1, நல்
நிமித்தம்..
நெல்லே காயப்போடலாம்போல கிணறுகள்யாவும்
நிலம்காய்ந்துகிடக்கும் இவ்வேடையில்
ஆயிரம் ரூபாய்க்கு எங்கேதான்
போவேனோயென புலம்பினாள்
தலையிலே கைவைத்து திண்ணைக்காலில்
சாய்ந்துகிடந்தவள் யோசனைக்குப்பின்
எழுந்து
வாசல்படல்திறந்து தெருவில் ஏறினாள்
ஆசாரத்திலமர்ந்திருந்த பண்ணாடி
யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்
சுவர்நிழலில் சுருண்டிருக்கும்
நாய்களையும்
சலதாரையைக் கிளறிக்கொண்டிருக்கும்
கோழிகளையும்
வேடிக்கை பார்த்தவண்ணம் வீதியை
வெறித்தபடி
வாசலிலே காத்திருந்தாள்
வெறிச்சிட்டுக்கிடக்குமிவ் வீதியில்
நிறந்த சுமங்கலியோ வாலைக்குமரியோ
பத்து எண்ணுவதற்குள் வந்துவிட்டால்
தான் வந்துநிற்கும் காரியம் ஜெயமாகிவிடுமென
உள்மனசு சொல்லியது
‘நீ சத்தியுள்ள சாமீங்கிறது உண்மைன்னா
யாரேனுமொருவர் வந்தேவிடவேணு’மெனப்
பிரார்த்தித்து
ஒன்றிலேயிருந்து எண்ணத் துவங்கினாள்
‘அட கிறுக்குப்பயமவளே.. நீ சத்தியுள்ள
சாமீங்கிறது உண்மைன்னா
இந்நிலமையை ஏன் கொடுத்தாய் என்றல்லவா
கேட்டிருக்கவேண்டும்?’ என வினவிவிட்டு
மவுனமாகியது
வாலைக்குமரியோ நிறைந்த சுமங்கலியோ
தென்படாத வீதி.
2, எளியதன்உலகு..
எளிய உயிரொன்று
மதுவருந்திக் கொண்டிருக்கிறது
சாதாரண மதுவல்ல..
மாநில நெடுஞ்சாலையில் வடக்கே ஏழு
கிலோமீட்டர்களும்
தேசிய நெடுஞ்சாலையில் மேற்காக
ஆறு கிலோமீட்டர்களும்
பயணித்து வாங்கிவந்த மது
ஒரு குவார்ட்டருக்கு
இரண்டு ஆம்லெட்டுகள் எதேஷ்டம்
ஆனால், இரண்டு கோல்டுபில்டர்கள்
போதுவதேயில்லை
மேலும்சில பீடிகளாவது தேவையாயிருக்கிறது
நினைத்துநினைத்துக் கரையவும்
எண்ணியெண்ணிக் குமையவும்
ஏதேனும் லபித்துவிட்டால்
ஒரு குவார்ட்டருமேகூட போதுவதில்லை
அப்புறமந்த எளியவுயிர்
தன் எளிய மேல்சட்டையைத் தரித்து
தன் எளிய வாகனத்தை எடுத்துக்கொண்டு
கிளம்ப எத்தனிக்க அசரீரி அறிவுறுத்துகிறது
‘வாகனங்கள் பெருகியோடும் சாலையில்
இந்த நேரத்தில் இந்த நிலமையில்
போவதும் வருவதும் ஆபத்தானது’
பயந்துபோன எளியவுயிர்
வண்டியை நிறுத்திவிட்டுவந்து
பீடியைப் பற்றவைத்தபடி
தனக்குள் முனகிக்கொள்கிறது
‘வலுத்த இவ்வுலகில்
இளைத்த ஓருயிராய்
வாழ நேர்வதைவிடவுமா?’
3, கணத்துவம்
இருபத்தி நான்கு வருடங்களும் நான்கு
மாதங்களும்
இரண்டு நாட்களுமாகிய ஒருவன்
தான் கட்டிக்கொள்ள இருக்கும் பெண்ணின்
ஜாதகத்தை நீட்டினான்
இருபத்திநான்கு வருடங்களும் பத்து
மாதங்களும்
இருபத்தியேழு நாட்களும் ஆகிவிட்ட
அந்தப் பெண்
கார்த்திகை நட்சத்திரம் ஒன்றாம்
பாதத்திலே பிறந்திருந்தாள்
பன்னிரெண்டிலே செவ்வாய் அமர்ந்திருந்தது
நட்சத்திரப் பொருத்தம் நன்றாக
இருந்தது
கிரகநிலைப் பொருத்தங்கள் சிறப்பாக
இருந்தன
தசா சந்தி தோசங்கள் தற்போது இல்லை
வருங்காலத்திலும் வராது என்றேன்
உவகையுடனவன் விடைபெற்றுச் சென்றதுமுதல்
சலதாரைத் தண்ணீருக்கு வளர்ந்துநிற்கும்
கத்தரிச்செடிகளையே
வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன்
என்னுடைய இருபத்திநான்கு வருடம்
நான்குமாதம் இரண்டுநாள்
ஞாபகத்திற்குவர மறுக்கிறது
வந்தவரைக்கும் அதிலே ஒன்றுமேயில்லை
ஆனால், கத்தரியிலைகளின் சிறுநரம்புகளில்
ஐம்புலன்களாலும் அனுபவிக்கமுடியாத
இன்பம் ஓடிக்கொண்டிருக்கிறது.
4, சுழல்
விதைப்புக்கு உழவுசெய்ய
வாடகைக்கு டிராக்டர் அமர்த்துகிறது
’இடும் வெள்ளாமைகளெல்லாம் வீடுவந்து சேர்ந்துவிடும்’
எனும் நம்பிக்கை
கைக்காசுக்கு டீசலடித்து
கடனுக்குப்போய் ஏரோட்டிவிட்டு
வருகிறது
‘அறுவடையானதும் வசூலுமாகிவிடும்’ எனும் நம்பிக்கை
விதைத்து வளர்த்த வெள்ளாமை காட்டோடு
போனாலும்
எழுதிவைத்த உழவுகணக்கு நோட்டோடு
போனாலும்
விதைக்காமலும் உழாமலும் இருக்கவே
முடியாதுயென
கண்ணைமூடிச் சுற்றியபடியேயிருக்கிறது
நம்பிக்கைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட
ஓர் உண்மை
அல்லது பொய்.
5,
பக்கவாதம் பீடித்து
படுத்திருப்பவரின் கட்டிலுக்குமேல்
எழுந்து உட்கார உதவியாக
கயிறொன்று தொங்கவிடப் பட்டிருக்கிறது
எழுந்து
உட்காருவதற்கு மட்டுமே
உதவட்டும்.
6, தசையாட்டம்
நலம்பொலம் என்றால்மட்டும் போய்
நின்றுவரும்படியாய் சில வாசல்கள்
அவ்வாசல்களுக்கும் பந்தல்களுக்கும்
பக்கவாட்டிலே வளர்ந்துநிற்கும்
தென்னைகளுக்கும்
ஒரு மகத்துவம் இருக்கிறது
உடைந்துவிடுவோமோ என்றும்
உடையவே கூடாது என்றும்
உதடுகளை இறுக்கி
அமர்ந்திருக்கச் செய்யும் மகத்துவம்
ஒரே குழைக்காய்களுக்குள் உண்டாகிய
பகையை
யாருமறியாது ரகசியமாய் கண்ணீர்மல்கவைக்கும்
அன்பாக மாற்றிவிடும் காலம்
திகைத்துப்போய் உறைகிறது
இந்த வீம்பை மட்டும்
ஏதுஞ்செய்ய இயலாததாய்.
7, சொன்னார்கள்
கம்பனி இடம் மாறிவிட்டதாம்
முதலாளி அவைத் தலவைர் ஆகிவிட்டாராம்
எல்லாவற்றுக்கும் பீஸ்ரேட்தான்
ஷிப்ட்டுமுறை கிடையாதாம்
எழுநூறு கேரண்டி, ஸ்பீடு கையென்றால்
ஆயிரத்துக்குக் குறையாதாம்
பானுவை விசாரிக்காது எப்படி? பையனாம்
நாகராசுவின் மனைவி?
இரண்டே வாரத்தில் திரும்பி விட்டாளாம்
சின்னத்திவ்யாவுக்கும் திருமணமாகிவிட்டதாம்
கொசு டெய்லராகி விட்டாளாம்
கணேசன் சொந்த ஊருக்கேபோய் ரேசன்கடையில்
அரிசி அளக்கிறானாம்
அந்த சம்பவத்திற்குப் பின்
அர்ச்சுனன் வருவதில்லையாம்
தோட்டத்தில் களமமைத்து தேங்காய்
வியபாரமாம்
பெரிய திவ்யாவுக்கும் ரெடியாகிவிட்டதாம்
காதல்தானாம் முருகேசன் அல்லவாம்
ஆனாலும் பார்ப்பதற்கு
முருகேசனைப் போலவேதான் இருக்கிறானாம்.
8, பரிணாமவீழ்ச்சி
ஆதியில்
ஒரு கலெக்டர் நாற்காலி இருந்தது
பிறகது டாக்டர் நாற்காலியாகவும்
வக்கீல் நாற்காலியாகவும் ஆனது
ஜீவிதத்தின் பலிரவுகளில்
மீண்டுமது ஆசிரியர் நாற்காலியாகவும்
தாசில்தார் நாற்காலியாகவும்
குமாஸ்தா நாற்காலியாகவும்
உருமாறி உருமாறி
உருமாறி உருமாறி
திடீரென ஓர்நாளில்
ஓர்நாளில்
ஓர்நாளில்…
9, காதல் வாகனம்
எட்டுமணிக்கு ஐந்து நிமிடம் இருக்கவே
வந்துவிடும் செல்வக்குமார்
எப்போதும்போலவே
வந்துகொண்டுதானிருக்கிறது
செல்வக்குமாருக்கு ஐந்துநிமிடம்
இருக்கவே
வந்துவிடும் பாலாமணியும்
பாலாமணிக்கு ஐந்துநிமிடம் இருக்கவே
வந்துவிடும் பழனிச்சாமியும்தான்
இப்போதெல்லாம் வருவதேயில்லை
ஆனபோதிலும் இல்லாமலில்லை
எட்டுமணிக்கு ஐந்து நிமிடம் இருக்கவே
வந்துவிடும் செல்வக்குமாருக்காக
காத்துகொண்டிருப்போரில்
பாலாமணியைப்போலொரு
பாலாமணியும்
பழனிச்சாமியைப்போலொரு
பழனிச்சாமியும்.
.
10, அடுத்தடுத்த காட்சிகள்
அருகே சென்றதும்தான் தெரிகிறது
அந்நடைவெளிச்சம் ஒரு கடையுனுடையதென
வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி
போனதும்தான் தெரிகிறது உள்ளேயொரு
வீடும் இருக்குதென
சிகரெட் வேணுமெனக் கேட்கையில்தான்
தெரிகிறது
ஆசாரத்துக் கட்டிலில் ஒரு வயோதிகர்
படுத்திருக்கிறாரென
சமையல்கட்டிலொரு கிழவி சமைத்துக்
கொண்டிருக்கிறாளென
எழுந்துவந்து அக்கிழவர் சிகரெட்டை
நீட்டும்போதுதான் தெரிகிறது
பொட்டிட்டு மாலையுமிட்ட புகைப்படமொன்று
ஆசாரத்து மேசுவரில் மாட்டப்பட்டிருக்கிறது
என
சிகரெட்டைப் பற்றவைத்துவிட்டு
தீப்பெட்டியை
திருப்பிக் கொடுக்கும்போதுதான்
தெரிகிறது
நரைத்த புருவத்தின் கீழிருக்கும்
அவ்விழிகளில்
இன்னும் அழுதயீரம் காய்ந்திருக்கவில்லையென.
12, கால் ரிஜிஸ்டர்
கைப்பேசியை நோண்டியபடிக்கே
முன்னால் நின்றிருப்பவர்
‘தங்கவேலை’ ‘தங்கவெல்’ என
பதிந்து வைத்திருக்கிறார்
‘தங்கவெல்’லிடமிருந்து மொத்தம்
நான்கு தவறிய அழைப்புகள் வந்திருந்தது
அதற்கும்கீழே பானுமதியை இவரே
மூன்றுமுறை அழைத்து பேசியிருந்திருக்கிறார்
எல்லாவற்றுக்கும்மேலே வேணுகோபால்
இவரை இரண்டுமுறை அழைத்து பேசியிருந்திருக்கிறார்
பானுமதி வேணுகோபால் பெயர்கள்
பிழையின்றி பதிக்கப்பட்டிருக்கிறது
சொல்வதற்கு ஒன்றுமில்லை
கேட்க இரண்டு இருக்கிறது.
13, நோக்கக் களி..
முளைக்க வேண்டியதெல்லாம்
முளைத்தும் விடும்
துளிர்க்க வேண்டியதெல்லாம்
துளித்தும் விடும்
பூக்க வேண்டியதெல்லாம்
பூத்தும் விடும்
காய்க்க வேண்டியதெல்லாம்
காய்த்தும் விடும்
கனிய வேண்டியதெல்லாம்
கனிந்தும் விடும்
என்கடன் கண்டு களித்தலே.
14, ஜெமினி..
வண்டிப்பாதை முடிவடைந்ததும்
வாகனத்தை நிறுத்தச் சொன்ன பண்ணாடி
கீழிறங்கி நடக்கத் துவங்கினார்
தோட்டத்தின் மறுமூலையில்
ஆட்டுப்பட்டி கிடந்தது
கழுத்தில் கயிறிட்டு வெளியே
இழுத்து வந்தவர் மேலும் தொடர்ந்திழுக்க
நகரமறுத்து முரண்டு பிடித்தது
‘தெரியாம ஏத்தியுட்ருலாம்னா முடியாது
போலிருக்கே..’
என முணமுணுத்தவர் மனைவிக்கு போன்
செய்தார்
‘அவன எழுப்பி அனுப்பி வை’
தூக்க கலக்கமும் துருத்திய நெஞ்செலும்புமாய்
கைப்பேட்டரியின் வெளிச்சத்தில்
வந்துசேர்ந்த அச்சிறுவன்
கழுத்தைக் கட்டிக்கொண்டு நெற்றியில்
முத்தமிட்டு
‘வா ஜெமினி போகலாம்’ என கயிற்றை இழுத்தான்
‘நீ இழுக்கவே வேணாம். நானே வருவேன்’
என்பதேபோல அவ்விரிகொம்பு செம்மறிக்கிடாய்
அவனைப் பின்தொடர்ந்தது
சொல்லவே தேவையில்லை என்றபோதிலும்
ஏனோ அவனுதடுகள் சொல்லிக்கொண்டேயிருந்தது
‘வா ஜெமினி போகலாம்
வா ஜெமினி போகலாம்.’
15, பிரம்ம முகூர்த்தம்..
வழக்கமாக சேவல்கள்தான் எழுப்பிவிடும்
சிலசமயம் குயில்கள்
எப்போதேனும் அரிதாய் தண்ணீர்தாகம்
முட்டிநிற்கும் சிறுநீர் அல்லது
அவசர ஊர்திகளின்
சைரனொலி
இன்றைக்கு ‘அரகரா..’ எனும் ஒற்றைக் குரல்
குரல் என்பது எங்கிருந்து வருகிறது?
குரல்வளையிலிருந்துதானே..?
அந்தக் குரல்வளையைக் கற்பனை செய்தேன்
குரல்வளையிலிருக்கும் உணவுக்குழலை
கழுத்தை தலையை முகத்தை மேலும்
முகமிருக்கும் சரீரத்தை உள்ளிருக்கும்
மனதை
அதன் கனவை அறிவை அறியாமையை
ஒருவழியாகப் போய்ச் சேர்ந்ததும்
ஒற்றை ‘அரகரா’வுக்குரியவன்
கூறினான்
எதிர்நீச்சல் என்பதெல்லாம்
தரையில்தான் முட்டி நிற்கும்
போக்கிலே போனால்தான்
சமுத்திரங்கள் மடிவிரிக்கும்.
16, க.சீ. சிவகுமார்..
ஒருவருடம் ஆகிவிட்ட உன்குழிமேட்டில்
கொழுக்கட்டாம் புற்கள் முளைத்து
கிளைத்து
பூட்டைவாங்கி
வறண்டும் போய்விட்டிருந்தன
கால்மேட்டிலோர் பெரும்பூளை
பூத்துக் குலுங்கிய படியிருந்தது
அண்டமாநதியோ வேலிமுள்ளடந்த
வனமாகி விட்டிருந்தது
நீ குடிப்பதையும் புகைப்பதையும்
விரும்பவே விரும்பாத உன்
அப்பாவும் பெரியப்பாவும் உனக்கான
படையலில்
குவார்ட்டர் பிராந்தியும் கோல்டுபில்டர்
சிகரெட்டும்
அவசியம் வேண்டுமென்றனர்
புற்களுக்கு நடுவிருந்த
சிறு வெற்றிடத்தில்
கற்பூரத்தைப் பற்றவைத்த உன் பெரியதங்கை
மீண்டுமொருமுறை விசும்பியோய்ந்தாள்
அனைவரையும் அனுப்பிவிட்டு
நான் மட்டும் காத்திருந்தேன்
கொழுந்துவிட்டு முழங்கும் கற்பூரம்
கொழுக்கட்டாம் புற்களில்
பற்றிவிடுமோ எனப் பயந்து
பற்றவேயில்லை
தான்மட்டும் எரிந்து
தான்மட்டும் கரைந்தது.
17, விழிச்சித்திரம்…
கழிப்பறை அமர்ந்து பீடியைப் புகைத்தபடி
கைப்பேசியிலெதையோ
பார்த்துக்கொண்டிருக்கிறான்
ஹெல்ப்பர் முருகேசன்
சைடுஅடித்த பீசுகளில் ஸ்ட்ரைப்பிடுகள்
செட்டாகவில்லையென
ஏகத்துக்குத் திட்டுகிறான்
குவாலிட்டி கண்ட்ரோலன்
காணாது போய்விட்ட முருகேசனை
கரித்துக் கொட்டியபடி தானே சுருக்குப்பிடித்து
பனியன்களைத் தைக்கத் துவங்குகிறாள்
முகம் சிறுத்துப்போன பானு
டிரம்நீர் அருந்தி சட்டைக் காலரினால்
தாடைஈரம் துடைத்து வந்துசேர்ந்த
முருகேசை
‘கெரகம் புடிச்சவனே… எங்கடா போய்த்
தொலஞ்சே..?’ என
வைவதற்கு வாய்திறந்து
சட்டென மவுனமாகிறாள்
எதையோ பார்த்துவிட்டு வந்தவனின்
கண்களில்
எதனையோ பார்த்துவிட்டவளாக.
,
18, முச்சந்தி
இன்றைய தினத்தந்தியின் மூன்றாம்
பக்கத்தில்
நம்மைப் பற்றிய செய்தியொன்று
வந்திருக்கிறது
என்றைய தினத்தந்தியின் மூன்றாம்
பக்கத்திலும்
நம்மைப் பற்றிய செய்திகள்தான்
வந்தபடியேயிருக்கிறது
நம்மைப் பற்றிய செய்திகள்தான்
தினத்தந்தியை
நம்பர் ஒன் நாளிதழாக வைத்திருக்கிறது
மிகவும் பரிச்சியமான வார்த்தைகளைக்
கொண்டு
ரொம்பவே பழக்கமான தலைப்பில்
வெளிவந்திருக்கும் அச்செய்தியில்
உன் பெயருமில்லை
என் பெயருமில்லை
உன் புகைப்படமுமில்லை
என் புகைப்படமுமில்லை
ஆனாலுமது
நம்மைப் பற்றிய செய்திதான்.
19, பிறர்நிரைகவரல்…
மின்மினிகளைக் கவ்விச்சென்று
குஞ்சுகளின் அறைக் களிமண்ணில்
பதித்து வைக்கும் வழக்கமுடை
தூக்கணாங் குருவிகள்
போதாத வேளைவரின்
மின்மினியென நம்பி அனற்துணுக்கை
கவ்விப் பறத்தலே போல நானுமுனைக்
கவ்விக்கொண்டு பறக்கிறேன்
கூடடைவதற்குள் என் காதலுனை
மின்மினியாய் மாற்றிவிடும்.
20, நினைவேந்தல்…
இதேபோன்ற அந்திப் பொழுதுகளில்
நீ
அதே வேளையாக வந்து அமர்ந்திருப்பாய்
அந்த வெள்ளை வேலாமரத்தடியில்
அவ்விடத்தைக் கடக்கும்
போதெல்லாம்
ஈரிழைத்துண்டு போர்த்திய தோள்களோடும்
உன் அப்பாவின் சட்டையோடும் பூப்பூவாய்ப்
பூத்திருக்கும் பாவாடையோடும் பொட்டிட்ட
நெற்றியோடும்
பவுடர் பூசிய முகத்தோடும் நீ இன்னமும்
அமர்ந்திருக்கிறாய் என்றே நினைத்துக்
கொள்வேன்
அந்த வெள்ளை வேலாமரத்தை
வேரோடு பிடுங்கி விட்டார்கள்
சாலையை அகலப்படுத்தப் போகிறார்களாம்
நல்லது. நானென்ன செய்ய முடியும்?
என்னால் என்னதான் செய்துவிடவும்
முடியும்?
வெள்ளைவேலா மரமில்லாத வெற்றிடத்தில்
வெள்ளைவேலாமரம் இருப்பதாகவும்
அதனடியே நீ அதே அலங்காரங்களுடன்
இன்னமும் அமர்ந்துகொண்டிருப்பதாகவும்
கற்பனை செய்து கொள்கிறேன்
புருசன் புள்ளைகளையெல்லாம் மறந்த
ஓர் பொழுதில்
உன் மனமெங்கும் ஈவும் இரக்கமும்
சுரந்தபடியிருக்கும் ஒரு கணத்தில்
நீயும்
நினைத்து மருகுவாய் என்றே நம்புகிறேன்
சாலையின் மறுபுறத்திலிருக்கும்
செங்கொன்றையை
ஒல்லியான உடம்போடும் தலையெல்லாம்
முடியோடும்
மிதிவண்டியிலேயொருவன்
கடந்துபோகும் சித்திரத்தை
அச்சித்திரத்தில் சில மாற்றங்களைச்
செய்துகொள் என் அன்பே
அவ்விடத்திலிப்போது செங்கொன்றைமரம்
இல்லை
அதையும் பிடுங்கி விட்டார்கள்
அவன் இப்போது ஒல்லியாகவும் இல்லை
குண்டாகிவிட்டான்
அவனுடைய தலைமுடியெல்லாமும் கொட்டிப்
போய்விட்டது
மேலுமவன் மிதிவண்டியிலும் போவதில்லை
பழைய டிவிஎஸ்பிப்டியில்தான் போகிறானாக்கும்.
21, அந்தி..
இந்த மாலைப் பொழுதைப் பற்றி
ஏதாகினும் சொல்லியாக வேண்டும்
ஏது சொல்வது என்றுதான்
தெரியவில்லை
என் மொழி
என் கற்பனை
என் அறிவு
என் பிரக்ஞை
எல்லாம் அழிந்துவிட்டது
துரியோதன மகாராசாவின் விழாவொன்றிற்கு
போய்விட்டுத் திரும்பும் வழியில்
அர்ச்சுன மகாராசா தன் சம்சாரமான
திரெளபதியிடம்
இந்த மாலைப் பொழுதைப் பற்றி எப்படியெப்படியெல்லாமோ
பாரதியின் பாஞ்சாலி சபதத்தில்
வர்ணிக்கிறான்
அப்படியெல்லாம் வர்ணிக்க யான்
தயாரில்லை
என்னால் இயலவும் இயலாது
நான் அர்ச்சுன மகாராஜனுமில்லை
எனக்கு சம்சாரங்களும் கிடையாது
ஆனாலும் கிடைத்தற்கரிய இம்மாலையைப்
பற்றி
ஏதேனும் சொல்லவே விரும்புகிறேன்
இந்த மாலைப் பொழுதானது
ஒரு ஜீவ நதியைப்போல
பெருக்கெடுத்தோடுகிறது
நக்கிநக்கிக் குடிக்கிறேன்
நானொரு நாயைப்போல.
22, காம்பிளி…
ஒரு தடம் எப்படி உருவாகிறது ?
தொடர்ந்து நடந்தபடியேயும்
சென்றபடியேயும் இருப்பதால்தானே?
ஒரு காலத்தில் காம்பிளியும் தொடந்து
நடந்தபடியேயும் ஓடியபடியேயும்
இருந்திருக்கிறாள்
அவளுக்கான தடம் இரு
கரைமேடுகளுடன் உருவாகியிருந்தது
வெறும் தரையாக இருந்த காலத்தில்
வருடம் முழுவதும் தண்ணீர்
ஓடியிருக்கிறது
தரைப்பாலம் வந்தபிறகு அது
ஆறு மாதங்களாகக் குறைந்தது
குழாய்ப் பாலம் வந்தபிறகு
நான்கு மாதங்களாக மாறியது
மேம்பாலம் வந்தபிறகு
மாதக்கணக்குமில்லை வாரக்கணக்குமில்லை
அதிசயமேபோல
ஒருநாள் ஒருபொழுது என்றாகிவிட்டது
இப்போது மேலுமொரு மேம்பாலமும்
கட்ட இருக்கிறார்கள்
எங்களின் சாலை ஆறுவழிச் சாலையாகிறது
காம்பிளியின் இரட்டை
மேம்பாலத்தைக் கடக்கும்போது மட்டும்
ஆறுவலிச் சாலை.
23, கம்பல்
கை…
கம்பல் கை நான்
ரம்மி சேர்ந்தாலும் ஆடுவேன்
சேராவிட்டாலும் ஆடுவேன்
ஆடித்தானே ஆகவேண்டும்?
இஸ்பேட் ராணியோ டைமண்ட் ராஜாவோ
விழுகின்ற சீட்டையும் கட்டிலிருந்து
வருகின்ற கார்டையும் விலக்குவதேயில்லை
அது ஆட்டம் எனக்களிக்கும் வாய்ப்பு
மீளுவதற்கு அல்லால் மாளுவதற்கு
மீளவும் தயார்தான்
மாளவும் தயார்தான்
கம்பல் கை நான்
எனக்கெதற்கு லட்சியம்?
குறிக்கோள்?
வெற்றி?
ஆசை?
கனவு?
பாதுகாப்பு?
பிரார்த்தனை?
ரம்மி சேர்ந்தாலும் சேராவிட்டாலும்
ஆட்ட ஜோக்கர் வந்தாலும் வராவிட்டாலும்
ஆடியே ஆகவேண்டும் நான்
ஆடித்தானே ஆகவேண்டும் நான்?.
24, சித்தரிகள் தரிசனம்..
எங்கெங்கு போனாலுமொரு
பாலகுமாரனின் நாயகி
தட்டுப்பட்டு விடுகிறாள்
பாலகுமாரனின் நாயகிகளுக்கு
கண்மட்டும்தான் தெரிவதில்லை
ஆனாலுமவர்களின் பிடரிரோமங்கள்
புறங்கைகள் மணிக்கட்டுகள்
கன்னக்கதுப்புகள் காதுமடல்களெல்லாம்
கவனித்தபடியேதான் இருக்கின்றன
வெள்ளை வேட்டிகளும் வெள்ளைச்
சட்டைகளுமாயிருக்கும் ராம்ராஜ்
ஷோரூமில்
இன்றிரவு எட்டு முப்பத்திமூன்றுக்கு
பச்சைப் புடவையும் பச்சைச் ஜாக்கெட்டுமாய்
சிவந்த நிறத்திலொரு பாலகுமாரனின்
நாயகியை
தரிசித்தேன்
வழக்கம்போலவே
அவளின் கண்கள்
ஏறிட்டும் பார்க்கவில்லை
பிடரிரோமங்களையும்
புறங்கைகளையும் மணிக்கட்டுகளையும்
கன்னக்கதுப்புகளையும் காதுமடல்களையும்
கவனித்தேன்
அவைகளும்
வீடுதிரும்பும் அவசரத்தில்.
25, உட்புகுவெளி…
ஐயங்கார் பேக்கரியின் முன்புறம்
நிறுத்தியிருந்த பைக்கை எடுக்கையில்
பக்கவாட்டில் வைத்திருந்த பூந்தொட்டி
கண்ணில் பட்டது
பூச்செடியெதுவுமற்ற அதன்
செம்மண்பரப்பில் மழைநீர்
தேங்கியிருந்தது
பருப்புவடைக்கோ பஜ்ஜியின்பொருட்டோ
கிழிக்கப்பட்ட செய்தித்தாளின்
நீள்சதுரம்
நனைந்து மூழ்கியிருந்தது
கமல்ஹாசன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
எனும் வரிகள் தென்பட்டது
மூக்கிரட்டைச் செடிமுளைத்து நான்கைந்து
இலைகளுக்குமேலே துளிர்த்திருந்தது
அச்சிறு நீர்ப்பரப்பில் அவ்வளவு
பெரிய
ஆகாயம் உட்புகுந்து விரிந்திருந்தது
எவ்வளவு தொன்மையான மண் என
நினைத்துக் கொண்டான்
எவ்வளவு தொன்மையான தண்ணீர் என
நினைத்துக் கொண்டான்
எவ்வளவு தொன்மையான ஆகாயம் என்றும்
நினைத்துக் கொண்டான்.
26. மூதேவியின் உலகம்
மூதேவியின் உலகத்தில்
சரஸ்வதிக்கும் வேலையில்லை
லட்சுமிக்கும் வேலையில்லை
ஆனாலும் மூதேவியின் உலகம்
இருந்தபடியேதான் இருக்கிறது
மூதேவியின் உலகத்திலும்
மாலை கிழவெயில் மயக்குகிறது
மூதேவியின் உலகத்திலும்
சமுத்திரங்கள் ஆர்ப்பரிக்கின்றன
மூதேவியின் உலகத்திலும்
நாய்க்குட்டிகள் வாலாட்டுகின்றன
அந்த மாலை கிழவெயிலுக்கு
அறிவுமில்லை செல்வமுமில்லை
அந்த சமுத்திரங்களின் ஆர்ப்பரிப்புக்கு
அறிவுமில்லை செல்வமுமில்லை
அந்த நாய்க்குட்டியின் வாலாட்டலுக்கும்
அறிவுமில்லை செல்வமுமில்லை
மூதேவியின் உலகத்திலேயே
வாழ்ந்து பழகிவிட்டவன் கேட்கிறான்
அறிவுதான் எதற்கு?
செல்வமும்தான் எதற்கு?
ஆனந்தம் இருக்கிறதே…
போதாதா?.
27, யோனிப்பொருத்தம்
ஆயில்யம் என்பது ஆண்பூனை
புனர்பூசம் என்பது பெண்பூனை
மிருகசீரிடமோ பெண்சாரை
ஆண்பூனையாகிய நீ
பெண்பூனையாகிய உன் கணவனுடன்
பெண்சாரையாகிய என்னைத் தேடி
வந்திருந்தாய்
வந்தவேலை முடிந்து
கிளம்பிச் செல்கையில் ஒரு
பார்வையை பார்த்துவிட்டு விடைபெற்றாய்
யாவும் கூடியமைந்த அற்புதத்திலும்
அற்புதமான கணமது
ஆனாலும் பின்நெளிந்து வரமாட்டேன்
வரவேமாட்டேன்
இந்த பெண்சாரை அறியும்
அற்புதத்தில் அற்புதமெல்லாம்
கணநேரமேயென்பதை.
28, கேள்வியின்
நாயகி
அங்காத்தாளிடம் எத்தனையோ
பிரார்த்தனைகளை பிரார்த்தித்திருக்கிறேன்
எதுவுமே நிறைவேறியதில்லை
அங்காத்தாளிடம் எத்தனையோ
புகார்களை முறையிட்டிருக்கிறேன்
எதற்குமே நீதி-தீர்வு கிடைத்ததில்லை
அங்காத்தாளிடம் எத்தனையோ
விருப்பங்களை ஆசைகளை
முன்வைத்திருக்கிறேன்
யாதொன்றும் கைகூடியதில்லை
சமீப காலமாக அங்காத்தாளின்
முன்னாலேபோய்
நிற்கையிலெல்லாம் கண்கள்
கசியத் துவங்கிவிடுகின்றன
மேலும் ஏதோவொரு காலத்தில்
மிகமிக நல்லவளாகவும் மிகமிக
அல்லல்களை அனுபவித்து
மாண்டவளுமாகிய அங்காத்தா
என்னைப் பார்த்து கீழ்காணும் கேள்வியை
கேட்கவும் ஆரம்பித்திருக்கிறாள்
“நான் உனது ஆசைகளில்
மண்ணள்ளிப் போட்டிருக்கலாம்
நானுனது கனவுகளில்
மண்ணள்ளிப் போட்டிருக்கலாம்
நானுனது விருப்பங்களில்
மண்ணள்ளிப் போட்டிருக்கலாம்
நெஞ்சைத் தொட்டுச் சொல்
நானுனது மகிழ்ச்சியிலே
மண்ணள்ளிப் போட்டிருக்கிறேனா?”
என்ன இருந்தாலும்
இது அங்காத்தாளின் மண்
என்ன இருந்தாலும் நானும்
அவளுக்கொரு பிள்ளை.
29, ஜெனிபர் டீச்சர்-1
நீண்ட இடைவெளிக்குப்பிறகு
கணவனோடும் பெயரன் பெயர்த்திகளோடும்
முட்டத்திற்கு வந்திருந்த ஜெனிபர்
டீச்சர்
ஏதோ ஞாபகத்தில்
அவ்வாலய மணியை
ஒலிக்கச் செய்தாள்
புல்முளைத்து செடிமுளைத்து
புதரும் மண்டியிருந்த அக்குழிமேட்டிலிருந்து
சட்டென்று உருவாகிய சுழற்காற்று
சுழன்றுசுழன்று சுழன்றுசுழன்று
வேகவேகமாய் வேகவேகமாய்
நகரத் துவங்கியது
மணியினோசையே
எட்டாத தூரத்திற்கு.
30, ஜெனிபர் டீச்சர்-2
அந்த காலையிளவெயில்
அவ்வளவு அற்புதமாக இருந்தது
அந்த வெயிலில்தான் நீங்கள்
வந்தபடியிருந்தீர்கள்
ஆரஞ்சுவண்ணக் குடையை
விரித்துப் பிடித்தபடி
அந்த வெயிலை என்னால் மறக்க முடியாது
அந்தப் பாதையையும் என்னால் மறக்க
முடியாது
அந்த கணத்தைப் பற்றி சொல்வதற்கு
வார்த்தையே இல்லை
அந்த கணத்தில்தான் இன்னமும்
இருந்துகொண்டு இருக்கிறேன்
மேலும் அந்த கணத்தினால்தான் இன்னமும்
இருந்துகொண்டும் இருக்கிறேன்
வீட்டுக்குள் நுழைந்தவனை
விளக்குமாற்றாலேயே அடித்துவோய்ந்த
அம்மாவிடம் கேட்டேன்
“அப்படியெல்லாம் எழுதுவதற்கு நீயென்னை
படிக்கவா வைத்திருக்கிறாய்?
எனக்கு எழுதவும்தான் தெரியுமா
என்ன?”
யாரோ செய்ததற்கு நானே செய்ததுபோல்வருந்தி
மறுநாள் காலை உங்களிடம்
மன்னிப்பும் கேட்டேன்
இப்போது என்னிடம்
கோபமுமில்லை குரோதமுமில்லை
துன்பமும் இல்லை குற்றவுணர்ச்சியும்
இல்லை
எதுவுமற்ற ஜடமாகிவிட்டாலும்
பள்ளிக்கூடத்தின் சுவர்களில் எழுதிவைத்த
அந்த கைகளை மட்டும் தேடியபடியேதான்
இன்னமும் இருக்கிறேன் ஜெனிபர்
டீச்சர்
பற்றி முத்தமிட…
அந்தக் கைகள்தானே
நம்மைச் சேர்த்து வைத்தது
பள்ளிக்கூடத்தின் சுவற்றிலாவது.
No comments:
Post a Comment