Tuesday, 22 October 2019

மூன்றாவது ஒன்று


                                      


தேநீர்க்கடை முன்புறமிருக்கும் வெள்ளை வேலாமரத்தடி சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். தறிகளை நிறுத்திவிட்டு அப்போதுதான் வந்திருந்தேன்.  அம்மாவிடம் சொன்னால் கருப்புத் தேநீர் தயாரித்துத் தறிக்குடோனுக்கே கொண்டுவந்து கொடுத்துவிடுவாள்தான். சாயுங்கால டீயை மட்டும் வீட்டிலே குடிப்பதில்லை. தறிக்குடோனின் நான்கு சுவர்களுக்குள் தன்னந்தனியாக சுற்றிவந்து கொண்டிருப்பதில் உண்டாகும் வெறுமை இப்படிக் காற்றாட வெளியேவந்து யாரோ நாலுபேரிடம் பேச்சுக்கொடுத்துவிட்டுத் திரும்புவதன்மூலம் இட்டு நிரப்பப்பட்டு புத்துணர்ச்சியாக மாறிக் கொண்டிருந்தது.    

அந்த நேரத்திற்கு சரியாக வந்து சேர்ந்துவிடும் தங்கானும் எனக்கு முன்னரேவந்து அமர்ந்திருந்தான். அதே நேரத்திற்கு சரியாக வந்து சேர்ந்துவிடும் மற்றும் சிலரும் முன்னரே வந்துசேர்ந்து டீக்கடையை ஒட்டிய வடபுறத்து ஓலைச் சாய்ப்பினுள் நம்பர் விளையாட்டு விளையாடியபடி இருந்தார்கள். தங்கம் தனியார் பள்ளியில் வாகன ஓட்டியாக பணிபுரிகிறான். பணிமுடிந்து  வீடு திரும்புகிறவழியில் ஒரு டீயையும் தம்மையும் போட்டுவிட்டுச் செல்வது அவன் வழக்கம்.     

டீ டம்ளரைக் கீழே வைத்துவிட்டு சிகரெட்டைப் புகைத்தபடி தங்கானுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தேன். டீக்கடைச் செய்தித் தாள்களில் பெரிதும் இடம் பிடித்திருப்பது சினிமாச் செய்திகளும் கள்ளக்காதல் விவகாரங்களும்தானே? அதன் வாசகர்கள் பேசுகிற பேச்சுக்களும் பெரும்பாலும் அவைகளைப் பற்றியதாகத்தானே இருக்கும்?  எங்களின் உரையாடலும் அப்படியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. பேச்சிலிருந்து சட்டெனத் திசைமாறிய தங்கான் என் தோளைத் தொட்டுத் திருப்பி ‘அங்க பாருங்க…’ என எங்கள் வீடு இருக்கும் திசையை கை காட்டினான்.

நிறுத்தத்திற்குச் சற்று தூரம் முன்பாகவே நாகர்கோயில் வண்டி நின்றுகொண்டிருந்தது. ஒரு இளவயதுப் பெண்ணும் ஆணும் இறங்கியபடியிருந்தார்கள். அந்த இளைஞன் தனது தோளில் குழந்தையொன்றை ஏந்தியிருந்தான். கனமான பயணப் பை அவனது முதுகிலே தொங்கிக் கொண்டிருந்தது. ‘என்னண்ணா ஆச்சர்யமா இருக்கு… நாகர்கோயில் வண்டியெல்லாம் நம்ம ஸ்டாப்புல நிக்குது.. நம்பவே முடியலையே..என தங்கான் கூறினான்.

