அரசு மேல்நிலைப் பள்ளியைத் தாண்டியதும்
வலது புறமாகப் பிரிந்து செல்லும் பாதையில் வண்டியைத் திருப்புமாறு ரத்னவேல் பண்டாரம்
கூறினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் கைகாட்டிய திசைகளிலெல்லாம் மோட்டார் சைக்கிளை
விட்டபடியிருக்கிறேன். நாங்கள் போய்ப் பார்க்கும் வீடுகள் பூட்டப்பட்டிருந்தன. இல்லையேல்
நாங்கள் தேடிப்போன நபர்மட்டும் இல்லாததுவாய் ,வேறு உறுப்பினர்களைக் கொண்டதுவாய் இருந்தது.
நாங்கள் கடைசியாய்ப்
போய்ப் பார்த்த இடத்தில் மேல்சட்டையணியாத ஒரு சிறுவன் சணல் சாக்கு மூட்டையிலிருந்த
வேலாங்காய்களை, பந்தற்காலில் கட்டியிருந்த வெள்ளாட்டுக் குட்டிக்கு போட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய அம்மா ஒரு சடங்கு
வீட்டிற்கு வேலைக்குப் போயிருப்பதாகவும் அதே தெருவில் வசிக்கும் ஒரு சமையல்காரரின்
பெயரைச்சொல்லி, அவர்வந்து கூட்டிப்போய்விட்டதாகவும் கூறினான். ஏமாற்றமும் சலிப்புமடைந்த
ரத்னவேல் பண்டாரம் மேல் துண்டினால் வேர்வை வழியும் முகத்தையும் புறங்கழுத்தையும் துடைத்தபடியே
, “ ஈஸ்வரங்கோயிலுக்கிட்ட ஒருத்தன் இருக்கான்.. அவனாவது இருக்கானோ என்னவோ.. போய்ப்பார்க்கலாம்
வாங்க” என்றார்.
இருபுறமும்
கடைகளையுடைய அந்தப் பாதையில் சற்று தூரம் சென்றதும் அதன் வலப்பக்கமாக கிராம நிர்வாக
அலுவலகமும், ஊராட்சிமன்றக் கட்டிடமும், வீதியானது வலதுபுறமாகத் திரும்பிச் செல்லும்
அந்த வளைவில், அரசு ஆரம்பப் பள்ளிக்கூடமும் இருந்தது. வளைவில் திரும்புகையில் வண்டியை
நிறுத்தச்சொன்ன ரத்னவேல் பண்டாரம் இறங்கி பள்ளிக்கூடத்தின் வாயிற்கதவை நோக்கி நடக்கலானார்.
அந்த இடம் சிறு மைதானம் போலவும் அதன் வடக்கு மற்றும் கிழக்கு மூலைகளில் இரண்டு கோயில்களை
உடையதாகவும் இருந்தது. கோயிலின் கோபுரக் கலசங்களையெல்லாம் தாண்டி மேலே உயரத்திற்கு
வந்திருந்த சூரியனின் ஒளி மைதானமெங்கும் சலனமற்றதுவாய்த் தேங்கியிருந்தது. பள்ளியின்
முன்புறச் சுற்றுச்சுவரையொட்டி வளர்ந்திருந்த வேப்பமரம் அதன் அளவுக்கு தரையிலும் காம்பவுண்டு
சுவற்றின் மீதும் வடிவமற்றதொரு வடிவத்தில் தன் நிழலைப் படரவிட்டிருந்தது. ஒருவன் உட்கார்ந்துகொண்டிருந்தான்.
கறுப்பும் வெள்ளையுமான நிறத்தில் ஒரு நாய் படுத்துக் கிடந்தது.
சற்று
நேரத்திற்கு முன்னர் வேப்பமர நிழல் படர்ந்திருக்கவேண்டும் என அனுமானிக்கக்கூடிய இடத்தில்,
பள்ளியின் வாயிற்கதவையொட்டி அதன் சுற்றுச் சுவரில் சாய்ந்தபடி அந்தப் பெண் அமர்ந்துகொண்டிருந்தாள்.
பாவாடையும் தாவணியும் அணிந்திருந்தாள். தாவணியின் மாராப்பு கயிறுபோல் சுருண்டு நெஞ்சுக்கூட்டின்
மேலேறிச்சென்று இடது தோளின் மறுபுறம் கீழிறங்கியிருந்தது. ஜாக்கெட்டில் மார்பகங்களுக்கென்று
வடிவமைக்கப் பட்டிருக்கும் அந்தப் பகுதி உப்பிப் பருத்திருபதற்குப் பதில் வற்றிப்போயிருந்த
அவளின் நெஞ்சுக்கூட்டை வெறுமனே போர்த்தி, உள்ளீடற்றதுவாய் கசங்கியும் சுருங்கியுமிருந்தது.
சூம்பிய கால்கள் பாவாடைக்குள் முடங்கிக்கிடக்க , அழுக்குமெண்ணெய்ப்பிசுக்குமேறிய பழைய
தலையணையை சுவரொட்டி நிறுத்தி வைத்திருப்பதைப்போல அவளின் உருவம் இருந்தது. ரத்னவேல்
பண்டாரத்தைக்கண்டதும் தரையில் ஊன்றப்பட்ட இரண்டு கைகளுக்கு நடுவே மடித்த நிலையிலிருக்கும்
சூம்பிய கால்களையுடைய உடல் தரைபடாமல் ஊஞ்சலாட சற்றே முன்னகர்ந்து வந்தாள்.
“லட்சுமி
ஏன் இங்கவந்து உட்கார்ந்துக்கிட்ட…?”
“ புள்ளக்கி மதியச்சாப்பாடு கொண்டுட்டு
வந்தேன்.” தலை திருப்பி சுவரடியிலிருந்த
ஒயர்க்கூடையைக் காட்டிய லட்சுமி “ அய்யன் எதுக்கு வந்திருக்குது ஏதாச்சும் சோலியா?” என்றாள்.
“சோலிதான்.
பங்காரு வூட்லயா? பெரிய காரியம் ஒண்னு. கூட்டீட்டுப் போகலாம்னு வந்தேன்.”
“வூட்லதான்.
காலைலகூட எஸ்வி புரத்தாளு வந்து கூப்புட்டான். நாந்தான் வேண்டாம்னு நிப்பாட்டிப்புட்டேன்.”
“ஏம்மா… பங்காரு உடம்புக்கு சுகமில்லையா..?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை அய்யன்
. போனவாரம் அந்தாளு கறிவிருந்து ஒண்ணுக்கு வேலைக்குக் கூட்டீட்டுப் போனான். குடிகாரக்
கம்மனாட்டிக குடிச்சுப்போட்டு நாய் பீ திங்கறாப்ல தின்னுபோட்டு எச்செல எடுக்கிறவந்தானேனு
இந்த மனுசன ரொம்ப கேவலமா நடத்தீருக்காங்க. ராத்திரிவந்து ஓன்னு அழுகை. சோறுங்கூட திங்காம
சுருண்டு படுத்துக்குச்சு. அவனுக அப்படிப் பேசுனப்பவே அந்தாளு போயி தட்டிக் கேட்டுருக்கணுமா
கூடாதா? அவந்தானே கூட்டீட்டுப் போனான். அவன நம்பித்தானே என் ஊட்டுக்காரன அனுப்பி வெச்சேன்.
எதுவுமே தெரியாதவம்மாதிரி கம்முனு இருந்துக்கிட்டானாம். எனக்கு மட்டும் கால் நல்லா
இருந்திருந்தா அப்பவே கிளம்பிப்போயி எகத்தாளம் பேசுனவன் சங்கையெல்லாம் கடிச்சுத் துப்பீருப்பேன்.
நாந்தான் கால் இருந்தும் இல்லாத மொண்டியாப் போயிட்டனே.. மரியாதை குடுக்காதவன் எவன்
வந்தாலும் அனுப்பறதில்லீனு காறித்துப்பீட்டன். அதான் இன்னிக்கு வந்து கூப்பிட்டப்ப
வாரதுக்கில்லீனு முடிவாச் சொல்லிவிட்டேன்”
என்றாள்.
பங்காரு
வீட்டிலிருக்கிறான் வேலைக்கு எங்கும் செல்லவில்லை என்பதே ரத்னவேல் பண்டாரத்திற்கு ஆசுவாசத்தையும்
நிம்மதியையும் கொடுத்திருக்க வேண்டும். மிகவும் தன்மையான குரலில் லட்சுமியிடம் பேசினார்.
“இது பாரு லட்சுமி யாரோ எப்படியோ போகட்டும். இதுவரைக்கும் உன் ஊட்டுக்காரன நான் எத்தனை
எடத்துக்கு வேலைக்கு கூட்டீட்டுப் போயிருக்கறேன்.? எங்கியுமே யாருமே ஒரு எடத்துல கூட
மனசு நோகறமாதிரி பேசுனது கெடையாது. பேசறதுக்குத்தான் நான் உட்ருவனா என்ன? பங்காருவ
மட்டுமல்ல. எங்கூட வேலைசெய்யிற எந்தத் தொழிலாளியையுமே , விஷேசத்து வூட்டுக்காரங்களோ
காரியத்து வூட்டுக்காரங்களோ தப்பா பேசறதுக்கு நான் அனுமதிச்சது கெடையாது. அப்படி யேதாச்சும்
நடந்துச்சுனா பாதியிலேயே அடுப்ப அணச்சுப்போட்டு வெளியே வந்துருவேனேயொழிய அவனுக மாதிரிய்ந்ல்லாம்
கண்டுக்காம இருக்க மாட்டேன்.என்னப்பத்தி உனக்குத் தெரியும்தானே?”
“உங்களப்பத்தித் தெரியாதா அய்யன்?இதுவரைக்கும்
உங்ககூட அனுப்பினதுல எந்தச் சங்கடமும் உண்டானதில்ல. இனிமேலும் சங்கடம் வந்திரக்கூடாதுனுதான்
முன்னெச்சிரிக்கையாச் சொல்லிவெச்சேன். நீங்க தாராளமாக் கூட்டீட்டுப் போங்க , இருங்க
உடனே வரச்சொல்றேன்.” என்றவள் வேப்பமரத்து நிழலில் உட்கார்ந்திருந்தவனைப் பார்த்து
“ யேய்… அது வூட்ல இருக்கும், நாஞ்சொன்னேன்னு வரச்சொல்லு… கிராக்கி வந்திருக்குது போகணும்னு உடனே வரச்சொல்லு..
ம் சீக்கிரம் போ.” என்று ஏவினாள்.
மேற்படியான
உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் நான் எதுவும் பேசாதவனாய் அந்தப் பெண்ணையே
கவனித்துக் கொண்டிருந்தேன். எதிரே இருப்பவர்கள்
ஆண்கள் என்றும், அவர்கள் முன் இருக்கும் தான் ஒரு பெண் என்றும் , தன் மாராப்பு விலகியுள்ளது என்பது பற்றிய பிரக்ஞையும்
அவள் இல்லாதவளாய் இருப்பது ஆச்சரியத்தை உண்டாக்கிற்று. பொருட்படுத்தப்படாமையும் புறக்கணிப்பும்
வசீகரிக்கும் வனப்புகளேதுமற்ற அந்த உடலின் மேல் புழுதிபோல் படிந்து அவளின் உணர்வுகளை
மரத்துப்போகச் செய்துவிட்டதோ எனத் தோன்றியது. யாரையும் கவர்ந்துவிடக்கூடிய அழகோ வசீகரித்துவிடக்கூடிய வனப்போ அற்றதுவாய் அந்த உடல்
இருக்கும் அதே வேளையில் , யாராலும் கவர்ந்துவிட முடியாததாய் எந்த அழகினாலும் வசியம்
செய்துவிட முடியாததாய் அவளிடம் ஒரு தன்மை இருக்கிறது எனவும் தோன்றிற்று.
நிழலில்
உட்கார்ந்திருந்தவன் எழுந்து வேட்டியை உதறிக் கட்டிக்கொண்டு நடக்கத்துவங்கினான். கொஞ்ச
தூரம் வடக்கே நட்ந்து கோயிலையொட்டிய திருப்பத்தில் திரும்ப அவனின் உருவம் பார்வையிலிருந்து
மறைந்தது. வெயிலின் ஒளி திரையென விரிந்து கிடக்கும் அப்பாதையின் திருப்பத்தில் , இன்னும்
சற்று நேரத்தில் தோன்றப்போகும் பங்காருவைக் காணும் ஆவல் கூடிக்கொண்டேயிருந்தது.
No comments:
Post a Comment