Sunday, 15 October 2023

 

                                                                                 ஆபரேசன் சிந்தாமணி

இந்த நிலத்தில் எங்கு காலை வைத்தாலும் அங்கே மதுபாட்டில்களின் உடைந்த கண்ணாடித் துண்டுகளே கிடக்கின்றன. யார்வேண்டுமானாலும் தூக்கிப்போட்டு உடைக்கலாம் எனும்படியாக காலியான மதுபாட்டில்களாகவே கிடக்கின்றன. போகிற போக்கைப் பார்த்தால் இந்த நிலத்தில் இனி காலையே வைக்கமுடியாமல் ஆகிவிடும்போல என பழனிச்சாமி நினைத்துக் கொண்டார். சுமார் ஒருகோடி வகையான உயிரினங்கள் பூமியில் வாழ்வதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்களாம். ஒரு கோடி வகைகளில் ஒரேயொரு வகைதான் மனித உயிரும். ஆனால், இந்த ஒற்றை மனிதவுயிர்வகை பண்ணுகிற அழிச்சாட்டியத்தைப் பார்த்தால் கூடிய சீக்கிரமே இந்த பூமி அதன் ஆரோக்கியத்தை இழந்துவிடும் என்றும் நினைத்துக் கொண்டார். மனுசப்பூச்சி செத்துப்போய்விட்டால் இன்னொரு மனுசப்பூச்சியை பெற்றெடுத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த பூமித்தாய் செத்துப் போய்விட்டால் இன்னொரு பூமித்தாயை பெற்றெடுத்துவிட முடியுமா..?

 

பழனிச்சாமிக்கு தற்சமயம் நாற்பத்தியைந்தாவது அகவை நடப்பிலிருக்கிறது. ஒரு மனிதனுக்கு நாற்பத்தியைந்து வயது ஆகிறது என்றதுமே பொண்டாட்டி புள்ளைகளெல்லாம் என்ன செய்கிறார்கள் எனும்  கேள்வி உண்டாவது இயல்புதான். பழனிச்சாமிக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை. இருபத்தியொன்றாவது வயதில் பத்து வருடங்களுக்கு மூத்தவளும் ஏற்கனவே திருமணமாகி கணவனிடம் கோபித்துக்கொண்டு விலகியிருந்தவளுமான முத்துப்பொண்ணுவுடன் ஒருமாதம்போல ஒரே வீட்டில் இருந்திருக்கிறார். எனினும் அது கல்யாண வாழ்க்கை ஆகாதுதான்.

  

உள்ளூர்த் தொடக்கப் பள்ளியில் பயின்றுவந்த காலத்திலேயே சிறுவன் பழனிச்சாமிக்கு மர்மநாவல்களைப் படிக்கின்ற வழக்கம் உருவாகிவிட்டிருந்தது. அந்த காலகட்டத்தில் அக்கம்பக்கத்தில் இளைஞர்களாகயிருந்த  சிலர் ராஜேஸ்குமார் பட்டுக்கோட்டைப் பிரபாகர் சுபா என வாசித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய வீடுகளின் திண்ணைகள் ஆசாரங்களிலெல்லாம் மேற்கண்ட எழுத்தாளர்களின் மாத நாவல்கள் இரைந்து கிடந்தன.

 

எல்லா கதைகளிலும் குற்றங்கள் திறம்படவும் கண்டுபிடிக்க முடியாத நுட்பத்துடனும் நிகழ்ந்தவண்ணமிருந்தன. விவேக்கும் ரூபலாவும் அல்லது பரத்தும் சுசீலாவும் அல்லது நரேந்திரனும் வைஜெயந்தியும் மேலும் திறம்படவும் மேலதிக நுட்பத்துடனும் அந்தக் குற்றங்களையெல்லாம் கண்டுபிடித்துக் கொண்டிருந்தார்கள். இந்த ஆட்டம் பழனிச்சாமிக்கு மிகவும் பிடித்துப் போனது. மறைந்திருப்பவைகளை கண்டுபிடிப்பதின் அலாதியான சுவையை சிறுவன் பழனிச்சாமி சுவைக்க ஆரம்பித்திருந்தான்.

 

கதையின் ஓட்டத்தில் ஒரு கதாபாத்திரம் போகிறபோக்கில் பேசியிருந்த வசனமொன்று சிறுவன் பழனிச்சாமியைப் பொறுத்தவரை போகவேயில்லை. அப்படியே தங்கிவிட்டது. குணங்கள் வடிவங்கொள்ளத் துவங்கியிருந்த பருவத்தில் பதிந்துபோன அந்த வசனமே பிற்பாடு பழனிச்சாமியின் குணாதிசியங்களைத் தீர்மானிக்கும் அச்சாணியாக அமைந்து போய்விட்டது என்றும் சொல்லலாம். அந்த வசனம் இதுதான். எல்லா அந்தரங்கங்களிலும் குற்றத்தின் ஊற்றுக்கண்ணொன்று இருக்கவே செய்கிறது. ஒருவர் குற்றமற்றவர் எனில் அவரது குற்றங்களில் எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றே அர்த்தம்  

 

பழனிச்சாமி தற்சமயம் ஒரு ரியல்எஸ்டேட் முதலாளியிடம் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். திருப்பூரில் வசிக்கும் அந்த முதலாளி இன்பார்மர்களாக எட்டுத் திசைகளுக்கும் எட்டுப் பேர்களை வைத்திருக்கிறார். அந்த எண்மரில் பழனிச்சாமியும் ஒருவர். அவருடையது யமதிசையாகும் .அதாவது தெற்குத் திசை. இதை நீதியின் திசை தர்மத்தின் திசை என்றும் சொல்வார்கள். 

 

 

இருக்கும் ஏரியாவில் காடு தோட்டம் காலியிடம் கடை வீடு கட்டிடங்கள் என ஏதேனும் விற்பனைக்கு வருகிறதா என்பதைக் கண்டுபிடித்து ஓனருக்குத் தெரிவிக்க வேண்டும். இது முதல் பணி. சம்பந்தப்பட்ட சொத்துக்களில் சட்டரீதியான வில்லங்கங்கள் எதேனும் இருக்கிறதா என்பதை பதிவுத் துறையை அணுகி EC போட்டுப் பார்த்துச் சொல்லவேண்டும். இது இரண்டாவது பணி. மூன்றாவது பணிதான் முக்கியமானது. எல்லோராலும் கண்டிபிடிக்க முடியாதது.  நிறைய சொத்துக்கள் தடம்வழித் தகராறு எல்லைத் தகராறு உரிய வாரிசுதாரர்கள் எல்லோரையும் கணக்கில் காட்டாமல் இருப்பது போன்ற பதிவுத்துறை மற்றும் சட்டத்துறைகளின் பார்வைக்குப் போகாத வில்லங்கங்களை உடையதாக இருக்கும். அவைகளையெல்லாம் டீடெய்லாக கண்டுபிடித்து முதலாளிக்குத் தெரிவிக்க வேண்டும். பழனிச்சாமி இவ்விசயத்தில் விற்பன்னராக இருந்தார்.

 

கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் பனிரெண்டு  ஆபரேசன்களை பழனிச்சாமி சக்ஸஸ் பண்ணியிருக்கிறார். அதாவது பனிரெண்டு வியபாரங்களை ஓனருக்கு முடித்துக் கொடுத்திருக்கிறார். ஐந்து பிக் டீல்கள். மூன்று ஆவரேஜ் டீல்கள். நான்கு சுமால் டீல்கள். கைமாறும் தொகைக்கு ஏற்ப பர்சன்டேஜ் அடிப்படையில் கமிஷன் வந்து கொண்டிருந்தது. அண்ணனும் அக்காவும் திருமணமாகி அவரவர் பாட்டுக்கு அவரவர் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பூர்வீகச் சொத்துக்கள் பிரிக்கப்படும்போது நிலத்துக்குப் பதிலாக அதற்குண்டான தொகையை பழனிச்சாமியின் பங்காகக் குடுத்திருந்தார்கள். அதில் முக்கால்வாசியை அம்மாவின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து மூன்று மாதங்களுக்கொருமுறை வட்டி வரும்வகையில் ஏற்பாடு செய்து விட்டார்.

 

பழனிச்சாமியின் சம்பாதனையை நம்பி பழனிச்சாமியைத் தவிர யாருமில்லை என்பதனால் வருகின்ற வருமானம் அவருக்குப் போதுமானதாக இருந்தது. தண்ணீரைப்போலவே இருப்பதும் வாசமடிக்காததுமான பக்கார்டி லெமன் ரம்மில் ஒரு ஆப் வாங்கினாரென்றால் பொழுதுக்கும் பொழுதெறங்கி இரவு உறங்கப்போவது வரைக்கும் வைத்துக் கொள்வார். தண்ணீர்கலக்கி குடிநீர் பாட்டிலில் ஊற்றி பைக்கின் பெட்ரோல்டேங் கவரில் வைத்துக்கொண்டு யாருக்கும் சந்தேகம் வராதபடி அவ்வப்போது எடுத்து தொண்டையை நனைத்துக் கொள்வார். ‘அந்தக் கருமம் கொஞ்சம் உள்ளே போனால்தான் சாதுர்யமாகப் பேசி பார்ட்டிகளை வழிக்கு கொண்டுவர முடிகிறது. மேலும், பிராப்பர்ட்டிகள் சம்பந்தமான வில்லங்க விவகாரங்களை ஸ்மெல் பண்ணவும் முடிகிறதுஎன்பார்.