திருப்பூரிலிருந்து தெற்கேயும் தெற்கிலிருந்து வடக்கே திருப்பூருக்கும் வந்துபோகின்ற வண்டிகள் யாவும் எங்களின் ஊர் வழியாகத்தான் போயாகவேண்டுமென்றாலும் பழனியைத் தாண்டி அந்தப்பக்கம் போகிற பேருந்துகள் எதுவும் எங்கள் ஸ்டாப்பில் நிற்பது கிடையாது. தொலைதூரப் பேருந்துகள் நின்றுபோகக் கூடிய ஸ்டேஜ்களின் பட்டியலில் எங்களின் சிற்றூர்ப் பேருந்து நிறுத்தம் இல்லை என்பதுதான் காரணம். ஏதாவது பழுதுண்டாகியபோதும் செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் குறுக்காட்டி ஏறும்போதும்  வேறு வழியேயில்லாமல் நின்று போகும் என்பது விதிவிலக்கு. நேரங்கெட்ட நேரத்தில் எங்காவது மாட்டிக்கொண்டு வஞ்சிபாளையம்பிரிவு வழியாத்தானே போறீங்க..? கடைசி பஸ்ஸையும் விட்டுட்டோம் உங்களையுட்டா வேற கதியே இல்ல… வேணும்னா அடுத்த ஸ்டேஜுக்கே டிக்கெட் வாங்கிக்கிறோம் எங்களை எறக்கிவுட்ருங்கண்ணா…  என கெஞ்சி ஏறிவந்து இறங்கிய அனுபவங்கள் எனக்கு உண்டு. இங்கே பலருக்கும் இருக்கிறது. எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. மஞ்சள் வெயிலை பளீரென வீசிக்கொண்டிருக்கும் பொன்மாலைப் பொழுது என்பது ஒன்றும் நேரங்கெட்ட நேரம் அல்லவே.    

நான் தங்கானிடம் கூறினேன். ‘ஒரு வேளை டிரைவருக்கோ கண்டக்டெருக்கோ தெரிஞ்சவங்களா இருப்பாங்களோ..?

“அப்படி இருக்கறதுக்கு வாய்ப்பில்லைன்னுதான் தோணுது. ஆளுகளைப் பார்த்தா தெம்பக்கம் மில்லுல வேலை செய்யிற இந்திக்காரனுகளாட்ட இருக்குது. வேலை செய்யற எடத்திலியெல்லாமேகூட இந்திக்காரனுகன்னா நம்மாளுக பட்டும்படாம ஓரமா ஒதுக்கியேதான் வெச்சிருக்கிறானுக.. இந்த லட்சணத்துல எந்த  இந்திக்காரன் டிரைவரையெல்லாம் பிரெண்டு புடிச்சு வெச்சிருக்கப் போறான்? இந்த வண்டி இங்க நிக்காதுங்கிற வெவரம் தெரியாம ஏறீருப்பான். பாதிதூரம் வந்தபிற்பாடு குழந்தையோட இருக்குறாங்களே என்ன பண்ணித் தொலையிறதுன்னு கண்டக்டரும் எரக்கம் காட்டி சீட்டுக் கொடுத்திருக்கலாம்

இப்படியாக நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில் இன்னொரு ஆச்சர்யமும் உண்டானது. அவர்கள் வடக்காகவோ தெற்காகவோ நகராமல் ரோட்டைத் தாண்டி கிழபுறமிருக்கும் எங்கள் வீட்டை நோக்கி நடந்தார்கள். முன்பின் பழக்கமில்லாதவர்களான அவர்களுக்கு எங்கள் வீட்டிற்கு என்ன வேலை? ‘நேரா எறங்கி சொல்லிவெச்ச மாதிரி சரசரன்னு போறதப் பார்த்தா நிச்சயம் தெரிஞ்சவங்களாத்தான் இருப்பாங்கன்னு தோணுது.. இங்க தூரத்துலயிருந்து பார்க்கறதுனால அடையாளம் மாறிப்போச்சோ என்னவோ…  எதுக்கும்  ஒரு எட்டு போய்ப் பார்த்துட்டு வாங்கஎன்று தங்கான் கூறினான்.


எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அந்நியர்களாக இருக்கும் பட்சத்தில் சாத்தியிருக்கும் கடவுப் படலடியே நின்று சத்தமிடுவார்களே தவிர இப்படி உரிமையோடு திறந்து உள்நுழைய மாட்டார்கள். தேநீருக்கும் சிகரெட்டுக்கும் காசைக் கொடுத்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பினேன்.


வாசற்பந்தலின் வடகோட்டுத் தூண்காலோரமாக அவ்விளைஞன் நின்று கொண்டிருந்தான். குழந்தை அவன் தோளோடு உறக்கத்திலிருந்தது. கனமான முதுகுப்பை திண்ணையில் வைக்கப் பட்டிருந்தது. அந்தப் பெண் பந்தலுக்கு அப்பாலிருக்கும் வெளிவாசலில் பாத்திரங்கள் கழுவும் சலதாரையையொட்டி வளர்ந்து நிற்கும் பெரிய நந்தியாவட்டை மரத்தினருகே நின்றிருந்தாள். அந்தப் பெண்ணின் முகம் சுவாதீனமில்லாததுவாய் இருந்தது. இங்கே இன்னொரு ஆச்சர்யமும் உண்டானது. அந்த இளைஞன்தான் வட இந்தியனைபோலே இருந்தான். அந்தப் பெண்ணிற்கு அச்சுஅசலான தமிழ் முகம்.  தமிழ் கண்கள். விசாரித்துப் பார்த்தால் இங்கே அக்கம்பக்கத்து ஊர்களில் யாருடைய பெண்ணாகவாவது இருக்கலாம் என்பது மாதிரியான பக்கத்துவீட்டு அழகிய இளம்பெண்ணின் தோற்றம்.

