Friday, 18 September 2020

 

                                                                                         வாஸ்தவம்

 

கிழபுறத்து ஜன்னலின் கதவுகள் சாத்தப்பட்டிருந்தன. மேபுறத்து ஜன்னலின் வழியாக உள்நுழைந்த மேகாத்து கிழக்குச்சுவரில் மோதி அரைவட்டமாக சுழன்று கொஞ்சமாகத் திறந்து வைக்கப்பட்டிருந்த அந்த அறையின் வடக்குப் பார்த்த கண்ணாடிக் கதவின் வழியாக வெளியேறியபடியிருந்தது. காற்றின் வேகம் சற்றே அதிகரித்தது. மேஜைமேல் அடுக்கப்பட்டிருந்த வெள்ளைத் தாள்கள் மெல்லிய ஓசையுடன் படபடத்தன. ஒயர் நாற்காலிக்கு முழுவதுமாக முதுகைக் கொடுத்து அரைத் தூக்கத்திலிருந்த மிஸ்டிக் சுப்ரமணிக்கு சட்டென்று விழிப்பு வந்தது. எதிர்ப்பக்கம் மாட்டப்பட்டிருந்த ராஜ அலங்கார முருகனின் கண்களும் மிஸ்டிக் சுப்ரமணியத்தின் கண்களும் ஒரு கணம் சந்தித்துக் கொண்டன.  ‘இன்னிக்கு ஒரு கிராக்கியும் வராமப் பண்ணிப்போட்டியே.. காலைலயிருந்து வெறுங்காத்தா ஆடுதே..’ என்னும் நினைப்பு உள்ளே ஓடியது.

 

’இருக்கிறதுதான்.. அதனாலென்ன?’ என பதிலுக்கு முருகனின் கண்கள் சமாதானப்படுத்துவதுபோல நோக்கின. அந்த அலங்கார முருகனின் கண்கள் எப்போதுமே இப்படித்தான். உட்கிடக்கையை நன்கு அறிந்தவை. மன அந்தரங்கத்தின் குறிப்பறிந்து அதற்குத் தகுந்த மாதிரியான ஆசீர்வாதங்களை நல்கியருளும் ஞானத்தின் ஒளி அந்தக் கண்களில் எப்போதும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

 

மணி நான்கு முப்பதை தாண்டிக்கொண்டிருந்தது. பொழுது சாய்ந்துவிட்டால் பெரும்பாலும் யாரும் ஜாதகம் பார்க்க மாட்டார்கள். இனி இன்றைக்கு யாரும் வருவதற்கு வாய்ப்பில்லை. மேஜை டிராயரைத் திறந்த மிஸ்டிக் சுப்ரமணி நேற்றைய சம்பாத்தியத்திலிருந்து ரூபாய் ஐநூறை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். நாற்காலியைவிட்டு எழுந்து மேகாத்தையும் அந்திவெயிலையும் உள்ளே அனுப்பியபடியிருந்த சன்னல் கதவுகளை சாத்திவிட்டு தனது பிரத்யேக ஆலோசனை அறையை விட்டு வெளியே அலுவலகத்தின் வரவேற்பு அறைக்கு வந்தார். வாடிக்கையாளர்கள் காத்திருப்பதெல்லாம்  இந்த அறையில்தான் . ஞாயிறு மாதிரியான விடுமுறை நாள் வெள்ளி புதன் மாதிரியான சுபநாட்களிலெல்லாம் காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து மூன்று நான்கு பேர்களாவது உட்கார்ந்திருப்பார்கள். இன்றைக்கும் புதன்கிழமைதான். ஆனால் இன்றைய புதன்கிழமைக்கு என்ன வந்ததோ? ஒரு ஈ காக்கையைக் கூட காணவில்லை.

 

கதவைச்சாத்தி நாதாங்கியைப் போட்டுவிட்டு வாசற்படியிலமர்ந்தபடி சிகரெட்டைப் பற்றவைத்தார். இடப்புறமிருந்த பெரிய வேப்பமரத்தின் இலைகளடர்ந்த கிளைகளுக்குள் புகுந்தபடியிருந்த மேகாத்து ஆராவாரமான சப்தங்களை உண்டாக்கியபடி வெளியேறி கிழக்காகப் போனபடியிருந்தது. நதியின் ஓட்டம் போலத்தான் காற்றின் ஓட்டமும். இறங்கும்கணத்தில் கால்களை நனைக்கும் தண்ணீரும் முங்கியெழுகையில் உடலைத் தழுவிச்செல்லும் தண்ணீரும்  ஒரே நதியின் தண்ணீர்தான் என்றாலும்  ஒரே தண்ணீரல்ல. சற்றுமுன் வேப்பமரத்துக்குள் புகுந்து புறப்பட்ட காற்று தற்சமயம் கிழக்கு வேலியையொட்டியிருக்கும் தென்னைமரத்தின் மட்டைகளை ஆட்டிக்கொண்டிருப்பதாக இருக்கலாம்  அல்லது அதற்குப் பக்கத்திலேயே வளர்ந்து நிற்கும் ஆனைமசால் புற்களின்மேற்பரப்பில் அலைகளை எழுப்பியபடி நகர்வதாகவும் இருக்கலாம் என்னும் உணர்வு மிஸ்டிக் சுப்ரமணிக்கு உண்டானது.

 

அந்த தென்னை மரத்தை ஒட்டியேயெயிருக்கும் கிளுவை வேலியில் அவரது அம்மா அவளின் வெள்ளாட்டுக்கும் அதன் குட்டிகளுக்கும் படர்ந்திருக்கும் மிஷ்டைக் கொடிகளை சள்ளைக் கத்தியில் இணுங்கி இணுங்கிப் போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. சேலையை மடக்கி இடுப்பில் சொருகியபடி குனிந்த முதுகு நிமிராதவளாக அவரது மனைவி மகாலட்சுமி ஆனைமசாலை வேகவேகமாக அறுத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. உள்ளூருக் கான்வென்டில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் அவரது பையன் நாட்ராயசாமி பள்ளிக்கூடம் விட்டதும் வழக்கம்போலவே யாரோடும் சோடி சேர்ந்துகொண்டு விளையாடவெல்லாம் போகாமல் அவன் அம்மா சொல்லிவிட்டது போலவே நேராக வீட்டுக்கு வந்துவிட்டான்போல. அறுபட்டுக் கிடக்கும் ஆனைமசால் புற்களை சிறுசிறு தாவுகளாக தாவிக்கொண்டுபோய் மாட்டுக்கட்டுத்தரைச் சாளையில் போட்டபடியிருப்பதும் தெரிந்தது.

 

நட்சத்திரம் பார்த்து பொறந்ததேதி பார்த்து நேமாலஜி நியூமராலஜியெல்லாம் பார்த்து நீங்களே புதுசுபுதுசா டிசைன்டிசைனா எத்தனையோ குழந்தைகளுக்கு பேருவெச்சுக் குடுக்கிறீங்க.. ஆனா உங்க பையனுக்கு இந்தக்காலத்துல போயி அந்தக் காலத்துப்பேரா வெச்சிருக்கீங்ளே..?என்று யாராவது கேட்பதும் உண்டு. என்ன செய்வது ? அந்த விசயத்தில் மிஸ்டிக்கின் நேமாலஜி நியூமராலஜி எதுவும் அவரது மனைவியின் லாஜிக்காலஜிக்கு முன்னால் எடுபடவில்லை.  வள்ளுவலுசலுகளே  எத்தனையோபேரு ஒரு கொழந்தை கெடைக்காம ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா கோயில்கோயிலா ஏறியெறங்குறாங்க. இந்த நெலமைல காலம்போன காலத்துல கல்யாணம் ஆனாலும் நம்ம ரண்டுபேருக்கு மட்டும் கல்யாணமாகிப் பத்தே மாசத்துல தலநாள்ல ஆம்பளப் புள்ள கெடச்சிருக்குதுனா என்ன காரணம் ? எங்கப்பிச்சி நாட்ராயசாமி கொகைல நான் வெசாழக்கெழம வெசாழக்கெழம நெய்த்தீபம் போட்டு வேண்டிக்கிட்டு வந்ததுதான் காரணம். அதனால உங்க நேமாலஜி கீமாலஜியெல்லாம் வேற யாருகிட்டயாவது வெச்சுக்குங்க… எம்பையனுக்கு நான் எங்கப்பிச்சி நாட்ராயசாமி பேரத்தான் வெப்பேன்’.

 

லாஜிக்கே இல்லாமல் பேசினாலும்கூட மகாலட்சுமி பேசினால் மறுவார்த்தை பேசுவதில்லையென்பதை மிஸ்டிக் சுப்பு கொள்கையாகவே வைத்திருந்தார். இந்த தள்ளாத வயதிலும் வெள்ளாடுகளை மேய்த்துக்கொண்டிருக்கும் அவருடைய அம்மாவின் கொள்கையும்கூட அதுவாகத்தான் இருந்தது. மகாலட்சுமியை பெண்பார்க்கப் போனபோது சுப்புவுக்கு முப்பத்தியொன்பது வருடங்களும் மூன்று மாதங்களும் ஆகியிருந்தது. உருப்படியாக எந்த வேலையுமில்லை. வருமானமுமில்லை. ஆறாம் வகுப்பு படித்த காலத்திலிருந்தே வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டு எந்தச் சூழ்நிலை மாற்றத்திலும் அந்தப் பழக்கம் மட்டும் மாறாமல் தொடந்த படியேயிருந்தது. சாண்டில்யன் கல்கியிலிருந்து சுஜாதா பாலகுமாரன் வரைக்கும் ஊர்ப்புறத்து கிளை நூலகத்திலிருந்த முக்கால்வாசிப் புத்தகங்கள் அத்துப்படியாகியிருந்தது. ஏனோ  தமிழின் பின்நவீன தளத்துக்கெல்லாம் சுப்பு போகவேயில்லை. ஜோதிடமாமணி பழனிச்சாமியின் தொடர்பு கிடைத்த பிற்பாடு சுப்புவின் வாசக மனம் சோதிட நூல்களின்மேல் மையலுறத் துவங்கியது.

 

ஊராட்சியொன்றிய தொடக்கப் பள்ளியொன்றில் தலைமையாசிரியராக பணிசெய்துவந்த பழனிச்சாமி வேலை நாட்களில் ஆசிரியராகவும் விடுமுறை நாட்களில் சோசியராகவும் இரட்டை பாத்திரங்களில் பரிணமித்துக் கொண்டிருந்தார். பணி ஓய்வுக்குப் பிறகு வாத்தியார் பழனிச்சாமி  ஜோதிடமாமணி பழனிச்சாமியாக விஸ்வஉரு எடுத்திருந்தார். எந்த வேலைக்கும் ஒழுங்காகப் போகாமல் வெள்ளாடுகளை மேய்த்து தன் அம்மா போடும் சோத்தைத் தின்றபடி வெட்டியாக சுற்றிக் கொண்டிருந்த சுப்பு ஒருநாள் ஒருபொழுதில் தன் ஜாதகத்தை எடுத்துகொண்டு போயிருந்தான். இந்திரா செளந்தர்ராஜனின் கதைகளையும் வாசித்திருந்ததால்  சித்தர்களைப் பற்றியும் கதைகளில் படித்திருந்த ஜோதிட சமாச்சாரங்களைப் பற்றியும் பேசத் துவங்க ஜோதிடமாமணிக்கு சுப்புவை மிகவும் பிடித்துப் போயிற்று. ஜாதகம் பார்க்க மட்டுமின்றி ஜாதகம் எழுதித்தரவும் நிறைய கிராக்கிகள் வந்தபடியேயிருந்ததால் தனக்கு உதவியாளாக  மணிமணியான கையெழுத்தாளனாகிய எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த சுப்புவை சேர்த்துக் கொண்டார்.

 

வாத்தியாரிடம் சேர்ந்த பிற்பாடுதான் வாழ்க்கை ஒரு தினுசாக  சொகுசாக மாறத் துவங்கியது. மகாலட்சுமியைக் கல்யாணம் பண்ணுவதற்குக்கூட அவருடைய சிபாரிசுதான் பேருதவியாக இருந்தது. தான் படிக்காத படிப்பையெல்லாம் தன் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்கிறமாதிரியான கனவுகள் படிப்பறிவில்லாத நிறைய பெற்றோர்களுக்கு இருக்கிறது அல்லவா?. அதுபோலவே ஆறாம்  வகுப்பில் பெயிலான கையோடு அய்யனின் செம்பிளியாடுகளை மேய்க்கத் துவங்கியிருந்த மகாலட்சுமிக்கும் ஒரு கனவு இருந்தது.  தான் படிக்காத படிப்பையெல்லாம் தனக்கு புருசனாக வரப்போகிறவன் படித்திருக்க வேண்டும்.

 

என்னதான் பெண்பிள்ளைகளுக்கு தட்டுப்பாடான காலம் என்றாலும், சரியான படிப்பும் வருமானமுமில்லாமல் கல்யாணத்துக்கு பெண்கிடைக்காமல் முதிர்கன்னர்கள் ஊருக்கு பத்துபதினைந்துபேர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும், நன்கு படித்து நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெண்கிடைப்பதில் எந்த தட்டுப்பாடும் இல்லாமல்தான் இருந்தது. தான் கனவு கண்டதுபோல எந்த பேங்க் மேனேஜரும் எந்த பள்ளிக்கூட வாத்தியாரும் தன்னைத் தேடி வரப்போவதில்லை என்னும் உண்மையை உணரத்துவங்கியபோது மகாலட்சுமிக்கு நாற்பது வருடங்களும் ஏழு மாதங்களும் ஆகிவிட்டிருந்தது.

 

அந்த வயதிலும்கூட படிப்பும் உத்தியோகமுமில்லாத மாப்பிள்ளைகளின் மத்தியில் அவளுக்கு கிராக்கி இருக்கவே செய்தது. பெரிதாக எந்த வசதியும் வருமானமுமற்ற சுப்புவின் ஜாதகத்தோடு பிராயம் நாற்பதைத் தாண்டிவிட்ட ஒரு வசதியான தென்னந்தோப்பு முதிர்கன்னனின் ஜாதகமும் போட்டிபோட, தங்கள் குடும்ப சோசியரான பழனிச்சாமியின் அறிவுரைப்படி மகாலட்சுமியின் கரங்கள் சுப்புவுக்கு மாலையிட்டன. ஒரேயொரு பையனைப் பெற்று அவனுக்கும் கல்யாணமில்லாமல் தலைமுறை தலைமுறையாக மூன்று வெள்ளாடுகளையும் இரண்டு கன்றுக் குட்டிகளையும் வளர்த்து வயிற்றைக் கழுவிவரும் தங்கள் வம்சமே வாரிசில்லாமல் அழிந்துவிடுமோ என நித்தமும் நினைத்து நினைத்து மருகிக்கொண்டிருந்த  அம்மாவுக்கு சுப்புவைக் கட்டிக்கொள்ளச் சம்மதித்த மகாலட்சுமி உண்மையாகவுமே அந்த மஹாமஹா லட்சுமியாகவே மாறியும் போயிருந்தாள்.     

 

காலையிலிருந்து ஒருவர்கூட வரவில்லையே என்னும் நினைப்பு மிஸ்டிக் சுப்புவிற்கு மறுபடியும் உண்டானது. தொந்தரவு தரும் நினைப்பு. விடிந்தும் விடியாததுமாக வாஸ்து பார்ப்பதற்கு  வரவேண்டுமென வந்து நின்ற மொட்ரப்பாளையத்து முத்துக்குட்டியை தட்டிக் கழிப்பது தெரியாத வண்ணம் சாக்குப்போக்காகப் பேசி  அனுப்பி வைத்திருந்தார். அதுதான் இன்றைய நாள் வெறும் நாளாகப் போய்விட்டதற்குக் காரணமோ என்றும் தோன்றியது. அப்படியொன்றும் முற்றாக மூஞ்சியிலடிப்பது மாதிரியும் பேசிவிடவில்லை. வாயை வைத்து வயிறு வளர்ப்போர்க்கு வாய் நீண்டுவிடக் கூடாதல்லவா?  இன்னிக்கு புதன்கிழமைங்கிறதால நெறைய புக்கிங் இருக்குது..இப்போ வரமுடியாது.. நாளைப்பின்னெ வாங்க.. இல்லாட்டி சாயந்தரமாக் கூப்பிடுங்க..என்று கொஞ்சம் கோளாறாகத்தான் பேசி அனுப்பி வைத்திருந்தார்.  

 

வாஸ்து குறித்தான ஆலோசனைகள் தேவைப்படுவோருக்கு அதிகாலையிலேயே போய் சொல்லிவிட்டு வருவது வழக்கம்தான். வீடு  கடை கட்டிடம் கிணறு கோழிப்பண்ணை தேங்காய்க்களம் என்றிருந்தால் உடனே கிளம்பியிருக்கலாம். ஏதோ ஆளுக்குத் தகுந்தமாதிரி ஆலோசனைக்குத் தகுந்தமாதிரி ஐநூறோ ஆயிரமோ ரண்டாயிரமோ மூவாயிரமோ கொடுப்பார்கள்.

 

மாட்டுச்சாளை என்றால்கூட பரவாயில்லை. ஆஸ்பெஸ்ட்டாஸ் ஓடுவேய்ந்த கூரையும் ஆறடி உயரத்திற்கு ஹாலோபிளாக் கல்லினால் மூன்றுபக்கங்களில் சுவரும் என வேலைகள் இருக்கும். அதற்குத் தகுந்த செலவுகளும் இருக்கும். அந்தச் செலவோடு செலவாக இந்தச் செலவும்தான் சேரட்டுமே என வாஸ்து ஆலோசகருக்கும் ஆயிரமோ ஐநூறோ எடுத்து நீட்டுவார்கள். ஆனால், முத்துக்குட்டி வந்து நின்றது மாட்டுக்கட்டுத்தரைக்கான ஒதுக்குப் படல்களை எங்கே கொண்டுபோய் வைப்பது என்பதை பார்த்துச் சொல்வதற்காக. இப்போது ஒதுக்குப்படல்களை வைத்திருக்கும் இடத்தில் மாடுகளை கட்ட ஆரம்பித்ததிலிருந்து ஒன்றுமே சரியில்லையாம். ‘ஒண்ணு செனை நிக்கமாண்டீங்குது இல்லாட்டி கன்னுப்போட்டா காய்ச்சல் வந்துருது இல்லாட்டி கன்னுக்குட்டி செத்துப்போயிடுது இல்லாட்டி மடிவீக்கம் வந்து பாலே கறக்க முடியாமப் போயிருது.. ஒண்ணுமே செரியில்லை.. அந்த எடத்துலதான் ஏதோ மிஸ்டேக்குனு நினைக்கறேன்.. சித்த வந்து மிஸ்டேக்கில்லாத நல்ல எடமா பார்த்துச் சொல்லுங்கஎன்றார்.  

 

 

எதுவெதுக்கோ ஆலோசனைகள் சொல்பவர்க்கு  ஒதுக்குப்படல்களை வைப்பதற்கு ஆலோசனை நல்குவது பெரிய விசயமில்லை. சொல்லிவிடலாம்தான். ஆனால், இந்த மாதிரியான ஆலோசனைகளுக்கெல்லாம் என்னவென்று காசு கேட்பது? பைசா பெயராது. நிச்சயம் ஒரு டம்ளர் காபியோ டீயோ கிடைக்கும். குடித்துவிட்டு வாயைத் துடைத்துக் கொண்டு வந்துவிடவேண்டியதுதான். நாளின் முதல் ஆலோசனையே வெறும் ஆலோசனையாகப் போனால் நாள்முழுதும் அப்படித்தான் போய்விடும் எனத் தோன்றியது. எப்படியாவது அந்த ஒதுக்குப்படல் புராஜக்ட்டை மாட்டுச்சாளைப் புராஜக்ட்டாக மாற்றிவிடுவது என முடிவெடுத்தார்.  நான் வேணும்னா வந்து  வாஸ்துப்பிரகாரம் நல்ல எடமாப் பார்த்து சொல்றேன். சுத்தியும் செவுருவெச்சு மேலயும் சிமெண்ட் சீட்டோ ஓடோ போட்டு சாளையாவே கட்டிப்போடுங்க.. அதான் நல்லது. என்னதான் வாஸ்துப்படி நல்ல எடமா இருந்தாலும் மாடுகளை மழைலயும் பனிலயும் நனையவுட்டா சீக்கு வரத்தான் செய்யும். இப்பத்த காலாச்சி மாடுகளுக்கெல்லாம் நோய் எதிர்ப்பு சக்திங்றதே ரொம்பரொம்பக் கம்மிதான்    

 

அட ஏனுங்ண்ணா… அந்தளவுக்கு என் நெலமை இருந்தா அப்புறமென்ன..? நானே ஊருவிட்டு ஊருவந்து இருவது வருசமா ஓலையூட்ல உக்காந்திட்டிருக்கேன். இந்த லட்சணத்துல மாட்டுக்கெல்லாம் எங்க சாளை கட்றது? பெருசாவெல்லாம் ஆசைப்படாம எது இருக்குதோ அதைய வெச்சு ஒப்பேத்திக்க வேண்டியதுதான்..உண்டான நிலமையை தேங்காயை உடைப்பதுபோல உடைத்த முத்துக்குட்டி “எப்படியாச்சும் வந்து பார்த்துச் சொல்லிப்போடுங்ண்ணா.. ரொம்ப உதவியா இருக்கும்என்றார்.

 

இருக்கிற இருப்பைப் பார்த்தால் ஒரு கிளாஸ் காபித்தண்ணியும்கூட இல்லாமல்தான் திரும்பி வரவேண்டியிருக்கும்போல என சுப்புவின் மூளை கணக்குப் போட்டது. “செரிங்ண்ணா… சூழ்நிலை ஒத்துழைக்கலைன்னா யாருதான்  என்ன பண்றது? இப்ப பாருங்க காலைல ஏழு மணிக்கெ ஒருத்தர வரச்சொல்லீட்டேன். இப்ப உங்ககூட வந்துட்டு திரும்பிவர்ரதுக்கு ரொம்ப லேட்டாயிடும். இன்னிக்கு பொழுதுக்குமே புக்கிங் இருக்குது. எதுக்கும் சாயந்திரமாக் கூப்பிடுங்க.. அவகாசம் கிடைச்சுதுன்னா வந்தர்றேன்.. இல்லாட்டி நாளைப்பின்னே பார்க்கலாம்

       

காலையில் முத்துக்குட்டியிடம் அப்படியெல்லாம் பேசியிருக்கக்கூடாதோ என சுப்புவின் மனசுக்குள் ஒரு சந்தேகம் தோன்றியது. இத்தனைக்கும் முத்துக்குட்டி முன்பின் அறிமுகமற்றவரோ தெரியாத மனிதரோ அல்ல. இருபது வருடங்களுக்கு முன்பு தறியோட்டப் போவதைவிட்டுவிட்டு பேப்ரிகேஷன் மிசின் ஓட்டிப் பழகுவதற்காக திருப்பூர் போன காலத்திலிருந்தே அறிமுகம். சுப்புவின் பேப்ரிகேஷன் குருவான பக்கத்து ஊரைச்சேர்ந்த ராமசாமியண்ணனின் தோட்டத்திற்குப் பக்கத்தில்தான் முத்துக்குட்டியும் இருந்தார். என்ன காரணத்தினாலோ சொந்த ஊரிலிருந்த பூர்விக நிலத்தை விற்றுவிட்டு இங்குவந்து மிகவும் கம்மியான விலைக்கு ஒரு வறண்ட நிலத்தை வாங்கி கிணறு வெட்டிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவ்வப்போது ராமசாமியண்ணன் குடுக்கும் முயல்கறி விருந்தில் கலந்துகொள்ளப் போகும்போது அங்கே முத்துக்குட்டியும் இருப்பார். வயது வித்தியாசமில்லாமல் சிறியவர் பெரியவர் என அனைவரையும் அண்ணா..போட்டு விளிக்கும் முத்துக்குட்டிதான் அந்த விருந்துக்கறியை பக்குவமாக சமைத்துத்தரும் சமையல்காரராகவும் விருந்துக்கான முயல்களை கண்ணிவைத்துப் பிடித்துக் கொண்டுவரும் வேட்டைக்காரராகவும் இருந்தார். கொஞ்சநாளில் ராமசாமியண்ணனுக்கு திருமணம் நடந்து அவர் திருப்பூருக்கேபோய் செட்டிலாகிவிட்டார். பிறகு அந்த விருந்துக் குழுவினர்கள் சந்திப்பது அரிதாகிவிட்டது. அதுவும் சாதாரண பேப்ரிகேஷன் ஆபரேட்டரான சுப்ரமணி  பிரபல ஜோதிடர் மிஸ்டிக் சுப்ரமணியாக பிஸியாகிவிட்ட பிறகு பழைய காலத்து பழக்கவழக்கங்களையெல்லாம் நினைப்பதும்கூட அரிதாகிவிட்டது.   

 

 

 

இந்த பத்துவருச காலத்துல இப்பதான் பேரு பரவி பெரியபெரிய மில்லுமுதலாளிகள் கம்பனி முதலாளிகள் அதிகாரிகள் அரசியல்வாதிகள் எனத் தேடிவர ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படியான நேரத்துல  பைசா வருமானத்துக்கும் உத்திரவாதமில்லாமல், ஒரு ஒதுக்குப்படலை எங்க வெக்கறதுன்னு சொல்றதுக்காகவெல்லாம் நாலு கிலோமீட்டருக்கு பைக்க எடுத்துட்டுப் போறதெல்லாம் நம்ம இமேஜை நாமளே குழிதோண்டி புதைச்சுக்கிறமாதிரி. இந்த மாதிரி துண்டு துக்கடா வாஸ்து கிராக்கிகளையெல்லாம் அவாய்ட் பண்றதுதான் நல்லது. அப்படியே போனாலும் உடனே போயிரக் கூடாது. இன்னிக்கு நாளைக்குன்னு இழுத்துட்டு பில்டப் பண்ணி அப்புறமாத்தான் போகணும் என்றும் நினைத்துக் கொண்டார்.  

 

ஒரு நாள் வருமானமில்லாவிட்டால் ஒண்ணும் குடிமுழுகிப் போய்விடாதுதான். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் ஜோதிடராக ஆவதற்கு முன்னர், மிஸ்டிக் சுப்ரமணி வெறும் சுப்ரமணியாக திரிந்துகொண்டிருந்த காலத்தில் பனியன் கம்பனிக்கு தறிக்குடோனுக்கு ஸ்பின்னிங் மில்லுக்கு வெல்டிங் பட்டறைக்கு என  எத்தனையோ வேலைகளுக்கு போயிருக்கிறார்தான். இன்றைக்கும் அந்த மாதிரி வேலைகளுக்கெல்லாம் எத்தனையோபேர்கள் போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். மேலுமொரு உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அந்தமாதிரி வேலைகளுக்குச் செல்வோரின் ஒரு வாரம் முழுவதற்குமான வருமானமும், மிஸ்டிக்கின் ஒருமாதம் முழுவதுமான சம்பாத்தியத்தை முப்பதால் வகுக்கக் கிடைக்கும் ஒருநாள் சராசரியும், கிட்டத்தட்ட ஒன்று. ஆனாலும் ,வாடிக்கையாளர்கள் யாரொவரும் வராதநாளில் எந்தவிதமான ஒப்பீடுகளும் மனதுக்கு சமாதானத்தை அளிப்பதில்லை. எவ்வளவோ கதைகளை எழுதிக் குவித்திருந்தாலும் புதிதாக ஒன்றை எழுத கரு எதுவும் கிடைக்காத நாளில்  இனிமேற்கொண்டு எதையுமே எழுதமுடியாதா?  இனி அவ்வளவுதானா?என்றெல்லாம் குழப்பங்கள் உண்டாகி எழுத்தாளர்களில் சிலர் அப்செட் ஆகிவிடுவதுண்டு இல்லையா? அப்படியான ஒரு சீதோஷ்ணநிலைதான் மிஸ்டிக்கின் மனநிலையிலும் நிலவியபடியிருந்தது.

 

வேறு வழியில்லை இந்த தரித்திரம் அண்டிய புலம்பல் மனநிலையிலிருந்து மீளவேண்டுமென்றால் காம்பிலிநதிக் கடைக்குப்போய் ஒரு குவார்ட்டரை வாங்கி சாத்தினால்தான் ஆச்சு என்னும் முடிவுக்கு வந்தார். இனிமேலும் இந்த வாசற்படியில் இப்படியே உட்கார்ந்து கொண்டிருப்பது வேறுசில சிக்கல்களையும் கொண்டுவந்துவிடும் என்றும் தோன்றியது. இன்றைக்கு யாரும் வரவில்லை என்பதை மகாலட்சுமியும் கவனித்தபடியேதான் இருந்திருப்பாள். ‘ காலையிலயிருந்து சும்மாதானே உட்கார்ந்துட்டிருக்கிறீங்க..? இப்பவாச்சும் வந்து ரண்டு மாட்டை பால்கறந்து குடுத்தா என்ன? ` என்றபடி இன்னும் சற்று நேரத்தில் அவள் இங்கே வந்துவிடவும் கூடும். என்றைக்கு சோசியகாரராக ஆனாரோ அன்றைக்கு முதலே சுப்புவுக்கும் சரி, சுப்புவின் யாக்கைக்கும் சரி,  இந்த குனிந்து நிமிர்ந்து உட்கார்ந்து எந்திரிக்கும் வேலைகளெல்லாம் மறந்தேபோய் விட்டிருந்தது.

 

மணி ஐந்து பத்து ஆகியிருந்தது. அட்சாம்சம் 11-20 வடக்கிலும், தீர்க்காம்சம் 77-45 கிழக்கிலும் இருக்கின்ற காங்கயம் தாலூக்காவில் இன்றைக்கு சூரிய அஸ்தமனம் மாலை 06-43க்குத்தான். அதற்குப் பிறகும் வெளிச்சம் அடங்க இருபது நிமிடங்கள் ஆகிவிடும்.  முகம் தெரியாத வண்ணம் இருட்டுவதற்கு இன்னும் மூணேமுக்கால் நாழிகைகள் இருக்கிறது அதுவரைக்கும் என்ன செய்வது எங்கேபோய் பொழுதை ஓட்டுவது எனும் யோசனையிலிருக்க சட்டைப் பைக்குள்ளிருந்த செல்போன் விட்டுவிட்டு அதிரத் துவங்கியது. பெயர் பதிக்கப்படாத புதிய நெம்பர்.      

 

“வணக்கம்… சொல்லுங்க…

 

அண்ணா இங்க செங்காட்டுப்பாளையத்திலிருந்து மொட்ரப்பாளையத்து முத்துக்குட்டி பேசறனுங்க… காலைல வந்திருந்தனே… சாயந்திரமா கூப்புடச் சொல்லீருந்தீங்க..

 

ஓ.. மறந்தே போயிட்டேன்.. சொல்லுங்ண்ணா..”

 

இன்னிக்கு புதங்கிழமைங்கிறதால கூட்டம் மம்மாணியா வந்திருக்கும்.. நிச்சயமா  மறந்திருப்பீங்கன்னு நெனச்சுட்டுத்தான் மறுபடியும் ஞாபகப்படுத்தலாம்னு கூப்புட்டேன். நான் நெனச்சது செரியாப்போச்சு.

 

அதையேங் கேக்கறீங்க… மத்தியானச் சாப்பாட்டுக்குக்கூட போக முடியலை. இப்பதான் ப்ரீயானேன்.. சொல்லுங்ண்ணா..

 

இப்ப வரமுடியுங்ளாண்ணா…? வந்தீங்ன்னா நல்லாருக்கும்.

 

எதுக்குங்ண்ணா… வாஸ்து பார்க்கிறதுக்கா? காலைலயிருந்து ஒரே பிஸிங்கிறதால ரொம்ப டயர்டா இருக்குதுங்ண்ணா.. இன்னுமொரு ரண்டுமூணுநாள் கழிச்சு பார்த்துக்கலாமாங்ண்ணா…

 

எப்படியாச்சும் இன்னிக்கே பொழுதுக்குள்ள வந்திட்டீங்னா புண்ணியமாப் போவுமுங்ண்ணா.. படலுக்கட்ற சேமலை நாளைக்கு வேலையில்லீன்னான்.. நீங்கவந்து எடம்பார்த்துச் சொன்னீங்ன்னா நாளைக்கே நானும் அவனும் படலக்கட்டி ஒதுக்கை போட்ருவோம். நாளைக்கு வுட்டுட்டா அப்பறம் சேமலையான பத்து நாளைக்குப் புடிக்க முடியாதுங்ண்ணா..

 

காம்பிலிநதிக்கரை டாஸ்மாக்கிற்குப் போகும் வழியில் இடதுபுறம் பிரிந்துபோகும் பாதையின் இரண்டாவது கிலோமீட்டரில்தான் செங்காட்டுப்பாளையம் இருக்கிறது. ஊரைத்தாண்டி மேலும் ஒரு கிலோமீட்டருக்குப் போனால் முத்துக்குட்டியின் தோட்டம் வரும். என்னதான் ஆயிரத்தெட்டு சமாதானங்கள் சொல்லிக் கொண்டாலும் விடிந்தும் விடியாத அதிகாலை நேரத்தில் வந்துநின்ற ஒரு மனிதனை ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பியதுதான் இன்றைய நாள் வருமானமற்றுப் போனதற்குக் காரணமோ எனும் சந்தேகம் மட்டும் நீங்கியபாடில்லை. எதற்கு வம்பு? டாஸ்மாக்கிற்குப் போகிறவழியில் அப்படியே முத்துக்குட்டியின் தோட்டத்துக்கும்போய் அந்த ஒதுக்குப் படல்களை எங்கே வைப்பது என்பதையும் சொல்லிவிட்டுப் போய்விடலாம் என்று தோன்றியது. நிச்சயமாகப் போய்ச் சொல்லிவிடலாம். ஆனால், அதற்கு முன்பு சின்னதாக ஒரு பில்ட்டப்பைக் கொடுத்துவிடுவோம் என்றும் மிஸ்டிக் சுப்ரமணிக்கு எண்ணமோடியது.  எந்தவொரு வியபாரமாக இருந்தாலும் மார்க்கெட்டிங் என்பதும் முக்கியம்தானே?

   

மத்தியானம் மில்லுப்பார்ட்டி ஒருத்தரு சாயந்தரம் ஆறுமணிக்குமேல வந்தாலும் வருவேன்ங்கிறமாதிரி சொல்லியிருந்தாருங் முத்துக்குட்டி… அதான் யோசனையாயிருக்கு..

 

அண்ணா…

 

செரிங் முத்துக்குட்டி… நீங்க இவ்வளவுதூரம் வற்புறுத்தியும் நான் வர்லீன்னு சொன்னா அது நல்லாருக்காது.  அந்த பார்ட்டிகிட்ட போன் பண்ணி நாளைக்கு வரச் சொல்லிடறேன். இப்ப உங்க வேலையை முடிச்சுடலாம். ரெடியா இருங்க.. கொஞ்ச நேரத்துல வந்தர்றேன்.

 

ரொம்ப சந்தோசங்ண்ணா.. நான் ரெடியாயிருக்கேன். வாங்க…

 

கைகால் முகமெல்லாம் அலம்பிவிட்டுவந்து லேசாக பவுடர்பூசி துலக்கமாக திருநீறை இட்டுக்கொண்ட சுப்பு கதர்வெள்ளைச் சட்டையின் கசங்கிய பகுதிகளையெல்லாம் நீவி விட்டுக்கொண்டார். காவி வண்ண சாயவேட்டியை அவிழ்த்து உதறி திருத்தமாகக் கட்டிக்கொண்டார்.

 

ருப்பெருத்த சூரியன் நிறம் சிவந்து இறங்கிக் கொண்டிருந்தது. மேற்குவானின் உச்சியில் குன்றுகுன்றாக குவிந்து கிடந்த மேகப்பொதிகளின் ஓரங்களெல்லாம் தீ எரியத்துடிக்கும் தணலென செந்நிறம் பூண்டிருந்தன. முத்துக்குட்டியின் ஓலைக்கொட்டகை வீட்டின் நீள்சதுரமான தகரக்கதவு சாத்தப்பட்டு பூட்டும் போடப்பட்டிருந்தது.  பைக்கைவிட்டு இறங்கிய சுப்புவைக் கண்டதும் வீட்டையொட்டி தென்புறமிருந்த ஊஞ்சமரத்தடியில் கட்டப்பட்டிருந்த வெள்ளைநாயொன்று எழுந்து நின்று குரைக்கத் துவங்கியது. சாணிமெழுகிய சல்லிமண் வாசலின் வடகிழக்கு மூலையில் முழங்கால் உயர பக்கச்சுவர்களுடன் தென்வடல் நீளவாக்கில் தண்ணீர்தொட்டி இருந்தது. தோட்டத்தின் மறுகோடியிலுள்ள கிணற்றிலிருந்து பைப்பின் வழியாக  வந்துவிழுந்த மோட்டார் தண்ணீர் தொட்டியை நிரப்பி மடவாய் வழியாக விழுந்து வாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்தது.

 

சத்தம்போட்டால் கேட்காத  தொலைவினில்  சின்னவெங்காயக் காட்டுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த முத்துக்குட்டி மண்வெட்டியை கீழே வைத்துவிட்டு ஓட்டமும் நடையுமாகப் போய் மோட்டாரை நிறுத்திவிட்டு வந்துகொண்டிருந்தார்.  சேலைக்கு மேலே அணிந்த முழுக்கை பனியனும் தலைமுண்டுமாக வெண்டைக்காய்களை பறித்துக் கொண்டிருந்த அவரின் மனைவி சம்பூர்ணம் வெண்டைகாய்ச் சாக்கினை தலையில் வைத்தபடி வரப்பை விட்டு இறங்கிக் கொண்டிருந்தார். தொட்டியடினில் பிரஷர்குக்கரும் கொழம்புச் சட்டியும் சாப்பாட்டுத் தட்டுகளும் கழுவப்படாமல் கிடந்தன.

 

வாஸ்து பார்ப்பதற்குப் போனால்  முதலில் அந்த நிலம் என்ன அம்சத்திலிருக்கிறது என கணித்து-கண்டு கொள்ளவேண்டும் என்பது குருநாதரின் முக்கியமான அறிவுரை. கற்பனையில் கழுகு பறக்கும் உயரத்திற்குப் பறந்துபோய் மனிதப்பார்வையில் அந்த நிலத்தைப் பார்வையிட வேண்டும் என்பார். அப்படிப் பார்க்கும்போது அதுவொரு ரூபங்காட்டும். அந்த ரூபமானது மனிதவுடலின் ஏதாவது ஒரு பாகத்தையோ உறுப்பையோ ஞாபகப்படுத்தும். பிறகு அந்தப் பாகத்தை உறுப்பைப் பார்த்தவுடன் உடனடியாக ஞாபகத்திற்கு வரக்கூடிய தொன்மையான விசயம் என்ன?  நவகோள்களில் அவற்றின் அதிபதி யார் ? அந்தக் கோளானது சம்பந்தப்பட்ட நில உடமையாளரின் ஜாதகத்தில் ஜனன லக்கினத்திற்கு என்னவாக வருகிறார்? என்ன அமைப்பில் இருக்கிறார் என்பதையெல்லாம் கணக்கிட்டு அதற்குத் தகுந்தாற்போல் வாஸ்து ஆலோசனைகளை சொல்ல வேண்டுமென்பார்.

 

 

திருமண வயதில் இரண்டு மகன்களையுடைய நிலக்கிழாரின் தோட்டமொன்றுக்கு ஜோதிடமாமணி பழனிச்சாமியோடு சுப்புவும் போயிருந்தார். இரண்டு பையன்களும் திருமணத்திற்குப் பிறகும் ஒரே குடும்பமாக ஒரே வீட்டில்தான் இருக்க விரும்புகிறார்கள். அதற்கான ஒரு வீட்டை இந்த தோட்டத்தில் கட்டலாமென்றிருக்கிறோம். எந்த இடத்தில் கட்டலாமெனப் பார்த்துச் சொல்லுங்கள் என்றார்கள். தனக்குள்ளிருந்த மானுடவிழிக்கழுகை மேலே பறக்கவிட்ட பழனிச்சாமி அது திரும்பி வந்து மனமமர்ந்ததும் கூறினார். இந்தத் தோட்டம் மனிதத் தொடையைப் போலவே தோற்றங் காட்டுகிறது. தொடையென்றால் துரியோதனன். துரியோதனனென்றால் பங்காளித் தகராறு பங்குச் சண்டை குல நாசம். இந்த இடத்தில் அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாய் இருக்க முடியாது. தயவுசெய்து இருவருக்கும் சேர்த்து ஒரே வீடு கட்டாதீர்கள். முத்துக்குட்டியின் தோட்டம் மிஸ்டிக் சுப்ரமணியின் மானுடவிழிக்கழுகுக்கு தொப்புளெனத் தோற்றங் காட்டியது. தொப்புள் என்றால் ரத்த உறவு. கடும் பற்று. ஊழ் முடிச்சு.   

 

முத்துக்குட்டியுடன் சென்று சுப்ரமணி கட்டுத்தரையைப் பார்வையிட்டார். வீட்டிற்கு தென்கிழக்குமூலைக்கு அப்பாலிருந்த காலியிடத்தில் மாட்டுக்கட்டுத்தரை கிழமேல்நீளியாக போடப்பட்டிருந்தது. கட்டுத்தரைக்கு முன்னால் வடபுறத்தில் பெரிய வெள்ளைவேலா மரமொன்று குடை விரித்திருந்தது. மூன்று மாடுகளும் ஒரு கிடாரிக் கன்றும் கட்டப்பட்டிருந்தது.

 

வேலாமரத்தை உள்ளடக்கி கட்டுத்தரையின் நாற்புறமும் தென்னையோலைப் படல்களால் காம்பவுண்ட் செய்யப்பட்டிருந்தது. சாணிகளைக்கொட்டும் குழி காம்பவுண்டுக்குள் தென்கிழக்கு மூலையிலிருந்தது. சாணிக்குழியையொட்டியே மேபுறமாக மழைபெய்தால் ஒழுகாத அளவுக்கான அல்லைகள் தடுக்கப்படாத கூரைச்சாளை இருந்தது. தவிடு புண்ணாக்கு மூட்டைகளை வைப்பதற்கும் இளங்கன்றுகளை கட்டுவதற்குமாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அந்தச் சாளையைப் பிரித்து கட்டுத்தரையின் தென்மேற்கு மூலையில் போடுமாறு கூறினார். தட்டுப்போர் வடகிழக்கு மூலையிலிருந்தது. ‘ஈசான்யத்தில் வெயிட் ஏத்தக்கூடாது.. காலியாத்தான் இருக்கணும்.. தட்டுப்போரைத்தூக்கி வடமேற்குல போட்ருங்க என்றார். கடைசியாக தென்மேற்கிலிருந்த கட்டுத்தரை நுழவுவாயிலை வடக்கேதள்ளி நடுச்சென்டராகப் போடச் சொன்னார்.

 

முத்துக்குட்டிக்கு திருப்தியாக இருந்தது. கட்டுத்தரையை வேறு இடத்திற்கு மாற்றுவதைவிடவும் இருக்கும் இடத்திலேயே ஜோதிடர் சொன்ன சீர்திருத்தங்களையெல்லாம் செய்வதென்பது மிகவும் சுலபமானதுதான். இனிமேற்கொண்டு மாடுகள் சினைப் பிடிக்காமல் ஆட்டங்கட்டாது. கன்றுக்குட்டிகள் சாகாது. பால்மடி வீங்கி அதன் காம்புகள் புண்ணாகாது என்றெல்லாம் அவருக்கு நம்பிக்கைகள் உண்டானது. நம்பிக்கை. அதுதானே எல்லாம்.?

 

நடுவாசலில் பிளாஸ்டிக் நாற்காலிகளைப் போட்டு உட்கார்ந்தபடி பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு சம்பூர்ணம் தேநீர் கொண்டுவந்து கொடுத்தாள். இருவரும் வாஸ்துபற்றிய பேச்சுக்களையெல்லாம் முடித்துக்கொண்டு வேறு விசயங்களுக்கு வந்திருந்தனர். ராமசாமியண்ணன் முயல்கறி விருந்துகள் பற்றியெல்லாம் பழமைகள் போய்க்கொண்டிருந்தது. ஓரமாக அமர்ந்து அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சம்பூர்ணம் புதிய மனிதர்களைப் பார்க்கும்போது உண்டாகும் சங்கோஜம் நீங்கி சகஜ நிலைக்கு வந்திருந்தாள். சுப்புவைப் பார்த்து “ஏனுங்ண்ணா… போனவாரம் நல்லகாளி பாளையத்துக்கு எலக்டிரிக்கல் கடைக்காரரு தோட்டத்துக்கு வாஸ்து பார்க்க போயிருந்தீங்களாக்கு? என்றார்.

 

   

ஆமாங்க்கா.. போயிருந்தேன். தோட்டத்துல புதுசா வீடு கட்றதுக்கு வாஸ்து பார்க்க வரச்சொல்லீருந்தாரு… உங்குளுக்கு எப்படித் தெரியும்?

 

எங்கய்யந்தான் சொன்னாங்களுங்… நம்ம சின்னப்பன் தோட்டத்துல பெருசா மாடியூடு கட்டப்போறானாமா.. உங்க ஊருக்குப் பக்கத்துல இருக்கற வஞ்சிபாளையத்துச் சோசியருதான் வந்து வாஸ்துபார்த்துட்டுப் போனாருன்னு சொன்னாங்களுங்..

 

ஓ.. உங்க அய்யனூரு அந்தூருதானுங்ளா?

 

அந்தூரேதானுங்.. நீங்க வாஸ்து பார்க்கப்போன தோட்டம் எனக்கு சொந்த சித்தப்பன் தோட்டமேதானுங்.. அதுக்கு மேவறத்தல்லைல இருக்கற தோட்டம்தான் எங்க அய்யனோட தோட்டமுங்..

 

உங்க கூடப் பொறந்தவங்க எத்தன பேருங்க்கா..

 

தம்பியொண்ணு தங்கச்சியொண்ணுங்… தம்பி சின்ன வயசுலயே பூச்சி தொட்டு போயிட்டானுங்.. இப்ப நானும் எந்தங்கச்சியும் மட்டும்தான் இருக்கறம்னு வெய்யிங்களேன். தங்கச்சி குடும்பம் அய்யங்கூடத்தான் இருக்கறாங்களுங்..

 

அங்க அய்யனுக்கு பூமி எவ்வளவு இருக்குதுங்க்கா..

 

எலக்டிருக்குகடை சின்னப்பன் அளவேதான் எங்க அய்யனோட பாகமும்.. முழுசா பத்தேக்கர் வருமுங்க.. எல்லாத்தையும் தங்கச்சி குடும்பம்தான் வெள்ளாமை செஞ்சுக்கிட்டு இருக்கறாங்களுங்க..

 

அப்போ அந்த பத்தேக்கர்ல உங்களுக்கும் அஞ்சு ஏக்கர் வரும்னு சொல்லுங்க.

 

வரும் என்ன வரும்ங்கிறது..? அதெல்லாம் எப்பவே வந்தாச்சுங்க.. எந்தங்கச்சியும் அவ வூட்டுக்காரரும் அவிய ஊர்ல பொழைக்கறதுக்கு வழியில்லீன்னு அய்யங்கிட்டப் போயி நின்னப்பவே எங்க அய்யன் நாளைப் பின்னே தகராறு வந்தரக்கூடாதுன்னு இருக்கிறத சரிசமமாப் பங்கி ஒரு பாகத்தை தங்கச்சி பேருக்கும் இன்னொரு பாகத்தை எம்பேருக்கும் எழுதி வெச்சுட்டாங்களுங்க.. நம்முளுக்கு இங்கிருந்து அவ்வளவு தூரத்துக்குப் போயி பண்ணயமோட்றதுக்கு தோதுப்படாதுக்கிறதால எங்க பாகத்தையும் அவியளயே ஓட்டச் சொல்லீருக்கறமுங்க.. 

 

என்னுங்க்கா இது? அப்பேர்ப்பட்ட தண்ணிச்செல்வாக்குள்ள தோட்டத்தை  உட்டுப்போட்டு இங்க இந்த வறக்காட்டுல வந்து ஓலையூட்ல உக்காந்துட்டுக் கெடக்கறீங்களே… போயிப் பண்ணயம் ஓட்டாட்டியும் போகுது. திருப்பூரு பெருசாகி பெருசாகி  உங்க ஊருவரைக்குமே வந்துருச்சு. இன்னிய தேதிக்கு அங்கியெல்லாம் ஏக்கரொண்ணு ஒரு கோடிக்குப் போகுதுங்கிறாங்க.. உங்களோட பங்கு அஞ்சேக்கர்ல கடைசிக்கு ஒரு ஏக்கர வித்துட்டு வந்தீங்கன்னாக்கூட அந்தக் காசுக்கு இங்க வூடுகீடெல்லாம் ஜம்முனு கட்டி மிச்சத்தை பேங்ல போட்டுட்டு ராஜா மாதிரி இருக்கலாமே..?

 

முத்துக்குட்டிக்கு மனைவி வகையில் கோடிக்கணக்கில் சொத்து இருப்பது பற்றி சுப்ரமணிக்கு மிகுந்த ஆச்சர்யமாகயிருந்தது. ஆனால், இப்படியான பேச்சுகளில் முத்துக்குட்டிக்கு விருப்பமில்லை போல. அமைதியாகக் உட்கார்ந்திருந்தார். இது அதைவிடவும் ஆச்சர்யமாக இருந்தது.  

 

நானும் அதையேதான் இவீயகிட்ட காலமுள்ள காலத்திலிருந்து படிச்சு படிச்சு சொல்லீட்டேயிருக்கறேன்… கேட்டாத்தானே? சித்த நீங்கெல்லாமாவது எடுத்துச் சொல்லுங்க..சம்பூர்ணத்தின் குரலில் ஒருவிதமான தீவிரமும் ஆவேசமும் வேரோடத் துவங்கி விட்டதைப்போல தோன்றியது. காலங்காலமாக கிடைக்காமலேயே போய்க்கொண்டிருக்கும் விருப்பமொன்று கைக்கெட்டும் தூரத்தில் வந்துநிற்க பற்றிக்கொள்ளத் துடிக்கும் ஆவேசம். தீவிரம்.

 

அங்க இவிய ஊர்லயிருந்த பூர்வீகத்தை வித்துட்டபொறகு இங்க இந்த வறக்காட்டை வந்து புடிக்கலாமுங்போதே சொன்னேன். இந்த பூமி அமைப்பே செரியில்லை. பாக்கறதுக்கு என்னமோ தலையுமில்லாம முண்டமுமில்லாம ஒரு வாய் மட்டும் பொழந்து கெடக்கறமாதிரியே தெரியுது. என்ன பாம்பாடு பட்டாலும் அஞ்சு காசு மிச்சமாகாது.. எல்லாத்தையும் முழுங்கிப்போடும்.. எந்தக் காலத்திலயும் நம்மள மேலுக்கே வுடாது.. பேசாம எங்க அய்யனூருக்கே போயிருவோம்..  ஆளுபேரு தெரியாத இந்த ஊர்லவந்து இந்த வறக்காட்டைப் புடிக்கிற காசுக்கு அங்கபோயி தனியா ஒரு ஊட்டைக் கட்டிக்கிட்டு என்ற பாகத்துக்கு வந்த தோட்டத்தை உழுதுட்டு நல்ல முறையா இருப்போம்னு எவ்வளவோ சொன்னேன்.. காதிலயே போட்டுக்கல..

 

சம்பூரணம் எந்த நேரத்திலும் உடைந்து அழ ஆரம்பித்துவிடலாம் என்னும் நிலமையில் இருந்தாள். முத்துக்குட்டியிடம் எந்த சலனமுமில்லை. இருட்டுக் கட்டியபடியிருக்கும் வாசல் தரையையே அவர் பார்வை வெறித்துக் கொண்டிருந்தது.

 

 

“இந்த ஊருக்குவந்து இநதப் பாங்காட்டுல குடிசையைப் போட்டு உக்காரும்போது பெரியவளுக்கு ஏழு வயசு. சின்னவளுக்கு அஞ்சு வயசு. எந்தச் சந்துலயிருந்து எந்தக் கருமம் ஊரீட்டு வந்துடுமோங்கிற பயத்துலயே லைட்டை தூண்டியுட்டுட்டு தூங்கீட்டிருக்கற புள்ளைக தலமேட்டுல அரத்தூக்கமும் முழிப்புமாவே உக்காந்திருப்பேன்.

 

சின்ன வயசுல தம்பி பாம்பு தொட்டு போயிட்டானுங்கிறதால அதுபத்துன பயமில்லாம ஒரு ராத்திரியும் நிம்மதியா தூங்குனதில்ல. இங்க வந்ததுக்கு அப்புறம் இந்த மனுசனுக்கு குடிப்பழக்கமும் அதிகமாயிருச்சு. குடி மீறிப்போன நாள்ல ராத்திரிக்கி இங்க வூட்ல படுக்கறதில்லே. நம்ம தோட்டத்துக்கு நடுவாண்ட தெக்குவடக்கா ஒரு சிறு பள்ளமா போகுது பார்த்தீங்களா..? அந்தப் பள்ளத்துக்கு நடுவாண்டயிருக்கிற எலந்தமரத்துக்கடியில போயிப் படுத்துக்கிறது. இங்க வந்த நாள்லயிருந்து மாசத்துக்கு ஒண்ணுரண்டு ராத்திரியிலயாவது இந்தக் கூத்து இன்னமுங்கூட நடந்துட்டெதானிருக்கு.

 

அட கூறுகெட்ட மனுசா.. மப்பு மீறிப்போச்சுனா போயிட்டுப்போவுது. நல்லமொறையா வூட்ல படுக்கறதுக்கென்ன? அங்கேம்போயி பூச்சிபொட்டு ஒலாத்தற எடத்துல படுத்துக் கெடக்கிறேன்னா அதுக்கு ஒண்ணுமே பேசறதில்ல.. நாம என்னதான் காட்டுக்கத்து கத்துனாலும் கல்லுளிமங்கனாட்ட காதுலயே போட்டுக்காம போயிடறது.. நானு இங்க புள்ளைகளுக்கு காவலிருப்பனா? இல்லே மப்புமீறிப்போயி நடுக்காட்டுல பதவுளுக்குள்ள எலந்தமரத்தடிய படுத்துக் கெடக்கிற புருசனுக்குக் காவலிருப்பனா? நீங்களே சித்த யோசனபண்ணிப் பாருங்ண்ணா.. அந்த மாதிரி ராத்திரியீலெல்லாம் நானு என்ன பாடு பட்ருப்பேன்னு?

 

எப்படியோ புள்ளைகளை ஆளாக்கி கட்டியும் குடுத்துட்டோம். நாங்க எங்க கட்டிக் குடுத்தோம். அவுளுகளே அவியவியளுக்கு புடிச்ச மாப்ளையாப் பார்த்து கட்டிகிட்டுப் போயிட்டாளுக. எப்படா இந்த சனியம்புடிச்ச காட்டையும் இந்த கீத்துக்குச்சையும் விட்டுப் போவோம்னே இருந்திருப்பாளுகபோல.. கல்யாணத்துக்கப்பறம் எண்ணி ஒரு நாள்கூட மக்களும் மருமக்களும் இங்கவந்து தங்குனதில்ல. ஒரு நோம்பிநொடின்னாக்கூட புள்ளைகளையெல்லாம் கூட்டீட்டு பழைய சோத்துநேரமாட்ட வருவாங்க. மத்தியானச் சோத்த தின்னுபோட்டு சாயந்திரமா பொழுதிருக்கவே கெளம்பிப் போயிருவாஙக. ஏனுங்ண்ணா நீங்களே சொல்லுங்க. பள்ளிக்கூடம் லீவு வுட்டா பேரம்பேத்திகளையெல்லாம் கூப்டாந்து வாரக்கணக்குல வெச்சுக்கிட்டு கேக்கறதையெல்லாம் செஞ்சுபோட்டு பாக்கோணம்னு ஆசையெல்லாம் எனக்கு இருக்குமா? இருக்காதா? இந்த வூடு இருக்கிற லட்சணத்துல குழந்தைகளையெல்லாம் அவிய எந்த நம்பிக்கையில வுட்டுப்போட்டுப் போவாங்க.?.

 

 

இதையெல்லாம் கொட்டித் தீர்ப்பதற்கு ஒரு ஆள் கிடைக்காதா என்றே சம்பூர்ணத்தம்மாளும் காத்துக் கிடந்திருப்பாள்போல. பேசப்பேச அவளது குரலில் ஆங்காரம் கூடியபடியேயிருந்தது. முத்துக்குட்டி சிலைபோல சமைந்திருந்தார். சுப்ரமணிக்கு அவரது அமைதியின் தீவிரத்தைப் பார்க்கபார்க்க இதற்குப் பின்னால் ஏதோ வலுவான புயலொன்று சுருண்டுசுருண்டு படுத்திருப்பதாகப் பட்டது. மேற்கொண்டும் இந்த பழமைகளை வளர்த்துக் கொண்டிருந்தால் அந்தப் புயல் சீறிக்கொண்டு கிளம்பிவிடும் எனத் தோன்றியது. மேலும் , சம்பூர்ணத்தம்மாளின் ஆங்காரமும் எதிர்கொள்ள முடியாத ரெளத்திரமாக மாறிவிடலாம்.

 

 

 

 

 

“செரிங்க்கா… பின்னொரு நாள் இதைப் பற்றி செளகரியமா உக்காந்து பொறுமையாப் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வருவோம். இப்போ கொஞ்சம் அர்ஜெண்டா வேலையிருக்குது.. அப்ப நான் கிளம்பட்டுங்ளா?என்று சம்பூர்ணத்தம்மாளிடம் விடைபெற்றுக் கொண்ட சுப்ரமணி முத்துக்குட்டியையும் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு நாற்காலியைவிட்டு எழுந்து கொண்டார்.

 

இன்னிக்கு ஒரு குவார்ட்டரெல்லாம் கட்டுபடியாகாது.. ஒரு ஆப்பாவது அடிச்சால்தான் தூங்க முடியும் எனத் தோன்றியது. பைக்கை ஸ்டார்ட்செய்து கியரை மாற்றும் சமயம் முத்துக்குட்டி கூப்பிட்டார். “அண்ணோவ் கொஞ்சோ நில்லுங்ண்ணோவ்என்றபடியே வாய்ப்பகுதி கட்டப்பட்ட கனத்த கட்டைப்பை ஒன்றை தூக்கிவந்தவர் “சின்ன வெங்காயம் வெண்டகாயி அவரக்காய் கொஞ்சம் இருக்குதுங்ண்ணா.. கொண்டுட்டுப்போயி வூட்ல அக்காகிட்ட குடுத்துருங்க..

 

காசு கிடைக்காட்டியும் போச்சாது… காய்கறிகளாவது கிட்டியதே.. என அவரது வியபாரமூளையை திருப்திபடுத்தும் விதமான வாக்கியமொன்று மனதின் ஏதோவொரு மூலையிலிருந்து உற்பத்தியாகியது. அதே வேளையில், பின்சீட்டின் வலப்புறமிருந்த கொக்கியில் கட்டைப்பையை பொருத்தியபடியிருந்தார் முத்துக்குட்டி. வண்டியிலமர்ந்தபடியே ஒருகணம் முத்துக்குட்டியை உற்றுநோக்கியவர் “அண்ணோவ் உக்காருங்ண்ணா போயி ஒரு கட்டிங்கைப் போடுவோம்.என்றார்.

 

நீரில்லாத காம்பிலிநதியின் மத்தியில் நீரோடிய காலங்களிலுண்டான வழுவழுப்போடு மண்ணோடுமண்ணாக புதைவுற்றிருந்த நிலப்பாறையொன்றின்மேல் முத்துக்குட்டியும் சுப்ரமணியும் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தனர். பனையுயரத்திற்குமேல் வந்திருந்த திரயோதசி நிலவின் வெளிச்சம் குளிர்ந்தநீர்ஆவியென வெளியெங்கும் நிரம்பியிருந்தது.

 

விட்டால் கரைந்து விடுவார்போல. தொட்டால் உடைந்துவிடக் கூடிய குரலில் முத்துக்குட்டி பேசத் துவங்கினார். “ நீங்க நெனைக்கிற மாதிரியெல்லாம் இல்லீங்ண்ணா.. என் மாமனாருஞ்செரி.. மாமியாத்தாளுஞ்செரி… தங்கமானவங்க. அவுங்கமெலயெல்லா எனக்கு எந்தக் கோவமும் கெடையாது. என்ற சகலையும் கொழுந்தியாளுங்கூட அப்படித்தான். எம்பட வூட்டுக்காரி உங்க முன்னால அத்தன பேச்சு பேசுனாளுங்களே… நீங்களும் பார்த்துட்டுத்தானே இருந்தீங்க? நானெதாச்சு ஒரு வார்த்த எதுத்துப் பேசீருப்பனா..? இன்னிக்குன்னு இல்லீங்ண்ணா.. என்னிக்குமே இப்படித்தான். என்னத்தையோ பேசீட்டுப் போறான்னு வுட்ருவேன்.

 

நீங்க யோசனை சொன்னமாதிரி அங்கிருக்கிற பண்ணையத்துல ஒரு ஏக்கர வித்தாலே ஒரு கோடிக்குப் போகும்தான். வித்துப்போட்டுவந்து இங்க ஒரு மாடியூடு கட்டிக்கிட்டு மிச்சத்தப் பேங்குல போட்டுக்கிட்டு ராஜா மாதிரி இருக்கவேண்டீதுதானேனீங்க? நானெதுக்கு ராஜா மாதிரி இருக்கோணம்? ராஜா மாதிரி இருக்கிறதுக்கு நானொண்ணும் ராஜா இல்லியே? எம்பட மாமனாரோ அவுங்க அய்யனோ கஷ்டப்பட்டு சம்பாதிச்சு ஆண்டு அனுபவிச்ச பண்ணயம். அவுங்க நல்லாருக்கும்போதே அவுங்க கண்ணு முன்னாலயே நானெதுக்கு அதையப்போயி விக்கோணம்? இருந்துட்டுப் போகுது. எம்புள்ளைக ரண்டும் நாளைக்குத் தின்னுட்டுப் போகுது. என்னடது எல்லாக் காரியமும் ஆச்சுங்ண்ணா.. எம்புள்ளைக ரண்டுக்கும் கல்யாணமாகி – எம்பொண்டாட்டி சொன்ன மாதிரி ரண்டுபேருக்கும் நாங்க பார்த்து கட்டிவெக்கலீன்னு வெய்யுங்க..

 

 

 

 

அதனாலென்ன? இப்ப பிரியமுஞ் சந்தோசமுமா கொழந்தையுங் குட்டியுமா நல்லாத்தானே இருக்கறாங்க? எது எப்படியோ எம்பொண்ணுக ரண்டுபேரும் ஊடும்குடும்பமுமா ஆயிட்டாங்க.. ஆனா என் சகலையோட புள்ளைகளெல்லா இன்னும் பொடுசுங்ண்ணா.. அதுகெல்லா உருப்படியாகற வரைக்கும் அவன் என் சம்சாரத்து பங்கையுந்தான் ஓட்டீட்டுப் போறான். அதனாலென்ன?   என்னால முடியலீங்ண்ணா.. இந்தக் காட்டவுட்டுப் போறதுக்கு என்னால முடியாதுங்ண்ணா.. எம்பொண்டாட்டி சொன்னாளுங்ளே.. மொதமொதலா வந்து பார்த்தன்னிக்கு பொழந்த வாயி மாதிரித் தெரிஞ்சுதுன்னு.. மொதமொதல்ல பார்த்தப்ப எனக்கு எப்படித் தெரிஞ்சது தெரியுங்ளா? இப்ப இந்த நிமிசம் வரைக்கும் எப்படித் தெரிஞ்சிட்டிருக்குது தெரியுங்களா..?எங்க அம்மா மடி மாதிரி.

 

பச்சச்சீலையக் கட்டிக்கிட்டு சம்மணங்கால் போட்டுட்டு எங்கம்மா ஆசாரத்து தூண்காலுக்கு முதுகைக் கொடுத்துட்டு உக்காந்திருக்கிறா.. அவளோட மடிஞ்ச ஒரு முழங்காலுமேல தலையை வெச்சுட்டு இன்னொரு மடிஞ்ச முழங்காலுமேல காலுரெண்டையும் நீட்டீட்டு அவமடீல நான் படுத்துக்கிட்டு ரப்பருபோட்ட பாட்டல்ல பாலு குடிச்சிட்டிருக்கிறேன். அன்னிக்குதான் எங்கம்மாவை நான் கடைசியா பார்த்தது. கொஞ்ச நேரத்திக்கு முன்னால நீங்களுங்கூட தொப்புளு மாதிரி தெரியுதுனீங்க.. ஊழ்வினை பற்றுகிற்றுன்னு என்னெனமோ சொன்னீங்க.. நீங்க படிச்சவரு சாஸ்தரமெல்லாந் தெரிஞ்சவரு.. நீங்க சொன்ன செரியாத்தான் இருக்கும்னு வையுங்க.. செரியா இருக்கறதுனாலதானே தெனமும் இத்தனபேரு தேடிவர்றாங்க? உங்களுக்கு எம்பட வூட்டுக்காரிக்கெல்லாம் எப்படித் தெரியுதோ தெரிஞ்சுட்டுப் போகுட்டுமுங்ண்ணா.. நீங்கலெல்லாஞ் சொல்றமாதிரி என்ன நடக்குமோ நடந்துட்டுப் போகுட்டுமுங்ண்ணா..  எனக்கு அது எங்கம்மா மடிதான்.

 

ஒரு குழந்தைய யாரு அடிச்சாலும் அது அம்மா மடிக்குள்ளதானே ஓடிப்போயி புகுந்துக்கும்? அதைய அந்த அம்மா மடிதானே காபந்து பண்ண வேணும்?. பண்ணுனாலுஞ்செரி பண்ணாட்டியுஞ்செரி நானு இப்படியே இருந்துட்டுப் போறேன். என்னைய இப்படியே இருக்க வுட்ருங்ண்ணா.   

 

றுநாள் காலை. குளியலாதிகளையெல்லாம் முடித்துக் கொண்டு அலுவலகத்திலிருக்கும் ராஜ அலங்கார முருகனுக்கு மிஸ்டிக் சுப்ரமணி ஊதுபத்தி காட்டிக் கொண்டிருந்தார். அவருடைய பையன் நாட்ராயசாமி அழைப்பது கேட்டது. ஊதுபத்திகளை ஸ்டேண்டில் பொருத்திவிட்டு வெளியே வந்தார். “நைட் நீ கொண்டுட்டுவந்த வெங்காய மூட்டையில இருந்துதுன்னு அம்மா குடுத்துட்டுது அப்பா.  என்றபடியே வலது கரத்தை நீட்டியவன் உள்ளங்கையை விரித்தான்.

 

அவன் கையில் கசங்கிய இரண்டு வெற்றிலையும் சில பாக்குகளும் ஐநூறு ரூபாய்த் தாளொன்றும் இருந்தது.

 

 

 

                                                                           ------------       

 

 

 

 

  

 

 

1 comment:

Unknown said...

முத்து குட்டியல்லவா மிஸ்டிக் இங்கே! நன்றி