 

தொழில் நிமித்தமாகவன்றி வேறு எதற்காகவும் தன்னுடைய துப்பறிவை உபயோகிப்பதில்லையென்பது பழனிச்சாமியின் சமீபகால கொள்கை. கொள்கை என்ற ஒன்று இருந்தால் அதில் சமரசம் என்ற ஒன்றும் வருவது இயற்கைதானே..? அப்படியானவொரு சூழல்தான் போனவாரம் திங்கட்கிழமையன்று காலையில் உருவானது. அதற்கும் நான்கு நாட்களுக்கு முந்தைய வியாழக்கிழமைக் காலையே அதற்கான பிள்ளையார்சுழி போடப்பட்டு விட்டது என்றும் சொல்லலாம். 

 

அந்த வியாழக்கிழமையன்று காலை நடைபயிற்சியின்போது உப்புலியன்மேட்டு ஏற்றத்தில் பாதியளவு ஏறியிருந்த நிலையில் பழனிச்சாமி சட்டென நின்றார். சாலையோரப் பள்ளத்தில் புதிதாக வைக்கப்பட்டிருந்த புங்கமரக் கன்றுக்குப் பக்கத்தில் ஒரே குமியாக லா மார்ட்டின் காலி மதுபாட்டில்கள் போடப்பட்டிருந்தது. சுமார் இருபத்தியைந்து பாட்டில்களுக்குப் பக்கமாக இருக்கும். எல்லாமே ஆப் பாட்டில்கள். எல்லாமே லா மார்ட்டின் பாட்டில்கள். சாலையோரங்களில் காலியான மது பாட்டில்கள் எறிந்து கிடப்பதென்பது சாதாரணமானவொரு விசயம்தான்.

 

அதிகமான பாட்டில்கள் ஒரே இடத்தில் கிடக்கிறதென்றால் சாக்குகளில் மூட்டையாகக் கட்டி போட்டிருப்பார்கள். அட்டைப்பெட்டிகளில் நிரப்பப்பட்டும் போடப்பட்டிருக்கும். எல்லாம் ஒரே அளவுடையதாகவும் இருக்காது. கால் அரை முழு பாட்டில்களென கலந்தே கிடக்கும். ஒரே பிராண்டாகவும் இருப்பதில்லை.

 

அப்படியெல்லாம் இல்லாமல் லா மார்ட்டின் எனும் ஒரே பிராண்டாக தனியாக ஆப் பாட்டில்களாகவே கிடந்துதான் பழனிச்சாமியின் கண்களை உறுத்தியது. அவருடைய துப்பறியும் மூளையில் புதிய சலனங்களை உண்டாக்கியது. ‘யார் போட்டிருப்பார்கள்?

 

பொதுவாக இதுமாதிரி மொத்தமாக கொண்டுவந்து போட்டுவிட்டுச் செல்பவர்கள் பெரும்பாலும் லோக்கல் ஆட்களாகத்தான் இருப்பார்கள். வீட்டிலேயே குடிக்கும் ரகசியக் குடியர்கள் அல்லது வேய்க்கானமான குடியர்கள். சில ஓட்டல்களிலும் டீக்கடைகளிலும்கூட மிகவும் வேண்டிய வாடிக்கையாளர்களை யாருக்கும் தெரியாமல் மதுவருந்த அனுமதிப்பதுண்டு. அந்த மாதிரியான கடைகளின் பின்புறங்களிலும் காலி மதுப்புட்டிகளை சாக்குப் பைகளிலும் அட்டைப் பெட்டிகளிலும் போட்டு வைத்திருப்பார்கள். ஆனால், அவையெல்லாம் ரோட்டுக் குழிகளுக்கு வராது. அதற்குண்டான ஆட்கள் உரிய விலை கொடுத்து எடுத்துப் போய்விடுவார்கள். வீட்டிலேய தோட்டத்திலேயே நடக்கும் கிடாவெட்டு போன்ற விசேசங்களிலும் மது விளையாடும்தான். அவையெல்லாம் ஒரே பிராண்டாக இருப்பதற்கு வாய்ப்பேயில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயர்கொண்ட சரக்குக்கு விசுவாசமாயிருப்பார்கள். ‘அப்படியென்றால் இதை யார்தான் போட்டிருப்பார்கள்?

 

ஏரியாவில் லா மார்ட்டின் அடிக்கும் ஆட்கள் யார்யார் என யோசித்துப் பார்த்தார். அப்படி குறிப்பாக யாருமே ஞாபகத்துக்கு வரவில்லை. நினைவுக்கு வந்தவர்கள் எல்லாமே வேறுவேறு பிராண்டின் விசுவாசிகள். அல்லது கிடைத்த சரக்கை அடிப்பவர்கள். பாட்டில் கிடக்கும் இடத்திலிருந்து சுற்றிலும் ஏழு சதுரகிலோமீட்டருக்குள் மொத்தம் நான்கு டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. கொடுவாயில் ஒன்று காம்பிலி நதிக்கரையில் ஒன்று குண்டடத்தில் இரண்டு என நான்கு கடைகள்.

 

தினம் ஒரு கடையென ஒவ்வொரு கடையாகப் போயமர்ந்து நோட்டம் விட்டால்  நான்காம் நாளின் முடிவில் யார்யார் லா மார்ட்டின் வாங்கிச்செல்கிறார்கள் என ஒரு பட்டியல் கிடைக்கும். பிறகு அந்த பட்டியலை வடிகட்டி வடிகட்டி கடைசியில் மிச்சமாகும் நபர்களை பாலோ பண்ணினால் இந்த லா மார்டின் பாட்டில்களை கொட்டிய நபரைக் கண்டுபிடித்து விடலாம் எனத் தோன்றியது. கண்டுபிடித்து..? பைசாவுக்கு பிரயோசனமுண்டுமா? இந்த உழைப்பை செய்தொழிலில் காண்பித்தாலாவது புதிய வியபாரம் ஏதேனும் அமைந்து நாலு காசுகள் பார்க்கலாம் என்றும் தோன்றியது. பணத்தை பிரதானபடுத்தியே ஒவ்வொன்றையும் ஏன் செய்ய வேண்டும்? ஒரு ஹாபியாக எடுத்துக்கொண்டு அவ்வப்போது இப்படியான ஆபரேஷன்களையும் செய்தால்தானே ஒரு புத்துணர்வு உண்டாகுமென்றும் தோன்றியது.

 

ஒரு மனமும் பல நினைவுமாக அந்த திங்கட்கிழமை காலையில் பழனிச்சாமி வந்துகொண்டிருந்தார். சுமார் எழுபது மீட்டர் உயரத்தை தட்டித்தட்டி ஒரு பர்லாங் நீளமாக்கியது போலிருக்கும் உப்பிலியன் மேட்டின் ஆரம்ப முனையினுள் நடந்துவந்து கொண்டிருந்தவரை சிந்தாமணி எல்எம்எல் வெஸ்பா வில் விலக்கிக் கொண்டு போனாள். ஏதோ ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்த மாடல். பின்புறத்தில் ஸ்டெப்னி வீல் பொருத்தப்பட்டதும் ஹேண்டகியர்களை உடையதுமான அந்தவகை மாடல்களெல்லாம் வழக்கொழிந்து இருபத்தியைந்து வருடங்களுக்குமேல் ஆகிறது.

 

பழைய மாடல்களையே புதுமைப்படுத்தி பல்வேறு கம்பனிகளின் வண்டிகள் ரோடெல்லாம் ஓடிக்கொண்டிருக்க இந்தப்பெண் இதைப்போய் இன்னமும் ஓட்டிக் கொண்டிருக்கிறாளே என பழனிச்சாமிக்கு ஆச்சர்யமாக இருந்தது. எல்எம்எல் வெஸ்பாவின் மீதமர்ந்துபோகும் சிந்தாமணியைப் பார்க்கும்போதெல்லாம் எப்போதும் வருகின்ற ஆச்சர்யம்தான். விலக்கிக்கொண்டுபோன சிந்தாமணி சற்று தூரத்தில் இருக்கும் லா மார்ட்டின் பாட்டில்கள் கொட்டப் பட்டிருக்கும் இடத்தைக் கடந்தபோது பழனிச்சாமி மறுபடியும் ஆச்சர்யத்திற்குள்ளானார்.

