடவுளின் காதலி..

ஊருக்கு ஒதுக்குப்புறம் ஒற்றையாய் நிற்கும் அவ்வீட்டில்
ஜீவிக்கிறாள் கடவுளின் காதலி
அங்கன்வாடியில் பணிபுரியுமவள்
வீடு திரும்பியபின் மீதிப்பொழுதுகளை
தனிமையிலும் தனிமையுடனும் கழிக்கிறாள்

ஏசுபடமும் ஏற்பாட்டின் வசனங்களும்
காணக் காட்சிதரும் அவளுடைய வீட்டிற்கு
மலங்கிளுவைகள் கொண்டமைத்த
வேலியொன்றும் இருக்கிறது

மாதங்களின் இடைவெளியில்
சிலிண்டர்காரனும் மின் கணக்கீட்டாளனும்
எப்போதாவது கடவுளும்
வந்துபோகும் அவ்வீட்டிற்கு நானும் சென்றிருந்தேன்
மூவரும் வாராத ஒரு மழை நேரத்தில்



நனைந்த மலங்கிளுவையிலைகள்
அந்தியில் ஒளிர்ந்து நீரைச்சொட்ட
பாலில்லாத தேநீரைப் பருகத் தந்தவள்
தன் கதையைக் கூறினாள்

மேனிலை படிக்கையில் காதலில் தோற்றது
அக்காளைக் கொண்டவனே
தன்னையும் கொண்டது
குழந்தை உண்டானதும் நிர்கதி சூழ்ந்தது
என்றெல்லாம் சொல்லிச் சென்றவள்
கூப்பிட்டால் கேட்காத தூரத்தில் ஊரும்
தகவல் தந்தவுடன் வரவியலா
நெடுந்தொலைவில் மகளும் இருக்க
காலத்தின்வேர் தனை முழுதுமாய் உறிஞ்சித் தீர்க்கும்
அத்தருணம் எவ்விதம் அமையுமோ என வினவினாள்
காலிக் கோப்பையை கீழே வைத்தேன்
சிலிண்டர்காரனும்
மின் கணக்கீட்டாளனும்
கடவுளும்

என்ன சொல்லியிருப்பார்கள்?.         –ஆனந்த விகடன் 2014 

4,               கதைசொல்லியின் கதை…

தாயின் ஊருக்கு சென்றுவந்த
முந்தைய நாட்களைப் போலவே
மகளின் ஊருக்குப் போய் திரும்பும்
இன்றைய நாட்களும்
ஒரு கதைசொல்லி ஆக்கிவிடுகிறது
அம்மாவை

சற்றே மிகைப்படுத்தலும் பெருமிதமுமான
வார்த்தைகளில்
பயணானுபவங்கள் கதைபோல் மலர
நேரம் குறித்தான பிரக்ஞையற்றுக் கேட்பார்கள்
உடன் களையெடுக்கும் பெண்கள்

வெகுநேரம் கழித்துவந்த 12ஏ பேருந்தும்
பரமசிவன் படமெடுத்துக் கொடுத்த சோசியக் கிளியும்
ஒரு கண்ணில் பூ விழுந்த நடைபாதை வியபாரியும்
காட்சிகளாய் விரிய தொடர்ந்தபடியேயிருக்கும் கதை
மேலும் சுவராசியமாய்

சீட்டுச் சேர்த்த பணத்தில் அக்கா
மாவரைப்பான் வாங்கியிருப்பாள்
சீதனமாய் போன பசு
கிடாரிக் கன்றை ஈன்றிருக்கும்
சஷ்டி விரதம்பூண்டு பழனிக்குப் போகிறார்கள்
மாமனார் மாமியார் பரவாயில்லை
கொழுந்தனுக்கு மில்வேலை
பெண்தேடி வருகிறார்கள்
என்றெல்லாம் போகும் கதை சட்டென்று நின்றுவிடும்

சூழ்ந்த நிசப்தத்தில்
துணுக்குற்ற பெண்கள் தலைநிமிர்ந்து பார்க்க
அழுது கொண்டிருப்பாள் அம்மா

ஞாபகத்திற்கு வந்திருக்கும்
வரும்வழியில் கண்ட
தலைப்பேரனின்

சின்னஞ்சிறு குழிமேடு.                          –தூறல்-2008


5 ,                மழபேஞ்ச காத்தால….

செந்தண்ணீர் தேங்கிய
ஊர்க்குளத்திலும் பள்ளங்களிலிமிருந்தும்
ஓயாது வரும் தவளைகளின் சத்தம்
சேவல்களையும் முந்திக்கொண்டு
எழுப்பிவிடும்

எச்சரிக்கையாய் எடுத்து வைத்திருந்தும்
சாரல்பட்டு ஈரமான விறகு
எரிய மறுத்து புகையும்
எரிச்சலுறும் அம்மா சீமெண்ணையையூற்றி
பற்ற வைப்பாள் அடுப்பை

விதை மஞ்சட்சோளம் நரிப்பயிரை நனைத்து
மூட்டையாகக் கட்டிக்கொண்டு
தோட்டம் கிளம்புவார் அப்பா
கூடவேபோகும் மூத்தவன் சாணியள்ளிக் கொட்டி
பின் கறந்து தரும் பாலைப் பெற்று
வீடுவந்து சேருவான் பளிச்சென்று விடிந்திருக்க

ஒத்தையேருக்கும் வக்கில்லா நொடிஞ்ச குடியானவனும்
மாடுபூட்டி உழுது மாளா பரவடி பண்ணையகாரனும்
டிராக்டரைத் தேடி பஸ்நிறுத்தம் போவார்கள்
சாப்பாட்டுக் கூடையுடன் விதைப்பு விழும் காட்டிற்கு
அவசரமாய் கிளப்பிச் செல்வாள் அம்மா

தேங்காய் சிரட்டையினுள் மழையீரமண் நிரப்பி
இட்டிலிகள் சுட்டும் கோழிக்கூடு கட்டியும்
உயிரும் உறுப்பும் பெற்ற குங்குமத் திலகமெனத் திரியும்
பாப்பாத்திப் பூச்சிகளை சேகரித்தும்
வேலாமரம் மலிந்த சரளைக் காடுகளில்
செம்பொன்வண்டுகளைத் துரத்தியும்
போனவருடம் காளான்கள் புடைத்திருந்த
புற்றுகளைப் போய் பார்ப்பதுமாய்
நிற்க நேரமிருக்காது பொடியான்களுக்கு
சனி ஞாயிறாகயிருந்து
பள்ளியும் விடுமுறையெனில்




கோடையின் கடைசிப் பகல் முடிந்து
பருவத்தின் முதல்மழையும்
பெய்துவிட்டதற்குப் பின் விடியும்
காலைப்பொழுதில்
வாழ்ந்த சலுப்பில் வாசல்திண்னையுடன்
முடங்கிய பாட்டன்களும் எழுந்து நடமாடியபடி
நடுவீதி ஆட்டுரலில் தேங்கிய நீரைவைத்து
அளவு கணக்கிட்டு ஆருடம் சொல்லிக் கொண்டிருக்க

பற்றவைத்த பீடியை புகைக்கவும் தோணாமல்
வெறுமனே சூனியம் வெறித்துக் கொண்டிருப்பான்
ஊரின் எல்லையில்

சூளைபோட்டு செங்கல் அறுக்கும் அவன்.           –கணையாழி 2005.