Saturday, 20 June 2020

இசையோடு வாழ்பவன் -7


41,
பூவரசின் நிழல்
நீள்சதுர மரபெஞ்சு
தினத்தந்தி பேப்பர்
எப்போதும் கிடைக்கின்ற
சூடான உளுந்துவடை
வீட்டிலே இருப்பதுபோல்
எவர்சில்வர் டம்ளர்கள்
பார்க்கும் தொலைவில்
இருக்கின்ற ஒயின்ஷாப்
பார்க்கத் திகட்டாத
குடித்தவனின் உடல்மொழிகள்
மட்டுமல்ல காரணங்கள்
அறியாயா என்ன
மறைப்பதுதான் கவிதையென.

42,                          நெட்வொர்க்

ஊஞ்சமரத்தடி கிளுவைவாதில்
பிரஷர்குக்கரின் கேஷ்கட் ரப்பரில்
இருமுனைகளும் கோர்க்கப்பட்டு
ஒரு நுகத்தடி தொங்கியபடியேயிருக்கிறது
காலையிளம்பொழுதில் ஒரு
அணிற்பிள்ளையும் ஓணானும்
கொன்னவாய்க் குருவியொன்றும்
அந்நுகத்தடிமேல் அமர்ந்திருக்க
நான் கேட்டேன்
ஓ அணிலே
ஓ ஓணானே
ஓ கொன்னவாய்க்குருவியே
அந்நுகத்தடியைப்பற்றி
உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்
அது என் அப்பாரைய்யன்
கண்ணாலம் முடிந்து தனிப்பண்ணையம்
போடத் துவங்கிய காலத்தில்
கிழக்குவேலி நடுவேப்பனைவெட்டி
செய்த நுகமாக்கும்
அப்பத்தா அப்போது
என் தந்தையை சூழ்கொண்டிருந்தாள்
இவ்விரவின் இக்கணத்தில்
தறிக்குடோன் பந்தலின்
வெளிவிளக்கு வெளிச்சத்தில்
மெளனமாக மினுங்கும் நுகத்தடி கேட்கிறது
அந்த அணிலும்
அந்த ஓணானும்
அந்த கொன்னவாய்க்குருவியும்
ஏன்
உன் அப்பாரைய்யனாகவும்
உன் அப்பத்தாவாகவும்
உன் அப்பாவாகவும்
இருக்கக் கூடாது.

43,                        கே பி யின் நாயகி
இட்லிதோசை மாவுப்பெட்டியை
மொபட்டின் பின்புறம் வைத்தபடி
மூலை முடுக்கெல்லாம்
இண்டு இடுக்கெல்லாம்
தென்பட்டவண்ணமிருந்த அவளுக்கு
பாலசந்தரின் கதாநாயகி எனப்பெயர் வைத்தான்
அவளுக்கோர் அப்பாவை
கற்பனை செய்தவன் அவரை
பொறுப்பற்ற குடிகாரர் ஆக்கினான்
அம்மாவோ நிரந்தர நோயாளி
கஷ்டம் தெரியாத தம்பி
கல்லூரிக்குப் போக
விபரம் புரியாத தங்கை
பள்ளியிறுதி பயில்கிறாள்
அக்காவின் துறுதுறு குழந்தைதான்
ஒரே ஆறுதல்
எதிர்வரும் போதெல்லாம்
இளையராஜாவின் இசையில்
யேசுதாஸைப் பாடவைத்தவன்
அரிசிக்குருணைகளை சப்ளை செய்யும்
ரைஸ்மில் கணக்குப்பிள்ளைக்கு
அவள்மீது கண் என்றான்
நெகிழியுறைகளைத் தருவித்துத் தரும்
மொத்த வியபாரியின்மீது
அவளுக்கு ஒரு இதுவாம்
சிகரெட் ஊதி பாக்கை மென்று
நின்றபடியிருந்த தெற்குப்பார்த்த கடைக்கு
மாவுப் பொட்டலங்களைப் போட வந்தவள்
ஏதோ தோன்றியவளாக ஒரு கணம் நோக்கினாள்
பிறகுயிவன் யோசிக்கத் துவங்கினான்
கணக்குப்பிள்ளையையும்
மொத்த வியபாரியையும்
யாது செய்யலாமென.

44,                        அக்ரிலோன்

மொளகா மோசமில்ல
ஒரு ஏக்கர் வெச்சுருக்கேன்
வெலையும் நல்ல வெலை
காப்பும் பெருங்காப்பு
அடகு நகையெல்லாம்
அவளுக்கு மீட்கணுமாம்
பையன் புடுங்காளி
பைக் வாங்கி ஓட்டணுமாம்
நகைநட்டு வேணாமாம்
ஸ்கூட்டியும் வேண்டாமாம்
எம்பொண்ணு மவராசி
மேல படிக்கணுமாம்
நாலுநீர்க்கால் குத்தும் மட்டம்
புற்றுப்பக்கம் இருக்கிறது
தோண்டித்தான் பார்ப்போமென
எனக்குமுண்டு உட்கிடக்கை

அப்புறம் பேங் ஆபீஸர்
வேகாத வெயிலில்
வீடுதேடி வந்துட்டீங்க
எளநி போட்டுத்தாரேன்
குடிச்சுப்போட்டு போறீங்களா.

45,                       ஆங்…

எல்லா தலைகளுக்கு மேலும்
வண்ணத்துப்பூச்சிகள் பறக்கிறது
அனைத்து தெருக்களிலும்
வெறிநாய்கள் திரிகின்றன
வண்ணத்துப்பூச்சிகளால் வருடப்படுவதும்
வெறிநாய்களால் குதறப்படுவதும்
யாவருக்கும் நடக்கும்
ஒன்றுபோல இருக்காது
கைரேகையைப்போல.



46,                        s/o நாச்சிமுத்து

கிளுவைவேலிகள் மருங்கமைந்த தார்ச்சாலை
கிழக்கேபோய் வடக்கே திரும்பும் வளைவில்
தென்புறமாய் அவ்விடுகாடு இருக்கிறது
கல்லறைக் கட்டுமானங்கள் மூன்றும்
உற்றுப்பார்த்தால் சில மண்மேடுகளும்
பார்வைக்குப் புலனாகும் அவ்விடத்திற்கு மேபுறமாய்
முன்னொரு காலத்தில் அண்ணாச்சி கடை இருந்தது
மளிகைச்சாமான்களோடு தேநீர் வடை பஜ்ஜிகளும்
கிடைத்த அக்கடையில் இருசக்கர வாகனங்களுக்கு
பஞ்சரும் ஒட்டப்பட்டது
பின்பொருநாள் அங்கே கீற்றுவேய்ந்த
சிகையலங்கார நிலையமும் உதயமாகி
இளையராஜாவின் பாடல்களாகப் பாடியது
மீண்டுமங்கே புல்முளைத்து எருக்குகளும் முளைத்து
சிதந்த சலூன் நாற்காலி மட்டும்
பகலிரவுகளைச் சுமந்தபடி எப்போதும் நிற்கிறது
வளைவில் திரும்பிய கணம்
சுண்ணாம்பு பூசி பளிச்சிட்ட கல்லறையில்
வாசிக்க வாய்த்தது
நாச்சிமுத்து மகன் சின்னச்சாமியின்
தோற்றமும் மறைவும்
சிதைந்த நாற்காலியின் தூசியைத் துடைத்து அதில்
நாச்சிமுத்து மகன் சின்னச்சாமியை அமரவைத்தேன்
பிறகு சின்னச்சாமி கேட்டான்
நீ பாட்டுக்கு உக்கார வெச்சுட்டுப் போறே
இளையராஜா பாட்ட உங்கப்பனா போடுவான்.

47,                    மனமுருட்டி

இதற்குமுன் இவ்விடத்தில் அமர்ந்திருந்தவர்
காசுள்ளவராகவோ காசு பற்றிய கவலையில்லாதவராகவோ
இருக்கவேண்டும்
நசுக்கப்பட்டுக் கிடக்கும் சிகரெட்துண்டு அவ்வளவு நீளம்
பார்க்கத் திகட்டாத இவ்வுதயம்
இதேநிலத்தின் வேறுதிசை ஆளுக்கு
காணக் கண் அவிக்கும்
உச்சிப்பொழுதாகவும் இருக்கலாம்தானே
பொற்குடம்தாங்கி தங்க நாணயங்களைச் சொரியும்
மகாலட்சுமியின்மேல் சிறுநீர்பெய்த பாவம்
என்னைச் சேருமா
சேமியா கம்பனிக்காரனைச் சேருமா
அல்லது சேமியாவைத்தின்றுவிட்டு உறையை
காற்றில் விட்டவனையா
பற்றவைத்த பீடியை புகைத்து முடிப்பதற்குள்
ஏதேதோ யோசனைகள் வந்து போய்விடுகிறது
போலவே ஏதேதோ நிகழவுகளும்
துவங்கி முடிந்து விடுகிறது
குத்தாரிப் பீ முழுதும்
உணவுருண்டைகளாக உருமாறி
உருண்டு உருண்டு நகர்வது உட்பட.

48,                வேற்றுத்தொழில்வைப்பணி

அப்பாவின் இறுதி ஊர்வலத்தில்
தலைவாசலோடு
தடுத்து நிறுத்தப் பட்டவள்
பிறகொரு வெயில்நாளில் கணவனை வேலைக்கும்
பிள்ளைகளை பள்ளிக்கும் அனுப்பி வைத்துவிட்டு
தாய்வீடு வந்திருந்தாள்
பேசியளாவி சமைத்துச்சாப்பிட்டு
உறங்கியெழுந்தவள்
ஆடுகளுக்குப் புல் அறுக்கும்பொருட்டு
இடுகாட்டு கரைவெளிக்குப்
போய்வருவதாகக் கூறினாள்
போய்வா என்றாள் அம்மா
ஆடுகளுக்கான புல் இடுகாட்டுக்கரைவெளியில்
இருக்காது எனத் தெரிந்தும்.

49,
சாய்ந்து அழ
தோள் எதற்கு
விழுந்து புரள
நிலம் இருக்கு

50,

எங்கே போகினும்
இதே நிலம்தான்
யாரைப் பார்ப்பினும்
இதே மனம்தான்

51,
பிறகந்த ஓணான் கூறியது
என் இணையை துரத்திக்கொண்டு வந்தேன்
கண்மண் தெரியாத துரத்தலில்
உன் வாகனத்தின் சக்கரங்களில்
சிக்கிக் கொண்டேன்
சாவதற்குமுன் கட்டக்கடைசியாய்
மேலுமது கூறியது
நாமோ குருடர்
வாழ்வோ யானை

52,
எல்லா வகைகளிலும்
தோற்றுப் போனவன்
தன் ஆசிரியரைக் காணநேர்வது
கொடுமையானது
எல்லா வகைகளிலும்
தோற்ற மனிதனாக
தன் மாணவனொருவனைக்
காண நேருதலேபோல


53,
பருகிய கரும்புச்சாறுக்கு
சுருக்குப்பை அவிழ்த்து
தேடிக் கொடுத்த பணம்
போதாமல் போனது
முதலாளி அறியாமல்
அவசரமாய் வாங்கி
கல்லாவில் போட்டபடி
சீக்கிரமாய் போகச்சொன்னான்
யாரோ ஒருத்தியின் மகன்
யாரோ ஒருவனின் அம்மாவை

54,                  
திருப்புளியோ ஸ்பேனரோ
எடுத்ததை எடுத்தயிடத்தில்
வைக்காவிட்டாலும்
கட்டுத்தரைச் சாணியை
கையிலே அள்ளாமல்
காலால் ஒதுக்கினாலும்
காற்றுக்குறைந்த சைக்கிளை
அப்படியே ஓட்டும்போதும்
சவரம்செய்து குளிக்காமல்
கால்செருப்பைக் கழட்டாமல்
தறிக்குடோனுக்குள் வந்துவிட்டாலும்
சின்னச்சின்ன விஷயங்கள்தான்
போதுமானதாயிருந்தது
தோளுக்குமேலே வளர்ந்துவிட்டவனை
அடக்கமுடியாத இயலாமையில்
குமுறுவாய்
எனக்கப்பறம் என்ன கதிக்கு
ஆளாகறேனு பார்ரா
எப்படியோ நீயும்
போய்ச் சேர்ந்துவிட்டாய்
இனி நான்
என்ன கதிக்கு ஆளானால்தான் என்ன
என் அப்பாவே


55,
கிடாய்களும் ஈத்தாடுகளும் பிரவைகளும்
வரிசைகட்டி
நிறுத்தப் பட்டிருக்கும் ஆட்டுச் சந்தையில்
வாயெல்லாம் ஈமொய்க்க ஊட்டக்குட்டியொன்று
செத்துக் கிடக்கிறது இந்த நிலத்தால்
தாங்கவே முடியாத பாரமாய்


56,

கொக்காணி காட்டுகிறது எனும்
நம்பிக்கையிலிருந்து
அதன் இரையைக் கவ்வ ஆயத்தமாகிறது
எனும் உண்மைக்கு வருவதற்குள்
கொன்றே விடுகிறோம்
ஓணானை


57,

கீகாத்து வீசுகிறது
மின்னுற்பத்திக் காற்றாடி
கிழக்கே திரும்பிச்
சுற்றுகிறது
வேப்பங் கிளையமர்ந்திருக்கும்
ஒற்றைக் காகம்
கரைகிறது
தட்டுப்போர்ப்பட்டறையின்
கிடைமரமொட்டி வளர்ந்திருக்கும்
குப்பைமேனிச்செடி
வெயிலில் மகிழ்கிறது
பூலான்மார் கொடாப்பினுள்
கருங்கோழி
அடைகிடக்கிறது
யாரும் பாடவில்லை
என்றாலும் யாரோ
பாடுவது போலவே இருக்கிறது
கனவுகளும் துக்கம்
நினைவுகளும் துக்கம்
நிகழ்வதுவே சொர்க்கம்


58,


போர்வைக்குச் சிக்காத வலதுகாலின் பெருவிரல்மேல்
கவிழ்ந்திருக்கிறது வானம்
அடிநின்று அண்ணாந்து நோக்கின்
விரலுச்சி மேவியிருப்பது
ஆகாயமல்லாது வேறென்ன
நெய்யில் ஒட்டியிருந்ததோ
பிய்யில் ஒட்டியிருந்ததோ
இப்பொழுது விரல்முனை ஒட்டுவதும் பறப்பதுமாக இருக்கிறது ஈ
விசிலொலிக்கு கட்டுப்பட்ட பேருந்து
நகரத் தொடங்கிய கணத்தில்
ஈ யின் சுற்றுக்கொப்ப அசையத் துவங்கியிருந்தது விரல்
உடுக்கைக்கு அசைந்தாடும்
பரமசிவமே போல.


59,

கொழுக்கட்டாம் புற்களின்
தூர்களுக்கு நடுவே
கருஈரமாகவும் பாசி படர்ந்துமிருந்தது
மழைக்காலத்தின் நிலம்
வேப்பங்கொத்தை இணுங்கி
பல்லுக்குச்சியை ஒடித்து
துத்திச்செடிகள் மண்டிய மண்மேட்டைக் கடக்கையில்
பற்குச்சி நழுவி வங்கிற்குள் போய் விழுந்தது
கண்ணுக்கெட்டிய ஆழத்தே
சிக்கியிருந்த அதனை குனிந்தெடுக்க முயற்சிக்க
அதற்கும்கீழாழத்தே
மண்டலம்போட்டு படுத்திருந்தது அது
பின் கொத்தத் துவங்கிற்று
பாம்பின் தனிமை


60,

மும்முறை அழைக்கப்பட்ட அவள்
அசோகமரத்து நிழலிலிருந்து வெளிப்பட்டாள்
வெள்ளை வேடிகளையும்
கருப்புச் சட்டைகளையும்
காக்கித் தொப்பிகளையும்
கடந்து உள்ளேபோய் சுவரோரமாக நின்றாள்
பெயரை உறுதிப்படுத்திக்கொண்ட மாஜிஸ்திரேட்
வாய்தாவை அறிவித்து ஆஜராக ஆணையிட்டார்
கையெழுத்திட்டுத் திரும்பியவள் மேல் பார்வைகள் மொய்த்து
பொதுமையானதொரு கேள்வியை வினவ
என்னவாக இருக்கும்
கண்டுபிடியுங்களேன் எனும் விதமாய்
நடை நடந்து போன அவள்
பூவரசுவின் நிழல் நிற்கும் மகிழுந்துவில் அமர்ந்து
அறைந்து சாத்தினாள்
கதவை.


61,

ஐந்தே நிமிடங்களில்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் கிடைக்குமென
எழுதப்பட்ட வாசகங்களுக்குக் கீழே
நான்கு புகைப்படங்களிலும் இருக்கின்ற பெண்
உன்னைப் போலவே இருக்கின்றாள்
நீயேதானோ என்னவோ


62,

இளையராஜாவின் பாடல்களைக் கேட்பது
இடையழகி சிம்ரனின் நடனங்களைப் பார்ப்பது
ஏகாந்த வேளைகளில் சோமரசமுண்டாடுவது என
இயற்கை உனக்களித்த வாய்ப்புகளும்
செளகரியங்களும் அதற்கில்லை
ஆனபோதிலும் நீ மகிழ்ச்சிமிகு உயிரல்ல
அவ்வோணானை விடவும்


63,

விபூதியும் சந்தனமும்
குங்குமமும் துலங்க
மஞ்சள் சட்டையும் பச்சை வேட்டியுமாய் வந்து
நோட்டுப் புத்தகம் விரித்து பேனாவை நீட்ட
நினைவு படுத்தினேன்
முன்பொருகாலை இதே விதமாய்
வந்த அன்று மதியம் பிராந்திக் கடையில் சந்தித்துக் கொண்டதை
நோட்டுப் புத்தகம் மூடி
பேனாவை உள்ளிழுத்து பேசாது திரும்புகிறான்
பத்து ரூபாய்க்கும்கூட
ஏமாற்றத் தெரியாத அப்பாவியாய்.


64,

திருமண மண்டபமெங்கும் ஜொலிக்கும்
பகட்டான விளக்குகளின்
வெளிச்சங்களெட்டாத இருளிலே நின்று
புகைத்தாற்றும் பொருட்டு ஐந்து சிகரெட்டுகளோடு
அமர்ந்திருக்கிறான்
வலிய நுரையீரல்களும் எளிய இதயமும்
கொண்ட ஒருவன்
வரவேண்டிய நீ
வந்துபோவதுதான்
பாக்கி.

65,

கேஆர் விஜயாவுக்கும் சிவாஜிக்கும் பின்னால்
மேகக் கூட்டங்கள் மிதக்கின்றன
கரிய பறவையொன்று பறந்து போகிறது
அவர்களின் கால்களைத் தழுவியபடி
சிற்றோடையொன்று நெளிந்து போகிறது
முற்பகலோ பிற்பகலோ
நிழல்கள் நீளமானதாக இருக்கின்றன

அந்த மேகக்கூட்டம்
எங்கே பொழிந்திருக்கும்
கரிய பறவை
எப்படிச் செத்திருக்கும்
நெளிந்தோடிய தண்ணீரின் கதி

அதே நிலத்தின்மிசை
அதே வடிவங்கொண்ட நிழல்களினி
சாத்தியம்தானா
இப்போது ஏன் அழுகை வருகிறது
பெருங்கொண்ட மகிழ்ச்சியோடு.

Friday, 19 June 2020

இசையோடு வாழ்பவன் -6


26,                                உதிர்காலம்

அம்மாவின் ஊரிலிருந்து அத்தையின் ஊருக்கு
கூப்பிடு தூரம்தான்
அப்பச்சியூரில் தூங்கியெழுந்து
அத்தையின் வீடுபோய் உணவு உண்டதும்
அத்தையின் தோட்டக் கிணற்றில் குளித்து முடித்து
அப்பச்சியின் வீடுவந்து உடை மாற்றியதும்
பள்ளிப்பிராயத்தின் விடுமுறைநாள் அனுபவங்கள்
நோன்புநொடி நலம்பொலமென
போய்வரக் காரணங்கள் எப்போதுமிருந்தன
சிலநேரங்களில் அப்பச்சியூர் போய்விட்டு
அத்தையூர் போகாமலேயே வந்துவிடும் அம்மா
ஒருபோதும் அத்தையினூருக்குச் சென்றுவிட்டு
அப்பச்சியினூருக்கும் போகாமல்
திரும்பியதில்லை
அப்பச்சியின் காலத்துக்குப்பின்
மாமன்கள் நகரம் பெயர்ந்துவிட
அம்மாவின் ஊருக்கான வழித்தடங்களில்
புல் முளைக்கத் துவங்கிற்று
என்றாலும் அத்தையின் ஊருக்குப் போகும் அம்மா
தான்பிறந்த நிலத்தையும்
கண்டுவிட்டே திரும்பிக் கொண்டிருந்தாள்
ஒன்றுவிட்ட அப்புச்சிமார் வீடுகளின் திண்ணையமர்ந்து
காபி தேநீர் அல்லது மோரோ அருந்தியபடி
சற்றேயமர்ந்துவிட்டு வருவாள்
கூரைசரிந்து காரைபெயர்ந்த அப்புச்சியின் வீட்டை
கண்கள் வெறித்திருக்க
அதேவேலையாக கடந்துபோகும் சாலையை
கடக்க முடியாமல் தோற்றுப்போன அப்பாவை
எடுத்துக்கொண்டுபோய் எரியூட்டிவந்த பிற்பாடு
அம்மா எங்குமே போவதில்லை
நேற்று திடீரென கூறினாள்
இந்த ஒரு வருசத்துல அத்தை
எத்தனையோதரம் வந்துட்டுப் போயிட்டா
நாமளும் ஒருநடையாவது
போயிட்டு வந்துரலாம்
விருந்து உபசாரங்கள் முடிந்து
விடைபெற்றுத் திரும்புகையில்
அப்பச்சியின் ஊருக்கான தடம் வந்ததும் நினைத்தேன்
அம்மாவாகச் சொல்லும் பட்சத்தில்
அங்கேயும் போகலாம்
அம்மா கூறினாள்
நேரா நம்மூருக்கே  போ.

27,             
யாருமற்றவனின் உலகில்
எல்லோரும் இருக்கிறார்கள்
கொம்புகளோடு

28,
இதுவொன்றும் ராஜபாட்டை
அல்லதான்
அதனாலென்ன
இந்த பாட்டைக்கு
நான்தான் ராஜா.

29,
வெறும் வெளியி சிறு கால்கள்
பிடிமானங்களை
தேடித் தவிக்க
மல்லாந்து கிடந்தது
நிலைதிரும்ப உதவினேன்
சற்று நேரத்தில்
கருகும் வாசனை

30,
உட்சிவந்த பிஞ்சு அலகை
திறப்பதும் பின் மூடுவதுமாய்
எறும்புகள் மொய்க்கக் கிடக்கிறது
சற்று நேரத்தில்
செத்துவிடும்தான்
சற்றுநேரம் ஏன்
யுகநீளம் நீள்கிறது.

31,
மேல் ஏறி சிகரம் தொட
மூட்டுவலி முடியாது
சாய்ந்தமர்ந்து அலங்கரிக்க
நாற்காலி கிடைக்காது
குதிரையில் போய் நின்றாலும்
சம்யுக்தை வரமாட்டாள்
போய்
சேர்ந்து விடலாம்தான்
பிறகிந்த பகலிரவுகளையெல்லாம்
யார் பரிபாலிப்பது.

32,
சிறு செடியின்
கிளையளாவும் ஆகாயமும்
அண்ணாந்து பார்க்கும்
உயரமுடையதுதான்
அண்ணாந்து பார்க்க
தெரிந்திருக்க வேண்டும்.

33,
ரத்தம் உறைந்த தலைக்காயங்களுடன்
உள் அணைய அஞ்சி
கொடாப்பையே சுற்றிச்சுற்றி வரும்
இளஞ்சேவற்குஞ்சை
தனியாகவோர் கூடையில் அடைத்தவன்
கூறினான்
வலிமையும் எளிமையும்
சந்திக்கும் புள்ளியில்
கடவுளும் சாத்தானும்
உற்பத்தியாகின்றனர்.

34,
இழவு வீட்டில்
எதேச்சையாகச் சந்தித்துக்கொண்ட
நம் கண்களில் ஊற்றெடுத்த துயரம்
செத்துப் போனவருக்கானதல்ல.

35,
திருவிழா பதாகையின் பின்புலத்தில்
திடீரென பிரசன்னமாகிய நீ
வலதுபாதம் நிலம் ஊன்றி
பார்வையை சுழல விடுகிறாய்
தலைகிரீடம் இறக்கி வைத்து
தோள்கிளியை பறக்க விடுத்து
உன்போலவே பதாகை மாரியம்மனும்
உருமாறத் துவங்கிய கணத்தில்
சட்டென பிரதானசாலைப் புகுந்து
எதிர்திசை விரைகிறாய்
வந்துகொண்டும் போய்க்கொண்டுமிருக்கும்
வாகனங்களையெல்லாம் மறைக்கிறது
நீல வண்ணத்து ஸ்கூட்டி.

36,
இரவு உணவை உட்கொண்டுவிட்டு
குறுக்கிமொடக்கி படுத்திருக்கும் நீயும்
புகைத்தபடி அமர்ந்திருக்கும் நானும்
வாசலென அறியுமிந்த நிலம்
இதுபோல எத்தனை இரவுகளை
பார்த்திருக்கும்
இன்றைய பகலேபோல எத்தனை
பகற்பொழுதுகளையும் பார்த்திருக்கும்
ஐம்பது மாசிகளுக்கு முன்
இந்த நிலம் இருந்தது
நீயும் நானும் இல்லை
ஐம்பது மாசிகளுக்குப் பின்னும்
இந்த நிலம் இருக்கும்
நீயும் நானும் இருக்கப் போவதில்லை
இப்போது புரிகிறதா ஜிம்மி
இந்த நிலம் ஏன்
குரைப்பதுமில்லை
கவிதையெழுதுவதுமில்லையென.


37,
எஸ் எஸ் எல் சியை தாண்டமுடியாதவனும்
முப்பத்தியேழு காதலர் தினங்களை
கடந்து விட்டவனுமாகிய உனக்கு
கடைசியாய் வந்த வரனும்
தட்டிப் போயிருக்கும்
பனியன் கம்பனி பஞ்சுமில்
தறிவேலை என
பலதொழில்கள் தெரியுமுனக்கு
ஆனாலும் உன் அப்பா
இன்னமும் ஆடுதான் மேய்க்கிறார்
உன் அம்மாவின் மாங்கல்யம்
இன்னமும் வெறும் கயிற்றில்தான்
கோர்க்கப்பட்டிருக்கிறது
உடன்படித்த சிலர்
வெளிநாடுகளில் சம்பாதிக்கின்றனர்
உடன் பணிபுரிந்த பலர்
முதலாளி ஆகிவிட்டனர்
மற்றவர்களும் குறைந்தபட்சம்
திருமணமாவது செய்திருக்கின்றனர்
மீசை முளைத்த வயதில்
ஆசைப்பட்ட ருக்குமணி
பெற்றெடுத்த பெண்பிள்ளை
பெரியமனுசி ஆகிவிட்டாளாம்
பத்திரிக்கை வரும்
போய்
சாப்பிட்டுவிட்டு வா.

38,
கொண்டையூசி வளைவின்
தடுப்புச்சுவர்மேல் நின்று
பார்த்தபடியேயிருக்கும் அதன் கண்களுக்கு
எவ்விதம்தான் தோற்றம் காட்டுமோ
இப்பள்ளத்தாக்கு எனும்
யோசனையின் முடிவாக எனக்கும்
முளைத்திருந்தது வால்.

39,
பெட்ரோல் தீர்ந்துவிட்ட மொபட்டை
ஓரங்கட்டி நிறுத்திவிட்டு
கிடக்கும் மதுப்புட்டிகளிலொன்றை
பொறுக்கியெடுத்துக் குறுக்காட்ட
நிற்காமல் போன வண்டிகளிடையே
நிற்கும் பல்சரின் பின்சீட்டில்
நீ அமர்ந்திருக்கிறாய்.

40,
வானவில்
புதுவெள்ளம்
பாப்பாத்திப் பூச்சிகள்
மரவட்டை
பொன்வண்டு என
தொடர்புபடுத்திக்கொண்டே வந்த சிறுமி
சற்றே மவுனித்து
இடிந்தவீடு
பரிதாபச்சாவு
பொட்டலஞ்சோறு
என்றெல்லாம் தொடர்புபடுத்தத் துவங்கியதும் தான்
பெருமின்னல் வெட்ட
அப்பேரிடி இடித்தது
அறம் கூற்றானதேபோல.



 

Sunday, 14 June 2020

இசையோடு வழ்பவன் -5


21,                       பெட்ரமாக்ஸ் லைட்

ஆதியில் ஒரு
பெட்ரமாக்ஸ் லைட் இருந்தது
கோவணோத்தோடு ஊருக்குள்
நுழைந்த புதியவர்களை
குறுக்காட்டிய பண்ணையார் மகன்கள்
தரையிலே நீச்சலடிக்கப் பணித்தார்கள்

இடுப்பிலே குடமேந்திய பெண்கள்
ஆற்றங்கரைக்கு நடந்தார்கள்
சிறுவர்கள்தம் அஞ்சு ஹார்ஸ்பவர்
மோட்டார் தண்ணீரை
ஆற்று நீரில் கலந்தார்கள்

கோழி குருடானாலும்
கொழம்பு ருசியாக இருந்தது
மல்லிகைப் பூவும் அல்வாவும்
வாங்கிச் சென்ற ஓரிரவு
அழகுராஜா கவிஞராய் ஆனார்

கைகுழந்தைக்கு முலைப்பால் கொடுத்து
உறங்கவைக்கும் முன்னிரவுகளில்
கால்தண்டைகளைத்தட்டி
ஓசையெழுப்பிய வெள்ளைச்சாமி
அந்த கவிதைகளையெல்லாம்
பாடத் துவங்கினான்

பெட்ரமாக்ஸ் லைட்டுகள்
இரவைப் பகலாக்குவதில்லை
அழகாக்குகின்றன.
22,                        செம்பொற்காலம்

பால்யத்தின் பொழுதொன்றில்
தொலைந்து போய்
அன்றிரவு முழுதும் அழவைத்த செம்பொன்வண்டு
இதோ இவ்விலந்தைச்செடியில் மேய்கிறது
பிடித்துப்போ என்றது காலம்
அவன் மீண்டும் அழத்துவங்கினான்
வாழ்வின் பொழுதொன்றில்
தொலைந்திருந்தது பால்யம்.
                                              -ஓலைச்சுவடி2016

23,                           போர்-ஜி  4G


கொமரனின் அம்மாவைப் போலவும்
மனைவி மகளைப் போலவும்
அல்லாத கொமரனின் பேத்தி
வந்திருக்கின்றாள்
கூட்டுறவு அங்காடிக்கு


கத்திரிப்பூவின் நிறத்தில்
செம்பருத்தி மலர்கள் அச்சிட்ட நைட்டியில்
ஓரிழைத் துண்டை தோளோடு போர்த்தியவளாய்
நின்றுகொண்டிருக்கிறாள்

மண்ணெண்ணையின் வாசம்
நுகர் நாசிகளுக்கு காற்று
சுழுத்துத் திரும்பும் கணங்களில் வாய்க்கிறது
பேர் அண்ட் லவ்லியின் நறுமணம்

ஆண்கள் வரிசையிலிருந்து ஒருவரும்
பெண்கள் வரிசையிலிருந்து ஒருவருமாக
ரசீதைப் பெற்று நகர
நிழலுக்கு வந்திருந்தாள்

யாரோ கேட்டார்கள்
அதற்கு கொமரனின் பேத்தியும்
பதில் கூறினாள்

அது கொமரனின் அம்மாவும்
மனைவியும் மகளும்
எக்காலத்திலும் கூறியிருக்க முடியாத
பதிலாக இருந்தது
கூற விரும்பிய பதிலாகவும்.
                                  
24,                         பிறழ்வுசூழுலகு

சந்நியாசிகளெல்லாம் வியபாரிகளாக
மாறிவிட்ட காலத்தில்
வியபாரியான நீ
ஒரு சந்நியாசியேபோல அலைந்து திரிகிறாய்
கிளுவைகள் மருங்கமைந்த
வெயில்காயும் இத்தார்ச்சாலையில்
மேலும்சில மைல்கள் நடக்கவேண்டும் நீ
சிறுவர்கள் தெருவாடும் எங்கள் கிராமத்தை அடைய
பாஷை தெரியாத ஊரில் வந்து
பாஷையே தேவைப்படாத குழந்தைகளுக்கு
அவர்தம் விருப்பப் பண்டம் விற்பவனே
உந்தோள்சுமக்கும் மூங்கிற்கழியை
சிலுவையெனவும்
அதில் பொட்டலமாய்த் தொங்கும் பஞ்சுமிட்டாய்களின் வண்ணத்தை
நீர்த்து வெளிறிய குருதியின் நிறமெனவும்
கற்பனை செய்து
உழைத்துண்டு வாழும் உன் ஜீவிதத்தின்மேல்
பரிதாபத்தின் உமிழ்நீரைத் துப்ப விரும்பவில்லை
என்றாலும் தவிர்க்கவே முடியவில்லை
ஆடுதிருடிகளின் உளவாளியாய் யாரேனும் உன்னை
பார்த்துவிடுவார்களோ எனும்
அச்சத்தின் இரக்கத்தை.
                                                    -ஓலைச்சுவடி

25,                         படியாத கண்

இரண்டாவது வரிசை இடமிருந்து வலம் மூன்றாவது இருக்கை
அமர்ந்திருக்குமந்த மாணவிக்கு
தன்னம்பிக்கை டானிக் தேவையில்லைபோல
என்னையே பார்த்தபடியிருகிறாள்
அதாவது கேமராவையே கவனித்துக்கொண்டு இருந்திருக்கிறாள்
அல்லது படம் பிடித்தவனை
புகைப்படம் தாண்டியும் வெளிப்பாய்ந்த
விழிகளின் வீச்சில்
அடுத்த பக்கத்தை திருப்பவும் தோணாது
சமைந்திருந்த கணம்
வசந்த காலத்தின் மழைதரும் மேகம்
எனும் வரிகளுக்கு யேசுதாஸ் வந்திருந்தார்
ஆகவே அவளுக்கு
பைரவி என பெயர் சூட்டினேன்
நிழற்படத்தின் சட்டகத்துக்குள் வராத
பயிலரங்கத்து மேடையில்
யாரோவொருவர் தன்னம்பிக்கை லேகியம் கிண்டியிருப்பார்போல
அருகமர்ந்திருந்த தோழிமார் வதனமெல்லாம்
ஜெயிக்கவும் ஜொலிக்கவுமான வைராக்கியத்தில்
இறுகியிருக்க
பைரவியை வினவினேன்
உனக்கு அவ்வித சபதங்கள் இல்லையா
இறந்த காலத்தின் சாம்பலும்
எதிர் காலத்தின் புழுதியும்
படியாத பைரவியின் கண்கள் கூறின
நானொன்றும் வித்தை காட்டும்
குரங்கு அல்ல.                                        




 

இசையோடு வாழ்பவன் -4


16,                          காப்பு
நடுநிசி உயிர்க்கும்
புரவிமேல் அமர்ந்து
போகுமாம் வேட்டை
வான்வரை வளர்ந்து
ஊரெல்லை அமர்ந்து
புரியுமாம் காவல்
மாசி அமாவாசை
மயான பூசையில்
கேட்குமாம் காவு
ஆணிகள் பதித்த
குரட்டினிலேறி
வழங்குமாம் ஆசி
பொய்யேயாயினும்
போய் நிற்கின்றேன்
கருப்பன் சந்நிதி
புள்ள தலையெடுக்க
விடியும்போ எனும் வாக்கில்
உயிர்த்து
வீடு சேர்ந்தாளாம் அம்மா
அவ்வரளிச்செடி தாண்டி.                     –மணல் வீடு 2008

17,                                 கொம்பு

சற்றே தயங்கி
நீ கடந்து செல்கையில்
குதூகல காற்றினிசை
கிளைகளுட்புகுந்து வெளிப்படும்
விசும்பலாய்

பெருவிருட்சம் பருத்த கிளையுமென
துக்கித்த மனம் கற்பித்திருக்க
வெடித்தலறும் நெஞ்சினளாய்
ஓடோடி வந்தவள்
சிறுகொம்பும் சின்னஞ்சிறு கிளையுங்கண்டு
மவுனமாகினாய்

அதன்பிறகு நீ அழவேயில்லை

நெடுந்தோளன் பருவுடலை
குழந்தையின் கையொத்த
கிளைதாங்கும் திறன்பற்றி
ஊர்
பச்சாதாபத்தினூடே வியந்து களியெய்த
வெறித்தமர்ந்திருந்தாய்
தொங்கும் கால்களுக்கும் நிலத்துக்குமான
விரலளவே இடைவெளியை

விடமுண்ட தேகம்போல்
நிறமாற்றம் கண்டது அவ்வெயில்
முயல்துரத்தும் நாயாய்
விரந்தோடுகிறது காலம்

நீயும்
உன் மலரும் பருவத்து மகளும்
பனியன் கம்பனி பேருந்துவிட்டு இறங்கி
வீடு திரும்பிக் கொண்டிருக்கும் இவ்விரவில்
நீர்த்திரையிட்ட கண்களென மினுங்கிறது
நிலவொளியில் காயுமதன்
ஆயிரமாயிரம் பசிய இலைகள்.
                                             -மணல்வீடு -2008  


18,         
சுவர்களெங்கும்
பதிக்கப்பட்டுள்ளது
நீள்சதுரக் கண்ணாடிகள்
உள் நுழைந்த
நாய் நான்.

19,                       ஸ்மெல்ட்
அந்த  கழுத்து ரிப்பை
ஜாயிண்ட் செய்கையில்
ஓவர்லாக் டெய்லர் மோகனாவுக்கு
போய் முகம் கழுவிவர
தோன்றியது

அந்த கழுத்து ரிப்பை
ஜாயிண்ட் செய்கையில்
பேட்லாக் டெய்லர் சுப்ரமணிக்கு
தம்மடிக்க நினைப்பு வந்தது

முகம் கழுவிவிட்டும்
தம்மடித்துவிட்டும்
வந்தமர்ந்த
சிங்கர் டெய்லர் செந்தில்
லேபிள் வைப்பதற்காக
அந்த கழுத்து ரிப்பை எடுத்து
மார்க் செய்தான்

ஏனோ அவனுக்கு
மூக்கில் வேர்த்தது.
                                          -மணல் வீடு

20,                       புகைபடுபடலம்

கட்டு நடக்கும் மரத்தடியில்
கட்டு நடக்காத நாளொன்றில்
அமர்ந்திருந்த மேய்ப்பன்
பீடியை பற்ற வைத்தான்

பாவமேபோல ஆடுகள்
மேய்ந்து கொண்டிருந்தன
கூட்டிப் போகும் திருட்டுஆடு
கண்முன்னால் படுத்துக் கிடந்தது

கரையாத பீடிப்புகை
சேவலெனத் தோற்றம் கொண்டது
மேலும் புகை ஊதி
மற்றொன்றை எதிர் நிறுத்தினான்

சண்டையிடத் துடித்த சேவல்களிரண்டும்
கட்டுக்கத்திகளையும் ஜாக்கிகளையும்
பந்தயக்காரர்களையும்
வேடிக்கை பார்ப்போரையும் கோரின
மீண்டும் மீண்டும்
பீடிகளை பற்றவைத்தான்

கட்டுக் காட்டின் புழுதி
சாம்பல் நிறமாய் பறந்தது
கத்திக் காயங்களில் குருதி
கருஞ்சாம்பலாய் வடிந்தது
தோல்வியின் ஓலமும்
வெற்றியின் எக்காளமும்
எல்லை மீறிய கணம்
கடைசி பீடியை உருவினான்

துரத்தி ஓடுகையில்
தடுக்கி விழுந்த ஏட்டய்யாவை
மனதில் இருத்தி புகையை ஊதினான்
கைகால் முகம் வயிறென
உருக்கொண்டுவந்த ஏட்டய்யா
சட்டென நிலை மாறினார்

வெள்ளாமை மேயும் திருட்டாடாய்.
                                                   -மணல் வீடு.






Saturday, 13 June 2020

இசையோடு வாழ்பவன் -3


11,                     உயிரருமை

மழைத்துளி மேகமாய்
ஈசல்கள் கரையானாய்
இவையெல்லாம் என்னவாய்

துளிவிழுந்த மறுநாளே
நிலமெங்கும் ஊருமிவற்றின்
உயிர்மூலம் யாது

முளைவிட்ட கேள்விகட்கு
விடைகாணும் ஆவல்
குத்துக்காலிட்டமர வைக்க
கூர்ந்து கவைத்தேன்
ஊர்ந்தபடி நகரும் அதை

விழி இருந்தால் காட்சி இன்பம்
செவி இருந்தால் ஓசை இன்பம்
சிறகிருந்தால் பறத்தல் இன்பம்

எதுவுமே இல்லாமல்
எப்படித்தான் இது
கண் இன்றி மண் தின்று
என்ன பிறவி இது
என்ன கொடுமை இது

விசாரத்திலாழ்ந்த மனம்
எண்ணமற்றுப் போக
வெளிப்பட்டது பெருமூச்சு
எண்ணமிடை சர்ப்பச் சீறலாய்

அதிர்வில் ஆபத்தையுணர்ந்ததுவாய்
மெல்ல உடல் சுருட்டி
சக்கரம் போலாகியது
மரவட்டை

இவ்வுயிரும் வாழ்வும்
தனக்கு அற்பமல்ல
அற்புதம் என்பதாய்.
                             -வடக்கு வாசல்-2008


12,                      நெடுஞ்சாலை நதி

அவதானிப்பின் நொடிபிசகி
முட்டிக்கொண்ட ஊர்திகளின்
முகப்புக் கண்ணாடிகள்
தரையெங்கும் சிதறித் தெறிக்க
தேங்கத் துவங்கிற்று
வாகனப் பெருவெள்ளம்

செத்திருப்பின் யுத்தம் ஏது
தப்பியதால் இறங்கிவந்து
நடக்கிறது வார்த்தைச் சமர்

தம்தரப்பு ஒழுங்கினையும்
எதிர் தரப்பின் பிழைகளையும்
நிறுவும் பொருட்டாய்
சாட்டையென நா சுழட்டி
வீசப்படும் சொற்களெல்லாம்
எதிரான பலன்களையே
ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது

வேடிக்கையின் சுவராஸ்யம்
வடிந்துவிட்ட ஓர்கணத்தில்
பீடிக்கும் பெரும் பதட்டம்

அலுவலக நேரம்
ஆரம்பமாகியிருக்கும்
தொழிற்சாலைச் சங்கு
ஊதி ஓய்ந்திருக்கும்
ஊர் செல்லும் பேருந்து
கிளம்பிப் போய்விடலாம்
வாடிக்கையாளரை இந்நேரம்
வேறொருவன் கவர்ந்திருப்பான்
தரமானது விற்றிருக்கும்
அழுகல்களே காத்திருக்கலாம்
அலங்காரம் முடிந்திருக்கும்
ஆராதனைகளும் நடந்திருக்கலாம்

செக்குமாட்டின் புற்கட்டாய்
முன் தொங்கும் அடுத்த கணம்
யாவரையும் ஆட்டுவிக்க

சாக்கடை உணவை
மரத்தடி புசித்து
அமர்ந்திருக்கும் அவனிடம்
நிரம்பி வழிகிறது

இக்கணத்தின் ருசி.
                            -தூறல்- 2013

13,                      தருணம்

தோளைத்தொட திரும்பியது
நீ அல்ல
வேறு யாரோ

என்றாலும் இக்கணத்தில்
நீயும் திரும்பிப் பார்த்திருப்பாய்
நான் என்று
வேறு ஒருவரை`.
                                   -தூறல்-2014

14,                      பிராயசித்தம்

கொறங்காடுகள்
காய்ந்து போனதால்
காசுக்கு தீனி வாங்கி

வேர்பிடிக்கும் வெங்காயம்
காயாகும் முன்னரே
கருகிடுமோ எனும்பயத்தில்
கிணற்றைத் தூர்வாரி

மட்டைதொங்கும் தென்னைகளை
காண மனம் சகியாது
ஆழ்துளை கிணறு தோண்டி

நொடிந்து போனார் அப்பா
கெடுவிதித்துப் போன கடன்காரன்
வருவதாய்ச் சொன்ன நேரம்பார்த்து

பெய்து காக்கிறது மழை.
                              -தூறல்-2014
15,                        லாவகம்

துகில் விலக்கி
உறங்கும் குழந்தையை
காணுதலே போல

மும்முறமாய் பசியாறும்
அதன் தலைபற்றித் திருப்பி
ஈ மொய்க்கும் அவ்வுணவை
பார்த்துவிட்டு நகர்கிறாய்

நீ
ஞானியாகத்தான் இருக்கவேண்டும்
அல்லாது போனால்
உனைக் கடிக்காமல் விட்ட அது.

                                       -தூறல்-2014