வீட்டிற்குள்ளிருந்து எட்டிப் பார்ப்பதுபோல நிலைப்படியைப் பிடித்தவாக்கில் நின்றுகொண்டிருந்த அம்மா என்னைக் கண்டதும் ஒரு எட்டு வெளியேவந்து ‘யாருன்னுந் தெரியல.. எவருன்னுந் தெரியல.. கக்கூசுக்குப் போகோணமாமா… போய்க்கறம்ன்னு வந்து நிக்கறாங்க.’ என்றாள். ‘ ஊருலகத்ல போறவங்க வாரவங்கெல்லாம் பேழறதுக்குத்தான் இங்க கக்கூஸ் கட்டி வெச்சுருக்கறாங்களாக்கும் ? அதெல்லாம் முடியாது.. வந்த வழியப்பார்த்துட்டுப் போய்ச் சேருங்கறேன்.. ஒரு சாமார்த்தியம் .. காதிலயே போட்டுக்காம வுடுவனா ரவுடின்னு அப்படியே நின்னுட்டிருக்கறாங்க’ என்றும் முறையிட்டாள்.

தனது ஆதீனத்தில் தனக்குச் சொந்தமான இடத்தில் சம்பந்தமில்லாத யாரோ வந்து நின்றுகொண்டு தான் சொல்லுவதைப் பொருட்படுத்தாமல் தன்னைத் தூக்கிக் கனம்பார்க்கிறார்களே எனும் ஆத்திரம் அவளின் குரலில் இருந்தது. என் அம்மாவின் சத்தத்தில் அந்தக் குழந்தை விழித்துக் கொண்டது. அதன் தலைதிருப்பி  குறுக்கான இடதுகை மடிப்பின்மேல் ஒருக்களித்து உட்காரவைத்த நிலையில் நின்றுகொண்டிருந்த அவ்விளைஞனை ஏறிட்டேன். சின்ன வயதுதான். சிவந்த நிறங்கொண்ட பலகை போன்ற உடல்வாகு. மனதிலோடும் உணர்ச்சிகளைக் கண்டறிய முடியாத சிறிய மணிக் கண்கள். என்னாச்சு? உங்களுக்கு என்ன வேணும்? என வினவிய என்னிடம் ஆங்கிலக் கலப்போடு திணறித்திணறி வெளிப்பட்ட தமிழில் விபரத்தைக் கூறினான்.

அவன் வந்துநிற்கும் விசயம் இதுதான். இளைஞனுப் பூர்வீகம் நேபாளம். அவனும்  மனைவியும் திருப்பூரிலிருக்கும் ஒரு நகை மாளிகையில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். நாகர்கோயிலிலிருக்கும் உறவினரொருவர் வீட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்பி வரும் வழியில் மனைவிக்கு வயிறு சரியில்லாமல் போய்விட்டது. சமாளிக்கவே முடியாத அளவுக்குத் தொந்தரவு அதிகமானதும் நடத்துனரிடம் சொல்லி நடுவழியில் இறங்கி இங்கேவந்து இப்படி நிற்கவேண்டியதாகிவிட்டது. ‘உங்க டாய்லெட்டை அலொவ் பண்ணாட்டியும் பரவாயில்ல… பக்கத்துல எங்காச்சும் பப்ளிக் டாய்லெட்டாவது இருக்குமா?’ என வினவினான்.

கூடுதலாக ஒரு ஐந்துநிமிடம் தாக்குப்பிடித்து நான்கு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் கொடுவாய் போய் இறங்கியிருந்திருப்பின் பொதுக் கழிப்பறைக்கே போயிருக்கலாம்தான். இப்படி இறைஞ்சி நிற்கும் அவலத்திற்கு ஆளாகியிருக்க வேண்டியதில்லை. பேருந்தின் நடத்துனராவது இம்மாதிரியான இடத்தில் இவர்கள் எங்கே போவார்கள் என ஒரு கணம் யோசித்துப் பார்த்து சற்றே தாக்குப் பிடிக்கச் சொல்லிவிட்டு கொடுவாயில் கொண்டுபோய் இறக்கி விட்டிருக்கலாம் என நினைத்துக் கொண்டேன். பூர்வீகம் நேபாள்ங்கிறான்.. அந்தப் புள்ளையப் பார்த்தா அசல் நம்ம புள்ளைகளாட்டவே இருக்குது.. காந்தர்வ விவாகமாக இருக்கலாமோ என்னும் நினைப்பும் ஓடியபடியிருந்தது. 

திண்ணையில் அமர்ந்திருந்த என்னையே அவ்விளைஞன் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். அந்தப் பெண்ணுக்கு அவஸ்தை அதிகமாகிவிட்டதுபோலத் தோன்றியது. இரண்டு கைகளும் அடிவயிற்றை அழுத்திப் பிடித்திருக்க அவளின் ஒட்டுமொத்த உணர்வும் அந்த உபாதையிலேயே மையங் கொண்டிருப்பது தெரிந்தது. தாங்கமுடியாத வலியைத் தாங்கிக் கொண்டிருப்பதேபோல கூனிக்குறுகி தலையை அண்ணாந்து கண்களை இறுக்கமூடி இறுகிய தாடைக்குள் பற்களை நெறித்தபடி தவித்துக் கொண்டிருந்தாள். சுற்றுப்புறம் சூழல் குறித்தான பிரக்ஞையையெல்லாம் அவள் இழந்து கொண்டிருக்கிறாள் எனவும் தோன்றியது.  

‘இவனொரு ஆகாவழி… ஒரே வார்த்தையில ஆகாதுபோன்னு சொல்லி முடிக்கியுடறத வுட்டுப்போட்டு ஊறென்ன உறவென்னன்னு மொறமயிறு நாயம் பேசீட்டு..’ என்ற அம்மா அவர்களைப் பார்த்துக் கத்தத் துவங்கினாள். ‘சொன்னாக் கேட்கமாண்டீங்களா..? அந்தப் பக்கம் காடு இருக்குது பாரு… வேணும்னா அங்க போயிக்கிங்க… எவ்வளவு நேரம் நின்னாலும் நின்னுக்க வேண்டீதுதான்.. இங்கீல்லாம் போறதுக்கில்லை.'

கடந்துசெல்பவர்கள் திரும்பிப் பார்க்கும்படியான ரூபலாவண்யத்தைக் கொண்டிருக்கும் ஒரு இளம்பெண்,  முன்பின் பரிச்சியமில்லாத யாரோ ஒருவரின் வீட்டு வாசலில்  நளினமும் கர்வமுமான தன் உடல் மொழியை இழந்து வெறும் உடலாக ஆகிநிற்கிறாளே என்னும் பச்சாதாபம் உண்டானது. அந்த வெறும் உடலுமேகூட அற்றுப்போய் வெறும் உயிரொன்று அதன் உச்சபட்ச அவஸ்தையில் துடித்துக் கொண்டிருப்பதேபோலவும் ஒரு கணம் மனமாகியது. துடித்துக் கொண்டிருக்கும் ஒரு உயிர். வெறும் உயிர்.

‘ஒழுங்கு மரியாதையா வாசலவுட்டு அக்கட்டால போகப்போறீங்களா இல்ல சீவக்கட்டையில ரண்டு சாத்துனாத்தான் போவீங்களா?’ ஆவேசமாகப் பேசியபடியே அம்மா நிலைப்படியைவிட்டு வெளிப்பட்டாள். வெளிவந்த வேகத்தைப் பார்த்தால் திண்ணையின் தெற்குமூலையில் கிடக்கும் கட்டைச் சீமாத்தையெடுத்து அவர்களை அடித்தும் விடுவாள்போல இருந்தது. அவளின்  கடுங்கோபம் என்னையும் தொற்றிக்கொண்டது. நிதானத்தை இழக்கவும் வைத்தது. ‘கெழுட்டுக் கண்டாரோலி முண்ட… மூடீட்டு உள்ள போகப் போறியா? இல்லியா?’ என்றேன்.

