Tuesday, 22 October 2019

சிறுகையளாவிய வாழ்வு…


                                                                            
                                          
                             1
குழந்தைகளின் எடை போதுமான அளவு கூடியிருந்தது. பெரியவள் இரண்டு கிலோ எழுநூற்றியம்பது கிராமும் சின்னவள் இரண்டு முன்னூறு என்கிற அளவுக்கும் உடல் ஊக்கம் பெற்றிருந்தனர். இருவருக்குமான ஜனனநேர வித்தியாசம் வெறும் ஒரு நிமிடம்தான். பிறந்தபோது பெரியவளின் எடை ஒண்ணு எழுநூற்றியம்பதாகவும் சின்னவளின் எடை ஒண்ணு முந்நூறாகவும் இருந்தது. அடுத்த அரைமணி நேரத்துக்குள் பச்சிளஞ்சிசுக்களுக்கென்றே செயல்படும் இந்த மருத்துவமனைக்கு குழந்தைகள் இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். மயக்கம் தெளிந்து உடல்தேறி அடுத்த நான்கு நாட்களுக்குப் பிறகே அக்காவையும் இங்கே அனுப்பி வைத்தனர். மருந்துண்டு மாத்திரைகளுண்டு இருமாமல் தும்மாமல் குனியாமல் நிமிராமல் புரண்டு படுக்காமல் குத்தவைத்து உட்காராமல் குலுங்கிக்குலுக்கிச் சிரிக்காமல் குலுங்கிக்குலுங்கி அழாமல், மருத்துவர்கள் சொன்னபடியெல்லாம் பாங்காக இருந்து பெற்றெடுத்த பிள்ளைகளை ஐந்து நாட்களுக்குப் பிறகே முதன்முதலாகவும் கண்குளிரவும் அக்காவுக்குப் பார்க்க வாய்த்தது. அவளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த தனி அறையில் இருந்தபடி சிஸ்டர்கள் வந்து கூப்பிட்ட நேரத்தில் ஓடிப்போய் தாய்ப்பாலைக் கறந்து கிண்ணத்தில் வைத்துவிட்டு வந்தபடியிருந்தாள்.  இருபத்தியெட்டு நாட்களாக வைத்து பராமரித்து வந்த பிரத்தியேக அரங்கிலிருந்து நேற்று மாலையில்தான் அக்காவின் அறைக்கு குழந்தைகளை மாற்றியிருந்தனர்.

சற்று முன்னர் செவிலியர்கள் புடைசூழ ரவுண்ட்ஸ் வந்த பெரிய டாக்டர் குழந்தைகளைப் பரிசோதித்துவிட்டு ‘இனியொண்ணும் பிரச்சனையில்லை.. இன்னிக்கே வேணும்னாலும் வீட்டுக்கு எடுத்துட்டுப் போகலாம்’ எனக் கூறினார். அதற்கு முன்பாக அவர் குழந்தைகளைப் பரிசோதிக்கும்போது ‘அக்காளும் தங்கச்சியும் என்ன பண்றீங்க..? சமர்த்தா பால் குடிச்சீங்களா? நல்லா தூங்கினீங்களா..?’ என பெரியவளின் கன்னத்தைத் லேசாகத் தட்டியும், சின்னவளின் கீழுதடை மென்மையாக பிடித்திழுத்தபடியும் செல்லம் கொஞ்சினார். அச்செய்கை எனக்கு மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தது. என் அக்காவின் முகத்தில் பெருமிதமும் பூரிப்பும் இழையோடிய வண்ணமிருந்தது. இந்தக் காட்சியை என் அம்மா மட்டும் பார்த்திருக்கும் பட்சத்தில் டாக்டரையும் அவரின் ஏழேழு தலைமுறையையும் வாழ்த்தியபடி காலத்துக்கும் பெருமையாகச் சொல்லிக்கொண்டே இருந்திருப்பாள் எனத் தோன்றியது.

மருத்துவரும் செவிலியர்களும் வெளியேறியபின் மச்சானுக்குப் போன் பண்ணினேன். ‘இன்னிக்கே போகலாம்னு சொல்லீட்டாங்களா… ரொம்ப சந்தோசம்.. ஆனா, இனிமே நான் கெளம்பி வாடகைக்கு காரு எதையாச்சும் புடிச்சிட்டு வந்து சேர்றதுக்கு எப்படியும் சாயுங்காலம் ஆயிருமே.. மொதமொதல்ல குழந்தைகளை வீட்டுக்குக் கூட்டீட்டு வாரது எறங்கு பொழுதுலயா கூட்டீட்டு வர்றது..? இன்னிக்கு ஒரு பொழுதும் இருக்கட்டும் .நாளைக்கு காலையில் நேரமே வந்துடறேன்’ என்றார். ’டிஸ்சார்ஜ் பண்ணும்போது எப்படியும் இருபது இருபத்தஞ்சாவது கட்டவேண்டீது வரும்.. ஒரு எடத்துல சொல்லி வெச்சுருக்கேன்.. நைட்டுத்தான் ஆகும்னாங்க.. அதையும் ரெடி பண்ணீட்டு நாளைக்கு காலைலயே வந்தர்றேன்..’ என்றும் கூறினார்.

கைகளையும் கால்களையும் உதறியபடி அர்த்தத்தினால் களங்கமுறாத சிறிய பளிங்கு விழிகளால் வெறும் பார்வை பார்த்தபடியிருந்த குழந்தைகள் இருவரும் தூங்கிப் போயிருந்தனர். மச்சான் சொன்னதை அக்காவிடம் தெரிவித்துவிட்டு ’செல்வி அக்கா வந்துவிடுவார்கள்.. போய்க் கூட்டி வருகிறேன் ‘ என்றபடி அறையைவிட்டு வெளியேறினேன். காரிடாரில் நடந்துவந்து கைப்பிடிச்சுவரில் வலது உள்ளங்கையை வைத்து வைத்து எடுத்தபடி படிக்கட்டுகளில் இறங்குகையில் பக்கவாட்டுக் காலியிடத்தின் வேப்பமரமும் வாழைமரங்களின் அகன்ற பசிய இலைகளும் வழக்கம்போலவே பார்வையில் விழுந்தன.