 

அவ்விடத்தைக் கடந்த கணத்தில் வெஸ்பாவின் வேகத்தை நொடிநேரம் குறைத்து அந்த நொடி நேரத்துக்குள் பார்வையைத் திருப்பி பார்த்துவிட்டுப் போனாள். தற்செயல்போல தோன்றவில்லை. முன்னரே தெரிந்த ஒன்றை பார்க்கவேண்டும் என்பதற்காகவே பார்த்துவிட்டுக் கடந்துபோகும் பரிச்சியப் பார்வையெனவே தோன்றியது. சாலையைவிட நான்கைந்து அடிகள் ஆழமான பள்ளத்தில் வளர்ந்த புல்பூடுகளுக்கு நடுவே கிடக்கும் பாட்டில்கள் சிட்டாய்ப் பறக்கும் வெஸ்பாவின் வேகத்தில் போகிற போக்கில் கண்ணில் தட்டுப்படுவதெற்கெல்லாம் வாய்ப்பேயில்லை. அப்படியென்றால்?

 

பாட்டில்கள் கொட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகாமையில் வந்த பழனிச்சாமி தனது நடையை நிறுத்திவிட்டு எல்எம்எல் வெஸ்பாவில் சிட்டாகப் பறந்து பார்த்தார். அவர் யூகம் சரிதான். இருசக்கர வேகத்தில் தற்செயலாகவெல்லாம் டிச்சுப்புற்களுக்குள் கிடக்கும் பாட்டில்கள் கண்ணில்பட வாய்ப்பேயில்லை. அப்படியென்றால் இங்கே பாட்டில்கள் கிடக்கும் விசயம் சிந்தாமணிக்கு எப்படி தெரிய வந்தது? வேலை மெனக்கெட்டு வண்டியின் வேகத்தைக் குறைத்து தலையைத் திருப்பி பார்த்துவிட்டுப் போகவேண்டிய அவசியமும் ஏன் வந்தது? அப்படியென்றால்… அப்படியென்றால்.. இந்த பாட்டில்களையெல்லாம் ஏன் சிந்தாமணியே கொண்டுவந்து போட்டிருக்கக் கூடாது?.

 

விற்பனைக்கு வரும் தோட்டங்காடுகளின் வில்லங்க விவகாரங்களை மட்டுமே துப்பறிந்து துப்பறிந்து போரடித்துக் கிடந்த பழனிச்சாமியின் மூளை நரம்புகள் சட்டென்று சுறுசுறுப்படைந்தன. இந்த ஒரு வாரமாகவே பழனிச்சாமி சுறுசுறுப்படைந்த மூளை நரம்புகளுடன்தான் சுற்றி வருகிறார்.

 

வருகிற ஞாயிற்றுக்கிழமையன்று சிந்தாமணியின் வீட்டுக்கே செல்வது என்று பழனிச்சாமி முடிவெடுத்தார். விடுமுறை நாள் என்பதால் நிச்சயம் வீட்டில்தான் இருப்பாள். ஆடோ கோழியோ எடுத்திருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். வீட்டுக்குடியர்கள் பெரும்பாலும் இரவு உணவுக்கு முன்பாக மட்டுமே இரண்டு பெக்குகள் போட்டுக்கொள்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள் என்றாலும், கவுச்சி மணக்கும் விடுமுறைநாட்களில் மட்டும் மதியமே தங்கள் நிகழ்ச்சியை ஆரம்பித்துவிடுவார்கள் என்பது பழனிச்சாமியின் அனுமானம். குழம்புச் சட்டியில் ஊண்கறி கொதிக்கும் மதிய நேரமாகப் போய் சிந்தாமணியிடமும் அவள் அம்மாவிடமும் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தால் விசயங்களை மோப்பம் பிடித்து விடலாம் என்று தோன்றியது. 

 

போன கார்த்திகை மாதத்தில் திருப்பூரிலே இருக்கும் காலிமனை ஒன்றை வாங்குவது தொடர்பாக சிந்தாமணியின் வீட்டிற்கு பழனிச்சாமி சிலமுறை போயிருக்கிறார். ஒரு காலத்தில் முள்ளுக்காடாகக் கிடந்து இப்போது நகர்மயமாகிவிட்ட பகுதியின் மைய்யத்தில் காலியாகக் கிடக்கும் அந்த பத்து செண்ட் இடத்தை வாங்குவதற்கு பனியன் கம்பனிக்காரரொருவர் பறவாகப் பறந்து கொண்டிருந்தார். அவருடைய தொழில் வளாகத்தில் குறைவுபட்ட நிலையிலிருக்கும் ஈசான்யம் அந்த பத்து செண்ட்டையும் சேர்க்க நேராகிவிடும் என்பதால் மார்க்கெட் ரேட்டைவிடவும் கூடுதலாகக் கொடுத்து வாங்கவும்கூடத் தயாராக இருந்தார்.

 

பழனிச்சாமி முதன்முதலாக சிந்தாமணியின் வீட்டிற்குப் போயிருந்தபோது அவளுடைய அம்மா மட்டும்தான் இருந்தார். பின்புலம் அறியாது பெண்புலம் போகக் கூடாது அல்லவா..? அதன் காரணமாக முன்னதாகவே அந்தப் பகுதிகளிலிருக்கும் டீக்கடைகளில்போய் போண்டா சாப்பிட்டபடியும் டாஸ்மாக் பாரில் அமர்ந்து சரக்கை அடித்துக்கொண்டும் தோதான ஆட்களாகத் தேர்ந்து விசாரிப்பது தெரியாத வண்ணம் சிந்தாமணியைப் பற்றி விசாரித்து தகவல்களைத் திரட்டியிருந்தார். சட்டம் நிர்ணயித்திருந்த பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதின் இருமடங்கைத் தாண்டிவிட்ட சிந்தாமணிக்கு சட்டப்படியாகவோ சம்பிரதாயப்படியாகவோ இதுவரைக்கும் திருமணம் நடந்தமாதிரி யாருக்கும் தெரியவில்லை என்றார்கள். வீட்டில் அவளும் அவளுடைய அம்மாவும் மட்டும்தான் இருக்கிறார்களாம்.

 

 

அண்ணன் ஒருவர் அவர் பாட்டுக்கு ஊடும் குடும்பமுமாக ஊருக்குள் இருக்கிறார் என்றார்கள். அண்ணனுக்கும் அவளுக்கும் எந்தவிதமான ஒட்டும் இல்லை உறவும் இல்லையாம். குடியிருக்கும் வீடும் வீடிருக்கும் தோட்டமும் சிந்தாமணியே சுயமாகச் சம்பாதித்தது என்றார்கள். காலேஜ் படிப்பு முடிந்ததும் இருபத்தியொன்றாவது வயதில் வேலைக்குப் போன சிந்தாமணி  தன்னுடைய இருபத்தி மூன்றாவது வயதிலேயே இரண்டு ஏக்கர் தரிசு நிலம்வாங்கி அதைத் தோட்டமாக்கி அதன் நடுவில் வீட்டையும் கட்டிக் கொண்டாளாம். அந்தக் காலகட்டத்தில் சொந்த ஊருக்குள் மட்டுமல்லாது அக்கம்பக்கத்து ஊர்களிலும்கூட சிந்தாமணியைப் பற்றிய பேச்சாகத்தான் இருந்தது என்றார்கள். நடுக்காட்டுக்குள்ளிருக்கும் ஒர்றைவீட்டில் ஆண்துணையில்லாமல் ரெண்டு பெண்கள் மட்டுமே தனியாக வசிப்பது பாதுகாப்பில்லையே என பழனிச்சாமிக்கு எண்ணம் எழுந்தது. அட அந்தப் பொண்ணு பத்து ஆம்பளைக்குச் சமமப்பா.. லைசன்ஸோட துப்பாக்கி வெச்சுருக்குதாக்கும் என்றார்கள்.

 

ஆயிரம்பேருக்குமேல வேலை பாக்குற பெரிய பனியன் கம்பனியாமாப்பா.. அத்தனை பேருக்கும் சிந்தாமணிதான் பன்னாட்டுக்காரியாம்.. அவ சொல்றத ஓனருங்கூட தட்டமாட்டாராம் என்றெல்லாம் அந்தக் காலகட்டத்தில் ஊருக்குள் பேச்சு நிலவியது என்றார்கள்.  ஆர்டரு புடிக்கறதுக்காக ஓனரு எப்ப வெளிநாடு போனாலும் சிந்தாமணியையும் கூட்டீட்டுத்தான் போவார் என்றும் அந்த சமயங்களில் சிந்தாமணியை மாசக் கணக்கில் ஊருப் பக்கமே பார்க்கமுடியாதாக்கும் என்றும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.   

 

ஒரு ஐந்தாறு வருடங்கள் சிந்தாமணியின் கொடி உச்சாணிக் கொம்பில் பறந்ததாகவும் பிறகு அரைக்கம்பத்தில் பறக்கத் துவங்கி விட்டதாகவும் கூறினார்கள். அந்த அஞ்சாறு வருசமும் மேனி மங்காத புத்தம்புது மாருதி 800 காருலதான் சிந்தாமணி வந்துட்டும் போயிட்டுமிருந்தா. டிரைவிங்கும் அவளேதான். ஒரே கலர்ல சேலையும் ஜாக்கெட்டும் ஜொலிக்க கருப்புக்கலர் கூலிங்கிளாஸ் போட்டுட்டு ஸ்டேரிங்கைத் திருப்பற ஸ்டெய்லைப் பார்க்கணுமே.. ரஜினிகாந்தே அந்தப் பக்கம் நிக்கோணமாக்கும் என்றார்கள். என்ன காரணமென யார்க்கும் தெரியவில்லை. திடீரென சிந்தாமணி காருக்குப் பதிலாக இப்போதிருக்கும் இந்த எல்எம்எல் வெஸ்பாவில் வரவும் போகவும் ஆரம்பித்திருக்கிறாள்.

