Monday, 13 March 2017

குடிகிணறு

                          

ஒரு உயிர் சாகக் கிடக்கிறது எனும் உணர்வேயில்லாததுபோல அப்பச்சியின் வீடு அமர்க்களப் பட்டுக்கொண்டிருந்தது. வீடு முழுதும் ஆட்கள் நிரம்பியிருந்தனர். குறுக்கும் நெடுக்கும் ஓடித்திரிந்த குழந்தைகளின் கூச்சல் கூரையில் பட்டு எதிரொலித்தது.


வெளிவாசல் திண்ணையில் அப்பச்சியின் பங்காளிகளும் ஒறம்பரை சனங்களும் உட்கார்ந்திருந்தனர். அடையாளம் தெரிந்து கொள்ள முடியாதவர்கள் என்னை உற்று நோக்கினர். மூங்கில் குச்சிகள் நடப்பட்டு பந்தல் போடும் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. சிலர் காலியிடத்துப் புற்களை சுத்தம் செய்தபடியிருந்தனர். அவர்களின் கருத்த வெற்று முதுகெங்கும் வழிந்தோடிய வியர்வை வெயிலில் மினுங்கிற்று.


தடுக்கையெடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்த நாகராசுமாமன் வரவேற்கும் விதமாக தலையை ஆட்டினான்.நான் உள்ளே நுழைந்தேன். தெய்வாத்தா மகந்தான் பெரியவன் என அடையாளம் தெரிந்துகொண்டவர்கள் கிசுகிசுப்பது காதில் விழுந்தது. கூடம் சுற்றி உள்வாசல் தாண்டி வடக்குப் பார்த்த அந்த அறைக்குள் நுழைந்தேன்.


இலவம்பஞ்சு மெத்தைவிரிப்பின்மேல் அப்பச்சியைப் படுக்கவைத்திருந்தனர். நான்கு நாட்களுக்குமுன் இருந்ததைவிடவும் நிலமை மேலும் மோசமாகிவிட்டது என தோன்றியது. காய்ந்த கொப்பரைத்தேங்காய்போல வற்றிவறண்டு சிறுத்துப் போயிருந்தது அப்பச்சியின் தேகம். கை கால்கள் அசைவற்றிருந்தன. நான் அப்பச்சியின் தலை மாட்டில் உட்கார்ந்து கொண்டேன்.


முடைபார்க்கவந்து அமர்ந்திருந்த பெண்கள் எங்களையே கவனிக்கத் துவங்கினர். என் வரவும் அருகாமையும் அப்பச்சியின் பிரக்ஞையை மீட்டு வந்துவிடாதா எனும் ஆவல் அவர்களின் கண்களில் குடியேறியிருந்தது. அம்மா எழுந்துவந்து அப்பச்சியின் முகத்தருகே குனிந்தபடி “ அய்யா… உங்க பேரன் கோபி வந்துருக்கான். எங்க காணம் காணம்னு கேட்டீங்களே… வந்துருக்கான் பாருங்க.” என்றாள்.


அம்மாவின் குரல் அப்பச்சியை எட்டவில்லை. அவர் முகம் சலனமற்றிருந்தது. துவண்டு கிடந்த அப்பச்சியின் வலது கையை என் உள்ளங்கையில் வைத்துக் கொண்டேன். சில்லென்றிருந்தது. சுற்றிலுமிருந்த பெண்கள் என்னையே கூப்பிடுமாறு கூறினர். அப்பச்சியின் நினைவை மீட்க முடியாத என் குரல் அறையெங்கும் சுற்றி வந்தது. உயிர் இருப்பதன் அடையாளமாக நெஞ்சுக்கூடு மட்டும் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. மூக்கு அடைத்துக்கொண்டதுபோல லேசான சத்தத்துடனும் மிகுந்த பிரயாசையுடனும் அப்பச்சியின் சுவாசம் வாய்வழியே நிகழ்ந்து கொண்டிருந்தது.


அப்பச்சிக்கு இனி நினைவு திரும்பாது என்னும் முடிவிற்கு பெண்கள் வந்திருந்தனர். அவர்களின் ஆவல் அடங்கிப் போயிருந்தது. வேலை இருப்பதாகவும் முடித்துவிட்டு பிறகு வருவதாகவும் சொல்லி சிலர் எழுந்து சென்றனர். மீதமிருந்தவர்களும் வேறு ஊர் விஷயங்களை பேச ஆரம்பித்து விட்டிருந்தனர். அம்மாவும் அவர்களுடனான உரையாடலில் ஐக்கியமாகியிருந்தாள். அவள் முகம் தந்தையை இழப்பது குறித்தான துக்கமே இல்லாததாயிருந்தது.


எனக்கும் பெரிதாக சோகமோ துயரமோ ஏதுமில்லை. எனினும் மரணம் பற்றிய உணர்வு மேலோங்கியிருந்தது. மனம் தன் அலைபாய்தலைத் துறந்ததுவாய் சலனமற்றிருந்தது.  தொண்டுப் பட்டியில் கட்டப்பட்டிருக்கும் சினையாட்டிற்கு தண்ணீர் வைத்துவிட்டு வருவதாகச் சொல்லி எழுந்த மீனாட்சியத்தை என்னிடம் வந்து “ மாப்ளே… இன்னிக்கு இங்கயே இருந்து அப்புச்சி காரியத்தையெல்லாம் ஓருசு பண்ணீட்டுத்தான் போகணும். வந்தமா பாத்தமா.... கடமை முடிஞ்சுதுனு போயிராதீங்க.. புரியுதா..? “ என்றார். நான் தலையாட்டினேன்.


மண்கட்டியின்மேல் ஈரம் போல மரணம் அப்பச்சியின்மேல் ஊடுருவியபடியிருந்தது. இன்றோ அல்லது நாளையோ தன் அலைவுகளை நிறுத்திக் கொள்ளப் போகும் எலும்புகள் புடைத்த நெஞ்சுக்கூட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பச்சியின் மனநிலையை யூகிக்க முயல்பவனாய் அவர் கண்களையே ஊடுருவிப் பார்த்தபடியிருந்தேன். அவைகள் உணர்ச்சியற்றிருந்தன.


‘காலன் வருமுன்னே கண்பஞ்சடை முன்னே
பாலுன் கடைவாய் படுமுன்னே- மேல்விழுந்து
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு.’


மரணமுற்றுக் கொண்டிருக்கும் அப்பச்சி இப்பொழுது குற்றாலத்தானைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறாரா? அவர் மனம் முழுதும் ஆலால கண்டனின் ஞாபகங்கள்தான் வியாபித்திருக்கின்றனவா? தெரியாது. ஆனால் அது அப்பச்சிக்கு மிகவும் பிடித்த பாட்டு. திடீர்திடீரெனப் பெய்துபோகும் காற்றுக் காலத்து மேகம் போல இந்த நேரம் என்றில்லை , எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பாடல் அப்புச்சியின் வாயிலிருந்து வரும்.     


பாடுவார் என்பது தவறு. சொல்லுவார். இல்லை. கூறுவார். வீட்டு வேலைகளைச் செய்தபடியே பத்திரமாய்ப் போயிட்டு வாப்பா.. என இயல்பான ,பிரியமான ஈடுபாட்டுடன் விடைகொடுக்கும் அம்மாவைப்போல இன்னதென வகை பிரிக்கவியலாத லயத்தில் அப்பாடல் அப்பச்சியின் குரல் வழியே வெளிப்பட்டபடியிருக்கும். பட்டினத்தாரின் அவ்வெண்பாவை பாடுவாரா சொல்லுவாரா என்பது முக்கியமல்ல. அந்தப் பாடல் அவர் வாயிலிருந்து வருகையிலெல்லாம் ஒரு உயிர்ப்புடன் திகழ்ந்தது என்பது மட்டும் நிச்சயம். இதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். பாடல் என்றில்லை. இதயத்தின் அடியாழத்திலிருந்து வரும்போது , வசைமொழிக்கும்கூட ஒரு சாநித்யம் வந்துவிடத் தானே செய்கிறது.?


பாலை ஆற்றியபடியேவந்த அம்மா டம்ளரை என்னிடம் நீட்டினாள். “இந்தா அப்புச்சிக்கு கொடு”. அப்பச்சியின் தலைக்கு அடியே இடது கையைக் கொடுத்து சற்றே உயர்த்தி நெஞ்சோடு சேர்த்து  உயர்த்திப் பிடித்துக் கொண்டேன். சிரமத்துடன் நிகழ்ந்து கொண்டிருந்த சுவாசம் மேலும் தடுமாற்றமுற்றது. தயக்கத்துடனும் அருவருப்புடனும் பொதுக்கழிப்பறை போவதுபோல காற்று உள்ளே போவதும் கபமும் சளியும் கட்டிய நுரையீரல்களை நிறைத்துவிட்டு வெளியே வருவதுமாயிருந்தது. புகைந்து கொண்டிருந்த ஊதுபத்தி வாசனையையும் மீறி முடைநாற்றம் நாசியைத் தாக்கிற்று.


ம்.. கொடு .. நாங்க ஊத்துனாத்தான் எறங்கமாட்டீங்குது. நீ ஊத்துனாலாவது எறங்குதானு பாக்கலாம்… “ பெண்களெல்லாம் வந்து சூழ்ந்துகொள்ள கொஞ்சமாகப் பாலை ஊற்றினேன்.உள்ளிறங்காமல் கடைவாயில் வழிந்தது. முடிச்சிட்டுப் புடைத்திருந்த தொண்டைக் குழியை நீவிவிட ஒரு மிடறு இறங்கிற்று. “ராப்பகலா பக்கத்துலயே காத்துக்கிடந்தாலும் நாம கொடுத்தா குடிக்கிறதில்ல.. பிரியமுள்ள பேராண்டி ஊத்துனதும் முழுங்கறதப் பாரு.. எப்பவுமே கோபீனா அய்யனுக்கு உசுருதானே..என்றார்கள்.


என்மனம் நெகிழ்ந்தது. பொங்கிய உணர்ச்சியில் நீர்த்திரையிட்ட கண்களுடன் அப்பச்சியின்  முகத்தையே நோக்கினேன். நினைவுதிரும்பி அடையாளம் கண்டுகொள்ள மாட்டாரா எனும் ஏக்கம் கிளர்ந்தெழுந்தது. “அப்பச்சி.. அப்பச்சி.. நா உங்க கோபி வந்துருக்கேன் அப்பச்சி..


வாழ்வின் சுமை அதிகரித்து மூச்சுத்திணறும் பொழுதுகளில் அப்பச்சியின் நினைவு தவறாமல் வந்துவிடும். கண்டும் கேட்டுமிருந்த அவர் வாழ்வின் சம்பவங்கள் ஏதேனுமொன்று ஞாபகத்திற்கு வந்து ஆறுதல் படுத்தும். என்னளவில் அப்பச்சி மிகப்பெரிய சாதனையாளர்தான். போதுமான கல்வியறிவோ உலக அறிவோ இல்லாமல் , ஆறு பெண்களையும் ஏழாவதாக ஒரு பையனையும் பெற்று வளர்த்து கரையேற்றுவது சின்னக் காரியமா என்ன? மூணே ஏக்கர் தோட்டத்தையும் முப்பது செம்மறியாடுகளையும் வைத்துக்கொண்டு அப்பச்சியும் அம்மத்தாவும் எல்லாவற்றையும் சமாளித்தனர்.



இது போதாதென்று மூன்றாவது பிள்ளைப்பேறுக்காக வந்துதிரும்பிய என் அம்மாவிடம், ‘ உனக்கு மூவரையும் வள்ர்க்கச் சிரமமாக இருக்கும். பெரியவன இங்கயே உட்டுட்டுப்போஎன என்னையும் அவர்கள்தான் வளர்த்து ஆளாக்கினர். பள்ளிப்படிப்பு முடியும்வரை நான் அப்பச்சியூரில்தான் வளர்ந்தேன். மற்ற பேரன் பேத்திகளைவிட நான் அவர்களுக்கு பிரியமானவனாக ஆகிவிட்டதற்கு இதுவும் ஒரு காரணம் எனத் தோன்றுகிறது.




அப்பச்சியூரில் கழிந்த என் பால்ய காலம் மறக்க முடியாதது. நினைவுகளாகப் பதிந்திருக்கும் அவ்வாழ்வின் சுவை நாளுக்குநாள் அதிகரித்தபடியேயிருக்கிறது. பொழுது சாய்ந்து இருள் கவியத் துவங்கியதும் நாங்கள் வீடடைவோம். விறகையும் காலையில் வாசல் தெளிப்பதற்கான பசுஞ்சாணத்தையும் எடுத்தபடி அம்மத்தா வந்து சேர்ந்திருப்பாள். பிறகு வெகு நேரம் கழித்தே அப்பச்சி வந்துசேருவார். திண்ணையிலிருக்கும் பால்போசியை பாலாமணி சித்தி உள்ளே எடுத்து வருவாள்.



எட்டுமனிக்கு வானொலியில் இளையபாரதமோ அல்லது நாடகமோ ஒலிபரப்பாக ஆரம்பிக்கும். வந்ததும் சாப்பிட்டுவிடும் அப்பச்சி வாசல் திண்ணையில் கிடக்கும் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கொள்வார். பிறகு இரண்டாம் ஜாமம் முடிந்து பட்டிக்கு படுக்கப்போகும்வரை அதுதான் அவரது கிடை. ஈரக்கையை மேல் துண்டினால் துடைத்தபடியே என்னைக் கூப்பிடுவார். கடைக்குப்போய் பீடி வாங்கி வரத்தான். தோட்டத்திலிருந்து வரும் வழியில்தான் கடை வீடு. ஆனாலும் அப்பச்சியே போய் வாங்கமாட்டார்.



இந்தமாதிரி சினச்சின்ன வேலைகளையெல்லாம் நான்தான் செய்யவேண்டும். இதில் அவருக்கு ஒரு சந்தோசம். ஒரு கட்டு குயில் பீடிக்கு நாற்பது காசுபோக மீதியிருக்கும் பத்துப் பைசாவுக்கு தின்ன ஏதேனும் வாங்கிக் கொள்ளலாம் என்பதால் அது எனக்கும்கூட மகிழ்ச்சியளிக்கும் காரியமாகத்தான் இருந்தது.


கடைவீடுதான் என்றில்லை. அப்பச்சி யாருடைய வீட்டுக்கும் அனாவசியமாகப் போகமாட்டார். ஏதாவது நலம் பொலம் என்றால் போய்க் கலந்துகொள்வார். அதோடு சரி. பகலில் தோட்டம் . இரவு வீடு வந்தால் வாசல் திண்ணையில் போடப்பட்டிருக்கும் கயிற்றுக்கட்டில். இதுதான் அவர் வழக்கமாக இருந்தது. ஆனால் ,அப்பச்சியைத்தேடி அவர் வயதொத்தவர்கள் வந்தபடியேயிருப்பர். பட்டிக்குப் போகும்வரை ஊர்ப்பழமைகள் பேசிக்கொண்டிருப்பர். பேச்சு எதைப்பற்றியதாக இருப்பினும் அப்பச்சி ஏதேனும் ஒரு சமயத்தில் தன் பாடலை எடுத்து விடுவார். யாரும் வராத நாட்களில் தெரு விளக்கு வெளிச்சத்தில் விளையாடும் சிறுவர்களையோ, குடிகிணற்றில் நீர்சேந்திப்போகும் பெண்களையோ வேடிக்கை பார்த்தபடி பீடியைக் குடித்துக் கொண்டிருப்பார்.


நான் ஆரம்பப் பள்ளி மாணவனாக இருந்தேன். பாடமாக வந்திருந்த காந்தியின் வாழ்க்கைக் குறிப்பைப் படித்துக் கொண்டிருந்தபோது அந்த சந்தேகம் தோன்றியது. அப்பச்சியைப் பார்த்துக் கேட்டேன். “ அப்புச்சி.. நீங்க எத்தனையாவது வருசம் பொறந்தீங்க?


பேசுவதற்கு யாரும் வராமல் வெறுமே தெருவிளக்கு வெளிச்சத்தில் சேந்துகிணற்றைப் பார்த்துக் கொண்டிருந்தவரிடமிருந்து பதில் வந்தது. “யாருக்குத் தெரியும்?


என்ன அப்புச்சி... சின்னப் பையனான எனக்கே நான் எந்த வருசம் பொறந்தேனு தெரியிது. உங்களுக்குத் தெரியாதா?


தெரியாதேடா அப்பு.. நாள் கெழமையெல்லாம் குறிச்சு வெச்சுருக்க நானென்ன உன்னமாதிரி ஆசுப்பத்திரியலா பொறந்தேன்? ஊட்லயுங்கூடப் பொறக்கல.. காட்டுக்குப்போற இட்டாறியில பெரிய வேப்பமரமிருக்கில்ல.. அந்த நிழல்ல்தான் எங்காத்தா என்னைப் பெத்தாளாம..


என்னது வேப்பமரத்தடீல பொறந்தீங்களா..


வேலியடைச்சிட்டிருந்த எங்கய்யனுக்கு நெறைசூலியாயிருந்த எங்க ஆத்தா சோறு கொண்டுட்டுப் போயிருக்கிறா.. போனாளா.. ஏறு வெயில் சுள்ளுனு அடிக்க பாதித்தடத்துலயே கிறுகிறுப்பும் மயக்கமும் வந்துருச்சாமா.. அப்பறம் ஒரு பண்டக்காரன் ஊருக்குள்லவந்துசொல்லி எல்லோரும் போயிப் பாக்கறப்ப நான் பொறந்திருந்தனாமா..


ஒரு கதைபோல அப்பச்சி தன் ஜனனம் பற்ரிய ஞாபகங்களைச் சொல்லிப்போக எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. எவ்வளவு முயற்சித்தும் அது எந்த வருசம் என அப்பச்சிக்குத் தெரியவில்லை. கடைசியாக ஒரு தகவல் கூறினார். “ இந்த சேந்துகெணறு  இருக்குது பாத்தியா..? வெள்ளக்காரன் இத வெட்டுன வருசந்தான் நானும் பொறந்தனாம்.விடிந்ததும் கிணற்றடிக்கு ஓடினேன். அது வெட்டப்பட்ட வருசம் பொறிக்கப்பட்டிருக்கிறதா என சுற்றுச்சுவரின் நீள்சதுரக் கற்களையெல்லாம் உற்றுக் கவனித்தேன். ஏமாற்றமே மிஞ்சியது.


ல்லோரும் எந்திரிச்சுவாங்க சாப்பிடலாம்..  ஜானகியின் குரல் எனை சுயநினைவுக்குக் கொண்டு வந்தது. காத்திருந்தவர்களைப்போல பெண்கள் எழுந்து கொண்டனர். உள்வாசலில் மாத்துத்துணி விரித்து பந்தி பரிமாறினர். ஆசரத்தின் மூலையில் மளிகைச்சாமான்களும் அரிசி மூட்டைகளும் வந்து இறங்கியிருந்தன. அம்மாவிடம் குழந்தையைத் தந்த ஜானகி பந்திவிசாரிப்பதில் மும்முரமானாள்.


ஜானகிக்குத்தான் சிரமம். கொழந்தப் புள்ளய வெச்சிக்கிட்டு.. வாரவங்களுக்கு காபித்தண்ணி குடுக்கறது சோறாக்கிப் போடறதுனு..  கஷ்டம்தான்.


என்ன செய்யறது.. டவுன்ல தனக்கும் தன் புருசனுக்கும்னு அளவா அரப்படி அரிச்சுப் போட்டுட்டு ஜம்னு டிவி பார்த்துட்டு இருந்தா.. பத்து நாளா இங்க வந்து சிக்கீட்டு புள்ள பாடாபடுது.


படட்டுமே… சேந்துகெணத்தூட்டய்யன் இவ அம்மாமாருகளையெல்லாம் வளத்தி ஆளாக்க என்ன கஷ்டப்பட்டிருக்கும். சாகப்போற நேரத்துல கிட்ட இருந்து பாத்துக்கிட்டா புண்ணியந்தானே..



பந்தியில் அமர்ந்திருந்த பெண்களின் பேச்சு தொடர்ந்த படியேயிருந்தது. உணவோடு சேர்த்து ஊர் விஷயங்களையும் அவர்களின் வாய் மென்று சலித்தது. ஆறு பெண்கள் ஒரு மகன் பதினைந்துக்கும் மேற்பட்ட பேரன் பேத்திகள். இத்தனை பேரிருந்தும் நான் உட்பட யாருக்கும் அப்பச்சியின் இந்த நிலை சிறு துயரத்தைக்கூட உண்டாக்கவில்லையே என்பது ஆச்சரியமாக இருந்தது. எல்லோருமே திருவிழாவைக் காணப்போகும் பிள்ளைகளின் மனநிலையைக் கொண்டிருப்பதுபோலப் பட்டது. பந்தல் போடும் வேலை முடிந்திருந்தது. வாசலுக்கே புது பொலிவு வந்துவிட்டதுபோலப் பட்டது. தெரு இருக்கும் கிழபுறம் தவிர, மற்ற இரு பக்கங்களிலும் ஒரு தடுக்கு முறையாக நிற்கவைத்து, படல் மாதிரி கட்டி, முழுவதுமாக அல்லாமல், ஒரு ஆள் உயரத்திற்கு மறைத்திருந்தார்கள்.  படலுக்கு மேலும் பந்தலுக்கு கீழுமிருந்த நீள் சதுர இடைவெளியில் பார்வை ஓடிற்று. மந்தைவெளி மர உச்சிகள் காற்றுக்கு அசைந்தன. வெயில் தணிந்திருந்தது. குடிகிணறின் தொலைக்கட்டுத்தூண் தெரிந்தது. தண்டவாள்த்திலும் இரும்பு உருளையிலும் பறவைகளின் எச்சங்கள் படிந்திருந்தன. வானம் மேகமற்றிருந்தது. புதிய தென்னந்தடுக்குகளின் வாசம் வாசலெங்கும் கமழ்ந்தது. முடைபார்க்கவந்திருந்த உள்ளூர் ஆண்கள் வெளித்திண்ணையில் அமர்ந்திருந்தனர். நாகராசுமாமன் தன் பங்காளிகளுடன் உரையாடியபடியிருந்தான். கச்சிதமாக எல்லா வேலைகளையும் முடித்துவிட்ட உற்சாகம் அவன் குரலிலிருந்தது. சாக்குக் கட்டும் கையுமாக மயில்சாமிமாமன் உள்ளே வந்தார்.


“ என்னடா நாகா.. வேலையெல்லா தடபுடலா நடக்குது. எல்லாக் காரியமும் ஆச்சா..


ஆச்சு சித்தப்பா.. ரண்டே ரண்டு காரியந்தான் பாக்கி..


அது என்னடா..


அய்யன் உசுர உடறதும் காட்ல குழி வெட்றதும்தான்குபீரென சிரிப்பலை கிளம்பிற்று. மிளகாய்விற்ற கையோடு ஒரு குவார்ட்டரையும் அடித்து வந்திருக்க வேண்டும். மயில்மாமன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். வார்த்தைக்குள் சிக்காத அவரின் சிரிப்புச் சத்தம் காராட்டுப் பூனைகளை நினைவு படுத்திற்று. உள்ளிருந்த பெண்கள் சிலர் வெளியே வந்தனர். பாலாமணிச் சித்தியும் கடைசி சித்தியான நீலவேணியும் தன் பொறந்தவன்களுடனான அரட்டையில் கலந்துகொள்ளத் துவங்கியிருந்தனர்.


பேச்சும் சிரிப்பும் தொடர்ந்த படியேயிருந்தது. மிகப்பெரிய வருத்தம் கிடையாதெனினும் என்னால் அங்கே அமர்ந்திருக்க முடியவில்லை. மனம் சிந்தனை வயப்பட்டிருந்தது. புகைக்கத் தோன்றியது. எழுந்து வெளியே வந்தேன்.



குடிகிணற்றைச் சுற்றிலும் வேலிமுட்கள் வளர்ந்திருந்தன. பாதி மரமாகியிருந்தன. அப்பச்சியூட்டுக்கும் சேந்துகிணத்துக்கும் இடைப்பட்ட சிறு மைதானம் போலிருந்த நிலப்பரப்பில் இலந்தைச்செடிகள் முளைத்திருந்தன. நாயுருவி மண்டியிருந்தது. தடம் அழிந்து போயிருந்தது. முன்பு நடு வீதியில் கிடந்த கல்பண்ணை ,சுவரையொட்டி குப்புறக்கிடத்தப்பட்டிருந்தது. கிணறைச்சுற்றிலிமிருந்த நடைபாதை சிமெண்ட்தளம் புற்கள் முளைத்திருந்தது. ஆட்டுப்புழுக்கைகளும் கோழிப்பீயுமாயிருந்தது. சுற்றுச்சுவர் சிதிலமாயிருந்தது. அரசும் அத்தியும் வேர் விட்டிருந்தன. எண்ணெய்ப் பசையில் கறுத்து மினுமினுங்கும் உருளைகள் இரண்டும் துருப்பிடித்திருந்தன. கல் பண்ணையின்மேல் உட்கார்ந்தேன்.


நடுவீதியில் கிடந்த கல்பண்ணையில் ஆடுகள் தண்ணீர் குடிப்பதும், தளும்ப நீர்நிறைத்து நாங்கள் மூச்சடக்கி விளையாட்டு விளையாடியதும் ஞாபகம் வந்தது. சிகரட்டைப் பற்றவைத்தேன். குமிழியிடும் பால்ய நினைவுகளும் அதை இழந்த உணர்வுமாய் மனம் சலனமற்றிருந்தது. இலைகள் அசைவுறும் கண இடைவெளியில் தோன்றி மறைந்திருந்தது ஏதோ ஒன்று. எதையும், எதுவாகவும் ,இருக்கவிடாத கால பிரமாண்டம் பற்றிய வியப்பும் திகைப்பும் அதிகரித்த படியேயிருந்தது. அப்பச்சியும் இந்த குடிகிணறும் ஒன்றே என தோன்றியது.


ப்பச்சியின் வீட்டுக்குக்கூட ஊரில் சேந்துகிணத்து வீடு என்றுதான் பெயர். அது ஒரு காலம். ஆழ்துளைக் கிணறுகளும் மேல்நிலைத் தொட்டிகளும் இல்லாத காலம். ஊருக்குள்ளிருந்த நூறு வீடுகளும் இக்குடிகிணற்றையே நம்பியிருந்தன. கல்யாணமாகாத சித்திகளும் நாகராசனும் அப்பச்சியையே சார்ந்திருந்ததுபோல.


அந்த வருடம் வானம் பொய்த்திருந்தது. காருமழையின்றி பின் வந்த காற்றுக் காலம் கிணறுகளின் நீர் மட்டத்தை கீழே கொண்டுபோனது. பருவமும் ஏமாற்றியது. ஆடிமாதம் வெட்டி அடைத்திருந்த கொறங்காட்டு வேலிகளின் கிளுவை முட்களும் வறளத் துவங்கின. பெரும்பாலான தோட்டக் கிணறுகளின் தரையீரமும் காய்ந்து போனது.  எண்பதடி ஆழமுள்ள குடி கிணறில் மட்டும் இடுப்பளவு தண்ணீர் ஊறியபடியிருந்தது. வெயில் நேரே கீழிறங்கும் உச்சிப்பொழுதில் மேற்குச் சுவரிலிருந்து உருகிய வெள்ளியென ஓசையெழவிழும் ஜலத்தைப் பார்ப்பது எங்களுக்குத் தீராத வேடிக்கையாயிருந்தது. அது சமுத்திரத்திலிருந்து வருகிற நீர்க்காலாக்கும், குடி கிணறு வற்றவே வற்றாது என்பார் அப்பச்சி.



வேறு வருமானம் இல்லாமலும் காசுக்கு தீனிவாங்கிப்போட்டு கட்டுப்படியாகாமலும் வெகுபேர் கால்நடைகளை விற்கத் துவங்கியிருந்தனர். சிலர் வேறு ஊர்களுக்கு ஓட்டிப் போயினர். ஆனால் அப்பச்சி அசரவில்லை. ஆடுகளை விற்கவில்லை. வேறு ஊர்களுக்கும் ஓட்டிப் போகவில்லை. பொழுது புலர்ந்ததும் தூக்குப்போசியில் கரைசோற்றையும் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு கிளம்புவார். சேனாங்கல் மேட்டிலிருந்து அவரும் ஆடுகளும் தோட்டம் வந்துசேர இருட்டிவிடும்.



சேனாங்கல்மேடு என்பது ஒரு மலைக் கரடு. ஊரைவிட்டு தொலைவிலே இருப்பதாலும், வங்க நரிகள் அதிகமுண்டு என்பதாலும் பண்டக்காரர்கள் அங்கு ஆடுகளை ஓட்டிப்போவதை தவிர்த்தனர். குட்டியாட்டின் பால்மடிகளை வங்கநரிகள் பிய்த்துப்போய்விடும் என்ற பேச்சு ஊருக்குள் இருந்தது. திருகுகள்ளி மரங்களும் கற்றாழம்புதர்களும் காரைமுட்களும் சூறிப்புதர்களும் அங்கே மண்டிக்கிடந்தன. பாறையிடுக்குகளில் முளைத்திருக்கும் மலம்புற்களும் திருகுககள்ளியும்தான் ஆடுகளுக்கு உணவு.


வெள்ளையாக பால்வடியும் கள்ளிகளை சக்கையாக மஞ்சி காண தட்டிப் போடவேண்டும். அப்போதுதான் ஆடுகள் அதை தின்ன ஏதுவாக இருக்கும். கொத்துக் கொத்தாக வெட்டிக்கொண்டுவந்த கள்ளிகளை  ஒரு மர நிழலிலே போட்டுக்கொண்டமர்ந்தபடி சுற்றிலும் நிற்கும் ஆடுகளுக்கு பொழுதுக்கும் ஒயாமல் தட்டித்தட்டி போடுவார். ரத்தம்கட்டிப்போகும் அப்பச்சியின் கைகளுக்கு அம்மத்தா இரவில் எருமைச்சாணி வேது கொடுப்பாள். நானும் நாகராசனும் அப்பச்சி ஆடுமேய்க்கும் காட்டிலிருந்து  கொண்டுவந்த சூறிப்பழங்களைத் தின்றபடியே, காரக்காய்களை சாம்பலில் புதைத்து ஒரு ஜாடியிலிட்டு மூடி வைப்போம் பழுப்பதற்காக.


ஊருக்கு குடிகிணறும் இங்கே அப்பச்சியும் வாழ்வாதாரமாகவும் ஜீவாதாரமாகவும் விளங்கிய காலகட்டம் அது. ஒருநாள் காலையில் நீர்சேந்தப்போன பெண்கள் அலறி கூச்சலிட்டனர்.  இறக்கை முளைத்தும் முளைக்காத இரண்டு சிட்டுக்குருவிக் குஞ்சுகள் கிண்ற்றுக்குள் செத்து மிதந்தன. கிடந்த கொஞ்சம் தண்ணீரும் குடிப்பதற்கு ஆகாமல் போனது. குடிக்கவே நீரின்றி ஊரின் இயல்பு வாழ்க்கையே ஸ்தம்பித்துக் கிடந்த அன்றுதான் அந்த சம்பவமும் நடந்தது. கள்ளிமரப்பொந்துக்குள் சுருண்டிருந்த குறுவிரியன் அப்பச்சியின் கணுக்காலுக்குமேலே ஆடுதசையைப் பதம் பார்த்தது. அப்போது நான்கு சித்திகள் கல்யாணமாகாமலிருந்தனர். நாகராசு பணிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவன் படித்த அதே பள்ளியில் நான் எட்டாம் வகுப்பு பயின்று கொண்டிருந்தேன்.


பள்ளியிலிருந்து திரும்பிய அப்பச்சியை நாட்ராயன் கோவிலுக்குக் கொண்டுபோயிருப்பதாகச் சொன்னார்கள். ஐயோ அப்பாஎன நாகராசு மயங்கிவிழுந்தான்.  பெண்பிள்ளைகளாக இருந்தாலுமேகூட சித்திகளெல்லாம் தைரியமாக இருந்தனர். ஆனால் மாமன் அழுத அழுகை ஊரையே உச்சுக்கொட்ட வைத்தது.  பொம்பளை புள்ளைகளுக்குக்கூட இவ்வளவு பாசம் இல்லை. நாகராசு அய்யன்மேல உசுரையே வெச்சுருக்கான் என்றார்கள்.  நாகு அப்பச்சி கோவிலில் இருந்த இரண்டு வாரமும் பிரமத்தி பிடித்தவன் போலவே திரிந்தான்.  நடுயிரவில் எழுந்துபோய் கொட்டமுத்துகளை வைத்து சோசியம் பார்ப்பான். “நா கேட்ட மாதிரியே கட்டி வழியுட்டு வந்திருக்கு.. அப்பா மட்டும் நல்லபடியா வந்துட்டாங்கனா நான் அந்த நாட்ராயன மறக்கவே மாட்டேன்.. அதுதான் என் கொலதெய்வம்என்பான்.


அப்பச்சி வீடுவந்து சேர்ந்தார். நாட்ராயன் கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் நடக்கும் சாயுங்காலப் பூசைக்கு நாகராசு போக ஆரம்பித்தான். அன்றுமட்டும் அனுமதி வாங்கிக் கொண்டு அரை மணிக்கு முன்பாகவே வந்துவிடுவான். படிப்பு முடிந்து திருப்பூர் பனியன் கம்பனிக்கு போக ஆரம்பித்த பிறகும்கூட அது தொடர்ந்தது.


ஐந்தாவது சித்திக்கு திருமணமான சமயம்தான் ஊருக்குள் முதன்முதலாக போர்வெல் லாரி நுழைந்தது. ஊர்ன் தென்கோடியில் பள்ளிக்கூடத்தருகே விடியவிடிய உறுமிக்கொண்டு நின்றது. இரவுமுழுதும் சுற்றிநின்று வேடிக்கை பார்த்த பெண்கள் ,காலையில் ஈரச் சாம்பல் போலிருந்த போர்க்குழி மண்ணை பாத்திரம் துலக்க ஆகுமென எடுத்துப் போனார்கள். பிறகு பஞ்சாயத்து போர்டிலிருந்துவந்து அடி பைப்பும் மாட்டிக் கொடுத்தார்கள்.


தெற்கு வளவும் நடுவளவும் அடி பைப்புக்குப் போக வடக்குவளவு மட்டுமே குடிகெணற்றில் நீர் சேந்திற்று. உள்ளாட்சித் தேர்தல் வந்தது. நாகராசன் பனியன் கம்பனிக்குப் போய் சம்பாதிக்கத் துவங்கியிருந்தான். அந்த பஞ்சாயத்துத் தேர்தலுக்குப் பிறகு ஊருக்குள் நிறைய மாற்றங்கள் வந்தன. மண்ரோடு தார்ரோடாக மாறியது. சில கிலோமீட்டருக்கு அப்பாலிருந்த நியாயவிலைகடை ஊருக்கே கொண்டுவரப் பட்டது.  மேலும் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டு மேல்நிலைத் தொட்டியும் கட்டப்பட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக குழாய் இணைப்பும் தரப்பட, குடிகிணற்றின் உருளைகள் சேந்த ஆளில்லாமல் தங்கள் இயக்கத்தை நிரந்தரமாக நிறுத்திக் கொண்டன.


கடைசிச் சித்திக்கும் திருமணமானபின் அப்பச்சியின் நிலமையும்கூட குடிகிணற்றைப் போலவே ஆனது. நாகராஜன் பண்ணாட்டுக்கு வந்திருந்தான். நானும் பள்ளிப்படிப்பு முடிந்து எங்கள் ஊருக்கே வந்து, கல்லூரிக்குப் போகத் துவங்கியிருந்தேன்.  நாகராஜனுக்கும் கல்யாணம் ஆனது. அப்பச்சியும் அம்மத்தாளும் இரண்டாவது சித்தியின் மகள் ஜானகியையே மருமகளாக்கிக் கொள்ள விரும்பினர். பிறத்தியிலிருந்து பெண் எடுப்பதைவிட , பேத்தியையே மருமகளாக்கிக் கொண்டால், நடந்த தடம் காலத்துக்கும் அழியாது சொந்தமும் விட்டுப் போகாது என்பது அவர்களின் கணக்காக இருந்தது.


மகனுக்கு கல்யாணம் ஆன ஆறே மாதத்தில் அம்மத்தா போய்ச் சேர்ந்தாள். அப்பச்சி எவ்வளவு சொல்லியும் கேட்காது தோட்டத்தையும் ஆடுகளையும் விற்ற மாமன் திருப்பூரில் பனியன் கம்பனி ஆரம்பித்தான். பிறகு வந்துபோகச் செளகரியமில்லையென டவுனுக்கே குடியும் போனான். வற்புறுத்தி கூப்பிட்டும்கூட உடன்செல்ல மறுத்த அப்பச்சி தானே தனியாக சமைத்துண்ணத் துவங்கினார்.


எல்லோருமிருந்த வீட்டில் யாருமில்லாமல் அவரின் பொழுதுகள் தனியாகப் போகத்துவங்கின. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அப்பச்சியை வந்து பார்த்துவிட்டுப் போவதை நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன்.குயில்பீடிப் பண்டல்களுடன் வரும் என் வருகையை அவரும் எதிர்பார்ப்பவராயிருந்தார். முதுமையில் தனிமை அவருள் மாற்றங்களை உண்டாக்கியிருந்தது. கண்கள் வெளிச்சம்பெற்றுத் துளங்கின. பிறந்தமண் குறித்த பிரக்ஞை அதிகமாகியிருந்தது. பற்றற்ற குரலில் யாவற்றையும் நேசிக்கும் பரிவு தொனித்தது. ஒருமுறை வந்துவிட்டுக் கிளம்புகையில் அப்புச்சியிடம் கூறினேன்.


“டவுன்ல இருக்கறதுதான் உங்களுக்கு ஒத்துக்காது. சரி, எங்கூருக்குப் போயி இருந்துக்கலாம் வாங்க..

உங்க ஊரா..? அது இந்த ஊரு மாதிரி வருமா..?


அதில்ல அப்பிச்சி… கடைசி காலத்துல நீங்களே ஆக்கித் தின்னுட்டு.. கரிச்சட்டி கழுவீட்டு ஏன் சிரமப் படறீங்க..? அங்க வந்தீங்கனா நாங்கெல்லாம் பாத்துக்கறோம். பொழுது சுகமாப் போகுமல்லோ..


“கத்தாழங்கெழங்கப் புடுங்கித்தின ஈஸ்வரா வருசத்துப் பஞ்சத்துலயே நான் இந்த ஊரைவிட்டுப் போகல..  இனிமேலா போயிருவேனு நெனைக்கறே..என்றவர் என்னைத் தீர்க்கமாகப் பார்த்தார்.

“உனக்கு ஒண்ணு தெரியுமா கோபி..?

என்ன அப்பிச்சி..


மனுசன் அப்பன், ஆத்தா, அண்ணன், தங்கச்சி, பொண்டாட்டி, பிள்ளை, மாமன் , மச்சான்னு உறவுகளைப் பெருக்கினபடி போயிட்டேயிருக்கானே.. ஏந்தெரியுமா..?

சொல்லுங்க அப்பிச்சி..

தான் ஒரு அனாதைங்கிற உண்மைய உணரத்தாண்டா..


ற்சாகக் குரல்கள் எனைத் திடுக்கிட வைத்தன. சித்திகளின் பிள்ளைகள் ஊர்ப்பிள்ளைகளோடு சேர்ந்து தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். புழுதி படலமிட்டிருந்தது. மறைந்துவிட்ட பொழுதின் கதிர்கள், காற்றோட்டத்துக்கும் உயரே ,நகராமல் புகைமூட்டமெனப் படிந்திருந்த மேகங்களின் ஓரங்களை பொன்னிறமாக்கியிருந்தது. கொக்கு கூட்டமொன்று தலைக்குமேலே கடந்து போனது. கருவேலமரத்திலிருந்து அழுக்குவண்ணாங்குருவி விட்டு விட்டு கத்திற்று. மேபுறத் தோட்டமொன்றிலிருந்து பூச்சி மருந்தின் வாசமும் விசைத் தெளிப்பானின் சத்தமும் ஒருங்கே வந்தன. உள்ளிருந்து வெளிப்பட்ட ஆந்தை கிணற்றின் தொலைக்கட்டுத் தூண்மேல் அமர்ந்தது. என் தலை திருப்பலில் திடுக்கிட்டு, குளக்கரை புளியமரம் நோக்கிப் பறந்தது.


அப்பச்சியின் வீட்டில் பேச்சரவம் ஓய்ந்திருந்தது. பால் கறக்கவும் விளக்கு வைக்கவும் அனைவரும் போயிருக்கலாம். வேலைகளை முடித்துக்கொண்டு இரவு எட்டுமணி வாக்கில் வந்து சேர்ந்தார்களெனில் பிறகு விடிய விடிய பேச்சுக் கச்சேரி களைகட்டுமெனத் தோன்றிற்று. கிளம்ப எழுந்தவன் சுற்றுச் சுவர்களின் மேல் கைகளை ஊன்றியபடி உள்ளே எட்டிப் நோக்கினேன். முளைத்த பயிரின் வாசனையொத்த ஈரவாடை நாசியை நிறைத்தது. அரைக்கிணறு ஆழத்துக்குங்கீழே தண்ணீர் கிடந்தது.  பழைய உடைந்த பிளாஸ்டிக் குடங்களையும் சிறு பிள்ளைகளின் பாதணிகளையும் சருகு செத்தைகளையும் சுமந்தபடி கிடக்கும் அந்த தண்ணீரையே  வெறுமையான மனதுடன் பார்த்தபடியிருக்க.. அது எந்த சலனுமுமில்லாமல் அஸ்தமனப்பொழுதின் கரிய வெளிச்சத்தைப் பிரதிபலித்தபடி மினுங்கிக் கொண்டிருந்தது.  அப்பச்சியின் கண்களென.  


  




Wednesday, 1 March 2017

ஈஷோபதேசம்

அந்த செவ்வாய்க் கிழமை பிற்பகலில் கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு ஸ்ட்ரைக் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. மறுநாள் காலை நேரமே ஈஸ்வரண்ணனைப் பார்க்கப் போனேன். போகும் வழியிலேயே திலோத்தமை டீ ஸ்டாலில் அவர் நின்றுகொண்டிருந்தார். அந்த டீக்கடைக்காரரின் சம்சாரம் நல்ல அழகி. அதன் காரணமாக திலோத்தமை என பெயர் வைத்திருந்தேன். எத்தனை காலத்துக்குத்தான் நல்ல அழகிகளை ரம்பா ஊர்வசி மேனகை என்றே சொல்லிக்கொண்டிருப்பது?


என்னைக் கண்டதும் ஈசுவரண்ணனுக்கு முகம் சுணங்கிவிட்டதுபோலத் தோன்றியது. மூன்றடுக்கு டிபன் கேரியரும் அதை வைக்கும் காதறுந்த ஒயர்கூடையும் போய் அதற்குப் பதிலாக ஒற்றை டிபன் பாக்சும் அதை வைக்க ஜிப்புவைத்த அழகான லெதர்பேக்குமாக அவருடைய மதிய உணவுப்பை நாகரீகம் பெற்றிருந்தது. அதனை பக்கத்திலேயே வைத்தபடி தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். ஜீன்ஸ் பேண்ட் என்ன? சர்ட் என்ன? அவரும்கூட ஆளே மாறிப்போயிருந்தார். முகமெல்லாம் பாலீஷாகி புதுமெருகு ஏறியிருந்தது.


“ஸ்ட்ரைக் முடிஞ்சுதா..? நேத்தே கேள்விப் பட்டேன். செரி, எடையில என்ன பண்றது? நின்னா சம்பளம் தரமாட்டாங்க. இந்த வாரம்பூராப் போய் சம்பளம் வாங்கீட்டு.. திங்கக்கெழமையிலிருந்து வேணா பாக்கலாம்” என்றார்.


வருகிறேன் எனச் சொல்லாமல் பார்க்கலாம் எனக் கூறியது எனக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. கவலையும் குழப்பமும் மனதை ஆட்கொண்டது. “ பாக்கலாம் என்ன பாக்கலாம்.. திங்கக்கெழமை கண்டிப்பா வர்றீங்க.. புரியுதா?” என சற்றே கடுமையுடனும் அதே சமயம் அவருக்கு என்மேல் பரிதாபம் உண்டாகும்படியும் கூறிவிட்டு அவருடைய பதிலுக்குக் கூட காத்திராமல் மொபட்டை ஸ்டார்ட் செய்தேன்.     


ஒரு ஷிப்டுக்கு ஒரு ஆள் இருந்தாலே போதும்படியான சிறிய தறிக்குடோன் எங்களுடையது. இரவு பகல் எனும் இரண்டு ஷிப்ட் வேலை முறைமையில், ஒரு ஷிப்ட்டை ஆள்காரர் ஓட்ட மற்றொரு ஷிப்ட்டை நான் ஒட்ட தொழில் நடந்து கொண்டிருந்தது`. ஒரு ஆள்தான் என்றாலும் அந்த ஒரு ஆளைப் பிடிப்பதற்கும் பிடித்த ஆளைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் நான் படாத பாடெல்லாம் படவேண்டியிருந்தது. என்னாலான சாம தான பேத தண்டங்களையெல்லாம் பிரயோகித்துக் கொண்டிருந்தேன்.



தறிக்குடோனுக்குள் புதிதாக வருபவர்களுக்கு ‘ இது சாதரண வேலையல்ல.. எல்லோராலும் முடியாது. தறியோட்டிப் பழகுவதற்கு பெரிய சாமார்த்தியமும் திறமையும் வேண்டும் ‘ என்பது போலெல்லாம் தோன்றும். ஆரம்பத்தில் எனக்கும் அவ்விதமே தோன்றியது. போகப்போக மேலும் ஒரு உண்மையைப் புரிந்து கொண்டேன். அந்த உண்மை இதுதான். ‘ தறியோட்டிப் பழகுவதற்கு எப்படி சாமார்த்தியமும் திறமையும் வேண்டுமோ, அதுபோலவே ஒருவர் தறியோட்டியாகவே தொடர்ந்து இருப்பதற்கு, தான் சாமார்த்தியமும் திறமையும் உடையவர் என்பதை உணராதவராகவும் இருக்க வேண்டும்.’


இந்த உண்மையைக் கண்டறிந்த பிற்பாடு அப்படிப்பட்ட ஆட்களாகத் தெரிவுசெய்து வேலை கற்றுக்கொடுத்து தறியோட்ட வைத்துக் கொண்டேன். இரட்டைத் தம்பிகளான ராசு லட்சு மற்றும் சம்பத்தான் மணியானெல்லாம் என்னிடம் இப்படி இருந்தவர்கள்தான். இந்த உலகத்தில் எதுவும் சாஸ்வதமல்லவே..? எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு ஏற்படும்தானே? அப்படியான முடிவு நாளில் இறக்கை முளைத்த கிளிகள் பறந்து போய்விடும். எதார்த்தத்தைப் புரிந்து கொண்டவனாக நானும் அடுத்த ஆளை, தன் பலத்தை தானுணராத ஆஞ்சநேயரைத் தேடத் துவங்குவேன். இப்படியாக என் காலத்தையும் என் தறிகளையும் ஒட்டிக்கொண்டிருந்தேன்.


பிரகாசும் ஈசண்ணனும்தான் ஏற்கனவே தொழில் பழகிய நிலையில் என்னிடம் வேலைக்கு வந்தவர்கள். பிரகாஷ் மூலமாகத்தான் ஈசுக்குட்டி பழக்கமானார். வேன் டிரைவராகும் லட்சியத்துடன் பிரகாசன் வெளியே போய்விட ( இப்போது அவன் கோயமுத்தூரில்,  பொறியியற் கல்லூரியொன்றில் பேருந்து ஓட்டுனராக இருக்கிறான்). அந்த இடத்தை ஈசு நிரப்பினார்.


’எருமைமேல மழபேஞ்ச மாதிரி..’ என்று சொல்வார்களல்லவா? அப்படியான இயல்பு ஈசண்ணனுடையது. அப்பா இல்லை. அம்மாவும் அவரும் மட்டும்தான். ‘ வெச்சா செமக்கத் தெரியும்.. போட்டாத் திங்கத் தெரியும்.. அதுக்குமேல உனக்கொண்ணுந் தெரியாது’ என அவருடைய அம்மாவே அடிக்கடி சான்றிதழ் கொடுக்கும்படியான சுபாவம் அவருடையது. தறியோட்ட இந்த மாதிரியான சுபாவிகளே மிகவும் பொருத்தமானவர்கள்.


இரண்டு வருடங்கள்போல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் போனது. என்னாலான சுகசெளகரியங்களையெல்லாம் செய்துகொடுத்து ஈசுவை சொந்த அண்ணனைப் போலவே வைத்துக்கொண்டேன். அதேசமயம் தறித்தொழிலை விட்டா நமக்கு வேறு தொழில்கள் செட்டாகாது.. பிறகு சோத்துக்கே வழியில்லாமல் போய்விடும் என்பதுமதிரியான மனநிலையிலேயே அவர் தொடர்ந்து இருக்கும்படியும் பார்த்துக்கொண்டேன்.  
     
எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டுதானே? கூலியுயர்வு கேட்டு எங்களுடைய கூலிக்கு நெசவுசெய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் அறிவித்தது. சீக்கிரமே ஒப்பந்தம் ஏற்பட்டு ஸ்ட்ரைக் முடிந்துவிடும் என எதிர்பார்த்தோம். முதல் இரண்டு வாரங்களுக்கு செலவுக்குக் காசுகொடுத்து ஈசண்ணனை என்னுடனேயே வைத்துக் கொண்டேன். சங்கக் கூட்டங்களுக்குப் போவது, சினிமாவுக்குப் போவது, வெளிச்சோலிகள் என இருவரும் ஒன்றாகவே சுற்றினோம்.


ஸ்ட்ரைக் இப்போதைக்கு முடியாது மாசக்கணக்கில் நீடிக்கும் என்றார்கள். “ வெட்டியா எத்தனை நாளைக்குத்தான் சுத்தறது? சும்மா வெச்ச்சுக்கிட்டே நீங்களும் எத்தனை நாளைக்குத்தான் காசு கொடுப்பீங்க? பனியன் கம்பனிக்குக் கூப்பிடறாங்க.. ஸ்ட்ரைக் முடிஞ்சதும் வந்தர்றேன்என ஈசு கூறினார். பனியன் கம்பனிவேலை  பிடிபட்டுவிட்டால் பிறகு தறியோட்ட வரமாட்டாரே என்ற பயம் எனக்கு உண்டானது. வருமானமின்மை, வட்டிவாசிகள்  ஏலச்சீட்டுகள் (அனைத்துமே எடுத்த சீட்டுகள்) மற்றும் அன்றாடச் செலவுகள் என விழி பிதுங்கிக்கொண்டிருக்கும் சூழலில் மேலும் முன்பணம் கொடுப்பதும் முடியாத காரியமாகத் தோன்றியது. ஈசுவின் சுபாவத்திற்கு பனியன் கம்பனிகள் நிச்சயமாக ஒத்துவராதவை என என்னை நானே தேற்றிக்கொண்டு “ சரி.. அப்படித்தான் கொஞ்ச நாளைக்குப் போங்கண்ணா.. ஸ்ட்ரைக் முடிஞ்சதும் வந்துருங்க..” என அனுப்பி வைத்தேன்.

ஸ்ட்ரைக் முடிந்த பிற்பாடு வந்த வியாழன் வெள்ளி சனி ஆகிய மூன்று நாட்களும் நான் ஒருவனே தறியோட்டினேன். நேராநேரத்திற்கு சாப்பாடும் இல்லை. தூக்கமும் இல்லை. ஏற்கனவே இருந்த பொருளாதார நெருக்கடிகளோடு வேலைநிறுத்தத்தினால் விளைந்த புதிய சுமைகளும் சேர்ந்துகொள்ள ஆள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தறிகளை ஓட்டியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு நான் ஆளாகியிருந்தேன். எப்படா ஞாயிற்றுக்கிழமை வரும் ஈசண்ணனைப் பார்ப்போம் என்று இருந்தது.


ஞாயிறு மாலை ஐந்து மணி சுமாருக்கு ஐநூறு ரூபாய்போல ஏற்பாடு செய்துகொண்டு ஈசுவின் வீட்டிற்கு மொபட்டில் கிளம்பினேன். “இந்நேரம் வரைக்கும் இங்கதான் இருந்தான். இப்ப எங்க போனான்னு தெரியலையே.. எதுக்கும் கடைவீதில போய்ப் பாரு..” என அவருடைய அம்மா கூறினார். இங்கே அங்கே அலைந்து கடைசியாக வெற்றி ஒயின்ஸ் சாக்னாக் கடையில் ஆளை கண்டுபிடித்தேன்.

டீ சர்ட்டும் லுங்கி வேட்டியுமாக ஈசு பளிச்சென்று இருந்தார். பாதியளவுக்கு மதுவோடு குவார்ட்டர் பாட்டில், அதன்மேல் குப்புற கவிழ்த்து வைக்கப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர், ஒரு தட்டில் வேர்க்கடலை, மற்றொன்றில்  ஆம்லெட் என அவர் மேஜை இருந்தது.

”வாங்க.. வாங்க.. நல்ல நேரத்துலதான் வந்திருக்கீங்க..” என்றார். ” உங்களத் தொளாவீட்டுப் போகாத எடமில்ல.. கடைசீல பார்த்தா இங்க உக்காந்திருக்கீங்க..” என்றேன். இப்படியாக எங்களின் உரையாடல் வளர்ந்தது. ஒரு கட்டத்தில் “ காலைல ஷிப்ட்டுக்கு வந்துருங்கண்ணோவ்.. சொல்லீட்டுப் போகலாம்னுதான் வந்தேன்” என்று கூறினேன்.

ஈசு இவ்வளவு விவரமாகவும் கட்டுறுதியாகவும் பேசுவார் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் பேசினார். “இங்க பாரு வெங்கிட்டு.. நீங்க நம்மாளு.. என்ன வேணும்னாலும் கேளுங்க.. செய்றேன். ஆனா தயவுசெய்து வேலைக்கு மட்டும் கூப்ட்றாதீங்க.. தறியோட்றதப்பத்தி நெனச்சாலே அவ்வளவு வெறுப்பா இருக்குது.. இதே நீங்க பனியன் கம்பனி வெச்சிட்டுவந்து வேலைக்கு வா னு கூப்புடுங்க.. அடுத்த செகண்டே ஒடியாறேன். என்ற சார்பா இன்னும் பத்துப்பேர வேணும்னாலும் கூட்டீட்டு வாரேன். ஆனா தறிக்குன்னா ஆகாது. அம்பது செம்பளியாட்ட வாங்கியுட்டுட்டு மேய்க்கலாம் வா னு கூப்புடுங்க.. உங்க மூஞ்சிக்காக வர்றேன். ஆனா தறியோட்றதுக்கு மட்டும் வரச்சொல்லாதீங்க.. அந்த கெரகம் புடிச்ச தொழிலே ஆகாது.. இந்த ஜென்மத்துக்கும் மட்டுமில்ல.. எந்த ஜென்மத்துக்குமே ஆகாது.” என்றார்.


நான் மவுனமாக அமர்ந்திருந்தேன். இனி என்ன சொன்னாலும் வேலைக்காகாது எனத் தோன்றியது. வேறு யாரைப் போய்ப் பார்க்கலாம் என்னும் யோசனை உள்ளுக்குள் ஓடத்துவங்கியிருந்தது. கடைப் பையனைக் கூப்பிட்ட ஈசு, மேலும் ஒரு குவார்ட்டரும் அதற்குண்டான தொடுகறிகளையும் கொண்டுவரச் சொல்லிவிட்டு, என் பக்கம் திரும்பி, “தொழிலாங்க இது..? தெரியாமத்தான் கேக்கறேன்.. இதெல்லாம் ஒரு தொழிலா? காதே செவுடாகற சத்தத்துல தன்னப்போல பையித்தியகாரனாட்ட நாலு செவுத்துக்குள்ளயே சுத்திச்சுத்தி வாரதெல்லா ஒரு பொழப்பா..? இப்படியே இருந்தா உலகமே தெரியாமப் போயிரும். பேசாம நீங்களும் தறிய வித்துப்போட்டு பனியன் கம்பனிக்கே வந்துருங்க.. ரண்டுபேரும் ஒரே கம்பனிக்குப் போகலாம்என்றார்.   


கடைப்பையன் வைத்துவிட்டுப்போன பிராந்தியை ஊற்றிக் குடிக்கத் துவங்கினேன். மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியவில்லை. சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு என்னிடமும் ஒன்றை நீட்டியபடி ஈசண்ணன் கூறினார். “ நீங்கமட்டும் பனியன் கம்பனிக்கு வந்து பாருங்க.. சும்மா என்ன மாதிரி இருக்குதுனு.. எந்தப் பக்கம் திரும்புனாலும் பொண்ணுங்கதான்.. அதுவும்  அத்தனையும் கேரளாப் புள்ளைங்க.  சும்மா சிட்டுப் பறக்கற மாதிரி பறந்துட்டே இருக்கும்பாருங்க.. பாக்கறதுக்கு ரண்டு கண்ணும் பத்தாது. வேலை செய்யற அலுப்பே தெரியாது. நேரம் போறதும் தெரியாது.


சிகரட் புகையை ஆழமாக இழுத்து நிதானமாக வெளியிட்டபடியிருந்தேன். அந்த புள்ளைகளைப் பற்றிய நினைவு ஈசுவுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துவிட்டிருப்பது புரிந்தது. “அதும் அயர்னிங் செக்‌ஷன்ல சூப்பர்வைசரா ஒண்ணு இருக்குது பாருங்க.. அழகுன்னா அழகு அப்படியொரு அழ்கு. சோறு தண்ணிகூட வேண்டீதில்ல.. நாளெல்லாம் பார்த்துட்டே இருக்கலாம் “ என்றார்.


இதற்குமேல் பொறுக்கமுடியாது எனத் தோன்றியது. கொஞ்சம் கோபமாகவே கேட்டேன். “ சும்மா சும்மா புள்ளைங்க இருக்குது.. அழகா இருக்குதுனு ஏன்ணா அதயே சொல்றீங்க..? பொண்ணுங்க இருக்கலாம். அழகாவும் இருக்கலாம். அதனால நமக்கென்ன ஆகப்போகுது? அதுகளுக்கெல்லா கணக்குப்புள்ள மேனேஜர் ஓனர்னு ஆல்ரெடி ஆளுக இருப்பாங்க.. (இந்த இடத்தில் நாமெல்லாம் என்றுதான் வாய் வந்தது. வேண்டுமென்றே தவிர்த்தேன்.) நீங்கெல்லாம் டச் சுங்கூட பண்ணமுடியாது என்றேன்.


அவருக்கு மனம் காயப்பட்டுவிட்டது போல. என்னைவிடவும் கோபமாக திருப்பி கீழ்கண்டவாறு  கேட்டார். பிறகு நான் எந்தப் பதிலும் சொல்லவில்லை. பேசாமல் எழுந்து வந்துவிட்டேன். ஏனெனில் கேள்வி அவ்வளவு கேனத்தனமாக இருந்தது. அல்லது, ஞானத்தனமாக.

“என்ன மனுசனுங்க நீங்க..? ஒரு புள்ளை அழகா இருக்குதுனு சொன்னா உடனே நம்முளுக்கு ஆகுமானு கேக்கறதா..? அழகா இருந்தா இருந்துட்டுப் போகட்டும் நம்முளுக்கெதுக்கு ஆகோணம்?



Sunday, 8 January 2017

கயிறு

வனபூஜை சீரோடும் சிறப்போடும் நடந்து கொண்டிருந்தது. சுத்துபத்து பதினெட்டு ஊர்களிலிருந்தும் சனங்கள் வந்தபடியேயிருந்தனர்.மெயின் ரோட்டிலிருந்து கோயிலுக்குப் போகும் மண்பாதையின் இரு புறங்களிலும் தற்காலிகக் கடைகள் விரிக்கப்பட்டிருந்தன.கும்பிட்டு வெளிவந்த பக்தகோடிகள் நுகர்வோர்களாகி பேரம் பேசியபடியிருந்தனர்.ஸ்டேண்டில் வண்டியை நிறுத்தி டோக்கனைப் பெற்றுக்கொண்ட லோகநாதன்,வெளியே வந்தான். மனைவி காத்திருந்தாள்.இருவரும் கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தனர்.

ஒதைச்சங்கிலிக்கூட இல்லாமல், வெறும் தாலிக்கயிறு மட்டுமே பூண்ட கழுத்துடன் மனைவி உடன் வந்துகொண்டிருப்பதை நினைக்க, லோகுவுக்கு மனம் என்னவோ செய்தது, அவளின் உறவுக்காரர்கள் யாரேனும் பார்த்து விட்டால், தன்னை இளப்பமாக நினைத்துக் கொள்வார்களே என்ற அச்சம் உண்டானது.யார் கண்ணிலும் பட்டுவிடாமல் சீக்கிரமே சாமி கும்பிட்டுவிட்டு கிளம்பிவிடத் திட்டமிட்டான்.

நேற்று, முருங்கைக் காய்களை சாக்கில் போட்டுத் தைத்துக் கொண்டிருக்கும்போது மனைவியிடம் கூறினான். “ நீயும் கெளம்பு வேணி.. திருப்பூர் போயிட்டு வரலாம்.

நான் எதுக்கு..? முருங்கக்காய் விக்க ஒரு ஆள் பத்தாதா..?
நீயும் வந்தா.. அப்படியே கவரிங் கடைக்குப் போய், உனக்கொரு சங்கிலியும் வாங்கிக்கலாம்னு பார்த்தேன். கோயில் விஷேசத்துக்குப் போகணுமில்ல..

கவரிங்கெல்லாம் வேண்டாம். கார்த்திகை மாசம் சொன்னபடி, வெங்காயம் வித்ததும் எனக்கு அடகுல இருக்குற நகையெல்லாம் மீட்டுக் குடுத்துருங்க..

கண்டிப்பா மீட்டுரலாம் . வெலை சம்பல்ங்கிறதால ஏவாரிக இப்ப வர்றேன், அப்ப வர்றேன்னு இழுத்துட்டு இருக்கறாங்க.நிலமையைப் பார்த்தா இன்னும் ஒரு வாரத்துக்கு இப்படியேதான் இருக்கும்போல இருக்குது.பட்டறையில் கெடக்கும் வெங்காயம் காட்டைவிட்டுப் போனதும், நகையை திருப்பிரலாம்.

கவரிங் நகைக்கு ஒப்புக்கொண்டால், அடகிலிருப்பது மீட்கப்படாது என நினைத்தோ என்னவோ, நீலவேணி தீர்மானமாக மறுத்தாள்.அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நாளைக்கு கோயில் விசேசத்துக்கு இப்படியே வந்துக்கறேன். வெங்காயம் வித்ததும் நீங்க என் நகைய மீட்டுத்தந்துருங்க.. போதும்.
சாமி சந்நிதி இருக்கும் உட்பிரகார நுழைவு வாயில்முன் பெண்கள் கூட்டமாக நின்றிருந்தனர். உள்ளே பெண்கள் நுழைய அனுமதி இல்லை. மறு வருடம் இதே விசேஷத்துக்கு , கழுத்து நிறைய நகைகளை அணிவித்து , மனைவியைக் கூட்டிவர விரும்புவதாகவும், அதற்கு அருள்புரிய வேண்டுமெனவும் வேண்டிக் கொண்டு வெளியே வந்தான்.
முன்பு நீலவேணி நின்றிருந்த இடத்தில் இப்போது வேறு பெண்கள் நின்று கொண்டிருந்தனர். சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான். நீலவேணியின் முகம் எங்கும் தட்டுப்படவில்லை.ஒருவேளை குகைச்சாமி சந்நிதிக்குப் போயிருக்கலாம் எனத் தோன்றியது. தெற்கே நடக்கத் துவங்கினான்.

அன்னதானப் பந்தலுக்கு மேபுறத்தே வட்டப்பாறையருகே , நீலவேணி நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. அவள் யாருடன் நின்று பேசிக்கொண்டிருக்கிறாள் என்பது புத்திக்குப் புலனாகியது. லலிதாதான். சட்டென்று கூட்டத்துக்குள் தன்னை மறைத்துக் கொண்டான். அவ்விதமாகவே வந்து சாவடித் திண்ணையில் அமர்ந்தான்.

‘ கருமம் புடிச்சவள். இவள் எங்கே இங்கு வந்து தொலைத்தாள்..? வெறுங்கழுத்தோடு கோயிலுக்கு வந்திருக்கும் நீலவேணி அவள் சொந்தக்காரர்களின் கண்களில் பட்டிருந்தாலாவது பரவாயில்லை. போயும்போயும் இந்த திமிர் பிடித்தவளின் கண்களில் பட்டுவிட்டாளே…

நினைத்திருப்பாள். ‘நல்லவேளை தப்பித்தோம். இல்லையென்றாள் நம் பொழப்பும் இப்படித்தான் ஆகியிருக்குமென..லலிதா, இந்நேரம் நகைகள் மினுங்கும் தன் கழுத்தையும், வெறும் சரடு மட்டுமே தொங்கிக் கொண்டிருக்கும் நீலவேணியின் கழுத்தையும், மாறிமாறிப் பார்த்தபடி நினைத்துக் கொண்டிருப்பாள்.

திக்பிரமை பிடித்திருந்தவன்போல் அமர்ந்திருந்தான். மனதின் அடியாழத்திலிருந்து நீர்க்குமிழிகளைப் போல, தவிர்க்கவே முடியாதபடி லலிதாவின் ஞாபகங்கள் மேலெழும்பி வரத்துவங்கின.

அது தமிழ் சினிமாவில் நாயகர்களும் நாயகிகளும், பார்த்துக் கொள்ளாமலும் ,பேசிக்கொள்ளாமலும், காதலித்துக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருந்த காலம். லோகு அப்பொழுது காபித்தூள் வியபாரம் செய்து கொண்டிருந்தான்.

காபிக் கொட்டைகளை வாங்கி அரைத்து, சிக்கரி கலந்து பேக் பண்ணி, ஊர் ஊராகப் போய் வீடு வீடாகப் பொட்டலங்களைப் போட்டுக்கொண்டிருந்தான். அப்படி வியபார நிமித்தம் போய்வந்த வீடுகளில் லலிதாவின் வீடும் ஒன்றாக இருந்தது. லலிதா பதின் பருவத்துக் குமரியாக, கொடுவாய் அரசு பள்ளிக் கூடத்தில், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவியாக இருந்தாள். சந்தர்ப்பம் இருவரையும் காதலரென்றாக்கியது. சந்தர்ப்பவாதம் அக்காதலை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது.

விஷயம் கேள்விப் பட்டதும் துடித்துப்போன லோகு, லலிதாவை தனியாகச் சந்தித்துப் பேச முயற்சித்தான். முடியாமல் போனது. மாப்பிள்ளை பெரிய இடம் என்றும், திருப்பூரில் பனியன் கம்பனி முதலாளி என்றும், அங்கே பாலாறும் தேனாறும் பல்கிப் பெருகி ஓடுவதாகவும் சொன்னார்கள். வெறுத்துப்போன லோகநாதன் காறித்துப்பினான். பிறகு லலிதாவின் நினைவு வரும்போதெல்லாம் காறித்துப்புவது அவன் வழக்கமாகவே ஆனது.

பகலும் இரவும் வந்து வந்து போனது. நீலவேணி மனைவியானாள். வியபாரத்தை விடுத்து லோகு விவசாயம் பார்க்கத் துவங்கினான். மனைவியின் ஊருக்குப் போகும் நேர்வழிப்பாதை லலிதாவின் ஊர் வழியாகச் சென்றது. நேர் வழியைத் தவிர்த்து மனைவியின் ஊருக்குப் போய்வர சுற்றுவழிப் பாதையையே பயன்படுத்தினான். ஏன் என்று கேட்ட நீலவேணியிடம் ஒருநாள் உண்மையைச் சொல்லிக் கரைந்தான்.

“பரவாயில்லை விடுங்க.. இதெல்லாம் சாதாரண விஷயம்…என்று அணைத்துக்கொண்ட நீலவேணி , பின் சாதாரணமாகக் கூறினாள். “ லலிதா, என் கிளாஸ் மேட்தான்..!

டேய் மாப்ள… இங்க வந்து ஏன் உட்கார்ந்துக்கிட்டே..?தறிக்குடோன் பழனிச்சாமியின் குரல் லோகுவை சுய நினைவுக்குக் கொண்டு வந்தது. அவரிடமே கெஞ்சும் தொனியில் கேட்டான்…
நீலவேணி குகைச்சாமி கோயில்லயோ.. அன்னதானப் பந்தல்லயோ இருப்பா.  சீக்கிரமா வரச்சொல்லுங்க. வெங்காய ஏவாரி தோட்டம்வந்து வெயிட் பண்ணீட்டு இருக்கறாராமா… இப்பத்தான் போன் பண்ணுனாரு… நான்போய் வண்டிய எடுத்துட்டு நிக்கறேன். அவள நேரா ஸ்டேண்டுக்கே வரச்சொல்லீருங்க…

அதுக்கென்ன மாப்ளே.. எங்கிருந்தாலும் தேடிப்புடிச்சுச் சொல்லிடறேன்..


தோட்டம் வந்து சேர்ந்தனர். வெங்காய வியபாரியைக் காணாத நீலவேணி லோகுவிடம் கேட்டாள். “ ஏவாரி ஆளுகளோடவும் , லாரியோடவும் தோட்டத்துல காத்துட்டிருக்கறதாச் சொன்னீங்கன்னு அவர் சொன்னாரே…?

பொய் சொன்னேன்..

சீறினாள். “என்னது? பொய்யா?

ஆமா.. வெறுஞ் சரட்ட மட்டும் தொங்கவுட்டுட்டு, நீ கோயில்ப்பூராஞ் சுத்திவந்து, கண்டவங்களோடயெல்லாம் பல்லிளிச்சுப் பேசிக்கிட்டு, என் மானத்த வாங்கறது புடிக்கல.. அதான் சீக்கிரமா வந்து தொலையட்டும்னு பொய் சொன்னேன்.

வட்டப் பாறையருகே ,லலிதாவோடு நின்று பேசிக் கொண்டிருக்கையில், தெற்கே வந்து கொண்டிருந்த லோகு, தங்களைப் பார்த்ததும் சட்டென கூட்டத்துக்குள் பதுங்கி மறைந்துகொண்ட காட்சி நீலவேணிக்கு ஞாபகம் வந்தது. அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஏய்.. இப்ப எதுக்கு இப்படிச் சிரிக்கறே..?

சிரிக்காம என்ன செய்யறது..? நீங்க் நினைக்கற மாதிரியெல்லா ஒண்ணும் இல்ல..

குழப்பத்துடன் பார்த்தான். நீலவேணி புன்னகைத்தபடியே கூறினாள்.

“நீங்க நினைக்கற மாதிரியெல்லாம் ஒண்ணுமில்லே.. அவ கழுத்திலேயும் வெறும் கயிறுதான் தொங்கீட்டிருந்தது. 




Saturday, 7 January 2017

வெயிலின் ஒளி…

அரசு மேல்நிலைப் பள்ளியைத் தாண்டியதும் வலது புறமாகப் பிரிந்து செல்லும் பாதையில் வண்டியைத் திருப்புமாறு ரத்னவேல் பண்டாரம் கூறினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் கைகாட்டிய திசைகளிலெல்லாம் மோட்டார் சைக்கிளை விட்டபடியிருக்கிறேன். நாங்கள் போய்ப் பார்க்கும் வீடுகள் பூட்டப்பட்டிருந்தன. இல்லையேல் நாங்கள் தேடிப்போன நபர்மட்டும் இல்லாததுவாய் ,வேறு உறுப்பினர்களைக் கொண்டதுவாய் இருந்தது. நாங்கள் கடைசியாய்ப் போய்ப் பார்த்த இடத்தில் மேல்சட்டையணியாத ஒரு சிறுவன் சணல் சாக்கு மூட்டையிலிருந்த வேலாங்காய்களை, பந்தற்காலில் கட்டியிருந்த வெள்ளாட்டுக் குட்டிக்கு  போட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய அம்மா ஒரு சடங்கு வீட்டிற்கு வேலைக்குப் போயிருப்பதாகவும் அதே தெருவில் வசிக்கும் ஒரு சமையல்காரரின் பெயரைச்சொல்லி, அவர்வந்து கூட்டிப்போய்விட்டதாகவும் கூறினான். ஏமாற்றமும் சலிப்புமடைந்த ரத்னவேல் பண்டாரம் மேல் துண்டினால் வேர்வை வழியும் முகத்தையும் புறங்கழுத்தையும் துடைத்தபடியே , “ ஈஸ்வரங்கோயிலுக்கிட்ட ஒருத்தன் இருக்கான்.. அவனாவது இருக்கானோ என்னவோ.. போய்ப்பார்க்கலாம் வாங்கஎன்றார்.

இருபுறமும் கடைகளையுடைய அந்தப் பாதையில் சற்று தூரம் சென்றதும் அதன் வலப்பக்கமாக கிராம நிர்வாக அலுவலகமும், ஊராட்சிமன்றக் கட்டிடமும், வீதியானது வலதுபுறமாகத் திரும்பிச் செல்லும் அந்த வளைவில், அரசு ஆரம்பப் பள்ளிக்கூடமும் இருந்தது. வளைவில் திரும்புகையில் வண்டியை நிறுத்தச்சொன்ன ரத்னவேல் பண்டாரம் இறங்கி பள்ளிக்கூடத்தின் வாயிற்கதவை நோக்கி நடக்கலானார். அந்த இடம் சிறு மைதானம் போலவும் அதன் வடக்கு மற்றும் கிழக்கு மூலைகளில் இரண்டு கோயில்களை உடையதாகவும் இருந்தது. கோயிலின் கோபுரக் கலசங்களையெல்லாம் தாண்டி மேலே உயரத்திற்கு வந்திருந்த சூரியனின் ஒளி மைதானமெங்கும் சலனமற்றதுவாய்த் தேங்கியிருந்தது. பள்ளியின் முன்புறச் சுற்றுச்சுவரையொட்டி வளர்ந்திருந்த வேப்பமரம் அதன் அளவுக்கு தரையிலும் காம்பவுண்டு சுவற்றின் மீதும் வடிவமற்றதொரு வடிவத்தில் தன் நிழலைப் படரவிட்டிருந்தது. ஒருவன் உட்கார்ந்துகொண்டிருந்தான். கறுப்பும் வெள்ளையுமான நிறத்தில் ஒரு நாய் படுத்துக் கிடந்தது.

சற்று நேரத்திற்கு முன்னர் வேப்பமர நிழல் படர்ந்திருக்கவேண்டும் என அனுமானிக்கக்கூடிய இடத்தில், பள்ளியின் வாயிற்கதவையொட்டி அதன் சுற்றுச் சுவரில் சாய்ந்தபடி அந்தப் பெண் அமர்ந்துகொண்டிருந்தாள். பாவாடையும் தாவணியும் அணிந்திருந்தாள். தாவணியின் மாராப்பு கயிறுபோல் சுருண்டு நெஞ்சுக்கூட்டின் மேலேறிச்சென்று இடது தோளின் மறுபுறம் கீழிறங்கியிருந்தது. ஜாக்கெட்டில் மார்பகங்களுக்கென்று வடிவமைக்கப் பட்டிருக்கும் அந்தப் பகுதி உப்பிப் பருத்திருபதற்குப் பதில் வற்றிப்போயிருந்த அவளின் நெஞ்சுக்கூட்டை வெறுமனே போர்த்தி, உள்ளீடற்றதுவாய் கசங்கியும் சுருங்கியுமிருந்தது. சூம்பிய கால்கள் பாவாடைக்குள் முடங்கிக்கிடக்க , அழுக்குமெண்ணெய்ப்பிசுக்குமேறிய பழைய தலையணையை சுவரொட்டி நிறுத்தி வைத்திருப்பதைப்போல அவளின் உருவம் இருந்தது. ரத்னவேல் பண்டாரத்தைக்கண்டதும் தரையில் ஊன்றப்பட்ட இரண்டு கைகளுக்கு நடுவே மடித்த நிலையிலிருக்கும் சூம்பிய கால்களையுடைய உடல் தரைபடாமல் ஊஞ்சலாட சற்றே முன்னகர்ந்து வந்தாள்.

“லட்சுமி ஏன் இங்கவந்து உட்கார்ந்துக்கிட்ட…?

புள்ளக்கி மதியச்சாப்பாடு கொண்டுட்டு வந்தேன்.தலை திருப்பி சுவரடியிலிருந்த ஒயர்க்கூடையைக் காட்டிய லட்சுமி “ அய்யன் எதுக்கு வந்திருக்குது ஏதாச்சும் சோலியா?என்றாள்.

“சோலிதான். பங்காரு வூட்லயா? பெரிய காரியம் ஒண்னு. கூட்டீட்டுப் போகலாம்னு வந்தேன்.

“வூட்லதான். காலைலகூட எஸ்வி புரத்தாளு வந்து கூப்புட்டான். நாந்தான் வேண்டாம்னு நிப்பாட்டிப்புட்டேன்.
ஏம்மா… பங்காரு உடம்புக்கு சுகமில்லையா..?
அதெல்லாம் ஒண்ணுமில்லை அய்யன் . போனவாரம் அந்தாளு கறிவிருந்து ஒண்ணுக்கு வேலைக்குக் கூட்டீட்டுப் போனான். குடிகாரக் கம்மனாட்டிக குடிச்சுப்போட்டு நாய் பீ திங்கறாப்ல தின்னுபோட்டு எச்செல எடுக்கிறவந்தானேனு இந்த மனுசன ரொம்ப கேவலமா நடத்தீருக்காங்க. ராத்திரிவந்து ஓன்னு அழுகை. சோறுங்கூட திங்காம சுருண்டு படுத்துக்குச்சு. அவனுக அப்படிப் பேசுனப்பவே அந்தாளு போயி தட்டிக் கேட்டுருக்கணுமா கூடாதா? அவந்தானே கூட்டீட்டுப் போனான். அவன நம்பித்தானே என் ஊட்டுக்காரன அனுப்பி வெச்சேன். எதுவுமே தெரியாதவம்மாதிரி கம்முனு இருந்துக்கிட்டானாம். எனக்கு மட்டும் கால் நல்லா இருந்திருந்தா அப்பவே கிளம்பிப்போயி எகத்தாளம் பேசுனவன் சங்கையெல்லாம் கடிச்சுத் துப்பீருப்பேன். நாந்தான் கால் இருந்தும் இல்லாத மொண்டியாப் போயிட்டனே.. மரியாதை குடுக்காதவன் எவன் வந்தாலும் அனுப்பறதில்லீனு காறித்துப்பீட்டன். அதான் இன்னிக்கு வந்து கூப்பிட்டப்ப வாரதுக்கில்லீனு முடிவாச் சொல்லிவிட்டேன்என்றாள்.

பங்காரு வீட்டிலிருக்கிறான் வேலைக்கு எங்கும் செல்லவில்லை என்பதே ரத்னவேல் பண்டாரத்திற்கு ஆசுவாசத்தையும் நிம்மதியையும் கொடுத்திருக்க வேண்டும். மிகவும் தன்மையான குரலில் லட்சுமியிடம் பேசினார். “இது பாரு லட்சுமி யாரோ எப்படியோ போகட்டும். இதுவரைக்கும் உன் ஊட்டுக்காரன நான் எத்தனை எடத்துக்கு வேலைக்கு கூட்டீட்டுப் போயிருக்கறேன்.? எங்கியுமே யாருமே ஒரு எடத்துல கூட மனசு நோகறமாதிரி பேசுனது கெடையாது. பேசறதுக்குத்தான் நான் உட்ருவனா என்ன? பங்காருவ மட்டுமல்ல. எங்கூட வேலைசெய்யிற எந்தத் தொழிலாளியையுமே , விஷேசத்து வூட்டுக்காரங்களோ காரியத்து வூட்டுக்காரங்களோ தப்பா பேசறதுக்கு நான் அனுமதிச்சது கெடையாது. அப்படி யேதாச்சும் நடந்துச்சுனா பாதியிலேயே அடுப்ப அணச்சுப்போட்டு வெளியே வந்துருவேனேயொழிய அவனுக மாதிரிய்ந்ல்லாம் கண்டுக்காம இருக்க மாட்டேன்.என்னப்பத்தி உனக்குத் தெரியும்தானே?

உங்களப்பத்தித் தெரியாதா அய்யன்?இதுவரைக்கும் உங்ககூட அனுப்பினதுல எந்தச் சங்கடமும் உண்டானதில்ல. இனிமேலும் சங்கடம் வந்திரக்கூடாதுனுதான் முன்னெச்சிரிக்கையாச் சொல்லிவெச்சேன். நீங்க தாராளமாக் கூட்டீட்டுப் போங்க , இருங்க உடனே வரச்சொல்றேன்.”  என்றவள் வேப்பமரத்து நிழலில் உட்கார்ந்திருந்தவனைப் பார்த்து “ யேய்… அது வூட்ல இருக்கும், நாஞ்சொன்னேன்னு வரச்சொல்லு…  கிராக்கி வந்திருக்குது போகணும்னு உடனே வரச்சொல்லு.. ம் சீக்கிரம் போ.என்று ஏவினாள்.

மேற்படியான உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் நான் எதுவும் பேசாதவனாய் அந்தப் பெண்ணையே கவனித்துக் கொண்டிருந்தேன்.  எதிரே இருப்பவர்கள் ஆண்கள் என்றும், அவர்கள் முன் இருக்கும் தான் ஒரு பெண் என்றும் ,  தன் மாராப்பு விலகியுள்ளது என்பது பற்றிய பிரக்ஞையும் அவள் இல்லாதவளாய் இருப்பது ஆச்சரியத்தை உண்டாக்கிற்று. பொருட்படுத்தப்படாமையும் புறக்கணிப்பும் வசீகரிக்கும் வனப்புகளேதுமற்ற அந்த உடலின் மேல் புழுதிபோல் படிந்து அவளின் உணர்வுகளை மரத்துப்போகச் செய்துவிட்டதோ எனத் தோன்றியது. யாரையும் கவர்ந்துவிடக்கூடிய அழகோ  வசீகரித்துவிடக்கூடிய வனப்போ அற்றதுவாய் அந்த உடல் இருக்கும் அதே வேளையில் , யாராலும் கவர்ந்துவிட முடியாததாய் எந்த அழகினாலும் வசியம் செய்துவிட முடியாததாய் அவளிடம் ஒரு தன்மை இருக்கிறது எனவும் தோன்றிற்று.

நிழலில் உட்கார்ந்திருந்தவன் எழுந்து வேட்டியை உதறிக் கட்டிக்கொண்டு நடக்கத்துவங்கினான். கொஞ்ச தூரம் வடக்கே நட்ந்து கோயிலையொட்டிய திருப்பத்தில் திரும்ப அவனின் உருவம் பார்வையிலிருந்து மறைந்தது. வெயிலின் ஒளி திரையென விரிந்து கிடக்கும் அப்பாதையின் திருப்பத்தில் , இன்னும் சற்று நேரத்தில் தோன்றப்போகும் பங்காருவைக் காணும் ஆவல் கூடிக்கொண்டேயிருந்தது.