விக்கித்துப்போய் அப்படியே நின்றுவிட்ட தாய்க்கிழவி அதற்குப்பின்  ஒரு வார்த்தையும் பேசவில்லை. இனி இந்த பாழாப்போனவங்கிட்ட பேசிப் புண்ணியமில்ல என்னும் புரிதலுடன் ஒரு கணம் எரிப்பதுபோலப் பார்த்துவிட்டு  திரும்பி உள்ளே போனாள்.

துடித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை, அவ்வுயிர்ச் சக்தியைப் பார்த்துக் கூறினேன். கூவினேன் என்றும் சொல்லலாம். ‘அந்தக் கேட்தாம்மா டாய்லெட்டு.. போங்க.. போயிட்டு வாங்க’

பந்தற்காலையொட்டி நின்றபடியிருந்த அவ்விளைஞனை ‘எவ்வளவு நேரம்தான் நின்னுட்டே இருப்பீங்க..? வாங்க.. வந்து திண்ணையிலேவந்து உட்காருங்க’ என்றேன். மனைவிக்கு கழிப்பிடம் கிடைத்ததில் ஆசுவாசம் அடைந்திருந்தாலும் அதன்பொருட்டு எனக்கும் என் அம்மாவுக்கும் உண்டான சச்சரவு அவனுக்கு ஒரு விதமான பதட்டத்தையும் தர்ம சங்கடத்தையும் உண்டாக்கி விட்டதையும் உணர முடிந்தது. ‘பரவால்லை சார்.. இப்படியே நின்னுக்கிறேன்’ என்றான். அவன் மார்பில் ஏந்தியிருந்த குழந்தைக்கு இப்படியான பிரச்சனைகள் ஏதுமில்லை. அந்தக் கண்களில்தான் என்ன ஒரு புத்தொளி?   


‘அந்தளவுக்கு ஆகிப்போச்சா..? இந்தக் கெழுட்டுமுண்டையில்லீன்னா சோத்துக்கு சட்டியெடுத்துட்டுத்தான் போகோணம். ஏம் பறக்கறே… எனக்கப்பறம் நீ என்ன கதிக்கு ஆளாகப்போறேன்னு பாரு…’ உள்ளேயிருந்து அம்மாவின் ஆங்காரம் வெளிப்பட்ட படியிருந்தது. இந்தக் கோபம் குறைந்தது இரண்டு நாட்களுக்காவது நீடிக்கும் என்றும் தோன்றியது. இதற்குமுன்பும் சில நேரங்களில் இவ்விதம் கோபத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் அநாகரீகமாகப் பேசியிருக்கிறேன். என்றாலும் இப்படி பிறத்தியார்முன் பேசியதில்லை.

திண்ணையில்வந்து உட்காரவும் மாட்டாமல் என் அம்மாவின் வசவுகள் காறித்துப்பப்படும் எச்சில்தெறிப்புகளென வந்துவந்து விழுந்தபடியிருக்கும் வாசலில் நிற்கவும் முடியாமல் அவ்விளைஞன் தவித்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகப் போகிறது எனும் வாக்கியத்தை நேபாளியில் எப்படிச் சொல்வார்களோ? அவன் அந்த வாக்கியத்தின் உருப்பெற்ற சாட்சியாக நின்றபடியிருந்தான். எனக்குமேகூட ஒரு மனோவவஸ்தை உண்டாகத் துவங்கியிருந்தது. நல்லவேளையாக அவனுடைய செல்போன் ஒலிக்கத் துவங்கியது. கெட்டநேரத்தில் ஒரு நல்லநேரத்தைக் கண்டுவிட்ட கிளர்த்தியுடன் கைப்பேசியைக் காதிலே வைத்தபடி சற்று தூரமாக கிளுவைவேலியை ஒட்டியிருந்த வேப்பமரத்தடியேபோய் நின்றபடி பேசத் துவங்கினான்.

வீட்டிற்குள்ளிருந்து வரும் அம்மாவின் வசவுகளை காதில் வாங்கியபடி திண்ணையிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தேன். வழக்கமாக மாலை நேரம் டீக்கடையிலிருந்து திரும்பும்போது கிட்டியிருக்கும் புத்துணர்ச்சியை இழந்திருந்தேன். இனி மேற்கொண்டு தறிகளை இரவு பத்துமணி வரைக்கும் தெம்பாக ஓட்ட முடியுமா என்றும் தெரியவில்லை. ஏதோ ஆத்திரத்தில் பேசிவிட்டேனென்றாலும் அம்மாவை அப்படிப் பேசியது குறித்து குற்றவுணர்ச்சி உண்டாகி துன்புறுத்தத் துவங்கிற்று. மாட்டுக்கன்று ஆட்டுக்குட்டிகளுக்கு சிறு நோக்காடு என்றாலுமேகூட பொறுக்கமாட்டாது கண்ணீர் உகுக்கும் ஏழை மனதுக்காரிதான் என் அம்மாவும். இவர்கள் விசயத்தில் மட்டும் ஏன் இவ்வளவு ஈவு இரக்கமில்லாதவளாக நடந்து கொண்டாள் என்பதுதான் புரியவில்லை.

முன்பொருமுறை இது விசயமாகக் கிடைத்த அனுபவம்தான் காரணமாக இருக்குமோ எனத் தோன்றியது. அது அந்த வருடத்தின் தைப்பூசம் நெருங்கிக்கொண்டிருந்த காலம். அன்று அதிகாலை மணி ஐந்து இருக்கும். தறியோட்டிக் கொண்டிருந்தேன். தறிக்குடோனுக்கு வெளியே நின்றபடி சன்னல் வழியாக எட்டிப் பார்த்த இரண்டுபேர் வெளியே வருமாறு சைகை காட்டினார்கள்.

‘நாங்க பழனிக்கு பாதயாத்திரை போயிட்டிருக்கோம். எங்களுக்கெல்லாம் ஓபன்லபோயிப் பழக்கமில்ல… சித்தே உங்க டாய்லெட்டை யூஸ் பண்ணிக்கலாமா?’ எனக் கேட்டனர். எங்களுக்கெல்லாம் என்ற சொல்லை அவர்கள் பிரயோகித்த தொனி பிடிக்காமல் போனதால் இவர்களை அனுமதிப்பதா வேண்டாமா எனும் யோசனை உண்டாகியிருந்தது. ‘ என்ன யோசிக்கறேள்.. பாதயாத்திரா போறவாளுக்கு ஒரு உபகாரம் பண்றதுங்கிறது புண்ணியந்தானே.. பக்தாளுக்குப் பண்ற உதவிங்கிறது அந்த பகவானுக்கே பண்ற உதவியாக்கும்னு சாஸ்திரம் சொல்றது’ என்றார்கள். இது மேலும் கடுப்பைக் கிளப்ப ‘ இங்க தண்ணிச் செளகரியம் அவ்வளா கிடையாதுங் சாமி… பக்கத்துல வேற ஏதாச்சும் வீட்ல கேட்டுப் பாருங்க’ என்றேன்.

சாணி தெளித்து வாசல் கூட்டிக்கொண்டிருந்த அம்மாவின் நினைப்பு இது விசயத்தில் வேறு மாதிரியாக இருந்தது. ஐயருமாருகள் தன் வீட்டின் கக்கூஸில் போவதென்பது மிகப்பெரிய பாக்கியம் மிகப்பெரிய புண்ணியம் என்று அவளின் ஏழை மனது  நினைத்திருக்கலாம். சீமாரை வாசலிலேயே போட்டுவிட்டு ஓடிவந்தவள் ‘நீங்க போயிக்கங்க சாமி.. வேணுங்கிற தண்ணிய நாங்கொண்டாந்து தாறேன்’ என்றாள். கழிவறையிலிருந்த பக்கெட்டை எடுத்துக் கொண்டுபோய் குளியலறைச் சிமெண்ட் தொட்டியிலிருந்து தண்ணீரை நிரப்பிக்கொண்டும் வந்து வைத்தாள். மேலும் இரண்டு பிளாஸ்டிக் குடங்களிலும் கொண்டுவந்து வைத்தாள்.

இரண்டுபேர் மட்டும் இல்லை. குழந்தைகள் பெண்கள் ஆண்களென ஒரு கும்பலே அவர்களுடன் வந்திருப்பது பிறகே தெரிந்தது. அந்த ஒட்டுமொத்த கும்பலும் போனதில் குளியலறைத் தொட்டிபோக மாட்டுத்தாழிகளிலிருந்த தண்ணீரும் காலியானது. கடைசியில் போனவர்கள் சரியாக நீர் ஊற்றாமல் வெறுமனே போய்விட்டுப் போய்விட்டனர். கக்கூஸே நாறிப்போனது. அது தண்ணீருக்குத் தட்டுப்பாடு நிலவிய காலமென்பதால் போர்வெல்லிலிருந்து கிடைத்துக் கொண்டிருந்த சிறிதளவு நீரை பிற பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தியது போக மிச்சம்பிடித்து மிச்சம்பிடித்து கழிப்பறையை பழைய நிலமைக்குக் கொண்டுவருவதற்குள் அந்தப் புண்ணியகாரியம் அம்மாவின் ஏழை மனதை புண்படுத்தும் காரியமாக மாறிவிட்டிருந்தது. அந்த மோசமான அனுபவத்தில் கிடைத்த பாடம்தான் இந்தப் பெண்ணிடம் இப்படிக் கடினமாக நடக்க வைத்திருக்குமோ எனத் தோன்றியது.




இன்னொன்றையும் இங்கே சொல்லியாக வேண்டும். அகவை நாற்பத்தியிரண்டாகிறது. எனக்கு இன்னும் திருமணமில்லை. வீடு தொழில் என அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளும் அளவுக்கு வசதிகள் இருக்கிறது.  இருந்தும் பெண் கிடைக்கவில்லை. எனது ஜாதகம் எந்தெந்த பெண் வீடுகளுக்குப் போகிறதோ அந்த பெண் வீட்டார் எங்களைவிடவும் வசதி வாய்ப்புகளில் குறைவானவர்களாக இருந்தபோதிலும் அவர்களைத்தேடி என்னைவிடவும் அழகு அந்தஸ்து கல்வி மிக்கவர்கள் வந்து பெண்கேட்டு நின்றால் அவர்கள்தான் பாவம் என்ன செய்வார்கள் ?. அந்த தகுதிமிக்க மாப்பிள்ளைக்குத் தன் பிள்ளையை குடுக்கத்தானே செய்வார்கள்?.

இந்த பதினைந்து வருடங்களாக நான் பார்த்த பெண்களெல்லாம் என்னை விடவும் வசதி மிக்கவர்களாலேயே கபளீகரம் செய்யப்பட்டிருகிறார்கள். என் போன்றவர்கள் ஊருக்குப் பத்துப் பேர்களாவது இருக்கிறார்கள். ஏன் இவ்விதமென்று ஆராய்ந்தால் எண்பதுகளில் ஒரு பத்து வருடங்கள்போல முக்கால்வாசிப்பேர்கள் வயிற்றில் வளரும் குழந்தையை ஸ்கேன் பண்ணிப் பார்த்து பெண்ணாக இருந்தால் வயிற்றிலேயே அழித்துவிட்டதுதான்  அடிப்படையான காரணம் என்பது விளங்கும்.  ஆனால், என் அம்மாவைப் போன்ற பெண்களிடம் பேச்சுக் கொடுத்தால் இந்தக் காலத்துக் கொமுரிகளெல்லாம் ஊடடங்காம ஊருலகமெல்லாம் போயி படிச்ச திமிர்ல கண்ட சாதிக்காரனுகளையும் கல்யாணம் பண்ணிக்கிறாளுக… இதுதான் எங்க பசங்களுக்கெல்லாம் பொண்ணுக் கெடைக்காமப் போய்விட்டதுக்கு முக்கியமான காரணம் என்பார்கள்.

பாக்கறதுக்கு நம்ம சனத்துப் புள்ளையாட்ட இருக்குது.. வூட்டுக்காரனப் பார்த்தா எங்கியோ வடநாட்டுக் காரனாட்ட இருக்குது.. இங்க ஒவ்வொரு ஊருக்கும் எத்தன பசங்க வெட்டி முண்டமாத் திரியுறானுக? இந்த ஓடுகாலி முண்டைக்கு அதுல ஒரு பையன் கண்ணுக்கு தெரியலையாக்கும் என்கிற ரீதியில் இந்தப் பெண்ணைப் பார்த்ததும் எண்ணங்கள் உண்டாகி என் அம்மாவின் மனதில் வெறுப்பு ஊற்றெடுத்திருக்கலாம் என்றும் தோன்றியது.

கழிப்பறையிலிருந்து அந்தப் பெண் வெளிப்பட்டாள். இருந்திருந்தாற்போல திடீரென்று ஒரு அவமானத்திற்கு ஆளாகிவிட்டவர்களை நிமிர்ந்து நேர்கொண்டு பார்ப்பதற்கே ஒரு சங்கடம் உண்டாகுமல்லவா? அப்படியான சங்கடத்தில் நான் இருந்தேன்.



அலைபேசி உரையாடலை முடித்துக்கொண்ட அவ்விளைஞன் திண்ணையின் மீதிருந்த பயணப்பையை எடுத்து முதுகுக்கு கொடுத்தபடி  ‘வர்றங் சார்… ரொம்பரொம்ப தேங்க்ஸ்…’ எனச் சொல்லிக்கொண்டு கிளம்பினான். இருந்திருந்தாற்போல  திடீரென்று ஒரு அவமானத்திற்குள்ளானவர்கள் அந்த அவமானம் வடியும்வரை யார்முகத்திலும் விழிக்கவிரும்பாத யாருடனும் பேசவிரும்பாத குறுகி இறுகிய நிலைக்கு ஆளாவார்கள் அல்லவா? அப்படியான நிலையில் அந்தப் பெண் இருக்கிறாள் எனத் தோன்றியது. நன்றியும் சொல்லவில்லை. ‘கிளம்பறோம் சார்’ என்றுணர்த்தும் விதமான சிறு தலையாட்டலும்கூட இல்லை. மவுனமாக கணவனைப் பின் தொடந்தாள்.

சத்தம் மட்டும் சற்றே மெலிதாகியிருந்தது. மற்றபடி அம்மாவின் வசவுகளும் சாபங்களும் தன் ஸ்திதியை நொந்து தானே பரிதாபப்பட்டுக்கொள்ளும் ஒப்பாரிகளும் வெளிப்பட்டபடியே இருந்தன. ‘நீ இருந்திருந்தா எனக்கு இந்த நிலமை உண்டாகியிருக்குமா’ எனும்படியான பாடலை, செத்து சில ஆண்டுகளாகிவிட்ட அப்பாவை நினைத்து பாடிக்கொண்டிருப்பது கேட்டது.    கூடவே, குக்கரின் விசில் சத்தமும் காதில் விழுந்தது. தாளிக்கும் வாசனையும் வந்தபடியிருந்தது. சற்று நேரம் பிரமை பிடித்தவனைப்போல அப்படியே உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

இந்தப் பெண் ஒழுங்காகத் தண்ணீர் ஊற்றியிருப்பாளா? அந்த பாதயாத்திரை கோஷ்டியினரைப்போல அப்படியே விட்டுவிட்டுப் போயிருப்பாளோ? எனும் சந்தேகம் திடீரென உண்டானது.

கழிப்பறைக்குள் குழாய் வசதி இல்லை. வெளியிலிருந்துதான் நீர் எடுத்துக்கொள்ள வேண்டும். உள்ளேயிருக்கும் பக்கெட்டில் போதுமான தண்ணீர் இருந்ததா என்றும் தெரியவில்லை. அந்தப் பெண் வெளியே பக்கெட்டைக் கொண்டுவந்து தண்ணீர் பிடித்துப்போனது மாதிரியும் தெரியவில்லை.  தண்ணீர் ஊற்றாமல் இருப்பின் நாமாவது ஊற்றி சுத்தம் செய்துவிடுவோம் நமக்கும் முன்னால் அம்மா பார்க்கநேர்ந்து அது அப்படியே கிடக்கும்பட்சத்தில் நிலமை இன்னும் மோசமாகிவிடும் என்று தோன்றியது.

இப்படியொரு எண்ணம் உண்டாகி அந்தக்கணமே நான் கழிப்பறைக்குப்போய் கதவைத் திறக்காமல் இருந்திருந்தால் இந்த அனுபவத்தை எழுதியிருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன்.  


கழிப்பறைக்குள் வைக்கப்பட்டிருக்கும் சிவப்புநிற பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர் நிரம்பிக் கிடந்தது. தண்ணீரை டப்பாவில் முகர்ந்த மாதிரியோ கைகளில் அள்ளியமாதிரியோ எந்த அறிகுறிகளும் இல்லை. ஆச்சர்யமும் கேள்வியுமாக தரையோடு பதிக்கப்பட்ட கழிவு கோப்பையை உற்று நோக்கினேன்.   சற்று நேரத்திற்குமுன்பு அதில் யாரும்  ஒன்றுக்கோ இரண்டுக்கோ போனமாதிரியும் தெரியவில்லை. போய்விட்டுத்  தண்ணீர் ஊற்றியமாதிரியும் தெரியவில்லை. அரைவெள்ளை நிறத்து கழிவு கோப்பை சுத்தமாக காட்சியளித்தது.  ஒன்றுக்கும் இரண்டுக்கும் அப்பாற்பட்ட மூன்றாவது ஒன்றை மூடி மறைத்தபடி.

   





No comments: