Thursday, 6 April 2017

கடன் மீண்டார் நெஞ்சம்…

தட்டி எழுப்பியதுபோல் சரியான நேரத்திற்கு விழித்துக் கொண்டிருந்தேன். மணி ஐந்தை நெருங்கியபடியிருந்தது. ஒன்றுக்கொன்று தேய்த்து சூடாக்கிய உள்ளங்கைகளால் முகத்தைத் துடைத்த வண்ணம் எழுந்து உட்கார்ந்தேன். நிலைப்படியில் தலைவைத்து அம்மா படுத்திருந்த இடம் காலியாக இருந்தது. சாயுங்கால சூரியஒளி வெண்டிலேட்டரின் வழியே கசிந்து , பொன்கம்பிகளாய் எதிர்சுவரில் பதிந்திருந்தது. வெளியே விளையாடிக் கொண்டிருந்தவர்களின் உற்சாகமான கத்தல்கள், சற்றுநேரத்திற்கொருமுறையேன காதுகளில் விழுந்தது.


எட்டி மேஜையின் மேலிருந்த அலைபேசியை எடுத்தேன். தவறிய அழைப்பாக கதிரின் பெயர் பதிவாகியிருந்தது. மூன்று பதினைந்துக்கு கூப்பிட்டுள்ளான். இனி விடுமுறை நாளானதும் சேவல்களைத் பிடித்துக்கொண்டு கட்டுக்காடுகளைத் தேடி ஓடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும்.வாரம் ஒருமுறைதான் என்றபோதிலும் மது அருந்துவதையும் தவிர்த்துவிடவேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

சில மணிநேரம் ஆழ்ந்து உறங்கியதன் காரணமாய் பார்வை குளிர்ந்திருந்தது. கண்களின் பள்ளங்கள் மேவி, கன்னங்கள் உப்பி பூரித்திருப்பதுபோல் உணர்ந்தேன்.  குளித்து, பவுடர் பூசியதும் ,முகம் பொலிவுகூடி, தன் பிராயத்தில் சில வருடங்கள் குறைந்ததுவாய் இளமையுறும் என தோன்றியது. கருப்புசாமியுடன் அவ்வீட்டிற்குப்போக பெண் உட்பட அவ்வீட்டார் அனைவருமே இன்றைய என் முகத்தின் ஒளிர்வில் வசீகரிக்கப் பட்டுவிடுவார்கள் என நினைத்துக் கொண்டேன்.


குளியல் முடிந்து பேண்ட் சட்டை தரித்து வெளியே வந்தவன் கதவுசாத்தி நாதாங்கியை மாட்டினேன். வாசல்படிக்கு பக்கவாட்டில் சுவரோரமாக என் மோட்டார்சைக்கிள் நிறுத்தப் பட்டிருந்தது.  ஒன்றையொன்று பார்த்துக்கொள்ளும் கதவுகளுடன் இருபுறமும் வீடுகளிருக்க, நடுவே நீண்டபடிபோகும் அந்த உள்வாசலில் பைக்கை பின்னோக்கி உருட்டியவாறே தெருவாசலுக்கு கொண்டு வந்தேன்.  வேப்பமரத்தடியில் அம்மாவும் மற்ற குடித்தன பெண்கள் சிலரும் உட்கார்ந்து கொண்டிருந்தனர். பனியன் வேஸ்ட் துண்டுத் துணியில் நூல் பிரித்தபடியிருந்த அம்மாவிடம், கதவுக்கு வெறுமனே நாதாங்கியை மட்டும் வைத்திருப்பதாகச் சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.


திரில் அமர்ந்திருந்தவரிடம் பேசிகொண்டிருந்த கருப்பசாமி என்னைக் கண்டதும் வரவேற்றார். ” வாங்க தம்பி.. வாங்க.. கொஞ்ச நேரங்கழிச்சு நானே கூப்பிடலாம்னு இருந்தேன் . நீங்களே வந்துட்டீங்க” என்றார். சுவரோரமாய் இருந்த நாற்காலியைக் காட்டி உட்காரும்படி கூறினார். மேஜையின்மேல் விரித்து வைக்கப்பட்ட நிலையில் ஜாதகம் ஒன்றும், வெள்ளைதாளும் பஞ்சாங்கமும் பேனாவும் இருந்தன. வெள்ளைத்தாளின் மேல்முகத்தில் குருவே துணை என்றும் அதற்குக் கீழே சில கணக்குகளும் எழுதப்பட்டிருந்தது.



எதிரமர்ந்திருக்கும் அம்மனிதரின் முகக் குறிப்பிலிருந்து என் வருகையின் தொந்தரவை உணர முடிந்தது. “இருக்கட்டும்ங்ண்ணா.. நீங்க பாருங்க.. நா அப்புறமா வர்றேன்” என சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.


சூரியன் மறைந்திருந்தது. கதிர்களற்ற அந்தியின் வெளிச்சத்தில் தெருக் காட்சிகள் ரம்மியம் பூண்டிருந்தது. வீடுகளின்முன் நீர்தெளித்துக் கோலம் போட்டிருந்தனர். ஜோதிட நிலையத்தையொட்டியே இடமும் வலமுமாக டீக்கடையொன்றும் சிறு மளிகைக் கடையும் இருந்தது. மளிகைக் கடையின் முன்புறமாய் வடகிழக்கில் வேப்பங்கொம்பு வளர்ந்திருந்தது. வேரிலிருந்து மூன்றடி உயரத்துக்கு மேலே மரத்தின் தண்டுப்பகுதியில் , சூலாயுதம் ஒன்றைப் பதித்திருந்தனர். சிவப்புப்பட்டு சுற்றப்பட்டு சந்தனமும் குங்குமமும் வைக்கப்பட்டிருந்தது.


கடைக்கு அடுத்துள்ள வீட்டின் நடைதிறந்து ஒரு அம்மாள் வெளிப்பட்டாள். எண்ணைப்பாட்டில் ஊதுபத்தி பஞ்சுத்திரி தீப்பெட்டி முதலியன அவள் கைகளில் இருந்தது. தேநீரை அருந்தி முடித்திருந்த நான் சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டேன். வெளிச்சம் குறைந்து கொண்டிருந்தது. வீடுகளின் ஜன்னல்கள் ஒளியுறத் துவங்கின. நான் பார்த்த கண்மும் ஒரு ஜன்னல் வெளிச்சம்பெறத் துவங்கிய கணமும் மிகச்சரியாக ஒத்துப்போக இரவு விழித்துக் கொண்டதாய்ப்பட்டது.


வேப்பமரத்தின் அடியில் கூண்டுபோன்ற வடிவத்தில் சிறுசதுர வாய்கொண்ட விளக்குக்கூடம் வைக்கப் பட்டிருந்தது. அடுக்கப்பட்டிருந்த உப்பு மூட்டைகளின் நிழல், மரத்தின் அடிப்பகுதியெங்கும் அந்த விளக்குமாடத்தின்மீதும் அடர்த்தியாய்க் கவிந்திருந்தது. கவிந்த அடர்நிழல், வாழ்வின் புதிரான நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளுதல் குறித்தான மனித மனதுள் உண்டாகும் பயம் எனவும், மாடத்தினுள் ஒளிர்ந்தபடியிருக்கும் அகலின் சுடர் , பயத்திலிருந்து மனதை விடுவித்து வழிநடத்தி அழைத்துச் செல்லும் நம்பிக்கையின் ஒற்றை விரல் எனவும் தோன்றிற்று.


புகைத்து முடித்திருந்தேன் ஜோதிடநிலையத்தின் முன்பகக்ம் போடப் பட்டிருக்கும் நீள மரப்பெஞ்சில் வந்தமர்ந்தேன். உள்ளே நடைபெற்றவண்னமிருந்த உரையாடல்கள் செவிகளில் விழுந்தது.

“சரி.. வேற ஏதாச்சும் சந்தேகம் இருந்தாக் கேளுங்க..?’

“வேற என்ன.. கறவைமாட்டு லோனு பயிர் லோனுனு நிறைய வாங்கி வெச்சுருக்கேன். போனதடவை எலக்சன் சமயத்துல பூராக் கடனையும் தள்ளுபடி செஞ்சாங்க. இப்பவும் தள்ளுபடி உண்டுனு பேசிக்கிறாங்க. இன்னும் நாலு மாசத்துல எலக்சன் வரப்போகுது.. ஜாதகப்படி நமக்கு சர்க்காரு சகாயம் கெடைக்க வாய்ப்பிருக்குதுங்ளா?”





அவ்விடத்தின் நிலக்காட்சிகளை கண்ணுற்றபடி அமர்ந்திருந்தேன். கடன், தள்ளுபடி என்ற வார்த்தைகள் கவனத்தை உள்ளே திருப்பியது. அரசாங்க சலுகைகள் பெற்றுவிடப் போகும் ஆவலுடன் அந்த மனிதர் ஜோதிடரின் முகத்தையே பார்த்தபடியிருந்தார்.  கருப்புசாமியின் பேனா மும்முரமாய் கணக்குகளைப் போட்டபடியிருந்தது. தலையைத் திருப்பிக் கொண்டேன்.

இருள் முற்றியிருந்தது. என் கடந்தகாலம் இருளேபோல மனமெங்கும் கவியத் துவங்கிற்று.

பூர்வீகமாய் கொஞ்சம் நிலம் இருந்தது. கிணறுகள் அற்ற வெறும் காடு. ஆடுகளை மேய்த்தும் மாடுகளை வளர்த்தும் அப்பா ஜீவித்தார். பருவமழைக் காலத்தில் மஞ்சட்சோளம் கொள்ளு நரிப்பயிறுகளை விதைத்து தீவனம் செய்து கொண்டிருந்தார். அப்பாரய்யனின் காலத்தில் மானாவாரிப் பயிர்கள் விளைந்த புன்செய் நிலங்கள் பலவும் , கிண்று கண்டு, தண்ணீர் கண்டு , பம்புசெட் மோட்டார் கண்டு, முப்போகம் விளையும் நன்செய் பூமிகளாய் அப்பாவின் காலத்தில் மாறியிருந்தது. மேலும் பல காடுகள் மாறிக்கொண்டும் இருந்தது.


நான் வளரிளஞ்சிறுவனாய் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்தேன்.எங்களுடைய காடும் தோட்டமாக மாறவேன்டுமென்பதே , என் அன்றைய கனவாகவும் ஆசையாகவும் இருந்தது.  விடுமுறை நாட்களில் ஆடுகளிடமிருந்து பிரித்த குட்டிகளை மேய்த்தபடியே , நானும் அக்காவும் வேப்பமர நிழலில் கிணறுவெட்டி குண்டுமணிக்கொடியில் கரண்ட் இழுத்து மோட்டார் வைத்து , எங்கள் தோட்டத்தின் சின்னஞ்சிறு பாத்திகளுக்கு நீர்பாய்ச்சி விளையாடுவோம்.விளையாடிய அவ்விளையாட்டுகள் கனவுக்கு மேலும் ஈரம் சேர்த்தது.

ஒருநாள், குட்டிகளை விற்றுக் கிடத்த பணத்துக்கு நகை வாங்குவதா.. அல்லது வேறு ஏதேனும் செய்யலாமா என அப்பாவும் அம்மாவும் பேசிக் கொண்டிருந்தனர். நான் யோசனை கூறினேன்.

“அப்பா.. நாமளும் ஒரு கிணறு வெட்டலாமப்பா..

ம்.. வெட்டலாம். அக்கா கல்யாணம் முடியட்டும் . பிறகு வெட்டலாம்.

அக்கா இன்னும் சின்னப் புள்ளதானே.. முதலில் கிணறு வெட்டலாம். வெள்ளாமை எடுத்துச் சம்பாதிச்சு பிறகு அக்காவை நல்ல மாப்பிள்ளையாய்ப் பார்த்து நிறைய நகைபோட்டு கட்டிக் குடுக்கலாம்.


பெருமை பொங்க அப்பா என்னைப் பார்த்தார்.

“பழமை பெரிய மனுசனாட்டத்தான் பேசறே.. நாளைக்குப் பொழைக்கறதும் என்னைப் போலில்லாம பெரிய மனுசனாப் பொழச்சீனா சந்தோசந்தான்.



கால்வயிற்றுக் கஞ்சி குடித்தாலும் கடன் வாங்காது குடிக்கவேண்டுமென்பது அப்பாவின் கொள்கையாகவே இருந்தது. ஆடுமாடுகளின் மூலம் கிடைத்த வருமானத்தில் குடும்பம் நடத்தி, மிச்சம் பிடித்து, சேர்த்துவைத்து அக்காவுக்குத் திருமணமும் பண்ணினார். கிணறு வெட்ட வேண்டும் என்னும் என் கனவு நிறைவேற நீண்ட காலம் ஆகுமெனத் தோன்றியது.


கல்லூரியில்  படிக்குமளவுக்கு சிறப்பான மதிப்பெண் தகுதியோ , பொருளாதாரத் தகுதியோ இல்லாததன் காரணமாய், பனியன் கம்பனிக்கு பஸ் ஏறினேன். சம்பாதனையைச் சேமித்தேன். அப்பாவின் வருமானம் குடும்பத்தைப் பேணியது. கிணறும் தோட்டமுமான என் தீரா நெடுங்கனவு சீக்கிரமே நிறைவேறிவிடும் என தோன்றியது.


வாழ்வு ஒரு தடைதாண்டும் ஓட்டம். அதுவும் கண்ணைக் கட்டிக்கொண்டு ஓடவேண்டும். ஒருநாள் ஒருபொழுதில் தடுக்கிவிழுந்த அப்பாவைப் பக்கவாதம் முடக்கியது. பட்டி ஆடுகளையெல்லாம்விற்று வைத்தியம் பார்த்தோம். காலம் குட்டிகளையும்விற்று ஈமக்கிரியைகள் செய்ய வைத்தது


அம்மாவும் நானுமேயான குடும்பத்தில் நான் பண்ணாட்டுக்கு வந்திருந்தேன். கையில் ஐம்பதாயிரம் இருந்தது. இருபதுமுழம் கிணறுவெட்ட பேசி விட்டேன். பதினெட்டாவது முழத்தில் கிணறு தண்ணீரைக் கண்டது. இனி சாமிக்கு நீர்வார்த்துவிட்டுத்தான் மேற்கொண்டு வெட்டவேண்டுமென போயமார்கள் சென்றுவிட்டிருந்தனர். சூரியன் உச்சியில் ஒளிர்ந்த்துகொண்டிருந்த அவ்வொளி மதியத்தில் கயிறுகட்டி கிணற்றுக்குள் இறங்கினேன். ஈரம்பூசிக் கொண்டிருந்த பக்கச் சுவர்கள் கனிந்து மினுங்க, வடிந்திருந்த நீர் வெட்டுக் குழியில் தேங்கியிருந்தது. உறங்கும் குழந்தையென அசைவற்றிருந்த அச்சின்னஞ்சிறு நீர்த் தேக்கத்தை , தொடவும் மனமற்று காலமும் பொழுதும் மறந்தவனாய் பார்த்தபடியேயிருந்தேன்.


கிணற்றில் தண்ணீர் ஆன செய்தியை அக்காவுக்கு தெரியப் படுத்தியிருந்தோம். எவர்சில்வர் குடமும் பொங்கல்பானையும் புதுசாக வாங்கிக் கொண்டு வந்திருந்தாள். உள்ளூரிலும் முக்கியப் பட்டவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். எவர்சில்வர்குடம் நிறைய கிணற்றுநீர் நிரப்பிக் கொண்டுபோய் குல தெய்வத்தைக் குளிப்பாட்டினோம். அபிஷேக ஆராதனைகள் செய்து பொங்கலும் வைக்கப் பட்டது. பொங்கல் பொங்கி வடக்கே விழுந்தது. ‘வடக்க வுழுந்தா வரவும்பாங்க.. இனி உன் மகன் கொள்ளை கொள்ளையா சம்பாதிப்பான் பாரு என்று வந்திருந்தவர்கள் கூற, என் அம்மாவின் கண்கள் பெரிதுவந்து மினுங்கியது.


முதலில் பேசிவிட்ட அளவுக்கு கிணறு இருபது முழமும் வெட்டப் பட்டிருந்தது. விவசாயம் செய்யுமளவுக்கு தண்ணீர் வேண்டுமானால் இன்னும் இருபது முழமாவது வெட்ட வேண்டும் என்றனர். நாற்பதுமுழம் வெட்டி சைடுபோரும் நிலப்போரும் ஓட்டிவிட்டால் எந்த வறட்சிக்கும் இரண்டு ஏக்கர் பாய்க்கலாம் எனத் தோன்றியது. கையிருப்பு கரைந்திருந்தது. மேற்கொண்டு பணத்துக்கு என்ன செய்வதென யோசித்து வங்கிகளை நாடினேன்.


பாட்டன் முப்பாட்டன் காலம்முதல் அப்பாவின் காலம் வரை, எவர் கைக்கும் போகாது பத்திரமாயிருந்த நிலத்தின் பத்திரங்களைக் கொண்டுபோய், நிலவளவங்கியில் வைத்து அடமானப் பத்திரத்தில் கையெழுத்திட்டேன். நாலு தவணைகளில் எடுத்துக் கொள்ளும் வண்ணம் மொத்தம் இரண்டு லட்ச ரூபாய்க்கு காசோலைகள் வந்தது.


முதல் ஆறு மாதத்திற்கு வட்டியை மட்டும் கட்ட வேண்டும்.  பிறகு வரும் ஒவ்வொரு வருடத்திற்கும் அசலையும் சேர்த்து, வருடத்திற்கு நாற்பத்திஐயாயிரமென ஏழு வருடங்களுக்குச் செலுத்தி கடனை அடைக்கத் திட்டம் தந்தனர். அதுசமயம் பக்கத்துத் தோட்டத்தில் பங்காளி ஒருவர் முப்பதே செண்ட் பரப்பில் தக்காளி நடவிட்டு, விலையும் வெள்ளாமையும் ஒத்துக்கொள்ள ஐம்பதே நாளில் ஒரு லட்சம் கண்டிருந்தார். ஏழு வருடங்கள் என்னத்துக்கு.. இரண்டே வருடங்களில் முழுக் கடனையும் அடைத்து, பத்திர்த்தை மீட்டுவிடலாம் எனும் நம்பிக்கையுடன் வங்கியிலிருந்து வெளிப்பட்டேன்.


கிணற்றை நாற்பது முழம் வெட்டினேன். நிலப்போரும் சைடு போரும் ஓட்டினேன். மின் இணைப்பு பெறப்பட்டு மோட்டாரும் வைக்கப்பட்டது. மேட்டுப் பகுதியாயிருந்த தெற்கு மேற்கு மூலைக்கெல்லாம் தண்ணீரைக் கொண்டு செல்ல, பை லைனும் போட வேண்டியிருந்தது. எல்லாமும் பண்னி சாவகாசமாய்க் கணக்குப் பார்த்தேன். வங்கியில்போக வெளியே உறவு முறை வகையிலும் ஐம்பதாயிரத்துக்குமேல் கடன் உண்டாகியிருந்தது.


முதல் வெள்ளாமையாய் அடைபயிறு போடுவதுதான் முறை என பெரியவர்கள் கூறினர்.  சாலை அய்யனிடம்போக பொன்னேர்பூட்ட உகந்த நாளை குறித்துக் கொடுத்தார்.  கம்பை வாங்கிவந்து காடெல்லாம் விதைத்தேன். காலங்காலமாய் பட்டி காத்துக் கிடந்த காடு என்பதால், விதைகள் முளைத்து பயிர் சிலிர்த்துக்கொண்டு நின்றது. குளிர்ச்சியும் பசுமையுமாய் தாள்கள் நீள, பச்சைக் கடலெனவும், கம்பளமெனவும் காற்றில் அலையாடியது.


அது பெரிய வெங்காயத்திற்கான பட்டமாக இருந்தது. எல்லா தோட்டங்களிலும் வெங்காயம் நடவிட்டிருந்தனர். நிலவிய தட்பவெப்பம் வெள்ளாமைக்கு ஒத்துப் போனது. கர்நாடகா ஆந்திர மாநிலப் பயிர்கள் மழையினால் பாதிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரிய வெக்காயம் இங்கே காட்டுக்குள்ளேயே கிலோ பனிரண்டு ரூபாய்வரை விலைபோனது. ஒரு ஏக்கர் நடவிட்டிருந்தவர்கள்கூட முட்டுவழிச் செலவுபோக ஒன்றரை லட்சம்வரை லாபம் பார்த்திருந்தனர்.

பொழுதுகிளம்பி வேலிக்குமேலே வந்திருந்தது. புடைகட்டும் தருணத்தில் அறுக்கப்பட்டு அரிஅரியாய் கம்பந்தட்டுகள்  பாத்திகளில் கிடந்தது. பனிப்பதம், கட்டுவதற்கு தோதாக இருந்தது. கத்தைகளாகக்கட்டி குச்சுகளில் எடுத்து நிறுத்தியபடியிருந்தேன். கம்பங்கட்டையில் எந்த வெள்ளாமையும் நன்றாகவரும் என்பதால் அடுத்து யாது செய்யலாம் என மனம் யோசித்தபடியிருந்தது.  செட்டிபாளையத்தைச் சேர்ந்த பெரியகாட்டு முருகேசன் வந்திருந்தான். கண்ணபுரம் தேருக்கு புடிக்கலாம்போல இரண்டு காளைகள் வளர்ப்பதாகவும், அவைகளுக்குப் போட கம்பந்தட்டு வேண்டுமெனவும் கேட்டான். புடைகட்டும் பக்குவத்தில் அறுக்கப்பட்ட கம்பம்பயிர்கள் காளைகளுக்கு நல்ல திறத்தையும் மேனி மினுமினுப்பையும் தருமென்பதால் , தேர்க்காட்டில் காளைகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று சொன்னான். என்னிடமும் இரண்டு கன்றுகள் இருந்தது. அவைகளுக்குப்போக மீதியைத் தருவதாக ஒப்புக்கொண்டேன்.  எங்களின் உரையாடல் மற்ற விசயங்களுக்கு வந்தது.


“இந்த தோட்டம் ஒரு மூணு ஏக்கர் இருக்குங்களா..?

ம்.. கெணறு கட்டுத்தரை சாலையெல்லாம்போக மூணு ஏக்கர் சேரும்

ஆமா..எதுக்காக  கெணத்து நெறையத் தண்ணீய வெச்சுக்கிட்டு பூராக்காட்ல்யும் கம்பப் போட்டீங்க..?

புதுத் தோட்டம். மொத வெள்ளாமை. அடபயிறு போடறதுதான் நல்லதுனாங்க. அதான்..

அடப் போங்கணா.. சம்பிரதாயத்துக்கு கிணத்தடீல மட்டும் கொஞ்சம் கம்பு போட்டுட்டு மீதி பூரா வெங்காயத்த நட்ருந்தீங்கனா.. இன்னிக்கு எங்கியோ போயிருப்பீங்க. அதுவும் உங்குளுது பட்டிகாத்து காரம் ஏறிக் கெடந்த காடு. ஏக்கராவுக்கு இருபதாயிரம் கிலோ சுத்தமா ஆயிருக்கும். ரண்டு ஏக்கர் வெச்சுருந்தாக்கூட  நாப்பதாயிரம் கிலோ எடுத்திருக்கலாம். கிலோ பன்னெண்டு ரூபாய்னா கணக்குப்போட்டு பாருங்க.. எவ்வளவு ஆயிருக்கும்னு.. வெங்காயம் இனி இந்த வெலைக்கு எந்தக் காலத்துல விக்கப் போகுதோ.. அப்படியே வித்தாலும் அப்ப நம்ம கெந்த்துல தண்ணி இருக்கோணம். வெள்ளாமை ஒத்துக்கோணம். அநியாயமா ஏமாந்திட்டீங்களேண்ணா..


பேசாமல் வெங்காயம் வைத்திருக்கலாம் என தோன்றிற்று. நடைமுறை சம்பிரதாயம் என கம்பைப் பயிரிட்டு பெரிய வருமானத்தை இழந்துவிட்டோமே என ஏமாற்றமாக இருந்தது. இனி காலத்துக்கும் வெள்ளாமை எடுக்கத்தானே போகிறோம் அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம் என சமாதானப் படுத்திக் கொண்டேன். காட்டை தயார்செய்து நிலக்கடலையும் தக்காளியும் பயிரிட்டேன், இரண்டிலும் ஓரளவுக்கு ஆதாயம் கிடைத்தது.


கிடைத்த வருமானத்தில் வங்கிக்கு செலுத்தவேண்டிய ஆறுமாத வட்டியையும் ஒரே தவணையில் செலுத்தினேன். வெளிக்கடன்களுக்கான வட்டிகளையும் பைசல் செய்தேன். மீதிப்பணத்தை குடும்பச் செலவிற்கும் அடுத்த போகத்துக்கான முட்டுவழிச் செலவுக்கும் வைத்துக்கொண்டேன். பெரியவெங்காயப் பட்டத்திற்காக காத்திருந்தேன்.


அந்த வருடத்தில் வழக்கத்துக்கு அதிகமான பரப்பில் பெல்லாரி வெங்காயம் நடவு விழுந்தது. முந்தைய வருடத்தில் பெரும் லாபம் கண்டவர்கள் காடுமேடெல்லாம் போர்வெல்போட்டு தண்ணீரைக் கண்டு வெள்ளாமையை உண்டாக்கியிருந்தனர். விவசாயமே ஆகாதென தரிசாய்ப் போட்டுவிட்டுச் சென்றிருந்தவர்களும் கூட, திரும்பிவந்து நிலத்தை சீர்செய்து வெங்காயம் நடவிட்டிருந்தனர். நான் இரண்டு ஏக்கர் நடவுபோட்டிருந்தேன்.  குறைந்தபட்சம் ஏக்கருக்கு ஒரு லட்சம் கிடைத்தாலும்கூட , இரண்டு லட்சம் லாபம் பார்த்துவிடலாம் என மனம் கணக்குப் போட்டது.


பயிர்கள் குரம்பை கட்டும் பக்குவத்தில் இருந்தன. மேகாற்று ஆரம்பித்திருந்தது. கோடைமழை பொய்த்திருந்தது. காற்றுக்காலத்தில் நீர்மட்டம் குறைந்துவிடும் என முன்பே தெரிந்திருந்தும்கூட, கோடைமழை பெய்யும், சமாளித்துவிடலாம் என பரவடியாய் நடவிட்டிருந்தவர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். போர்வெல் லாரிகள் ஊருக்குள் வரத்துவங்கின. கனத்த இரும்பு உருளைகள் நிலத்தை துளையிடும் ஓசை ஏதேனுமொரு மூலையிலிருந்து கேட்டபடியேயிருந்தது.

பக்கத்துத் தோட்டத்திலும் 6 ½ இன்ஞ்ச் போர்வெல் வண்டியை வரவழைத்து ஆழ்குழாய் கிண்று தோண்டினர். குழி அறுநூறு அடி வரைக்கும் போனது. அதற்குமேல் ஓட்டமுடியாத அளவுக்கு தண்ணீர் பொத்து கொப்பளித்தது. அடுத்த ஒரே வாரத்தில் என்னுடைய கிணற்றின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது. மனம் பதறியது. ஊரெல்லாம் புகுந்து புறப்பட்ட போர்வெல் லாரி கடைசியாக என் தோட்டத்திற்குள்ளும் நுழைந்தது.   


போர்போட்டு கம்பரஸர் மாட்டிய வகையில் அந்தப் போகத்திற்கு கூடுதலாக எழுபதாயிரம் செலவாகியிருந்தது. அக்கா அவளுடைய நகைகளைக் கழட்டிக் குடுத்திருந்தாள். கூட்டுறவு வங்கியில் வைத்து பணம் வாங்கி கூடுதல் செலவைச் சமாளித்திருந்தேன். வெங்காய அறுவடை ஆரம்பித்திருந்தது. வடமாநிலப் பயிர்கள் மழைக்குத் தப்பிவிட்டதாகவும், காய்வரத்து அதிகமிருப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருந்தன. நல்ல காய்கள் காட்டுக்குள் கிலோ ஐந்து ரூபாய்வரை விலை போயின.


முட்டுவழிச்செலவுகள் போக என் கையில் முப்பதாயிரம் எஞ்சியிருந்தது. ஒரு வருடத் தவணைத் தொகை நாற்பத்தி ஐந்தாயிரத்திற்குப் பதில் வெறும் ஐந்தாயிரம் ரூபாயைக் கொண்டுபோய் வங்கியில் கட்டினேன். அடுத்த போக வெள்ளாமை எடுத்து நகைகளை மீட்டுத் தருவதாக அக்காவிடம்போய் சொல்லிவிட்டு வந்தேன். உறவு வகையில் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக வெளிகடன்களுக்கான வட்டிகளைக் குடுத்து முடித்திருந்தேன். வெங்காயப்பணம் முழுவதுமாகக் கரைந்திருந்தது. குடும்பச் செலவு முட்டுவழிச் செலவு என மேலும் செலவுகள் காத்துக் கொண்டிருந்தது. நானும் புதிய கடன்களை பெறத் துவங்கியிருந்தேன்.


நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமான மாய விளையாட்டு ஆரம்பமாகத் துவங்கியிருந்தது.  வேளாண் விளைபொருட்களுக்கான விலை நிலையற்றதாகவும் , முன்னரே அறிந்துணரமுடியாத புதிர்த்தன்மையுடையதாகவும் இருந்தது. ரசாயன உரங்களையும் ம்ருந்துகளையும் பயன்படுத்துவது அதிகரித்திருந்தது. அதற்கேற்றாற்போல் நோய்களும் , புழு பூச்சிகளின் தாக்குதல்களும் புதுசுபுதுசாக உண்டாகிக் கொண்டும் இருந்தது. வெள்ளாமை செய்பவர்களே விதைகளையும் உற்பத்தி செய்துகொள்ளும் வழக்கம் மாறியிருந்தது.   பூச்சிமருந்துக் கம்பனிகளே விதைகளையும் தயாரித்து விதவிதமான பெயர்களையும் சூட்டி விற்பனைக்கு கொண்டுவரத் துவங்கின. பெரும்பகுதி வருமானம் உரக் கடைகளின் வழியாக அந்தக் கம்ப்னிகளுக்கே போய்ச் சேர்ந்துகொண்டிருந்தது.




வங்கியிலிருந்து கடிதங்கள் வந்தபடியேயிருந்தது. தவணைத்தொகை, வட்டி, கட்டத்தவறியதன் காரணமாய்ப் போடப்பட்ட தண்டவட்டி, அபராதவட்டி, ஆகமொத்தம் நிலுவையிலிருக்கும் கடன் தொகை என பட்டியலிடப்பட்ட பதிவுத் தபால்கள் வந்து பயமுறுத்திற்று. நடைமுறையிலிருக்கும் சிக்கல்களைத்தாண்டி எடுத்த வருமானம், குடும்பச் செலவிற்கும் , தேதியானதும் வந்துநிற்கும் வெளிக் கடன்காரர்களின் வட்டிக்குமே சரியாகப் போய்க்கொண்டிருந்தது. வங்கி வருடக்கணக்கு முடிவிற்கு வரும் கடைசி மற்றும் அதற்கு முந்தைய மாதங்களில், வங்கி அதிகாரிகள் காரை எடுத்துக்கொண்டு நேரிலும் வரத் துவங்கினர். இல்லாத பொய்களையெல்லாம் சொல்லி எப்படியோ சமாளித்து அனுப்பி வைத்துக் கொண்டிருந்தேன்.


கண்ணுக்கு தெரியாதவிதமாகவே எல்லாப் பாதைகளும் அடைக்கப்பட்டு திடீரென பெரும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டதைப்போல தோன்றிற்று. உரம், பூச்சிமருந்தைப் பயன்படுத்தாமல் ஒரு சோளப்பயிரைக்கூட விளைவிக்க முடியாது என்னும் நிலமை உண்டாகியிருந்தது. அதுவரைக்கும் ஆறுமாதம்வரை கால அவகாசம் கொடுத்து கடனுக்கு சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்த மருந்துக் கம்பனிகள், திடீரென பணத்தைக் கட்டிவிட்டு பிறகு உரம் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள் என உரக் கடைகளுக்கு நிர்ப்பந்தம் கொடுத்தன. அதையே உரக்கடைக்காரர்களும் விவசாயிகளுக்கு நடைமுறைப்படுத்தினர்.


கிணற்றுப்பாசனம் ஆழ்துளைக் கிணற்றுப் பாசனமாக மாறிப் போயிருந்தது. கிணறுகள் மழைக்காலங்களில் மட்டும் கிணறுகளாகவும், மற்றைய காலங்களில் கம்பரஸர் மோட்டார் மூலம் போர்க்குழிகளிலிருந்து எடுக்கப்படும் தண்னீரை தேக்கப் பயன்படும் தொட்டிகளாகவும் ஆகியிருந்தன. போர்க்குழிகளில் நீர் இருப்பினும் இல்லாவிடினும் , இலவச மின்சாரம் கம்பரஸர் மோட்டார்களை இருபத்திநான்கு மணி நேரமும் இயங்க வைத்த படியேயிருந்தது.  திடீரென ஆழ்துளைக் கிணறுகள் காய்ந்து போவதும், புதிதாகத் தோண்டப் படுவதும் வாடிக்கையாய் ஆனது. ஒவ்வொரு போகத்திற்கு முன்பும் உழவு ஓட்டவேண்டும் என்பதைப் போலவே, ஒவ்வொரு கோடையிலும் போர்வெல் போடவேண்டும் என்பதும் வழக்கத்திற்கு வந்திருந்தது.


மழைக்காலம் வெயிற்காலம் காற்றுக்காலமென பருவங்கள் மாறியபடியேயிருந்தது. என் கஷ்டகாலம் மட்டும் தொடர்ந்தது. பிணம் எரிந்த சிதைமேடுகளென சாம்பல்நிற மண்குவிந்த போர்வெல் குழிகள் மேலும்சில தோட்டத்துக்குள் உருவாக்கப்பட்டிருந்தது. நான் கடனால் முழுவதும் பீடிக்கப்பட்டிருந்தேன். வங்கிக்கடன் அளவுக்கே வெளிக்கடன்களும் வளர்ந்திருந்தது.  பால்யத்தின் வேப்பமரநிழலில் விளையாட்டுப் பொருளாகயிருந்து உற்சாகமூட்டிய தோட்டத்துக்கும் கிணற்றுக்கும் என்னையொரு விளையாட்டுப் பொருளென ஆக்கி காலம் உருட்டி விளையாடியது.


விவசாயம் செய்தால் பணம் சம்பாதித்துவிடலாம் என்பதைவிடவும், பணம் இருந்தால்மட்டுமே வேளாண்மை செய்யமுடியும் என்கிற நிலமை உண்டாகியிருந்தது. தண்ணீர் பற்றாக்குறை, நோய்த்தாக்குதல் , விலைகளின் நிலையற்ற தன்மை, போன்றவைகள் போதாதென்று, ஆள் கிடைக்காமையும் பெரும்பிரச்சனையாக உருவெடுத்திருந்தது. பனியன் கம்பனிகளின் பேருந்துகள் ஊருக்குள்ளும் மாதாரிவளவுகளின் இண்டு இடுக்குகளுக்குள்ளும் புகுந்து புறப்பட்டு ஆட்களை அள்ளிக்கொடு போயின. வேலை முடிந்ததும் இரவு வீட்டு வாசற்படியருகிலேயே கொண்டு வந்து இறக்கியும் விட்டன.

நிழலடி வேலையும், கூடுதல் சம்பளமும் , ‘வாங்க போங்கஎனும் மரியாதையான விளிச்சொற்களும் , அவர்களுக்கு புது மலர்ச்சியைக் கொடுக்க காட்டு வேலைக்கு வர மறுத்தனர். வாடகைக்கு மினி ஆட்டோக்களையும், வேன்களையும் அமர்த்திக்கொண்டுபோய் தூரந்தொலைவிலுள்ள ஆட்களை அழைத்துக்கொண்டுவந்து வேலைமுடிந்ததும் திரும்பவும் கொண்டுபோய் விட்டுவிட்டு வர, முட்டுவழிச்செழவு கூடுதலாகி கனத்தது.


பாலத்தினடியே நதியோட்டம்போல காலம் நழுவியோடிக் கொண்டிருந்தது. வங்கிக் கடனுக்கான தவணைக் காலம் முடிந்திருந்தது. சொத்தை ஏலத்தில் விடவும், ஜப்தி செய்யவும் உரிமை வந்துவிட்டதெனவும், குறிப்பிட்ட தேதிக்குள் ஆஜராகி கடனை முழுவதுமாக செலுத்தத் தவறினால், சட்டரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் வங்கியிலிருந்து வக்கீல் நோட்டீஸ் வந்தது.


தொடர்ந்து கிடைக்கப்பெற்ற எதிர்மறை அனுபவங்கள் மனதைச் சோர்வடையச் செய்தது. வெள்ளாமையெடுத்து கடனைக் கட்டிவிட முடியும் எனும் நம்பிக்கையை இழந்திருந்தேன். மொத்தமுள்ல மூன்றரை ஏக்கரில் இர்ண்டு ஏக்கரை மட்டும் விற்று, வங்கிக் கடனை பைசல் செய்து விடுவதெனவும், மீதமுள்ல ஒன்றரை ஏக்கரை வைத்திக்கொண்டு வெளிக்கடன்களை சமாளித்துக்கொள்ளலாம்  என்றும் தோன்றிற்று. சுற்றி நாற்புறமுமுள்ள  ஒருப்பொளிப் பண்னையகாரர்களுக்கு தகவலைக் கூறினேன். ‘ பண்ணையம் புடிக்கற மாதிரியா நெலமை இருக்குது. எங்க நிலமையும் கிட்டத்தட்ட உன்னுடையது போலத்தான். உனக்கு தலைக்குமேல போயிருச்சு .. எங்களுக்கெல்லாம் கழுத்துவரைக்கும் இருக்குது. அவ்வளவுதான் வித்தியாசம்என்றனர்.


“மூட்டப்பூச்சிக்குப் பயந்துட்டு யாராச்சும் வீட்டைக் காலி செய்வாங்களா.. பேங்க்லோன் யாருக்குத்தான் இல்லாம இருக்குது.. நானுங்கூடத்தான் ஐந்துலட்சம் வாங்கி டிராக்டர் எடுத்திருக்கேன். முதல் வருசம் ஒழுங்கா டியூ கட்டுனேன். இந்த ரண்டு வருசமா ரசீதே போடல. தைரியமா இரு. வெள்ளாமை ஒத்துக்கிட்டா ரண்டே போகத்துல எல்லாக் கடனையும் அடச்சிரலாம். அவசரப்பட்டு தோட்டத்த தொலச்சிராத.. மண்ணுப் போனா போனதுதான். மறுபடியும் சம்பாதிக்க முடியாது “ என பக்கத்துத் தோட்டத்தைச் சேர்ந்த சித்தப்பா ஒருவர் புத்தி கூறினார்.


“உங்களுது வேற என்னடது வேற சித்தப்பு.. என் கடனுக்கு டைம் முடிஞ்சு ஓவர்டி ஆயிருச்சு. ஆனா உங்களுக்கெல்லாம் தவணைக்காலமே இன்னும் நாலு வருசம் பாக்கி இருக்குது. பேங்க்காரன் நெனச்சா உங்க சொத்தை என்னவேணா பண்ணலாம்னு வக்கீலே சொல்றாரு


அட அப்படித்தான் சொல்லுவானுக.. சும்மா மெரட்டறதுதான். ஒரு பத்தாயிரத்தத் தூக்கி வக்கீல் டேபிள்ல வெச்சுப்பாரு.. பேங்காரன் எதுவும் பணமுடியாதபடிக்கு ஸ்டே வாங்கித் தாரேன்.. இன்னும் பத்து வருசத்திக்கு கடனக்கட்ட கால அவகாசம் வாங்கித் தாரேன்னு அதே வக்கீல் சொல்வாரு. போ.. போய்த் தைரியமா இரு.. காலம் இப்படியா போயிரும்?



காலம் அப்படியேதான் போய்க்கொண்டிருந்தது. காருமழை பொய்த்து பின்வந்த கோடை காலத்தில் என் நிலமை மேலும் மோசமடைந்திருந்தது. கிணறும் போர்வெல் குழிகளும் காய்ந்தே போயின. தெக்கோட்டு மூலையிலிருந்த ஒரேயொரு போர்க்குழியில் மட்டும் கொஞ்சமாகத் தண்ணீர் இருந்தது. குடிநீருக்கும் ஓரஞ்சாரமாக வைத்திருந்த தென்னம்பிள்ளைகளுக்கு பொய்த்தண்ணி கட்டுவதற்கும் அது சரியாகிக் கொண்டிருந்தது. ஒரு கறவைமாடு மட்டும் இருந்தது. பால் ஊற்றுவதன் காரணமாய்க் கிடைத்த அந்த சொற்ப வருமானத்தைத் தவிர வேறு வரும்படிகள் இல்லாதவனாகவும் அதேசமயம் எல்லாவிதமான செலவுகளையும் பண்ணவேண்டியவனாகவும் இருந்தேன். வெளிக்கடன்களுக்கு வட்டி கட்ட முடியாமல் தொங்கல்விழ ஆரம்பித்தது. பொழுது கிளம்பியதும் வந்துநிற்கும் கடன்காரர்களைச் சமாளித்து அனுப்புவது வழக்கமாகவே ஆகியிருந்தது. வங்கி அதிகாரிகள் சொத்தை ஏலத்திற்கு கொண்டுவந்துவிடுவோமென மிரட்ட, வெளிக் கடன்காரர்களோ மானம் மரியாதையை சந்தி சிரிக்க வைத்துவிடுவோமென மிரட்டத் துவங்கியிருந்தனர்.  நான் பண்ணயத்தை மறுபடியும் விலை சொல்ல ஆரம்பித்திருந்தேன். ஒட்டுமொத்தமாக தோட்டம், கிணறு, நடுவிலிருக்கும் வீடு என சகலத்தையும் கொடுத்துவிடுவதாக புரோக்கர்களிடம்போய் சொல்லி வரத் துவங்கினேன்


பொழுது உச்சியை நோக்கி ஏறியபடியிருந்தது. காற்றோட்டம் நின்று வெய்யில் உக்கிரம் பெற்றிருந்தது. தவிடு வாங்குவதன் பொருட்டு கடைக்குப் போயிருந்தவன், மூட்டையை மொபட்டில் வைத்தபடி திரும்பவும் வந்துகொண்டிருந்தேன். தோட்டத்தின் கடவுக்குள் நுழைகையில் அம்மாவும் அக்காவும் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அக்கா ஊரிலிருந்து வந்திருக்கிறாள் என்பது சற்றே மகிழ்ச்சியைக் கொடுத்தது. என்றாலும் அவள் காட்டுக்குள் திரிவதேபோன்ற சாதாரண சேலையில் வந்து அமர்ந்திருப்பதும், வாசலில் மச்சானின் மொபட்டைக் காணாததும் பயத்தையும் பீதியையும் உண்டு பண்ணியது. அவளது நகைகளை வாங்கிவந்து அடமானத்தில் வைத்திருந்தது மீட்கப்படாமலேயே கிடந்தது. அதுவும் தவிர கணவன் வழி உறவு வகைகளிலிருந்தும் கணிசமான தொகை பெற்றுத் தந்திருந்தாள். அந்தக் கடன்களுக்கும் சில மாதங்களாக வட்டிகட்ட முடியாமல் போயிருந்தது. அதன் காரணமாக குடும்பத்தில் மனச்சங்கடம் உண்டாகி கிளம்பி வந்துவிட்டாளோ என தோன்றியது. அப்படி ஏதாவது எனில் இருக்கும் ஒரேயொரு கறவை மாட்டையும் விற்றாவது அவளது பிரச்சனைகளை தீர்த்துவைத்து விடவேண்டும் என நினைத்துக் கொண்டபடி  அவளை வரவேற்றேன்.

“வாக்கா.. வாவா.. எந்நேரம் வந்தே?

இப்பத்தான் கொஞ்ச நேரம் ஆச்சு

மச்சான்.. தினேஷ்.. எல்லாம் நல்லாயிருக்காங்கள்ல

“ம்..

தவிட்டு மூட்டையைத் தூக்கிக் கொண்டுபோய் சுவரோரமாக நிறுத்தினேன். அக்காவிடம் அடுத்ததாக என்ன கேட்கலாம் என உள்ளே யோசனை ஓடிக்கொண்டிருந்தது. அதற்குள் அம்மாவே பேச ஆரம்பித்திருந்தாள். “ கொசவன் அடுப்பு வாங்கலாம்னு காங்கயம் சந்தைக்கு வந்திருந்தாளாமா..  வந்த எடத்துல உன்னட பேருக்கு கிளி சோசியம் பார்த்திருக்கறா.. சீட்டு செரியில்லாம வந்திருக்குது. உடனே புள்ள பயந்துபோயி பாத்துட்டுப் போலம்னு அப்படியே கிளம்பி வந்துட்டா..



அக்காவின் வருகைக்கு நான் நினைத்த மாதிரியான காரணங்கள் இல்லையென்பது சற்றே ஆறுதலைக் கொடுத்தது. தூண்காலில் சாய்ந்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். அம்மா மதிய சமையலுக்கான வேலைகளை ஆரம்பித்திருந்தாள்.  நான் அக்காவிடம் அவள் குடும்பத்தின் ஷேம சவுக்கியங்களையும், வெள்ளாமை விளைச்சல்களைப் பற்றியும் விசாரித்தபடியிருந்தேன். எங்களின் பேச்சு தொடர்ந்தபடியேயிருந்தது. அவர்கள் வந்து சேர்ந்தனர்.

ஜீப்பும் வேனும் பின்தொடர கடவுக்குள் நுழைந்த வெள்ளை அம்பாசிடர் கார்  வேலா மரத்தினடியே வந்து நின்றது. செய்வதறியாத திகைப்புடனும் அச்சத்துடனும் எழுந்துசென்று  காரிலிருந்து இறங்கிய வங்கி அதிகாரிகளுக்கு வணக்கம் வைத்தேன்.  பணம் புரட்ட செய்து கொண்டிருக்கும் ஏற்பாடுகளையும் , தோட்டத்தை விற்று கடனைக் கட்ட முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லி மேலும் சில வாரங்கள் கால அவகாசம் கேட்டேன். என் குரலில் நடுக்கம் உண்டாகியிருந்தது.


“இப்படியேதான் ஆறு மாசமா சொல்லீட்டிருக்கறே.. நீ எப்ப தோட்டம் வித்து எப்ப கடனக் கட்டறது? உன் கடனுக்கு டைம் முடிஞ்சு ஒரு வருசம் ஆகுது. இன்னும் அஞ்சு பைசாவுக்குக்கூட ரசீது போடல. வசூல் பண்றதுக்காக என்னய்யா நடவடிக்கை எடுத்தீங்க? என்னய்யா பண்றீங்க எல்லாம்னு மேலதிகாரிங்க எங்களை நெம்பறானுங்க.. அதனால தம்பீ.. குறஞ்சது ஒரு இருபத்தி அஞ்சாயிரமாவது கட்டி இன்னிக்கே ஒரு ரசீதப் போடு. மூணு மாசம் என்ன.. ஆறு மாசம் வேணும்னாலும் டைம் தர்றோம்.


இருபது ரூபாய்க்குக்கூட வழியற்றவனாகயிருந்தேன். இருபத்தி ஐயாயிரத்துக்கு எங்கே போக? திரும்பவும் வங்கி அதிகாரிகளிடம் மன்றாடத் தொடங்கினேன். “ சார்.. பொறுத்துக்குங்க சார்.. ஒரு நாலு நாள் அவகாசம் குடுங்க சார்..  தலைய அடமானம் வெச்சாவது ஏற்பாடு பண்ணீட்டுவந்து ரசீது போட்டர்றேன் சார்.. கொஞ்சம் இரக்கங் காட்டுக்க சார்..


அதிகாரிகள் என் குரலை செவிமடுக்க மறுத்தனர். அம்மாவும் என்னோடுசேர்ந்து கெஞ்ச ஆரம்பித்திருந்தாள். ஐயா என்றும் சாமி என்றும் மவராசரே என்றுமான விளிச் சொற்களைப் பயன்படுத்தி அழும் குரலில் கெஞ்சிக் கொண்டிருந்தாள். பந்தலின் காலைப் பிடித்து நின்றபடி, பிரமை பிடித்தவளைப் போல அக்கா எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.


“இங்க பாரு தம்பி.. பணம் இருந்தா ரசீது போடு. இல்லையா பேசாத. இன்னிக்கு பணம் கட்டாத பட்சத்துல ஜப்தி பண்னச் சொல்லி எங்களுக்கு உத்தரவு. இருக்கற பண்ட பாத்திரங்களையெல்லாம் தூக்கீட்டுப் போறோம். நீ நாளைக்கு வருவியோ..  இல்ல நாலுநாள் கழிச்சு வருவியோ.. எப்ப வேணும்னாலும்வந்து ரசீதப் போட்டுட்டு பொருட்களையெல்லாம் மீட்டுக்க.. புரியுதா..?


அம்மாவும் அப்பத்தாளும் வாக்கப்பட்டு வருகையில் சீதனமாய்க் கொண்டுவந்த பித்தளை ஏணங்கள் மூலையில் அடுக்கப்பட்டிருந்தது. இரண்டுபேர்போய் எடுத்துக் கொண்டுவந்து வாசலில் வைத்தனர். ஒருவர் பேப்பரில் குறித்துக் கொண்டிருந்தார். நீர்வழியும் கண்களுடன் சேலைத் தலைப்பால் வாயைப் பொத்தியபடி அம்மா புழுதிக் காட்டுக்குள்போய் அமர்ந்து கொண்டிருந்தாள். வலது உள்ளங்கையால் நெற்றியைத் தாங்கியபடி திராணியற்றவனாய் வாசல்படல் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தேன்.  பறிமுதல் செய்யப்படும் பொருட்களின் பட்டியலில் என் மொபட்டும் சேர்க்கப்பட்டிருந்தது. 

பசித்த பாம்பென வெய்யில் எல்லாவற்றையும் விழுங்கியபடியிருந்தது. பார்வை கண்களிலேயே தேங்கிக் கொள்ள , தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கும் என் முன்னால் வந்து நின்ற அக்கா, நான் தலை நிமிரும் நேரத்திற்குள் கழுத்திலிருந்த அந்த ஒற்றைச் சங்கிலியையும் கழட்டி என் கைகளில் திணித்தாள். இந்தா.. மூணு பவுனு.. என்ன வெலைக்கு போகுமோ போற வெலைக்கு வித்து ரசீதப் போட்டுரு..”  உணர்ச்சிகள் மரத்துப் போன நிலையில் அணு அளவாய் சுருங்கி சிறுத்துப் போயிருந்த என் மனம் வெடித்தது.  என்னிலிருந்து வெளிப்பட்ட பேரழுகையின் ஓலம் அதிகாரிகளை ஸ்தம்பிக்க வைக்க அவர்கள் செய்வதறியாது நின்றனர்.    


இந்த கடன் தொல்லை எனை மட்டுமல்லாது அக்காவின் குடும்பத்தையும்சேர்த்து பாழ்பண்ணிவிடுமோ என்னும் பயம் நாளுக்குநாள் அதிகரித்தபடியேயிருந்தது. முன்னிலும் தீவிரமாக தோட்டத்தை விற்பதற்கான முயற்சிகளில் இறங்கினேன். கொடுவாய் பேருந்து நிறுத்தம் அருகே முடிதிருத்தகம் வைத்திருக்கும் பூபதி தன் பேச்சு சாமார்த்தியத்தின் மூலமாக கேரளாவில் கந்துவட்டித் தொழில் செய்துகொண்டிருக்கும் ஒருவரை கூட்டிக்கொண்டு வந்தான்.

விலை முடிந்திருந்தது. வங்கிக்கடன் அளவுக்கான தொகையை முன் பணமாகப் பெற்றுக் கொள்வது எனவும், பேங்க் லோனை கட்டி பத்திரத்தை மீட்டு கிரயம் எழுதித்தரும் நாளில் மீதித் தொகையை பெற்றுக் கொள்ளலாம் எனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. வரப்போகும் தேர்தலின் காரணமாக அப்போதிருந்த அரசாங்கம் விவசாயக் கடன்களுக்கான அபராதவட்டி தண்டவட்டிகளையெல்லாம் அடியோடு ரத்து செய்தது. அந்தவகையில் எனக்கு ஒரு லட்ச ரூபாய்க்குமேல் மிச்சமாகியது. அதுநாள்வரைக்கும் நிலுவையிலிருந்த வட்டியோடுசேர்த்து வெளிக்கடன்களையெல்லாம் பைசல் செய்ய முற்பட, ‘நீயே பண்ணயத்த வித்து கடங் கட்டறே.. எங்களுக்கு அசல மட்டும் குடுத்தாப் போதும்  வட்டியெல்லாம் வேண்டாமென அவர்களும் கருணை காட்டினர். அந்த வகையில் ஐம்பதாயிரத்திற்குமேல் மிச்சமாகியது. இவ்விதமாக மிச்சமாகிய பணத்துக்கு திருப்பூரில் ஒரு வீட்டை போக்கியத்திற்கு பிடித்தேன். ஊர் உறங்கியபிறகு தட்டுமுட்டு சாமான்களுடன் அம்மாவையும் டெம்போவில் ஏற்றிக்கொண்டு தோட்டத்தைவிட்டு வெளியேறினேன்.


பாட்டன் முப்பாட்டன் காலந்தொட்டு எங்கள் வம்சத்தின் வாழ்வாதாரமாகவும் ஜீவாதாரமாகவும் இருந்துவந்த நிலத்தை இழ்ந்தது வருத்ததை உண்டாக்கவே செய்தது. கோபப்பார்வையும் குதறும் வார்த்தைகளுமாக விடிந்ததும் வந்து நிற்கும் கடன்காரர்களின் தொல்லைகளிலிருந்து விடுபட்டுவிட்டோம் எனும் ஆசுவாசம் அவ்வருத்தத்தை முனைமழுங்கச் செய்து நிம்மதியைத் தந்தது. நான் பனியன் கம்பனிக்குப் போகத் துவங்கியிருந்தேன். வீட்டுவேலை முடிந்த ஓய்வு நேரத்தில் செக்கிங் சென்டர்களிலிருந்துவரும் பனியன்களுக்கு பிசிர்வெட்டி குடுத்தும், வேஸ்ட்டான துண்டுத் துணிகளில் நூல் பிரித்தும், தனக்கான வருமானத்தை அம்மா ஏற்படுத்திக் கொண்டிருந்தாள்.







எங்களின் மொத்த வருமானத்தில் பாதிக்குமேல் மிச்சமாகிக் கொண்டிருந்தது. பைக் ஒன்று வாங்கினேன். நம்பிக்கையான நபர்கள் நடத்தும் ஏலச்சீட்டுகளில் சேர்ந்து சேமிக்கத் துவங்கினேன். ஊரில்நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு அம்மாவுடன் பைக்கில் போய் இறங்க உறவுச் சனங்கள் மத்தியில் என் மதிப்பு ஏறத்துவங்கியிருந்தது. “டவுனுக்குப் போனதுக்கப்பறம் ஆளே பாலீஷ் ஆயிட்டான் பாரு.. தோட்டந் தோட்டம்னு காட்ட நம்பி உக்காந்துக்கிட்டு இருந்தா காலத்துக்கும் கடங்காரனாகவே கஷ்டப்பட வேண்டியதுதான்.. பண்ணயம் போனா போவுதுனு வித்து தலைமுழுகிட்டுப் போனான். அப்பவே அவனப் புடிச்ச பூடை புணியெல்லாம் தொலைஞ்சது. இனி அவனுக்கு முன்னேத்தம்தான். நல்லா இருப்பாம் பாரு..இவ்விதமாக மற்றவர்களின் கருத்துக்களை அறிய நேர்கையில் மகிழ்ச்சியும் பூரிப்பும் அதிகமாகியது. நாளும் பொழுதும் நல்லவிதமாய் நகர்ந்து கொண்டிருக்க என் ஜாதகத்தை புரோக்கர்களிடம் கொடுத்து பெண் தேடத் துவங்கினேன்.


சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்திருந்தது. தண்டவட்டி அபராத வட்டிகளையெல்லாம் ரத்துசெய்து மக்களிடம் ஆளுங்கட்சி பெற்றிருந்த நன்மதிப்பை, தங்கள் பக்கம் திருப்பவேண்டும் என்பதற்காக விவசாயக் கடன்களையெல்லாம் அடியோடு ரத்து செய்வதாக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்த எதிர்க்கட்சி இப்போது ஆளுங்கட்சியாக அரியணை ஏறியது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் நிலவள வங்கிகளில் தரப்பட்ட விவசாயக் கடன்கள் ரத்து செய்யப் படுவதாக அரசாணை வெளியாகியது. இருபத்தி ஐயாயிரத்துக்கு குறைவான கறவைமாட்டுக் கடன் , பயிர்க் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப் பட்டிருக்கும் எனவும், பெரிய அளவிலான விவசாயக் கடன்களை கட்டித்தான் ஆகவேண்டுமெனவும் பேசிக் கொண்டனர். ஆனால் உண்மை வேறாக இருந்தது. விவசாயம் என்ற பெயரில் தரப்பட்டிருந்த எல்லாவிதமான கடன்களும்  தொகை வித்தியாசமில்லாமல் அடியோடு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.


உழவுப்பணிகளுக்காய் என கடன் வாங்கி டிராக்டர் எடுத்திருந்த நிறையப்பேர் தங்களின் டிராக்டர்களை கட்டிடப் பணிகளுக்கும் கட்டுமானப் பணிகளுக்கும் வாடகைக்கு விட்டு, மணிக்கு முந்நூறு முதல் ஐநூறு ரூபாய்வரை சம்பாதித்துக் கொண்டிருந்தனர். லட்சக்கணக்கில் நிலுவையிலிருந்த போதிலும் அவர்களின் கடன்களும் அடியோடு ரத்து செய்யப்பட்டிருந்தது. இதே கூட்டுறவு வங்கிகளில் தோட்டங்காட்டுப் பத்திரங்களை அடமானம் வைத்து, விசைத்தறிக்கூடம் அமைக்கவும், தேங்காய்க் களங்கள் போடவும், கயிறு திரிக்கும் குடோன்கள் அமைக்கவும் கடன் பெற்றிருந்தவர்கள் தாங்களும் தொழிலுக்கு என்பதாக அல்லாமல் விவசாயம் என்ற பெயரில் கடன் வாங்கியிருந்தால் தள்ளுபடி பெற்றிருக்கலாமே என புலம்பத் துவங்கினர். சிறிய விவசாயக் கடன்களைப் பெற்று தள்ளுபடிப் பயனடைந்த பயனாளிகள் , பெரிய கடன்கள் பெறாது போன துரதிர்ஷடம் எண்ணி அங்கலாய்க்கத் துவங்கினர். காட்டை விற்றாவது கடன் முழுவதையும் கட்டி முடித்திருந்த என் போன்றவர்களின் நிலமைதான் கேலிக்குரியதாகவும் மிகவும் பரிதாபத்துக்கு உரியதாகவும் மாறிப் போயிருந்தது.


ம்பீ.. தம்பீ.. யோசனை ரொம்ப பலமா இருக்கே.. எந்திரிச்சு உள்ள வாங்கநினைவுகளில் மூழ்கி ஆழ்ந்திருந்த என்னை , ஜோதிடரின் குரல் மேலே இழுத்துக் கொண்டுவந்தது. ஜாதகம் பார்த்தபடியிருந்த அந்த நபர் போய்விட்டிருந்தார். எழுந்து உள்ளேபோய் கருப்புசாமியின் எதிரே அமர்ந்தேன்.

ம்.. சொல்லுங்க தம்பி.. அப்புறம் என்ன விசேஷம்?


விசேசம் என்னண்ணா.. உங்களப் பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன். தெரிஞ்ச எடத்துல பொண்ணு ஒண்ணு இருக்குது, இன்னிக்குப் போய் பார்த்துட்டு வரலாம்னு சொல்லியிருந்தீங்க..


வாஸ்தவம்தான் தம்பி.. சொல்லியிருந்தேன். ஆனாப் பாருங்க அதுல ஒரு சின்ன சிக்கல் ஆயிருச்சு

ஏண்ணா.. என்னாச்சு?

அந்த பொண்ணோட அப்பாகிட்ட பேசுனேன் தம்பி. பையன் நல்ல பையன். பனியன் கம்பனில பவர்டேபிள் கான்ராக்ட் எடுத்து நிறைய சம்பாதிக்கிறாரு. பைசாகூட கடன் இல்லை. கைவசம் காசு வெச்சுருக்காரு. ஜாதகம் நல்லா பொருந்தி வருது. அப்பிடீன்னல்லாம் எனக்கானளவு எடுத்துச் சொன்னேன் தம்பி. மனுசன் புடியே குடுக்கமாட்டேங்கறாரு.


என்னதான் சொல்றாரு..?”


எல்லாம் சரிங்க சோசியரே.. தோட்டம் தோப்புனு இருக்கற ஜாதகமெல்லாம் எம்பொண்னுக்கு வந்துட்டிருக்குது. நீங்க சொல்ற பையனுக்கு ஊர்ல நிலபுலமெல்லாம் எவ்வளவு இருக்குதுனு கேட்டுச் சொல்லுங்க. பிறகு பேசிக்கலாம்கிறாரு..


எதுவும் பேசத் தோன்றாதவனாய் உட்கார்ந்திருந்தேன். ஏமாற்றத்தின் துக்கத்திலிருப்பதாய் ஜோதிடர் நினைத்துக் கொண்டார்போலும். ஆறுதல் படுத்தும் விதமாக அவரே பேசினார்.


சரி விடுங்க தம்பி, வேறு ஏதாவது பாத்தா போகுது. இதுவே எங்க காலமா இருந்தா உங்களை மாதிரி
பையன்களுக்கெல்லாம் க்யூ வரிசையில பொண்ணு குடுக்க நிப்பாங்க. ஆனா, காலம் இன்னிக்கு அநியாயத்துக்கு மாறிப்போச்சே. அதுவும் உங்க சாதில பொண்ணுங்களுக்கு தட்டுப்பாடு ரொம்பவே
அதிகமா இருக்குது. ஒரு பொண்ணு ஜாதகம் வந்தா ஒம்போது மாப்பிள்ளைக ஜாதகம் வருது. நிலமை இப்படி இருக்கறதாலதான் பொண்ணுவீட்டுக்காரங்க ஓவரா கிராக்கி பண்றாங்க. கவலய வுடுங்க தம்பி. நெலம எப்படியிருந்தாலும் இன்னும் ஒரு மாசத்துக்கப்பறம் உங்க ஜாதகத்துல களஸ்திரஸ்தானாதிபதி புத்தி நடைமுறைக்கு வரப்போகுது. அந்த சமயத்துல கல்யாண காரியம் நிச்சயமா கைகூடியே தீரும். தைரியமா போயிட்டு வாங்க..


ஜோதிட நிலையத்தைவிட்டு வெளியே வந்தேன். நேரம் இரவு ஒன்பதுக்குமேல் ஆகியிருந்தது. சேவல் கட்டுக்கு போய் திரும்பி வந்திருக்கும் கதிர் , இந்நேரம் தன் அறையில் இன்றைய ஆட்டத்தின் வெற்றியை அல்லது தோல்வியை மது அருந்தியபடி கொண்டாடிக் கொண்டிருப்பான் எனத் தோன்றியது. அவனைப் போய் பார்த்து சற்றுநேரம் பேசியிருந்துவிட்டு பிறகு வீட்டிற்குச் செல்லலாம் என நினைத்துக் கொண்டேன். சாவியைப் பொருத்தி மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்யும் தருணத்தில் பார்வை அனிச்சையாய்த் திரும்பி, வேப்பமரத்தினடி விளக்கு மாடத்தினுள் ஒளிர்ந்தபடியிருந்த அகலின் சுடரைத் தேடியது. வெறும் இருட்டே நிறைந்திருந்தது.





  

Monday, 13 March 2017

குடிகிணறு

                          

ஒரு உயிர் சாகக் கிடக்கிறது எனும் உணர்வேயில்லாததுபோல அப்பச்சியின் வீடு அமர்க்களப் பட்டுக்கொண்டிருந்தது. வீடு முழுதும் ஆட்கள் நிரம்பியிருந்தனர். குறுக்கும் நெடுக்கும் ஓடித்திரிந்த குழந்தைகளின் கூச்சல் கூரையில் பட்டு எதிரொலித்தது.


வெளிவாசல் திண்ணையில் அப்பச்சியின் பங்காளிகளும் ஒறம்பரை சனங்களும் உட்கார்ந்திருந்தனர். அடையாளம் தெரிந்து கொள்ள முடியாதவர்கள் என்னை உற்று நோக்கினர். மூங்கில் குச்சிகள் நடப்பட்டு பந்தல் போடும் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. சிலர் காலியிடத்துப் புற்களை சுத்தம் செய்தபடியிருந்தனர். அவர்களின் கருத்த வெற்று முதுகெங்கும் வழிந்தோடிய வியர்வை வெயிலில் மினுங்கிற்று.


தடுக்கையெடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்த நாகராசுமாமன் வரவேற்கும் விதமாக தலையை ஆட்டினான்.நான் உள்ளே நுழைந்தேன். தெய்வாத்தா மகந்தான் பெரியவன் என அடையாளம் தெரிந்துகொண்டவர்கள் கிசுகிசுப்பது காதில் விழுந்தது. கூடம் சுற்றி உள்வாசல் தாண்டி வடக்குப் பார்த்த அந்த அறைக்குள் நுழைந்தேன்.


இலவம்பஞ்சு மெத்தைவிரிப்பின்மேல் அப்பச்சியைப் படுக்கவைத்திருந்தனர். நான்கு நாட்களுக்குமுன் இருந்ததைவிடவும் நிலமை மேலும் மோசமாகிவிட்டது என தோன்றியது. காய்ந்த கொப்பரைத்தேங்காய்போல வற்றிவறண்டு சிறுத்துப் போயிருந்தது அப்பச்சியின் தேகம். கை கால்கள் அசைவற்றிருந்தன. நான் அப்பச்சியின் தலை மாட்டில் உட்கார்ந்து கொண்டேன்.


முடைபார்க்கவந்து அமர்ந்திருந்த பெண்கள் எங்களையே கவனிக்கத் துவங்கினர். என் வரவும் அருகாமையும் அப்பச்சியின் பிரக்ஞையை மீட்டு வந்துவிடாதா எனும் ஆவல் அவர்களின் கண்களில் குடியேறியிருந்தது. அம்மா எழுந்துவந்து அப்பச்சியின் முகத்தருகே குனிந்தபடி “ அய்யா… உங்க பேரன் கோபி வந்துருக்கான். எங்க காணம் காணம்னு கேட்டீங்களே… வந்துருக்கான் பாருங்க.” என்றாள்.


அம்மாவின் குரல் அப்பச்சியை எட்டவில்லை. அவர் முகம் சலனமற்றிருந்தது. துவண்டு கிடந்த அப்பச்சியின் வலது கையை என் உள்ளங்கையில் வைத்துக் கொண்டேன். சில்லென்றிருந்தது. சுற்றிலுமிருந்த பெண்கள் என்னையே கூப்பிடுமாறு கூறினர். அப்பச்சியின் நினைவை மீட்க முடியாத என் குரல் அறையெங்கும் சுற்றி வந்தது. உயிர் இருப்பதன் அடையாளமாக நெஞ்சுக்கூடு மட்டும் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. மூக்கு அடைத்துக்கொண்டதுபோல லேசான சத்தத்துடனும் மிகுந்த பிரயாசையுடனும் அப்பச்சியின் சுவாசம் வாய்வழியே நிகழ்ந்து கொண்டிருந்தது.


அப்பச்சிக்கு இனி நினைவு திரும்பாது என்னும் முடிவிற்கு பெண்கள் வந்திருந்தனர். அவர்களின் ஆவல் அடங்கிப் போயிருந்தது. வேலை இருப்பதாகவும் முடித்துவிட்டு பிறகு வருவதாகவும் சொல்லி சிலர் எழுந்து சென்றனர். மீதமிருந்தவர்களும் வேறு ஊர் விஷயங்களை பேச ஆரம்பித்து விட்டிருந்தனர். அம்மாவும் அவர்களுடனான உரையாடலில் ஐக்கியமாகியிருந்தாள். அவள் முகம் தந்தையை இழப்பது குறித்தான துக்கமே இல்லாததாயிருந்தது.


எனக்கும் பெரிதாக சோகமோ துயரமோ ஏதுமில்லை. எனினும் மரணம் பற்றிய உணர்வு மேலோங்கியிருந்தது. மனம் தன் அலைபாய்தலைத் துறந்ததுவாய் சலனமற்றிருந்தது.  தொண்டுப் பட்டியில் கட்டப்பட்டிருக்கும் சினையாட்டிற்கு தண்ணீர் வைத்துவிட்டு வருவதாகச் சொல்லி எழுந்த மீனாட்சியத்தை என்னிடம் வந்து “ மாப்ளே… இன்னிக்கு இங்கயே இருந்து அப்புச்சி காரியத்தையெல்லாம் ஓருசு பண்ணீட்டுத்தான் போகணும். வந்தமா பாத்தமா.... கடமை முடிஞ்சுதுனு போயிராதீங்க.. புரியுதா..? “ என்றார். நான் தலையாட்டினேன்.


மண்கட்டியின்மேல் ஈரம் போல மரணம் அப்பச்சியின்மேல் ஊடுருவியபடியிருந்தது. இன்றோ அல்லது நாளையோ தன் அலைவுகளை நிறுத்திக் கொள்ளப் போகும் எலும்புகள் புடைத்த நெஞ்சுக்கூட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பச்சியின் மனநிலையை யூகிக்க முயல்பவனாய் அவர் கண்களையே ஊடுருவிப் பார்த்தபடியிருந்தேன். அவைகள் உணர்ச்சியற்றிருந்தன.


‘காலன் வருமுன்னே கண்பஞ்சடை முன்னே
பாலுன் கடைவாய் படுமுன்னே- மேல்விழுந்து
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு.’


மரணமுற்றுக் கொண்டிருக்கும் அப்பச்சி இப்பொழுது குற்றாலத்தானைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறாரா? அவர் மனம் முழுதும் ஆலால கண்டனின் ஞாபகங்கள்தான் வியாபித்திருக்கின்றனவா? தெரியாது. ஆனால் அது அப்பச்சிக்கு மிகவும் பிடித்த பாட்டு. திடீர்திடீரெனப் பெய்துபோகும் காற்றுக் காலத்து மேகம் போல இந்த நேரம் என்றில்லை , எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பாடல் அப்புச்சியின் வாயிலிருந்து வரும்.     


பாடுவார் என்பது தவறு. சொல்லுவார். இல்லை. கூறுவார். வீட்டு வேலைகளைச் செய்தபடியே பத்திரமாய்ப் போயிட்டு வாப்பா.. என இயல்பான ,பிரியமான ஈடுபாட்டுடன் விடைகொடுக்கும் அம்மாவைப்போல இன்னதென வகை பிரிக்கவியலாத லயத்தில் அப்பாடல் அப்பச்சியின் குரல் வழியே வெளிப்பட்டபடியிருக்கும். பட்டினத்தாரின் அவ்வெண்பாவை பாடுவாரா சொல்லுவாரா என்பது முக்கியமல்ல. அந்தப் பாடல் அவர் வாயிலிருந்து வருகையிலெல்லாம் ஒரு உயிர்ப்புடன் திகழ்ந்தது என்பது மட்டும் நிச்சயம். இதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். பாடல் என்றில்லை. இதயத்தின் அடியாழத்திலிருந்து வரும்போது , வசைமொழிக்கும்கூட ஒரு சாநித்யம் வந்துவிடத் தானே செய்கிறது.?


பாலை ஆற்றியபடியேவந்த அம்மா டம்ளரை என்னிடம் நீட்டினாள். “இந்தா அப்புச்சிக்கு கொடு”. அப்பச்சியின் தலைக்கு அடியே இடது கையைக் கொடுத்து சற்றே உயர்த்தி நெஞ்சோடு சேர்த்து  உயர்த்திப் பிடித்துக் கொண்டேன். சிரமத்துடன் நிகழ்ந்து கொண்டிருந்த சுவாசம் மேலும் தடுமாற்றமுற்றது. தயக்கத்துடனும் அருவருப்புடனும் பொதுக்கழிப்பறை போவதுபோல காற்று உள்ளே போவதும் கபமும் சளியும் கட்டிய நுரையீரல்களை நிறைத்துவிட்டு வெளியே வருவதுமாயிருந்தது. புகைந்து கொண்டிருந்த ஊதுபத்தி வாசனையையும் மீறி முடைநாற்றம் நாசியைத் தாக்கிற்று.


ம்.. கொடு .. நாங்க ஊத்துனாத்தான் எறங்கமாட்டீங்குது. நீ ஊத்துனாலாவது எறங்குதானு பாக்கலாம்… “ பெண்களெல்லாம் வந்து சூழ்ந்துகொள்ள கொஞ்சமாகப் பாலை ஊற்றினேன்.உள்ளிறங்காமல் கடைவாயில் வழிந்தது. முடிச்சிட்டுப் புடைத்திருந்த தொண்டைக் குழியை நீவிவிட ஒரு மிடறு இறங்கிற்று. “ராப்பகலா பக்கத்துலயே காத்துக்கிடந்தாலும் நாம கொடுத்தா குடிக்கிறதில்ல.. பிரியமுள்ள பேராண்டி ஊத்துனதும் முழுங்கறதப் பாரு.. எப்பவுமே கோபீனா அய்யனுக்கு உசுருதானே..என்றார்கள்.


என்மனம் நெகிழ்ந்தது. பொங்கிய உணர்ச்சியில் நீர்த்திரையிட்ட கண்களுடன் அப்பச்சியின்  முகத்தையே நோக்கினேன். நினைவுதிரும்பி அடையாளம் கண்டுகொள்ள மாட்டாரா எனும் ஏக்கம் கிளர்ந்தெழுந்தது. “அப்பச்சி.. அப்பச்சி.. நா உங்க கோபி வந்துருக்கேன் அப்பச்சி..


வாழ்வின் சுமை அதிகரித்து மூச்சுத்திணறும் பொழுதுகளில் அப்பச்சியின் நினைவு தவறாமல் வந்துவிடும். கண்டும் கேட்டுமிருந்த அவர் வாழ்வின் சம்பவங்கள் ஏதேனுமொன்று ஞாபகத்திற்கு வந்து ஆறுதல் படுத்தும். என்னளவில் அப்பச்சி மிகப்பெரிய சாதனையாளர்தான். போதுமான கல்வியறிவோ உலக அறிவோ இல்லாமல் , ஆறு பெண்களையும் ஏழாவதாக ஒரு பையனையும் பெற்று வளர்த்து கரையேற்றுவது சின்னக் காரியமா என்ன? மூணே ஏக்கர் தோட்டத்தையும் முப்பது செம்மறியாடுகளையும் வைத்துக்கொண்டு அப்பச்சியும் அம்மத்தாவும் எல்லாவற்றையும் சமாளித்தனர்.



இது போதாதென்று மூன்றாவது பிள்ளைப்பேறுக்காக வந்துதிரும்பிய என் அம்மாவிடம், ‘ உனக்கு மூவரையும் வள்ர்க்கச் சிரமமாக இருக்கும். பெரியவன இங்கயே உட்டுட்டுப்போஎன என்னையும் அவர்கள்தான் வளர்த்து ஆளாக்கினர். பள்ளிப்படிப்பு முடியும்வரை நான் அப்பச்சியூரில்தான் வளர்ந்தேன். மற்ற பேரன் பேத்திகளைவிட நான் அவர்களுக்கு பிரியமானவனாக ஆகிவிட்டதற்கு இதுவும் ஒரு காரணம் எனத் தோன்றுகிறது.




அப்பச்சியூரில் கழிந்த என் பால்ய காலம் மறக்க முடியாதது. நினைவுகளாகப் பதிந்திருக்கும் அவ்வாழ்வின் சுவை நாளுக்குநாள் அதிகரித்தபடியேயிருக்கிறது. பொழுது சாய்ந்து இருள் கவியத் துவங்கியதும் நாங்கள் வீடடைவோம். விறகையும் காலையில் வாசல் தெளிப்பதற்கான பசுஞ்சாணத்தையும் எடுத்தபடி அம்மத்தா வந்து சேர்ந்திருப்பாள். பிறகு வெகு நேரம் கழித்தே அப்பச்சி வந்துசேருவார். திண்ணையிலிருக்கும் பால்போசியை பாலாமணி சித்தி உள்ளே எடுத்து வருவாள்.



எட்டுமனிக்கு வானொலியில் இளையபாரதமோ அல்லது நாடகமோ ஒலிபரப்பாக ஆரம்பிக்கும். வந்ததும் சாப்பிட்டுவிடும் அப்பச்சி வாசல் திண்ணையில் கிடக்கும் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கொள்வார். பிறகு இரண்டாம் ஜாமம் முடிந்து பட்டிக்கு படுக்கப்போகும்வரை அதுதான் அவரது கிடை. ஈரக்கையை மேல் துண்டினால் துடைத்தபடியே என்னைக் கூப்பிடுவார். கடைக்குப்போய் பீடி வாங்கி வரத்தான். தோட்டத்திலிருந்து வரும் வழியில்தான் கடை வீடு. ஆனாலும் அப்பச்சியே போய் வாங்கமாட்டார்.



இந்தமாதிரி சினச்சின்ன வேலைகளையெல்லாம் நான்தான் செய்யவேண்டும். இதில் அவருக்கு ஒரு சந்தோசம். ஒரு கட்டு குயில் பீடிக்கு நாற்பது காசுபோக மீதியிருக்கும் பத்துப் பைசாவுக்கு தின்ன ஏதேனும் வாங்கிக் கொள்ளலாம் என்பதால் அது எனக்கும்கூட மகிழ்ச்சியளிக்கும் காரியமாகத்தான் இருந்தது.


கடைவீடுதான் என்றில்லை. அப்பச்சி யாருடைய வீட்டுக்கும் அனாவசியமாகப் போகமாட்டார். ஏதாவது நலம் பொலம் என்றால் போய்க் கலந்துகொள்வார். அதோடு சரி. பகலில் தோட்டம் . இரவு வீடு வந்தால் வாசல் திண்ணையில் போடப்பட்டிருக்கும் கயிற்றுக்கட்டில். இதுதான் அவர் வழக்கமாக இருந்தது. ஆனால் ,அப்பச்சியைத்தேடி அவர் வயதொத்தவர்கள் வந்தபடியேயிருப்பர். பட்டிக்குப் போகும்வரை ஊர்ப்பழமைகள் பேசிக்கொண்டிருப்பர். பேச்சு எதைப்பற்றியதாக இருப்பினும் அப்பச்சி ஏதேனும் ஒரு சமயத்தில் தன் பாடலை எடுத்து விடுவார். யாரும் வராத நாட்களில் தெரு விளக்கு வெளிச்சத்தில் விளையாடும் சிறுவர்களையோ, குடிகிணற்றில் நீர்சேந்திப்போகும் பெண்களையோ வேடிக்கை பார்த்தபடி பீடியைக் குடித்துக் கொண்டிருப்பார்.


நான் ஆரம்பப் பள்ளி மாணவனாக இருந்தேன். பாடமாக வந்திருந்த காந்தியின் வாழ்க்கைக் குறிப்பைப் படித்துக் கொண்டிருந்தபோது அந்த சந்தேகம் தோன்றியது. அப்பச்சியைப் பார்த்துக் கேட்டேன். “ அப்புச்சி.. நீங்க எத்தனையாவது வருசம் பொறந்தீங்க?


பேசுவதற்கு யாரும் வராமல் வெறுமே தெருவிளக்கு வெளிச்சத்தில் சேந்துகிணற்றைப் பார்த்துக் கொண்டிருந்தவரிடமிருந்து பதில் வந்தது. “யாருக்குத் தெரியும்?


என்ன அப்புச்சி... சின்னப் பையனான எனக்கே நான் எந்த வருசம் பொறந்தேனு தெரியிது. உங்களுக்குத் தெரியாதா?


தெரியாதேடா அப்பு.. நாள் கெழமையெல்லாம் குறிச்சு வெச்சுருக்க நானென்ன உன்னமாதிரி ஆசுப்பத்திரியலா பொறந்தேன்? ஊட்லயுங்கூடப் பொறக்கல.. காட்டுக்குப்போற இட்டாறியில பெரிய வேப்பமரமிருக்கில்ல.. அந்த நிழல்ல்தான் எங்காத்தா என்னைப் பெத்தாளாம..


என்னது வேப்பமரத்தடீல பொறந்தீங்களா..


வேலியடைச்சிட்டிருந்த எங்கய்யனுக்கு நெறைசூலியாயிருந்த எங்க ஆத்தா சோறு கொண்டுட்டுப் போயிருக்கிறா.. போனாளா.. ஏறு வெயில் சுள்ளுனு அடிக்க பாதித்தடத்துலயே கிறுகிறுப்பும் மயக்கமும் வந்துருச்சாமா.. அப்பறம் ஒரு பண்டக்காரன் ஊருக்குள்லவந்துசொல்லி எல்லோரும் போயிப் பாக்கறப்ப நான் பொறந்திருந்தனாமா..


ஒரு கதைபோல அப்பச்சி தன் ஜனனம் பற்ரிய ஞாபகங்களைச் சொல்லிப்போக எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. எவ்வளவு முயற்சித்தும் அது எந்த வருசம் என அப்பச்சிக்குத் தெரியவில்லை. கடைசியாக ஒரு தகவல் கூறினார். “ இந்த சேந்துகெணறு  இருக்குது பாத்தியா..? வெள்ளக்காரன் இத வெட்டுன வருசந்தான் நானும் பொறந்தனாம்.விடிந்ததும் கிணற்றடிக்கு ஓடினேன். அது வெட்டப்பட்ட வருசம் பொறிக்கப்பட்டிருக்கிறதா என சுற்றுச்சுவரின் நீள்சதுரக் கற்களையெல்லாம் உற்றுக் கவனித்தேன். ஏமாற்றமே மிஞ்சியது.


ல்லோரும் எந்திரிச்சுவாங்க சாப்பிடலாம்..  ஜானகியின் குரல் எனை சுயநினைவுக்குக் கொண்டு வந்தது. காத்திருந்தவர்களைப்போல பெண்கள் எழுந்து கொண்டனர். உள்வாசலில் மாத்துத்துணி விரித்து பந்தி பரிமாறினர். ஆசரத்தின் மூலையில் மளிகைச்சாமான்களும் அரிசி மூட்டைகளும் வந்து இறங்கியிருந்தன. அம்மாவிடம் குழந்தையைத் தந்த ஜானகி பந்திவிசாரிப்பதில் மும்முரமானாள்.


ஜானகிக்குத்தான் சிரமம். கொழந்தப் புள்ளய வெச்சிக்கிட்டு.. வாரவங்களுக்கு காபித்தண்ணி குடுக்கறது சோறாக்கிப் போடறதுனு..  கஷ்டம்தான்.


என்ன செய்யறது.. டவுன்ல தனக்கும் தன் புருசனுக்கும்னு அளவா அரப்படி அரிச்சுப் போட்டுட்டு ஜம்னு டிவி பார்த்துட்டு இருந்தா.. பத்து நாளா இங்க வந்து சிக்கீட்டு புள்ள பாடாபடுது.


படட்டுமே… சேந்துகெணத்தூட்டய்யன் இவ அம்மாமாருகளையெல்லாம் வளத்தி ஆளாக்க என்ன கஷ்டப்பட்டிருக்கும். சாகப்போற நேரத்துல கிட்ட இருந்து பாத்துக்கிட்டா புண்ணியந்தானே..



பந்தியில் அமர்ந்திருந்த பெண்களின் பேச்சு தொடர்ந்த படியேயிருந்தது. உணவோடு சேர்த்து ஊர் விஷயங்களையும் அவர்களின் வாய் மென்று சலித்தது. ஆறு பெண்கள் ஒரு மகன் பதினைந்துக்கும் மேற்பட்ட பேரன் பேத்திகள். இத்தனை பேரிருந்தும் நான் உட்பட யாருக்கும் அப்பச்சியின் இந்த நிலை சிறு துயரத்தைக்கூட உண்டாக்கவில்லையே என்பது ஆச்சரியமாக இருந்தது. எல்லோருமே திருவிழாவைக் காணப்போகும் பிள்ளைகளின் மனநிலையைக் கொண்டிருப்பதுபோலப் பட்டது. பந்தல் போடும் வேலை முடிந்திருந்தது. வாசலுக்கே புது பொலிவு வந்துவிட்டதுபோலப் பட்டது. தெரு இருக்கும் கிழபுறம் தவிர, மற்ற இரு பக்கங்களிலும் ஒரு தடுக்கு முறையாக நிற்கவைத்து, படல் மாதிரி கட்டி, முழுவதுமாக அல்லாமல், ஒரு ஆள் உயரத்திற்கு மறைத்திருந்தார்கள்.  படலுக்கு மேலும் பந்தலுக்கு கீழுமிருந்த நீள் சதுர இடைவெளியில் பார்வை ஓடிற்று. மந்தைவெளி மர உச்சிகள் காற்றுக்கு அசைந்தன. வெயில் தணிந்திருந்தது. குடிகிணறின் தொலைக்கட்டுத்தூண் தெரிந்தது. தண்டவாள்த்திலும் இரும்பு உருளையிலும் பறவைகளின் எச்சங்கள் படிந்திருந்தன. வானம் மேகமற்றிருந்தது. புதிய தென்னந்தடுக்குகளின் வாசம் வாசலெங்கும் கமழ்ந்தது. முடைபார்க்கவந்திருந்த உள்ளூர் ஆண்கள் வெளித்திண்ணையில் அமர்ந்திருந்தனர். நாகராசுமாமன் தன் பங்காளிகளுடன் உரையாடியபடியிருந்தான். கச்சிதமாக எல்லா வேலைகளையும் முடித்துவிட்ட உற்சாகம் அவன் குரலிலிருந்தது. சாக்குக் கட்டும் கையுமாக மயில்சாமிமாமன் உள்ளே வந்தார்.


“ என்னடா நாகா.. வேலையெல்லா தடபுடலா நடக்குது. எல்லாக் காரியமும் ஆச்சா..


ஆச்சு சித்தப்பா.. ரண்டே ரண்டு காரியந்தான் பாக்கி..


அது என்னடா..


அய்யன் உசுர உடறதும் காட்ல குழி வெட்றதும்தான்குபீரென சிரிப்பலை கிளம்பிற்று. மிளகாய்விற்ற கையோடு ஒரு குவார்ட்டரையும் அடித்து வந்திருக்க வேண்டும். மயில்மாமன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். வார்த்தைக்குள் சிக்காத அவரின் சிரிப்புச் சத்தம் காராட்டுப் பூனைகளை நினைவு படுத்திற்று. உள்ளிருந்த பெண்கள் சிலர் வெளியே வந்தனர். பாலாமணிச் சித்தியும் கடைசி சித்தியான நீலவேணியும் தன் பொறந்தவன்களுடனான அரட்டையில் கலந்துகொள்ளத் துவங்கியிருந்தனர்.


பேச்சும் சிரிப்பும் தொடர்ந்த படியேயிருந்தது. மிகப்பெரிய வருத்தம் கிடையாதெனினும் என்னால் அங்கே அமர்ந்திருக்க முடியவில்லை. மனம் சிந்தனை வயப்பட்டிருந்தது. புகைக்கத் தோன்றியது. எழுந்து வெளியே வந்தேன்.



குடிகிணற்றைச் சுற்றிலும் வேலிமுட்கள் வளர்ந்திருந்தன. பாதி மரமாகியிருந்தன. அப்பச்சியூட்டுக்கும் சேந்துகிணத்துக்கும் இடைப்பட்ட சிறு மைதானம் போலிருந்த நிலப்பரப்பில் இலந்தைச்செடிகள் முளைத்திருந்தன. நாயுருவி மண்டியிருந்தது. தடம் அழிந்து போயிருந்தது. முன்பு நடு வீதியில் கிடந்த கல்பண்ணை ,சுவரையொட்டி குப்புறக்கிடத்தப்பட்டிருந்தது. கிணறைச்சுற்றிலிமிருந்த நடைபாதை சிமெண்ட்தளம் புற்கள் முளைத்திருந்தது. ஆட்டுப்புழுக்கைகளும் கோழிப்பீயுமாயிருந்தது. சுற்றுச்சுவர் சிதிலமாயிருந்தது. அரசும் அத்தியும் வேர் விட்டிருந்தன. எண்ணெய்ப் பசையில் கறுத்து மினுமினுங்கும் உருளைகள் இரண்டும் துருப்பிடித்திருந்தன. கல் பண்ணையின்மேல் உட்கார்ந்தேன்.


நடுவீதியில் கிடந்த கல்பண்ணையில் ஆடுகள் தண்ணீர் குடிப்பதும், தளும்ப நீர்நிறைத்து நாங்கள் மூச்சடக்கி விளையாட்டு விளையாடியதும் ஞாபகம் வந்தது. சிகரட்டைப் பற்றவைத்தேன். குமிழியிடும் பால்ய நினைவுகளும் அதை இழந்த உணர்வுமாய் மனம் சலனமற்றிருந்தது. இலைகள் அசைவுறும் கண இடைவெளியில் தோன்றி மறைந்திருந்தது ஏதோ ஒன்று. எதையும், எதுவாகவும் ,இருக்கவிடாத கால பிரமாண்டம் பற்றிய வியப்பும் திகைப்பும் அதிகரித்த படியேயிருந்தது. அப்பச்சியும் இந்த குடிகிணறும் ஒன்றே என தோன்றியது.


ப்பச்சியின் வீட்டுக்குக்கூட ஊரில் சேந்துகிணத்து வீடு என்றுதான் பெயர். அது ஒரு காலம். ஆழ்துளைக் கிணறுகளும் மேல்நிலைத் தொட்டிகளும் இல்லாத காலம். ஊருக்குள்ளிருந்த நூறு வீடுகளும் இக்குடிகிணற்றையே நம்பியிருந்தன. கல்யாணமாகாத சித்திகளும் நாகராசனும் அப்பச்சியையே சார்ந்திருந்ததுபோல.


அந்த வருடம் வானம் பொய்த்திருந்தது. காருமழையின்றி பின் வந்த காற்றுக் காலம் கிணறுகளின் நீர் மட்டத்தை கீழே கொண்டுபோனது. பருவமும் ஏமாற்றியது. ஆடிமாதம் வெட்டி அடைத்திருந்த கொறங்காட்டு வேலிகளின் கிளுவை முட்களும் வறளத் துவங்கின. பெரும்பாலான தோட்டக் கிணறுகளின் தரையீரமும் காய்ந்து போனது.  எண்பதடி ஆழமுள்ள குடி கிணறில் மட்டும் இடுப்பளவு தண்ணீர் ஊறியபடியிருந்தது. வெயில் நேரே கீழிறங்கும் உச்சிப்பொழுதில் மேற்குச் சுவரிலிருந்து உருகிய வெள்ளியென ஓசையெழவிழும் ஜலத்தைப் பார்ப்பது எங்களுக்குத் தீராத வேடிக்கையாயிருந்தது. அது சமுத்திரத்திலிருந்து வருகிற நீர்க்காலாக்கும், குடி கிணறு வற்றவே வற்றாது என்பார் அப்பச்சி.



வேறு வருமானம் இல்லாமலும் காசுக்கு தீனிவாங்கிப்போட்டு கட்டுப்படியாகாமலும் வெகுபேர் கால்நடைகளை விற்கத் துவங்கியிருந்தனர். சிலர் வேறு ஊர்களுக்கு ஓட்டிப் போயினர். ஆனால் அப்பச்சி அசரவில்லை. ஆடுகளை விற்கவில்லை. வேறு ஊர்களுக்கும் ஓட்டிப் போகவில்லை. பொழுது புலர்ந்ததும் தூக்குப்போசியில் கரைசோற்றையும் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு கிளம்புவார். சேனாங்கல் மேட்டிலிருந்து அவரும் ஆடுகளும் தோட்டம் வந்துசேர இருட்டிவிடும்.



சேனாங்கல்மேடு என்பது ஒரு மலைக் கரடு. ஊரைவிட்டு தொலைவிலே இருப்பதாலும், வங்க நரிகள் அதிகமுண்டு என்பதாலும் பண்டக்காரர்கள் அங்கு ஆடுகளை ஓட்டிப்போவதை தவிர்த்தனர். குட்டியாட்டின் பால்மடிகளை வங்கநரிகள் பிய்த்துப்போய்விடும் என்ற பேச்சு ஊருக்குள் இருந்தது. திருகுகள்ளி மரங்களும் கற்றாழம்புதர்களும் காரைமுட்களும் சூறிப்புதர்களும் அங்கே மண்டிக்கிடந்தன. பாறையிடுக்குகளில் முளைத்திருக்கும் மலம்புற்களும் திருகுககள்ளியும்தான் ஆடுகளுக்கு உணவு.


வெள்ளையாக பால்வடியும் கள்ளிகளை சக்கையாக மஞ்சி காண தட்டிப் போடவேண்டும். அப்போதுதான் ஆடுகள் அதை தின்ன ஏதுவாக இருக்கும். கொத்துக் கொத்தாக வெட்டிக்கொண்டுவந்த கள்ளிகளை  ஒரு மர நிழலிலே போட்டுக்கொண்டமர்ந்தபடி சுற்றிலும் நிற்கும் ஆடுகளுக்கு பொழுதுக்கும் ஒயாமல் தட்டித்தட்டி போடுவார். ரத்தம்கட்டிப்போகும் அப்பச்சியின் கைகளுக்கு அம்மத்தா இரவில் எருமைச்சாணி வேது கொடுப்பாள். நானும் நாகராசனும் அப்பச்சி ஆடுமேய்க்கும் காட்டிலிருந்து  கொண்டுவந்த சூறிப்பழங்களைத் தின்றபடியே, காரக்காய்களை சாம்பலில் புதைத்து ஒரு ஜாடியிலிட்டு மூடி வைப்போம் பழுப்பதற்காக.


ஊருக்கு குடிகிணறும் இங்கே அப்பச்சியும் வாழ்வாதாரமாகவும் ஜீவாதாரமாகவும் விளங்கிய காலகட்டம் அது. ஒருநாள் காலையில் நீர்சேந்தப்போன பெண்கள் அலறி கூச்சலிட்டனர்.  இறக்கை முளைத்தும் முளைக்காத இரண்டு சிட்டுக்குருவிக் குஞ்சுகள் கிண்ற்றுக்குள் செத்து மிதந்தன. கிடந்த கொஞ்சம் தண்ணீரும் குடிப்பதற்கு ஆகாமல் போனது. குடிக்கவே நீரின்றி ஊரின் இயல்பு வாழ்க்கையே ஸ்தம்பித்துக் கிடந்த அன்றுதான் அந்த சம்பவமும் நடந்தது. கள்ளிமரப்பொந்துக்குள் சுருண்டிருந்த குறுவிரியன் அப்பச்சியின் கணுக்காலுக்குமேலே ஆடுதசையைப் பதம் பார்த்தது. அப்போது நான்கு சித்திகள் கல்யாணமாகாமலிருந்தனர். நாகராசு பணிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவன் படித்த அதே பள்ளியில் நான் எட்டாம் வகுப்பு பயின்று கொண்டிருந்தேன்.


பள்ளியிலிருந்து திரும்பிய அப்பச்சியை நாட்ராயன் கோவிலுக்குக் கொண்டுபோயிருப்பதாகச் சொன்னார்கள். ஐயோ அப்பாஎன நாகராசு மயங்கிவிழுந்தான்.  பெண்பிள்ளைகளாக இருந்தாலுமேகூட சித்திகளெல்லாம் தைரியமாக இருந்தனர். ஆனால் மாமன் அழுத அழுகை ஊரையே உச்சுக்கொட்ட வைத்தது.  பொம்பளை புள்ளைகளுக்குக்கூட இவ்வளவு பாசம் இல்லை. நாகராசு அய்யன்மேல உசுரையே வெச்சுருக்கான் என்றார்கள்.  நாகு அப்பச்சி கோவிலில் இருந்த இரண்டு வாரமும் பிரமத்தி பிடித்தவன் போலவே திரிந்தான்.  நடுயிரவில் எழுந்துபோய் கொட்டமுத்துகளை வைத்து சோசியம் பார்ப்பான். “நா கேட்ட மாதிரியே கட்டி வழியுட்டு வந்திருக்கு.. அப்பா மட்டும் நல்லபடியா வந்துட்டாங்கனா நான் அந்த நாட்ராயன மறக்கவே மாட்டேன்.. அதுதான் என் கொலதெய்வம்என்பான்.


அப்பச்சி வீடுவந்து சேர்ந்தார். நாட்ராயன் கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் நடக்கும் சாயுங்காலப் பூசைக்கு நாகராசு போக ஆரம்பித்தான். அன்றுமட்டும் அனுமதி வாங்கிக் கொண்டு அரை மணிக்கு முன்பாகவே வந்துவிடுவான். படிப்பு முடிந்து திருப்பூர் பனியன் கம்பனிக்கு போக ஆரம்பித்த பிறகும்கூட அது தொடர்ந்தது.


ஐந்தாவது சித்திக்கு திருமணமான சமயம்தான் ஊருக்குள் முதன்முதலாக போர்வெல் லாரி நுழைந்தது. ஊர்ன் தென்கோடியில் பள்ளிக்கூடத்தருகே விடியவிடிய உறுமிக்கொண்டு நின்றது. இரவுமுழுதும் சுற்றிநின்று வேடிக்கை பார்த்த பெண்கள் ,காலையில் ஈரச் சாம்பல் போலிருந்த போர்க்குழி மண்ணை பாத்திரம் துலக்க ஆகுமென எடுத்துப் போனார்கள். பிறகு பஞ்சாயத்து போர்டிலிருந்துவந்து அடி பைப்பும் மாட்டிக் கொடுத்தார்கள்.


தெற்கு வளவும் நடுவளவும் அடி பைப்புக்குப் போக வடக்குவளவு மட்டுமே குடிகெணற்றில் நீர் சேந்திற்று. உள்ளாட்சித் தேர்தல் வந்தது. நாகராசன் பனியன் கம்பனிக்குப் போய் சம்பாதிக்கத் துவங்கியிருந்தான். அந்த பஞ்சாயத்துத் தேர்தலுக்குப் பிறகு ஊருக்குள் நிறைய மாற்றங்கள் வந்தன. மண்ரோடு தார்ரோடாக மாறியது. சில கிலோமீட்டருக்கு அப்பாலிருந்த நியாயவிலைகடை ஊருக்கே கொண்டுவரப் பட்டது.  மேலும் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டு மேல்நிலைத் தொட்டியும் கட்டப்பட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக குழாய் இணைப்பும் தரப்பட, குடிகிணற்றின் உருளைகள் சேந்த ஆளில்லாமல் தங்கள் இயக்கத்தை நிரந்தரமாக நிறுத்திக் கொண்டன.


கடைசிச் சித்திக்கும் திருமணமானபின் அப்பச்சியின் நிலமையும்கூட குடிகிணற்றைப் போலவே ஆனது. நாகராஜன் பண்ணாட்டுக்கு வந்திருந்தான். நானும் பள்ளிப்படிப்பு முடிந்து எங்கள் ஊருக்கே வந்து, கல்லூரிக்குப் போகத் துவங்கியிருந்தேன்.  நாகராஜனுக்கும் கல்யாணம் ஆனது. அப்பச்சியும் அம்மத்தாளும் இரண்டாவது சித்தியின் மகள் ஜானகியையே மருமகளாக்கிக் கொள்ள விரும்பினர். பிறத்தியிலிருந்து பெண் எடுப்பதைவிட , பேத்தியையே மருமகளாக்கிக் கொண்டால், நடந்த தடம் காலத்துக்கும் அழியாது சொந்தமும் விட்டுப் போகாது என்பது அவர்களின் கணக்காக இருந்தது.


மகனுக்கு கல்யாணம் ஆன ஆறே மாதத்தில் அம்மத்தா போய்ச் சேர்ந்தாள். அப்பச்சி எவ்வளவு சொல்லியும் கேட்காது தோட்டத்தையும் ஆடுகளையும் விற்ற மாமன் திருப்பூரில் பனியன் கம்பனி ஆரம்பித்தான். பிறகு வந்துபோகச் செளகரியமில்லையென டவுனுக்கே குடியும் போனான். வற்புறுத்தி கூப்பிட்டும்கூட உடன்செல்ல மறுத்த அப்பச்சி தானே தனியாக சமைத்துண்ணத் துவங்கினார்.


எல்லோருமிருந்த வீட்டில் யாருமில்லாமல் அவரின் பொழுதுகள் தனியாகப் போகத்துவங்கின. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அப்பச்சியை வந்து பார்த்துவிட்டுப் போவதை நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன்.குயில்பீடிப் பண்டல்களுடன் வரும் என் வருகையை அவரும் எதிர்பார்ப்பவராயிருந்தார். முதுமையில் தனிமை அவருள் மாற்றங்களை உண்டாக்கியிருந்தது. கண்கள் வெளிச்சம்பெற்றுத் துளங்கின. பிறந்தமண் குறித்த பிரக்ஞை அதிகமாகியிருந்தது. பற்றற்ற குரலில் யாவற்றையும் நேசிக்கும் பரிவு தொனித்தது. ஒருமுறை வந்துவிட்டுக் கிளம்புகையில் அப்புச்சியிடம் கூறினேன்.


“டவுன்ல இருக்கறதுதான் உங்களுக்கு ஒத்துக்காது. சரி, எங்கூருக்குப் போயி இருந்துக்கலாம் வாங்க..

உங்க ஊரா..? அது இந்த ஊரு மாதிரி வருமா..?


அதில்ல அப்பிச்சி… கடைசி காலத்துல நீங்களே ஆக்கித் தின்னுட்டு.. கரிச்சட்டி கழுவீட்டு ஏன் சிரமப் படறீங்க..? அங்க வந்தீங்கனா நாங்கெல்லாம் பாத்துக்கறோம். பொழுது சுகமாப் போகுமல்லோ..


“கத்தாழங்கெழங்கப் புடுங்கித்தின ஈஸ்வரா வருசத்துப் பஞ்சத்துலயே நான் இந்த ஊரைவிட்டுப் போகல..  இனிமேலா போயிருவேனு நெனைக்கறே..என்றவர் என்னைத் தீர்க்கமாகப் பார்த்தார்.

“உனக்கு ஒண்ணு தெரியுமா கோபி..?

என்ன அப்பிச்சி..


மனுசன் அப்பன், ஆத்தா, அண்ணன், தங்கச்சி, பொண்டாட்டி, பிள்ளை, மாமன் , மச்சான்னு உறவுகளைப் பெருக்கினபடி போயிட்டேயிருக்கானே.. ஏந்தெரியுமா..?

சொல்லுங்க அப்பிச்சி..

தான் ஒரு அனாதைங்கிற உண்மைய உணரத்தாண்டா..


ற்சாகக் குரல்கள் எனைத் திடுக்கிட வைத்தன. சித்திகளின் பிள்ளைகள் ஊர்ப்பிள்ளைகளோடு சேர்ந்து தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். புழுதி படலமிட்டிருந்தது. மறைந்துவிட்ட பொழுதின் கதிர்கள், காற்றோட்டத்துக்கும் உயரே ,நகராமல் புகைமூட்டமெனப் படிந்திருந்த மேகங்களின் ஓரங்களை பொன்னிறமாக்கியிருந்தது. கொக்கு கூட்டமொன்று தலைக்குமேலே கடந்து போனது. கருவேலமரத்திலிருந்து அழுக்குவண்ணாங்குருவி விட்டு விட்டு கத்திற்று. மேபுறத் தோட்டமொன்றிலிருந்து பூச்சி மருந்தின் வாசமும் விசைத் தெளிப்பானின் சத்தமும் ஒருங்கே வந்தன. உள்ளிருந்து வெளிப்பட்ட ஆந்தை கிணற்றின் தொலைக்கட்டுத் தூண்மேல் அமர்ந்தது. என் தலை திருப்பலில் திடுக்கிட்டு, குளக்கரை புளியமரம் நோக்கிப் பறந்தது.


அப்பச்சியின் வீட்டில் பேச்சரவம் ஓய்ந்திருந்தது. பால் கறக்கவும் விளக்கு வைக்கவும் அனைவரும் போயிருக்கலாம். வேலைகளை முடித்துக்கொண்டு இரவு எட்டுமணி வாக்கில் வந்து சேர்ந்தார்களெனில் பிறகு விடிய விடிய பேச்சுக் கச்சேரி களைகட்டுமெனத் தோன்றிற்று. கிளம்ப எழுந்தவன் சுற்றுச் சுவர்களின் மேல் கைகளை ஊன்றியபடி உள்ளே எட்டிப் நோக்கினேன். முளைத்த பயிரின் வாசனையொத்த ஈரவாடை நாசியை நிறைத்தது. அரைக்கிணறு ஆழத்துக்குங்கீழே தண்ணீர் கிடந்தது.  பழைய உடைந்த பிளாஸ்டிக் குடங்களையும் சிறு பிள்ளைகளின் பாதணிகளையும் சருகு செத்தைகளையும் சுமந்தபடி கிடக்கும் அந்த தண்ணீரையே  வெறுமையான மனதுடன் பார்த்தபடியிருக்க.. அது எந்த சலனுமுமில்லாமல் அஸ்தமனப்பொழுதின் கரிய வெளிச்சத்தைப் பிரதிபலித்தபடி மினுங்கிக் கொண்டிருந்தது.  அப்பச்சியின் கண்களென.  


  




Wednesday, 1 March 2017

ஈஷோபதேசம்

அந்த செவ்வாய்க் கிழமை பிற்பகலில் கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு ஸ்ட்ரைக் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. மறுநாள் காலை நேரமே ஈஸ்வரண்ணனைப் பார்க்கப் போனேன். போகும் வழியிலேயே திலோத்தமை டீ ஸ்டாலில் அவர் நின்றுகொண்டிருந்தார். அந்த டீக்கடைக்காரரின் சம்சாரம் நல்ல அழகி. அதன் காரணமாக திலோத்தமை என பெயர் வைத்திருந்தேன். எத்தனை காலத்துக்குத்தான் நல்ல அழகிகளை ரம்பா ஊர்வசி மேனகை என்றே சொல்லிக்கொண்டிருப்பது?


என்னைக் கண்டதும் ஈசுவரண்ணனுக்கு முகம் சுணங்கிவிட்டதுபோலத் தோன்றியது. மூன்றடுக்கு டிபன் கேரியரும் அதை வைக்கும் காதறுந்த ஒயர்கூடையும் போய் அதற்குப் பதிலாக ஒற்றை டிபன் பாக்சும் அதை வைக்க ஜிப்புவைத்த அழகான லெதர்பேக்குமாக அவருடைய மதிய உணவுப்பை நாகரீகம் பெற்றிருந்தது. அதனை பக்கத்திலேயே வைத்தபடி தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். ஜீன்ஸ் பேண்ட் என்ன? சர்ட் என்ன? அவரும்கூட ஆளே மாறிப்போயிருந்தார். முகமெல்லாம் பாலீஷாகி புதுமெருகு ஏறியிருந்தது.


“ஸ்ட்ரைக் முடிஞ்சுதா..? நேத்தே கேள்விப் பட்டேன். செரி, எடையில என்ன பண்றது? நின்னா சம்பளம் தரமாட்டாங்க. இந்த வாரம்பூராப் போய் சம்பளம் வாங்கீட்டு.. திங்கக்கெழமையிலிருந்து வேணா பாக்கலாம்” என்றார்.


வருகிறேன் எனச் சொல்லாமல் பார்க்கலாம் எனக் கூறியது எனக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. கவலையும் குழப்பமும் மனதை ஆட்கொண்டது. “ பாக்கலாம் என்ன பாக்கலாம்.. திங்கக்கெழமை கண்டிப்பா வர்றீங்க.. புரியுதா?” என சற்றே கடுமையுடனும் அதே சமயம் அவருக்கு என்மேல் பரிதாபம் உண்டாகும்படியும் கூறிவிட்டு அவருடைய பதிலுக்குக் கூட காத்திராமல் மொபட்டை ஸ்டார்ட் செய்தேன்.     


ஒரு ஷிப்டுக்கு ஒரு ஆள் இருந்தாலே போதும்படியான சிறிய தறிக்குடோன் எங்களுடையது. இரவு பகல் எனும் இரண்டு ஷிப்ட் வேலை முறைமையில், ஒரு ஷிப்ட்டை ஆள்காரர் ஓட்ட மற்றொரு ஷிப்ட்டை நான் ஒட்ட தொழில் நடந்து கொண்டிருந்தது`. ஒரு ஆள்தான் என்றாலும் அந்த ஒரு ஆளைப் பிடிப்பதற்கும் பிடித்த ஆளைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் நான் படாத பாடெல்லாம் படவேண்டியிருந்தது. என்னாலான சாம தான பேத தண்டங்களையெல்லாம் பிரயோகித்துக் கொண்டிருந்தேன்.



தறிக்குடோனுக்குள் புதிதாக வருபவர்களுக்கு ‘ இது சாதரண வேலையல்ல.. எல்லோராலும் முடியாது. தறியோட்டிப் பழகுவதற்கு பெரிய சாமார்த்தியமும் திறமையும் வேண்டும் ‘ என்பது போலெல்லாம் தோன்றும். ஆரம்பத்தில் எனக்கும் அவ்விதமே தோன்றியது. போகப்போக மேலும் ஒரு உண்மையைப் புரிந்து கொண்டேன். அந்த உண்மை இதுதான். ‘ தறியோட்டிப் பழகுவதற்கு எப்படி சாமார்த்தியமும் திறமையும் வேண்டுமோ, அதுபோலவே ஒருவர் தறியோட்டியாகவே தொடர்ந்து இருப்பதற்கு, தான் சாமார்த்தியமும் திறமையும் உடையவர் என்பதை உணராதவராகவும் இருக்க வேண்டும்.’


இந்த உண்மையைக் கண்டறிந்த பிற்பாடு அப்படிப்பட்ட ஆட்களாகத் தெரிவுசெய்து வேலை கற்றுக்கொடுத்து தறியோட்ட வைத்துக் கொண்டேன். இரட்டைத் தம்பிகளான ராசு லட்சு மற்றும் சம்பத்தான் மணியானெல்லாம் என்னிடம் இப்படி இருந்தவர்கள்தான். இந்த உலகத்தில் எதுவும் சாஸ்வதமல்லவே..? எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு ஏற்படும்தானே? அப்படியான முடிவு நாளில் இறக்கை முளைத்த கிளிகள் பறந்து போய்விடும். எதார்த்தத்தைப் புரிந்து கொண்டவனாக நானும் அடுத்த ஆளை, தன் பலத்தை தானுணராத ஆஞ்சநேயரைத் தேடத் துவங்குவேன். இப்படியாக என் காலத்தையும் என் தறிகளையும் ஒட்டிக்கொண்டிருந்தேன்.


பிரகாசும் ஈசண்ணனும்தான் ஏற்கனவே தொழில் பழகிய நிலையில் என்னிடம் வேலைக்கு வந்தவர்கள். பிரகாஷ் மூலமாகத்தான் ஈசுக்குட்டி பழக்கமானார். வேன் டிரைவராகும் லட்சியத்துடன் பிரகாசன் வெளியே போய்விட ( இப்போது அவன் கோயமுத்தூரில்,  பொறியியற் கல்லூரியொன்றில் பேருந்து ஓட்டுனராக இருக்கிறான்). அந்த இடத்தை ஈசு நிரப்பினார்.


’எருமைமேல மழபேஞ்ச மாதிரி..’ என்று சொல்வார்களல்லவா? அப்படியான இயல்பு ஈசண்ணனுடையது. அப்பா இல்லை. அம்மாவும் அவரும் மட்டும்தான். ‘ வெச்சா செமக்கத் தெரியும்.. போட்டாத் திங்கத் தெரியும்.. அதுக்குமேல உனக்கொண்ணுந் தெரியாது’ என அவருடைய அம்மாவே அடிக்கடி சான்றிதழ் கொடுக்கும்படியான சுபாவம் அவருடையது. தறியோட்ட இந்த மாதிரியான சுபாவிகளே மிகவும் பொருத்தமானவர்கள்.


இரண்டு வருடங்கள்போல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் போனது. என்னாலான சுகசெளகரியங்களையெல்லாம் செய்துகொடுத்து ஈசுவை சொந்த அண்ணனைப் போலவே வைத்துக்கொண்டேன். அதேசமயம் தறித்தொழிலை விட்டா நமக்கு வேறு தொழில்கள் செட்டாகாது.. பிறகு சோத்துக்கே வழியில்லாமல் போய்விடும் என்பதுமதிரியான மனநிலையிலேயே அவர் தொடர்ந்து இருக்கும்படியும் பார்த்துக்கொண்டேன்.  
     
எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டுதானே? கூலியுயர்வு கேட்டு எங்களுடைய கூலிக்கு நெசவுசெய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் அறிவித்தது. சீக்கிரமே ஒப்பந்தம் ஏற்பட்டு ஸ்ட்ரைக் முடிந்துவிடும் என எதிர்பார்த்தோம். முதல் இரண்டு வாரங்களுக்கு செலவுக்குக் காசுகொடுத்து ஈசண்ணனை என்னுடனேயே வைத்துக் கொண்டேன். சங்கக் கூட்டங்களுக்குப் போவது, சினிமாவுக்குப் போவது, வெளிச்சோலிகள் என இருவரும் ஒன்றாகவே சுற்றினோம்.


ஸ்ட்ரைக் இப்போதைக்கு முடியாது மாசக்கணக்கில் நீடிக்கும் என்றார்கள். “ வெட்டியா எத்தனை நாளைக்குத்தான் சுத்தறது? சும்மா வெச்ச்சுக்கிட்டே நீங்களும் எத்தனை நாளைக்குத்தான் காசு கொடுப்பீங்க? பனியன் கம்பனிக்குக் கூப்பிடறாங்க.. ஸ்ட்ரைக் முடிஞ்சதும் வந்தர்றேன்என ஈசு கூறினார். பனியன் கம்பனிவேலை  பிடிபட்டுவிட்டால் பிறகு தறியோட்ட வரமாட்டாரே என்ற பயம் எனக்கு உண்டானது. வருமானமின்மை, வட்டிவாசிகள்  ஏலச்சீட்டுகள் (அனைத்துமே எடுத்த சீட்டுகள்) மற்றும் அன்றாடச் செலவுகள் என விழி பிதுங்கிக்கொண்டிருக்கும் சூழலில் மேலும் முன்பணம் கொடுப்பதும் முடியாத காரியமாகத் தோன்றியது. ஈசுவின் சுபாவத்திற்கு பனியன் கம்பனிகள் நிச்சயமாக ஒத்துவராதவை என என்னை நானே தேற்றிக்கொண்டு “ சரி.. அப்படித்தான் கொஞ்ச நாளைக்குப் போங்கண்ணா.. ஸ்ட்ரைக் முடிஞ்சதும் வந்துருங்க..” என அனுப்பி வைத்தேன்.

ஸ்ட்ரைக் முடிந்த பிற்பாடு வந்த வியாழன் வெள்ளி சனி ஆகிய மூன்று நாட்களும் நான் ஒருவனே தறியோட்டினேன். நேராநேரத்திற்கு சாப்பாடும் இல்லை. தூக்கமும் இல்லை. ஏற்கனவே இருந்த பொருளாதார நெருக்கடிகளோடு வேலைநிறுத்தத்தினால் விளைந்த புதிய சுமைகளும் சேர்ந்துகொள்ள ஆள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தறிகளை ஓட்டியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு நான் ஆளாகியிருந்தேன். எப்படா ஞாயிற்றுக்கிழமை வரும் ஈசண்ணனைப் பார்ப்போம் என்று இருந்தது.


ஞாயிறு மாலை ஐந்து மணி சுமாருக்கு ஐநூறு ரூபாய்போல ஏற்பாடு செய்துகொண்டு ஈசுவின் வீட்டிற்கு மொபட்டில் கிளம்பினேன். “இந்நேரம் வரைக்கும் இங்கதான் இருந்தான். இப்ப எங்க போனான்னு தெரியலையே.. எதுக்கும் கடைவீதில போய்ப் பாரு..” என அவருடைய அம்மா கூறினார். இங்கே அங்கே அலைந்து கடைசியாக வெற்றி ஒயின்ஸ் சாக்னாக் கடையில் ஆளை கண்டுபிடித்தேன்.

டீ சர்ட்டும் லுங்கி வேட்டியுமாக ஈசு பளிச்சென்று இருந்தார். பாதியளவுக்கு மதுவோடு குவார்ட்டர் பாட்டில், அதன்மேல் குப்புற கவிழ்த்து வைக்கப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர், ஒரு தட்டில் வேர்க்கடலை, மற்றொன்றில்  ஆம்லெட் என அவர் மேஜை இருந்தது.

”வாங்க.. வாங்க.. நல்ல நேரத்துலதான் வந்திருக்கீங்க..” என்றார். ” உங்களத் தொளாவீட்டுப் போகாத எடமில்ல.. கடைசீல பார்த்தா இங்க உக்காந்திருக்கீங்க..” என்றேன். இப்படியாக எங்களின் உரையாடல் வளர்ந்தது. ஒரு கட்டத்தில் “ காலைல ஷிப்ட்டுக்கு வந்துருங்கண்ணோவ்.. சொல்லீட்டுப் போகலாம்னுதான் வந்தேன்” என்று கூறினேன்.

ஈசு இவ்வளவு விவரமாகவும் கட்டுறுதியாகவும் பேசுவார் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் பேசினார். “இங்க பாரு வெங்கிட்டு.. நீங்க நம்மாளு.. என்ன வேணும்னாலும் கேளுங்க.. செய்றேன். ஆனா தயவுசெய்து வேலைக்கு மட்டும் கூப்ட்றாதீங்க.. தறியோட்றதப்பத்தி நெனச்சாலே அவ்வளவு வெறுப்பா இருக்குது.. இதே நீங்க பனியன் கம்பனி வெச்சிட்டுவந்து வேலைக்கு வா னு கூப்புடுங்க.. அடுத்த செகண்டே ஒடியாறேன். என்ற சார்பா இன்னும் பத்துப்பேர வேணும்னாலும் கூட்டீட்டு வாரேன். ஆனா தறிக்குன்னா ஆகாது. அம்பது செம்பளியாட்ட வாங்கியுட்டுட்டு மேய்க்கலாம் வா னு கூப்புடுங்க.. உங்க மூஞ்சிக்காக வர்றேன். ஆனா தறியோட்றதுக்கு மட்டும் வரச்சொல்லாதீங்க.. அந்த கெரகம் புடிச்ச தொழிலே ஆகாது.. இந்த ஜென்மத்துக்கும் மட்டுமில்ல.. எந்த ஜென்மத்துக்குமே ஆகாது.” என்றார்.


நான் மவுனமாக அமர்ந்திருந்தேன். இனி என்ன சொன்னாலும் வேலைக்காகாது எனத் தோன்றியது. வேறு யாரைப் போய்ப் பார்க்கலாம் என்னும் யோசனை உள்ளுக்குள் ஓடத்துவங்கியிருந்தது. கடைப் பையனைக் கூப்பிட்ட ஈசு, மேலும் ஒரு குவார்ட்டரும் அதற்குண்டான தொடுகறிகளையும் கொண்டுவரச் சொல்லிவிட்டு, என் பக்கம் திரும்பி, “தொழிலாங்க இது..? தெரியாமத்தான் கேக்கறேன்.. இதெல்லாம் ஒரு தொழிலா? காதே செவுடாகற சத்தத்துல தன்னப்போல பையித்தியகாரனாட்ட நாலு செவுத்துக்குள்ளயே சுத்திச்சுத்தி வாரதெல்லா ஒரு பொழப்பா..? இப்படியே இருந்தா உலகமே தெரியாமப் போயிரும். பேசாம நீங்களும் தறிய வித்துப்போட்டு பனியன் கம்பனிக்கே வந்துருங்க.. ரண்டுபேரும் ஒரே கம்பனிக்குப் போகலாம்என்றார்.   


கடைப்பையன் வைத்துவிட்டுப்போன பிராந்தியை ஊற்றிக் குடிக்கத் துவங்கினேன். மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியவில்லை. சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு என்னிடமும் ஒன்றை நீட்டியபடி ஈசண்ணன் கூறினார். “ நீங்கமட்டும் பனியன் கம்பனிக்கு வந்து பாருங்க.. சும்மா என்ன மாதிரி இருக்குதுனு.. எந்தப் பக்கம் திரும்புனாலும் பொண்ணுங்கதான்.. அதுவும்  அத்தனையும் கேரளாப் புள்ளைங்க.  சும்மா சிட்டுப் பறக்கற மாதிரி பறந்துட்டே இருக்கும்பாருங்க.. பாக்கறதுக்கு ரண்டு கண்ணும் பத்தாது. வேலை செய்யற அலுப்பே தெரியாது. நேரம் போறதும் தெரியாது.


சிகரட் புகையை ஆழமாக இழுத்து நிதானமாக வெளியிட்டபடியிருந்தேன். அந்த புள்ளைகளைப் பற்றிய நினைவு ஈசுவுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துவிட்டிருப்பது புரிந்தது. “அதும் அயர்னிங் செக்‌ஷன்ல சூப்பர்வைசரா ஒண்ணு இருக்குது பாருங்க.. அழகுன்னா அழகு அப்படியொரு அழ்கு. சோறு தண்ணிகூட வேண்டீதில்ல.. நாளெல்லாம் பார்த்துட்டே இருக்கலாம் “ என்றார்.


இதற்குமேல் பொறுக்கமுடியாது எனத் தோன்றியது. கொஞ்சம் கோபமாகவே கேட்டேன். “ சும்மா சும்மா புள்ளைங்க இருக்குது.. அழகா இருக்குதுனு ஏன்ணா அதயே சொல்றீங்க..? பொண்ணுங்க இருக்கலாம். அழகாவும் இருக்கலாம். அதனால நமக்கென்ன ஆகப்போகுது? அதுகளுக்கெல்லா கணக்குப்புள்ள மேனேஜர் ஓனர்னு ஆல்ரெடி ஆளுக இருப்பாங்க.. (இந்த இடத்தில் நாமெல்லாம் என்றுதான் வாய் வந்தது. வேண்டுமென்றே தவிர்த்தேன்.) நீங்கெல்லாம் டச் சுங்கூட பண்ணமுடியாது என்றேன்.


அவருக்கு மனம் காயப்பட்டுவிட்டது போல. என்னைவிடவும் கோபமாக திருப்பி கீழ்கண்டவாறு  கேட்டார். பிறகு நான் எந்தப் பதிலும் சொல்லவில்லை. பேசாமல் எழுந்து வந்துவிட்டேன். ஏனெனில் கேள்வி அவ்வளவு கேனத்தனமாக இருந்தது. அல்லது, ஞானத்தனமாக.

“என்ன மனுசனுங்க நீங்க..? ஒரு புள்ளை அழகா இருக்குதுனு சொன்னா உடனே நம்முளுக்கு ஆகுமானு கேக்கறதா..? அழகா இருந்தா இருந்துட்டுப் போகட்டும் நம்முளுக்கெதுக்கு ஆகோணம்?