 

ஓனரு நொடிஞ்சு போயிட்டாரு அதுனாலதான்னு  சொன்னாங்க.. செத்தே போயிட்டாருன்னும் பேசிக்கிட்டாங்க என்றார்கள். என்ன ஆச்சோ.. என்னமோ.. நேராவே கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்னா சிந்தாமணிதான் இங்க லோக்கல்ல யாருகூடயும் டச்சே வெச்சுக்கறதில்லையே.. என்றுவிட்டு பழனிச்சாமியிடம்,அடிச்சதெல்லாம்  எறங்கிப் போச்சாட்டிருக்குதே இன்னொரு கட்டிங் போடுவமா..? என அடுத்த ரவுண்டுக்கு அடிப் போட்டார் ஒருவர்.

 

வயதுக்கு மீறிய தளர்ச்சியும் தள்ளாமையுமாக தோட்டத்துக்கு நடுவே தனியாக இருந்த வீட்டில் தன்னந்தனியாக உட்கார்ந்து கொண்டிருந்த அந்தக் கிழவியைப் பார்த்ததும் பழனிச்சாமிக்கு சட்டென்று அவருடைய அம்மாவின் ஞாபகம்தான் வந்துபோனது. அவருடைய அம்மாவும்கூட இப்படித்தான்… பொழுதுக்கும் வீடண்டாமல் இவர்பாட்டுக்கு எங்கெங்கோ சுற்றப்போய்விட.. பாவம், அவளும் இந்த அம்மாளைப் போலவே பகலெல்லாம் தன்னந்தனியாகத்தான் உட்கார்ந்து கொண்டிருப்பாள் எனத் தோன்றியது. மேலும், தன் அம்மாவும் இந்த அம்மாளைப் போலவே வயதுக்கு மீறிய தளர்ச்சியும் தள்ளாமையுமாகத்தான்  இருக்கிறாள் என்றும் நினைத்துக் கொண்டார்.

 

எதுவா இருந்தாலும் எங்க மணிகிட்டயே பேசிக்கப்புனு.. அவ ஞாயித்துக்கெழமதான் ஊட்டுல இருப்பா.. அன்னிக்கு வந்து பார்த்துக்கங்க..என்று அந்த அம்மாள் கூறினாள்.

 

 

அவரது குரலில் சலிப்பின் தொனி இருந்தது. மேற்கொண்டு பேசறதுக்கு ஒண்ணுமில்லை எடத்தைக் காலிபண்ணு எனும் அறிவிப்பும் மறைந்திருந்தது. ‘அதுக்கென்னுங்ம்மா..  அன்னிக்கே வந்து பார்த்துட்டாப்போச்சு..என்ற பழனிச்சாமி உடனே திரும்பிவிடவில்லை.

 

தென்னம்புள்ளக் காட்டுக்குள்ள கொழுக்கட்டம்பில்லு மம்மானியா ஏறிக் கெடக்குதுங்களே.. நாலு செம்பிளிக்குட்டியவோ ரண்டு மாட்டுக்கன்னையோ வாங்கி முடுக்கினீங்னாக்கூட அதும்பாட்டுக்கு மேஞ்சுட்டு அதும்பாட்டுக்குப் பெருசாயிருமே.. காடும் சுத்தமாயிரும் சாணியும் புழுக்கையும் தென்னங்கன்னுகளுக்கு ஒரமாவும் ஆயிப்போயிரும்.. குட்டிகெல்லாம் பெருசாகி விக்கும்போது ரண்டுகாசு வருமானமும் கிடைக்குமே.. அதையுந்தவிர அதுக மேயற அழகையும் திரியற அழகையும் பார்க்கப் பார்க்க உங்குளுக்கும் பொழுது போறது தெரியாமப் போயிருமே..என்றார்.

 

ஆட்டுக்குட்டிகளையோ மாட்டுக்கன்றுகளையோ வாங்கி மேய்க்கும் உட்கிடக்கை அந்த அம்மாளுக்கும் இருந்திருக்க வேண்டும். மகளைத் தவிர யாருக்கும் தெரியாத உளக்கிடக்கையை யாரென்றே அறியாத ஒருவர் வாய்மொழிந்ததைக் கேட்டதும் இதம்பதமாக இருந்திருக்க வேண்டும் வந்தகால்லயே நிக்காட்டியென்ன..? அந்தச் சேரை எடுத்துப்போட்டு உக்காரு அப்புனு.. காபி வெக்கறேன் குடிச்சுட்டு சித்தே பேசீட்டுப் போலாம்என்றார்.

 

பாலில்லாத காபியைக் குடித்தபடி அந்த அம்மாளுக்குப் பிடித்தவாறு கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு பழனிச்சாமி கிளம்பினார். ஆடுமாடுகள் கோழிகுஞ்சுகள் மட்டுமல்லாது ஒரு பூனைக்குட்டி நாய்க்குட்டியையுக்கூட வளர்த்தாமல் வெறும் மனுசாள் மட்டுமே குடியிருந்துவரும் தோட்டத்துவீடு இந்த உலகத்திலேயே இதுவாகத்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டார். எதை வேணும்னாலும் வளர்த்துக்கோ ஆனா கட்டிவெக்காம அடைச்சு வெக்காம வளர்த்த முடியும்னா வளர்த்துக்கோ எனக்கொன்னும் பிரச்சினையில்லை என்று மணி சொல்லி விட்டாளாம்.   

 

பொழுதானதும் கட்டிவைக்காமலோ அடைத்து வைக்காமலோ ஆடுமாடுகளை கோழிகுஞ்சுகளை வளர்த்த முடியாது என்பதால் அந்த அம்மாள் நாயையும் பூனையையும் வளர்த்திருக்கிறாள். பிறகு அதுவும் சரிப்பட்டு வரவில்லை. குட்டியாக இருக்கும்வரைக்கும் காலடியே கதியெனக் கிடக்கும் நாய்கள் பெருசானதும் எங்கெங்கோ சுற்றப்போய் பஸ் லாரிகளில் அடிபட்டிச் செத்துப்போய் விடுகின்றனவாம். பூனைகளோ வேலி புதர்களுக்குள் இருக்கும் சிறுசிறு பாம்புகள் தேள்களையெல்லாம் உயிரோடு கவ்விக்கொண்டுவந்து நடுவீட்டில் போட்டுவிடுகின்றனவாம்.

 

அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் பழனிச்சாமி சிந்தாமணியின் வீட்டிற்குப் போயிருந்தார். கற்பனை செய்திருந்ததைப்போல சேலையிலோ நைட்டியிலோ சுடிதாரிலோ இல்லாமல் பின்னலாடைத் துணியில் தயாரிக்கப்பட்ட தொளதொள டிசர்ட்டும் அதேபோன்ற கால்சட்டையும் அணிந்து ஹாயாக கால்மேல்கால் போட்டபடி ஆசாரத்து நாற்காலியிலயமர்ந்து சிந்தாமணி டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். தொலைக்காட்சியில் ஆங்கிலச் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது. சிந்தாமணிக்கு அந்த இடத்தை விற்பதைக்குறித்து எந்த மனத்தடையுமில்லை. கூடுதல் விலையெல்லாம் தேவையில்லை மார்க்கெட்ரேட் என்னவோ அதைக் கொடுத்தாலே போதும் என்றாள். வந்தவேலை இவ்வளவு சுலபமாக முடியுமென  பழனிச்சாமியே எதிர்பார்க்கவில்லைதான். மனம் இன்பத்தில் திகைத்தது. வீட்டிற்குள் போய் பீரோவிலிருந்த அவ்விடத்தின் பத்திர நகலையும் வரைபட நகலையும் கொண்டுவந்து பழனிச்சாமியிடம் கொடுத்த சிந்தாமணி ஒரு வேண்டுகோளையும் வைத்தாள்.

 

 

‘வருசத்துக்கு வருசம் வேல்யூ ஏறிக்கிட்டெபோற டவுன் பிராப்பர்ட்டிதான்னாலும் அந்த எடத்தை விக்கறதப்பத்தி எனக்கொண்ணும் பிரச்சினையில்ல. ஆனா, அந்த எடத்தை எப்ப வித்தாலும் இங்க இந்தத் தோட்டத்தை ஒட்டியே மினிமம் ரண்டு ஏக்கராவது வாங்கிடணும்கிறதுதான் என்னோட ரொம்பநாள் பிளான். அதுனால அந்த எடத்தை வித்துக்குடுக்கறதுக்கு முன்னால சுத்தியிருக்கிற நிலங்கள்லயிருந்து ஒரு ரண்டு ஏக்கர் வாங்கிக் குடுத்துடுங்க..

 

அதென்ன பெரிய காரியமா? சுலபத்தில் வாங்கிக் கொடுத்து விடலாம் என்றுதான் பழனிச்சாமி நினைத்திருந்தார். களத்தில் இறங்கவும்தான் எதார்த்தம் வேறாக இருப்பது புரிந்தது. சிந்தாமணியின் தோட்டத்தையொட்டி கிழக்குமேற்குதெற்குப் புறங்களில் நிலம் வைத்திருந்தவர்களெல்லாம் எந்த விலைக்கும் விற்கவேண்டிய அவசியமில்லாத பெரிய கைகளாக இருந்தார்கள். ‘வேணும்னா அந்தப் பொண்ணுகிட்டப் போயி தோட்டத்தைக் குடுத்துடச் சொல்லு.. என்ன விலையாக இருந்தாலும் நாங்க வாங்கிக்கறோம்எனச் சொன்னார்கள். வடக்குப் பக்கம் நிலம் வைத்திருந்தவர் அளவான கைதான். ரண்டு பொட்டப்புள்ளைக இருக்குது. நிலத்தை விற்றால்தான் பொண்ணுகளுக்கெல்லாம் கல்யாணம் பண்ணமுடியும் என்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார் எனத் தகவல் கிடைத்து அவரிடம் போனார். அளவான கை என வர்ணிக்கப்பட்ட அவரோ ‘காட்டை வித்துத்தான் புள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணோனம்னு சொன்னது உண்மைதான். ஆனா அதுக்கின்னும் கொள்ளநாள் கெடக்குதே.. புள்ளைக இப்பத்தானே நாலாவதும் அஞ்சாவதும் போகுதுக..என்றார் வெள்ளந்தியாக.

 

பக்கத்தில் ரண்டு ஏக்கர் வாங்கிக் குடுக்குமாறு சிந்தாமணி கேட்டது விடுக்கப்பட்ட வேண்டுகோளல்ல விதிக்கப்பட்ட நிபந்தனை என்பதை பிறகு போய் பேசியபோது பழனிச்சாமி உணர்ந்தார். ‘எப்போ தோட்டத்தையொட்டி ரண்டு ஏக்கர் வாங்க முடியுதோ அப்பவே நானும் அந்த எடத்தை வித்துக்கறேன். அதுவரைக்கும் யாரும் அந்தப் பேச்சை எடுக்காதீங்க..யாரும் அந்த எடத்தைக் கேட்டு வந்துராதீங்க..என்றுவிட்டு ஆசாரத்துக்குள் போனவள் நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்து பழையபடி ஆங்கிலச் செய்திகளைப் பார்க்கத் துவங்கினாள். கண்டவர்களுக்கெல்லாம் டீயும் போண்டாவும் சரக்கும் ஊறுகாயும் வாங்கிக்கொடுத்து வாங்கிக்கொடுத்து  தரவுகளையெல்லாம் பக்காவாகச் சேகரித்து நிகழ்த்திய- ஆபரேசன் சிந்தாமணி - கடைசி நேரத்தில் தோல்வியைத் தழுவ எதுவும் பேசமுடியாத பழனிச்சாமி வீட்டிற்குத் திரும்பினார்.   

 

அந்த பத்துசெண்ட் காலியிடத்திற்கு ரவுண்டாக ஐம்பது லட்சங்கள் கொடுப்பதற்கும் பார்ட்டி தயாராக இருப்பதாக முதலாளி சொல்லியிருந்தார். இந்த ஆபரேசன் மட்டும் சக்ஸஸ் ஆகியிருந்தால் கமிசன் தொகையாக ஒரு பல்க் அமெளண்ட் கிடைத்திருக்கும். வேறு வியபாரங்கள் அமையாவிட்டாலுங்கூட அதுபற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் பக்கார்டி லெமனை மினரல் வாட்டர்கேனில் ஊற்றி அடித்தபடி மீதமிருக்கும் வாழ்வின் ஒரு வருடத்தை  ஜாலியாக ஓட்டியிருந்திருக்கலாம். கைக்கு வந்தது கைநழுவிப் போய்விட்டதே என்றெல்லாம் எண்ணங்களையிட்டபடி சுற்றிக்கொண்டிருந்த பழனிச்சாமி இரண்டே நாளில் இயல்புநிலைக்குத் திரும்பினார். படியாத வியபாரங்களை அடியோடு மறந்துவிடு என்பதும் அவரது பாலிசிகளில் ஒன்று. மறந்துவிட்டு புதிய வியபாரங்களுக்கான ஆபரேசன்களில் கவனத்தைச் செலுத்தத் துவங்கினார்.

 

அதற்குப் பிறகு மறந்தே போய்விட்டிருந்த சிந்தாமணியின் நினைப்புதான் கடந்த திங்கட்கிழமை காலையிலிருந்து இந்த ஞாயிற்றுக்கிழமையின் இப்போதைய நேரமான பகல் பதினொருமணி நாற்பத்திமூணு நிமிடங்கள் வரையிலும் பழனிச்சாமியின் மனதுள் ஓடியபடியேயிருக்கிறது. போகிறபோக்கில் பாட்டில்களைத் திரும்பிப் பார்த்துவிட்டுப் போனதை மட்டும் வைத்துக்கொண்டு அவள்தான் அதைக் கொட்டியிருக்கிறாள் என்று நம்புவதெல்லாம் சுத்த மடத்தனம் என அவரது அறிவின்குரல் எத்தனையோ முறைகள் ஓங்கியும் உரத்தும் ஒலித்துப் பார்த்துவிட்டது. ஆனாலும் பழனிச்சாமியின் சுறுசுறுப்படைந்த மூளை நரம்புகள் பாட்டில்களைக் கொட்டியது சிந்தாமணியேதான் எனத் தீர்க்கமாக நம்பும் அவரது மனதின் குரலையே செவிமடுத்தன.

 

எல்லோரும் சொல்லுவதுபோன்று விதி வலியதுதான்போலும். இவ்வலிய விதியானது பழனிச்சாமியை இந்த விசயத்தில் எங்கே கொண்டுபோய் நிறுத்தப் போகிறது என்றுதான் தெரியவில்லை. அவர் மனம் திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டேயிருந்தது. ‘பாட்டில்களைக் கொட்டியது சிந்தாமணியேதான்.

 

மோட்டார் சைக்கிளின் நிழல் அதன் சக்கரங்களில் விழுந்து நசுங்கும் உச்சிமதியத்தில் பழனிச்சாமி சிந்தாமணியின் வீட்டைச் சேர்ந்தார். முன்யூகித்திருந்தபடி கறிக்கொழம்பு வாசனையெதுவும் மூக்கைத் துளைக்கவில்லை. வெளித்திண்ணையில் போடப்பட்டிருந்த சிறிய தேநீர்மேஜையின்மேல் உணவுத்தட்டை வைத்து நாற்காலியில் அமர்ந்து அந்த அம்மாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். துவரம்பருப்பு உருளைக்கிழங்குடன் கூடிய முருங்கைக்காய்ச் சாம்பார். ஒரு குண்டாவில் ரசம் இருந்தது. இன்னொன்றில் தயிர். உப்பு டப்பாவும் இருந்தது. 

 

வெஸ்பா பந்தல் நிழலில் ஓரமாக நிறுத்தப் பட்டிருந்தது. வாசற்படியையொட்டி சிந்தாமணியின் காலணிகளும் கிடந்தன. தொலைக்காட்சி ஆங்கிலச்செய்தி வாசிக்கவில்லை. அணைத்து வைக்கப் பட்டிருந்தது.  ஆசாரத்து நாற்காலியில் டிசர்ட்டும் தொளதொள கால்சட்டையுமாக சிந்தாமணி அமர்ந்திருக்கவும் இல்லை. ஒருவேளை நேரமே ஒருபெக்கைப் போட்டுவிட்டு முருங்கைக்காய் சாம்பாரோடு ஒரு பிடி பிடித்துவிட்டு உள்ளறையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பாளோ..?.    

      

யாரது..? அட… பழனிச்சாமியா..? வா அப்புனு.. வா..வா.. பார்த்து ரொம்ப நாளு ஆகிப்போச்சா..? விசுக்குனு அடையாளமே தெரியலபோ..என்றவர், ‘சாம்பாரு ரசம் எல்லாம் வெச்சிருக்கிறேன்..சாப்பிடரதுனா சாப்பிடலாமே அப்புனு..என்னும் சம்பிரதாயமான உபசரிப்பு மொழிகளை மொழிந்துவிட்டு ‘ஆமா.. ஏதும் காரியமா வந்துருக்கிறயா.. மணிகீது வரச்சொல்லியிருந்தாளா..? யாரும் வருவாங்கன்னு அவ எங்கிட்ட ஒண்ணும் சொல்லலியே.. நைட்டு ஏதோ ஆபீஸ்ல வேலை இருந்துதுனு காலைலதான் வந்தா.. ரெண்டு இட்லிய சாப்புட்டுப்போட்டுப் படுத்தவ இன்னும் எந்திரிக்கல.. அசந்து தூக்கீட்டிருக்கறாளே..என்றார்.

