Sunday, 16 April 2017

ஜரிகை..

தோட்டத்துச் சாளையின் வெளித்திண்ணையில் சுவர்சாய்ந்து அமர்ந்துகொடிருந்த அப்பாரையன் கூறத் துவங்கினார். சிறுவனான இவன் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தான்.

லங்கையில் ராவணராசாவுக்கும் ராமருக்கும் சண்டை நடந்தப்ப ஒருநாளு ராசாவோட பையன் இந்திரசித்து, மாயாஜாலக்காரன், மாயமா மறஞ்சு மறஞ்சு சண்டை போட்டான். எங்கிருந்து அம்புவருது அஸ்திரம் வருதுனு யாருக்கும் ஒண்ணும் புரியல. தொப்பு தொப்புனு ஒவ்வொரு தலையா சாயுது. பெரும் வில்லாளிகளான ராமலட்சுமணர்களால எதுவுமே செய்ய முடியல. கடசியா அவங்களும் அஸ்திரத்துக்கு பலியாகி கீழே விழ, அவ்வளவுதான் எல்லோரும் செத்தொழிஞ்சாங்கன்னு அந்த அசுரப்பய எக்காளம் போட்டுக்கிட்டு அப்பங்கிட்டப் போயி இந்த சந்தோசத்தச் சொல்ல அரண்மனைக்கு ஓட்டமா ஓடறான்.


இங்க எல்லாரும் போயிட்டாலும் அனுமாருக்கு மட்டும் எதுவும் ஆகாது. அவருக்கு அப்படியொரு வரம் இருக்குதல்ல.அதான். அப்பறம் விபீஷணன் வந்து பாத்துட்டு இவங்கள பொழக்க வைக்கோணம்னா சஞ்சீவி மலைக்குப் போயி நாலுவகையான மூலிகைய கொண்டுவரோணம் அப்படீங்கறாரு.   துண்டு துண்டா ஆன கை கால்கள ஒட்ட வெக்கிறது, செத்துப் போனவனுக்கு உயிர்கொடுக்கறது,   இந்திரசித்துவோட மந்திரமெல்லாம் பலிக்காமப் போறதுக்குனு ஒவ்வொரு மூலிகைக்கும் ஒவ்வொரு மகிமை. அந்த நாலு வகையான மூலிகைகளின் பேரையுஞ் சொல்லி அனுமாரப்போயி கொண்டுட்டு வாங்கிறாரு.


அடுத்த நிமிசமே அனுமாரு கைலாயங்கிரிக்கு ஆகாச மார்க்கமா பறந்து போறாரு. அங்கிருக்கிற சங்சீவி பர்வதத்த பார்த்ததுமே அவருக்கு அந்த மூலிகைப் பேரெல்லாம் மறந்து போயிடுது. உடனே அவர் என்ன பண்றாருனா விசுவரூபம் எடுக்கிறாரு. அத்தாம் பெரிய மலையவே உள்ளங்கைல வெச்சுக்கிற அளவுக்கு பெரிய உருவம். மலயப் பேத்து உள்ளங்கைல வெச்சுக்கிட்டு பிறகு மறுபடியும் ஆகாச மார்க்கமாகவே பறந்துக்கிட்டு வாராரு.


சண்டக்காட்டுக்குப் பக்கத்துல வந்ததுமே மூலிகைக் காத்துப் பட்டு செத்துக் கிடந்தவங்களும் மயக்கம்போட்டுக் கிடந்தவங்களும் எந்திரிச்சு உக்காந்துக்கிறாங்க. துண்டுதுண்டாப் போன கைகாலெல்லாம் அதது அததோட வந்து தானாவே ஒட்டிக்கிது. எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுக்கப்பறம், சரி எடுத்த மலையை எடுத்த எடத்திலேயே வெச்சுரலாம்னு அனுமார் பாழய எடத்துலயே மலையக் கொண்டுபோயி வெச்சுட்டு திரும்புறாரு. வர்ற வழியிலதான் அவருக்கு அந்த யோசனை வருது.  மலையத்தான் எறக்கி வெச்சாச்சுல்ல. இனியெதுக்கு இந்த பெரிய உருவம்னு ஓரெடத்துல நின்னு தன் உருவத்த பழயபடிக்கே சிறுசா ஆக்கிக்கிறாரு.




அப்படி சிறுசா மாறர்துக்கு முன்னாடி ஒடம்புல ஒட்டியிருந்த துண்டுதுணுக்கு மலைச் சிதறலையெல்லாம் ஒண்ணா தெரட்டி உள்ளங்கைல வெச்சு கீழே ஊதி உடறாரு. அதனாலதான் அந்த ஊருக்கு ஊதியூர்னும் அந்த மலைக்கு ஊதியூர்மலைனும் பேரு. கொங்கணச்சித்தர்னு ஒரு சித்தர் அங்க வெகு காலம் தவம் செஞ்சுட்டு இருந்ததாச் சொல்வாங்க. அப்பறம்தான் அவரு திருப்பதி மலைலபோயி அடக்கமானாராம். அந்த மலைல இல்லாத மூலிகைகளே கிடையாது தெரியுமா..? அப்பாரய்யன் கைகாட்டிய திசையில் எழுந்துவந்து பார்த்தான். கிழக்கே வேலிகளுக்கும் பனை மரங்களுக்கும் அப்பால் புகைத்திரட்டுப் போல அந்த மலை கண்ணில் பட்டது.


சிறிதும் பெரிதுமான குன்றுகளும் அவற்றிற்கிடையே முள்மரக்காடுகளுமாக அந்த மலை இருந்தது. இறங்குபொழுதின் வெயில் மலை முகடுகளிலும் சரிவுகளிலும் படர்ந்திருந்தது. இவன் பேருந்தைவிட்டு இறங்கி ஒருபுறம் கடைகளையும் மறுபுறம் வீடுகளையும் கொண்டிருந்த அந்த வீதியில் தெற்கே நடக்கத் துவங்கினான்.

முதுகுப் பையை இறக்கி வைத்துவிட்டு டீக்கடைப் பெஞ்சில் அமர்ந்தான். தேநீர் அருந்தினான். சிகரெட் புகைத்தான். பணம் கொடுக்கையில் ஷாம்பு மற்றும் பாக்குச் சரங்களுக்கு நடுவே தொங்கிய அந்த சிறிய ரக டார்ச் லைட்டுகள் கண்ணில் பட்டது. ஒன்றை வாங்கி சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

மலையேறும் படிக்கட்டுகள் ஆளரவமற்றிருந்தது. பாதி உயரத்திற்கு மேலே காவிவேட்டி கட்டிய ஒருவர் ஏறிக்கொண்டிருந்தார். படிக்கற்களுக்கு சுண்ணாம்பும் காவியும் பூசப்பட்டிருந்தது. குரங்குப் புழுக்கைகள் சிதறிக் கிடந்தன. பக்கவாட்டுக் குன்றின் நிழல் முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் படித்தொடரை ஆக்கிரமித்திருந்தது. பழுத்த இலைகளும் சருகுகளும் ஓரங்களில் மண்டிக் கிடந்தன.

இவனுக்கு மூச்சு வாங்கியது. திண்டினில் உட்கார்ந்தான். ஒரே தம்மாக ஏறிய காலங்கள் ஞாபகத்திற்கு வந்தது. அண்ணாந்து மேலே பார்த்தான். கோயில் வளாகத்தில் ஜனநடமாட்டம் இருந்தது. யாரும் படிகளில் ஏறாமல் வாகனங்களோடு அதன் பாதையில் வந்துவிடுவார்கள் போல.

இளைப்பாறும் மண்டபத்தின் கூரையின்மீதும் பக்கவாட்டுப் பாறைகளிலும் குரங்குகளின் நடமாட்டம் இருந்தது. அவைகளின் கண்கள் பளிங்குபோல் மினுங்கின. சரிவில் புடைத்து அந்தரத்தில் நீண்டிருந்த ஒரு பிரமாண்டமான பாறையின்மேல் ஒரு கிழ வானரம் படுத்துக் கிடந்தது. அந்திவெயில் காய்ந்தது. இவன் மறுபடியும் ஏறத் துவங்கினான்.


மலையின் முதல் குன்றின்மேல் கோவில் இருந்தது. முன்புற சமதளப் பரப்பில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மரங்களின் ஊடே மண்பாதையின் வழியாக வந்த மாருதி கார் ஓரமாக நின்றது. கையில் குழந்தையுடன் ஒரு இளம்பெண் இறங்கினாள். ஓட்டுனர் இருக்கையிலிருந்து வெளிப்பட்டவன், அவளுடைய கணவனாக இருக்க வேண்டும். அவனும் சிறிய வயதுகொண்ட இளைஞனே போலிருந்தான். இருபத்திநான்கு அல்லது இருபத்தியைந்து வயதிருக்கலாம். மிகச்சரியான பருவத்தில் திருமணம் கைகூடிய பாக்கியவான். இவன் அவர்களைப் பார்த்தபடியிருந்தான்.



அந்தப் பெண் குழந்தையுடன் சேர்ந்து பூஜைப் பொருட்களடங்கிய சிறு கூடையையும் பிடித்துக் கொண்டிருந்தாள். குழந்தை ஊஞ்ச மரத்தை நோக்கி கை நீட்டியது. மரத்தின் கிளைகளில் குரங்குகளும் குட்டிகளும் அமர்ந்தபடியும் தொங்கியபடியும் இருந்தன. காரின் கதவு திறந்த அவன் வாழைப் பழங்களை எடுத்து கீழே வீசினான். மொய்த்த குரங்குகள் ஒன்றுக்கொன்று சண்டையிடத் துவங்கின. குழந்தையின் கண்களில் காட்சிப் புதுமையின் ஒளி ஆசீர்வாதமே போல ஒளிர, இவன் கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

பிரதான வாயிலருகே செருப்புகளைக் கழட்டிவிட்டு உள்ளே நுழைந்தான். நிலைப் படிகளைத் தாண்டியதும் அந்தப் பெண் எதிர்ப்பட்டாள். எதேச்சையானதொரு புள்ளியில் நான்கு கண்களும் ஒரு கணம் சந்தித்து விலகின. இவன் சட்டென தலையைத் திருப்பிக் கொண்டான். அதற்குள் அவள் முழு உருவத்தையும் கண்கள் கண்டுவிட்டிருந்தன. அரக்கு கலரில் தங்க ஜரிகையிட்ட மாம்பழ வண்ண பட்டுப் புடவையிலிருந்த அவளின், அழகிய சிவந்த மெட்டியணியாத பாதங்கள் மனதில் பதிந்து விட்டிருந்தது. எண்னங்களாக உருமாற்றம் பெறாத ஒரு ஊமைத்துயரம் உள்ளே ஊற்றெடுத்தது. இவன் கன்னிமூலை கணபதியின் சன்னதிக்கு நடக்கத் துவங்கினான்.

பொழுது மறைந்து விட்டிருந்தது. மேல்வானின் செந்தீற்றல்கள் கருக்கத் துவங்கியிருந்தன. கள்ளப் புன்னகை போன்ற வெளிச்சம் எங்கும் பரவியிருந்தது. நெற்றியில் திருநீறையிட்டபடியே , கருவறைவிட்டு முன்மண்டபம் கடந்து படிகளில் இறங்கினான். விளக்குகள் ஒளிரத் துவங்கியிருந்தன.  அந்த ஒற்றை விண்மீன் பிரகாசித்தது. ‘ அதுதான் மாப்ள சுக்ரன். வெள்ளிமீன்னு சொல்வாங்க. பெரும்பாலும் காலைல சூரியன் உதிக்கறதுக்கு முன்னாடியே இது உதிச்சிரும். ஆனா எப்பவாச்சும் சில காலங்கள்ல மட்டும் சூரியன் அஸ்தமிச்சதுக்கு அப்பறம் இது மேல்வானில் ஒரு பனை உயரத்துக்குமேல மின்னீட்டு இருக்கறது தெரியும். சூரியன் மறஞ்சதும் இது தெரிஞ்சா ராசிக்கட்டத்துல ஒரு ராசி சூரியனுக்குப் பின்னாடி இது இருக்குதுனு அர்த்தம். ‘ எப்பொழுதோ துரை மச்சான் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.   


“மாமா இந்தாங்க பொங்கல்..


ஒரு சிறுமி நின்றுகொண்டிருந்தாள். சற்றுத்தள்ளி சர்க்கரைப் பொங்கல் விநியோகம் நடை பெற்றுக் கொண்டிருந்தது. சிறிய பாக்கு மட்டைத் தட்டு நிரம்ப இருந்த பொங்கலை அந்த சிறுமியிடமிருந்து பெற்றுக் கொண்டான். கிழக்குச் சுவரோரமாக வந்தான். கீழே ஊர் ஒளிப்பூக்கள் சூடியதுவாய் இருளைப் பூசிக் கொண்டிருந்தது. சாலையில் வாகனங்கள் விரைந்த படியிருந்தன.

குழாயருகே அந்த இளம் தம்பதியை மறுபடியும் காண நேர்ந்தது. இப்பொழுது அந்த இளைஞன் குழந்தையை வைத்துக் கொண்டிருந்தான். அவள் குனிந்து கை கழுவியபடி இருந்தாள். தெறிக்கும் நீர் பட்டுவிடாத வண்ணம் சேலைத்தலைப்பை சற்றே மேலிழுத்துச் சுருட்டி கணுக்கால்களுக்கு நடுவே சொருகியிருந்தாள். மகிழ்ச்சியான தாம்பத்யத்தின் பெருஞ்சுகம் அவள் முதுகிலும் கணுக்கால்களிலும் பிரதிபலித்து மினுங்கிற்று.

இவன் கோவிலைவிட்டு வெளியே வந்தான். இருள் மலைச்சரிவுகளில் பரவியிருந்தது. பெரும்பகுதி வாகனங்கள் போய்விட்டிருந்தன. காலணிகளை அணிந்து கொடிமரம் கடந்து வந்தான். அதன் நடுப்பகுதிக் குழாயில் கட்டியிருக்கும் ஒலிப்பெருக்கிக் குழாய்கள் கண்ணில் பட்டதும் ஊர்க்கோவிலின் ஆண்டுவிழாச சம்பவம் ஏனோ ஞாபகத்துக்கு வந்தது.


ர் நடுவேயிருந்த விநாயகர் கோவிலின் மேடையிலும் பக்கவாட்டு கல் இருக்கைகளிலும் சனம் கூடியிருந்தது . பூவரச மரக்கிளையில் கட்டப்பட்டிருந்த ஒலிப்பெருக்கிக் குழாய்கள் இடைவிடாது அலறின. தெற்குத்தோட்டத்து மாமனின் குரல் கணீர் கணீரென ஒலித்தபடியிருந்தது.பெருக்கப்பட்ட ஒலியில் தன் குரலைக் கேட்டதில் அளப்பறிய அதிகாரமொன்று கைவந்து விட்டதேபோல மிகுந்த உற்சாகமுடன் பெயர்களை அறிவித்தபடியிருந்தார்.

வேப்பமரநிழலில் வசூல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ரத்னசாமி மச்சான் பெயர்களையும் தொகைகளையும் நோட்டுப் புத்தகத்தில் பதிவு பண்ணிக் கொண்டிருந்தார். நடுவீட்டுக்காரர் பணத்தை எண்ணிச் சரிபார்த்து பேக்கினுள் வைத்துக் கொண்டிருந்தார். விபரம் தெற்குத்தோட்டத்து மாமனுக்குப் போய் அவர் பெயரையும் தொகையையும் சலியாத உவகையுடன் அறிவித்த படியிருந்தார்.

பெயர் அறிவிக்கப்பட்டவர்களின் முகத்திலும் அன்னாரது பெண்டு பிள்ளைகளின் முகங்களிலும் எட்டு ஊருக்கும் கேட்கும்படியான சத்தத்தில் பெயரைக் கேட்ட சந்தோசமும் பெருமிதமும் பரவியிருந்தது. இவன் ஆயிரம்ரூபாய்த் தாளை ரத்தின மச்சானிடம் நீட்டினான். நிமிர்ந்து பார்த்த அவர் கோழிப்பண்னை ராமசாமி கொள்ளுக்காட்டுத்தோட்டம் என எப்போதும் போலவே எழுதி பதிவு செய்தார். விபரம் தெக்குத்தோட்டத்து மாமனுக்குப் போனது. கோழிப்பண்னை ராமசாமி எனும் தன் பெயரை அவர் குரலில் ஒலிப்பெருக்கி கேட்க ஆவல்கொண்டவனாய் காதுகளைத் தீட்டிக்கொள்ள, மாமனின் குரல் கணீரென ஒலிக்க ஆரம்பித்தது.


அருள்மிகு விநாயகர் கருப்பண்ணசாமி கன்னிமார் கோயில்களின் ஆண்டுவிழாவை முன்னிட்டு அன்னதான நன்கொடையாக கொள்ளுக்காட்டுத் தோட்டம் கல்யாணமில்லாத ராமசாமி ரூபாய் ஆயிரம் நன்கொடை என திரும்பத் திரும்ப மூன்றுமுறை அறிவித்து அமர்க்களப்படுத்த, ஊரே கொள்ளென சிரித்தது. கைதட்டல்களும் விசில்களும் இளவட்டங்களிடமிருந்து கிளம்ப, இவன் தெற்குத்தோட்டத்துக்காரரை வேறு வழியில்லாதவனாக முறைத்தான். “ கோவிச்சுக்காத மாப்ளே.. அப்படியாச்சும் அந்த சாமிகளுக்கெல்லாம் காதுகேட்டு ஒனக்கொரு நல்லத பண்ணிவெச்சுப்புடாதானு ஒரு ஆசதான்இதையும் அவர் மைக்கிலேயே அறிவிக்க, மறுபடியும் ஒரு சிரிப்பலை அங்கே எழும்பி ஆர்ப்பரித்தது.


சமமான வயதில் ஊருக்குள் நான்கு ராமசாமிகள் இருந்தனர். குழ்ப்பத்தைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு ராமசாமியின் பெயரோடும் ஒரு அடைமொழி சேர்ந்துவிட்டிருந்தது. கோழிப்பண்ணை இருந்ததால் இவன் கோழிப்பண்ணை ராமசாமியாக ஆகிப்போயிருந்தான்.மற்ற ராமசாமிகளுக்கெல்லாம் திருமணமாகிவிட்டதாலும் , உப்புத்தோட்டத்து ராமசாமியும் கோழிப்பண்ணை கட்ட ஆரம்பித்து விட்டதாலும், தன் பெயர் இனி கல்யாணமில்லாத ராமசாமியாக ஆகிவிடுமோ எனும் பயம் இவனுக்கு உண்டாகத் துவங்கியது.

கோவில் விளக்குகளின் வெளிச்சப் பரப்பு முடிவடைந்திருந்த இடத்திலிருந்து வனம் ஆரம்பித்தது. குத்துச் செடிகளுக்கு நடுவே போகும் ஒற்றையடிப்பாதையிலிறங்கி இவன் நடக்கத் துவங்கினான். சற்று தூரம் போனதும் சிறிய டார்ச்சை ஒளிரவிட்டான். மழைத்தண்ணீர் அரித்த பள்ளங்களுடன் அந்த ஒற்றையடிப்பாதை நீண்டும் நெளிந்தும் சென்றபடியிருந்தது. சின்னித்தலையின் வாசம் காற்றில் கலந்திருந்தது. இரவுப் பூச்சிகளின் சப்தம் கூடவே வந்தது. செல்போன் ஒலித்தது. துரை மச்சான்தான்.. 


சொல்லுங்க மச்சான்

மாப்ள கெளம்பியாச்சா

மேல போயிட்டிருக்கேன் மச்சி

அப்படியா.. ரொம்ப நல்லது. நேரத்த மறந்துராத. சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கல்ல..

இருக்கு மச்சான்

சரி, காலைல கூப்பிடறேன்

ஓகே மச்சி


ஒற்றையடிப்பாதை சற்றே விரிந்து நிலப்பாறைகளாக பரவியிருந்தது. வியர்வை பெருகி வழிந்தது. ஆசுவாசப்படுத்திக்கொண்டு செல்லலாம் என தோன்றியது. பையை கீழே வைத்துவிட்டு உட்கார்ந்தான். மரக்கிளைகளின் சந்துவழியே ஊரின் விளக்கு வெளிச்சங்கள் எங்கோ வெகுதொலைவில் இருப்பதுபோல் மினுங்கின. திசைமாறிய காற்றில் கலந்திருந்த சங்கம்பூவின் மணம் நாசியுள் நுழைந்தது. பேட்டரிலைட்டை இடப்புறமாக உயர்த்திப் பிடித்தான். பசிய நீள்வட்ட இலைகளையும் கூரான முட்களையுமுடைய சங்கஞ்செடிகள் புதரென மண்டிக் கிடந்தன. மணி மச்சானுடன் முதன்முதலாக பெண்பார்க்கப் போனது ஞாபகம் வந்தது.

மொபட்டின் பின்புறம் இப்போது இருப்பதைவிடவும் இளமையாக இருக்கும் இவன் மணிமச்சானை பின்னமர வைத்து சென்றுகொண்டிருந்தான். அந்த தெருவின் வலப்புறத்தில் வீடுகளாகவும் இடப்புறத்தில் சங்கம்புதர்களிலாலான வேலியாகவும் இருந்தது. மின்கம்பமும் குடிநீர்க்குழாயும் இருக்குமிடத்தில் வலப்புறமாகப் பிரிந்து செல்லும் மற்றொரு வீதியில் வண்டியைத் திருப்பச் சொன்னார். சற்றுதூரம் போனதும் எதிர்ப்பட்ட குயவன் ஓடு வேய்ந்த அவ்வீட்டைக் காட்டிவிட்டுக் கூறினார். இந்த வீடுதான்.


முதலில் மணிமச்சான் சொன்னபோது இவனுக்கு தயக்கமாக இருந்தது. அந்தப் பெண் இவனைவிடவும் மூன்று மாதங்கள் மூத்தவளாக இருந்தது யோசிக்க வைத்தது. “ அதையெல்லாம் பாக்கக்கூடாது மாப்ளே.. அஞ்சாறு வருசம் மூத்ததையெல்லாம் கட்டி நெறயப் பேரு சந்தோசமா இருக்கறாங்க. பொண்ணு வூட்டுக்காரங்க ஏழெட்டு வருசமா மாப்ள தொழாவித் தொழாவி ஓய்ஞ்சு போயிட்டாங்க…  உன்னப்பத்தி எல்லா விவரமும் சொல்லீட்டேன். ஜாதகம் மட்டும் பொருந்துனாப் போதும். அடுத்த வாரமே வேணும்னாலும் முகூர்த்தத்த வெச்சுக்கலாம். அவங்க ரெடி.. யோசிக்காம பொறப்படு..என்றார்.


பொண்ணுக்கு இருபத்தியொன்பது என்பதை நம்பவே முடியவில்லை. முப்பத்தி ஐந்து சொல்லலாம்போல் முதிர்ந்திருந்தாள். வந்த வரன்களெல்லாம் தட்டிப் போயிருந்ததின் வலி அவள் இளமையை உறிஞ்சியிருந்தது. அதிகமான பவுடர் பூச்சுடன் காபியை கொண்டுவந்து நீட்டினாள். பரிதாபமான அந்தக் கண்கள் கெஞ்சுவது போல தோன்றியது. இவன் மணிமச்சானைப் பார்த்து  சம்மதம் என்பதுபோல தலையாட்டினான்.


பெண்ணின் அப்பாவுக்கு பரபரப்பும் உற்சாகமும் தொற்றிக்கொண்டது. அன்றைக்கே போய் பொருத்தம் பார்த்து தேதி குறித்து மண்டபத்துக்கும் பணம் கட்டிவிட வேண்டும் என்பதுபோல அவசரப்பட்டார். ஜாதகங்களை ஒப்பிட்ட ஜோதிடர் உதட்டைப் பிதுக்கினார். ரச்சு தட்டுது வேலைக்காகாது என்றார். “வேற ஏதாச்சும் உபாயம் உண்டானு பாருங்க.. பரிகாரம் பண்ணி பூவெச்சுக் கேட்டு வந்தா செய்யலாமா “ என பெண்ணின் அப்பா கேட்டார். 

“மத்த பொருத்தம் பத்தலைனாக் கூட நீங்க கேக்கறமாதிரி ஏதாச்சும் பண்ணலாம். மாங்கல்யப் பொருத்தமே இல்லீங்கும்போது பேசறுதுக்கு ஒண்ணுமேயில்லை. வேண்டாம் உட்றுங்க. வேற பார்த்துக்குங்க.

பெண்ணின் அப்பாவுக்கு முகம் சோர்ந்து போனது. ஒருவாரம் கழித்துவந்த மணிமச்சான் இவனை மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு தினுசாகச் சிரித்தார்.

“ஏம் மச்சி.. என்னாச்சு

உனக்கு ஏதோ சக்தி இருக்குது மப்ளே.. நீ போய் கால் வெச்சுட்டு வந்த நேரம் அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ரெடியாயிருச்சு.

அதற்குப் பிறகு நிறையப் பெண்கள் , நிறைய ஜாதகங்கள், நிறைய புரோக்கர்களைப் பார்த்தாயிற்று. திருமணத் தகவல் மையங்களிலும் பணம் கட்டிப் பார்த்தான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொன்னார்கள். ஜாதக நம்பிக்கை அதிகமாகிவிட்டது தான் காரணம் என்றனர். பெண்களெல்லாம் பட்டதாரிகளாயிருக்க நீ படிக்காமல் போனதுதான் காரணம் என்றனர். மற்றுசாதி இளைஞர்கள் திட்டமிட்டு நம் பெண்களை காதலித்து கல்யாணம் செய்துகொண்டு போவதன்மூலம் நம் சாதியினை அழித்து வருகின்றனர் என பலவாகப் பிரிந்து நிற்கும் சாதித் தலைவர்கள்வேறு ஆளாளுக்கு முழங்கினர்.



வீடும் கோழிப்பண்ணையும் தோட்டத்துக்குள்ளேயே இருந்தன. சிலந்திக்குப்போல் இருந்த இடத்தில் இருந்தபடியே இரைப்பையை நிரப்பிக்கொள்ள வாய்த்துவிட்டதால். வெளிப் போக்குவரத்தும் வெளிப் பழக்க வழக்கங்களும் குறைந்து போனவனாக ஆகிவிட்டிருந்தான். அக்கம் பக்கத்திலெல்லாம் பங்காளிகளே இருந்தனர். பத்தாம் வகுப்புக்குப் பிறகு காதலிக்கும் வாய்ப்பும் அமையாமலேயே இளமை மங்கிக் கொண்டிருந்தது.



குருப்பெயர்ச்சிகளும் சனிப்பெயர்ச்சிகளும் வந்துவந்து போயின. கொடுமுடியாற்றங்கரையில் ஐயர் மந்திரம் சொல்ல வாழைகன்றுக்கு தாலிகட்டி பின் அதை வெட்டினான். ராமேஸ்வரம் அக்கினி தீர்த்தக் கடலில் பிதுர் பூஜை செய்து முங்கிமுங்கி எழுந்தான். பழனிக்கும் காவடி எடுத்தான். ஒன்றும் வேலைக்காகவில்லை. வயது முப்பத்தியொன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.


எண்பதுகளில் வந்த கவிதைகளைப் பார்த்தால் அதில் நிச்சயம் ஒரு கவிதையாவது முதிர்கன்னியைப் பாடுபொருளாகக் கொண்டிருக்கும். அந்தக் காலம் மலையேறி போய் விட்டிருந்தது. கல்யாணச்செலவு முழுவதும் ஏற்றுக் கொள்வதாகவும் , நகையென எதுவுமே வேண்டாமெனவும் சில இடங்களில் சொல்லிப் பார்த்தான். அவர்களும் சம்மதித்துவிடலாம் என்பதுபோல் யோசித்தனர். அதற்குள் இவனைப் போலவே பள்ளிப் படிப்பை முடிக்காத , அதே சமயம் இவனைவிடவும் வசதியான விவசாயி மகன்கள், கூடவே தாங்கள் பெண்ணின் அப்பா அம்மாவுக்கு பேங்க்கிலும் ஒரு லட்சம் போடுகிறோம் என்பதுபோல சகட்டுமேனிக்கு சலுகைகளை அறிவித்து பெண்களைத் தட்டிக் கொண்டு போயினர்.


வெளியே தலைகாட்ட முடியவில்லை. எங்கு சென்றாலும் யாரும் கேட்கும் முதல் கேள்வியே “ அப்புறம் எப்ப சாப்பாடு போடப்போறேஎன்பதாகத்தான் இருந்தது. நீங்களே ஒரு பொண்ணப் பாருங்க, சாப்பாடு போட்டுடலாம் என்பான். பொண்ணு ஒண்ணு இருக்கு, ஆனா படிச்ச மாப்ளதான் வேணுங்கிறாங்களே என்பார்கள். அல்லது முப்பது வயசுக்குள்ள இருக்குற மாப்ளையா கேக்குறாங்கப்பா என்பார்கள். புரோக்கர்களும் ஜோதிடர்களும் பணம் புடுங்குவதிலேயே குறியாக இருந்தனர்.


ஜாதகம் ஜோதிடத்தையெல்லாம் இவன் புறக்கணிக்கத் தயாராக இருந்தான். இவன் சார்ந்த சமூகம் அதை வேதமாகவும் வேத வாக்காகவும் நம்பியது. சுத்தமாக வெறுத்துப்போன இவன் சாதியாவது வெங்காயமாவது என தூக்கியெறிந்துவிட்டு அனாதை இல்லம் ஒன்றிற்குப் போய் பெண் கேட்டான்.




இவனை நாற்காலியில் உட்காரச்சொன்ன அலுவலர் விவரங்களைக் கேட்டறிந்தார். கண்ணாடிக்குப் பின்னால் உருண்ட அக்கண்கள் இவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பதை நம்ப மறுத்தது. உங்களைப் பத்தின விபரங்களையெல்லாம் எழுதி, உங்க கிராம நிர்வாக அலுவலர்கிட்ட அதுபத்தின ஒரு சான்று வாங்கீட்டு வாங்க பார்க்கலாம் என்றார். அதுகூட சாத்தியம்தான். ஆனால் விடைபெறுகையில் அவர் ஒரு விசயம் சொன்னார். ‘நாங்க பொண்ணுகளை இருபது வயசுக்கு மேல வெச்சுக்கறதில்லை. பதினெட்டு பூர்த்தியானாலே கல்யாணம் பண்ணி வெச்சுருவோம். நீங்க முப்பத்தியொன்பது ஆச்சுங்கறீங்க. சரி, எதுக்கும் நான் சொன்னதையெல்லாம் செய்யுங்க.பார்க்கலாம்என்றார்.




விதவை – விவாகரத்தான பெண்களைத் தேர்ந்தெடுக்கலாம் என தோன்றியது. அது சம்பந்தமான விளம்பரங்களைக் கவனிக்க ஆரம்பித்தான். அழகிய இளம் விதவை, மிக வசதி, ஜாதி மதம் கல்வி வசதி வயது தடையில்லை. வீட்டோடு மாப்பிள்ளைக்கு முன்னுரிமை, என்பதுபோண்ற விளம்பரங்கள். கீழே தொடர்புக்கு செல் நம்பரைக் கொடுத்திருப்பார்கள். இது மதிரியான விளம்பரங்கள் திருமணத் தகவல் மையங்களின் பெயரோடும் வெளிவந்திருக்கும். ஏற்கனவே திருமணத் தகவல் மையங்கள் குறித்த அனுபவம் இருந்ததால் வெறுமனே செல் நம்பர்கள் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களை தொடர்பு கொண்டான்.


இங்கே பெருசுகளையும் கோழிப்பண்ணையையும் காத்துக் கிடந்து என்னத்தைக் கண்டோம். வீட்டோடு மாப்பிள்ளையாகவே போய்விடலாம் எனும் முடிவோடு அந்த நம்பர்களுக்கு போன் செய்வான். எதிர்முனையில் பேச ஆரம்பித்த பிறகே தெரிய வரும் அந்த விளம்பரங்களும் தகவல் மையங்களின் ஏற்பாடே என்பது. ‘இருக்கு சார்.. வீட்டோடு மாப்பிள்ளைதான் வேணும் சார்.. ஐயாயிரம் கட்டி பதிவு பண்ணுங்க சார்.. நாங்க அட்ரஸ் தர்றோம் என்பார்கள். பெரும்பாலும் பேசுவது இனிய பெண்குரல்களாகத்தான் இருக்கும். ‘சரி, ஐயாயிரம் குடுத்தா நீங்களே பேசி கட்டி வெச்சுருவீங்களா…?’ என வினவினால்,இல்ல சார், நாங்க அட்ரஸ் மட்டும்தருவோம். நீக்கதான் பேசிக்கணும். பிக்ஸ் ஆயிருச்சுனா எங்களுக்கு கமிசன் இவ்வளவுனு இருக்கு அத தந்தரணும்என்பார்கள்.


சேவை மனப்பான்மையுடன் இயங்குவதாகவும் இலவசப் பதிவு எனவும் ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. இவன் ஈரோட்டிற்கு பஸ் ஏறினான். ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் அந்த மையத்தை நடத்திக் கொண்டிருந்தார். ஒரு படிவம் ஒன்றைக் கொடுத்து சுயவிவரங்களை பூர்த்தி செய்து, ஜாதக நகல் ஒன்றையும் புகைப்படத்தையும் இணைக்கச் சொன்னார். இணைத்துக் கொடுத்தான்.

பெண்களின் பைல்களை இவன்முன் அடுக்கினார். விதவைகள். விவாகரத்தானவர்கள். ஒவ்வொன்றாக புரட்டிக்கொண்டே வந்தான். எல்லா பெண்களுமே பட்டதாரிகளாகவும் உத்தியோகம் பார்ப்பவர்களாகவும் இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பும் அவ்விதமாகவே இருந்தது. ஒரேயொரு இளம்விதவை மட்டும் பத்தாவது வரை படித்திருந்தாள். அவர்களின் வசதி வாய்ப்புகளை நோக்க கண்ணைக் கட்டியது. “இத்தனை வசதிகளையுடைய பெண் ஏன் பத்தாம்வகுப்போடு நின்று போனாள்என சந்தேகமாக இருந்தது. “ அதுவா ஸ்கூல் படிக்கும்போதே டிரைவர்கூட ஓடிப்போயிருச்சு. நல்லா வசதியா வாழ்ந்த பொண்னு இல்லியா.. அவங்கூட செட்டாகம ரண்டே வருசத்தில திரும்பி வந்துருச்சு”  என்ற ஆசிரியரை பைல்களை மூடிவைத்துவிட்டு ஏமாற்றமாகப் பார்த்தான்.



“என்ன தம்பி பார்த்து முடிச்சுட்டீங்களா..? இதான் தம்பி இன்னிய நெலமை. நீங்க மட்டும்தான்னு நெனச்சுக்காதீங்க. உங்கள மாதிரி ஊருக்கு பத்து பசங்க கல்யாணம் இல்லாம இருக்கறாங்க. நம்ம கொங்கு மண்டலம் அளவுக்கு கணக்குப் போட்டாலே முப்பதத் தாண்டியும் கல்யாணமில்லாத பசங்களோட எண்ணிக்கை ரண்டு லட்சத்தைத் தாண்டும். பொண்ணுக எண்ணிக்கை அந்தளவுக்கு இல்லியே.. பத்துல ஒரு பாகம்தான் இருக்கு. அதுகளும்  முக்கால்வாசி படிச்சு நல்ல வேலைல இருக்கறதுக.




ஆண்பெண் பிறப்பு விகிதம் தொன்னூறுக்குப் பிறகு ஓரளவுக்கு சரியாத்தான் வருது தம்பி. ஆனாப் பாருங்க.. எண்பதுகள்ளயிருந்து தொன்னூறு வரக்குமான பத்து வருசங்கள்ல பெண் குழந்தை பிறப்பு விகிதம் ரொம்பவே கொறஞ்சு போச்சு. ஸ்கேன் பண்ணிப்பார்த்து வயத்துல இருக்கறது ஆணா பெண்ணானு கண்டுபுடிச்சு சொன்னாங்க இல்லியா? அதுல வந்ததுதான் எல்லா வெனையும். பத்துக்கு ஏழு பெண்குழந்தை கருவிலேயே அழிஞ்சு போச்சு. அதனால இன்னிக்கு எழுபதுக்கு மேல எண்பதுக்குள்ள பொறந்த உங்கள மாதிரி பசங்களுக்கெல்லாம் பொண்ணுக்கு டிமாண்ட் ஆயிருச்சு..


அதையுந்தவிர நீங்களெல்லாம் படிக்காம வேற போயிட்டீங்க. அன்னிய சூழ்நிலை அப்படி. ஏற்கனவே படிச்சு முடிச்ச ஒண்ணு ரெண்டு பட்டதாரிகளும் சும்மா திரிஞ்சதால, உங்கள மாதிரிப் பசங்களெல்லாம் ஸ்கூல் முடிஞ்ச உடனே பனியன் கம்பனி பவர்லூம் கோழிப் பண்ணைனு தொழில் கத்துக்கப் போயிட்டீங்க. ஆனா அதுக்கப்பறம் வந்த தாராளமயமாக்கலுக்குப் பிறகு எல்லாமே தலைகீழா மாறிப்போச்சே.. பொட்டிக்கடைக மாதிரி எங்க பார்த்தாலும் காலேஜ்க.. படிச்சவங்களுக்கெல்லா வேலையுங் கெடச்சுது. படிச்சு உத்தியோகத்துல இருக்கற புள்ளைங்களெல்லாம் தங்களுக்கும் அதேபோல மாப்பிள்ளைகதான் வேணுங்குதுக. நிலவரம் என்னனு நீங்க தெரிஞ்சுக்கோணம்னுதான் இத்தனையும் சொல்றேன். சரி, போயிட்டு வாங்க. உங்களுக்கு மேட்சா ஏதாவது வந்தா தகவல் சொல்றேன்


எங்கேயாவது பெண் இருப்பதாகச் சொல்லி மணி மச்சானும் இடையிடையே வருவதும் போவதுமாக இருந்தார். கூட்டிப்போய் காட்டிய பெண்கள் அனைவருமே பலவித காரணங்களால் திருமணம் தடைபட்டு தேங்கிப்போன முதிர்கன்னிகளாகவே இருந்தனர்.இவன் சம்மதித்த போதிலும் ஏதாவது ஒரு காரணத்தால் அந்த சம்பந்தங்களும் அமையாமலேயே போய்க்கொண்டிருந்தது. கடைசியாக அவர் அழைத்துக்கொண்டு போய் காட்டிய பெண்ணைப் பார்த்ததும் மனம் சுத்தமாகவே விட்டுப் போனது. அந்தப் பெண் இவனுக்கு முழங்கால் உயரமே இருந்தாள்.


எதுவும் பேசாமல் காபியை வாங்கிக் குடித்துவிட்டு மணி மச்சானையும் பின்னால் அமர்த்திக் கொண்டு கிளம்பினான். எதிர்ப்பட்ட ஒயின்ஷாப்பில் வண்டியை நிறுத்தினான். மவுனமாக முதல் சுற்றை முடித்துவிட்டு இரண்டாவது சுற்றுக்கு ஊற்றியபடி கேட்டான்.

“மச்சா.. இது உங்களுக்கே நல்லாருக்கா..?

இவன் என்ன கேட்கப் போகிறன் என்பதை உணர்ந்துகொண்ட மணி மச்சான் கையிலிருந்ததை ஒரே மூச்சில் குடித்து முடித்துவிட்டு டம்ளரை டேபிளின் மேல் வைத்தார். சங்கம்புதர் பாதையின் வழியாக பெண் பார்க்க அழைத்துப்போன மணி மச்சானை விடவும் இப்போதைய மணி செழுமையான ஆளாக மாறியிருந்தார். கழுத்துச் செயினும், மோதிரமும், குழல்விளக்கு வெளிச்சத்தில் பளபளத்தன.

“ஸாரிடா மாப்ளே.. இன்னைய தேதிக்கு உன்னோட மர்க்கெட் வேல்யூ இவ்வளவுதான். இந்த மாதிரி பொண்ணைத்தான் பார்க்க முடியும்.



நிலவு உதித்து மரங்களுக்கு மேலே வந்துவிட்டிருந்தது. அஷ்டமி நிலவு. கால் அரை வட்டமாய் மஞ்சள் நிறமாய் ஒளிர்ந்தது. பின்புறத்தில் மின்னிய நட்சத்திரங்களைக் கண்ணுற்றான். அவைதான் மிருகசீரிட நட்சத்திரக் கூட்டமோ.. எழுந்து மேலே நடக்க ஆரம்பித்தான். கழுவப்பட்டது போன்ற வெளுத்த இருள் எங்கும் படிந்திருந்தது.


சுனைக்கிணற்றின் அருகே வந்து விட்டிருந்தான். சுற்றுச் சுவரின் மேலே பதிக்கப்பட்டிருந்த செம்புளி பாறைக் கற்கள் நிலவு வெளிச்சத்தில் மவுனித்திருந்தன. சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த இரும்பு வாளி சுவரின்மேல் மத்தியில் நிறுத்தப்பட்டிருந்தது. சங்கிலியின் மறுமுனை மேலேறி இரும்பு உருளைக்குள் புகுந்து குறுக்குத் தண்டவாளத்தில் பிணைக்கப்பட்டிருந்தது.


பெரும் நிலப்பாறைகளையே பக்கச்சுவர்களாகக் கொண்டிருந்த அக்கிணற்றின் பத்தடி ஆழத்துக்கு கீழே நீர் தேங்கியிருந்தது. வெயிலில் பசேலென படர்ந்திருக்கும் பாசிகள், இப்பொழுது இன்னதென வகுத்துணர முடியாத புது நிறத்தைக் கொண்டிருந்தன. சிறு கல்லொன்றை உள்ளே வீசினான். அந்த புது நிறத்துக்குள் அந்த கல்லின் அளவு கருமை பூத்து பின் வட்டமாக விரியத் துவங்கியது.

ஆந்தையொன்றின் அலறல் கேட்டது. இவன் சுனைக்கிணறுவிட்டு விலகி மேலே நடக்கத் துவங்கினான். ஒரேயொரு மொட்டைக் கோபுரத்துடன் எப்போதோ கட்டப்பட்ட கொங்கணச்சித்தருக்கான சிறிய கற்கோவிலைச் சமீபித்துவிட்டிருந்தான். நீள உருண்டையான கற்களையடுக்கி இடுப்புயரத்துக்கு கட்டப்பட்ட சுற்றுச் சுவர்களும், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த விசாலமான முன்புறப் பகுதியும் நிசப்தித்துக் கிடந்தன. உள்ளே நுழையாமல் இடப்புறமாகத் திரும்பி நடக்கத் துவங்கினான்.


உச்சியிலிருக்கும் தவக்குகைப் பாறைகள் புலப்பட்டன. பாதை செங்குத்தாக மேலே சென்றது. தவக்குகையின் கிழபுறமிருக்கும் படுக்கை கல்லை அடைந்து விட்டிருந்தான். பையை இறக்கி வைத்தான். அப்பாடா என்றிருந்தது. வழுவழுப்பான பரந்த பாறை. யாருக்காகவோ காத்திருப்பது போல குளிர்ந்து கிடந்தது. மல்லாந்த நிலையில் கைகளையும் கால்களையும் விரித்துக் கொண்டு படுத்தான். நிலவு உச்சியை நெருங்கியிருந்தது. பின்புலத்தில் மிருகசீரிட நட்சத்திரக் கூட்டம் மின்னிற்று. கண்களை மூடிக்கொண்டான். நிசப்தம் காதுகளை நிறைத்தது.



மலைப்பாதையில் ஏறிய களைப்பு நீங்கியிருந்தது. எழுந்து செல்போனில் மணி பார்த்தான்.பணிரெண்டு இருபது. இரண்டுமணிவரைக்கு இப்படியே உட்கார்ந்துகொள்ள வேண்டியதுதான். தண்ணீர் குடித்தான். சிகரெட்டைப் பற்ற வைத்தான். “சாமிக்குனு கேக்கறதால குடுக்கறேன். பாத்து சூதானமா யூஸ் பண்ணிக்க. பப்ளிக்கா அடிச்சு நீயும் சிக்கி என்னையும் மாட்டிவுட்றாத..கஞ்சாதூள் நிரப்பிய ஒரு பெரிய சுருட்டினையும், சில சிகரெட்டுகளையும் தந்தபடி கருப்பநாடார் கூறியது ஞாபகத்திற்கு வந்தது.



இதமாக இருந்தது. அந்தர ஊஞ்சலில் அமர்ந்தாடுவதேபோன்ற களிப்பும் கிளர்ச்சியும் உண்டாகி சூழலே வேறாக மாறிப் போயிருந்தது.அந்த பலகக்கல்லுமேல உட்கார்ந்தாலே கொங்கணச்சித்தரோட அருள் நம்மமேல இறங்க ஆர்ம்பிச்சிரும் மாப்ள..துரைமச்சான் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. உண்மைதான் எனத் தோன்றியது. ஆழமாக இழுத்து புகையை மெதுவாக ஊதத் துவங்கினான்.


மற்றவர்கள் இவனைப் பார்த்து ஆறுதல் பட்டுக்கொள்ள இவன் துரைமச்சானைப் பார்த்து மனதைத் தேற்றிக் கொண்டிருந்தான். இரண்டு வருடங்களுக்கு மூத்தவர். அவருக்கே இன்னும் திருமணம் அமையவில்லை நமக்கென்ன என்பது மாதிரியான சமாதானம் அவரைப் பார்க்குந்தோறும் நினைக்குந்தோறும் உண்டாகிக் கொண்டிருந்தது.


திடீரென துரைமச்சானுக்கு திருமணம் ஏற்பாடாகியது.முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களையே பெண்களும் பெண் வீட்டாரும் ஒதுக்கி வைத்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், நாற்பத்தியொரு வயதான துரைக்கு பெண் அமைந்தது மற்றவர்களுக்கெல்லாம் நம்பமுடியாத ஆச்சர்யத்தைக் கொடுத்தது.இவன் நம்பமுடியாத அதிர்ச்சிக்கு ஆளானான். வெய்யில் காயும் மொட்டைக் காட்டுக்குள் நின்ற ஒற்றை நிழல்மரமும் வேரொடு சாய்ந்து விட்டதைப்போல உணர்ந்தான். நினைத்து ஆறுதல் கொள்ள யாருமற்றவனாக அலையத் துவங்கினான்.


மறுவீடெல்லாம் போய்விட்டு வந்திருந்த துரைமச்சான் ஒரு சுற்று பெருத்திருந்தார். இவன் கண்களின் கேள்வியை உணர்ந்துவிட்டார்போல.. பரிகாரம் ஒண்ணு பண்ணுனேன் மாப்ளே.. என்றார். அதையேன் இத்தனை வருசமா பண்ணலைனு கேக்கறியா.. இப்படியொரு பரிகாரம் இருக்கற விசயமே  சமீபத்திலதான்  எனக்கு தெரிய வந்தது.

துரைமச்சானின் மூதாதையர்களுக்கு ஜோதிட ஞானம் வாய்த்திருந்தது. தலைமுறை தோறும் தொடர்ந்து வந்த அவ்வறிவு, அவருடைய அப்பாவின் அப்பா காலத்தோடு முடிவுக்கு வந்தது. மச்சானின் அப்பாவுக்கு ஜோதிட ஞானம் கைகூடவில்லை. பலன் சொல்லத் தெரியாவிட்டாலும் பஞ்சாங்கம் பார்க்க கற்று வைத்திருந்தார். நாள், கிழமை, திதி, நட்சத்திரம் , யோகமெல்லாம் ஜோராகச் சொல்லுவார். துரைமச்சானும் அவ்வாறே.



இவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்ற துரைமச்சான் பழைய சாமான்கள் போட்டிருந்த இருட்டான அறையொன்றிற்குள் கூட்டிப் போனார். கண்ணாடி ஓட்டின் வழியாகப் பாய்ந்து தரையில் நீள்சதுரமாக விழுந்திருந்த உச்சிவெயில், அவ்வறையின் இருளைப் போக்க முயற்சித்ததில் ஒளியிழந்த வெளிச்சமாக மாறி இண்டு இடுக்குகளெங்கும் தேங்கிப் போயிருந்தது. சுவரோரத்தில் இடுப்புயரத்திற்கு நின்ற அந்தக் காலத்திய கனமான இரும்புப் பெட்டியைத் திறந்தார். அதன் உள்ளறையிலிருந்து சுவடிக்கட்டு ஒன்றை எடுத்தார். அது நைந்தும் கருத்தும் போயிருந்தது. கட்டெறும்பு வரிசைகள்போல அக்கால தமிழெழுத்துகள் அணிவகுத்திருந்தது.



இது எங்க அப்பாரய்யனோடது மாப்ளே.. அவரு காலமானதுக்கப்பறம் அவரு வெச்சிட்டிருந்த புத்தகங்கள் ஓலைச்சுவடிகளையெல்லாம் இந்த பெட்டிக்குள்ள வெச்சு பூட்டுனதோட சரி. பிறகு யாரும் கண்டுக்கல. ஒருநாள் முப்பாட்டனுக பாகசாசனம் பண்ணிக்கிட்ட கறால் பத்திரம் தேவைப்படுதுனு, இந்தப் பொட்டியைத் திறந்து தேடிகிட்டிருந்தப்பதான் இந்த சுவடி கண்ணுல பட்டுது. என்னதான் எழுதியிருக்குதுனு படிச்சுப் பார்க்கலாம்னு தோணுச்சு. படிச்சேன் என்றார்.


இதுவரைக்கும் எத்தனையோ சோசியகாரர்கள் சொன்ன எத்தனையெத்தனையோ பரிகாரங்களைப் பண்ணியிருப்பினும்கூட, துரைமச்சான் சொன்ன பரிகாரம் புதுமையானதாக இருந்தது. செய்துபார்க்க ஆவல் உண்டானது. “நம்பிக்கையோட செய் மாப்ளே.. செஞ்சா பலன் கிடைக்கும்ங்கிறதுக்கு எனக்கு நடந்த கல்யாணமே சாட்சி..என்று உற்சாகம் ஊட்டினார்.

தேய்பிறை அஷ்டமி, மிருகசீரிட நட்சத்திரம், வியாழக்கிழமை, மகர லக்கினத்தில் இவன் பிறந்திருந்தான்.  மேற்படி கிழமை, திதி, நட்சத்திரமெல்லாம் ஒன்றாக வரும் தேதியை பஞ்சாங்கம் பார்த்து தேர்ந்தெடுத்த துரைமச்சான் ‘அன்னிக்கு மகர லக்கினம் நைட்டு ரண்டுலயிருந்து நாலு வரக்கும் இருக்குது மாப்ளே.. அந்த நேரத்திலதான் நீ இந்தப் பரிகாரத்தைப் பண்ண வேண்டும்என்றார். ‘அப்புறம் முக்கியமா இன்னொன்னு.. இந்த பரிகாரம் யாருக்குமே தெரியாத சித்தர் ரகசியம். நீ வெளியே யாருகிட்டயும் சொல்லக் கூடாதுஎன்றார். பேசிக்கொண்டிருந்த இவர்களுக்கு துரைமச்சானின் புது மனைவி காபி கொண்டு வந்து கொடுத்தாள். அந்தப் பெண்ணைப் பார்த்ததும் கொங்கணச்சித்தரின் அருளாசி எதையும் தரவல்லது எனும் நம்பிக்கை அதிகரித்தது.

ணி ஒன்று நாற்பது ஆகியிருந்தது. பனி இறங்கிக் கொண்டிருந்தது. கன்னக் கதுப்புகளும் காது மடல்களும் சில்லிட்டன. எழுந்து சோம்பல் முறித்தான். குனிந்தும் நிமிர்ந்தும் உடலுறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் பரவச் செய்தான். அஷ்டமி நிலவு மேற்கே சாயத் துவங்கியிருந்தது. பின்புறத்தில் மிருகசீரிட நட்சத்திரக்கூட்டம் பளிச்சிட்டது.

“ஒருவன் தான் ஜனித்த கிழமை, திதி, நட்சத்திரம், லக்னம் எல்லாம் ஒன்றாக வரும் வேளையில் சித்தர்களின் ஜீவ சமாதியிலோ அல்லது அவர்கள் நீண்ட காலம் வாசம்புரிந்த தவக்குகையிலோ, ஆடைகளின்றி கருவிலிருந்து வெளிப்படும் சிசுவே போல பிறந்த மேனியுடன், எள்ளெண்ணெய் நெருப்பெரிய, அந்த சுடரையே சித்தராக பாவித்து, சிவமூலிகைச்சுருட்டு, சோமபானம் படையிலிட்டு, தானும் சிவமூலிகை புகைத்து, சித்தமெல்லாம் சித்தர் நினைவே நிறைந்திருக்க, அவன் பிறந்த லக்ன நாழிகை எவ்வளவோ அவ்வளவு நேரமும் தியானிப்பானாயின், அவன் விதி மாற்றியமைக்கப்படும். இது சத்தியம்.கணீரென்ற குரலில் துரைமச்சான் ஓலைச்சுவடியைப் படித்துவிட்டு இவனைப் பார்த்தது நினைவுக்கு வந்தது.


பையைத் திறந்து நல்லெண்ணை டப்பா, மண்விளக்கு, மதுபாட்டில், சுருட்டு என பரிகாரத்திற்கு தேவையான பொருட்களை வெளியே எடுத்து வைத்தான். அந்த சமதளக்கல்லிலிருந்து வடக்கே நகர்ந்து பிரமாண்டமான பாறையையொட்டியே செல்லும் கரடுமுரடான ஒற்றையடிப் பாதையில் மேலே ஏறினால் குகையின் வாசல் வரும். ஒரு பாறையின்மேல் இன்னொரு பாறை கவிழ்ந்திருக்க இடைப்பட்ட சந்துதான் குகைவாயில். படுத்தவாக்கில் ஒரு ஆள் ஆழத்துக்கு கீழே சரிந்தால் விசாலமான குகையின் உள்அறை வரும்.



குகைவாயிலுக்கு வந்தவன் பூஜைப் பொருட்களை கீழே வைத்துவிட்டு உடைகளைக் களையத் துவங்கினான். அரணாக்கயிறை அறுத்து வீசினான். இடதுகை விரலில் செம்பு மோதிரம் இருந்தது. அதையும் கழட்டினான். எதுவுமற்ற நிர்வாணம் புது அனுபவமாக இருந்தது. களைந்த ஆடைகளைச் சுருட்டி மேலே ஒரு உருண்டைக் கல்லை வைத்தான். பூஜைப் பொருட்களுடன் குகையின் வாயிலை நெருங்கினான்.


பிறந்த சிசுவேபோன்ற என்னும் துரைமச்சான் சொன்ன வாக்கியம் ஞாபகம் வந்தது. அதன் தொடர்ச்சியாய் இவ்வுடலுக்கு மூலமான விந்துத் துளியின் குரொமோசோம்களிலொன்று தனக்கான சினைமுட்டையை மோதிப்பிளந்த அந்நுண்கணத்தை மனம் உணர முயன்றது. காலடியின் இருளில் மெல்லிய மினுமினுப்பாய் எதுவோ நெளிந்தது. சற்றே குனிந்து டார்ச்சை அடித்துப் பார்த்தான்.

தூக்கும் கனம்கொண்ட ஒரு பெரிய உருண்டைக் கல்லுக்கு அடியே சுருட்டி வைக்கப்பட்டிருந்தது அரக்குகலர் பார்டரில் தங்க ஜரிகையிட்ட மாம்பழவண்ண பட்டுப்புடவை.
    

    

No comments: