21, பெட்ரமாக்ஸ் லைட்
ஆதியில் ஒரு
பெட்ரமாக்ஸ் லைட் இருந்தது
கோவணோத்தோடு ஊருக்குள்
நுழைந்த புதியவர்களை
குறுக்காட்டிய பண்ணையார் மகன்கள்
தரையிலே நீச்சலடிக்கப் பணித்தார்கள்
இடுப்பிலே குடமேந்திய பெண்கள்
ஆற்றங்கரைக்கு நடந்தார்கள்
சிறுவர்கள்தம் அஞ்சு ஹார்ஸ்பவர்
மோட்டார் தண்ணீரை
ஆற்று நீரில் கலந்தார்கள்
கோழி குருடானாலும்
கொழம்பு ருசியாக இருந்தது
மல்லிகைப் பூவும் அல்வாவும்
வாங்கிச் சென்ற ஓரிரவு
அழகுராஜா கவிஞராய் ஆனார்
கைகுழந்தைக்கு முலைப்பால் கொடுத்து
உறங்கவைக்கும் முன்னிரவுகளில்
கால்தண்டைகளைத்தட்டி
ஓசையெழுப்பிய வெள்ளைச்சாமி
அந்த கவிதைகளையெல்லாம்
பாடத் துவங்கினான்
பெட்ரமாக்ஸ் லைட்டுகள்
இரவைப் பகலாக்குவதில்லை
அழகாக்குகின்றன.
22, செம்பொற்காலம்
பால்யத்தின் பொழுதொன்றில்
தொலைந்து போய்
அன்றிரவு முழுதும் அழவைத்த செம்பொன்வண்டு
இதோ இவ்விலந்தைச்செடியில் மேய்கிறது
பிடித்துப்போ என்றது காலம்
அவன் மீண்டும் அழத்துவங்கினான்
வாழ்வின் பொழுதொன்றில்
தொலைந்திருந்தது பால்யம்.
-ஓலைச்சுவடி2016
23, போர்-ஜி 4G
கொமரனின் அம்மாவைப் போலவும்
மனைவி மகளைப் போலவும்
அல்லாத கொமரனின் பேத்தி
வந்திருக்கின்றாள்
கூட்டுறவு அங்காடிக்கு
கத்திரிப்பூவின் நிறத்தில்
செம்பருத்தி மலர்கள் அச்சிட்ட
நைட்டியில்
ஓரிழைத் துண்டை தோளோடு போர்த்தியவளாய்
நின்றுகொண்டிருக்கிறாள்
மண்ணெண்ணையின் வாசம்
நுகர் நாசிகளுக்கு காற்று
சுழுத்துத் திரும்பும் கணங்களில்
வாய்க்கிறது
பேர் அண்ட் லவ்லியின் நறுமணம்
ஆண்கள் வரிசையிலிருந்து ஒருவரும்
பெண்கள் வரிசையிலிருந்து ஒருவருமாக
ரசீதைப் பெற்று நகர
நிழலுக்கு வந்திருந்தாள்
யாரோ கேட்டார்கள்
அதற்கு கொமரனின் பேத்தியும்
பதில் கூறினாள்
அது கொமரனின் அம்மாவும்
மனைவியும் மகளும்
எக்காலத்திலும் கூறியிருக்க முடியாத
பதிலாக இருந்தது
கூற விரும்பிய பதிலாகவும்.
24, பிறழ்வுசூழுலகு
சந்நியாசிகளெல்லாம் வியபாரிகளாக
மாறிவிட்ட காலத்தில்
வியபாரியான நீ
ஒரு சந்நியாசியேபோல அலைந்து திரிகிறாய்
கிளுவைகள் மருங்கமைந்த
வெயில்காயும் இத்தார்ச்சாலையில்
மேலும்சில மைல்கள் நடக்கவேண்டும்
நீ
சிறுவர்கள் தெருவாடும் எங்கள்
கிராமத்தை அடைய
பாஷை தெரியாத ஊரில் வந்து
பாஷையே தேவைப்படாத குழந்தைகளுக்கு
அவர்தம் விருப்பப் பண்டம் விற்பவனே
உந்தோள்சுமக்கும் மூங்கிற்கழியை
சிலுவையெனவும்
அதில் பொட்டலமாய்த் தொங்கும் பஞ்சுமிட்டாய்களின்
வண்ணத்தை
நீர்த்து வெளிறிய குருதியின் நிறமெனவும்
கற்பனை செய்து
உழைத்துண்டு வாழும் உன் ஜீவிதத்தின்மேல்
பரிதாபத்தின் உமிழ்நீரைத் துப்ப
விரும்பவில்லை
என்றாலும் தவிர்க்கவே முடியவில்லை
ஆடுதிருடிகளின் உளவாளியாய் யாரேனும்
உன்னை
பார்த்துவிடுவார்களோ எனும்
அச்சத்தின் இரக்கத்தை.
-ஓலைச்சுவடி
25, படியாத கண்
இரண்டாவது வரிசை இடமிருந்து வலம்
மூன்றாவது இருக்கை
அமர்ந்திருக்குமந்த மாணவிக்கு
தன்னம்பிக்கை டானிக் தேவையில்லைபோல
என்னையே பார்த்தபடியிருகிறாள்
அதாவது கேமராவையே கவனித்துக்கொண்டு
இருந்திருக்கிறாள்
அல்லது படம் பிடித்தவனை
புகைப்படம் தாண்டியும் வெளிப்பாய்ந்த
விழிகளின் வீச்சில்
அடுத்த பக்கத்தை திருப்பவும் தோணாது
சமைந்திருந்த கணம்
வசந்த காலத்தின் மழைதரும் மேகம்
எனும் வரிகளுக்கு யேசுதாஸ் வந்திருந்தார்
ஆகவே அவளுக்கு
பைரவி என பெயர் சூட்டினேன்
நிழற்படத்தின் சட்டகத்துக்குள்
வராத
பயிலரங்கத்து மேடையில்
யாரோவொருவர் தன்னம்பிக்கை லேகியம்
கிண்டியிருப்பார்போல
அருகமர்ந்திருந்த தோழிமார் வதனமெல்லாம்
ஜெயிக்கவும் ஜொலிக்கவுமான வைராக்கியத்தில்
இறுகியிருக்க
பைரவியை வினவினேன்
உனக்கு அவ்வித சபதங்கள் இல்லையா
இறந்த காலத்தின் சாம்பலும்
எதிர் காலத்தின் புழுதியும்
படியாத பைரவியின் கண்கள் கூறின
நானொன்றும் வித்தை காட்டும்
குரங்கு அல்ல.
No comments:
Post a Comment