இரண்டு நாட்கள்.. அதாவது, நாற்பத்தியெட்டு மணி நேரம் ஒரு இடத்தில் சேர்ந்தார்ப்போல தங்கிவிட்டால் அவ்விடம் குறித்த ஏதேனும் ஒரு வகைப் பற்று மனதிலே உண்டாகிவிடும் என்று சொல்வார்கள். இருபத்தியெட்டு நாட்கள் தங்கி இரவு பகல் எல்லா நேரமும் இந்த காரிடாரில் நடந்து இந்த மரங்களையெல்லாம் வேடிக்கை பார்த்தவாறே இப்படிக்கட்டுகளின் வழியாக ஏறியுமிறங்கியுமிருக்கிறேன். நாளையிலிருந்து இவற்றையெல்லாம் பார்க்கவே போவதில்லை என்கிறரீதியிலான பிரிவுணர்வு மெல்லிய அளவில் உண்டாகியது.ரயில்நிலையத்தையொட்டி ரயில்வே ஊழியர்களின் குடியிருப்புகளுக்குப் பின்னால் இருக்கும் சிறு மைதானம்போன்ற இடமும்­ நினைவுக்கு வந்தது. புல்பூடுகள் மண்டிய நிலப்பரப்பும், மேயும் வெள்ளாடுகளும், விளையாடும் சிறுவர்களும், கொன்றை புங்கன் புளிய மரங்களின் நிழலும், அடுக்கப்பட்டுக் கிடக்கும் இருப்புப்பாதைத் தளவாடங்களுமாக அவ்விடம் இருக்கும். அங்கேதான் வீட்டிலிருந்து மதியச் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு பனிரண்டுமணி வண்டியிலே வரும் செல்வியக்காவை அழத்துவரும் பொருட்டு பைக்குடன் தினமும் காத்திருப்பேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக அரசு மருத்துவமனைக்கு எதிர்ப்புறத்தில் விடிய விடிய செயல்படும் டீக்கடையும் , ஒட்டியே பக்கவாட்டில் இருக்கும் மெடிக்கல் ஸ்டோர்சின் இறக்கிவிடப்பட்ட ஷட்டரும் குளிர்ச்சியான வாசற்படியும் ஞாபகம் வந்தன. தினமும் நள்ளிரவையொட்டி அந்த டீக்கடைக்குப் போவதும் பூட்டப்பட்டிருக்கும் மருந்துக்கடை ஷட்டரில் முதுகு சாய்த்தபடி குளிர்ச்சியான வாசற்படியமர்ந்து நள்ளிரவின் நிசப்தம் சுமந்த தார்ச்சாலையையும் , அரசு மருத்துவமனையையும் வேடிக்கை பார்த்தவண்ணம் தேநீரை உறுஞ்சியவாறும் சிகரெட்டைப் புகைத்தபடியும் அமர்ந்திருப்பதும் இந்த இருபத்தியெட்டு நாளில் தவிர்க்க முடியாத ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டிருந்தது. இன்றே கடைசி. நாளை முதல் அந்த இடத்தையும் அது கொடுக்கும் அனுபவத்தையும் பிரியப் போகிறேன் .

மணி பதினொன்று முப்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. சூரியன் உச்சிக்கு வந்து கொண்டிருந்தது. செல்வியக்கா வருவதற்கு இன்னும் அரைமணி நேரம்போல இருக்கிறது. மச்சானின் உடன்பிறந்த மூத்த சகோதரி. அக்காவுக்கு அண்ணி. எனக்கும் அண்ணி முறைதான் என்றாலும் ஆரம்பத்திலிருந்தே அக்கா என்றே கூப்பிட்டுப் பழகிவிட்டது. செல்வியக்காவின் கணவர் ரயில்வேயில் பணிபுரிகிறார். அவர்களின் வீட்டிலிருந்து இங்கே வர ஏகப்பட்ட பேருந்துகள் ஐந்து நிமிடங்களுக்கு ஒன்று என இருக்கிறது. ரயிலில் இலவசமாகவே பயணித்துக் கொள்ளலாம் என்பதால் அந்த சலுகையைப் பயன்படுத்தும் பொருட்டு தினமும் காத்திருந்து இந்த பனிரெண்டுமணி வண்டியைப் பிடித்து  மதிய உணவைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறார்.
சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். வெள்ளாடுகளும் குட்டிகளும் மேய்ந்தபடியிருந்தன. கடந்துபோய் மோட்டார் சைக்கிளை அடுத்திருந்த கொன்றை மரத்தின் நிழலில் நிறுத்தினேன். அடுக்கப்பட்டிருந்த அடுக்கிலிருந்து பிரிந்துகிடந்த தண்டவாளக் குறுக்குக் கட்டையின்மேல் அமர்ந்து கொண்டேன். ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.பொழுது போகாமல் வேடிக்கை பார்க்க வந்திருப்பார்போல. வயசான ஒரு பெரியவர் சற்று தள்ளி இன்னொரு குறுக்குக் கட்டையின் மேல் அமர்ந்திருந்தார். கிழக்காகவோ மேற்காகவோ கொஞ்ச நேரத்திற்கு முன்பாக நின்று போயிருந்த வண்டியிலிருந்து இறங்கியவர்களில் சிலர் புல்பரப்பின் நடுவே வரும் ஓற்றையடிப் பாதையின் வழியாக வந்து கொண்டிருந்தனர். செல்வியக்கா வருகின்ற பாதையும் இதுதான். அவர் வருவதற்கு இன்னும் இருபது நிமிடங்களுக்குமேல் இருக்கிறது.

அப்பாவுடைய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அநேகமாக அம்மாதான் எதிர்முனையில் இருப்பாள் எனத் தோன்றியது. அம்மாவேதான். ‘ஏஞ்சாமி… புள்ளைகளெல்லாம் நல்லாருக்காங்கள்ளோ.. டாக்டர் வந்தாங்களா? என்ன சொன்னாங்க?’ என்றாள்.

“அதெல்லாம் நல்லாருக்கிறாங்க.. டாக்டரு இன்னிக்கே வேணாலும் வூட்டுக்குக் கூட்டீட்டுப் போலாம்னு சொல்லீட்டாரு.. மச்சானுக்குப் போன் பண்ணுனேன். இனிமேல் கிளம்பி வந்து சேர்றதுக்கு சாயந்தரம் ஆகீரும்.. எறங்கு பொழுதுல எதுக்கு? நாளைக்கு காலைல நேரமே வந்தர்றேன். கூட்டீட்டுப் போயிக்கலாம்னுட்டாங்க..” 
“ஆமாஞ்சாமி.. மொதமொதல்ல வார்றது எறங்கு பொழுதுல எதுக்கு கூட்டியாறது? நாளைக்கே வாங்க.. அண்ணனக்கீது வரச்சொல்றதா..?”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நாங்களே வந்தர்றோம்..”
“நாளைக்கு பணம் எவ்வளவு கட்ட வேண்டீதிருக்கும்னு ஏதாச்சும் சொன்னாங்ளா..?”
“இன்னும் ஒண்ணும் சொல்லக் காணோம். எப்படியும் இருபதாவது கட்டவேண்டீது இருக்கும்னு நெனைக்கறேன்..”
“ இந்த ஆஸ்பத்திரீலயும் செலவு ஒரு லட்சத்தைத் தாண்டீருமாட்டத்தான் இருக்குது..”
“ஆமாமாம். தாண்டீரும்னுதான் நெனைக்கறேன்..”
“ஆனா ஆவுது.. நாளைக்கு எல்லாருமாச் சேர்ந்து பாடுபட்டுக் கட்டுனாப் போவுதுபோ.. ஆண்டவன் மாணிக்கமாட்ட ஒண்ணுக்கு ரண்டு புள்ளைகளைக் குடுத்தானே.. அதச்சொல்லு..”
“ஆமாமாம்..”
“செல்வி வந்துட்டாளா..?”
“அவீயள எதிர்பார்த்துத்தான் நின்னுட்டிருக்கேன்..”
“செரி.. வந்தா பர்த்து பத்தரமா கூட்டீட்டுப்போ.. நாளைக்கு எல்லாரும் பார்த்து பத்திரமா வந்து சேருங்க.. அப்ப போன வெச்சுருட்டா..” 
“ம்.. வெச்சுரு..”
                                                   2 
           
மாவட்ட ஆட்சியர் அலுவலக நிறுத்தத்தில் இறங்கி , பேருந்து போன திசையிலேயே நடக்கத் துவங்கினேன். மதியநேரத்தின் வெயில் உக்கிரமாக இறங்கிக் கொண்டிருந்தது. வலது கரம் பற்றிக்கொண்டிருந்த குச்சிக்கைப்பிடிப் பையில், பெட்சீட்டும், மாற்றுடைகளும், காபி பிளாஸ்க்கும் சில்வர் டம்ளர் உணவுத் தட்டு உள்ளிட்ட பொருட்களும் இருந்தன. சட்டைப் பையில் மாகாளியாத்தா கோவில் திருநீறு பொட்டலம் இருந்தது. திருநீறை அக்காவின் நெற்றியில் பூசிவிட்டு பொட்டலத்தை அவள் தலையணைக்கு அடியிலேயே வைத்துவிடவேண்டுமென அம்மா கூறியிருந்தாள். புதன் வெள்ளிக் கிழமைகள்தோறும் மாகாளியாத்தா கோவிலுக்கு அவள் நடையாக நடந்து கொண்டிருந்தாள். 

வளைவில் திரும்பியதும் நான்கு மாடிகளைக் கொண்ட அந்த மருத்துவமனை தென்பட்டது. நாலாவது மாடியின் உச்சியில் கருப்பையில் குழந்தை இருக்கின்ற படத்துடன் கூடிய பெரிய அளவிலான பெயர்ப்பலகை நிறுவப்பட்டிருந்தது. மருத்துவமனை வரவேற்பு வளாகமெங்கும் தம்பதிகளின் கூட்டமாக இருந்தது. பெரும்பாலும் மத்திம வயதுகளைக் கடந்த கணவன் மனைவிகள். நாற்காலிகளில் அழைப்பை எதிர்நோக்கி அமர்ந்து கொண்டிருந்தனர். மாடிகளுக்கான பாதை துவங்கும் இடத்தின் பக்கச்சுவரினில் சோதனைக் குழாய்மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதிகள் டாக்டரம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மாட்டப் பட்டிருந்தன. ஐம்பத்தி மூன்று வயதுப் பெண்ணொருவர் தன் அறுபது வயதுக் கணவரோடும்  சோதனைக் குழாய் சிகிச்சைவழி தான் பெற்றெடுத்த குழந்தையோடும் முகமெல்லாம் சிரிப்பாக டாக்டரம்மாவோடு நிற்கும் புகைப்படம் பெரிய அளவில் தனித்து மாட்டப்பட்டிருந்தது. அருகிலேயே அது பற்றிய நாளிதழ் செய்திகள் வெட்டி ஒட்டப்பட்டிருந்தது. அறை எண் நானூத்தியேழு நான்காவது மாடியிலிருப்பதாகக் கூறினார்கள்.   

நானூற்றியேழாவது அறையில் அக்காவைத் தவிர வேறொரு பெண்ணும்  மருத்துவமனை கொடுத்திருந்த பிரத்யேக உடையுடன் தனக்கான கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தாள்.  இருவருக்கும் குளுக்கோஸ் இறங்கியபடியிருந்தது. இருவருமே சற்றே வாய்பிளந்த நிலையில் அரை உறக்கத்தில் இருந்தார்கள். அக்காவுடைய முகத்தில் இருப்பது போலவே அந்த பெண்ணினுடைய முகத்திலும் தனியாக ஊர்வந்து சேரத் தெரியாத ஒரு பட்டிக்காட்டுத்தன்மை படிந்திருந்தது. மச்சானைத் தவிர வயதான பெண் ஒருவரும் அந்த அறையில் இருந்தார்.

சற்று நேரத்தில் நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிவிட்டிருந்தோம்.  அக்காவைப் போலவே தாய்மைப் பேறுக்காக வந்திருக்கும் அந்த இன்னொரு பெண் கோபியைச் சேர்ந்தவர் என்றும் பெயர் பாலாமணி என்றும் கூறினார்கள். துணையாக வந்திருக்கும் அந்த வயசான பெண் அவருடைய மூத்த சகோதரியாம். பெயர் பார்வதியம்மாள். அக்காவின் நெற்றியில் மாகாளியாத்தாவின் விபூதியை வைத்துவிட்டு பாலாமணியக்காவிடமும் நீட்டினேன். எந்தச் சாமியுடையதோ? கோவிலுடையதோ? அவருடைய நெற்றியில் ஏற்கனவே திருநீறு வைக்கப் பட்டிருந்தது. இருப்பினும் நான் கொடுத்ததையும் ஆர்வமாக இட்டுக்கொண்டார். வேறு வழியே இல்லாதபோது நம்புவதைத் தவிர வேறுவழியே இல்லைதானே?

சோதனைக் குழாயினுள் வளர்க்கப்பட்ட கருமுட்டைகளை கர்ப்பப்பையினுள் வைக்கும் நிகழ்வு மாலை நான்கு மணிக்கு ஆரம்பமானது. அக்கா உட்பட தாயாகும் சிகிச்சைக்கு வந்திருக்கும் பெண்கள் அனைவரையும் செவிலியர்கள் புடைசூழ வந்த பணியாளர்கள் ஸ்ட்ரெச்சரிலே படுக்கவைத்து ஒருவர்பின் ஒருவராக கூட்டிக்கொண்டு போனார்கள். இந்த பேட்ச்சில் மொத்தம் நாற்பது பெண்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது என பேசிக் கொண்டார்கள். நான்கு மாதங்களுக்கு முந்தைய போன பேட்சில் மொத்தம் இருபத்தி ஐந்து பெண்களுக்கு கருமுட்டைகள் வைக்கப்பட்டதில் இருபத்தியிரண்டு பேருக்கு குழந்தைப் பேறு கிடைத்துவிட்டதாம். தவறிப்போன மூன்று பேருக்கும் இந்த முறை பாதிக் கட்டணத்தில் சிகிச்சை கொடுக்கப்படுகிறது என்றும் பேசிக் கொண்டார்கள்.
       
கருப்பையினுள் கருமுட்டைகளை வைத்தபின் மருத்துவர்களின் நேரடிக் கண்காணிப்பிலேயே இருக்கவேண்டியதன் பொருட்டு நான்கு நாட்களுக்கு மருத்துவ மனையிலேயே இருக்கச் சொல்லியிருந்தனர். அந்த நான்கு நாட்களும் நான் ஆஸ்பத்திரியிலேயே தங்கிக் கொண்டேன். மச்சான் ஊருக்குப் போவதும் வருவதுமாக இருந்தார். டாக்டர்கள் அடிக்கடி வந்து ரத்த அழுத்தம் டெம்பரேச்சரெல்லாம் பரிசோதித்துவிட்டு  மருந்து மத்திரைகளை எழுதிக்கொடுத்தபடியே இருந்தனர். முக்கியமாக இந்த பெண்களுக்கு குறிப்பிடத் தகுந்தஅளவு கரு வளர்ச்சியடையும் வரை சளியோ காய்ச்சலோ வந்துவிடக்கூடாதாம்.  அதிகமான தொடர் தும்மலினாலும் இருமலினாலும்  கலைந்துவிடும் அபாயம் இருக்கிறதாம். மருந்துக் கடையும் கேண்டீனும் தரை தளத்தில் இருந்தது.   பார்வதியம்மாவினால் அடிக்கடி நான்கு மாடிகள் இறங்கியேறுவது முடியாத காரியமென்பதால்,தேவையான பணத்தைக் கொடுத்து பாலாமணியக்காவிற்கான மருந்து மாத்திரைகளையும் உணவையும் என்னையே வாங்கிவந்துவிடும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.   

இரவு எட்டு மணிக்குப் பிறகு மெடிக்கலுக்கும் கேண்டீனுக்கும் போய்வரவேண்டிய வேலை மிகவும் குறைவாகத்தான் இருந்தது. ஆஸ்பத்திரி சூழலில் தூக்கமும் வருவதில்லை. அக்காவுக்கும் பாலாமணியக்காவுக்கும் அட்டெண்டர்களாகிய நானும் பார்வதியம்மாளும் அறைக்கு வெளியே வராண்டாவில் இரவு வெகுநேரம் வரை அமர்ந்து பேசியபடி இருப்போம். மற்ற அறைகளின் அட்டெண்டர்களும் உரையாடலில் கலந்துகொள்வதுண்டு.  தாய்மைபேறுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் பட்டிக்காட்டுத்தன்மை பிரதிபலிக்கும் முகத்தையுடைய அக்காவுக்கும் பாலாமணியக்காவுக்கும் தலா ஒரு புத்திரசோகக் கதை இருந்தது, அதனை பகிர்ந்துகொண்டோம்.


பார்வதியம்மாள் சொன்ன பாலாமணியக்காவின் கதை..

 “ நாங்க அக்கா தங்கச்சிக மொத்தம் மூணுபேரு அப்புனு.. பாலாமணிதான் கடைசி. எனக்கு நேர் எளையவளுக்கு அப்புறம் ரண்டு ஆம்பிளைப் பிள்ளைக பொறந்து ரண்டுமே நெலைக்கல.. அஞ்சு வருசம் ஆறுவருசம்ங்கிற அளவுல வெவ்வேற காயலுக வந்து போயிருச்சுக. அதுக்கெல்லாம் வெகுநாளைக்கப்பறம் பொறந்தவதான் இவ. எம்பட கல்யாணத்தப்போ இவ வயசுக்குங்கூட வராத சின்னப் புள்ளை. நாங்க ரண்டுபேரும் பெரிய பொம்பளைக ஆனதுக்கப்பறம் பொறந்ததால தங்கச்சிங்கிற நெனப்பே வந்ததில்லே.. புள்ளமாதிரித்தான் வளர்த்துணோம்.

நாங்க மூத்தவளுக ரண்டுபேரும் வாக்கப்பட்டுப் போனது பார்த்தீனா வரக்காடுக. அங்க பெருசா வசதி வாய்ப்புன்னு ஒண்ணுமில்ல.. ஏதோ வெள்ளாடு குட்டீனு மேச்சு காலத்த ஓட்ற கஷ்ட சீவனம்தான். ஆனா, பாலாயாளக் கட்டிக் குடுத்தது நல்ல எடம். முப்போகமும் நெல்லு கரும்பு வாழைனு வெளையிற வயக்காடு. பண்ணையமும் பரவடிதான். என்ன..? மாப்பிள்ளைக்கு அப்பவே கொஞ்சம் வயசு அதிகம். எப்படியும் இவளவிட ஒரு இருபது வருசத்துக்காவது மூத்திருப்பாங்கன்னு நெனைக்கறேன். இருந்தா இருந்துட்டுப் போச்சாது.. புள்ள அக்காமாருகளப் போல ஆடு கறக்கவும் பூன நக்கவும்ங்கிற மாதிரி தருத்துனம்புடிச்ச பொழைப்பு பொழைக்காம நல்ல முறையா இருப்பான்னு அய்யன் ஒரே மனசா கட்டிக் குடுத்தாங்க. கட்டிக் குடுத்ததிலியும் தப்பே இல்லை. தலநாள்ல ஆம்பிளைப் பையனப் பெத்துக்கிட்டு அப்படிப் பொழச்சா. வயசுதான் கொஞ்சம் எச்சாப் போச்சேதவிர மாப்பிள்ளை தங்கமான மனுசன். வெத்தல பொகையில பீடி சாரயம்னு ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. தோட்டமுண்டு ஊடுண்டு தானுண்டு தன்னோட வேலையுண்டுன்னு இருக்குற மசச்சாமி. சங்காத பாட்டாளி. இந்த ரண்டு வருசமாத்தான் கொஞ்சம் ஒடம்புக்கு செரியில்லாமப் போயிருச்சு. இங்க ஆசுபத்திரிக்கெல்லாம்வந்து ராப்பகலாத் தூக்கங்கெட்டா எச்சாக்கீது செரியில்லாமப் போயிட்டா என்ன பண்றதுனுதான் ‘செரி.. நீங்க பொட்டாட்ட அங்கியே வூட்டோட தோட்டத்தோடயே இருங்க.. நாங்க பார்த்துக்கிறோம்னு எம் மவனுக என்னையத் தாட்டியுட்டுட்டாங்க..  எனக்கும் இந்த ஆசுபத்திரிக்காத்து ஒத்துக்காதுதான். இருந்தாலும் ஏன் வந்து உக்காந்துக்கிட்டு இருக்கறேன்னா அந்தளவுக்கு பாலாயாளுக்கும் அந்த மசமனுசனுக்கும் கடன் பட்டிருக்கிறேன். அந்தளவுக்கு வாங்கித் தின்னுருக்கிறேன்.

இவ கால்வெச்சதுக்கு அப்பறம் அங்க யோகம் மீறுன வேலையாப் போயிருச்சு.. இந்த வருசம் ஒண்ணு நாளவருசம் ஒண்ணுன்னு சொல்லிச்சொல்லி ரண்டுமூணு கிரையம் பண்ணுனாங்க. கட்டுத்தாரையப் போயி பார்த்தா மாடு எருமைனு ஆனைக கணக்கா சும்மா வைக்கப்போரு மாதிரி நின்னுட்டிருக்கும். ஊட்டுக்குள்ள போயிப்பார்த்தா பாலு தயிறு நெய்யின்னு அப்படியொரு செல்வாக்கு. பையனும் நல்லா சொழுசொழுனு மூங்கக்குச்சிமாதிரி வாட்டசாட்டமாத்தான் வளர்ந்தான். கையி காலு மேலெல்லாம் பார்த்தீனா சும்மா எண்ணையப் போட்டு உருவிட்ட மாதிரி அப்படி நெகுநெகுனு இருக்கும். என்ன..? படிப்புத்தான் ஏறலை. பன்னெண்டாவது பெயிலாப் போனவுடனே பள்ளிக்கூடத்துக்குப் போக மாண்டேன்டான். செரி.. படிக்காட்டிப் போவுது.. ஏவாரத்தப் பழகுனா தனியா ஒரு கடை வெச்சுக் குடுத்துரலாம்னு ஒரக்கடையொண்ணுக்குத் தாட்டியுட்டாங்க. ஒருவாரம்போல பஸ்ஸுல போயிட்டு பஸ்ஸுல வந்துட்டிருந்தவன் கடை முதலாளி வெச்சிருக்கிறாப்லயே தனக்கும் ஒரு புல்லட்டுப் பைக்கு வாங்கிக் குடுத்தாத்தான் வேலைக்குப் போவேன்னுட்டான். இங்கதான் அப்பாவுஞ்செரி.. அம்மாளுஞ்செரி.. மகம்பேச்சுக்கு மறுபேச்சு பேசறதில்லையே..? எத்தனையோ ஆயிரத்துக்கு புல்லட்டுப்  பைக்கு.. அதுவும் புதுசாவே வாங்கிக் குடுத்தாங்க. அதுக்குப் பிறகு ஒண்ணும் பிரச்சினையில்லை. ஒரு ரண்டு வருசமாட்ட அவம்பாட்டுக்கு வேலைக்குப் போயிட்டிருந்தான்.

அன்னிக்கு கடையிலிருந்து மத்தியானமே வந்துருக்கிறான். கட்டுத்தாரயில வேலையா இருந்தவ பைக்குச் சத்தங்கேட்டு எட்டிப் பார்த்துட்டு ‘ஏஞ்சாமி… இன்னேரத்துக்கே வந்துட்டே..? மேலுக்குக்கீது சுகமில்லையான்னு’ கேட்ருக்கிறாள். அதெல்லாமொண்ணுமில்லைனு கதவ நீக்கீட்டு ஊட்டுக்குள்ள போயிருக்கிறான். இவ மேற்கொண்டு ஒண்ணுங் கேட்டுக்கில.. நெனைச்சுக்கவுமில்ல..

நெனைக்கறதுக்கு என்ன இருக்குது? முன்னப்பின்ன ஏதாச்சும் அறிகுறிக தெரிஞ்சிருந்தா நெனைச்சிருக்கலாம். அப்படித்தான் எந்த அறிகுறியுமே இல்லையே..? இவபாட்டுக்கு வேலைய முடிச்சுட்டுப் போயிருக்கிறா. ஊட்டுக் கதவு சும்மா சாத்திக் கெடந்துருக்குது. மாடிக்குப் போற படிக்கட்டுக்குக் கீழ செருப்புக் கெடந்துருக்குது. போயி எட்டிப் பார்த்தா ரண்டு கையையும் தலைக்கு வெச்சுக்கிட்டு படிக்கட்டுமேல உக்காந்துட்டிருந்திருக்கானாம். ‘அட.. ஏன்..? இங்க வந்து இப்படி உக்காந்துக்கிட்டு இருக்கேனு ‘ கேட்டிருக்கிறாள். எந்தப் பதிலுமே இல்லையாமா. மறுபடியும் கேட்கவும் ‘என்னைய எதுவுங் கேக்காத.. என்ற சோலி முடிஞ்சுதுபோன்னு..’ கையை ரண்டையும் ஒதறீட்டு எந்திரிச்சவன் நிக்கமுடியாம அப்படியே படிக்கட்டுலயே உழுந்துட்டானாம்.

தோட்டத்தில வேல செஞ்சிட்டிருந்த ஆளுக கொழுந்தனாரு எல்லாம் இவ போட்ட கூப்பாட்டக் கேட்டு ஒடியாந்து பார்த்தா.. அப்பவே கண்டிசன் மீறிப்போயிருச்சாம். அன்னிக்கு ராத்திரி பன்னெண்டு மணியிருக்கும். இதே ஈரோடு பெரியாஸ்பத்திரியிலதான் நாங்கெல்லாம் வாய்வறண்டு நாவறண்டு மனசு வறண்டு உக்காந்துட்டிருக்கறோம். ஐசீ ரூம்லயிருந்து கூப்புட்டு பையன் போயிருச்சின்ட்டாங்க.

அந்த வேதனையிலயே பத்து வருசம் போயிருச்சு. ஒடம்புக்குச் செரியில்லாமப் போனதுக்கப்பறம்தான் நாமளும் போயிட்டா இவ அனாதையாப் போயிருவாளேனு கொழுந்தனாருக்கு செரியான வெசனமாப் போச்சு. செரி.. ஒரு கதவை அடச்ச ஆண்டவன் இன்னொரு கதவை திறக்காமயா போயிருவாங்கிற நம்பிக்கைல இந்த வைத்தியத்துக்கு ஏற்பாடு பண்ணி நடந்துக்கிட்டிருக்குது.”      

நான் கூறிய என் அக்காவின் கதை…
“அக்காவுக்கு அவளோட இருபத்தியொண்ணாவது வயசுல கல்யாணம் பண்ணி வெச்சோம். எங்க அப்பா அம்மாவுக்கு ரண்டு பையன் ஒரு பொண்ணுன்னு மொத்தம் மூணு பிள்ளைகள். அக்கா அண்ணனுக்கு இளையவள். எனக்கு மூத்தவள்.  மச்சான் அப்போது நூல் மில்லுக்குப் போய்ட்டிருந்தாரு. கல்யாணத்தின்போது வேலை பர்மிட் ஆகாமல் இருந்தது. கூடிய சீக்கிரமே ஆயிரும் என்றார்கள். அன்னிக்கெல்லாம் மில்லு வேலைங்கிறது பர்மிட்டாயிட்டா கவர்மெண்ட் வேலைக்கு சமம்ங்கிறதால நம்பிக்கையோட இருந்தோம். எங்க நம்பிக்கை வீண் போகலை. கல்யாணமாகி ஆறே மாசத்துல வேலை பர்மிட் ஆயிருச்சு. ஒரே வருசத்துல பையனும் கெடச்சுட்டான். அக்காவுக்கு யோகம்தான். ஆண்டவன் மொகம் முழிச்சிட்டான்னு சந்தோசமா இருந்தோம்.

மொத நாலு வருசம் எந்தப் பிரச்சனையுமில்லை. எல்லாம் நல்லபடியாத்தான் போய்க் கொண்டிருந்தது. அப்புறம் மில்லுல ஏதோ காரணத்துக்காக் ஸ்ட்ரைக் பண்ணினாங்க.  போராட்டம் மீட்டிங் பேரணி என எல்லாம் நடந்தது. இதோ முடிஞ்சுரும் அதோ முடிஞ்சுரும்னு ஒரு வருசம் போல வீட்டு வாடகையைக் கட்டீட்டு கைக்காசையோ கடன்வாங்கியோ எப்படியோ சமாளிச்சிட்டிருந்தாங்க. ஒரு கட்டத்தில்  எதா இருந்தாலும் கோர்ட்ல போய் பார்த்துக்குங்கன்னு மில்லை இழுத்துப் பூட்டீட்டாங்க. அதுக்கப்புறம் சொந்த ஊருக்கே வந்து தறிநெசவு பால் கறவைன்னு ஏதோ அவுங்களால முடிஞ்சதச் செஞ்சுட்டு காலத்தை ஓட்டீட்டிருந்தாங்க. பையன் உள்ளூர் அரசாங்கப் பள்ளிக்கு போய்ட்டிருந்தான்.




அப்போதெல்லாம் செல்போன் வீட்டுப்போன் என எங்ககிட்ட எதுவும் கிடையாது. முக்கியப்பட்ட உறவுகளிடம் பக்கத்துல இருக்கற மளிகைக் கடை நெம்பரைத்தான் குடுத்து வெச்சிருந்தோம். அந்த நெம்பருக்கு ஒரு நாள் சாயுங்கால நேரம் மச்சானிடமிருந்து போன் வந்தது. பையனுக்கு உடம்பு செரியில்லன்னு காங்கயம் கூட்டீட்டு வந்தோம். டைபாய்டு காய்ச்சல்னு சொல்லி பெட்ல அட்மிட் பண்ணீட்டாங்கன்னு கூறினார். நான் உடனே கிளம்பிப் போனேன். நான் போய்ச் சேரும்போது மணி நைட்டு எட்டுக்குப் பக்கமா இருக்கும். அப்போ பையன் நல்லா உணர்த்தியாத்தான் இருந்தான்.

மஞ்சள் நிறத்தில் மருந்து கலக்கிய குளுக்கோஸ் இறங்கிக்கிட்டிருந்தது. என்னைப் பார்த்ததும் முதலில் வெட்கப்பட்டமாதிரி ஒரு சிரிப்பு சிரிப்பான். பிறகு கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் வெட்கமெல்லாம்போயி பேசவே ஆரம்பிப்பான். அப்பவும் சிரித்தான். கொஞ்ச நேரம் கழிச்சு பேசுவான்னு நெனைச்சுக்கிட்டேன். கிளம்பிய அவசரத்தில பையனுக்கு மாற்றுத்துணிகூட எடுக்காமல் வந்துவிட்டதால் நானும் மச்சானும் கடைவீதிக்கு வந்து பனியனும் டிராயரும் எடுத்துக்கொண்டு, ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு அக்காவுக்கும் வாங்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குத் திரும்பினோம். சூழ்நிலையே தலைகீழாக மாறிப் போயிருந்தது.

அக்காவின் பதட்டமும் அழுகையும் பீதியை உண்டாக்கியது. பையன் கண்ணே முழிக்க முடியாமல் படுத்திருந்தான். இமைகளை வலுக்கட்டாயமாக பிரித்துப் பார்க்க வெள்ளைவிழி மேலெ ஏறியிருந்தது. வந்து பரிசோதித்துப் பார்த்த டாக்டர் ‘காய்ச்சல் மூளைக்குப் போயிருச்சு. இங்க அந்த அளவுக்கு வசதியில்ல… உடனே கோயமுத்தூருக்கு கூட்டிப் போங்க என்று கூட்டிப்போகவேண்டிய மருத்துவ மனையின் பெயரைச் சொல்லி , கையில் குடுத்துவிட அவசர அவசரமாக ஒரு கடிதமும் எழுதத் துவங்கினார். நான் டாக்ஸி ஸ்டேண்டுக்கு ஓட்டமெடுத்தேன்.

ஒண்ணும் பிரச்சனையில்லை பையன் நன்றாக இருக்கிறான் எனச் சொல்லியபடியே இருந்தார்கள். நாங்கள் நம்பிக்கையும் அவநம்பிக்கையுமாக பிழைத்துப் பிழத்து செத்தபடியிருந்தோம். எல்லா உறவினர்களும் கோயமுத்தூரிலிருக்கும் அந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த பிற்பாடு, மறுநாள் காலை ஒன்பது மணியளவில் ஐசீ ரூமிலிருந்து வந்து பையன் போய்விட்டான் என கூறினார்கள்.

அதற்குப் பிறகு அக்காவையும் மச்சானையும் கண்ணிலேயே பார்க்க சகிக்கவில்லை. சிலவருடங்கள்போல பெருந்துக்கத்தில் இருந்தவர்கள் ஒருவழியாகத் தேறி , கோயில் குளம் சாமியார் சோசியர் என அலையத் துவங்கினார்கள். பாகப்பிரச்சினையில் கிடந்த தாய்வழிச் சொத்து ஒண்ணை வித்ததில் , மச்சானின் கைக்கு அவருடைய பங்குப் பணம் வந்து சேர்ந்தது. கோவில் கோவிலாக அலைந்தவர்கள் பிறகு ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாகவும் அலையத் துவங்கினார்கள். ஒரு கதவை அடைத்த ஆண்டவன் இன்னொரு கதவை கட்டாயம் திறப்பான் எனும் நம்பிக்கையில் இந்த வைத்தியத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.   

அக்காவுக்கும் பாலாமணியக்காவுக்கும் மட்டும்தான் என்றில்லை. அங்கே தங்கியிருந்த பெண்கள் பலருக்கும் இப்படியான புத்திரசோகக் கதை ஒன்று இருந்தது. ஒரு பெண்ணின் அதீத நம்பிக்கை என்பது அவள் குழந்தைதான்.அதீத ஏமாற்றமென்பதும் அந்தக் குழந்தையை அவள் இழக்க நேருவதுதான். பொதுவாக ஒன்றின் மீதான அதீத நம்பிக்கை பொய்த்துப்போகும் பட்சத்தில் பிறகு காலத்துக்கும் அதன்மீது நம்பிக்கையோ விருப்பமோ உண்டாகாமல் இருப்பதுதான் மனித மனதின் இயல்பான குணம். ஆனால், தாய்-சேய் விசயத்தில் மட்டும் நேரெதிர். ஒரு குழந்தையிழப்பினால் விளைந்த சோகத்தை இன்னொரு குழந்தையை பெறுவதின் மூலமாக மட்டுமே தாய்மனம் அதை கடக்க நினைக்கிறது.                                                    
                                                   
                                                     3 
பெருகியோடும் வாகனங்களின் ஓட்டத்தில் இரைச்சலும் நெரிசலும் வெக்கையும் புகையுமாய் பரபரப்பாய் இருக்கும் சாலை மெளனித்துக் கிடந்தது. ஒன்றிரண்டு வண்டிகள் மட்டும் அவ்வப்போது போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தன. அவைகளின் சத்தம் ஓய்ந்தபின் முன்னிலும் அதிக அடர்த்தியோடு மெளனம் கெட்டிப்பட்டபடியிருந்தது.  எரிந்துகொண்டிருந்த தெரு விளக்குகளின் வெளிச்சத்தைப் பூசியபடி இருள் தேங்கியிருந்தது. பூட்டப்பட்டிருந்த மெடிக்கல் ஸ்டோர்சின் ஷட்டரில் முதுகு சாய்த்தபடி வாசற்படியில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். நேரம் நள்ளிரவு பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. மெல்லிய ஒலியில் டீக்கடை வானொலி பழைய பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தது.

தேநீர் டம்ளரைக் கொண்டுபோய் மாஸ்டரின் கழுவு களனில் வைத்துவிட்டு வந்து சிகரெட்டைப் பற்றவைத்தேன். பெரும்பாலான அறைகளின்  சன்னல்கள் யாவும் சாத்தப்பட்டு விளக்குகளும் அணைக்கப்பட்டு எதிர்புறமிருந்த அரசு தலைமை மருத்துவமனை தனது எண்ணிலா பிணிகளின் உபாதைகளிலிருந்து சற்றே விடுபட்டு உறக்கத்தில் கண்களை மூடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. இப்படியான ஏதோவொரு நடுநிசியில்தான் பாலாமணியக்காவும் பார்வதியம்மாளும் இந்த மருத்துவமனையின் ஏதோவொரு இடத்தில் எதிர்கொள்ளவே முடியாத அந்த துக்கத்தை எதிர்கொண்டிருந்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டேன்.


அந்த நான்கு நாள் மருத்துவமனை வாசம் முடிந்து அக்காவைக் கூட்டிப்போய் ஊரில் விட்டுவிட்டு நானும் வீடுவந்து சேர்ந்தேன். மூன்று வாரங்களுக்குப்பிறகு செக்கப்புக்கு கூட்டிக்கொண்டுபோன மச்சானிடமிருந்து சந்தோசமான தகவலைத் தாங்கியவாறு அந்த மகத்துவம் மிக்க போன் வந்தது. கர்ப்பப்பையில் வைக்கப்பட்ட கருமுட்டைகள் வளரத் துவங்கிவிட்டனவாம். ‘பாலாமணியக்காவுக்கு என்னாச்சு?’ என்றேன். ‘அவங்களுக்கும் ரிசல்ட்டு பாஸ்தானாமா.. நேத்தே வந்துட்டுப் போயிட்டாங்களாமா.. சிஸ்டர் சொன்னாங்க.. எதுத்தாப்ல நானூத்தியொண்ணுல சேலத்து டிரைவரு ஒருத்தரு இருந்தாருல்ல.. அவுருஞ் சொன்னாரு.’ என்று மச்சான் கூறினார்.

மாதமொருமுறை அக்காவும் மச்சானும் செக்கப்புக்குப் போய்வந்து கொண்டிருந்தார்கள். நான்காவது மாதத்தில் மறுபடியும் ஒரு மூன்றுநாள் மருத்துவமனையில் பெட்டிலே இருக்கவேண்டி வந்தது. உடனிருப்பதற்காக நானும் போயிருந்தேன். இம்முறை கர்ப்பப்பையின் வாயைத் தைக்கும் நிகழ்வு. ஏதாவது காரணத்தினால் வளரும் கரு வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காக இவ்விதம் செய்வதாகக் கூறினார்கள். அக்காவோடு அந்த பேட்ச்சில் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டவர்களில் சக்ஸஸ் ஆன அனைத்துப் பெண்களுமே வந்திருந்தனர். பாலாமணியக்காவைக் காணவில்லை. அவருக்கும் சக்ஸஸ் என்றுதானே சொன்னார்கள்? ஏன் வரவில்லை என விசாரிக்கையில் அவருக்கு நல்லபடியாக வளர்ந்துகொண்டிருந்த கரு ஒரு வாரம் சளி இருமல் காய்ச்சல் வந்து அவதிப்பட்டதன் காரணமாக தானாகவே அபார்ஷன் ஆகிவிட்டதாகக் கூறினார்கள். ஐயோ.. பாவமே என்றிருந்தது. சரி , அடுத்த முறையாவது இம்மாதிரியான எந்தத் தொந்தரவுகளுக்கும் ஆளாகாமல் நல்லவிதமாக கரு வளர்ச்சியடைந்து நல்ல படியாகக் குழந்தை பிறக்கட்டும் என நினைத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு பாலாமணியக்காவைப் பார்க்கவே வாய்க்கவில்லை. இன்றைக்கு மதியம்வரை.    
  
கொசுவலை கூண்டுக்குள் பிளாஸ்டிக் தொட்டிலின் மெல்லிய பஞ்சணைமேல் சிறு அதரங்களில் பீறிடும் உமிழ்நீர் சின்னஞ்சிறு மொட்டிலிகளை இட்டபடியிருக்க, குழந்தைகள் இருவரும் கைகளை ஆட்டியபடியும் கால்களை காற்றுவெளியில் உந்தியபடியும் படுத்துக் கொண்டிருந்தனர்.  


சுவரோரமாக மருந்து மாத்திரை குளுக்கோஸ் பாட்டில்களை வைப்பதற்குப் பயன்படுத்தும் சிறு இரும்பு பீரோ இருந்தது. மதிய உணவைக் கொண்டுவரும் செல்வியக்கா உள்ளே நுழைந்ததும் அந்த பீரோவின் மீதுதான் உணவுக்கூடையை வைப்பது வழக்கம். வைத்துவிட்டு பாத்ரூமுக்குப்போய் கைகால்களை கழுவிக்கொண்டு வந்த பிற்பாடே எனக்கும் அக்காவுக்கும் தட்டுகளை எடுத்துவைத்து உணவைப் பரிமாற ஆரம்பிப்பார். இன்றும் உள்ளே நுழைந்ததும் உணவுக்கூடையை பீரோவின்மேல் வைப்பதற்குப் போனவர் அங்கு பாலிதீன் பையோடு வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் ஆரஞ்சுப் பழங்களைப் பார்த்துவிட்டு  “இதென்ன இன்னிக்கும் யாரோ அம்மிணிக ரண்டுபேரையும் பார்க்க வந்துருப்பாங்களாட்டயிருக்குதே.. பழமெல்லாம் இருக்குது.. இத்தனை நாள் கழிச்சு இன்னிக்கு வந்தது யாரு? உங்க வகையறாவா? எங்க வகையறாவா?” என்றார். குழந்தைகளை ஐசீ வார்டில் கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்திருக்கிறார்கள் போனாலும் பார்க்க முடியாது என்றபோதிலும், உறவினர்களெல்லாம் பழங்கள் பிஸ்கட்டுகள் சகிதம் வந்து அக்காவைப் பார்த்துவிட்டுப் போய்க்கொண்டுதான் இருந்தார்கள்.


“உங்க வகையறாவும் இல்ல.. எங்க வகையறாவும் இல்ல..” என்ற அக்கா ஒருகணம் குழந்தைகளை திரும்பிப் பார்த்து விட்டுக் கூறினாள் “ உங்க மருமகளுக வகையறா..” 


“ஓ.. மருமகமாருக ரண்டு பேருக்கும் இன்னும் வெளிக்காத்து எப்படியிருக்கும்னே தெரியாது. சூரியன் எந்தமின்னா உதிச்சு எந்தமின்னா மறையும்னும் தெரியாது. அதுக்குள்ள சொந்தம் புடிச்சுட்டாங்களா..” 


“ம்.. புடிக்காம? உங்களையெல்லாமாட்டமா? ஆஸ்பத்திரில எங்ககூட கோபிக்கு பக்கத்தால ஊர்லயிருந்து வந்து பாலாமணியக்கான்னு ஒரு அக்கா இருந்தாங்க.. போனவாட்டி ரண்டுமூணு வாரம் வளர்ந்து அப்புறம் கலஞ்சுபோச்சு.. அடுத்த பேட்ச்சுக்கு சேர்ந்துருக்காங்களாமா.. அதுக்கு முன்னால வாரம் ஒண்ணுனு ஏழு வாரத்துக்கு சத்தூசி போடவேணும்னு சொல்லீட்டாங்களாமா.. அதுக்கு வந்தவங்க என்னைய விசாரிச்சிருக்கறாங்க.. கொழந்தைக எடை கம்மியா இருக்குதுனு இந்த ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு வந்திட்டதைச் சொல்லீருக்கிறாங்க.. உடனே எத்தனாநெம்பர் பஸ்ல ஏறோணம் எங்க எறங்கோணம்கிறதையெல்லாம் வெசாரிச்சுப் புடிச்சு வந்து பார்த்துட்டுப் போறாங்க..” என்றபடியே தலையணைக்கு அடியே கைகளால் துழாவிய அக்கா அந்த இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்து என்னிடம் நீட்டினாள் “ இந்தா.. பாலாமணியக்கா புள்ளைகளுக்கு எந்தக் காலத்துலியும் காசுக்கஷ்டமே வந்துரக்கூடாதுனு வாழ்த்துச் சொல்லி வெச்சுட்டுப் போன மொய்யி..” 

“இத்தன பாடுபட்டு பார்க்கறதுக்கு வந்துருக்கிறாங்க.. ஒரு அஞ்சு நிமிஷம் நான் வர்றவரைக்குமாவது இருக்கச் சொல்லீருக்கலாமல்லோ.. ஒரு காபியோ டீயோ வாங்கிக்குடுத்தாவது தாட்டி உட்ருக்கலாமே.. வந்துட்டுச் சும்மா போயிட்டாங்களே..” என்று அங்கலாய்த்தேன்.

“ இருக்கச் சொல்லாம இருப்பனா..? மூணுமணிப் பஸ்ஸுக்கு போயாகோணம். வுட்டுட்டா அஞ்சு மணி வரைக்கும் நின்னுட்டுக் கிடக்கோணம்னு ஒரே புடிவாதமா கெளம்பீட்டாங்க.. அநேகமா அவங்க போன நேரத்துக்கு இப்பதான் பஸ் ஸ்டாப்பு போயிச் சேர்ந்துருப்பாங்க.. பைக்க எடுத்துட்டுப் போனீனா பார்த்துரலாம்னு நினைக்கிறேன். போயிப் பார்த்து ஏதாச்சும் சாப்பிடவெச்சு தாட்டியுட்டுட்டுவா போ..”



பாலாமணியக்கா பஸ் நிறுத்தத்தில்தான் நின்றுகொண்டிருந்தார். சிக்னலில் பச்சை விழுந்த பிறகு ரவுண்டானாவைத் தாண்டி மறுமுனையிலிருக்கும் பஸ் ஸ்டாப்பிற்குப் போவதற்கு தாமதமாகுமென்பதால் வண்டியை இந்த டீக்கடையின் முன்னாலேயே பார்க் பண்ணிவிட்டு, வாகனங்களினூடாகப் புகுந்து நடந்து வளைந்து நெளிந்து ஓடி மறுமுனைக்குப் போய்ச் சேர்ந்தேன். எதோவொரு வேகத்தில் ஆர்வத்தில் போய்விட்டேனென்றாலும் பாலாமணியக்காவை சமீபத்ததும், ஸ்தம்பித்த நிலையில் அப்படியே நின்றுவிட்டேன். என்ன பேசுவதென்றே தெரியவில்லை. வாயைத் திறந்தால் அழுகை வந்துவிடும் எனத் தோன்றியது.

பாலாமணியக்காவின் பார்வை தனக்குத் தெற்குத் திசையில் மேற்குப் பார்த்தாற்போல் நின்று கொண்டிருந்த, இந்த அரசு மருத்துவமனையையே வெறித்தபடியிருந்தது.     













   
         


                                    

No comments: