Tuesday, 22 October 2019

வெறுங்கால்நடை..


                                                                                   

ஈஸ்வரன்கோவில் வீதியில் மேற்கே வந்துகொண்டிருந்தேன். ஆலாமரத்துக்கு அருகாமையில் வடிவேலு எதிர்பட்டார். அவர் கிழக்கே வந்து கொண்டிருந்தார். நிற்கக்கூட இல்லை. நின்று பேசுமளவுக்கு எங்களுக்குள் நெருங்கிய பழக்கமும் கிடையாது. வெறுமனே தலையை மட்டும் ஆட்டிவிட்டு கடந்துவிட்டேன். அவரும் பதிலுக்கு தலையசைத்தார். இப்படியான சூழ்நிலைகளில் இம்மாதிரியான தலையாட்டல்களுக்கு, நல்லது, செளக்கியமா, கெளம்பட்டுமா என்றெல்லாம் அர்த்தம்.  ஒரு காலத்தில் பூபதியின் சலூனில் எந்தநேரமும் வடிவேலுவைப் பார்க்கலாம். நானும் பூபதியைத்தேடி போவதும் வருவதுமாக இருப்பேன். அந்த அளவில் எங்களுக்குள் ஒரு பரிச்சியம் உண்டாகியிருந்தது. அவ்விதம்  பரிச்சியமாகிய பலர் இப்போது நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். ஏனோ வடிவேலுவுடனான உறவு மட்டும் அந்த அளவிலேயே நின்றுபோய் விட்டிருந்தது. இப்போது பூபதி தனது சிகையலங்கார நிலையத்தை வீட்டிற்கே மாற்றிக்கொண்டுவிட்டான்.  வடிவேலு மாதிரியான நண்பர்களை சந்திப்பதற்கே வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எங்கேயாவது கடைவீதிகளில் எதிர்முட்டு போட்டுக்கொள்ள நேர்ந்தால் மட்டும் இதுபோல தலையாட்டிக்கொள்வதுண்டு.


நாங்கள் எதிர்பட்டுக்கொண்ட இடத்திலிருந்து கூப்பிடுதூரத்தில் தபால் அலுவலகம் இருந்தது. பைக்கை நிறுத்திவிட்டு போஸ்ட் ஆபிசுக்குள் நுழைந்தேன். மின்விளக்கு எரிந்துகொண்டிருந்தது. மின்விசிறி சுழன்றபடியிருந்தது. தன் நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஆபீசர் கணிணித்திரையில் மூழ்கியிருந்தார். கரண்டுபில் கட்டவேணுங்க சார்என்றேன். “நானும் காலைலயிருந்து போராடிட்டிருக்கேன். நெட்டு சுலோ. வொர்க்கே ஆகமாட்டேங்குது.. எதுக்கும் அரைமணி நேரம் கழிச்சு வந்து பாருங்க..என்றார். மின்வாரிய அலுவலகத்தில் சொன்ன அதே பதில். அங்கேயே அரைமணிநேரம் உட்கார்ந்து சலித்துவிட்டுத்தான் வருகிறேன். இனி என்ன செய்யலாம் என்று யோசித்தேன். கமிசனுக்கு ஈபி பில் கட்டிவிடும் கம்பியூட்டர் சென்டர்களுக்குப் போகலாம் எனத் தோன்றியது. வெளியே வந்தேன். எனது பைக்கின் இடப்பக்க ஹேண்டிலைப் பிடித்தபடி வடிவேலு நின்றுகொண்டிருந்தார்.

“உங்கபாட்டுக்கு நிக்காமயே வந்துட்டீங்க..?

நீங்க வெக்குவெக்குனு  வேகவேகமா நடந்து போயிட்டிருந்தீங்க.. சரி, ஏதோ அவசர வேலையிருக்குமாட்டயிருக்குதுனு நானும் எம்பாட்டுக்கு வந்துட்டேன்.. அதையுந்தவிர நிக்கச்சொல்லி கை காட்டீருந்தீங்கன்னா நின்றிருப்பேன். எப்பவும்போல் தலையொவச்சீங்க.. நானும் தலையாட்டீட்டு வந்துட்டேன்.


இல்லே.. நிக்காமயே உங்கபாட்டுக்கு சர்ருனு வந்துட்டீங்ளா.. அதான் மனசுக்கு கஷ்டமாயிருச்சு. நாம ஒரு தப்பும் பண்ணுலயே.. அப்புறம் எதுக்கு நிக்காமப் போறாருனு நம்மமேல அப்படியென்ன கோவம்னு ஒரே கொழப்பம். ஒருவேளை நம்முளுக்கு தெரியாமக்கீது ஏதாவது உங்களுக்கு கெடுதல் பண்ணீருப்பனோன்னும் யோசனை. அதான் எதா இருந்தாலும் மன்னிப்புக் கேட்ருலாம்னு வந்தேன். எதாயிருந்தாலும் மன்னிச்சிருங்க..




சம்பந்தமில்லாமல் பேசுகிறாரே.. ஒருவேளை குடிச்சிருப்பாரோ என தோன்றியது. வேண்டுமென்றே நக்கலுக்கோ கிண்டலுக்கோ பேசுகிறமாதிரியும் தெரியவில்லை. அந்தக்குரலில் உண்மையாகவே வருத்தம் வெளிப்படுகிற ஒரு தொனி இருந்தது. என்னிடம் ஒருநாளும் அவர் இப்படியெல்லாம் பேசியதுமில்லை. ‘என்ன வடிவேலு.. இன்னிக்கு வொர்க்கு இல்லியா.. ப்ரீயாட்டயிருக்குது?என பூபதி சலூனில் அமர்ந்திருக்கும் அவரிடம் சம்பிரதாயமான கேள்வியொன்றை கேட்பதுண்டு. ஆமாங்க.. இல்லீங்க என அவரும் ஒற்றை வார்த்தையில் ஒரு பதிலைச் சொல்லுவார். அதற்குமேல் எங்கள் உரையாடல் நகர்ந்ததில்லை. சலூன் சந்திப்புகள் அற்றுப்போன பிறகு அதற்கும்கூட வாய்ப்பில்லை. வெறும் தலையாட்டல் மட்டும்தான்.

“சேச்சே.. உங்கமேல எனக்கென்ன கோபம் வடிவேலு? நம்ம ரண்டுபேருக்குள்ள வாய்க்காத் தகராறா வரப்புத் தகராறா.. நீங்க எங்கியோ உங்கபாட்டுக்கு இருக்கிறீங்க நான் எங்கியோ எம்பாட்டுக்கு இருக்குறேன். உங்கமேல வருத்தப்படறதுக்கு என்ன இருக்குது வடிவேலு?

சரி, அத வுடுங்க.. நல்லாருக்கீங்களா..?
நல்லாருக்கேன் வடிவேலு. நீங்க எப்படி இருக்கீங்க?
பார்த்தா எப்படித் தெரியுது?
என்னது?
இல்லே.. என்னைப் பார்த்தா எப்படி இருக்கற மாதிரி தெரியுதுனு கேட்டேன்?

வடிவேலு கோடுபோட்ட முழுக்கைச் சட்டையும் லுங்கி வேட்டியுமாக இருந்தார். முழுக்கையை முழங்கைகளுக்குமேலே மடித்துவிட்டிருந்தார். வேட்டியை முழங்கால் மூட்டுகளை மறைக்கும்படி மடித்துக் கட்டியிருந்தார். செருப்பில்லாத பாதங்களிலும் புறங்கால்களிலும் புழுதி படிந்திருந்தது. சட்டைப்பையில் மஞ்சள் மற்றும் வெளிர்பச்சை நிறமுடைய இரண்டு டெஸ்டர்கள் பேனாவைப்போல் குத்தப் பட்டிருந்தன. தலைமுடியும் தாடியும் பாதிக்கும் அதிகமாக நரைத்திருந்தது. முன்பு எப்போதும் இளந்தாடியிலிருப்பார். இப்போது அது முதிர்ந்து அடர்த்தி கூடியிருந்தது. பின்நவீன ஓவியர்கள்,கவிஞர்கள்,எழுத்தாளர்கள், நெரிசலான நகரங்களின் ஆளரவமற்ற பகுதிகளில் கஞ்சாவைப் புகைத்தபடி மரத்துநிழலில் படுத்துக் கிடப்பவர்கள் ஆகியோரின் சித்திரமெல்லாம் ஏதோவொருவகையில் வந்து போயிற்று.

“உங்களுக்கென்ன வடிவேலு? ஜம்முனு இருக்கீங்க. சாமியார் மாதிரி. ஞானி மாதிரி
அப்போ செரைக்க வேண்டாம். இந்த தாடியை அப்படியே வுட்ருலாம்கிறீங்ளா?
வுட்ருங்க.. தாடிதான் உங்களுக்கு பவரே
அப்போ வண்டிய எடுங்க
என்னது?
எனக்காக ஒரு பத்துநிமிஷம். எடுத்துட்டு வாங்க. வூட்டுக்குப் போயிட்டு வந்துரலாம்

இல்லெ வடிவேலு.. எனக்கு நெறைய வேலைகள் இருக்குது. அவசரமாப் போயாகோணம்

போய்க்கலாம். ஆதார்க் கார்டக் கொண்டா பாஸ்புக்கக் கொண்டா சிலிண்டர்புக்கக் கொண்டான்னு ஒரே டார்ச்சர்.. எனக்காக வீடு வரைக்கும் வாங்க.. பத்தே நிமிஷம்.

சிலிண்டர் ஏதாச்சும் எடுக்கிறதுக்குப் போனீங்களா..? அங்க இதெல்லாம் வேணும்ன்னுட்டாங்களா?
அதெல்லாம் ஒண்ணுமில்ல.. பூபதி எப்படியிருக்காப்டி? நல்லாருக்காப்டியா?
என்னது?
ஒண்ணுமில்ல.. பத்தே நிமிஷம் எனக்காக வண்டிய எடுங்க. வூட்டுக்குப் போயிட்டு வந்திரலாம்
குடிச்சிருக்கீங்ளா..?
என்னப் பார்த்தா குடிச்சிருக்கற மாதிரியா தெரியுது?
இல்லே எனக்கு டவுட்டாத்தான் இருக்குது. வாயை ஊதுங்க

வாயை ஊதினார். லேசான பீடி வாசனை. உணவெடுக்காமல் வெறும் குடலாக இருக்கும்போது அந்தக் குடல் புண்ணாகாத ஆரோக்கியமான குடலாக இருக்கும்பட்சத்தில், துர்நாற்றமில்லாத ஒர் ஆரோக்கியத்தின் வாசனை வருமல்லவா? அந்த வாசனை. இப்போது குடித்திருக்கவில்லையெனினும் வடிவேலு குடிக்கிற ஆள்தான். ‘அவருக்கென்னங்க.. கைவசம் நல்ல தொழில் இருக்குது. ஒருவாரம் வேலைக்குப் போனாலே ஒருமாசத்திக்கு உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு சம்பாதிச்சிருவாரு.. ஆனா என்ன, அந்த ஒரு மாசத்திக்கும் சாப்பிடறாரோ இல்லியோ உட்கார்ந்து குடிச்சிட்டேயிருப்பாரு.. அதான் பிரச்சனை.என ஒருசமயம் பூபதி இவர்குறித்து சொல்லியிருக்கிறான். வடிவேலுவின் கண்களை சில விநாடிகள் உற்றுப் பார்த்தேன். போய்த்தான் பார்ப்போமே எனத் தோன்றியது. “சரி, உக்காருங்க போலாம்”. என்றேன்.

ஈஸ்வரன் கோவிலைத் தாண்டி வடக்கே போய்க்கொண்டிருந்தோம். ஆளரவமும் வாகனரவமும் அற்றுப்போயிருந்த தார்ச்சாலையில் நசுங்கிக்கிடந்த ஓணானை இரண்டு காக்கைகள் கொத்திக் கொண்டிருந்தன. இறுக்கம் தளர்ந்து மிதமான வேகத்தில் கீகாத்து அடிக்க ஆரம்பித்திருந்தது. சாலையின் வலப்புறம் வரிசைகட்டி வளர்ந்திருந்த வேலி மரங்களின் நிழல் சாலையைவிட்டு விலகி பக்கவாட்டு மண்பாதையையும் கடந்து கீழே ரோட்டுக்குழிக்குள் இறங்கியிருந்தது. ரோட்டுக் குழியெங்கும் பார்த்தீனியமும் துத்தியும் மண்டிக்கிடந்தன. துத்திச்செடிகளின் மஞ்சற்பூக்கள் கருப்பண்ணசாமி சிலைக்கு வைத்திருக்கும் சந்தனப் பொட்டுகளை நினைவூட்டின. காயும் துத்திச்செடிகளின் வாசனையும், வேலிக்கு அப்பாலிருக்கும் தோட்டத்தில் அறுத்து குச்சுக்குச்சாக ஊன்றப்பட்டிருக்கும் சோளத்தட்டுகள் வாசனையும் கீகாத்தில் கலந்திருந்தது. “இப்போ எங்க வேலைக்குப் போயிட்டிருக்கீங்க வடிவேலு..? என்றேன்.

“எங்கீன்னு இல்லே… எங்கவேணாலும் போறதுதான்

இன்னும் ஒயரிங் வேலைக்குத்தானே போயிட்டிருக்கீங்க?

அதே வேலைதான். இருந்தாச் சொல்லுங்க. வந்து செஞ்சு குடுக்கறேன்

வலப்புறமாகப் பிரிந்த மற்றொரு தார்ச்சாலையில் வண்டியைக் கிழக்கே விடச் சொன்னார். சற்று தூரத்தில் வீடுகள் தென்பட்டன. பெரிய அரசமரமும் அதனடியில் சிறு விநாயகர் கோவிலுமாக ஊர் ஆரம்பித்தது. சிலர் கோவில் திண்ணையில் பதினைந்தாங்கரம் ஆடிக்கொண்டிருந்தனர். எதிர்ப்புறம் கொட்டகை மாதிரியான அமைப்பில் ஒரு கடை இருந்தது. டீக்கடையாக இருப்பின் வடையோ பஜ்ஜியோ சாப்பிட்டு தேநீரும் அருந்திவிட்டுப் போகலாம் என வண்டியை நிறுத்தினேன். ஆனால் அது மளிகைக் கடை. சிகரெட்டாவது பற்றவைத்து இழுத்துவிட்டுப் போகலாம் என இறங்க முயற்சிக்க, “ஏனுங்.. என்னாச்சு.. இங்கயே எறக்கி வுடறீங்க.. வூட்டுவரைக்கும் கொண்டாந்து வுடுங்க.என்ற வடிவேலுவிடம் “ஒரு சிகரெட் இழுத்துட்டுப் போயிரலாமே..என்றேன். “ வூட்டுக்கே போயிரலாம்போங்க.. அங்கயே இருக்குதுஎன்றார்.
விநாயகர் கோயிலிலிருந்து மூன்று சிமெண்ட் சாலைகள் ஊருக்குள் போயின. இடது புறமாக வடக்கே போனதில் வண்டியை விடச்சொன்னார். “கொஞ்ச தூரம் போனீங்ன்னா ஒரு கரண்டுமரம் வரும். பக்கத்துலயே ஒரு குடிபைப்பு இருக்கும். பக்கத்துலயே ஒரு மஞ்சரளி பூத்துக் கிடக்கும். அதையொட்டியே இன்னொரு சிமெண்ட்ரோடு கிழக்கே பிரிஞ்சு போகும். அதுல விடுங்க என்றார்.

மஞ்சரளிச்செடிப் பிரிவில் கிழக்கே திரும்பினேன்.  வெள்ளைவேலா மரத்தின் நிழல்   கூடாராமாய்க் கவிழ்ந்திருந்த இடம் வந்ததும் வண்டியை நிறுத்தச் சொன்னார். பனியன் வேஸ்டுகளில் நூல் பிரித்தபடி சில பெண்கள் அவர் நிறுத்தச் சொன்ன வீட்டின்முன் சிமெண்ட் சாலையில் அமர்ந்திருந்தனர். வண்டியை மதிற்சுவரின் ஓரமாக நிறுத்தினேன். அந்தக் காலத்தைய சுவர். ஆளுயரத்துக்கும்மேலே இருந்தது. நூல் பிரிப்பதையும் பேச்சையும் நிறுத்திவிட்டு, ஒரு கணம் என்னை கவனித்த பெண்கள் மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தனர். அவ்வளவு பெரிய மதிற்சுவருக்கு அந்த நடையும் , நடைக்குண்டான தகரக்கதவும் ரொம்பவும் சிறியதாகத் தோன்றியது. கதவு திறந்து உள்ளேபோன வடிவேலுவைப் பின்தொடர்ந்தேன்.

கிழக்குப்பார்த்த இரு அறைகளுடைய ஒற்றைக்கோம்பை ஓட்டுவீடு. வீட்டைவிடவும் வாசல் விஸ்தாரமாக இருந்தது. வாசலின் வடக்கு கிழக்கு எல்லைகளாக மற்ற வீடுகளின் பின்பக்கச் சுவர்கள் அமைந்திருந்தன. வீட்டிற்கு நேர் வடபுறத்தில் வாசலின் வடமேற்குப் பகுதியில் தென்னந்தடுக்கு மறைப்பாலான பொடக்காலி இருந்தது. சலதாரை தண்ணிக்கு முருங்கைமரம் வைக்கப்பட்டு வளர்ந்திருந்தது. வடிவேலு வீட்டின் நிழல் அதன் முன் சுவரிலிருந்து தரையிறங்கத் துவங்கியிருந்தது. கிழபுற வீட்டின் நிழல் தரையிலிருந்து அதன் பின் சுவரேற ஆரம்பித்திருந்தது. தென்புறத்திலிருக்கும் அறையின் கதவைத் திறந்த வடிவேலு ‘உள்ளே வாங்கஎன்றார். உள்ளே போனேன். பத்துக்கு பதினொன்று அளவுள்ள சிறிய அறை .
இந்த வீட்ல நீங்க மட்டும்தான் இருக்கீங்ளா?
ஆமா.
அப்பா அம்மாவெல்லாம்..?
உங்களுக்குத் தெரியாதா? எங்கப்பன் செத்து பதினாலு வருசமாச்சே
அம்மா..?
அவ இன்னும் உசுரோடதான் இருக்கறா. இங்கில்ல.. மேக்கால ஊர்ல இருக்கிறா..
வடபுறத்து வீட்ல யாரு இருக்காங்க..?
அதை வாடகைக்கு வுட்ருக்கேன். மாசம் ஐநூறு ரூவா.. அதையும் கொஞ்ச நாளா குடுக்கறதக் காணோம்
வாடகை குடுக்காட்டி காலிபண்ணச் சொல்லவேண்டீதுதானே
ஆளே கொஞ்சநாளா வாரதக்காணோம். வரட்டும் . காலிபண்ணச்சொல்லணும்

கிழிந்த கோரைப்பாயொன்று நடு அறையில் கோணல்மாணலாக விரிக்கப்பட்டுக் கிடந்தது. எரிந்த தீக்குச்சிகளும் துண்டுப்பீடிகளும் தரைமுழுதும் பரவிக் கிடந்தன. கொஞ்சம் தண்ணீரோடு பச்சைநிற ரப்பர் குடமொன்று இருந்தது. அதன்மேலே ஒரு தட்டும் சொம்பும் வைக்கப்பட்டிருந்தது.   பாதி தின்றநிலையில் பார்சல்பொட்டல வாழையிலையினாலேயே மூடியும் மூடாமலும் புரோட்டா வைக்கப்பட்டிருந்தது.வடக்குச்சுவரின் மேற்கு மூலையில் மூன்றடுக்கு அலமாரி இருந்தது. பலதையும் போட்டு ஒரே குப்பைக்காடாக காட்சியளித்தது.  555 சீட்டுக்கட்டுப் பெட்டிகள் கிடந்தன. நடு ஷெல்பில் ஒரு கோல்டுபில்டர் சிகரெட் பெட்டியும் கிடந்தது. திறந்து பார்த்தேன். உள்ளே ஒன்றுமில்லை. பட்டைப் பின் செல்போன் சார்ஜர் ஒன்றும் கிடந்தது.
“இந்த சார்ஜர் வொர்க் ஆகுமா வடிவேலுஎன்றேன்..”புதுசுங்க. என்றபடியே  பிளக்பாய்ண்டில் சார்ஜரைப் பொருத்தி, என் செல்போனை வாங்கி பின்னைக் குத்தி சுவிட்சை ஆன் செய்து , சார்ஜ் ஏறுவதைக் காட்டினார். “நல்லது. சுவிட்ச்சுப் பொட்டிமேலேயே வச்சுருங்க.. போகும்போது எடுத்துக்கிறேன்என்றேன். 
அறையின் வடமேற்கு மூலையில் பழைய காலத்திய நீள்சதுரவடிவ டிரங்குப் பெட்டி இருந்தது. அதன் மேலே விலையில்லா மின்விசிறி , விலையில்லா மாவரைப்பான், விலையில்லா சட்னி அரைப்பான் ஆகிய வீட்டு உபயோகப்பொருட்கள் அட்டைப்பெட்டியோடு அடுக்கப்பட்டிருந்தன. “ஏன் வடிவேலு இதையெல்லாம் யூஸ் பண்றதில்லையா? பேக்கிங்கே உடைக்காம வெச்சுருப்பீங்களாட்ட இருக்குதே” என்றேன். “நல்லாப் பாருங்க.. பெட்டி மட்டும்தான் இருக்குது. அதெல்லாம் கொடுத்தப்பவே யூஸ் பண்ணியாச்சு. மொத்தம் நாலாயிரத்தி எரநூறு ஆச்சு” என்றார்.
தென்கிழக்கு மூலையில் புகைபோக்கியுடன் கூடிய, நின்றுகொண்டே சமைக்கும்படியான மேடை விறகடுப்பு இருந்தது. சமைத்துத்தான் பலகாலம் ஆகிவிட்டதுபோல. முனைகள் இடிந்த அந்த அடுப்பினுள் கசக்கியெறியப்பட்ட காகிதக் குப்பைகளாகக் கிடந்தது. அடுப்பு மேடைக்குக் கீழே கவனித்தேன். காய்ந்த சுள்ளிகளும் சில பாத்திரங்களும் மட்டுமே இருந்தன. சிலிண்டரைக் காணோம். “எங்க வடிவேலு.. சிலிண்டரையே காணமாட்டயிருக்குதே ?என்றேன். சிலிண்டர்தான் இல்லையேஎன்றார்.

“என்னமோ சிலிண்டர்புக் எடுக்கோணம் ஆதார் கார்டு எடுக்கோணம் அது இதுன்னீங்க?

கேஎம் தெரியுமில்ல.. அவுருதான் சொன்னாரு. போயி கேஸ்புக்கு ஆதார்கார்டெல்லாம் கொண்டுட்டுவாடா.. சிலிண்டர் எடுத்துக்கலாம்னாரு

எனக்கு என்னத்தையோ புரிந்துகொண்டதைப்போல இருந்தது. பேச்சை மாற்றினேன். “அப்போ இந்த வீட்ல நீங்க மட்டும்தான் தனியா இருக்கிறீங்களா
ஆமா.. நான் மட்டும்தான் இருக்கேன்
சமையல் சொந்தமாவே பண்ணிக்கிறதா?
சமையல்லாம் அவ வந்ததுக்கு அப்புறம்தான் பண்ணனும். இப்போதைக்கு கடைல வாங்கியாந்து சாப்பிட்டுக்கிறதுதான்
என்னது? அவளா? உங்களுக்கு கல்யாணம் ஆகீருச்சா.. சம்சாரம் பிள்ளைபேறுக்கு அவங்க அம்மாவீட்டுக்குக்கீது போயிருக்கிறாங்ளா?

அவள்னா சம்சாரம் அல்ல. சம்சாரம் ஆகப்போறவ..

மறுபடியும் என்னத்தையோ புரிந்துகொண்டதைப்போல் இருந்தது. பேச்சை மாற்றினேன். சீட்டுக்கட்டெல்லாம் கெடக்குது. துண்டுப்பீடிக கெடக்கறதையெல்லாம் பார்த்தா தினமும் சீட்டாட்டம் பட்டையக் கெளப்பும் போலிருக்குதே..

தினமுமெல்லாம் நடக்காது. எப்பாச்சு ஒரு நாளைக்கு மூடுவந்தா ஆடறதுதான்.

ஓ… சோடிக உள்ளூர்லயே இருக்காங்ளா? வெளிய இருந்து வருவாங்களா?

சோடியெல்லாம் யாருமில்ல.. நானே ஆடிக்கிறதுதான்

என்னது?

ஆமாம். நானே ஆடிக்குவேன். ரெண்டு பக்கமும் ரண்டு கையி. எதுத்தால ஒரு கையி. எனக்கொரு கையி. நாலுகைக்கும் சர்சர்னு சீட்டப் போட்டுட்டு நாலு கைக்கும் சேர்த்து நானே ஆடிக்குவேன். செம இன்ட்ரெஸ்ட்டா இருக்கும்

எனக்கு உள்ளுக்குள் சிரிப்பாக இருந்தது. இருக்கற வேலையையெல்லாம் விட்டுவிட்டு இந்த கிறுக்கனோடு வந்து உளறிக் கொண்டிருக்கிறோமே என கொஞ்சம் சலுப்பாகவும் இருந்தது. வடிவேலுவின் கண்களையே உற்றுநோக்கினேன். அந்த கண்களையே எத்தனை தரம்தான் உற்றுநோக்குவது?  உள்ளே என்ன இருக்கிறது என்பதையெல்லாம் என்னால் எதுவும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதிலே கண்டுபிடிக்க என்ன இருக்கிறது? அதீதமான குடி. கொடிய தனிமை. மனம் பிறழ்ந்துகொண்டிருக்கிறது. கொஞ்சநாளில் வடிவேலு சட்டை வேட்டியெல்லாம் கிழித்துவிட்டுக்கொண்டு ரோடுரோடாக திரிந்தாலும் திரியலாம் எனத் தோன்றியது. அவர் கண்களை உற்று நோக்கினேன் எனச் சொன்னேனல்லவா? அதுவரைக்கும் அவரும் இமைக்காமல் விலக்காமல் என் கண்களையே பார்த்தபடியிருந்தார். அந்த விழிகள் கயமையோ தந்திரமோ இல்லாததுவாய் வெறுமனே இருந்தன என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். நான் பார்வையை விலக்கிக்கொண்ட பிறகு அவரும் விலக்கிக்கொண்டு குடத்திலிருந்த தண்ணீரை சொம்பில் மோந்து நீட்டினார். “இந்தாங்க.. குடிங்க.

வெள்ளையாக செதில்செதிலாக மிதந்தபடி தண்ணீர் குழம்பிக் கிடந்தது. கடுமையான தோல்நோயுள்ளவன் உடல் தலையெல்லாம் சொறிந்து சொறிந்து உதிர்ந்த நோய்த் துணுக்குகளையெல்லாம் தண்ணீரிலேபோட்டு நன்றாக கலக்கிக் குடுப்பதுபோல இருந்தது. இத்தனைக்கும் வடிவேலுவுக்கு ஆரோக்கியமான சருமம்தான். ஆள் அழுக்காகவும் குளிக்காமலும் சிரைக்காமலும் இருந்தாலுமேகூட அவருக்கு சொரியாஸிஸின் எந்தவொரு வகைமையும் இருப்பதாகத் தெரியவில்லை. “என்ன வடிவேலு தண்ணி இந்தக் கண்டிசன்ல இருக்குது. இதை எப்படிக் குடிக்கறது?என்றேன்.

“ஏனுங்க இந்தத் தண்ணிக்கு என்னங்க..?

கருமம். நீங்களே பாருங்க.. என்ன லட்சணத்துல இருக்குதுன்னு”.

சொம்பை வாங்கிய வடிவேலு ஒரே மூச்சில் குடித்துமுடித்துவிட்டு மீண்டும் அதையே கூறினார் “ஏனுங்க  இந்தத் தண்ணிக்கு என்னங்க..?

சரி, அதை வுடுங்க. நான் கெளம்பறேன். நீங்க வர்றீங்ளா வர்லியா?

ஏனுங் போகோணமா..? அப்பறமா வெய்யத்தாழப் போனாப் போவுது..

அப்ப நீங்க வர்லியா? என்னமோ சிலிண்டர்புக்கு எடுத்துட்டுப் போகோணம் அது இதுன்னீங்க..

சிலிண்டர்புக்குதான் இல்லையே..

ஓ.. அப்பவே சொன்னீங்களே.. நாந்தான் மறந்துட்டேன். சரி வடிவேலு, ஒடம்பப் பார்த்துக்குங்க.. நல்லா ரெஸ்ட் எடுங்க.. நான் கெளம்பறேன்.

நீளமான துண்டுப்பீடியொன்றை பற்றவைத்துக்கொண்ட வடிவேலு புகைவழியும் வாயோடு சின்னப்பையன்களைபோல் கையை இடம்வலமாக ஆட்டியபடி டாட்டாகாட்டினார். “நல்லது. போயிட்டு வாங்க.

மரத்துநிழல் கிழக்கே போயிருந்தது. உட்கார்ந்திருந்தவர்கள் யாரையும் காணோம். சிமெண்ட் ரோடு வெறிச்சோடிக் கிடந்தது.  சீட்டின்மேல் உதிர்ந்துகிடந்த வேலாயிலைகளை தட்டிவிட்டுவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.

தாகமாக இருந்தது. தம்மடிக்கவும் தோன்றியது. விநாயகர் கோவில் மளிகைக்கடையில் பச்சைநிற பொடாரன் 200மில்லி பாட்டிலொன்று வாங்கி ஒரே மூச்சில் குடித்து முடித்தேன். கேஸ் அடைத்த குளிர்பானம் உள்ளே போனதும் , குடலுக்குள்ளிருந்த வாயுவெல்லாம் ஏப்பமாக வெளிப்பட ஆரம்பித்தன. ஒவ்வொரு ஏப்பமும் ஒரு இலகுவான வயிற்றுநிலையை உருவாக்கியபடியிருந்தது.  கோல்டு பில்டர் ஒன்றை வாங்கி பற்றவைத்தேன். பதினைந்தாங்கரம் ஆடிக்கொண்டிருந்தவர்கள் ஒருவரையும் காணவில்லை. கோயில் திண்ணையில் செம்மிநாயொன்று ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நெட்டு வேலைசெய்ய ஆரம்பித்திருந்தால் பரவாயில்லை போனவுடன் கரண்டுபில்லை கட்டிவிட்டு வீட்டுக்கு போய்விடலாம் என நினைத்துக்கொண்டேன். பலரையும் போல அதற்கென இருக்கும் ஆப்பை டவுன்லோடுசெய்து செல்போனிலேயே கரண்டுபில்லை கட்டிப்பழகிக்கொள்ளவேணும் எனும் எண்ணம் ஓட, அனிச்சையாக சட்டைப் பாக்கெட்டுக்குப்போன வலதுகை செல்போனைத் தேடியது. ஒரு கணம் பக்கென்று இருந்தது. அடுத்த விநாடியே வடிவேலு வீட்டில் சார்ஜ் போட வைத்தது ஞாபகம் வர, நல்லவேளை இங்கயே பார்த்துக்கிட்டமே.. ஊடுபோயி பார்த்திருந்தா பெரும்சிரமமாப் போயிருக்கும்என நினைத்துக்கொண்டபடியே வண்டியை திருப்பினேன்.

சற்றுமுன்னர் வெளியேவரும்போது திறந்தநிலையிலேயே விட்டுவிட்டு வந்திருந்த வடிவேலுவுடைய வீட்டு வெளிமதிற்சுவரின் தகரக்கதவு  சாத்தப்பட்டிருந்தது. ஆள் எங்கேயாவது கிளம்பிப்போயிருப்பாரோ.. அப்படிப் போயிருந்தா இந்தக் கிறுக்கன எங்கீனு போயித் தொளாவறது.. ச்சை.. சிக்கல்புடிச்ச வேலை. என மனசுக்குள் புலம்பியவண்ணம் ,என்ன செய்வதென தெரியாமல் பைக்கில் உட்கார்ந்தபடியே மறுபடியும் கதவைப் கவனித்தவனுக்கு அப்போதுதான் அது புலப்பட்டது. கதவு  பூட்டப்படவில்லை. வெறுமனேதான் சாத்தப்பட்டிருக்கிறது. சட்டென்று உண்டான சோர்வு சட்டென்று அகன்று மீண்டும் உற்சாகம் ஊற்றெடுக்க பைக்கிலிருந்து இறங்கிவந்து கதவைத் தள்ளினேன். திறந்துகொண்டது. தென்புறத்துவீட்டின் கதவும் சாத்தப் பட்டிருந்தது. பூட்டப்படவில்லை. நாதாங்கியும் போடப்படவில்லை. நாதாங்கி போடப்படாது வெறுமனே சாத்தியிருந்தால் கதவுக்கும் நிலைப்படிக்கும் சிறு சந்தாவது இருக்குமல்லவா? அப்படியான சந்தும் இல்லை. கதவு நிலைப்படியோடு இறுக்கமாக ஒட்டியிருந்தது. அப்படியென்றால் உள்தாழ் வைக்கப்பட்டிருக்கிறது. அட பாங்கிறுக்கா.. இந்த மத்தியானத்துல தாழ்போட்டுட்டு படுத்திருக்கிறானே என நினைத்தபடி கதவைத் தட்டுவதற்குப் போனவன் வெடுக்கென கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டேன்.

உள்ளிருந்து ஏதோ சத்தம் வருவதுபோலத் தோன்றியது. காதைத் தீட்டிக்கொண்டேன்.  வடிவேலு யாருடனோ மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தார். யாரோ அவருடைய பேச்சுக்கு ம் போட்டு கேட்டுக்கொண்டிருப்பதும் செவிப்புலனாகியது. நம்பவேமுடியாத ஆச்சர்யத்துடன் மேலும் காதை தீட்டிக் கொண்டு கூர்ந்து கேட்கத் துவங்கினேன்.
அந்த ‘ம்ஒரு பெண்ணினுடையதாக இருந்தது.     















இளஞ்சூடான நீர்…


                
                                               

அறிமுகமோ பழக்கமோ இல்லாவிட்டாலுங்கூட சிலர் நம் மனதிலே பதிந்து விடுவார்கள். எந்த நேரமும் அவர்களைப் பற்றிய யோசனையொன்று மனதின் ஒரு மூலையில் ஓடியபடியும் இருக்கும். சமீப காலமாக அப்படி என் கவனத்தைக் கவர்ந்தவர்களில் ரங்கமணியும் ஒருவர். அவருடைய உண்மையான பெயர் என்னவென்று தெரியாது. ஆள் பார்ப்பதற்கு நானே ராஜா நானே மந்திரி படத்தில்வரும் விஜயகாந்தைப்போல இருப்பார். அந்தப் படத்தில் விஜயகாந்தின் கதாபத்திரத்திற்கு ரங்கமணி என்று பெயர்.

நாச்சிக்குட்டி மாமனின் வீட்டிற்கு அந்த  வழியாகத்தான் போகவேண்டும். பல்லடம் போய்வருவதற்கும் மெயின் ரோட்டைத் தவிர்த்துவிட்டு பெரும்பாலும் அவ்வழியைத்தான் பயன்படுத்துகிறேன். நாச்சிக்குட்டி என்னுடைய பைனான்சியர்களில் ஒருவர். பல்லடத்தில்தான் எங்கள் தறிகளுக்கு பாவுநூல் கொடுக்கும் டெக்ஸ்டைல்ஸ் இருக்கிறது. மேலும் தறிச்சாமானக் கடைகளும் தறிவேலைகள் செய்யும் வொர்க்‌ஷாப்புகளும் பல்லடத்தில்தான் இருக்கின்றன.  இப்படியான காரணங்களால் அடிக்கடி அந்த தார்ச்சாலையின் வழியாக போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கிறேன்.

காம்பிளி நதியின் தரைப்பாலம் தாண்டியதும் , தார்ச்சாலையையொட்டி வலதுபுறம் ரங்கமணியின் தோட்டம் இருக்கிறது. தோட்டத்தில் மேகோடாக வீடு இருக்கிறது. தோட்டம் முழுவதுமே தென்னை மரங்கள்தான். சுமார் முந்நூறு மரங்கள் இருக்கலாம்.  கான்கிரீட் வீடுதான். என்றாலும், சுவர்களுக்கு சிமெண்ட் பூசப்படாமல் செங்கற்கள் தெரியும்படியும், கதவு ஜன்னல்களுக்கு பெயிண்ட் அடிக்கப்படாது துருவேறியபடியும் பாழடைந்த தன்மையோடு காட்சியளிக்கும் கான்கிரீட் வீடு. புற்கள்மண்டிக் கிடக்கும் அவ்வீட்டு வாசலின் வடகிழக்கில் தென்னைகளையொட்டி ஒரு மாமரம் இருக்கிறது. அதன் நிழலில்தான் ரங்கமணி முதன்முதலாகக் காணக் கிடைத்தார். அதற்குப் பிறகும்கூட அந்த மரத்தடியில்தான் அவர் பெரும்பாலும் காணக் கிடைத்தபடி இருக்கிறார்.

பகற்பொழுதின் எல்லா வேளைகளிலும் அந்த வழியாகப் போயுமிருக்கிறேன் வந்துமிருக்கிறேன். அந்த வீட்டைக் கடக்கும்போது அனிச்சையாகத் திரும்பும் என் கண்களுக்குப் புலனாகும் காட்சியானது எப்போதும் ஒரேமாதிரியானதுதான். மரத்துநிழலில் கயிற்றுக் கட்டிலைப் போட்டு நண்பர்கள் புடைசூழ ரங்கமணியண்ணன் அமர்ந்திருப்பார். கரியநிறப் புல்லட் ஒன்றும் இன்னபிற வண்டிகளும் மரத்து நிழலின் மற்றுமொரு இடத்தில் நிறுத்தப் பட்டிருக்கும். என்னுடைய பைக்கின் சத்தம் கேட்டு பேச்சும்சிரிப்புமாகயிருக்கும் ரங்கமணியோ சகாக்களோ சட்டென அமைதியாகி ரோட்டுப்பக்கமாக தலையுயர்த்தி கவனிப்பதும், கணநேரம் எங்களின் பார்வைகள் சந்தித்து விலகுவதும் வாடிக்கை. அந்தக் கண்களையெல்லாம் காணும்போது மனதிலெ உண்டாகும் அனுமானமும்கூட எப்போதும் ஒரே மாதிரியானதுதான். இவர்கள் குடித்திருக்கிறார்கள் அல்லது குடித்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது குடிக்கப் போகிறார்கள்.

திரும்பிய பக்கமெல்லாம் அரசாங்கமே மதுக்கடைகளைத் திறந்துவைத்திருக்கும் இந்தக் காலத்தில் யார்தான் குடிக்காமல் இருக்கிறார்கள்? கிட்டத்தட்ட எல்லோருமே அந்தப் பழக்கம் உடையவர்கள்தான்.  அளவுதான் வித்தியாசம். ஆனாலும், ரங்கமணி எல்லைகளையெல்லாம் மீறிவிட்டாரென்றுதான் தோன்றியது. முந்நூறு தென்னைமரங்களையுடைய தோப்பு என்பது சராசரியாக ஆண்டுக்கு மூன்றுலட்சம் வருமானம் தரக்கூடியது. அதுவும் பெரிய உழைப்பென்று எதுவுமில்லாமலேயே கிடைக்கும் வருமானம்.



இப்படியான சவுகர்யம் அமையப்பெற்ற ஒரு மனிதன் எதற்காக எந்த நேரமும் குடித்தபடியேயிருக்கவேண்டும்? அளவாக வாரம் ஒருமுறை அல்லது இரண்டுமுறை மட்டும் மூன்று அல்லது நான்கு பெக்குகள் என்கிற அளவில் போட்டுக்கொண்டு சந்தோசமாகவும் ஜாக்கிரதையாகவும் இருந்துவிட்டுப் போகவேண்டியதுதானே என நினைத்துக்கொள்வேன். இப்படியான தோப்பும் தோட்டமும் உழைபில்லாமலேயே கிடைக்கும் வருமானமுமான பாக்கியம் எனக்கெல்லாம் கிட்டவில்லை. நான் சோறு தின்பதற்கு கடின உடழுலைப்பைக் கோரும் தறிகளை நேரங்காலம் பார்க்காது ஒட்டவேண்டியிருக்கிறது.

அதே வேளையாக குடித்து, கண்கள்கிறங்கி கால்பின்ன நடப்பவர்களிடம் ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. எதிர்காலம் குறித்த கவலைகளின்றி நிகழ்கணத்தில், இருத்தலை இருந்து பார்ப்பதால் உண்டாகும் தேஜஸ் அது. ஆரோக்கியம் கெட்டு குட்டிச்சுவரான பிற்பாடு ஞானியர் முகமொத்த அந்த பொலிவு நலிவடைந்து காலப்போக்கில் இருளண்டிப் போவதென்பதும் நடக்கக்கூடியதுதான்.

நாளை எக்கதியோ? சமகாலத்தில் ரங்கமணியண்ணன் சவரம் செய்துகொண்ட ஞானியைப் போலவும் யோகியைப் போலவும்தான் ஒளிர்ந்தபடி இருக்கிறார். சீட்டுப்பணம் குடுப்பதற்காக நாச்சிகுட்டி மாமனின் வீட்டிற்குப் போயிருந்தேன். ரங்கமணியும் நாச்சிக்குட்டியிடம் சீட்டுப் போடுகிறார் என்கிற விசயமே அன்றைக்குத்தான் தெரிய வந்தது. முழுநேரக் குடியர்களால் சீட்டுப் பணம் கட்டமுடியாது  என்றும் அவர்களை சீட்டு நடத்துபவர்கள் யாரும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் நீங்கள் நினைக்கலாம். அப்படியெல்லாம் கிடையாது என்பதை உணர்ந்த நாள் அன்று.   

திருமதி நாச்சிக்குட்டியிடம் காபியை வாங்கிக் குடித்தபடி தூண்கால் சாய்ந்து திண்ணையில் அமர்ந்து திரு நாகுவிடம் (நாச்சிக்குட்டியின் சுருக்கம்) பேசிக்கொண்டிருந்தேன். கரியநிற டீசல் புல்லட்டை நடுவாசல் வரைக்கும் கொண்டுவந்து நிறுத்திய ரங்கமணி இறங்கிவந்து திண்ணையிலே உட்கார்ந்தார். கால்கள் பின்னவில்லை. ஆனால்,கண்களில் கிறுகிறுப்பு இருந்தது. நாகு இருபதாயிரம் முதல் இரண்டு லட்சம் வரையிலான தொகையளவுகளில் மாதாந்திர ஏலச்சீட்டுகளை நடத்தி வருகிறார். நான் நாற்பாயிரம் சீட்டில் சேர்ந்திருக்கிறேன். எப்போதுமே என் அளவு அதுதான். ரங்கு ஒரு லட்சரூபாயில் சேர்ந்திருப்பார்போல. எட்டாவது ஏலத்துக்கான கழிவுபோக கட்டவேண்டிய தொகையை கொடுத்துவிட்டு சற்றுநேரம் பேசியபடியிருந்துவிட்டுக் கிளம்பினார். அந்த சற்றுநேரத்தில் இரு விசயங்கள் புலனாகியது. ரங்கு இன்னும் அந்த சீட்டை எடுக்கவில்லை. மழை வெய்யில் பற்றியெல்லாம் அவருடன் சகஜாமாக உரையாடிக் கொண்டிருந்த திருமதி நாகு காபியோ தேநீரோ ரங்குவுக்கு கொண்டுவந்து கொடுக்கவில்லை. ஏதேனும் குடிக்கிறீர்களா? என சம்பிரதாயத்துக்கும்கூட கேட்கவில்லை. காபியும் தேநீரும் போதையை கெடுக்க வல்லவை எனும் அனுபவ உண்மையை அவர் அனுமானத்திலேயே உணர்ந்திருப்பார் போலும்.  கிளம்பிச் செல்கையில் ரங்கு நாகுவிடமும் திருமதி நாகுவிடமும் சொல்லிக்கொண்டு விடைபெற்றார். குறிப்பிட வேண்டிய இன்னொரு விசயம் அவர் என்னைப் பார்த்தும் தலையாட்டிவிட்டு (இப்படியான தலையாட்டலுக்கு சரி கெளம்பட்டுங்ளா என அர்த்தம்) விடைபெற்றார் என்பதுதான்.       

அதே வேளையாகக் குடித்துகொண்டு எதிர்காலம் குறித்த சிந்தனையில்லாமல் நிகழ்கணத்தில் இருத்தலை இருந்து பார்க்கிறார் என்கிற அளவில் ரங்குவின்பொருட்டு என்னுள்ளிருந்த உணர்வை ஒருவகை பரிதாபத்தின் பாற்பட்ட கவர்ச்சி எனலாம்.  அதையும் தாண்டிய ஒரு பிரேமை அவர்மேல் உண்டானது அவர் ஏன் இப்படியான குடிகாரராய் ஆனார் என்பதை தெரிந்து கொண்ட பிறகுதான்.



சாகசங்கள் புரியும் நாயக பிம்பத்தின்மீது ரசிகமனதில் ஒரு இது உண்டாவது போலவே கோமாளித்தனங்கள் செய்யும் நகைச்சுவை பாத்திரத்தின்மீதும் ஒரு இது உண்டாகத்தான் செய்கிறதல்லவா? அப்படியான இரண்டாவது வகை இதுதான் ரங்கு ஏன் குடிகாரரானார் என்பதை அறியநேர்ந்தபோது எனக்கு ஏற்பட்ட பிரேமையும். அவரை தூரத்திருந்து ரசித்து மகிழும் ரசிகனாகவே ஆகிவிட்டேன்.

சீட்டுப் படிக்கின்ற நாளில் நாகு ஒரு விருந்து வைப்பார். ஐம்பதாயிரத்திற்கு உட்பட்ட சிறியதொகை சீட்டுகளுக்கு, இனிப்பு மிக்சர் காபியெனவும் ஒரு லட்சம் இரண்டு லட்சரூபாய் சீட்டுகளுக்கு சிக்கன் மட்டன் சாப்பாடு என்பதாகவும் அந்த விருந்து இருக்கும். அவர் நடத்தும் மாதாந்திர சீட்டுகளையெல்லாம் மாதத்தின் ஒரே தேதியில் படிக்கிற பழக்கம் அவருக்கு கிடையாது. ஒவ்வொரு சீட்டுக்கும் ஒவ்வொரு தேதியை நிர்ணயித்திருந்தார். நான் சேர்ந்திருக்கும் சீட்டுக்கு வெறும் மிக்சரும் இனிப்பும்தான் என்றாலும் எனக்கு மட்டும் பிரத்யேகமாக அன்றிரவு கோழிக்கறி போடுவார். அதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். நான் அவரிடம் சீட்டுப் போடுகிறவனாக மட்டுமின்றி கடன்வாங்கி மாதாமாதம் ஒழுங்காக வட்டி கட்டுகிறவனாகவும் இருந்தேன். மேலும் ஆண்டாண்டு காலமாக கடனிலிருந்து விடுதலையாக முடியாத அவரின் பரம்பரைக் கடங்காரனாகவும் இருந்தேன். மேலும் அவர் அவ்வப்போது குடிக்கும் காரியக்குடிக்கு வில்லங்கமெதுவும் பண்ணாமல் நல்ல முறையில் கம்பனி குடுப்பவனாகவும் இருந்தேன். சக குடியர்கள் ஏது உளறினும் பொறுமையாக செவிமடுக்கும் பண்பும் எனக்கு இருந்தது. எல்லாவற்றையும் தாண்டி நாகுவுக்கு என்மீது இயற்கையாகவே ஒரு வாஞ்சை இருந்தது.    

ஆடிமாதமொன்றின் முன்னிரவில் நானும் நாகுவும் அவர் வீட்டின் மொட்டை மாடியில் டம்ளரும் கையுமாக அமர்ந்திருந்தோம். பெளர்ணமிக்கு சில நாட்கள் முந்தைய நிலவு அண்ணாந்து பார்க்கும் உயரத்திற்கு வந்திருந்தது. வரமிளகாய்களைக் கிள்ளாமல் முழுது முழுதாகப் போட்டு தயாரித்திருந்த நாட்டுக்கோழி வறுவல் தட்டுகளில் இருந்தது. திருமதி நாகு கொண்டுவந்து வைத்துவிட்டுப் போயிருந்த அரிசிச்சோறு மூடி வைக்கப்பட்ட பாத்திரத்தில் இன்னும் திறக்கப்படாமலேயே இருந்தது. குளிரத்தக்க அளவில் மேகாத்தின் வேகம் இருந்தது. குளிர் தெரியவில்லை. அது தெரியாத அளவுக்கு பானத்தின் வீரியம் இருந்தது.

அந்த பாட்டப் போட்டுடறா மாப்ளேஎன நாகு கூறினார். ஒரு லெவலுக்கு வந்ததும் பழைய டிஎம்எஸ் பாடல்களாக கேட்பது வழக்கமானதுதான். அந்த என குறிப்பிட்டதால் எந்த பாட்டைக் கேட்கிறார் என வினவினேன். ‘அதான்டா மாப்ளே.. நம்ம கண்ணதாசன் மைக்கப் புடிச்சுட்டுப் பாடுவாரே.. ஒரு கோப்பையிலே என் குடியிருப்புன்னு.. அந்தப் பாட்டப் போட்டுவுடு..என்றார். கைப்பேசியை எடுத்து கீழே வைத்து பாடலை ஒலிக்க விட்டேன். ‘மனுசன்டா மாப்ளே… என்னமா எழுதீருக்காம் பார்த்தியா? வாழ்க்கைல ஒரு நாள் வாழ்ந்தாலும் அவன மாதிரி வாழோணம்.. நாம வாழறதெல்லாம் வாழ்க்கையா என்ன? கூறுகெட்டதனமா.. என்னமோ ஆயிரம் வருசத்திக்கி இருக்கப் போறாப்பில தொட்டுத் தொட்டு நக்கிக்கிட்டு..

கரெக்ட்டுங் மாம்சு.. ஆனா என்ன பண்றது? நம்ம சூழ்நிலைக்கு நாம இதுக்குமேல ஆடமுடியாதே.. ஏதோ இந்த மாதிரி ஆடுனவங்க பாடுனதக் கேட்டு மனச ஆத்திக்க வேண்டியதுதான்.என்றேன். பாடல் முடிந்து பரமசிவன் கழுத்திலிருந்து எனும் கண்ணதாசனே மைக்கைப் பிடித்துக்கொண்டு பாடுகிற மற்றொரு பாடல் ஆரம்பமாகியிருந்தது. கருணையும் இரக்கமும் மிகுந்த வெய்யிலைப் போல நிலவின் ஒளி. மேகப்பொதிகள் யானைகள் ஓடுகின்ற வேகத்தில் நிலவைக் கடந்து போய்க்கொண்டிருந்தன.  ‘நம்மாளு ஒருத்தரு கிட்டத்தட்ட இதே ரேஞ்சுகுத்தான் வாழ்க்கையை கொண்டாடிட்டு இருக்கறாருபோல..என்றேன்.

“நம்ம செட்லயா.. யாருடா மாப்ளெ.. எனக்குத்தெரியாம?

உங்களுக்குத் தெரியாம என்ன.. நல்லாத் தெரிஞ்சவருதான் மாம்ஸ்.. உங்ககிட்ட சீட்டுங்கூடப் போட்டுட்டிருக்காரே.. புல்லட்டுக்காரரு.. ஆத்துக்கால் தோட்டம்.

யாரு.. அந்த வேலாயுதம்பாளையத்து மாப்ளையச் சொல்றியா? அட ஆமாம்பா அவன் அந்த மாதிரியான ஆளுதான். ஆனா அதே வேளையாக் குடிச்சிட்டுக் கெடந்தாலும் வரவுசெலவுல நாணயஸ்தனப்பா.. பொம்பளை விசயத்துலயும் ஸ்ரீ ராமரேதான்.  கட்டுன சம்சாரத்தத் தவிர வேறொரு பொண்ண கெனாவிலயுங்கூட நெனைச்சுருக்க மாட்டான். தெரியுமா?.

என்னது..? அவருக்கு கல்யாணம் ஆகீருச்சா..? பொண்ணே கெடைக்காமப் போனதாலதான் ஆளு மனசொடிஞ்சு இப்படி மாறீட்டாருன்னல்ல நான் நெனைச்சுட்டிருக்கேன் 

நீ வேற.. அவனுக்கு கல்யாணமாகி பத்து பன்னெண்டு வருசத்துக்கு மேல ஆகுது. ஒரு பொட்டப் புள்ளையொண்ணுகூட இருக்குது. அநேகமா பெரிய மனுசி ஆகீருக்கும்னு நெனைக்கறேன்

என்ன மாம்சு இப்படிச்சொல்றீங்க.. உங்ககூட வரவுசெலவுல தொடர்புல இருக்கிற பார்ட்டி. அவரு பொண்ணு வயசுக்கு வந்தா உங்களுக்குத் தெரியாமப் போயிருமா என்ன? தெரட்டிச்சீரு மனைவெச்சு தண்ணிவாக்கறதுன்னு கூப்பிட்டிருப்பாரே...

“அட இங்க இருந்தா எல்லாவிவரமும் தெரியும் மாப்ளே.. அவஞ் சம்சாரம் அவிய அய்யனூட்லயல்ல இருக்கிறா.. புள்ளப்பேறுக்காகப் போனவ. வருசம் பன்னெண்டுக்குமேல ஆச்சு. அப்படியே இருந்துக்கிட்டா. அவம்புள்ளை கருப்பா செவப்பா தன்னையப்போல இருக்குதா இல்ல சம்சாரத்தப்போல இருக்குதா வயசுக்கு வந்துருச்சா இல்லை இன்னும் வர்லியாங்கிற  வெவரமெல்லாம் அவனுக்கே தெரியாது. இந்த லட்சணத்துல எனக்கெப்படி மாப்ளே தெரியும்? அது ஒரு பெரிய கதை. கேனக் கதை மாப்ளே” .

அன்னவாரியில் சோற்றையள்ளி இருவரது தட்டுகளிலும் போட்டேன். நாகு குழம்பை ஊற்றினார். சுடுசோற்றில் கோழிக்குழம்பை பிசைந்து சாப்பிடுவதைக் காட்டிலும் அந்த கேனக்கதையை அறியும் ஆவல் அதிகமாக இருந்தது. “அந்தக் கதையைத்தான் சொல்லுங்களேன்.

“சொல்றன் மாப்ளே.. இந்தமாதிரி நேரத்துல அந்தக் கூறுகெட்ட கதையைச் சொன்னா நல்லாத்தான் இருக்கும்னு எனக்கும் தோணுது. அதுக்கு முன்னால உங்கிட்ட ஒரு கேள்வி. புருசம்பொண்டாட்டிக்குள்ள சண்டை வாரதுக்கு அந்த சண்டை பெருசாகி நிரந்தரமாப் பிரியறதுக்கு ஆயிரத்தெட்டுக் காரணங்கள் இருக்கலாம். அந்த ஆயிரத்தெட்டுக் காரணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட காரணம் இது. என்னனு கண்டுபிடி பார்க்கலாம்?    

கதையைச் சொல்லுங்கன்னா காரணத்தக் கண்டுபிடி மயிரக் கண்டுபிடின்னு.. ஏம்மாம்ஸ் ஆவிய வாங்கறீங்க?






கோவிச்சுக்காத மாப்ளே.. என்னதான் கவுட்டி கவுட்டியா யோசிச்சாலும் யாராலும் யூகிக்கவே முடியாத காரணம் அது. பாரதக்கதை கேட்டிருக்கியா? அதுல தர்மரு நடத்துன பங்சனுக்கு விருந்துக்கு வந்த துரியோதனராசா தண்ணிக்கும் பளிங்குக்கல்லுப் படிக்கட்டுக்கும் வித்தியாசம் தெரியாம குளத்துக்குள்ள வழுக்கிவிழுந்தான்னும் அதப் பார்த்து மேல்மாடத்துல சோடிகளோட நின்னுக்கிட்டிருந்த நங்கையாக்காரி பாஞ்சாலி சிரிச்சுப்போட்டான்னும் அந்த அவமானம் பொறுக்கமுடியாமத்தான்  இவன் பகையை வளர்த்துக்கிட்டான்னும் சொல்வாங்கல்லவா..? அப்படியான பகை இது

மாமனாரு வூட்டுக்கு விருந்துக்குப் போனப்ப இவரும் வழுக்கிவிட்டுவுழுந்து அத இவரோட நங்கையாக்காரி மாடில  நின்னுட்டிருந்தது பார்த்து சிரிச்சுப் போட்டுதாக்கும்

நங்கையாக்காரி மட்டும் சிரிக்கல. பொண்டாட்டி சகலை மாமனாரு ஏன் மாமியாருஞ் சேர்ந்து சிரித்த கதை அது. ஆனா, அவங்க சிரிச்சது இவன் வழுக்கி வுழுந்ததனாலயோ அதப் பார்த்தோ அல்ல 

பின்னே?

இவன் புல்லட்டு பைக்க யாருக்கும் தெரியாம ஸ்டார்ட் பண்ண முயற்சி பண்ணி கீழபோட்டு வுழுந்ததப் பார்த்து 

என்ன மாம்ஸூ சொல்றீங்க? 

அட ஆமாம் மாப்ளே.. அப்ப இவனுக்கு கல்யாணம் ஆன புதுசு. தல தீபாவளிக்கு மாமனாரு வீட்டுக்குப் பொண்டாட்டியோட போயிருக்கான். இவன் கட்டுன பக்கம் ரெண்டே பொண்ணுகதான். பெரிய பொண்ண சென்னிமலைக்குப் பக்கமா ஏதோவொரு ஊருக்கு கட்டிக் கொடுத்திருக்கிறாங்க. அந்த பொண்ணோட மாப்ளை வயசானவரு. ரெண்டாந்தாரமாத்தான் கட்டிக் குடுத்திருக்காங்க. அது கொஞ்சம் இவனவிடவே வசதியான எடம். இப்ப இருக்கிற தோட்டந்தோப்பெல்லாம் இவனுக்கு அப்பவே இருந்துதுனாலும் பார்த்தா ஒண்ணுக்குமே வழியில்லாத ஏழைக் குடியானவனாட்டத்தான் இருப்பான். தண்ணி தவுடு பீடி சிகரெட்டுனு எந்தக் கெட்ட பழக்கமும் கெடையாது. பழைய டிவிஎஸ் பிப்டியொண்ணு வெச்சுருப்பான். அதுலதான் புருசனும் பொண்டாட்டியும் நோம்பிக்குப் போயிருக்கிறாங்க.

சகலை இவனுக்கு நேர் எதிர். வயசான ஆளுனாலும் நரைச்ச மீசைக்கு டை அடிச்சுக்கிட்டு மைனருக பண்ணக்கூடிய எல்லாத்தையும் பண்ணக்கூடிய ஆளு. கருப்புக்கலர் டீசல் புல்லட்லதான் வருவாரு போவாரு. அவரு போற வர்ற கம்பீரத்தப் பார்த்து இவனுக்கும் புல்லட்டு வண்டிமேல ஆசை வந்துருச்சு. சகலங்கிட்ட வண்டியோட்டப் பழக்கியுடுனு கேட்டிருக்கான். அவரும் அதுக்கென்ன பேஷா பழகிக்கலாம் அதுக்கு முன்னாடி வண்டிய ஸ்டார்ட் பண்ணி பழகிக்கோனு சொல்லிக் கொடுத்திருக்காரு. இப்பவெல்லாம் டீசல் புல்லட்டுக சுவிட்ச்சு அமுத்துனாலே ஸ்டார்ட் ஆகறமாதிரி வந்துருச்சு. ஆனா அன்னிக்கெல்லாம் கிக்கரை ஒதைச்சுத்தான் ஸ்டார்ட் பண்ணனும். அதுவும் டீசல் புல்லட்ட ஸ்டார்ட் செய்யறுதுங்கிறது சின்ன வேலையல்ல. அது பல பேரால முடியாத காரியமும் கூட.





சகலை எவ்வளவோ பொறுமையா சொல்லிக் கொடுத்தும் இவனுக்கு நேக்கு புடிபடல. சரி காலைல பார்க்கலாம் இப்போ சோத்தத் தின்னுட்டுப் படுப்போம்னு ரண்டுபேரும் வந்து படுத்துக்கிட்டாங்க. நைட்டு மூணுமணி வாக்குல ஒண்ணுக்கு எந்திரிச்சுப் போனவனுக்கு வாசல்ல நின்னுட்டிருந்த புல்லட்டப் பார்த்தவுடனே சபலம் தட்டீருச்சு. ஒண்ணுக்குப் போறதையுங்கூட மறந்துட்டு புல்லட்ட செண்டர்ஸ்டேண்ட் போட்டு நிறுத்தி கிக்கரை உதைக்க ஆரம்பிச்சிருக்கான்.  கம்பரசன் லாக்கை மேலே தூக்கியுட்டுட்டு கிக்கரில் கால் வைத்து மெதுவா கீழே கொண்டுட்டு வரணும் .அப்படி வரும்போது மேலே தூக்கிவிட்ட லாக் படக்குனு சவுண்டோட கீழே விழும். அப்படி விழுந்தா அதுக்குப் பிறகு கிக்கரை கீழே அமுத்தக் கூடாது. அப்படியே கிக்கரை மேலே கொண்டாந்து நல்லா தம்கட்டி ஒரே முதியா அடிவைரைக்கும் கிக்கரை முதிச்சு உட்டோம்னா வண்டி ஸ்டார்ட் ஆகீரும். இதுதான் பாலபாடம். இதைதான் நம்மாளு ஒண்ணுக்குங்கூட போகாம மீண்டும் மீண்டும் டிரைப் பண்ணிப் பார்த்துட்டே இருந்துருக்கான்.

கோழிகூப்புட எந்திருச்சுவந்த மாமியாக்காரி இதைப் பார்த்துருச்சு. அதுமட்டுமில்லாம ஊட்டுக்குள்ளபோயி தூங்கீட்டு இருந்தவங்களையெல்லாம் எழுப்பியுட்டு கூட்டியாந்தும் வுட்ருச்சு. பளிச்சுனு வாசல்ல லைட்டு எரியுது. பதட்டத்துல என்ன பண்ணுனான்னு தெரீல. வண்டி கீழே சாஞ்சுருச்சு. பொண்டாட்டியுட்பட எல்லாரும் ஏதோ பெருங்கொண்ட வேடிக்கையொண்ணை பார்க்கிறாப்புல பார்த்துகிட்டு கூட்டமா நிக்கறாங்க. ‘என்னுங் சகலே.. என்ன பண்ணியும் வண்டி ஸ்டார்ட்டே ஆக மாண்டீங்குதேனுநம்மாளு அப்பாவியா கேட்ருக்கான்.

என்ன பண்ணுனாலும் ஸ்டார்ட் ஆகாது சகலே.. ஏன்னா வண்டிக்கு மொதல்ல சாவி போடோணம்னுஅந்தாளு சோப்புக்குள்ளயிருந்து சாவியெடுத்துக் காட்டீருக்கான். எல்லாரும் சிரிசிரின்னு சிரிச்சுருக்கிறாங்க. அதோட நிறுத்தியிருந்தாக்கூட பரவாயில்லை. சகலன் சாவியக் கொண்டாந்து வண்டிய தூக்கி நிறுத்தி ஒரே ஒதையில ஸ்டார்ட் செஞ்சு காட்டி ஆப் பண்ணுன பிறகு சொன்னதுதான், அதக் கேட்டு மாமனாரு மாமியாரு பொண்டாட்டி நாங்கையான்னு எல்லாம் கெக்கெக்னு சிரிச்சதுதான் இவனுக்கு மூக்கச் சொறிஞ்சுவுட்டமாதிரி ஆகிப்போச்சு. அந்த நிமிசமே புல்லட்ட ஓங்கி ஒதைச்சு மறுபடியும் கீழ தள்ளிப்போட்டு மொபட்டை எடுத்துக்கிட்டு வந்தவன்தான். அதுக்குப் பிறகு அந்தப் பக்கம் எட்டியே பார்க்கலை. அன்னிக்கு உண்டான கோவம் இன்னும் அடங்கவேயில்லை

கதையைச் சொல்லிமுடித்த நாகு சொல்லும் சுவராசியத்தில் அருந்த மறந்திருந்த மதுவை ஒரே தம்மில் காலி செய்துவிட்டு டம்ளரைக் கீழே வைத்தார். தின்ன மறந்திருந்த சோற்றை குழம்பைப் பிசைந்து சாப்பிடத் துவங்கினார். தேவையான இடங்களில் அவர் சொல்வதை ஆமோதிப்பதுபோலவும் செவிமடுப்பதுபோலும் தலையாட்டியபடியே உணவை உண்டு முடித்திருந்தேன்.  கைகழுவிய தட்டை ஓரமாக நகர்த்தி வைத்துவிட்டு லுங்கி வேட்டியில் ஈரக்கையைத் துடைத்துக்கொண்டு சிகரெட்டைப் பற்ற வைத்தேன்.  என்ன இருந்தாலும் விளையாட்டுக்குத்தான்னாலும் சகலன் அப்படிச் சொல்லீருக்கக் கூடாது. அதக் கேட்டுட்டு மொத்தக் குடும்பமும் அப்படிச் சிரிச்சிருக்கக் கூடாதுஎன்றார்.

“அவுரு என்ன சொன்னாருன்னு நீங்க இன்னும் சொல்லவேயில்லையே..







ஓ..பேச்சு சுவராசியத்துல அதைச் சொல்லாமயே விட்டுட்டனா..? அந்தாளு வண்டிய ஸ்டார்ட் பண்ணிக் காட்டி ஆப் பண்ணுனதுக்கு அப்பறம் என்ன சொல்லீருக்கான்னா.. அதையும் இவங்கிட்டச் சொல்லல.. இவஞ் சம்சாரத்தப் பார்த்து சொல்லீருக்கான்.  இப்படியொரு சாமார்த்தியசாலியக் கட்டுனதுக்கு நீ பேசாம எனக்கே மூணாந்தாரமா வாக்கப்பட்டிருக்கலாம் சாந்தாமணி..ன்னு சொல்லீருக்கான்.அதக் கேட்டு மாமியாக்காரியிலிருந்து எல்லாருமே விழுந்து விழுந்து சிரிச்சதுதான் இவனுக்குப் பொறுக்கல..

அதுவும் வெடிஞ்சும் வெடியாத வெடியக் காத்தால பல்லுங்கூட வெளக்காத ஊத்தவாயை வெச்சுக்கிட்டு..

கரெக்டாச் சொன்னே மாப்ளே.. 

இது உண்மையாவே யாரா இருந்தாலும் கோவப்படுற சிச்சுவேஷந்தான். ஆனா வருசக்கணக்கா அந்தக் கோவம் தீரலீங்கிறதுதான் ஆச்சர்யமா இருக்கு

அதையேங் கேக்கறே மாப்ளே.. அதுக்குப் பிறகு அங்கிருந்து யாராரோ நாயத்துக்கு வந்தாங்க. மாமனாரு மாமியாரு சகலையெல்லாம் வந்து கால்லவுழுகாத குறையா கெஞ்சியும் இவன் மனசு மாறலை.  இந்த மாதிரி வேடிக்கைக்காக யாரும் பேசறதுதான். இதையெல்லாம் பெருசா எடுத்துக்காம போய் பொண்டாட்டியை கூட்டியாந்து பொழைக்கற வழியப் பாருன்னு  நாங்களும்கூட சொல்லிப் பார்த்தோம். ஒரே பிடிவாதமா ஆகவே ஆகாதுன்னுட்டான். புள்ளை பொறந்ததக்கூட போய் பார்க்கலை.  தெரியாமப்போயி பேத்தியைப் பார்த்துட்டு வந்துட்டாங்கிறது தெரிஞ்சதும் இவனோட அம்மாவை வூட்டவிட்டே முடுக்கியுட்டுட்டான். அது பாவம் ஊருக்குள்ள சும்மா கெடக்குற பங்காளி வீடொண்ணுல இருந்துக்கிட்டு நூறுநாள் வேலைக்குப்போயி கஞ்சி குடுச்சிட்டிருக்கு. இவன் தேங்கா வருமானதையெல்லாம் குடிக்கிறது கோழி வறுக்கிறதுனு செலவு பண்ணிகிட்டு ஏகபோகமா பொழுதோட்டீட்டு இருக்கான்     

பார்த்தா நல்ல டைப்பாத்தான் தெரியிறாரு. ஆனா புத்திக்கூறுதான் போதாமப் போயிருச்சுபோல

அதே வேளையாக் குடிச்சாலும் இன்னிக்கும் வெளியாளுகளுக்கு நல்ல மனுசந்தான். குடும்பத்துக்கும் அம்மாளுக்குந்தான் ஆகாதவனாப் போயிட்டான். ஆமக்கறி செய்யறவங்க ஓட்டுலயிருந்து ஒடம்பப் பிரிக்கறதுக்காக பெரிய பாத்திரத்தில தண்ணியூத்தி ஆமைகளையெல்லாம் அதுக்குள்ள போட்டு பாத்திரத்தை அடுப்புல வெச்சுருவாங்களாம். சில்லுனு இருக்கற தண்ணி லேசா இளஞ்சூடா ஆகையில ஆமைக எல்லாம் உற்சாகமாகி சந்தோசமா நீந்த ஆரம்பிச்சிருமாம். தண்ணி கொதிக்க ஆரம்பிச்சதும் உண்டாகிற துன்பமும் வேதனையும் ரொம்பக் கொடுமையானதுதான்னாலும் தண்ணி இளஞ்சூடா இருக்கிற கொஞ்ச நேரத்தையும் அப்படி மெய்மறந்து அனுபவிக்குமாம். நாளைக்கு என்ன கதிக்கு ஆளாகப் போறானோ. ஆனா இன்னிய தேதிக்கு நம்மாளு இளவெந்நீர்ல நீந்தற ஆமையாட்டம் லைப்ப செமையா என்ஜாய் பண்ணீட்டிருக்கான். ஒரு நாளைக்கு உங்க ரெண்டுபேரையும் அறிமுகப் படுத்தி வைக்கிறேன் மாப்ளே. பழகீட்டான்னு வெய்யி.. உசுரையும் கொடுப்பான். சரக்குக்கீது போடோணம்னு தோணுச்சுனா அவன் தோட்டத்துக்குப் போயிட்டீனாப் போதும். அஞ்சு பைசாங்கூட செலவில்லாம கோழி காடை கவுதாரின்னு ஏதாவதொரு சைடு டிஷ்ஷோட வெளுத்துக் கட்டீட்டு வந்துருலாம்.

அதன்பிறகு ரங்குவைப் பார்க்க நேரும்போதெல்லாம் என் மனதுக்குள்ளிருந்த கற்பனைப் பாத்திரத்தின் இளஞ்சூடான நீரில் ஆமைகள் நீந்திக் களிக்கத் துவங்கின. சாவதற்கு… சற்றுநேரத்திற்கு முந்தைய ஆமைகள்.


இப்போதெல்லாம் பரஸ்பரம் ஒரு பரிச்சிய புன்னகையை பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு எங்களின் நட்பு மேம்பட்டிருந்தது. சில நாட்களுக்குமுன் ஆயில் மாற்றுவதற்காக பைக்கை மெக்கானிக்‌ஷாப்புக்கு கொண்டுபோயிருந்தபோது ரங்குவும் அங்கே இருந்தார்.  எங்களின் பரஸ்பர புன்னகை உரையாடல் எனும் அடுத்த கட்டத்துக்கு மிக இயல்பாக நகர்ந்தது. ஹெட்லைட் பல்ப் ப்யூஸ் போய்விட்டதாகவும் மாற்ற வந்திருப்பதாகவும் கூறினார். வேலையை முடித்துக்கொண்டு தோட்டத்திற்குப் போய்ச்சேர்ந்த பிறகுதான் ஆரம்பிப்பாரோ என்னவோ. ஆச்சர்யமாக ரங்குவின் கண்களில் போதையின் கிறக்கம் இல்லை.நான் ஆயில் மாற்றும்பொருட்டு வந்திருப்பதாகக் கூறினேன்.

கிளம்பிச் செல்கையில் அந்தப் பக்கமா நாச்சிக்குட்டி வீட்டுக்குகீது வந்தீங்னா ஒரு நாளைக்கு நம்ம தோட்டத்துக்கும் வாங்க என்றார்.  இளஞ்சூடான நீரில் ஒத்தடம் குடுத்ததைப் போல இருந்தது. கண்டிப்பா வாரனுங்கண்ணா என்றேன். இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டிய முக்கியமான விசயம்  ரங்கு டீசல்புல்லட்டை ஸ்டார்ட் செய்த ஸ்டைல்தான். இடுப்புயரத்திற்கு நின்றிருந்த அந்த கருப்புவண்ண இரும்புக்குதிரையின் மேல் லாவகமாக ஏறியமர்ந்தவர் அமர்ந்த நிலையிலிருந்து சற்றே மேலெழும்பி  இடதுகாலை அழுந்த தரையூன்றி நின்றநிலையில்நின்று வலதுகாலால் கிக்கரை ஒரே மிதியாக மிதித்தார். அது ப்டப்.. ப்டப்.. ப்டப்..ப்டப்.. எனும் சப்தமெழுப்பியபடி புகையைக் கக்கிக்கொண்டு உறுமத் துவங்கிற்று. சொல்லுவதை சொல்லுவதற்கு முன்னரே கேட்டு நடக்கும் வளர்ப்புப் பிராணியைப் போல.      

வண்டி ஸ்டார்ட் ஆனதும் கியரை மாற்றி கிளம்புவார் என எதிர்பார்த்தேன். கிளம்பவில்லை. மாறாக ஒர்க்‌ஷாப்பை ஒட்டியபடியே மேபுறமாக இருக்கும் சந்தினைப் பார்த்தவாறே விட்டுவிட்டு ஹாரன் அடிக்கத் துவங்கினார். அந்த சந்துக்குள்தான் ஒர்க்‌ஷாப் செயல்படும் கட்டிடத்தின் உரிமையாளர் வீடு இருந்தது. சற்று நேரத்தில் கட்டிட உரிமையாளரின் மனைவியும் மற்றொரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்ணும் வெளிப்பட்டனர். நெற்றியில் நாலணா அளவிலான குங்குமத்தையும் நடுவகிடு அருகே நான்கைந்து வெண்முடிகளையும் கொண்டிருந்த அந்தப் பெண் கட்டிடக்கார அம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு வந்து ரங்குவின் பின்பக்கம் அமர, கியரை மற்றிக்கொண்ட புல்லட் நகரத் துவங்கியது.

வீட்டுக்கு வந்ததும் நாகுவுக்குப் போன்செய்து விசயத்தைக் கூறினேன். ‘ஆமாம் மாப்ளே.. அது அவன் சம்சாரம்தான்.  குடும்பம் ஒண்ணுசேர்ந்து ரண்டு வாராமாட்ட ஆகுது. நல்ல புத்திவந்து குடிக்கிறதையெல்லாம் வுட்டுட்டு, பொண்டாட்டி புள்ளை அம்மான்னு பொட்டாட்ட இருக்கிறான். வீடு மராமரத்து வேலைகூட நடந்துட்டிருக்குதுஎன்றார். என்ன காரணம்? எனும் கேள்வி உண்டானது. ஆனாலும், கேட்கவில்லை. இப்படியாகக் கூறிவிட்டு போனை வைத்தேன்.

‘அருமைங்க மாம்ஸ்… மிக்க சந்தோசம். நல்லா இருக்கட்டும்   
















Monday, 21 October 2019

ஆரெக்ஸ்…


                                           
கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களுக்குப் பிறகு ஆர் எக்ஸ் பழனிச்சாமி மாம்ஸை சந்தித்தேன். எதிர்பாராத சந்திப்பு. கட்டிங்டேபிள் சந்தில் சீனியோடு பழனிச்சாமி சண்டைபோட்டுக்கொண்ட நாளா? அல்லது நடுவயது பெண்ணொருவரோடு அவரை டைமண்ட் தியேட்டரில் பார்க்கநேர்ந்த நாளா? இந்த இரண்டிலே பழனிச்சாமியை கடைசியாகப் பார்த்தது எந்த நாளாக இருக்கும் என கொஞ்சம் குழப்பம் இருக்கிறது. அந்த அளவுக்கு ஆர் எக்ஸ் ஐப் பற்றிய நினைவுகள்  ஞாபகவெளியைவிட்டு விலகி வெகுதூரம் போய்விட்டிருந்தன. ஏதேதோ நினைவுகளெல்லாம் மேலெழும்பி  அலைகளை உண்டாக்கியபடி ஓடிக்கொண்டிருக்கும் மனதின் குருட்டு யோசனையோட்டத்தில் , பழனிச்சாமி மாம்ஸ் பற்றிய நினைவு கடைசியாக எப்போது மேலெழும்பியது என்பது குறித்துக்கூட  எனக்குள் எந்த தெளிவான பிரக்ஞையும் இல்லை. நான் அவரை சுத்தமாக மறந்துவிட்டிருந்தேன்.

இப்படியான நிலையில்தான் காங்கயம் கடைவீதியில் ஆரெக்ஸ் ஐ  நேற்று மதியம் எதேச்சையாக சந்திக்க வாய்த்தது. பங்குனி வெய்யில் நகரத்தை முழுவதுமாக மூழ்கடித்திருந்தது. ஆழ்வெய்யிலின் அமைதி. வாகனங்களின் சத்தம்கூட அமுங்கியே ஒலிப்பதுபோல பட்டது. பங்குனி மாதத்திலே சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும். மீனம் ஒரு நீர்த்தன்மையுடைய ராசி. அதன் குறியீடு கடல். இப்படி கடல் ராசியிலே சூரியன் இருக்கையில் எதற்காக வெய்யில் இவ்வளவு கடுமையாக அடிக்கவேண்டும் என கேள்வி உண்டானது. கடல் ராசியில் சூரியன் சஞ்சரிக்கையில் கடுமையாக வெய்யில் அடித்தால்தான் கடல்நீர் தேவையான அளவுக்கு ஆவியாகும். அது தேவையான அளவுக்கு ஆவியாகி மேகமானால்தான் பருவத்தில் தேவையான அளவுக்கு மழை பொழியமுடியும் என பதிலும் உண்டானது. சரியான பதிலோ தவறான பதிலோ எல்லாக் கேள்விக்கும் ஒரு பதில் இருக்கிறதுதான்போல.

கடுக்காய்ப்பொடியை செட்டியாரிடம் கேட்டுவிட்டு நின்றுகொண்டிருந்தேன். “கொஞ்சம் பொறுங்கள்.. தருகிறேன்என்ற செட்டியார் அட்டைப் பெட்டிகளில் வந்திறங்கியிருந்த மருந்து வகைகளையெடுத்து  அடுக்குகளில் அடுக்கிக் கொண்டிருந்தார். நிரந்தர வாடிக்கையாளர்களிடம் கடைக்காரர்களுக்கு ஒரு அன்புகலந்த உரிமை வந்துவிடுகிறது. அதுதான் இப்படி அவர்கள் வேலைகளை முடிக்கும்வரை காத்திருக்கச் சொல்கிறது என நினைத்துக் கொண்டேன். போக்குவரத்து மிகுந்த பிரதான சாலைதான் என்றாலும் வாகனச் சத்தமேயற்ற ஒர் கணமும் வாய்க்கத்தான் வாய்க்குமல்லவா? அப்படியான அரிய கணத்தில்தான் அந்த குரல் கேட்டது. “ஏனுங் வெண்தாமரைப்பொடி நாலு பாக்கெட் குடுங்க..”. பின்னால் நின்றிருப்பவரின் குரல் நம் காதில் விழுவதற்கு எவ்வளவு நேரம் ஆகிவிடும்? அவ்வளவு நேரம்தான் ஆகியது. அற்றே போயிருந்த ஆர் எக்ஸ் பழனிச்சாமி மாம்ஸின் உருவம் என் மனதில் தோன்றுவதற்கும் அந்தக் குரல் அவருடையது என கண்டுகொள்வதற்கும்.

என் கண்களிலிருந்து வெளிப்பட்ட ஆச்சர்ய பரிச்சய உணர்வுகள் மற்றும் இதழ்விரியக் காத்திருக்கும் மகிழ்வின் முகிழ்நிலை ஆகியவை ஆரெக்ஸையும் தொற்றிக்கொண்டு விட்டிருந்தது. ஆனாலும் அடையாளங்கண்டு கொள்ளவியலாது திணறினார்.கண்டுபிடிக்கிறாரா பார்ப்போமென சில நொடிகள் காத்திருந்தேன். “நீங்க.. உங்களை எங்கியோ பார்த்தமாதிரியே இருக்குதே …என்றார். “யோவ் மாம்சு… நான் வெங்குட்டு.. பேட்லாக் டெய்லர் வெங்குட்டுஎன்றேன். அவருக்குள்ளும் அற்றேபோயிருந்த என் உருவத்தையும் ஞாபகத்தையும் எனது குரல் மீட்டுக்கொண்டு வந்திருக்க வேண்டும். “ அட மாப்ளே நீயா..? ஆளே அடையாள்ந்தெரியாத் அளவுக்கு மாறிப் போயிட்டியேடா..?என்றார்.மேற்படி வாக்கியத்தைச் சொல்லி முடிப்பதற்குள் அனிச்சையாக விரிந்த அவரது கைகள் எனை தாவி அணைத்திருந்தன.

ஒரு நிமிஷம் யாருனே தெரியாமக் குழம்பிப் போயிட்டேன். குரலைவெச்சுத்தான் கண்டேபுடிச்சேன். என்னடா மாப்ளே… ஆளே அடையாளந்தெரியாத அளவுக்கு இப்படி உப்பிப் போயிட்டே..? தலையெல்லாம்வேற சொட்டை வுழுந்திருச்சு..?

வயசாகுதல்லங்க மாம்ஸ்… அந்தந்த காலத்துக்குண்டான மாற்றம் ஏற்படத்தானே செய்யும்?

ஆரெக்சும்கூட மாறிப்போய்த்தான் இருந்தார். வயதாக வயதாக இளமையும் பொலிவும் கூடுகிறதோ எனும்படியான மாற்றம். சிதைந்த பணியாரக் கல்லின் குழிகளை ஞாபகப் படுத்தும் அவரது கன்ன ஒடுக்குகள் மேவி, தினசரி சவரத்தில் மினுமினுத்தன. மீசையையும் மழித்துவிட்டிருந்தார். இருபதுகளின் தொடக்கத்தில் தாடிவளர்ப்பதும் நாற்பதிற்குப்பிறகு மீசையையும்சேர்த்து மழித்துக்கொள்வதும் இங்கே பலருக்கும் வழக்கமாக இருக்கிறது. கைகூடாத  முதிர்ச்சியின் பாற்பட்ட காதல் தாடி மீசை வளர்க்கவும், கைவிட்டுப்போகிற இளமையின் மேலுண்டான மையல் அவைகளை மழித்துக்கொள்ளவும் காரணமாகிறதோ என்னவோ. வெள்ளையில் காட்டன் சர்ட்டும் நீலக்கலர் ஜீன்ஸுமாக உண்டான வயதிலிருந்து ஏழோ எட்டோ குறைந்தவரைப்போல ஆரெக்ஸ் தோற்றங் காட்டினார்.

நான் வாங்கிய கடுக்காய்ப்பொடிக்கும் அவரே பணம் கொடுத்தார். வெண்தாமரைப்பொடி பாக்கெட்டுகளை ஸ்கூட்டியின் இருக்கையை தூக்கி உள்ளிருக்கும் கேபினுள் வைத்தபடியே கேட்டார். “வெயில் கொளுத்துது. போய் ஏதாச்சும் ஜூஸ் சாப்பிடலாமா?”.  பழச்சாறகம் சாலைக்கு மறுபுறம் இருந்தது. நடுவே டிவைடர்கள் வைக்கப் பட்டிருந்தன. வடக்கேபோய் ரவுண்டானாவில் திரும்பி தெற்கேவந்து வண்டிகளை பழமுதிர்நிலையத்தின் முன் நிறுத்தினோம்.

பனிக்கட்டியின் துணுக்குகள் மிதந்தபடியிருக்கும் ஆரஞ்சுச்சாற்றை பருகிக் கொண்டிருக்கையில் வினவினேன் “ இன்னும் அந்த ஆர் எக்ஸ் ஹண்ரேட (RX100) வெச்சுருக்கீங்ளா மாம்ஸ்..?

இருக்குது. அதை விக்க முடியுமா? இது வூட்ல பொம்பளை ஓட்றதுக்கு செளகரியமா இருக்குமேன்னு வாங்குனது. அப்பப்போ நானும் எடுத்துக்கிறதுதான். ஆரெக்ஸ் ஹண்ரேடக் குடுத்துப்போட்டு என்ன பண்றது? நம்முளுக்கு ஒரு நேம் குடுத்ததே அந்த வண்டிதானே..?

பதினான்கு வருடங்களுக்குப் பிறகான சந்திப்பல்லவா? இந்த பதினான்காண்டு வாசத்தின் ஏற்றயிறக்கங்கள் உவத்தல் காய்த்தல்கள் பற்றி எங்களின் உரையாடல் போய்க் கொண்டிருந்தது. அவ்வப்போது ‘அந்த கனெக்சன் என்னாச்சு மாம்ஸ்.. இன்னும் கண்டினியூ ஆகுதா?என கேட்கலாமெனத் தோன்றிக் கொண்டேயிருந்தது. இத்தனை நாளுக்கப்பறம் உன்னைச் சந்திச்சது என்னத்தையோ கண்டமாதிரி இருக்குது மாப்ளே.. எனக்கு இனி ஊருக்குப்போற வேலைதான். அங்கபோயியும் பெருசா வொர்க்கு ஒண்ணும் இல்ல.. அததுக்கு ஆளுக இருக்குது. அவுங்க பார்த்துக்குவாங்க. நீயும் ப்ரீதானே மாப்ளே.. போயி ஒரு பீரப்போடுவமா?’’ என்றார். பேருந்து நிலையத்துக்கு அருகாமையிலிருந்த மதுபானக்கடை நீதிமன்ற உத்தரவின்படி மூன்று கிலோமீட்டர்களுக்கு அப்பால் இடமாற்றம் செய்யப் பட்டிருந்தது.

ப்போது தெளிவாகிவிட்டது.  அந்த நடுவயதுப் பெண்ணோடு கண்டதுதான் நான் ஆரெக்ஸை கடைசியாகப் பார்த்தது. சீனியோடு சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் அதற்கு சில மாதங்கள் முன்பு நடந்தது.

அன்றைக்கு காலையிலிருந்தே ஆரெக்ஸ் ஒரு மாதிரியாகத்தான் இருந்தார். முகம் உணர்த்தியே இல்லாமல் இருந்தது. “அவன் இந்த நாலுமாசமாவே ஒரு மாதிரியாத்தாண்டா இருக்குறான். இன்னிக்கு என்ன புதுசா கண்டுபுடிச்சிட்டே.. பத்துமணி டீ டைமுக்கு வெளியேவந்தபோது சீனி கூறினான். மூர்த்தியண்ணன்தான் அந்த கம்பனியில் பவர்டேபிள் காண்டிராக்ட் எடுத்திருந்தார்.
நானும் சீனியும் அவரிடம் பேட்லாக் டெய்லர்களாக பணிபுரிந்தோம். பவர்டேபிள் சிங்கர் செக்‌ஷன்களைத் தவிர கட்டிங் அயர்னிங் பிரிவுகளெல்லாம் காண்டிராக்ட் விட்ப்படாமல் ஓனரின் நேரடி நிர்வாகத்திலேயே இருந்தது.

கட்டிங் செக்‌ஷனின் ஆஸ்தான கட்டிங் மாஸ்டர்களாக ஆரெக்ஸும் துரையண்ணனும் இருந்தனர். வேலைமிகுந்த சமயங்களில் புதிய கட்டர்கள் சேர்த்துக்கொள்ளப் படுவார்கள். பின்னர் நிறுத்தப்படுவார்கள். ஆனால் இவர்களிருவருக்கு மட்டும் எவ்வளவு டல்லான சீசனாக இருப்பினும் வேலை உண்டு எனும் நடைமுறை இருந்தது. நானும் சீனியும் மூர்த்தியண்ணனின் ஆஸ்தான பேட்லாக் டெய்லர்கள்.  துரையும் மூர்த்தியும் என் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள். சீனி கம்பனிக்கு அருகே ராஜீவ்காந்தி நகரில் தனியாக அறை எடுத்து தங்கியிருந்தான். அவனுடைய சொந்த ஊர் தாராபுரத்திற்கு தெற்கே பழனி போகும் வழியிலிருந்தது. ஆரெக்ஸ் காங்கயத்துக்கு கிழக்கேயிருக்கும் ஒரு சிற்றூரிலிருந்து வந்து கொண்டிருந்தார்.

கம்பனியிலேயே ஆரெக்ஸ்தான் நீண்ட தூரமும் நேரமும் பிரயாணம்செய்து வேலைக்கு வந்துபோய்க் கொண்டிருந்தார். ஊரிலிருந்து காங்கயம் பஸ்நிலையம்வர டிவிஎஸ் 50 ஒன்றையும் , திருப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து கம்பனிக்கு வருவதற்கு யமாஹா ஆர் எக்ஸ் ஹண்ட்ரேடு ஒன்றையும் வைத்திருந்தார். வேலை நேரமான காலை எட்டு முப்பதுக்கு வந்துசேர அவர் வீட்டில் அதிகாலை எழுந்து ஆறுமணிக்கே புறப்படவேண்டியதிருந்தது. சம்பளநாளான சனிக்கிழமைமட்டும் மூர்த்தி துரை ஆரெக்ஸ் நான் என நாங்கள் நால்வரும் ஊருக்குப் போகாமல் சீனியின் அறைக்குப் போய்விடுவது வழக்கமாக இருந்தது. குடிப்பழக்கம் இல்லாதபோதும் சனிக்கிழமை கொண்டாட்டங்களில் ஆரெக்ஸ் எங்களோடு தவறாது கலந்துகொள்வார். காரணம் அவர் சிக்கனை விரும்பி சாப்பிடுவார். நாங்களும் அவரை தவறாது அழைத்துப்போய்விடுவோம். அவர் சிக்கனை பிரமாதமாகச் சமைக்கக் கூடியவராகவும் இருந்தார்.

மதுவகைகளைக் கண்டால் ஆரெக்ஸுக்கு குமட்டிக்கொண்டு வந்துவிடும். “ ஆகவே ஆகாது..என மூஞ்சியைத் திருப்பிக் கொள்வார். ஆனால் புகைப்பதில் மன்னன். பீடியோ சிகரெட்டோ எது கிடைத்தாலும் ஊதுஊதுயென ஊதித் தள்ளிவிடுவார். அப்படிப்பட்டவர் பீடிக் கட்டுகளையும் சிகரெட் பெட்டிகளையும் தூக்கி வீசிவிட்டு பியர்பாட்டிலைக் கையிலெடுத்தாரெனில் அதற்குக் காரணம்  அம்பானிதான். யாரும் வாங்கலாம் எனும்படியான மிகக்குறைந்த விலையில் சந்தைக்கு வந்திருந்த ரிலையன்ஸ் செல்போன்கள்தான். அப்படி வாங்கிய செல்போன்மூலம் ஓர் வழிமாறிய அழைப்பின்வழி  ஆரெக்ஸுக்கு கிடைத்த அந்த தொடர்புதான்.

கம்பனியில் ஓனர் மேனேஜர் கணக்குப்பிள்ளைகளிடமெல்லாம் ஏற்கனவே அலைபேசிகள் இருந்தன. மலிவுவிலை ரிலையன்ஸ் போன்களால் லேபர்கள் சைடிலும் மூன்றுபேர் கைப்பேசி உடமையாளர்கள் ஆகியிருந்தனர். அந்த மூவரில் ஆரெக்ஸும் ஒருவர். அந்தக் காலத்தின் மன்னாதி மன்னர்களுக்கெல்லாம்கூட கிடைக்காத பல வாய்ப்புகள் இவ்விஞ்ஞான காலத்திய எளிய கடைக்கோடி மனிதருக்கும்கூட சர்வ சாதாரணமாக வாய்த்துவிடுகிறது. அப்படியான வாய்ப்புகளில் இந்த செல்போனும் ஒன்று. அசோக ஒளரங்கச்சீப் சக்கரவர்த்திகளாகவே இருந்தாலும்கூட அவர்களால் கண்ணுக்கே தெரியாத தூரதூரத்திலே இருப்பவர்களிடமெல்லாம் நேரிலே பேசுவதுபோல் பேசியிருக்க முடியுமா? அல்லது தூரதூரவாசிகள் பேசுவதையெல்லாம் அருகேயிருந்து கேட்பதுபோல் கேட்டிருக்கத்தான் முடியுமா? ஆனால் ஆரெக்ஸ் பேசினார். கேட்டார். யாராரிடமோவெல்லாம் பேசியபடியேயிருந்தார். யார்யாரோ பேசுவதையெல்லாம் கேட்டபடியேயுமிருந்தார்.



நாலுபேருக்கு நடுவில் நாலுபேருக்கும் கேட்கும்படியான சத்தத்தில் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ஆரெக்ஸ் , நாளடைவில் யாருமற்ற இடத்தில் யாருக்கும் கேட்காத தொனியில் பேசத் துவங்கினார். நடையில் மாற்றமில்லாவிட்டாலும் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்தது. கட்பீஸ்களை எடுத்து அளவுகொடுத்து தைத்து வாங்கி உடுத்திக்கொண்டிருந்தவர், ஆயத்த ஆடைகளுக்கு மாறியிருந்தார். ஜீன்ஸும் டிசர்ட்டும் அவருக்கு எடுப்பாகவும் இருந்தன.  தம்மடிப்பதை விட்டிருந்தார். அதைவிட ஆச்சர்யம் பியர் அடிக்கத் துவங்கியிருந்தார்.தொடர்ந்து பீர் அடிச்சுட்டுவந்தா கன்னமெல்லாம் உப்பி உடம்பெல்லாம் சதைபோட்டு தோலெல்லாம் மினுமினுன்னு ஆயிருமாமேஎன்றார். புகைப்பதை விட்டொழித்ததற்கு அவர் கூறிய காரணம் யோசிக்கவேண்டியது. உளவியல் ரீதியானது. பீடிக்கட்டுகளிலும் சிகரெட் பெட்டிகளிலும் பொறித்து வைக்கவும் வேண்டியது. “ அந்தக் கருமத்தைக் குடிச்சுக் குடிச்சு உதடெல்லாம் கருகருன்னு போயிருச்சு.. தீயைவெச்சுக் கருக்குனமாதிரி.. அதான் வுட்டுத் தொலச்சிட்டேன்”.  
   
ஏதோவொரு ராங்கால் தொடர்பு பலப்பட்டு காய்ந்துபோன காங்கேயம்காளை கம்மங்காட்டுக்குள் புகுந்திருக்கிறது என மட்டுமே எங்களால் யூகிக்க முடிந்தது. அது யார் என்ன விவரம் என்பது பற்றியெல்லாம் துளியும் கண்டறிய முடியவில்லை. தெரியாமல் பியரில் ஹாட்டைக் கலந்துகொடுத்து உச்சபோதைக்குக் கொண்டுபோய், சீனி கேட்டுப் பார்த்தான். கண்டதையும் உளறிக்கொட்டும் ஆரெக்ஸ் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லும்போது மட்டும் மட்டையானார். அல்லது “அது யாராயிருந்தாத்தான் உங்களுக்கு என்னடா? வேற நாய மயிரிருந்தா பேசுங்கடா.. இல்லாட்டி மூடீட்டுப் படுங்கடா..என்றார். “அதுக்கில்ல மச்சி.. நாளைக்கு ஏதாச்சு ஒண்ணுனா உனக்குன்னு நாலுபேராவது சப்போர்ட்டுக்கு வேணுமே.. எங்களுக்கும் முழுவிவரமும் தெரிஞ்சாத்தானே உனக்கு அந்த சமயத்துக்கு என்ன தேவையோ அதை பண்ணித் தர முடியும்?என்றெல்லாம் சீனி சொல்லிப் பார்த்தான். நாங்களும்கூட முயன்று பார்த்தோம். ஆரெக்ஸ் வாயே திறக்கவில்லை. “என்னப்பத்தி மட்டும்னா உடனே சொல்லீருவேன். இது இன்னொருத்தரும் சம்பந்தப்பட்ட விசயம். இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. வீணா வாயைக் கிளறாதீங்கஎன்றுவிட்டார்.

இவ்வளவு பழகியும் நம்ப மறுக்கிறாரே.. மூடி மறைக்கிறாரே எனும் வருத்தம் எங்கள் அனைவருக்கும் இருந்தது. சீனிக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. “காட்ல மேயற மொயலு கண்ணீல சிக்கித்தாண்டா ஆகோணம். கண்டிப்பா நீயும் ஒருநாள் சிக்கத்தான் போறே.. ஹெல்ப் பண்ணுங்கடா மாப்ளைகளேனு எங்ககிட்டவந்து நிக்கத்தான் போறே..என சீனி கருவிக் கொண்டிருந்தான். அந்தக் கருவல் கொஞ்சம் விளையாட்டாகவும் இருந்தது. கொஞ்சம் வினையமாகவும் இருந்தது.

நேரமே வீட்டிலிருந்து புறப்பட்டுவிடுவதால் காலை உணவையும் கம்பனிக்கே கொண்டுவந்து முற்பகல் பத்துமணி டீ டைமில் சாப்பிடுவதுதான் ஆரெக்ஸின் வழக்கம். மதிய உணவை பிற்பகல் மூணுமணி டீ டைமில் சாப்பிடுவார். மாலை ஆறுமணி டீ டைமுக்குத்தான் எங்களோடு கடைக்கு வருவார். மூன்றுமணி தேநீர் இடைவேளையில் சாப்பிடும் மதிய உணவிற்கு தொட்டுக்கொள்ள , பிசிர்வெட்டும் பையன்களில் யாரையேனும் அனுப்பி சூடாக பருப்புவடையோ உளுந்துவடையோ வாங்கி வைத்துக் கொள்வதும் வழக்கம்தான்.

அன்று காலையிலிருந்தே நல்லுணர்த்தி இல்லாமலிருந்த ஆரெக்ஸ் பத்துமணி டீ டைமில் சாப்பிடப் போகவில்லை. எங்களோடு கடைக்கு வந்தார். தேநீர் டம்ளரோடு ஓரமாகப்போய் செல்பேசியை காதில் வைத்தபடி நின்று கொண்டார். பேசுகிறமாதிரியும் தெரியவில்லை. இவர் மீண்டும் மீண்டும் முயற்சித்தும் எதிர்முனையில் கால் அட்டெண்ட் செய்யப்படாமல் ரிங் போய்க்கொண்டேயிருக்கிறது என புரிந்தது. “ஆள் யாருனு மோப்பம் புடிச்சிட்டண்டா மாப்ளே… இப்ப வேணாம். மத்தியானம் பேசிக்கலாம்என சீனி கிசுகிசுத்தான்.


டீ டைம் முடிந்து உள்ளே வந்த பிற்பாடு பேட்லாக்மிசினில் பாடிடவர் அடித்தபடியே கட்டிங் டேபிளையும் கவனித்தவாறு இருந்தேன். ஆரெக்ஸின் முகம் மேலும் சுரத்துக் குறைந்து போயிருந்தது. பனியன் ரோலை உருட்டி விரிப்பதும் இரண்டாக மடிப்பதும் பேட்டன் அட்டையை மேலேவைத்து மார்க் செய்வதும் பிறகு சட்டைப்பைக்குள்ளிருந்து செல்போனை எடுத்து பார்ப்பதுமாக இருந்தார். எதிர்பார்த்தபடியேயிருக்கும் எதிர்முனையிலிருந்து அவர் காதுகளுக்கே கேட்காதவண்ணம் ஒற்றைரிங் மிஸ்டுகால் வந்திருக்கலாம் எனும் ஆவலில்தான் அடிக்கடி எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் எனத் தோன்றியது. சற்று நேரத்துக்கொருமுறை முன்பெல்லாம் பீடி குடிக்கப் போவதுமாதிரி இப்போது கைப்பேசியும் கையுமாக வெளியே போவதும் உள்ளே வருவதுமாக இருந்தார்.

மதிய உணவு இடைவேளை. நானும் சீனியும் சாப்பிட்டு முடித்துவிட்டு கட்டிங் டேபிளுக்கும் கட்டிங் பீஸ்கள் அடுக்கப்பட்டிருக்கும் இரும்பு ரேக்குக்கும் இடைப்பட்ட சந்தில் அரைப்படுக்கை நிலையில் சாய்ந்தவாறு சாகவாசமாக அமர்ந்திருந்தோம். ஆரெக்ஸின் சாப்பாட்டுக்கூடை பிரிக்கப்படாமல் அது வழக்கமாக வைக்கப்படுமிடத்தில் அப்படியே இருந்தது. “தலையோட நிலமை இன்னிக்கு ரொம்ப டேஞ்சரா இருக்குதுபோலயே..என்றேன். “அவன் மண்டைல புழுத்து திரியறதுக்கு நாமென்ன பண்ணமுடியும்?என்று சீனி கூறினான். அவன் வார்த்தைகளை உச்சரித்தவிதம் வெறுப்புணர்வை வெளிப்படுத்துவதாக இருந்தது.

“இதெல்லாம் சாதாரண விசயம்.  வெறுக்கறதுக்கு என்ன இருக்குது..?

யாரு வெறுக்கறாங்க.. ஒரு கெழவிக்குப்போய் இப்படி அலையிறானேனுதான்.. நம்மகிட்டயெல்லாம்கூடச் சொல்லாம வீண் பில்ட்அப் பண்ணீட்டுத் திரியுறானேனுதான்..

என்னது கெழவியா..?

பின்னென்ன கொமுரியா..? போன ஞாயித்துகெழமையன்னிக்கு சென்னை சில்க்ஸ் ரண்டாவது மாடீல அந்த கெழவியும் கையுமாவே இவனைப் பார்த்துட்டேன். இவனும் என்னை பார்த்துட்டாந்தான் போல. பார்க்காத மாதிரியே பம்மீட்டான். அதுக்குப்பிறகு இந்த மூணுநாளா என் மூஞ்சியவே நேருக்கு நேரா பார்க்க மாண்டீங்கறான். நல்லாவே பேச மாண்டீங்கறான். புடிச்சதுதான் புடிச்சான். நல்ல புளியங்கொம்பா புடிச்சிருந்தாலாவது தொங்கீட்டுத் தொலையாறான்னு வுட்ரலாம். புழுத்துப்போன கொம்பாவல்ல புடிச்சிருக்கிறான். சீக்கிரமே வாதுமுறிஞ்சுபோயி கீழவுழுந்து இடுப்பை முறிச்சுக்கிட்டுத் திரியப் போறான் பாரு..

பரதேசித் தாயோளி .. என்னடா சொன்னே..?திடுக்கிட்டுப்போய் திரும்பிப் பார்த்தோம். ஆரெக்ஸ் நின்றுகொண்டிருந்தார். அவருடைய முகமும் பார்வையும் சம்பந்தமேயில்லாத யாரோவொரு அந்நியனுடையதைப்போல மாறிப் போயிருந்தன.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் வேறு விசயங்களைப் பேசிக் கொண்டிருந்த சீனியிடம் ஆரெக்ஸின் பேச்சை எடுத்ததே நான்தான். அவர் வந்துநின்ற சமயம் சீனி பேசுபவனாகவும் நான் கேட்பவனாகவும் இருக்க அவன் மாட்டிக் கொண்டான். நான் தப்பித்துக் கொண்டேன். சீனியின் வலதுதோள் கழுத்து காதோடுசேர்த்து உதை விழுந்தது. சுதாரித்து எழுந்தவன் ஆரெக்ஸின் வயிற்றில் உதைத்தான். மதிய உணவை உண்ட களைப்பில் பவர்டேபிள் செக்கிங்டேபிள் சந்துகளில் படுத்துக் கிடந்தவர்களெல்லாம் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்து விலக்கிவிட முயற்சித்தனர்.


களேபரத்தில் பையிங் ஆபீஸ் இன்ஸ்பெக்‌ஷனுக்காக அடுக்கப்பட்டிருந்த பேக்கிங் செய்யப்பட்ட பனியன் பெட்டிகள் வரிசை குழைந்து கீழே சரிந்தன. பொதுவாகவே இன்ஸ்பெக்‌ஷன் நாளன்று ஓனர் டென்சனாகத்தான் இருப்பார். பெட்டி போடப்பட்ட பனியன்களை பேக்கிங் உடைத்து செக் செய்யும் பையர்கள்  ஏதாவது நொட்டைசொல்லி ரீசெக் செய்யச் சொல்லிவிடுவார்களோ என்ற பயம்தான் காரணம். சத்தம்கேட்டு தன் அறையைவிட்டு வெளியேவந்த மொதலாளி சீனிக்கும் ஆரெக்சுக்கும் தலா ஒரு அறை விட்டார். கம்பனியைவிட்டு வெளியே போகச்சொன்னார். அவருடைய முகமும் பார்வையுமேகூட சம்பந்தமேயில்லாத யாரோ ஒரு அந்நியனுடையதைபோல மாறிப் போயிருந்தன.

தன்னிடம் பணிபுரியும் டெய்லரை எப்படி அறையலாம் எதுவாக இருந்தாலும் தன்னிடம்தானே சொல்லவேண்டும் என மூர்த்தியண்ணன் ஓனரிடம்போய் நியாயம் கேட்டதும், வேணும்னா நீயும்சேர்ந்து வெளியே போயிரு என முதலாளி சொன்னதும், பிறகு நாங்களனைவரும் கூண்டோடு அந்தக் கம்பனியைவிட்டு நின்றதும் தனிக்கதை. காலப்போக்கில் பனியன் கம்பனி வேலையே வேண்டாமென்று வீட்டிற்கு அருகாமையிலேயே விசைத்தறிக்கூடம் அமைத்து நெசவு நெய்யத் துவங்கிவிட்டேன். திருப்பூருக்கு போவதற்கே சோலியில்லாமல் போய்விட்டது. எப்போதாவது ஏதாவது சொந்த வேலையின் பொருட்டு போவதோடு சரி. அப்படியொருமுறை நான்மட்டும் காதல்கொண்டேன் படத்துக்குப் போயிருந்தபோது டைமண்ட் தியேட்டரில்வைத்து ஆரெக்ஸைக் கண்டேன். அந்த மத்திம வயதுப் பெண்ணும் கையுமாகத்தான். நான்தான் அவர்களைப் பார்த்தேனேதவிர அவர்கள் என்னைப் பார்க்கவுமில்லை. பம்மவுமில்லை.

தாராபுரம் சாலையில் இரண்டுகிலோமீட்டர் தெற்கேவந்து இடதுபுறாமாகப் பிரிந்துபோகும் மண்பாதையில்  சற்றுதூரம் கிழக்கே போனதும் கடை தென்பட்டது. ஹாலோபிளாக் கற்களையடுக்கி ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்து துரிதகதியில் உருவான கடை. சுவர்கள் பூசப்படாமல் இருந்தன. சுற்றிலும் கொறங்காடுகளாக இருந்தன. செம்மறிகள் வேலாமரநிழலில் ஒன்றின் காலுக்குள் இன்னொன்று புகுந்துகொள்வதுமாதிரி தலைகுத்தி நின்றிருந்தன. நாட்டுமாடுகளுக்கு வெய்யில் சோதிக்கவில்லைபோல.  மேய்ந்துகொண்டிருந்தன. கடை இருக்கும் இடமும் இதற்குமுன் மேய்ச்சல் நிலமாகத்தான் இருந்திருக்கவேண்டும். வெள்ளைவேலான் வேப்பன் ஊஞ்சல் மரத்தடிகள் சுத்தம் செய்யப்பட்டு டேபிள்கள் போடப்பட்டு பார் செயல்பட்டுக்கொண்டிருந்தது. இயற்கையான நிழலும் சுத்தமான காற்றும் கொண்ட ஆர்கானிக் பார்.

காலியாக இருந்த வேப்பமரத்தடி டேபிளில்போய் அமர்ந்தோம். வேப்பன் பூவெடுத்திருந்தது. சின்னஞ்சிறுமிகளின் பொன்காதணிகளை உதிர்ந்துகிடக்கும் வேப்பம்பூக்கள் நினைவூட்டின. கடைப் பையனை வரவழைத்த ஆரெக்ஸ் ‘பக்கார்டி லெமன் ஆப் கொண்டுவாஎன்றார்.

“ஏன் மாம்ஸ்.. பீர்தானே அடிக்கலாம்னீங்க? திடீர்னு ஹாட் சொல்லீட்டீங்க?

அதெல்லாம் வாசம் அடிக்கும்டா மாப்ளே… மத்தியானத்திலேயே ஆரம்பிச்சாச்சானு வூட்ல பொலம்பல் தாங்க முடியாது. இது அவ்வளக்கா வாசம் தெரியாது. அதான் சொன்னேன். அதையுந்தவிர பீரெல்லாம் ரொம்பக் குடிக்கக்கூடாதுடா மாப்ளே.. தொந்தி போட்ரும்.

எதுவும் சொல்லாமல் புன்னகைத்தேன். தேவையான அளவு கன்னங்கள் உப்பி, உடம்பும் சதைபிடித்து,தோலெல்லாம் மினுமினுவென்று மாறிப்போயிருந்த ஆரெக்ஸ் பக்கார்டிலெமனை இரண்டு டம்ளர்களிலும் ஊற்றத் துவங்கியிருந்தார்.   



மூன்றாவது ரவுண்டில் இருக்கும்போது ஆரெக்ஸுக்கு அலைபேசி அழைப்பு வந்தது. “ ஊருக்குத்தான் வந்துகிட்டிருக்கேன்.. வெண்தாமரைப் பொடியா..? வாங்கியாச்சு.. வாங்கியாச்சு.. லைனை முடிச்சுட்டு உங்கம்மாவையும்போய் பார்த்துட்டுத்தான் வாறேன்… டேபிளைவிட்டு எழுந்த ஆரெக்ஸ், என்னிடம் ஒலியில்லாமல் வெறும் உதட்டசைவில் மொழிந்தார் ‘ஊட்லயிருந்து சம்சாரம்.. இங்க உக்காந்து பேசுனா பேக்ரவுண்டு சத்தத்தைவெச்சு எங்க இருக்கறேன்னு மோப்பம் புடிச்சுருவா.. அந்தப் பக்கமாப் போயி பேசீட்டு வந்தர்றேன்.

வந்து உட்கார்ந்தபோது இருந்ததைவிட இப்போது வெய்யில் கொஞ்சம் இளகியிருந்தது. செம்மறிகள் மரத்தடிவிட்டு விலகி மேயத் துவங்கியிருந்தன. கரிக்குருவியொன்று பெட்டையாட்டின் மூத்திரவாடையை காற்றுவெளியில் மோப்பம்பிடித்து நின்றுகொண்டிருந்த செம்மறிக்கிடாயின் பிடரிமேலமர்ந்து அதன் காது உண்ணியை கொத்த முயற்சித்துக் கொண்டிருந்தது. மாடுகளின் காலடிகளில் இப்போது கொக்குகள் தென்பட்டன. சிகரெட்டை பற்ற வைத்தேன். இந்த குடியமர்வு மிகவும் திருப்தியாகப் போய்க் கொண்டிருக்கிறது. பழச்சாறகத்தில்  தன்னைப் பற்றியே சொல்லிக்கொண்டிருந்த ஆரேக்ஸ்  இங்கே அதிகமும் என்னைப் பற்றியே கேட்டுக் கொண்டிருக்கிறார்.

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகாததை  அவரால் நம்பவே முடியவில்லை. “என்னடா மாப்ளே சொல்றே.. அன்னிக்கே கவிதயுங் கிவிதையும் எழுதீட்டுத் திரியுவே.. அப்படியெதாச்சும் எழுதி மயக்கி செமப் பிகரா செட் பண்ணீருப்பீன்னல்ல நெனச்சுட்டிருக்கிறேன்என்றார். நான் இப்பொழுது ஒரு ஜோதிடராகவும் ஆகிவிட்டேன் என்பது தெரிந்ததும் அவரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. சிரிசிரி யென்று சிரித்துவிட்டு, “ அமைதிப்படை படத்துல ஒரு எடத்துல  சத்தியராஜு சொல்ற வசனம்தான் ஞாபகத்துக்கு வருதுஎன்றார். “எது அந்த வயசான சோசியரை வூட்டுக்கு வரவழச்சு போட்டுத்தள்றதுக்கு முன்னாடி சொல்றதா?என்றேன். “இல்லயில்லே… மந்திரியொருத்தருகூட பேசீட்டு போன வெச்சதுக்கு அப்பறம் தனக்குத்தானே மொணகிக்கிறமாதிரி சொல்வாரே.. கேணப் பையன்… இவன் மந்திரி பதவியே இப்பவோ அப்பவோனு இருக்குதாமா… இந்த லட்சணத்துல நம்முளுக்கு மந்திரி பதவிக்கு சிபாரிசு பண்ணப்போறானாமா.. அந்தமாதிரி உனக்கே ஒரு கல்யாணத்தை பண்ணிக்கறதுக்கு துப்பில்லை. இந்த லட்சணத்துல ஊர்ல இருக்கறவுனுக்கெல்லாம் எப்பெப்போ கல்யாணம் ஆகும்னு கேரண்டி குடுக்கறே..?

ஆரெக்ஸ் லெளகீக- சம்சாரி வாழ்க்கையில் செமையாகவும் செம்மையாகவும் செட்டிலாகிவிட்டார் எனத் தோன்றியது. அவர் இப்போது பைனான்ஸ் லைனுக்கு வந்துவிட்டாராம். வெள்ளகோயிலில் ஒருநாள், காங்கயத்தில் ஒரு நாள், திருப்பூரில் ஒரு நாள் என வாரத்தில் மூன்று நாளைக்கு வசூல் இருக்கிறதாம். மீதி நாட்களில் கோழிப்பண்ணை, கறவை என தோட்டத்திலேயே மாளாத வேலை கிடக்கிறதாம்.  பலவற்றையும் பேசிக்கொண்டாலும் எங்களின் உரையாடல் அந்த ராங்கால் கனக்சனுக்கு மட்டும் போகாமலேயே இருந்தது. ஆரெக்ஸாகவே அதுபற்றி ஏதேனும் பேசுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கான அறிகுறிகள் அவர் மனைவியோடு பேசிவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற அந்த தர்பரைவரை தட்டுப்படவில்லை.

சம்சாரத்தோடு சம்பாஷணை. அல்லது வூட்டுக்காரியோடு உரையாடல். ஒருவழியாக முடிந்துவிட்டது போல. ஆரெக்ஸ் வந்துசேர்ந்தார். “சின்னவனுக்கு காய்ச்சலாமா.. போய் ஆஸ்பத்திரிக்கு கூட்டீட்டுப் போகோணம். என்றபடியே டம்ளரில் மிச்சம் வைத்துப் போயிருந்ததை காலி செய்தார். இடது உள்ளங்கையால் மீசை வாய் தாடை துடைத்துக் கொண்டார். அவர் முகம் தீவிர யோசனையிலிருந்தது. பையனுக்கு காய்ச்சல்ங்கிறதால மூடவுட் ஆகிவிட்டாரோ எனத் தோன்றியது. அந்த ராங்கால் கதையின் கிளைமாக்ஸ் பற்றி எதையும் கேட்கவே முடியாமல் போயிருமாட்டயிருக்குதே என நினைத்துக் கொண்டேன்.

தீவிர முகபாவத்துடன் வெள்ளரித்துண்டை எடுத்துக் கடித்தபடியே “ கொழுந்தியா ஒருத்தி இருக்கறா… டைவர்ஸ் ஆனவ.. குழந்தையில்ல.. கட்டிக்கறயா..? பேசலாமா?என்றார்.

“தாரளமா பேசுங்க மாம்ஸ்

மிச்சமிருந்த சரக்கை இரண்டு டம்ளர்களிலும் ஊற்றினேன். தண்ணீர் கலந்தேன். என்னுடையதை ஒரே மூச்சில் காலி செய்தேன்.  அந்த கொழுந்தியாளை பார்க்கவேண்டும்போல இருந்தது. அதற்கு முன்பாக “அந்த கருமம்புடிச்ச காதல் என்னதான் ஆச்சு..? சொல்லித் தொலையுமைய்யா..என்று கேட்கவேண்டும்போலவும் இருந்தது. ஒரு வாய் குடித்துவிட்டு டம்ளரை டேபிள்மேல் வைத்த ஆரெக்ஸ் கைப்பேசியையெடுத்து போட்டோ கேலரிக்குப் போனார். தேடியெடுத்த புகைப்படத்தை பெரிதாக்கி பிறகு செல்போனை என்னிடம் நீட்டினார். அந்த புகைப்படத்தில் மூன்று பெண்கள் இருந்தனர். இடதுபுறமாக பச்சை சுடிதாரில் நிற்கும் பெண்தான் கொழுந்தியாள் என்றார். வலதுபுறமாக குழந்தையோடு நிற்கும் பெண் மனைவியாம். சோபாவில் அமர்ந்திருக்கும் நடுவயதுள்ள பெண்மணியை மாமியார் என்றார். மாமியாரையே ஒரு கணம் கூர்ந்து நோக்கினேன்.

விளங்கி விட்டது . அந்த கேள்வியை இனி கேட்கவேண்டிய அவசியமில்லை.