 

‘அதெல்லா ஒண்ணுமில்லீங்கம்மா.. இந்தப்பக்கமா ஒரு சோலியா வந்திருந்தேன்.. சரி, அப்படியே உங்களையும் பார்த்து செளக்கியம் விசாரிச்சிட்டுப் போவோமேனு வந்தேன்..என்ற பழனிச்சாமி  வீட்லயே சாப்புட்டுட்டுத்தான் கெளம்புனேன்.. நீங்க சாப்டுங்க..எனக் கூறியபடியே வாசலில் போடப்பட்டிருந்த நாற்காலிகள் ஒன்றில் அமர்ந்தார். 

 

திடீர்னு பைக்குச் சத்தம் கேட்டதுமே பேராண்டிதான் வாரானாக்கும்னு நெனச்சிக்கிட்டேன். அப்பறம்பார்த்தா நீயிவந்து நிக்கறே..என்றவர் பழனிச்சாமியின் பார்வையில் தெரிந்த குழப்பத்தைத் உணர்ந்துவிட்டார்போல. ‘எம்பட மகனோட பையனத்தான் சொல்றனப்புனு.. காலேஜ்ல படிக்கிறான். லீவுக்கு வந்தான்னா ஒரு நாளாச்சும் நான் அவியவூட்லபோயி அவங்கூட இருக்கோணம்.. அப்பதான் பையனுக்கு நிம்மதியாகும். நேத்து வந்துருப்பானாட்டயிருக்குது.. காலைலயே போன் பண்ணீருந்தான் மத்தியானமா வர்றேன் அப்பத்தா ரெடியாயிருன்னு… அநேகமா இன்னுஞ் சித்தநேரத்துல வந்துருவான்னு நெனைக்கிறேன். அதுக்குள்ள சாப்புட்டுமுடிச்சு பாத்திர பண்டமெல்லா கழுவிவெச்சு நா ரெடியாயிக்கோணம். பொழுதோடத்திக்கும்சேத்து இப்பவே பண்ணி வெச்சுட்டேன். காலைல மணியே தோசைகீது சுட்டுக்குவா.. இல்லாட்டி ஆபீசுக்குப்போறவழீல கடைல சாப்ட்டாலும் சாப்புட்டுக்குவா… நானு இன்னிக்குப் போனன்னா நாளைக்குச் சாயங்காலமாத்தேன் வருவேன்னு வெய்யேன்..என்றார்.  

 

ஏனுங்ம்மா நீங்கமட்டும் போறதாச் சொல்றீங்க..? மணி அவிய அண்ணனூட்டுக்கெல்லாம் போகாதுங்களா..?

 

பழனிச்சாமி இயல்பான சப்தத்தில்தான் பேசினார். எதுக்கு இவ்வளவு சத்தமாப் பேசறே மெதுவாப்பேசு என்பதாக மிகுந்த பதட்டத்துடன் சாடைகாட்டிய அந்த அம்மாள் ‘அவொ அண்ணனைத் தூக்கியெறிஞ்சி வருசம் பத்தாகுது.. நான் வேணும்னா போய்க்கலாம வந்துக்கலாம்..அந்த ஞாயமே வேணாம்.. கேட்டாள்னா கொன்னே போடுவாள்எனக் கிசுகிசுத்தார். மேலும், அவர் முகத்தில் சற்றுமுன் இருந்த கெளத்தி கெட்டுப்போய் கண்கள் நீர் கோர்த்தனவாயின.     

 

சரிங்ம்மா… அந்த ஞாயம் நமக்கெதுக்கு..? நீங்க மெதுவா சாப்டுட்டு வாங்க நான் உக்காந்துருக்கிறேன் என்ற பழனிச்சாமி நடுப்பந்தலின்கீழ் கிடந்த நாற்காலியை தூக்கிப்போய் வெஸ்பாவின் பக்கமாகப் போட்டுக்கொண்டு அமர்ந்தார்.

 

அதற்குமேலும் அவ்விடத்தில் அமர்த்து உண்பதற்கு அந்த அம்மாளுக்கு இஷ்டமில்லைபோல. சாப்பாட்டுத் தட்டை கொண்டுபோய் உள்ளே வைத்துவிட்டு வெளிப்பட்டவர் ரசம் தயிர் குண்டாக்களையும் எடுத்துக்கொண்டு உள்ளே போனார். உணவு மேஜையின்மேல் குண்டாக்களை வைக்கும் ஓசையும் கழுவுதொட்டியில் குழாய்நீர் விழுகின்ற கை முகம் கழுவுகின்ற ஓசைகளும் நாற்காலியை இழுத்துப்போட்டு அமரும் ஓசைகளும் வெளிப்பட்டன. திண்ணையிலிருந்து சாம்பார் சாதத்துடன் உள்ளேபோன அம்மாள் ரசத்துக்குப்போய் தயிரையும் முடித்துவிட்டு வெளிப்பட எப்படியும் பத்து நிமிடங்களாவது ஆகும். சிந்தாமணியும் தூங்கிக் கொண்டிருக்கிறாள். நல்ல சந்தர்ப்பம் நழுவவிடாதே  பயன்படுத்திக் கொள்..என பழனிச்சாமியின் மனம் பரபரத்தது.

 

முதலாவதாக வெஸ்பாவை சந்தேக வளையத்துக்குள் கொண்டுவந்தார்.அவற்றின் பக்கவாட்டுப் பகுதிகள்.. கால்களை வைக்கும் பிளாட்பார்ம்.. பொருட்களை வைக்கும் பெட்டி ஆகியவற்றையெல்லாம் பரிசோதித்தார். பெட்டியில் வண்டியின் ஆர்சி புக் இன்சூரன்ஸ் ஜெராக்ஸுகளும் சில துண்டுத்துணிகளும் பிஸ்கட் பாக்கெட் ஒன்றும் பாதியளவு தண்ணீரோடு  வாட்டர்கேன் ஒன்றும் இருந்தது. மதுக்குப்பிகளின் மூடியோடு ஒட்டப்பட்டிருக்கும் முத்திரைஸ்டிக்கரின் கிழிபட்ட பகுதிகள் கவனக்குறைவாக எங்கேனும் தேய்க்கப்பட்டு ஒட்டிக் கொண்டிருக்கலாம் என்பதுதான் அவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அப்படியெதுவும் தட்டுப்படவில்லை. மூடியைத் திறந்து தண்ணீர்பாட்டிலினுள் முகர்ந்து பார்த்தார். அதிலும் தண்ணீரின் வாசனையில்லா வாசனைதான்.

 

ரகசியக் குடியர்களில் சிலர் குளியலறைகளை குடிப்பதற்கான இடமாகப் பயன்படுத்துவதுண்டு. வாங்கி வருகின்ற பாட்டிலை உள்ளாடைக்குள் மறைத்தபடி குளியலறைக்குள் சென்று வீட்டுச்சனத்திற்கே தெரியாமல் அடித்துவிட்டுவந்து சத்தமில்லாமல் சாப்பிட்டுவிட்டு கமுக்கமாகப் படுத்துக்கொள்ளும் நண்பர்களை பழனிச்சாமி அறிவார். சிந்தாமணியின் குளியலறையை செக் செய்தாக வேண்டும்.  அதற்கு முன்பாக வீட்டிற்குப் பின்புறமுள்ள ஜன்னலடிகளை ஆராயவேண்டும். தனக்கான தனியறைகளில் கதவைச் சாத்திக்கொண்டு குடிக்கும் ரகசியக் குடியர்களும் இருக்கிறார்கள். கழட்டித் திருகும்போது தனியாகக் கழண்டுவரும் மூடியின் அடிப்பகுதி வளையத்தை ஜன்னலுக்கு வெளியே வீசியெறியவே வாய்ப்புகள் அதிகம்.    

 

வீட்டின்பின்புறச் சுவற்றில் மூன்று சன்னல்கள் இருந்தன. தெக்கோடாக இருப்பது சமையலறையின் ஜன்னலாக இருக்கவேண்டும். மத்தியில் இருப்பது அந்த அம்மாளின் அறைக்கானதாகவும் வடகோடாக இருப்பதுதான் சிந்தாமணியின் அறைச் ஜன்னலாக இருக்க வேண்டுமெனவும் யூகித்தார்.எனினும் மூன்று ஜன்னல்களுக்குக் கீழும் ஆராய்ந்தார். மூன்று ஜன்னல்களும் நான்கு கதவுகளில் மேலிரண்டு கதவுகளை திறந்து வைத்திருந்தன. எதிர்பார்த்திருந்த லா மார்ட்டின் மூடியின் அடிப்பகுதி வளையங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும், இதரவகை மூடிகளோ அவைகளின் அடிப்பாகங்களோகூட தென்படவில்லை. மிச்சமிருப்பது குளியலறை மட்டுமே. வேகவேகமாக வீட்டின் முன்புறம் வந்தவர் அந்த அம்மாள் இன்னும் சாப்பிட்டபடிதான் இருக்கிறார் என்பதை உறுதிபடுத்திக் கொண்டு அவசரமாக குளியலறைக்குள் பிரவேசித்தார். விளக்கை எரியவிட்டார்.

 

மூன்றுக்கு இரண்டடி அளவில் இடுப்புயரத்துக்கு இருந்த சிமெண்ட் தொட்டியில் தண்ணீர் நிரம்பியிருந்தது. தென்கிழக்கு மூலையின் மேற்பகுதியில் வாட்டர் ஹீட்டர் பொருத்தப் பட்டிருந்தது. தெற்குச் சுவற்றின் முழங்கால் உயரத்தில் திறந்து மூடும் வால்வுகளுடன் இரண்டு அரை இஞ்ச் பைப்புகள் சுமார் ஒரு அடி நீளத்திற்கு நீண்டு வளைந்திருக்க அவைகளின் கீழே பிளாஸ்டிக் பக்கெட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. மேற்குப் பகுதியில் இந்திய ஐரோப்பிய என இரு வகையான மலங்கழிப்பான்களும் அமைக்கப்பட்டிருந்தன. கதவையொட்டிய கிழபுறம் முகம்பார்க்கும் கண்ணாடியும் வாஷ்பேசினும் பொருத்தப்பட்டிருந்தது. கண்ணாடிக்கு அருகாமைச் சுவர்ப்பகுதி ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் பொட்டுகளும் ஒட்டி எடுத்த சுவடுகளுமாக இருந்தது.

 

அழுக்குத்துணிகள் போட்டுவைத்திருந்த பெரிய பிளாஸ்டிக் டிரம்மையும்கூட கவிழ்த்துப்போட்டு ஆராய்ந்தாயிற்று. பழனிச்சாமிக்கு அவர் எதிர்பார்த்திருந்த எந்தத் தடயங்களும் சிக்கவில்லை. ஏமாற்றத்துடன் துணிகளையெல்லாம் பழையபடி பிளாஸ்டிக் டிரம்முக்குள் போட்டுவிட்டு நிமிர்ந்தவருக்கு ஒருகணம் மூச்சே நின்றுவிட்டது. சப்தநாடிகளுமொடுங்க பயத்தில் வெலவெலத்தார். கதவுக்கு வெளியே நின்றிருந்த சிந்தாமணி இவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்வையின் அசூசையும் உக்கிரமும் தாங்க முடியாததாயிருந்தது.

 

விழிப்பு வந்தது. எதுவும் புலப்படவில்லை. சுயவுணர்வுக்கு வருவதற்கும் சூழல் பிடிபடுவதற்கும் சற்று நேரம் ஆகியது. வசந்தம் நகர் சைட்பூமியில் பார்ட்டிகளை சந்திப்பதற்காகப் போடப்பட்டிருந்த பத்துக்குப்பத்து கீற்றுக் கொட்டகையில் வெறும் ஜட்டியோடு பழனிச்சாமி படுத்துக் கிடந்தார். தலைமாட்டில் பரவிக்கிடந்த வாந்தி இடது கன்னம் இடதுகழுத்து இடதுமார்பின் பகுதிகளிலும் அப்பிக் கிடந்தது. கொஞ்சமாகத் தின்னப்பட்டிருந்த முட்டைப் புரோட்டா சன்னலின்வழிவிழுந்த சாயுங்கால வெயிலில் காய்ந்துகிடக்க வரிசைகட்டிவந்து எறும்புகள் ஏறியிருந்தன.  தண்ணீர் பாட்டிலும் ஒன்யூஸ் டம்ளரும் உருண்டு கிடந்தன. பாதியளவு சரக்கோடு பக்கார்டி முழுபாட்டில் அசையாது நின்றிருந்தது. பக்கத்தில் லாமார்ட்டின் முழுபாட்டிலொன்றும் குறைவு படாமல் நின்றுகொண்டிருந்தது.

 

கடைசியாக பக்கார்டி முழுபாட்டிலுடன் நவக்கொம்பு கடையிலமர்ந்து குடித்தபடியிருந்தது மட்டும் ஞாபகத்துக்கு வந்தது. லாமார்ட்டின் புல்பாட்டிலையும் முட்டைப் புரோட்டாவையும் எப்போது வங்கினோம் இங்கே எப்படி வந்தோம் என்பது பற்றியெல்லாம் சுத்தமாகவே நினைவிலில்லை. மேலும், லாமார்ட்டினை என்ன காரணத்துக்காக வாங்கியிருப்போம் என்பதும் புதிராகவே இருந்தது. அதேசமயம் எரிந்து கருகிய விறகுக் கட்டையிலிருந்து காற்றுப் பட்டதும் மெல்லிய புகை கிளம்புவதுபோல மதியம் சிந்தாமணியின் வீட்டில் நடந்தவைகளெல்லாம் நினைவுக்கு வரத் துவங்கின. சட்டென்று எழுந்துகொண்டவர் செவ்வரளி பொன்னரளிச் செடிகளுக்கருகேயிருந்த குழாயடிக்குப்போய் சம்மணமிட்டு உட்கார்ந்து தண்ணீரைத் திறந்துவிட்டார். குளித்து முடித்தானதும் கொடிக்கயிற்றில் கிடந்த லுங்கியைக் கட்டிக்கொண்டு ஜட்டியைத் துவைத்து காயப்போட்டார். மனைநிலங்களெல்லாம் விற்பனையாகி வீடுகள் உருவாகும் காலத்தில் இந்த கொட்டகை இருக்கும் இடத்தில்தான் விநாயகர் கோவில் வரப்போகிறது என முதலாளி கூறியிருந்தார். அதன்பொருட்டே செவ்வரளி பொன்னரளிச் செடிகள் வளர்க்கப்படுவதாகவும் சொல்லியிருந்தார். நாளைக்கு வந்து காணும்போது எந்த வித்தியாசமும் அவருக்குத் தெரியக்கூடாது.

 

சுத்தமாகக் கழுவித் துடைத்த பழனிச்சாமி ஊதுபத்திகளைப் பற்றவைத்து அறைமுழுதும் காட்டி காலண்டர் முருகனின் படத்தில் பொருத்தினார். ஆணியில் தொங்கவிட்டிருந்த சட்டையையும் பேண்ட்டையும் அணிந்துகொண்டு வெளிப்பட்டவர் நாற்காலியில் அமர்ந்தார். மற்றொரு நாற்காலியை எதிரே இழுத்துப்போட்டு அதன்மேல் டம்ளரை வைத்து பக்கார்டி லெமன் சரக்கை ஊற்றி குடிக்கத் துவங்கினார். பொழுது மறைந்து மங்கிய வெளிச்சம் மட்டும் மிச்சமிருந்தது.

 

குளிரக்குளிரக் குளித்து முடித்ததில் நாறிக்கிடந்த அறையைச் சுத்தப்படுத்தி நறுமணப்படுத்தியதில் இரண்டு பெக் பக்கார்டியை உள்ளே செலுத்தியதில் தெம்பும் புத்துணர்வும் உண்டாகியிருந்தது. மதியம் நவக்கொம்புக் கடையில் உட்கார்ந்திருந்தபோது இருந்த பதட்டமும் சற்றுமுன் மதியத்தின் நினைவுகள் புகையென மேலெழும்பியபோது உண்டான பதட்டமும் இப்போது இல்லை. ஒரே நிகழ்வுதான். அதுபற்றிய உண்ர்வுகள்தான். நாழிகைகளின் நகர்வில் எப்படி எப்படியெல்லாம் நிறம் மாறுகிறது பாருங்கள். உழுந்து கும்பிட்டதற்கு நெத்தியில் மண் ஒட்டியதுதான் மிச்சம் என்றொரு சொலவடை சொல்வார்கள். அதுபோல ஆர்வக்கோளாறிலெழுந்த இம்மனதின்குரலை நம்பி களத்தில் இறங்கியதற்கு சிந்தாமணியிடம் மதிப்பை இழந்ததுதான் மிச்சம் எனத் தோன்றியது. அப்படியொன்றும் அவள் மிக மோசமாகவெல்லாம் பேசிவிடவில்லை என்றும் நினைத்துக் கொண்டார்.

 

அந்த சூழ்நிலையில் வேறு யாராக இருந்தாலும் மிக மோசமாகத்தான் நடந்து கொண்டிருந்திருப்பார்கள் எனத் தோன்றியது. அழுக்குத்துணிகளை பிளாஸ்டிக் டிரம்மில் போட்டுவிட்டு நிமிர்ந்த பழனிச்சாமிக்கு ஒருகணம் மூச்சே நின்றுவிட்டதுதான். ‘முகம் கழுவலாம்னு வந்தவன் மேல குறுக்கு சட்டத்திலயிருந்து சின்னதா பாம்பு ஒண்ணு உள்ள விழுந்ததைப் பார்த்தேன். அதை அடிப்பதற்காக  துணிகளையெல்லாம் அக்கட்டால எடுத்துப்போட வேண்டியதாயிடுச்சு..’ என்று சமாளித்தார். பாம்பு எங்கே என்று கேட்டால் கொண்டுபோயி வேலிக்கு அப்பால் வீசிவிட்டு வந்துதான் துணிகளையள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறேன் எனும் பதிலும் உருவாகி தயார் நிலையில் இருந்தது. அப்படியான கேள்வி சிந்தாமணியிடமிருந்து வரவில்லை. ‘அப்போ ஸ்கூட்டரை எதுக்குச் செக் பண்ணுனீங்க.. வீட்டுக்குப் பின்னாடிபோயி ஜன்னலுக்குக் கீழயெல்லாம் என்ன தொளாவுனீங்க..?’ என்றாள். பழனிச்சாமிக்கு மறுபடியும் ஒருமுறை மூச்சடைத்தது. சொல்வதறியாது திணறியவரின்மேல் அதே அசூசையும் உக்கிரமுமான பார்வையை வீசியவள் கடுமையான தொனியில் கூறினாள். ‘ஒரு நிமிஷங்கூட இங்க நிக்கக்கூடாது.. உடனே கெளம்பு.. இனிமே இந்தப் பக்கமே வந்தராத..’

 

நன்றாக இருட்டுக் கட்டிவிட்டிருந்தது. மணி ஏழு இருபது ஆகியிருந்தது. மீதமிருந்த பக்கார்டி லெமன் முழுவதையும் கடிப்பான் எதுவுமில்லாமல் சிகரெட்டைப் புகைத்தபடிக்கே காலிசெய்துவிட்டிருந்த பழனிச்சாமிக்கு கண்ணும் தெரியவில்லை மண்ணும் தெரியவில்லை இருட்டும் தெரியவில்லை. உச்சத்துக்குப் போயிருந்தார். புகையும் விறகுக் கட்டையில் குபுக்கென்று பற்றிக்கொள்ளும் நெருப்பைப்போல அவர் மனமெங்கும் ஒரு ஆவேசம் திடீரென பற்றியெரியத் துவங்கிற்று. ‘அதெப்படி என்னை ஒருமையிலே பேசலாம்..?

 

பந்தலின் முகப்பில் எரிந்துகொண்டிருந்த குழல்விளக்கின் வெளிச்சம் சிந்தாமணியின் வீட்டு வாசலெங்கும் திண்ணையெங்கும் பரவியிருந்தது. கதவு சாத்தப்பட்டிருந்தது. நிலைப்படியுடனான அதன் இறுக்கம் உள்தாழ் போடப்பட்டிருப்பதை உணர்த்தியது. வாசற்படியையொட்டி சிந்தாமணியின் காலணிகள் கழட்டப் பட்டிருந்தது. வெஸ்பாவும் நாற்காலிகளும் அவையவைகளின் இடத்தில் அப்படியே இருந்தன. கதவுக்கு நேரெதிரே பந்தல் தாழ்வாரத்தின் கீழே நின்றபடி பழனிச்சாமி கத்தத் துவங்கினார். மதியம் அதே இடத்தில் நின்றுகொண்டுதான் இனி இந்தப் பக்கமே வந்தராதேயென ஒருமையில் பேசி எச்சரித்திருந்தாள். 

 

ஏய் சிந்தாமணி.. வெளிய வாடி.. உம்பட வயசென்ன..? எம்பட வயசென்ன..? எவ்வளவு திமிரு இருந்தா என்னை வாபோன்னு பேசீருப்பே.. அப்படி என்னடி பெருசா தப்புப் பண்ணீட்டேன் நானு.. அடியேய்.. வெளிய வாடி மொதல்ல.. நீ நெனச்சிட்டிருக்கற மாதிரியெல்லாம் ஈனப்புத்திக்காரன் கெடையாது நானு.. தெரியும்டி.. என்னைப்பத்தி என்ன நெனச்சிட்டிருக்கீன்னு தெரியும்டி எனக்கு.. கண்ணப் பார்த்தே மனசப் படிக்கிற ஆளு நானு.. எத்தன கண்ணை பார்த்திருப்பேன்..? எத்தனை மனசுகளைப் படிச்சிருப்பேன்..? வெளிய வாடி மொதல்ல.. அடியேய்.. நீ நெனச்சிக்கிட்டு இருக்கறமாதிரி உன்ற உள்பாவாடையையும் ஜட்டியையும் களவாடீட்டுப்போயி மோந்துமோந்து பார்த்து கையடிக்கிற ஆளு கெடையாது நானு… நீ நெனச்சிருக்கிற மாதிரி உன்ற ஊடுபூந்து நகைபணத்தையெல்லா அபேஸ் பண்ணீட்டுப்போற ஆளுங்கெடையாது நானு..

 

நான் வந்ததுக்கு காரணமே வேறடி.. ஒரு உண்மையைக் கண்டுபிடிக்கத்தான்டி இங்க வந்தேன். மொதல்ல உண்மைன்னா என்னன்னு தெரியுமாடி உனக்கு..? கனவுமாதிரி மனசுக்குள்ள திடீர்னு மின்னிமறையற ஒரு உண்மையை தேடித்தேடிப்போயி ரத்தமுஞ்சதையுமா நேர்லயே பார்த்து பரவசப்படற ஆளுடி நானு. ஏய் சிந்தாமணி வெளிய வாடி மொதல்ல.. எனக்கொரு உண்மை தெரிஞ்சே ஆகணும். நீ போலீசுக்குப் போன் பண்ணுனாலுஞ்செரி.. ஊருசனத்தையெல்லா கூப்புட்டுட்டாலுஞ்செரி.. உன்ற துப்பாக்கியை எடுத்தாந்து என்னை சுட்டே கொன்னாலுஞ்செரி.. அந்த உண்மையைத் தெரிஞ்சுக்காம இந்த எடத்தைவுட்டு நகரமாட்டேன்.

 

உப்பிலியன்மேட்டு ரோட்டுக்குழில லாமார்ட்டின் பாட்டில்களைப் போட்டது நீதானே..? நீயேதான்னு நாஞ்சொல்றேன்.. நிரூபிக்க முடீலங்கிறதுக்காக உண்மையான ஒண்ணு உண்மையில்லாத ஒண்ணா ஆகீடாது. ஏய் சிந்தாமணி.. அந்த பாட்டில்களைப் போட்டது நீ இல்லீன்னா வெளியவந்து என்ற கண்ணு ரெண்டையும் நேருக்குநேராப் பார்த்து இல்லைன்னு சொல்லுடி.. நான் போயிடறேன். என்ன ஆனாலுஞ்செரி.. என்ன பண்ணுனாலுஞ்செரி.. இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் தெரியாம இந்த எடத்தைவுட்டு நான் நகரப்போறதில்லை…   

 

பழனிச்சாமி திண்ணையில் இருந்த தேநீர்மேசையை நடுவாசலுக்குக் கொண்டுவந்தார். பைக்கின் டேங்க் கவரிலிருந்த லாமார்ட்டின் முழுபாட்டிலையும் வாட்டர்கேனையும் ஒன்யூஸ் டம்ளரையும் எடுத்துக் கொண்டுவந்து அதன்மேல் வைத்தவர் நாற்காலியில் அமர்ந்து குடிக்கத் துவங்கினார். கடிப்பானுக்குப் பதிலாக சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டார். வடிந்துவிட்டதன் அமைதி அவரிடம் நிலவியது.

 

திண்ணைக்கு மேலிருந்த ஜன்னலின் கருப்புக் கண்ணாடிகள் வீட்டிற்குள் எரியத் துவங்கிய விளக்குகளால் நிறம் மாறின. சற்று நேரத்தில் கதவைத் திறந்துகொண்டு சிந்தாமணி வெளிப்பட்டாள். கருநீல நைட்டியிலிருந்தாள். மதியத்தின் கோபகுரோதங்கள் எதுவுமின்றி அலம்பி பவுடர் பூசிய முகம் பளிச்சிட்டது. வாசற்படியிறங்கி வாசலுக்கு வந்தவள் துப்பாக்கியோ கத்தியோ கைப்பேசியோ இல்லாத கைகளை இடுப்பில் ஊன்றியபடி பழனிச்சாமியையே கூர்ந்து பார்த்தபடி நின்றாள். ‘இங்க பார்.. உப்பிலியன்மேட்டு ரோட்டுக்குழீல லாமார்ட்டின் பாட்டில்களைப் போட்டது நீதான்னு நான் சொல்றேன். ஆமாவா இல்லையான்னு ஒரேயொரு வார்த்தை மட்டும் சொல்லீரு.. மறுபேச்சே பேசலை.. உடனே கெளம்பிப் போயிடறேன்’ பழனிச்சாமின் குரலும் கோபகுரோதங்களைத் துறந்திருந்தது.

 

நாற்காலியொன்றை எடுத்துப்போட்டு எதிரில் அமர்ந்துகொண்ட சிந்தாமணி பழனிச்சாமியின் மீதான கூர்பார்வையை விலக்காமலேயே கூறினாள். ‘பயங்கரமான மூளைக்காரன்யா நீயி..’      

                                       ---------------------------------------------------------------

 

       

 

  

 

      

 

    

 

    

    

 

 

           .            

 

 

No comments: