31, பல்லி-1
என் அறையிலிருந்த மூன்று
பல்லிகளில் இரண்டை
விரட்டியடித்து விட்டேன்
பயமற்ற மூன்றாவது பல்லி
எங்கே ஒளிந்திருக்கிறது என்பதை
கண்டுபிடிக்க முடியவில்லை
என் தைரியங்களையெல்லாம் திரட்டி
மூன்றாவது பல்லியை
தேடியபடியிருக்கிறேன்
மிகுந்த பயத்தோடு.
32, பல்லி-2
எப்போதும் யாருடனாவது
இருந்தபடியேயிருக்கும் நானும்
எப்போது பார்த்தாலும் தனியாகவே
இருந்தபடியிருக்கும் பல்லியும்
இப்போது சந்தித்துக் கொண்டோம்
பல்லி சொனனது “ நீ விரும்பினால்
என்னைக் கொன்றுவிட முடியும்”
நான் கூறினேன் “ நீ விரும்பினாலும்
என்னைக் காப்பாற்றிவிட முடியாது”
33, பல்லி -3
“ஏ பல்லியே… உனக்கு
இங்கென்ன வேலை”
என்றேன்
மவுனமாக இருந்தது
“ஏ பல்லியே.. இந்த இடத்தில் நீ
இருக்கலாகாது
ஓடிப்போய்விடு” என்றேன்
மவுனமாக இருந்தது
“ஏ பல்லியே… உன்னைக் கொன்றே போடுவேன்”
என்றேன்
மவுனமாகவே இருந்தது
ஆமாம்.. என்னால் ஏன் மவுனமாகவே
இருக்க முடியவில்லை?
34, கோப்பைத்
தவளை
ஒட்டுமொத்த நீளத்தில்
இச்சுட்டுவிரலின் நீளமெல்லாம்
நீளமா என்ன
ஒட்டுமொத்த உயரத்தில்
இச்சுட்டுவிரலின் உயரமெல்லாம்
உயரமா என்ன
ஒட்டுமொத்த ஆழத்தில்
இச்சுட்டுவிரலின் ஆழமெல்லாம்
ஆழமா என்ன
நீள உயர ஆழத்திற்கெல்லாம்
அளவு என்பது ஏது?
ஒட்டுமொத்தம் என்பதும்தான் ஏது?
இச்சுட்டுவிரலின் நீளமே நீளாதிநீளமாய்
இச்சுட்டுவிரலின் உயரமே உயராதியுயரமாய்
எத்தனையெத்தனையோ நகர்ந்தபடியிருக்கலாம்
எத்தனையெத்தனையோ பறந்தபடியுமிருக்கலாம்
கழிவறைக் கோப்பையின் நீரினுள்
சுட்டுவிரல் ஆழமேகொண்ட அதன் ஆழாதியாழத்தில்
நீந்திநீந்திக் களிக்குமிந்த தலைப்பிரட்டைகளைப்போல.
35, கீகாத்துமேகாத்துசமேதர…
கதவின் வழியாக வந்தால் கீகாத்து
சன்னலின் வழியாகவென்றால் மேகாத்து
கதவுக்கும் சன்னலுக்கும் நடுவே
உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்
சற்றுமுன்பு மேகாத்து வீசியது
சற்று முன்பிற்கும்முன்பு கீகாத்து
விசியது
தற்போதோ கீகாத்தும் வீசுகிறது
மேகாத்தும் வீசுகிறது
சற்று முன்பிருந்த நானும்
சற்று முன்பிற்குமுன்பிருந்த நானும்
கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம்
தற்போதைய என்னை.
36, மனோகாரகன்
நீ உத்திரட்டாதி
நான் மிருகசீரிடம்
நீ பசுமாடு
நான் சாரைப் பாம்பு
அன்றைக்கு வெள்ளிக் கிழமை
வெள்ளிக்கு அதிபதி யாரென்றால்
களத்திரகாரகனும்
பாலுணர்வுகளைத் தூண்டிவிடக்
கூடியவனுமாகிய சுக்கிரன்
அன்றைக்குப் பார்த்து
மனோகாரகனும் கற்பனைகளுக்கு
அதிபதியுமாகிய சந்திரன்
பெண் எருமைமேலே போய்க் கொண்டிருந்தான்
அதாவது, அஸ்தநட்சத்திர வெளியிலே
சஞ்சரித்தபடியிருந்தான்
நாம் சந்திக்க நேர்ந்தது
அஸ்தம் உனக்கு சாதக தாரை
அதாவது நல்வாய்ப்பு
எனக்கோ பரம மைத்திரம்
அதாவது சகித்துக்கொள்ளவே முடியாத
பேரன்பு
அப்புறமெனது காதல் எக்கதிக்கு
ஆளாகியது என்பதுதான் உனக்கும்
தெரியுமே
பிறகு நம்கண்கள் கடைசிகடைசியாகப்
பார்த்துக் கொண்டபோது
என் அம்மாவை டிவிஎஸ்50ன் பின்சீட்டில்
அமரவைத்தபடி நல்ல வெயிலில்
போய்க் கொண்டிருந்தேன்
நீ பேருந்துநிறுத்த நிழற்குடையில்
அமர்ந்திருந்தாய்
அன்றைக்கு சனிக்கிழமை
அமாவாசயுங்கூட
சனி என்பவன் நீதிமான்
அவரவர்க்கான பாவபுண்ணியங்களை
அனுசரித்து
அவரவர்க்கான நல்லது கெட்டதுகளைப்
பண்ணுகிறவன்
மனோகாரகனும் கற்பனைகளுக்கு
அதிபதியுமாகிய சந்திரன்
அன்றைக்கு எந்த பிராணியின்மேலே
எந்த நட்சத்திர வெளியிலே
சஞ்சரித்தபடியிருந்தான் என்பதையெல்லாம்
கேட்காதே
அதைப்பற்றி எனக்கென்ன.
37, மற்றதும்தீதே
நேற்று பகல்
பதினொரு நாழிகைக்கு
அர்ச்சுனன் தன் வித்தைகளையெல்லாம்
காட்டினான்
சும்மா சொல்லக்கூடாது
வில்வித்தையில் அர்ச்சுனன் ஒரு
மாஸ்டர்தான்
அவனுக்கு நிகர் யாருமில்லையென
கூத்தாடிக் கொண்டிருந்த கணத்தில்தான்
தெற்குத்திசையைக் கிழித்தபடி ஒருவன்
வந்து நின்றான்
கர்ணன் என்றார்கள்
அர்ச்சுனன் செய்த வித்தைகளையெல்லாம்
அவனும் செய்து காட்டினான்
சும்மா சொல்லக்கூடாது கர்ணனும்
ஒரு மாஸ்டர்தான்
ஆனாலும் துரியோதனனைத்தவிர யாரும்
அங்கீகரிக்கவில்லை
உண்மை என்னவெனில் துரியோதனன் போலொரு
நல்லவர் யாருமேயில்லை
கர்ணனனைப் போலொரு வில்வீரனும்
யாருமேயில்லை
இருவருமே தோற்கடிக்கப் பட்டார்கள்
பேருண்மை என்னவெனில்
தர்மமும் கவ்வும்
38, வஞ்சினமுரைத்தல்
தெற்கிருந்து வடக்கே
வந்து கொண்டிருந்தேன்
இரண்டு வேப்பங்கொம்புகளை
பின்புலமாகக்கொண்ட சிறு பசும்புல்வெளியில்
மூன்று கற்களைக்கூட்டிப் பற்றவைத்த
தற்காலிக அடுப்பில்
தன்னந்தனியாக ஒரு முதுகிழவி சமைத்துக்
கொண்டிருந்தாள்
மேற்கிருந்து கிழக்கே
சென்று கொண்டிருந்தேன்
இடப்பக்கம் இந்திரா காலனியையும்
வலப்புறத்தே
கிளுவைவேலியையும் கொண்டமைந்த சிறு
தார்ச்சாலையில்
குறுக்கிட்ட பூனைக்குட்டியொன்று
செய்வதறியாது திகைத்து
நடுரோட்டிலேயே ஸ்தம்பித்தமர்ந்து
விட்டது
சீறியபடி அங்கிருந்து ஒரு நான்கு
சக்கரம் வந்தது
இங்கிருந்துவொரு இரண்டு சக்கரம்
சென்றது
இரண்டு சக்கரத்தின் பின்னிருக்கையில்தான்
நானும்
அமர்ந்து கொண்டிருந்தேன்
அப்போது அதுசமயம் பூனைக்குட்டிக்குள்
புகுந்து
அந்த கண்களிரண்டினால்
நீங்கள் பார்த்திருக்க வேண்டும்
மயிரிழை இடைவெளிக்குள்தான் எவ்வளவு
மகத்தான சக்தி இருக்கிறது
மயிரிழை இடைவெளிக்குள்தான் எவ்வளவு
காணாத தூரமும் இருக்கிறது
குத்துப்பட்ட காயங்களுக்கெல்லாம்
மதுவைத் தொட்டு மருந்திட்டபடி
இப்போது என் அறையில்
அமர்ந்திருக்கிறேன்
குற்றவாளிக் கூண்டாகிய மேல்மாடத்தில்
வழக்கம்போல்
உங்களில் பலரை நிறுத்தி
வழக்கம்போல் கீழே நின்றபடி தொடைகளைத்
தட்டித்தட்டி
கைகளை நீட்டிநீட்டி
சூளுரைக்கவும் முயற்சித்தேன்
வழக்கத்திற்கு மாறாக எனக்கும்
கீழே அம்முதுகிழவி
வந்து நிற்கிறாள்
அந்த பூனைக்குட்டியோடு
தொடைகளைத் தட்டியபடி
கைகளை நீட்டியபடி.
39, தத்ரூபம்
ஐந்தாம் வகுப்பு முழுப்பரிட்சை
லீவில்
தூரத்து டவுனிலே இருக்கின்ற
சித்தியின் வீட்டிற்கு சென்றுதிரும்பிய
சிவானந்தம்
மூன்று புகைப்படங்களைக் காட்டிக்காட்டி
பெருமையடித்துக் கொண்டிருந்தான்
படிக்காதவன் ரஜினியோடு அவன்
நிற்பது மாதிரியும்
விக்ரம் கமலஹாசனோடு அவன்
நிற்பது மாதிரியும்
என் தங்கைக் கல்யாணி டிஆரோடு
அவன் நிற்பது மாதிரியும் மூன்று
புகைப்படங்கள்
அவ்வளவு தத்ரூபமாக இருந்தன
அதெப்படி? பொருட்காட்சியின் நிற்கவைத்த
அட்டைகளோடு நின்று எடுத்துக்கொண்ட
புகைப்படங்கள்
அவ்வளவு தத்ரூபமாக இருக்க முடியும்
என
இன்றளவும் சந்தேகம் இருந்துகொண்டேயிருக்கிறது
ஆனாலும் அப்புகைப்படங்கள்
அவ்வளவு தத்ரூபமாகவேதான் இருந்தன.
No comments:
Post a Comment