பித்துமாரி
’ஊஞ்சப்பாளையமெல்லா எறங்குங்க..’
சத்தமாகக் கூறியபடி நடத்துனர் விசிலை ஊதினார். சட்டென்று எழுந்துவந்து இறங்கிக் கொண்டேன்.
பேருந்து கண்மறையும்வரை மனதில் எந்த எண்ணங்களுமில்லை. நிச்சலனத்திலிருந்து சலனத்திற்குத்
திரும்பி ஊஞ்சப்பாளையத்தை நோட்டமிட்டேன். கடந்த ஐந்து வருடங்களாகவே வரத்திட்டமிட்டிருந்த
ஊர்தான்.
ஊஞ்சப்பாளையத்திற்குச் செல்வது
பற்றியும் முத்துராமசாமி அய்யாவைச் சந்திப்பது பற்றியும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அவ்வப்போது
எண்ணமிட்டிருக்கிறேன். இன்று கைகூடியிருக்கிறது.
டவுன்பஸ்ஸில் ஏறி அது போய்ச்சேரும்
கடைக்கோடி ஊர்வரைக்கும் போய் இறங்குவது பிறகு அங்கிருந்து இன்னொரு டவுன்பஸ்ஸைப் பிடித்து
அது போய்சேரும் ஊர்வரை போய் இறங்குவது மதியத்திற்குப் பிறகு இதேமுறையில் ஊருக்குவந்து
சேருவது என்பதுதான் இன்றைய விடுமுறைநாளுக்கான திட்டமாக இருந்தது. இன்றைய நிகழ்ச்சி நிரலில் ஊஞ்சப்பாளையம் இல்லை. ஞாபகமும்
வரவில்லை. நான் வந்துகொண்டிருந்த இந்த வழித்தடத்தில்தான் ஊஞ்சப்பாளையம் இருக்கிறது
என நடத்துனர் விசிலுக்கு பேருந்து நிற்கும் வரைக்கும் எனக்குத் தெரியாது. ஆனாலும் பாருங்கள்..
இப்போது நான் ஊஞ்சப்பாளையத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.
ஊரை இரண்டாக வகிர்ந்தபடி தார்ரோடு
கிழக்கே போனது. ஓங்கி உயர்ந்த புளியமரங்கள் சாலையின் இருமருங்கிலும் இங்கொன்றும் அங்கொன்றுமாக
நின்று நிழல் பரப்பியிருந்தன. ஐம்பது வருடங்களுக்குமுன் இந்தச்சாலை மண்சாலையாக இருந்திருக்கும்
எனத் தோன்றியது. சாலையின் இரு பக்கங்களிலும் இத்தனை கடைகளும் கட்டிடங்களும் இருந்திருக்காது.
கிராமநிர்வாக அலுவலகமும் ஆரம்ப சுகாதார நிலையமும் தபாலாபீசும் நடுநிலைப்பள்ளியும் மேல்நிலை
நீர்த்தேக்கத் தொட்டியும் தார்ச்சாலை வந்த பிற்பாடே ஒன்றன்பின் ஒன்றாக உருவாகி வந்திருக்கவேண்டும்
எனத்தோன்றியது. புளியமரங்கள் அப்போதும் இருந்திருக்க வேண்டும். அவைகள் நூற்றாண்டைக்
கண்டதுபோல் தோற்றம் காட்டுகின்றன.
கால்நடை மருத்துவமனையருகேயிருந்த
பெட்டிக்கடைக்காரருக்கு உள்ளூர் முகம், அவரிடம் விசாரித்தேன். ‘முத்துராமரு போயி வெகுகாலமாயிருச்சுங்களே?’ என்றார். கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்ன செய்வது திரும்பிப் போய்விடலாமா
என நினைத்தேன். வந்ததே வந்துவிட்டோம் போய் அந்தக் கிணற்றைப் பார்த்துவிடுவோம் என்றும்
தோன்றியது. ‘அதுக்கப்பறம் ஊருக்குள்ளிருக்கற ஊட்டைக் காலி பண்ணீட்டு அவரு சம்சாரம்
பழனாத்தம்மாளும் தோட்டத்துக்கே குடி போயிட்டாங்க. வேணும்னா அவுங்களைப்போயி பார்த்துட்டுப்
போங்க..’ என்று தோட்டத்துக்குப் போகிற வழியை விவரித்தார். அவரது பையனை விசாரித்தேன்.
’அவனைக் கண்டுபிடிக்கவே முடீலீங் தம்பி. அந்த வெசனத்திலயே முத்துராமரு போயிட்டாருன்னு
வெய்யுங்களேன்’ என்றார்.
அந்த அதிகாலையில் குளித்து ரெடியாகி
புறப்பட்டுக் கொண்டிருந்தேன். வழுக்கைத்தலையும் நரைத்த முறுக்கு மீசையுமாக இருந்த ஒரு பெரியவர் என்னைத் தேடி வந்தார். தான் பக்கத்து
அறையில் தங்கியிருப்பதாகக் கூறினார்.
இரவு நான் போனில் பேசிக்கொண்டிருந்த
பேச்சுகளில் கொஞ்சம் அவர் காதிலும் விழுந்திருக்கிறதுபோல. கொடுவாய் குண்டடம்னெல்லாம்
ரெண்டுமூணுவிசுக்கா சொன்னது கேட்டேன் அதான் நம்ம ஏரியாக்காரங்களாட்டயிருக்குதேனு பார்த்துட்டுப்
போலாம்னு வந்தேன்அப்புனு என்றார்.
சிறு அறிமுகத்துக்குப்பிறகு நானும்
முத்துராமசாமி அய்யாவும் விடுதியிலிருந்து வெளிப்பட்டு தேநீர் அருந்தினோம். ‘சரி போயி
ஒரு குளியல் போட்டுட்டு வாங்க.. ரெண்டுபேரும் அப்படியே பேசீட்டு ஒண்ணாவே கிரிசுத்தி
வருவோம்’ என்றேன். ‘நீங்க போயிட்டு வாங்கப்புனு. மத்தியான உச்சிப்பொழுதுல
கிரிசுத்தி வரோணம்னுதான் எனக்கு உத்தரவு. பத்துநாளா அப்படித்தான் சுத்தீட்டிருக்கேன
‘ என்றார்.
கிரிவலம் முடிந்து வழியில் டிபனும்
சாப்பிட்டுவிட்டு அறைக்குத் திரும்பினேன். எனக்காகத்தான் காத்திருந்திருப்பார்போல.
குளித்துமுடித்து காவி வேட்டியும் வெள்ளைச் சட்டையுமாக உச்சிவேளை கிரிசுற்றுக்குத்
தயாராக இருந்தவர் அந்தப் புகைப்படத்தைக் கொண்டுவந்து கொடுத்தார். போட்டோவில் இருந்த
இளைஞனுக்கு சின்னவயசு முத்துராமசாமி அய்யாவின் சாயல். ‘ இது எம்பையந்தானப்புனு.. இருபத்தியாறு
வயசு நடப்பிலிருக்குது. அவனைத் தொளாவிக்கிட்டுத்தான் இங்கவந்து சுத்திக்கிட்டு இருக்கிறேன்.
அவன் வூட்டைவிட்டுக் கெளம்பி முழுசா மாசம் மூணு ஆயிடுச்சு.’ என்றார். அதிர்ச்சியுடன் ’என்னங்கய்யா சொல்றீங்க ? என்னாச்சுங்கய்யா..?’ என்றேன்.
“நாலுமாசத்திக்கு முன்னாடி வரைக்கும் ரொம்ப நல்லா இருந்தோம்
அப்புனு.. அதுக்கப்பறம் எல்லாமே தலைகீழா மாறிப்போச்சு. எட்டாவது வரைக்குந்தான் படிச்சான்.
படிக்கமுடியாதுன்னு குப்புறப்படுத்துக்கிட்டது ஒண்ணுதான். அதைத்தவிர அவனை யாரும் கொறை
சொல்ல மூடியாதபடிதான் வளர்ந்தான். செரியான பாட்டாளி. எந்தவேலையையும் சங்காமச் செய்வான்.
தண்ணிதவிடுன்னு எந்தக் கெட்ட பழக்கமும் கெடையாது. அப்படியான ஆளுகளோட சகவாசமும் வெச்சுக்க
மாட்டான். பண்ணயம் மொத்தமா அம்பது ஏக்கராச் சேரும். அதுல வெள்ளாமை பண்ற நிலம்னு பார்த்தா
அஞ்சு ஏக்கரா இருக்கும். மீதியெல்லாம் கொறங்காடுகதான். ஆடுமாடுக மேயற காடுகதான். பருவத்துல
மட்டும் கொள்ளு நரிப்பயிருனு வெதச்சுடுவோம்.
அஞ்சு ஏக்கரு விவசாய நிலத்துக்குஞ்சேர்த்து
ஒரே கெணறுதான். ஒரு கெணறுன்னாலும் ரொம்பப் பெரிய கெணறு. நாப்பது மொழத்துல எந்த வேடைக்கும்
பத்து மொழத்துக்குங் கொறையாமயாவது தண்ணி கெடந்துட்டேயிருக்கும். மழைகாலத்துல கடைவெட்டியுடறளவுக்கு
நாப்பது மொழத்துக்கும் தண்ணி மேல வந்துரும். எங்க தோட்டத்துக்கே ஒறம்புத் தோட்டம்னுதான்
பேரு. நடுவால போற பள்ளத்துல வருசத்திக்கு நாலு மாசத்திக்காவது ஒறம்புத்தண்ணி போயிட்டிருக்கும்னா
பார்த்துக்கவேன். கெணறுதான் வலுவாயிருக்கே.. கொறங்காடுகளுக்கும் பைப்புப் போட்டுக்
கொண்டுட்டுப்போயி தென்னம்புள்ளைகளை வெச்சுடலாமேனு எல்லோரும் சொல்லுவாங்க. பாட்டம்பூட்டங் காலத்திலயிருந்து நாங்க யாரும் அதைச்
செய்யல. எங்களால முடீல. எம்பையன் பாட்டுக்குவந்து ரெண்டே வருசத்துல அதை சாதிச்சான்.
தோட்டத்தையுட்டு கொறங்காடு மூணு
பர்லாங்கு அக்காட்டல இருக்கும். அந்த மூணு பர்லாங்குக்கும் பஞ்சாயத்துல பர்மிசன் வாங்கி
பஞ்சாயத்து ரோட்ல பைப்புப் போட்டுட்டுக் கொண்டுபோயி கொறங்காட்டுல பத்து ஏக்கருக்கு
தென்னங்கன்னுகளை வெச்சுட்டான்.
இன்னிக்குவந்து பார்த்தீனா எழுநூறு
தென்னமரங்களோட மீறுன தென்னந்தோப்பா அது இருக்குது. இந்தக் காலத்துல ரெண்டு ஏக்கரு வெள்ளாமை
பண்ற தோட்டத்துலகூட கெணறுபோக ரெண்டுமூணு போர்க்குழியாவது இருக்கும். நூறு தென்னை மரம்
வெச்சுருக்கறவங்ககூட நாலஞ்சு வருசத்துக்கொருக்கா வந்துட்டுப்போற கடும் வேடைக்குப் புதுசா
போர்குழி தோண்டாம முடியறதில்லே. ஆனா எங்க தோட்டத்துல வந்து பார்த்தீனா சம்பிரதாயத்துக்குனுகூட
ஒரு போர்க்குழியைக் கண்ணுலகாங்க முடியாது.
கத்திரி வெங்காயம் மொளகாயி முருங்கை
பொகீலைன்னு தோட்டம் முழுதும் வெள்ளாமை இருந்துட்டேயிருக்கும். பத்தாக்குறைக்கு பையன்
உருவாக்குன தென்னந்தோப்பு வேற. சொன்னா உன்னால நம்பக்கூட முடியாது. இந்த சாமி ஸ்தலத்துல
உக்காந்துட்டுச் சொல்றேன். அத்தனையையும் அந்த ஒத்தக்கெணறு சமாளிச்சுது அப்புனு.. இன்னிக்கும்
அது சமாளிச்சிட்டுத்தான் இருக்குது.
பொதுவாவே தண்ணிக்கித் தவுதாயமா
இருக்குற இந்தக் காலத்துல நாப்பதேமொழத்துல இப்படியொரு கெணறு இருக்குதுன்னா சுத்தீயும்
பண்ணையம் ஓட்றவங்களாலே சும்மா இருக்க முடியாதுதானே? எல்லோரும் அவுங்கவுங்களால ஆனவரைக்கும்
எங்க தோட்டத்தைச் சுத்திச்சுத்தி கெணறு வெட்டிப் பார்த்துட்டாங்க போர்க்குழி தோண்டிப்
பார்த்துட்டாங்க. ஒண்ணும் அசைக்க முடீல. பதனஞ்சு மொழத்துக்கீழ ஒரு வெங்கச்சாங்கல்லுப்
பொறடு இருக்குது. ஒரு பெரிய ஆட்டுக்குட்டி உள்ளபோயி சவுரீயமாப் படுத்துக்கலாம். சித்தரை
வைகாசி மாசங்கள்லதான் அந்தப் பொறட்டுக்கீழயே நீர்மட்டம் போகும். அப்பவந்து பார்த்தீன்னு
வெய்யி.. அஞ்சார்ஸ்பவரு மோட்டாருத்தண்ணி மாதிரி சும்மா திடுந்திடுன்னுவந்து உழுந்துட்டேயிருக்கும்.
அப்பேர்ப்பட்ட சலக்காலு அப்புனு அது. அப்பேர்ப்பட்ட கெணறப்புனு அது. அப்பேருப்பட்ட
கெணறுதான் எம்பையனை பைத்தியகாரனாவும் ஆக்கியுட்ருச்சு..”
சுவராசியமான கதையின் போக்கில்
திடுக்கிடும் திருப்பத்தை எதிர்கொண்டதைப்போல இருந்தது. “என்னங்கய்யா
சொல்றீங்க..?”
“ஆமாமப்புனு.. ஒரு அமாவாசையன்னிக்கு
ராத்திரி எம்மவன் அந்தக் கெணத்துக்குள்ள வுழுந்துட்டான். அதுக்கப்பறந்தான் அவனுக்கு
புத்தி பேதலிச்சமாதிரி ஆகிப்போச்சு.”
“அடக்கடவுளே.. எப்புடிங்கய்யா உழுந்தாரு..?”
“அன்னிக்குப் பகல்ல மோட்டாரை ஓடவேயில்லை
கண்ணு.. எங்கியோ லைன்கம்பி அந்துபோயி பொழுதுக்கும் கரண்டு இல்லாமப் போயிருச்சு. எந்த
நேரமும் பத்தார்ஸ்பவரு மோட்டாரு ஓடீட்டிருக்கற கெணத்துல ஒருநா பொழுத்துக்கும் மோட்டாரு
ஓடலீன்னா நீர்மட்டம் மேல வரத்தானே செய்யும்? அதையுந்தவிர அன்னிக்கு பகல்ல தண்ணிபாய
வேண்டிய வெங்காயக் காட்டுக்கு கரண்டில்லாததுனால தண்ணி பாய்ச்ச முடீல.. ஆட்டுப்பட்டி
மாடுகன்னெல்லா இருக்குதுங்கிறதால எப்புவமே எம்மவன் நைட்டுப் படுக்கைக்குக் தோட்டத்துக்குப்
போயிருவான். காலைல எந்திரிச்சு எல்லா மாட்டுலயும் பால் கறந்துட்டு கையோட சொசைட்டீக்கும்
கொண்டுபோய் ஊத்தீட்டு அப்பறமாத்தான் காபித்தண்ணி குடிக்கறதுக்காக ஊட்டுக்கே வருவான்.
அன்னிக்கு நைட்டு படுக்கப் போனவன்
பகல்ல தண்ணிகட்ட முடியாத வெங்காயக் காட்டுக்கு பேட்டரிலைட்டப் போட்டுக்கிட்டே இப்பபோயிக்
கட்டிப்போடலாம்னு கெணத்து மேட்டுக்குப்போயி மோட்டாரை போட்டுட்ருக்கான் தம்பி. அப்போ
எங்க எப்படி ஏமாந்தான்னு தெரீல. எப்படி எது தடுக்காட்டியுட்டுதுனு தெரீல. பையன் கெணத்துக்குள்ள
வுழுந்துட்டான்.”
“அய்யையோ.. அமாவாசை ராத்திரீல நாப்பதுமொழக் கெணத்துக்குள்ள
வெடியவெடியக் கெடக்குறதுனா.. நெனச்சாலே பகீர்ங்குதுங்ளே..”
“மேலவர்றதுக்கு படிக்கட்டெல்லாம் ஒண்ணுமில்லை அப்புனு.. தேவைனா
கயித்தைக் கட்டி இறங்கி ஏறிக்குவோம். கெணத்தைச் சுத்தியும் மரம்மட்டைன்னு பதவுளுக அதிகம்.
தவறியுழுந்த பாம்புக எப்ப எட்டிப்பார்த்தாலும் ஆளு நீளத்துக்கு நெளிஞ்சிக்கிட்டுக்
கெடக்கும்ங்க. நெனச்சுப்பார்க்கறதுக்கே பகீர்ங்குதே.. அந்தக் கொடுமைலதான்
பையன் வெடியவெடியக் கெடந்திருக்கிறான்.
காலைல வழக்கமா வாரநேரத்துக்கு
வரக்காணோம். பால்சொசைட்டீல பேசீட்டு நின்னுக்கிட்டானாட்டயிருக்குதுனு நானும் அசால்ட்டா
உட்டுட்டேன். இன்னும் பால்வரக் காணோமேனு ஆள்வரவும்தான் தோட்டத்துக்கு ஓடுனேன். ஒடம்புக்கு
சொகமில்லாமக்கீது எந்திரிக்க முடியாமப் படுத்திருப்பான்னுதான் நெனச்சேன். சாளைல படுக்கை
சுத்தி வெச்சுருந்துது. கட்டுத்தாரைல சாணியெல்லா வழிக்காமக் கெடந்தது. மாடெல்லாம் பால்கறந்த மாதிரி தெரியல. மோட்டாரு ஓடீட்டிருந்தது.
பால்கறக்கறதுக்குங்கூட வராம வெடியவெடிய வெங்காயக் காட்டுக்கு தண்ணி கட்டீட்டிருப்பானாட்டயிருக்குதுனு முருங்கைக் காட்டைத் தாண்டி அதுக்கப்பாலயிருக்கற
வெங்காயக் காட்டுக்கு ஓடுனேன். அங்கபோயிப் பார்த்தா தண்ணி தாறுமாறா காடேகமா நெரவிக்கிட்டிருக்குது. அங்கஓடி
இங்கஓடி கடைசியா கெணத்தை எட்டிப் பார்க்கும்போது பொழுது பனையொசரத்துக்கு வந்துருச்சு.
சுத்திச்சுத்தி நீத்தமடிச்சிக்கிட்டே செவுத்துல பொடச்சிட்டிருக்கிற பாறை மொனையவெல்லாம் புடிச்சிட்டு ஏறிப் பார்த்துப்பாம்
போலிருக்குது. அடிபைப்பைப் புடிச்சிக்கிட்டே அரைநினைவாக் கிடந்தவனை மேலதூக்கியாந்து
போட்டுப் பார்த்தப்ப கைகாலுநெஞ்செல்லா அத்தனை சாறுகாயம். அதுக்கப்பறம் அவனுக்கு நல்ல
நெனவே திரும்பலை.
கிளுவைவேலிகள் மருங்கமைந்த இட்டாறியில்
நடந்து கொண்டிருந்தேன். ஆடுமாடுகளின் குளம்படிச்சுவடுகளையும் சாணங்களையும் புழுக்கைகளையும்
சிறு உருண்டை வெங்கச்சாங் கற்களையும் ஓடைக்கற்களையும் கொண்டிருந்த இட்டாறித்தடத்தின்
கொழுமணலில் பாதங்கள் புதைய நடக்கையில் நீரில்லாதுபோன சிறு ஓடைக்குள் நடப்பது போலவே
தோன்றியது. மழைபெய்யும் சமயங்களில் பக்கவாட்டுக் குறங்காடுகளின் மழைநீரெல்லாம் திரண்டிறங்கி
செம்மண்நிறங்கொண்ட சிற்றாறுவொன்று இட்டாறித்தடத்தில் பாய்ந்தோடிவரும் காட்சி கற்பனையில்
விரிந்தது. பெரிய வேப்ப மரமொன்றைத் தாண்டியதும் கருஞ்சல்லிகள் மேவிய மண்பாதை குறுக்கிட்டது.
பெட்டிக்கடைக்காரர் சொன்னதுபோலவே வலப்பக்கமாகத் திரும்பி மண்ரோட்டில் மேற்கே நடக்கத்
துவங்கினேன். மண்பாதையின் இருபுறமும் தோட்டங்கள்தான். தென்னைமரங்களின் பச்சையும் வெள்ளாமைப்
பயிர்களின் பசுமையுமாக இருந்தது. ஒரு பர்லாங்குபோல நடந்திருப்பேன். ரோட்டின் மேபுறத்தில்
கம்பிவேலியும் மூங்கில்படல்கேட்டுமாக இருக்கும் இடம் வந்தது. மூங்கில்படல் கதவுகளிரண்டும்
திறந்திருந்தன.
ஐந்துஏக்கர் விவசாய நிலம் மீதியெல்லாம்
கொறங்காடுகள் என முத்துராமசாமிஅய்யன் சொல்லியிருந்தது ஞாபகத்திற்கு வந்தது. சுற்றிலும்
கம்பிவேலியிட்டு காபந்து பண்ணப்பட்டிருக்கும் தோட்டத்தின் பரப்பளவைப் பார்க்கும்போது
அதிகமாக இருக்கலாம் எனத் தோன்றியது. பூவுக்கு வந்திருந்த மிளகாய்காட்டில் இரண்டுபேர்
களைவெட்டிக் கொண்டிருந்தனர். இரண்டு ஏக்கர்போல செடிமுருங்கைமரங்கள் சடைசடையாய்க் காய்த்துத்
தொங்கின. குரம்பைகட்டும் பக்குவத்திலிருந்த சின்னவெங்காயக் காட்டிற்கு ஒருவர் நீர்பாய்ச்சிக்
கொண்டிருந்தார். மிளகாய்க்காட்டைத் தாண்டி உழவுஓட்டிப் போட்டிருந்த செம்புழுதிப் பரப்புக்கு
அப்பால் கிணறு இருந்தது. அந்தக் கிணறாகத்தான் இருக்கவேண்டும். சுற்றிலும் மண்டியிருந்த
மரம்மட்டைகள் பதவுள்களையெல்லாம் அகற்றி விட்டார்கள்போல. கிணத்தைச் சுற்றிலும் இடுப்புயரத்துக்கு
எழுப்பப்பட்டிருந்த சுற்றுச்சுவர் சுண்ணாம்புப் பூச்சில் மின்னியது.
தென்னங்கீற்று வேய்ந்த பந்தலும்
சாணம் மெழுகிய வாசலுமாக இருந்த ஒத்தைக்கோம்பை ஓட்டு வீட்டின் கதவு சாத்தப்பட்டிருந்தது.
மாட்டுச்சாளைமீதும் கட்டுத்தாரைமீதும் பெரிய வெள்ளைவேலா மரத்தின் நிழல் கவிந்திருந்தது.
சற்றே மேபுறத்தில் புதிய வீட்டுக்கான கட்டுமானப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பூவரசு மரத்தின்அடியே பிளாஸ்டிக்
நாற்காலியில் நடுவயதுப் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். யாராயிருக்கும் எனும் கேள்வியுடன் ஏறிட்டபடி அமர்ந்திருந்த
அப்பெண்ணிடம் சென்று ஒரு வணக்கத்தை வைத்தேன் ‘பழனாத்தம்மா இருக்காங்களுங்ளா..? நான்
அவர்களைப் பார்ப்பதற்காக வந்தேன்’
என்றேன். என் வணக்கத்தை ஏற்றுக்கொண்டவிதமான
தலையாட்டலுடனும் சந்தேகமான பார்வையுடனும் ‘ நான் அவுங்க மகதான் நீங்க யாரு? எங்கிருந்து
வர்றீங்க?’ என்றார்.
”நான் முத்துராமசாமி அய்யாவுக்கு பழக்கமானவனுங்க அக்கா. எங்கூரு
கொடுவாய்க்குப் பக்கத்துல இருக்குதுங்க. வேறொரு வேலையா இந்த ஊருக்கு வந்தேன். அப்படியே
அய்யாவையும் பார்த்துட்டுப் போலாம்னு தோணுச்சு. வெசாரிச்சா அய்யா போயிட்டதாச் சொன்னாங்க. சரி, அம்மாளையாவது
பார்த்து ரெண்டு பழமை ஆறுதலா பேசீட்டுப் போலாம்னு வந்தேன்”
”வண்டிவாகனமெல்லா எதுவுமில்லாம நடந்து வந்ததுனால மேசன் வேலைக்கு
இன்னிக்கு புதுசா ஆளுக வர்றதாச் சொன்னாங்க.. அந்த ஆளுகள்ல யாராவதா இருக்குமோன்னு நெனச்சுட்டேன். ஆமா.. கொடுவாய்க்குப் பக்கத்தால எந்த ஊரு?”
“வஞ்சிபாளையம்ங்க்கா..”
அவர் முகத்தில் சட்டென்று ஒரு
மாறுதல். “அட.. வஞ்சிபாளையமா..? அங்க எங்களுக்கு சொந்தக்காரங்க இருக்கறாங்களே..எங்க
நங்கையா மகனுக்குக்கூட அங்கதான் பொண்ணு எடுத்திருக்கறோம். கல்யாணமான சமயத்துல நானுங்கூட
ஒருதடவை வந்திருக்கறேன். கொழுஞ்சிக்காட்டய்யனூடுன்னோ என்னமோ சொல்லுவாங்க. உக்காருங்க
தம்பி..”
“தெரியுங்க்கா.. இருக்கறாங்க அவுங்களெல்லாம் எங்களுக்கு மாமன்
மச்சான் முறையாகிற உள்ளூர்க்காரங்கதான். ஆனா அய்யனும்நானும் ஒரு வாரம்போல ஒண்ணாவே இருந்தோம்.
அவுரு இதைப்பத்தியெல்லாம் ஒண்ணுமே சொல்லலீங்களே..?”
”இந்தக் கல்யாணமே இப்ப ரண்டு வருசத்திக்கு முன்னாலதானே நடந்தது.
புதுச்சொந்தம். அய்யம்போயி அஞ்சு வருசமாச்சே.. ஆமா எங்க அய்யன் உங்களுக்கு எப்படிப்
பழக்கம்? அவுருகூட எப்ப ஒருவாரம் ஒண்ணா இருந்தீங்க..?”
“திருவண்ணாமலைலீங்க்கா.. அப்போ அய்யன் தங்கியிருந்த லாட்ஜ்லதான்
நானும் தங்கியிருந்தேன். ‘என்னைப்பார்த்தா மறைஞ்சாலும் மறஞ்சுக்குவான். உன்னை அவனுக்கு
யாருனே தெரியாதுங்கிறதால உங்கண்ணுக்குத் தட்டுப்பட்டாலும் தட்டுப்படலாம்னு அய்யன் உங்க
தம்பி போட்டோவைக் குடுத்தாங்க. மூணுநாள்ல திரும்பவேண்டியவன் அய்யனுக்காக கூட ஒரு நாலுநாள்
தங்கீட்டு வந்தேன். நானும் அந்தப் போட்டோவை வெச்சுக்கிட்டு திருவண்ணாமலை பூரா அன்னதானம்னு
போடற ஒரு எடம் பாக்கியில்லாமச் சுத்திப் பார்த்துட்டேனுங்கா. எங்கண்ணுக்கும் அவுரு
தட்டுப்படவேயில்லை.”
அந்த அக்காவின் முகத்தில் சட்டென்று
ஒரு சோர்வு படர்ந்துகொண்டது. கட்டுமான வேலைகள் நடந்துகொண்டிருக்கும் இடத்தைநோக்கி
‘விக்னேசு.. டே விக்னேசு.. ரண்டு எளநி வெட்டியாரச்சொல்லு சாமி..’ என்றார். கைகளைப் பிசைந்தபடியே சற்றுநேரம் வெற்றுவெளியை வெறித்திருந்தவர் திருவண்ணாமலைலதான்
உங்க பையன் பரதேசிக்கோலம்பூண்டு சுத்தீட்டிருக்கறான். தினமும் உச்சிப்பொழுது நேரத்துல
கிரிவலம் வந்தா நாற்பத்தியெட்டு நாளுக்குள்ள
அப்பான்னு முன்னால வந்து நிப்பான் கூட்டீட்டு வந்துரலாம்னு பிரசன்னம் போட்டுப்
பார்த்துட்டுச் சொன்னாங்க தம்பி. ப்ச்.. ஒண்ணும் பிரயோசனமில்லை..”
”எனக்கும் ரொம்ப கஷ்டமாத்தான் இருக்குதுங்க்கா.. ஒரே ராத்திரி
ஒருத்தருடைய சுபாவத்தையே தலைகீழா மாத்திப்போட்டுது பாருங்க..”
“அதைத்தான் தம்பி நானும் நெனைச்சுக்குவேன். இத்தனைக்கும்
அவன் ரொம்ப தைரியமான ஆளுதான். தெக்காலக் கொறங்காட்டுக்கு பஞ்சாயத்துரோட்டுக்குழில பைப்புப்
போட்டுக் கொண்டுட்டுட்டுப் போறதுக்கு அத்தனை எதிர்ப்பு வந்தது. எங்கய்யனுங்கூட பயிந்துக்கிச்சு.
ஊருலயிருக்கிற பெரிய மனுசங்க பொல்லாப்பெல்லாம் நம்முளுக்கு வேண்டாம் வுட்ரலாம்னு சொல்லியும்
கேக்கலை. நான் சட்டப்படி பணம்கட்டி மொறையா அனுமதி வாங்கிதானே செய்யறேன். இவுனுகளுக்கெல்லாம்
பயப்படமாட்டேன்னு காரியத்தைச் சாதிச்சான். அப்படிப்பட்ட தைரியசாலி ஒரு ராத்திரி கெணத்துதண்ணிக்குள்ள
வெளியவர முடியாமக் கெடந்ததுக்காக புத்தி பேதலிச்சுப்போயி எல்லாத்தையும் வுட்டுட்டு
ஓடீட்டானுங்கிறதை இப்பவும் என்னால நம்பவே முடியலை.
இத்தனைக்கும் அந்தக் கெணத்தையோ
கெணத்துத் தண்ணியையோ தெரியாத ஆளும் கெடையாது. சின்னவயசுல நாங்க எல்லோருமே அந்தக் கெணத்துலதான்
நீத்தம் பழகினோம். வெய்யகாலத்துல பகல்பூராவும் அந்தக்கெணத்துக்குள்ளதான் தண்ணித்தவக்காயிமாதிரிக்
கெடப்போம்.”
ஒருவர் இரண்டு இளநிக்காய்களைப்
பறித்துவந்து சீவித் துளையிட்டுக் கொடுத்தார். இளநீர். குளிர்ச்சியும் புளிப்பினிப்புமாய்
உள்ளிறங்கியது. இரண்டாகப் பிளந்து தோசைப் பதத்திலிருந்த நெற்றைத் தோண்டிக் கொடுத்தார்.
அதையும் சாப்பிட்டு முடித்தேன். ‘வயிறே ரம்பிப் போச்சுங்க்கா.. அம்மா எங்க சாளைல இருக்கிறாங்களுங்ளா..?
போயிப் பார்க்கலாங்ளா..?’ என்றேன்.
”அது செரியா வராது தம்பி. எம்பையன் விக்னேசைத் தவிர யாருகூடயுமே
அவுங்க பேசிக்கறதில்லை.. பேசாம நீங்க இப்படியே திரும்பிப் போயிருங்க..”
“அக்கா..”
“எங்கய்யன் திரும்பிவந்து பையனைக் கண்டுபிடிக்க முடியலைன்னு
சொன்னதை எங்கம்மாவாள ஏத்துக்கவே முடியலை தம்பி. அந்த நாற்பத்தியெட்டு நாளும் வெநாயகனுக்கு தண்ணியுட்டுட்டு இருந்தது. சாப்பாடும்கூட
சாமி கும்புட்டுபோட்டு வந்து காலைல ஆக்கித் திங்கற அந்த ஒரே வேளைதான். பொழுதுக்கும்
ஆட்டுக்கால்ல திரிஞ்சாலுஞ்செரி.. வெள்ளாமைக் காட்டுல வேலை செஞ்சாலுஞ்செரி பச்சத்தண்ணியைத்
தவிர வேறெதையும் சேர்த்திக்காம கடும் விரதம் இருந்தது. அந்தச் சோசியரு அய்யனைத்தான்
அங்கபோயி கிரிசுத்தச் சொன்னாரேதவிர அம்மாளுக்கு ஒண்ணுஞ் சொல்லலை. ஆனாலும் இதுமோட மனசுப்படி
இந்தமாதிரி இருந்துக்கிட்டிருந்தது. எம்மவனில்லாம நீமட்டும் எதுக்கு வந்தே.. வந்தா
பையனோட வா.. இல்லாட்டி வாசலுக்குள்ள காலெடுத்து வெக்காதேனு அய்யனை ஊட்டுக்குள்ளயே வுடமாட்டீன்ருச்சு.
நாங்க பொண்ணுக ரெண்டுபேரு மருமகனுக யாரு சொல்லியும் எடுபடலை. இதொ இந்த மாட்டுச்சாளைலதான்
அய்யன் கடைசி ஒரு மாசமும் இருந்தாங்க. சோறும் போட மாட்டேனு சொல்லீருச்சு. அக்காளைக்
கட்டிக்குடுத்த ஊரு தூரம்கிறதால நாந்தான் தினமும் சாப்பாடு கொண்டாந்துபோட்டு அய்யனைப்
பார்த்துக்கிட்டேன். அய்யன்போனதுக்கு அப்பறம் அந்தக் கோபமெல்லாம் எங்கமேல திரும்பீருச்சு.
சொத்துக்கு ஆசைப்பட்டு தன் பையனை
கொல்லப் பார்க்கறாங்கன்னு மருமகனுக ரெண்டுபேரையும் பேச ஆரம்பிச்சிருச்சு. அவுங்க யாரும்
இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கறதில்லை. ஏன் ஒத்தையில கெடந்திட்டிருக்கறே? தோட்டத்தையெல்லாம்
குத்தகைக்கு வுட்ருலாம் தம்பி வந்தன்னிக்கு திருப்பிக்கலாம். அதுவரைக்கும் எங்ககூட
வந்து இருந்துக்க வயசான காலத்துல தனியா இருந்து உனக்கெதாச்சு ஆயிருச்சின்னா என்ன பண்றதுனு
ஒருக்கா சொல்லிப் பார்த்தேன்.
இதுதான் சாக்குனு எல்லாருமாச்
சேர்ந்து தோட்டத்தையெல்லாம் வித்துப்போடலாம்னு நெனைக்கறீங்களா? அதுமட்டும் நடக்காது.
எம்பையன் வர்றவரைக்கும் எனக்கு ஒண்ணும் ஆகாது. நா என்னையப் பார்த்துக்கறேன். எம்மவனை
எப்புடித் திருப்பிக் கூட்டியாரதுனு எனக்குத் தெரியும். நான் கூட்டியாந்துக்கறேன்.
எனக்கு சனமெனம் மக்கமருமக்க சாமி தெய்வம் ஒண்ணும் வேணாம். எம்பையன் போனபோது இந்தத்
தோட்டம் எப்படி இருந்ததோ அதைவிடவும் நாலுமடங்கு கெளத்தியா மாத்தப்போறேன். நீங்கெல்லா
உங்க வேலையைப் பார்த்துட்டுப் போங்கனு ஒருதடவை என்னையும் நொறுங்கப் பேசீருச்சு தம்பி.
அதுக்கப்பறம் நானும் செரியா வந்துக்கறதில்லை.
தோட்டத்துக்குள்ள ஒரு கருப்பராயங்கோயிலு
அஞ்சாறு தலக்கட்டா இருக்குது. செவ்வா வெள்ளி மஞ்சத்தண்ணிப்பூசை ஆடிமாசத்துல கெடாவெட்டுனு
நல்லமொறையா கொண்டாடிகிட்டு இருந்தோம். அஞ்சு வருசமாச்சு. ஒத்தை வெளக்குகூட ஏத்தாம கோயிலே
முள்ளுமொளைச்சு மண்ணுமூடிப் போச்சு. நீயேசொல்லு தம்பி ஏற்கனவே என்ன சாபமோ என்ன தெய்வகுத்தமோ
பொறந்தவன் இப்படிப் போயிட்டான். பத்தாததற்கு இந்தக் கோயலையும் இப்படிப் முள்ளுமூட உட்டுட்டா
அந்தப் பாவம் சும்மா வுடுமா? எங்ககுடும்பம் எங்க வாரிசுகளுக்கெல்லாம் என்ன கெடுதி வந்துருமோன்னு
ஒவ்வொரு நிமிசமும் திக்குத்திக்குனு இருக்குது.
எம்பையன் விக்னேசுதான் வரப்போக
இருக்கறான். பார்க்கறதுக்கு எந்தம்பி சாடையிலேயே இருக்கறதாலயோ என்னமோ எங்களையெல்லாம்
அத்தனை பேச்சுபேசறது அவனை ஒண்ணுஞ் சொல்றதில்லை. அவுனும் அதுக்குத்தகுந்தமாதிரி நேக்கா
நடந்துக்குவான். ஆட்டுகுட்டிவித்தா தேங்காய்வித்தா வெள்ளாமைஎடுத்தானு வருமானம் வரும்போது
அவனைக் கூட்டீட்டுப்போயி தம்பேர்ல பேங்குல போட்டுக்கும். தொகையா சேர்ந்ததும் கொறங்காட்டையெல்லா
மவுச்சி தோட்டம் பண்றது கம்பிவேலி போடறது பாம்பேறியை எடுத்துக்கட்டி கெணத்துக்கு சுத்துச்சுவரு
கட்றதுன்னு ஒவ்வொரு வேலையா செஞ்சிக்கிட்டு வருது தம்பி. இப்ப வூடு கட்டிக்கிட்டிருக்குது.
பையன் வந்தா அவுனுக்கு ஒரு சிரமமும் இருக்கக்கூடாதாமா. ஒண்ணு பாக்கியில்லாம எல்லாச்
செளரியத்தையும் செஞ்சு வெச்சிரோணமாமா. செய்யுட்டும்தம்பி என்னமோ பண்ணிக்கிட்டுப் போகட்டும்.
ஆனா நாங்கெல்லா சேர்ந்துதான் அதும்பையனுக்கு என்னமோ பண்ணிவெச்சிட்டம்னு நெனச்சுக்கிட்டு
இருக்குது பாருங்க அதைத்தான் சகிச்சுக்க முடியலை.
இன்னிக்குக்கூட நான் வந்துருக்க
மாட்டேன். காதுகுத்து ஒண்ணுக்குப் போயிட்டு நானும் பையனும் திரும்பி வந்திட்டிருந்தோம்.
என்ன சோலியோ இன்ஜினியரு சீக்கிரமா வா விக்னேசுன்னு கூப்பிட்டுட்டாரு. ஊட்டுக்குப்போயிட்டு
வந்தா லேட்டாயிரும்னு அப்படியே என்னையுங் கூட்டிக்கிட்டே வந்துட்டான். கெழவியப் பார்த்துட்டுப் போலாம்னு
நானும் வந்துட்டேன். வந்து ரெண்டுமணி நேரமா இதே எடத்துல உக்காந்துட்டிருக்கறேன். ஒரு
வார்த்தை வான்னு கூப்பிடலெ. அண்ணாந்துக்கூட பார்த்துக்கலை தம்பி. அவபாட்டுக்கு அவவேலையைச்
செஞ்சிக்கிட்டிருக்கறதைப் பாரு..”
சுற்றிலும் பார்த்துவிட்டுக் கேட்டேன்
”எங்கீங்க்கா..?”
“ஊட்டுவேலை நடந்திட்டிருக்கிற எடத்திலதான் தம்பி. கறுப்பா
கொஞ்சம் ஒசரமா பேய்புடிச்சமாதிரி ஆய்ஆய்னு ஒரு வெள்ளைச்சீலைப் பொம்பளை மண்ணுச்செமந்திக்கிட்டிருக்குது
பாரு.. அதுதான் எங்க அம்மா..”
“என்னுங்க்கா இது அநியாயமா இருக்குது. வூட்டப்பார்த்தா அம்பது
லட்சரூபாய்க்குப் பக்கமா செலவு வருமாட்டயிருக்குது. இவ்வளவு பணம் செலவு பண்ணிக்கட்ற
ஒரு மொதலாளியம்மா சித்தாளுகளோட சித்தாளா மண்ணுச் செமந்துக்கிட்டிருக்குது?”
“அது பைத்தியம்தம்பி. மகங்கிறுக்குப்புடிச்சு ஆட்டுது அதை.
இன்ஜினியரும் சொல்லிப் பார்த்துக்காரு இந்த வேலையெல்லாம் நீங்க செய்யவேண்டீதில்லீங்க
ஆத்தா.. அதுக்கெல்லா ஆளுக இருக்குது நாங்க பார்த்துக்கறம்னு. எம்பையன்வந்து ஊடும்குடும்பமுமா
இருக்கற ஊட்டுக்கு நானு மண்ணுச் செமக்கோணம். செமந்து கொட்டுனாத்தான் எம்பையன் நாளைக்கு
செளக்கியமா இருப்பானுங்குதாமா..”
பழனாத்தம்மாளையே பார்த்து கொண்டிருந்தேன்.
அந்த வயதான உருவம் மிகத்தீவிரமானதொரு தன்மையால் இயக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப்போல
பட்டது. சின்னதாய் அச்சமும் உண்டானது. முன்பின்
தெரியாத என்னுடனெல்லாம் அந்தக் கிழவி பேசுவதற்கு வாய்ப்பேயில்லை எனத் தோன்றியது. ‘இன்ஜினியரு
கெளம்பிப் போவாராட்டயிருக்குது. நீங்களும் அவரு கார்லயே போயி பஸ்ஸ்டாப்புல எறங்கிக்கறீங்களா..?நான்
வேணும்னா அவுருகிட்டச் சொல்லட்டுமா..?”
என்று அந்த அக்கா கேட்டார். ‘சொல்லுங்கக்கா
போய்க்கறேன்’ என்றேன்.
குண்டடத்துக்கான பேருந்துவர இன்னும்
பதினைந்து நிமிடம் ஆகும் என்றார்கள். நிறுத்ததையொட்டியே வேப்பமரநிழலில் இருந்த சிமெண்ட்
இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டேன்.வேம்பின் நிழல் இதமாக இருந்தது. தாராபுரம்
போகும் பேருந்து ஒன்றுவந்து நிறுத்தத்தில் நின்றது. ’ஊஞ்சப்பாளையமெல்லாம்
எறங்கிக்கங்க’ சத்தமாகக் கூவியபடி நடத்துநர் விசிலை ஊதுவது கேட்டது.
இன்னும் நூறு வருடங்களுக்குப்பிறகு
இந்த இடம் எப்படி இருக்கும் என யோசித்துப் பார்த்தேன். எப்படி இருக்குமோ..யார் கண்டார்.?
ஆனால் இன்னும் நூறுவருடங்களுக்குப்பிறகு வருகின்ற நடத்துனர்கள் இவ்விடம் வந்ததும் இவ்விதமாக
சத்தமிட்டு விசிலை ஊதுவார்கள் எனத் தோன்றியது.
‘ஊஞ்சப்பாளையம் பித்துமாரியம்மன்
கோவிலெல்லாம் எறங்குங்க..’.
No comments:
Post a Comment