Tuesday, 22 October 2019

துள்ளிவிளையாடும் வாசல்


                        
அந்த ஆத்தா காலமாகிவிட்டதாக நேற்றே தகவல் வந்தது. இன்றைக்குத்தான் போனேன். எப்போதுமிருக்கும் பந்தல்போக, சுற்றுச்சுவருடன் கூடிய காரைவாசல் முழுதும் தற்காலிகப் பந்தல் போடப்பட்டிருந்தது. கூட்டம் அதிகமில்லை. இருபதுபேர் சுமாருக்கு உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். நேற்று மாலையே கருப்பும் செய்தாகிவிட்டதால், வரவேண்டியவர்கள் எல்லாமே வந்துபோய்விட்டதாக மாப்பிள்ளை கூறினார்.

இந்தக் குடும்பத்தின் இளையமகனுக்கு எங்கள் உறவுக்காரப் பெண் ஒருத்தியைத்தான் கொடுத்திருக்கிறது. கல்யாணம் உறுதியாகிய சமயம், பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டில்வந்து விருந்துண்ணும் நிகழ்வின்பொருட்டு முதல் முறையும், அந்தப்பெண்ணுக்கு குழந்தை பிறந்ததும், குழந்தையைப் பார்க்கும்பொருட்டு இரண்டாவது முறையும் இங்கே வந்திருக்கிறேன். இப்போது மூன்றாம் முறை.

குழந்தையைப் பார்க்க வந்திருந்த போது செத்துப்போன இந்த ஆத்தாவுடன் வெகுநேரம் பேசிக்கொண்டிருக்க வாய்த்தது. பெரும்பாலும் வீட்டில் தனிமையிலேயே இருப்பதால், காதுகொடுக்கும் ஒரு இசைவான ஆளுக்காக காத்துக்கிடந்திருக்கும்போல.
'
போனாப்போது இரு அப்புனு.. போனாப்போது இரு அப்புனு..' என்றே பிடித்துக்கொண்டது.

கிழவியிடம் சொல்வதற்கு தன் வாழ்வு சார்ந்து ஏராளமான நினைவுகள் இருந்தன. மேலும், தான் சொல்லுவனவற்றை அந்தந்த காலத்துக்குரிய சீதோஷ்ணத்தோடும் நிலக்காட்சிகளோடும் விவரிக்கும்திறன் கிழவிக்கு இயல்பாகவே இருந்தது. 'சரி. போனாப்போவுது. என்ன அவசரம்? ' என நானும் உட்கார்ந்து விட்டேன்.


'என்ற கல்யாணம்... சிவன்மலத்தேருக்கு ஒருமாசங்கழிச்சு... மாசீலதா நடந்தது. எங்க பார்த்தாலும் ஒரே காச்சல். கல்யாணத்துக்கு மிந்துனநாளுப் பார்த்தீனா .. செரியான மழை. காருமழையப்பத்திச் சொல்லவா வேணும். எங்கூர்ல கிளுவங்காட்டய்யனூடுனு சொல்வாங்க.. அவீளுது பத்தங்கணத் தொட்டிக்கட்டு ஊடு. அங்கதான் எங்கல்யாணம் நடந்தது. ஆசாரிப்பள்ளத்துல வண்டியெறங்கமுடியாதளவுக்கு செந்தண்ணியா ரண்டுராத்திரி ரண்டுபகலு போச்சு. நாலு காடு தள்ளித்தான் வாக்கப்பட்டதுனாலும் கண்ணாலம் முடிஞ்சு மூணுநா கழிச்சுத்தான் இங்க மாமியாரு ஊட்டுக்கு பொண்ணுமாப்பிள்ளைக வரமுடிஞ்சுது. உங்க பண்ணையமெல்லாம் இதுதான்னு காட்றதுக்காக நங்ககொழுந்திகள்லாம் கொறங்காடுகளுக்கு கூட்டீடுப்போனாங்க.. கொழுக்கட்டாம்புல்லு ஊசிப்புல்லுலயெல்லாம் எங்கல்யாணத்தன்னிக்குப்பேஞ்ச மழைனால தழவுவர ஆரம்பிச்சிருந்துது. ' என்றெல்லாம் ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்த கிழவி, திடீரென தன் மருமகளைப்பற்றிச் சொல்லத் துவங்கினார்.


'அப்ப பெரீவனுக்கு இருபத்தேழு நடக்குது. படிப்பு முடிஞ்சு இங்கயே ஒரு ஆயில்மில்லுக்கு கணக்குப் பிள்ளையா போயிட்டிருந்தான். சின்னவன் மூணுவருசத்திக்கு எளையவன். திருப்பூர்ல சொந்தக்காரங்க ஒருத்தங்க கம்பனீல மேனேஜ்மெண்டு பாத்துட்டிருந்தான். பெரீவனுக்கு இனி குடும்பத்த அமச்சுட்ருலாம்னு பேசீட்டிருக்கும்போதுதான் அவிய அம்மாளுக்கு அந்தக் காயலு வந்துருச்சு.


மொதல்ல ஒரு ஆறுமாசம் என்ன காயல்னே கண்டுபிடிக்க முடில. அங்கையும் இங்கையும் அலஞ்சு, கடசியா குப்புச்சாமிநாயுடு ஆஸ்பத்திரில, உனக்கு இன்ன காயலு, அதுக்கு இன்ன வைத்தியம், அதுக்கு இவ்வளவு செலவாகும், ஏற்பாடு பண்ணீட்டு வாங்கனு வெவரமா சொல்லி வுட்டுட்டாங்க. என்ற மகனும் மருமகளுந்தான் போயிருந்தாங்க. அந்தவருசம் மழ நல்ல மழ. காட்ல கொள்ளுச்செடி நரிப்பயித்தாங்கொடியெல்லா எப்படிப் படந்துகெடந்ததுனு நெனைக்கற? அறுத்துக் கட்டீருந்தா ரண்டுவருசத்திக்கு எளங்குட்டிகளுக்கெல்லா எகத்தாறாக் கெடந்துருக்கும். அதுக்கெல்லா நேரமேது? இங்கதான் ஆசுபத்திரி ஆசுபத்திரியா ஏறியெறங்கற மணியமாவே இருக்குதே. அன்னிக்குச் சாயந்தரம் அஞ்சுமணிப்பஸ்ஸுக்கு ரண்டுபேரும் வந்துசேர்ந்தாங்க. என்ற மவம்மூஞ்சீல வெளிச்சமே இல்ல. ஆனா, மருமவ நல்ல கெளத்தியா இருந்தா. கொண்டாந்து ஊட்ல உட்டதுமே காட்டுல முடுக்கீருக்கற ஆடுகுட்டிகளை பட்டீல ஓட்டீடு வாரம்னு அவங்கெளம்பிப் போயிட்டான்.


இதே எடத்துலதான், அப்ப வெளித்திண்ணையா இருந்தது. இப்ப ஆசாரமாயிருச்சு. நாங் கட்டல்ல உக்காந்துருந்தேன். அங்க என்ன சொன்னாங்கன்னேன். சரி பண்ணிக்கலாம்னு சொல்லியிருக்காங்ன்னா. பக்கத்தூட்டுச் சனம் ஒண்ணுரெண்டுபேரு வெசாரிச்சுட்டுப் போலாம்னு வரவும், பொறவு நா ஒண்ணுங் கேட்டுக்கல. கம்முனு படுத்துக்கிட்டேன். அப்டியே கண்ணசந்துட்டனாட்டிருக்குது. பால்போசியோட காட்லயிருந்துவந்த மவன் 'ஏன் லைட்டுங்கூடப் போடாம கருகம்னு போட்டுவச்சிருக்கறேனு ' கேக்கவும்தான் திடுக்னு முழிப்பு வந்தது. வெளிவாசல் லைட்டையெல்லாம் போட்டுட்டு, ஊட்டுக்குள்ள போயி லைட்டப் போட்டவன் ' அட சண்டாளி இப்படிப் பண்ணீட்டேயேனு' கத்தறான். சொல்லச்சொல்லவே கிழவிக்கு அழுகை வந்துவிட்டது. ஒரு மூச்சு அழுது முடித்தார். அழுகை ஓய்ந்து மெல்லிய விசும்பலுடன் ' இந்தக் காயலுவந்து நா மிச்சமாவனா? இல்ல செலவுசெஞ்சுதான் இந்தக் குடும்பம் மிச்சமாகுமா? இருக்கற கோவணத்தையும் வித்துப்போட்டா அந்தப் பசங்க ரண்டும் தெருவுக்கு வந்துருமே 'னு, பாக்கவந்த மச்சாண்டார் சம்சாரத்துகிட்ட அழுதுருக்கிறா. 'நாங்கெல்லா இருக்கறப்ப அப்டியெல்லா ஆகறதுக்கு வுட்ருவமா? தைரியமா இரு'னும், நைட்டுவந்து மேற்கொண்டு பேசிக்கலாம்னும் அவுளுஞ் சொல்லீட்டுப் போயிருக்கிறா ' ஆனா, அவளால தைரியம்பண்ணிக்க முடீல...' என்றார்.


இதெல்லாம் நடந்து ஆறு வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது. இந்தக் கதையை செத்துப்போன இந்த ஆத்தாவிடம் கேட்டும் இரண்டு வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது. துக்கம் விசாரிக்கவந்து அமர்ந்திருக்கும் இருபத்திச் சொச்சம் பேருடன் நானும் அமர்ந்திருக்கிறேன். இந்தக் குடும்பத்தின் இரண்டு பையன்களும் நன்றாக இருக்கிறார்கள். பெரியமகனுக்கு ஒரு பெண் குழந்தை. மூன்றரை வயது ஆகிறது. எங்கள் உறவுப்பெண்ணைக் கட்டியிருக்கும் சின்னமகனுக்கு ஆண் குழந்தை. ஒன்றரை வருடம் ஆகிறது. கொள்ளுப்பாட்டியின் எழவுக்குவந்து அமர்ந்திருக்கும் எங்களின் அனைவருக்கும் ஊடாக மூன்றரைவயதுப் பேத்தி துள்ளித்துள்ளி ஓடி மகிழ்கிறாள். ஒன்றரை வயதுப் பேரனும் அக்காவோடு சேர்ந்து, அவளைப் போலவே அவள் செய்வதையெல்லாம் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறான். இருவரும் பார்க்கும் அனைவரின் மனங்களிலும் மலர்ச்சியை உண்டுபண்ணியபடியிருக்க - இதையெல்லாம் பார்க்க -இவர்கள் இந்தப் பூமிக்கு வருவதற்கு முன்பே செத்துப்போய்விட்ட, அந்த துர்பாக்கிய அப்பத்தாளுக்கு கொடுத்து வைக்கை வில்லையே எனத் தோன்றுகிறது.

ஒருவேளை, அவள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாளோ என்னவோ.