Thursday, 27 May 2021

 

                                                                                           எருமை நாயகம்

 

கால்வட்டம் அரைவட்டம் முக்கால்வட்டமென வளர்ந்து  முழுவட்டமுமாக சூரியன் வெளிப்பட்டபோது சாமிநாதன் தார்ச்சாலையில் தெற்கே போய்க் கொண்டிருந்தான்.  இன்றைக்குக் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. வழக்கமாக இந்தநேரத்திற்கு வாய்க்கால்ப் பாதையில்  சென்றுகொண்டிருப்பான்.    

 

உதய கணத்தின் கதிரொளியை ஏதோவொரு  பெயரை வைத்து சாமிநாதனின் அப்பிச்சி அழைப்பதுண்டு.  இதுபோலவே காலை முதல் மாலை வரை அவர் ஒவ்வொரு நேரத்து வெயிலுக்கும் ஒரு பெயரைச் சொல்லுவார். அந்த ஒவ்வொருவிதமான வெயிலுக்கும் ஒவ்வொருவிதமான பெயருடைய தேவதை அதிபதியாக இருக்கிறாள் என்றும் சொல்லுவார்.   எல்லாமே வாயில் நுழையாத நினைவில் வைத்திருக்க முடியாத பெயர்கள். அந்தப் பெயர்களெல்லாம் சாமிநாதனுக்கு மறந்துவிட்டது. ஆனால்,உதயகணத்தின் கதிரொளியில் நின்று அதன் தேவதையை வணங்கிவர பிரிந்து போனவர்கள் திரும்ப வந்து சேருவார்கள் என்று அப்பிச்சி சொல்லிக் கொண்டிருந்தது மட்டும் மறக்கவேயில்லை.

 

போன புரட்டாசியோடு சாமிநாதனுக்கு இருபத்தியொன்பது முடிந்து விட்டிருந்தது. கடந்த ஆறு நாட்களை நீக்கிவிட்டுப் கணக்கிட்டால்  இந்த முப்பது வருட வாழ்க்கையில் சாமிநாதன் புலரிக்கு முன்பே துயிலெழுந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கடைசியாக போன மாசி மாதம் பதிமூணாம் தேதியன்று அதிகாலையிலேயே எழுந்திருந்தான். அன்றுதான் அவனுக்குக்  கல்யாணம் நடந்தது. காலை ஆறு முதல் ஏழு மணி வரையிலான முகூர்த்தத்தில் தாலி கட்டும் நிகழ்வை வைத்திருந்தார்கள். அதற்குமுன்பு தன்னுடைய இருபத்தியொன்றாவது பிராயத்தின் வைகாசி மாத அதிகாலையொன்றிலும் சாமிநாதன் நேரமே கண் விழித்திருக்கிறான். அன்றைக்குத்தான் தங்களின் ஏகபுத்திரனான சாமிநாதனுக்கென்றே அவனுடைய பெற்றோர்கள் பார்த்துப் பார்த்து இழைத்து இழைத்துக் கட்டிய இரண்டு தளங்களையுடைய பங்களாவின் கிரகப் பிரவேசம் நிகழ்ந்தது.

 

புலரியின் ஒளி எங்கும் பரவியிருந்தது. சற்று நேரத்தில் இந்த பொன்னிறம் மாறிவிடும். பிறகு வேறொரு தேவதை அந்த வெயிலை ஆளத் துவங்கிவிடுவாள். கிழபுறமிருந்த காட்டுக்குள் வெள்ளைவேலாமர உச்சியெங்கும் நிறைந்திருந்த சிறுசிறு உருண்டைகளான மஞ்சள்பூக்களின்மேல்  பரவியிருந்த காலையொளியின் பொன்னிறம் துலக்கமாக தெரிந்தது. நடப்பதை நிறுத்திய சாமிநாதன் அந்த பொன்னிறத்தை பார்த்துக்கொண்டே நந்தினியை நினைத்தபடி பெயர்தெரியாத அந்த பொன்னொளிக்கு அதிபதியான தேவதையிடம் வேண்டிக்கொள்ளத் துவங்கினான்.  பொன்வெயிலின் தேவதையே.. நந்தினியை என்னுடன் சேர்த்துவைத்துவிடு..என திரும்பத் திரும்ப மூன்றுமுறை சொல்லிவிட்டு மறுபடியும் நடக்க ஆரம்பித்தான்.

 

நந்தினியை நினைக்கும்போதெல்லாம் ­– அவளை நினைக்காத பொழுதென்று இந்த நான்கு மாதங்களில் எதுவுமில்லை – ஆளுயரத்திற்கு எழும்பி படமெடுத்து நிற்கும் மஞ்சள் நிறமான ராஜநாகத்தின் சித்திரம்தான் மனதில் தோன்றுகிறது. உண்மையில் மஞ்சள்வண்ணம்கொழிக்கும் ராஜநாகமெதையும் சாமிநாதன் நேரிலோ ஒளியொலிக்காட்சிப் படங்கள் எதிலுமோகூடப் பார்த்ததில்லை. ஆனாலுமேகூட நந்தினியைப் பற்றி நினைக்கும்பொழுது அப்படியான ராஜநாகம்தான் ஆளுயரத்திற்கு எழும்பி படமெடுக்கிறது.

 

சாமிநாதனுடைய பெற்றோர் அவனுடைய இருபத்தி மூன்றாவது வயதிலிருந்து தங்களுக்கான மருமகளை வலைவீசித் தேடத்துவங்கியிருந்தனர். ஆரம்பத்தில் அந்த வலை பெரியபெரிய ஓட்டைகளை உடையதாகயிருந்தது.  

 

ஏழைக்குடும்பத்தின் பெண்பிள்ளைகளெல்லாம் அவ்வோட்டைகளினூடே ஒழுகியொழுகிப் போனபடியிருந்தனர். நிகர்வசதியுடைய குடும்பத்தின் பெண்களுக்கோ சாமிநாதனின் தோற்றம் எந்தவிதமான உளக்கிளர்ச்சிகளையும் உண்டாக்கவில்லை. தலையெது காலெது என்று கண்டுபிடிக்க முடியாதவண்ணம் அடிக்கும் உச்சிக்கும் ஒரேமாதிரி இருப்பவனைக் கண்டால் எப்படித்தான் இளம்-உளங்கள் கிளர்ச்சியாகும்? நேரிடையாகச் சொல்லாமல் தடம்வழி சகுனம் சரியில்லையென்றும் ஜாதகப் பொருத்தங்கள் போதவில்லையென்றும் ஏதேதோ காரணங்களைச் சொல்லித் தவிர்த்தனர். இப்படி அந்தஸ்துக்குத் தகுந்தமாதிரியே தேடிக்கொண்டிருந்தால் பையனுக்கு கல்யாணமே பண்ணமுடியாது என பயந்துபோன சாமிநாதனின் பெற்றோர்கள் ஒரு கட்டத்தில் வசதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை பெண்ணுக்கு படிப்பும் அழகும் இருந்தால்கூட போதும் என வலையை வீசத் துவங்கினர். பெரியபெரிய ஓட்டைகள் அத்தனையும் முற்றிலுமாக அடைக்கப்பட்ட வலையாக அது இருந்தது. 

 

இந்தப் பொண்ணுக்கு இன்னும் ஒரு வருசம் படிப்பு பாக்கியிருக்குது. உங்க வசதி வாய்ப்புகளைப் பத்திச் சொன்னதுமே புள்ளையோட அப்பா அம்மாவுக்கு ஆசை வந்திருச்சு. படிப்பை பாதியிலேயே நிறுத்திபோட்டு கல்யாணம் பண்ணிக்கொடுக்கவும் தயார்தான். ஆனா புள்ளைதான் ஒரு டிகிரியாவது முடிக்காமக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு அடம்புடிச்சிட்டிருக்குது. கல்யாணத்துக்கு அப்புறமும் பாக்கியிருக்கற படிப்பை நீங்க படிக்க வெக்கறதா இருந்தா பேசிப் பார்க்கலாம் என  நந்தினியின் ஜாதகத்தைக் கொடுத்த புரோக்கர் கூறியிருந்தார்.  

 

ஜாதகம் பொருந்தியிருந்தது. அதைவிட நந்தினியின் அழகு எல்லோருக்கும் பிடித்துப் போயிருந்தது.  மகாலட்சுமி மாதிரி இருக்கா.. அதேசமயம் தான் மகாலட்சுமி மாதிரிங்கிற உண்மையை அறியாத அப்பாவியாகவும் இருக்கா.. இப்படி இருக்கிறதுதான் நல்லது..  தானொரு அழகிங்றத அறிஞ்ச பொண்ணுகளெல்லாம் பயங்கர ஆணவத்தோட இருப்பாளுக…  ஊட்டுக்காரன் மாமியாரு மாமனாரு சொல்றதையெல்லாம் கேட்கமாட்டாளுக.. நமக்கு இப்படிப்பட்ட பொண்ணுதான் வேணும். தாராளமா கல்யாணத்துக்கு அப்புறமும் டிகிரி முடிக்கிற வரைக்கும் காலேஜ்க்குப் போய்க்கட்டும் என சாமிநாதனின் அம்மா கூறினாள்.  

 

ஒரு மகாலட்சுமி தானொரு மகாலட்சுமியென்பதை உணர்வதற்கு எவ்வளவு நேரமாகிவிடப் போகிறது? அது எப்போது வேண்டுமானாலும் நிகழ்ந்துவிடலாமே? என்றெல்லாம் யாருக்கும் கேள்விகள் உண்டாகவில்லை. என்ன இருந்தாலும் சாமிநாதனின் அம்மா ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி அல்லவா? அவரது பணிக்காலத்தில் குடியிருக்கும் மனைக்கு பட்டா கேட்டுவரும் சாமானியனிலிருந்து குளம் கண்மாய்களை ஆக்கிரமித்து பிளாட்டுகள் போட்டு விற்கும் அரசியல்வாதிகள்வரை எத்தனைபேரை பார்த்திருப்பார்? அத்தனை பேர்களையும் திறம்படக் கையாண்டு அவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துகள்தான் என்ன கொஞ்சமா? நஞ்சமா?  அவரே சொல்லிவிட்டாரெனில் பிறகதில் மாற்றுக் கருத்துக்கு இடமேது? ‘அப்படியே ஆகட்டும்என்றார் சாமிநாதனின் அப்பா. அவர் ஒரு மேநிலைப் பள்ளியின் ஓய்வுபெற்ற உடற்பயிற்சி ஆசிரியர்.     

     

திருமணத்தன்று காலையில் முகூர்த்தம் முடிந்ததும் பொண்ணும் மாப்பிள்ளையும் உண்டான வழக்கத்தின்படி மாப்பிள்ளையின் ஊருக்குப்போய் அங்கிருந்த பிள்ளையார் கோவிலில் கும்பிட்டுவிட்டு, பிறகு மாப்பிள்ளையின் வீட்டுக்குப்போய் நல்லநேரம் முடிவதற்குள்ளாகவே பால்பழமெல்லாம் சாப்பிட்டுவிட்டு மண்டபத்திற்குத் திரும்பியிருந்தனர். மதியம் வரவேற்பு முடிந்ததும் பெண்வீட்டார்களும் உண்டான வழக்கத்தின்படி மணமக்களை தங்கள் வீட்டிற்கு அழைத்துச்செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்தப் பிரச்சனை வெடித்தது.

 

 

 

‘உங்களுக்கெதுக்கு சிரமமுங்க சம்பந்தி..? பொண்ணுமாப்பிளையை எங்க வீட்டுக்கே கூட்டீட்டுப் போயிக்கறோமே..? என்று சாமிநாதனின் அம்மா கூறினாள். இது பெண் வீட்டு உறவினர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியது. ‘இதிலென்ன சிரமமுங்.. அப்படியெல்லா ஒன்ணுமில்லீங்..என்று நந்தினியின் அப்பா மெல்லிய தயக்கத்துடன் மறுத்துரைத்தார்.

 

முன்தினம் மதியத்திலிருந்து கப்பல் போன்ற கார்களில் வந்துவந்து இறங்கிய மாப்பிள்ளை வீட்டு உறவினர்களையும் அவர்தம் செழிப்புகளையும் பார்த்துப்பார்த்து ரைஸ்மில் கூலியான அந்த எளிய மனிதர் மிரண்டுபோய்க் கிடக்கிறார் என்பது அவரது உடல்மொழிகளில் தெரிந்தது.  ‘அதெப்படீங்க..? கல்யாணத்தன்னிக்கு ராத்தங்கல் பொண்ணூட்லதானுங்ளே..? சாந்திமுகூர்த்தம் பொண்ணூட்ல நடக்கிறதுதானுங்ளே மொறை..?என்று நந்தினிக்கு அத்தை முறையாகும் ஒரு உறவினர் கூறினார். அவரது குரல் உயர்ந்திருந்தது. மாப்பிள்ளை தரப்பாரையும் அவர்தம் பவிசுகளையும் பார்த்துப்பார்த்து அந்த அத்தைக்காரி மனம்வெம்பிக் கிடக்கிறாள் என்பது அவளது உடல் மொழிகளில் தெரிந்தது.

 

‘அதுக்கில்லீங்க… அங்க வீடு ரொம்ப சிறுசா இருக்கு.. நம்ம பையன் சின்ன வயசிலயிருந்தே தனி ஏசி ரூம்ல கட்டில் மெத்தைலயே தூங்கிப் பழகீட்டான்.. அங்க தங்கறதுக்கு சிரமப்படுவானேனு பார்த்தேன்..என்று சாமிநாதனின் அம்மா கொடுத்த விளக்கம் பெண்வீட்டு உறவு வகையறாக்களை –குறிப்பாக அந்த அத்தைக்காரப் பெண்மணியை மூக்கைச் சொறிந்து விட்டதுபோல் ஆகிவிட்டது. ஓஹோ… வூடு சிறுசாப் போச்சா..? ஊடு சிறுசு குடும்பம் சிறுசுங்கிறதெல்லாம் தெரிஞ்சுதானே பொண்ணுக் குடுன்னு வந்து நின்னீங்க..?என்று குதிக்கத் துவங்கினாள். பிரச்சனை பெருசாகிக் கொண்டிருப்பதையுணர்ந்த அந்த அத்தையின் கணவர்  அவளை அதட்டி வெளியே இழுத்துக் கொண்டு போனார். இருதரப்பிலுமிருந்த வயதில் மூத்தவர்கள் தலையிட்டு மத்தியஸ்தம் பேச நிலமை ஒருவழியாக அப்போதைக்கு சீரானது.               

 

சாமிநாதன் வாய்க்கால்ப்பாதையில் மேற்கே நடந்து கொண்டிருந்தான். தென்புறம் கிழமேலாக நீண்டுகிடந்த கிளுவை வேலிக்கு அப்பாலிருந்த கொறங்காட்டு மரங்களுக்குள்ளிலிருந்து செம்போத்துகளும் கொன்னவாய்க் குருவிகளும் உற்சாகக் குரலெழுப்பியபடியிருந்தன. காரைப் புதர்களடர்ந்த பள்ளத்துக்குள்ளிருந்து மயில்கள் அகவுவதும் கேட்டது. வேலிவேப்பனிலிருந்து இறங்கிய அணிற்பிள்ளையொன்று ஜீப்ரோட்டிலேயே கிழக்கே வந்தது இவனைப் பார்த்ததும் சட்டென திரும்பி வாய்க்காலுக்குள் இறங்கி ஏறி மறுபுறமிருந்த கிளுவை வேலிக்குள் புகுந்து மறைந்தது. காலையிளவெயிலின் செம்பொன் நிறம் வெண்பொன் நிறமாக மாறியிருந்தது. பார்த்தபடி இருக்க இருக்கவே பார்வைக்குப் புலப்படாமல் வெயிலின் நிறம் மாறிவிட்டதாகத் தோன்றியது. நந்தினியின் உறவுமேகூட இப்படித்தான். மனசுக்கும் புத்திக்கும் புலப்படாமலேயே வண்ணங்கள் திரிபடைந்து திரிபடைந்து கடைசியில் பிரிவென மாறி நிற்கிறது என நினைத்துக் கொண்டான். தலையைக் குனிந்தபடியே பலதையும் யோசித்தவாறு  நடந்து கொண்டிருந்தவன் அந்த சத்தங்களைக் கேட்டு திடுக்கிட்டான். எருமையொன்று கத்தும் சத்தம். மனிதனொருவர் அதட்டும் சத்தம்.

 

ரகு அண்ணனின் குரலைப்போலத்  தோன்றியது. ரகு அண்ணன் உள்ளூரைச் சேர்ந்தவர்தான். பங்காளி முறையாகிறது. சாமிநாதனிடம் சொந்த அண்ணனைப் போலவே பாசமும் உரிமையும் பாராட்டுபவர். பெரிய காட்டுமுருங்கை மரத்தையொட்டி தெற்கே போகும் இட்டேறிக்குள்ளிருந்துதான் அந்த மகிஷமானுட கூச்சல் வந்தபடியிருந்தது. வாய்க்கால்ப் பாதையில் போவதைத் தவிர்த்துவிட்டு இட்டேறிக்குள் இறங்கி தெற்கே நடக்கத் துவங்கினான். சற்று தூரம் போனதும் எதிர்படும் வளைவில் மேற்கே திரும்பினான். ரகு அண்ணனேதான்.  கண்டமேனிக்குத் திட்டியபடியே வேரோடு பிடுங்கியெடுத்த ஆவாரஞ்செடியைக் கொண்டு எருமையைப் போட்டு அடி வெளுப்பிக் கொண்டிருந்தார். மூக்கணாங்கயிறை அவரது இடதுகை கெட்டியாகப் பற்றியிருந்ததால் எருமையின் தப்பியோடும் முயற்சிகள் எடுபடவில்லை.

 

‘ஙொய்க்.. ஙொய்க்என்று கத்தியபடிக்கெ உடலின் பின்புறத்தை மட்டும் இப்படியும் அப்படியுமாகத் திருப்பித் திருப்பி தப்பிக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

 

சாமிநாதனைப் பார்த்ததும் அடிப்பதையும் திட்டுவதையும் நிப்பாட்டியவர் ஆவாரஞ்செடியைக் கீழே வீசியெறிந்தார். அடி விழுவது நின்றதும் எருமை கத்துவதையும் நிறுத்தியிருந்தது. கறுத்த அதன் முதுகெல்லாம் அடிவாங்கி உண்டாகியிருந்த வெள்ளைத் தடங்களின்மேல் ஆவாரையின் மென்மஞ்சள் பூக்களும் சிறுபச்சையிலைகளும் உதிர்ந்து கிடந்தன. அடிவாங்கிய எருமையைவிட அடித்த ரகுஅண்ணன் களைத்துப் போயிருந்தார். மேல்மூச்சுகீழ்மூச்சுவாங்க செல்போனை எடுத்து எண்களை அமுக்கி காதுக்குக் கொண்டுபோனவர் ‘ டேய் பழனிச்சாமி… நீ வரவேண்டா… அங்கியே வேலையப் பாரு.. தம்பியொருத்தன் வந்துருக்கிறான்.. நான் அவனையே கூட்டீட்டுப் போய்க்கிறேன்என்றார்.  

 

“என்னாச்சுங்ண்ணா… எருமையப்போட்டு இந்த அடி அடிச்சிட்டிருக்கீங்க..?

 

கெடாவுக்குக் கத்துதேன்னு புடிச்சிட்டு வந்தன்டா தம்பி.. இதுவரக்கும் ஒழுக்கமாத்தான் வந்துது.. இவ்வடத்தால வந்ததும் மொசலொண்ணு வேலிக்குள்ளிருந்து குபீர்னு முட்டீட்டு ஓடுச்சா.. பயிந்துபோயி அப்படியே நின்னுக்குச்சு.. முடுக்குனாலும் போகமாட்டீங்குது இழுத்தாலும் வரமாண்டீங்குது.. அப்புறம் புடிச்சு சாத்தாம என்ன பண்றது? நம்ம பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்குதல்ல..? செரிசெரி.. அந்த ஆவாரமாத்தை எடுத்துக்கோ.. நான் மின்னுக்கு இழுத்துட்டுப் போறேன் நீ பொறவுக்கு முடுக்கீட்டு வா..

 

அண்ணா.. நான் வாக்கிங் வந்தனுங்ண்ணா..

 

இதுவும் வாக்கிங்குதான்டா தம்பி…  உன்னைய எருமையை முடுக்கிட்டு பின்னாலயே நடந்துட்டுவாடான்னுதான் சொல்றேன்.. எருமைமேல உக்காந்துட்டுவாடான்னு சொல்லல.. புரியுதா?

 

 

அதுக்கில்லீங்ண்ணா.. திரும்பி வாரதுக்கு ரொம்ப லேட்டாயிருமோன்னு யோசிச்சேன்

 

அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.. வழக்கமா நீ வூடு போய்ச்சேர்ற நேரத்துக்கே போயிரலாம்.. அப்படியே கொஞ்சம் லேட்டானாத்தான் இப்ப என்ன?  கரக்டா எட்டு முப்பதுக்கு கடைய தொறந்து வெக்கவேண்டிய நானே  இன்னும் இங்க இருக்கேன். உனக்கென்ன? போயி மூக்குமுட்ட சாப்புட்டுட்டு விட்டத்தையோ டிவியையோ செல்போனையோ பார்த்துட்டு படுத்திருக்கிறவந்தானே? பேசாம பின்னாலயே வா.. எருமைகால்ல நடந்தாலாச்சும் இந்த உடம்பு குறையுதான்னு பார்ப்போம்

 

அடிதின்னதில் எருமைக்குப் புத்தி வந்துவிட்டதுபோல. தலைக்கயிற்றைப் பிடித்தபடி முன்னால் நடந்து கொண்டிருந்த ரகுஅண்ணனை சாதுவாக பசுபோல பின்தொடர்ந்தது. கையில் வைத்திருந்த ஆவாரஞ்செடிக்கு எந்த வேலையுமில்லை. சாமிநாதன் எருமையைப் பின்தொடர்ந்தான்.

 

“ஏனுங்ண்ணா… வழக்கமா ஊசிதானே போடுவீங்க? கெடா சேத்தறதுக்கெல்லாம் போகமாட்டீங்ளே..

 

 

 

 

ஆமாந்தம்பி… ஊசி போடறதுதான் வழக்கம். மிந்தியெல்லாம் ஒரே ஊசீல செனைப் புடிச்சிக்கும். இப்பல்லாம் அப்படியில்லே.. இந்த எருமைக்கே இந்த நாலு மாசத்துல மூணு ஊசி போட்டாச்சு.. நேத்து சாயந்திரத்திலயிருந்து மறுபடியும் காளைக்கு கத்த ஆரம்பிச்சிருச்சு.. செரி.. இந்தக் கெட்டாப்பு கெடா சேத்திப் பார்ப்போமேனு புடிச்சிட்டு வந்தேன்.. கெரகம்.. மொசல்வேற குறுக்க போயிருக்குது.. கெடாவுக்காவது செனை நிக்குமா என்னனு தெரியல.. பார்ப்போம்.

 

இங்க யார்ங்ண்ணா எருமைக்கெடா வளர்த்துறா? ரொம்ப தூரப் போகோணங்ளா..?

 

அம்மாபாளையத்துல ஒரு தோட்டத்துல வளர்த்துறாங்க.. எப்படியும் இன்னும் மூணு கிலோமீட்டர் வரும்

 

இட்டேறி அகலமான மண்பாதை ஒன்றிற்கு வந்து சேர்ந்தது. எருக்கிலைகளும் ஆவாரைகளும் நாய்த்துளசிகளும்  வெட்டைச் செடிகளும் இரு மருங்கிலும் பூத்துக் கிடந்த மண்பாதையில் ரகுஅண்ணன் மேற்கே திரும்பி நடக்கத் துவங்கினார். பயம் முற்றிலும் போய்விட்டதுபோல. எருமை இயல்பான நடைவேகத்திற்கு வந்திருந்தது. முன்னால் செல்லும் ரகுஅண்ணன் இழுக்கவேண்டிய அவசியமில்லாத அளவுக்கு அவர் கையில் பிடித்திருந்த எருமையின் தலைக்கயிறு தொங்கல் விழுந்து இடம்வலமாகத் ஆடத் துவங்கியிருந்தது. காலையிளவெயில் ஏறுவெயிலாக மாறி வெப்பத்துடன் தாக்க ஆரம்பித்தது. சாமிநாதனின் டிசர்ட்டும் பெர்முடாசும் வியர்வையில் நனைந்து நிறம்மாற ஆரம்பித்தன. மண்பாதையின் இரண்டு புறமும் வெறும் நிலமாக விரிந்து கிடந்த காடுகளில் உயர உயரமான காற்றாலைக் காற்றாடிகள் தென்மேற்கு முகமாகத் திரும்பி சுழன்றபடியிருந்தன.

 

“அப்புறம் தம்பி… கொழுந்தியா என்னங்கிறா? குடும்பம் நடத்த வாரம்ங்கிறாளா? இல்லே.. டைவர்சே பண்ணிக்கிலாம்கிறாளா..?

 

வர்றம்னுதான் சொல்றாளாமாண்ணா.. சில கண்டிசன்ஸ் போடறாளாமா.. அதுக்கெல்லா ஓக்கேன்னா டிகிரியை கம்பிளீட் பண்ணீட்டு வாரம்ங்கிறாளாமா..

 

என்னது சொல்றாளாமா போடறாளாமாவா..? அப்ப உங்கூடயுமே பேச்சில்லையா..? ரண்டுபேரும் போன்லயாவது பேசீட்டிருப்பீங்கன்னல்லொ நெனச்சுட்டிருக்கேன்..

 

 என்னட நெம்பரைப் பார்த்ததும்தான் டக்குன்னு கட் பண்ணியுட்டர்றாளே..? அப்புறமெங்கபோயி போன்லபேச..? ஒருதடவை நேர்லயேபோயி பார்த்துப் பேசுவோம்னு மெடிக்கல்மூர்த்தியைக் கூட்டீட்டு காலேஜுக்கே போனேன். சந்திக்கவே விருப்பமில்லை.. எதாயிருந்தாலும் ஊட்லபோயி பேசிக்கங்கனு வாட்ச்மேனுகிட்ட சொல்லியுட்டுட்டா.. இப்போதைக்கு பைசூல்பண்ண போயிட்டிருக்கிற மூணாவது மனுசங்கமூலமாத்தான் பேச்சுவார்த்தை நடந்துட்டிருக்குதுங்ண்ணா..

 

ஓ..

 

எங்கம்மாகூட இருக்கமுடியாதாமா.. தனிக்குடித்தனம்தான் போகணுமாமா..

 

ம்ம்..

 

“அவ தம்பிக்காரன் படிச்சிமுடிச்சி வேலைக்குப் போகறவரைக்கும் இவளை வேலைக்குப் போக அலோவ் பண்ணனுமாம்.. சம்பளத்தைக் கேட்கக் கூடாதாம். அந்த சம்பளத்துலதான் தம்பியை படிக்கவெக்கப் போறாளாம்

 

அவ வேலைக்குப்போயி அந்த சம்பளக்காசுலதான் படிக்கவெக்கோணமா என்ன? காலேஜ் பீஸ்தானே..? நீயே கட்டியுட்டுட்டுட்டீன்னாப் போச்சு… இங்க உங்கிட்டயென்ன இல்லாமயா கெடக்குது?

 

அது ஆகாதாம்ண்ணா.. எங்கம்மா காலத்துக்கும் சொல்லிக் காட்டீட்டே இருப்பாளாம்.. அதையெல்லாம் அவளால கேட்க முடியாதாம்..

 

அது வாஸ்தவந்தான்.. சித்தி அப்படியெல்லாம் சொல்லக் கூடிய ஆளுதான்…. ஒண்ணுமில்லாத வூட்ல பொண்ணு எடுக்கப்போறாங்னப்பவே ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க… வேலைக்குப் போன காலத்திலிருந்து ரண்டுகையிலயும் சம்பாதிச்சு நாலாப்பக்கமும் சொத்துச்சேத்தி வெச்சிருக்கிற மணியாரம்மாகிட்ட  இல்லாதவனூட்டுப்  புள்ளைவந்து காலத்துக்கும் குப்பை கொட்ட முடியுமான்னு? கல்யாணத்தன்னிக்கு பொண்ணுமாப்பிள்ளை மண்டபத்தைவிட்டுக் கிளம்பும்போது எம்பையன் ஏசீலதான் படுப்பான் தனி ரூம்ல கட்டில் மெத்தைலதான் படுப்பான் பொண்ணு வீட்டுக்கெல்லாம் அனுப்ப முடியாதுனு ஆர்ப்பாட்டம் பண்ணுனப்பவே நானும் நெனச்சேன்.. சித்திக்காரி மகனையும் மருமகளையும் நல்லபடியா பொழைக்க வுடமாட்டான்னு.. உன் சம்சாரத்தோட அவ அப்பன் ஆத்தாவோட அவ சொந்தக்காரங்களோட மனநிலையவெல்லாம் கொஞ்சங்கூடப் புரிஞ்சிக்காம நீயும் உங்கம்மாவை எதுவும் எதுத்துப் பேசாம  மண்பூதங்கணக்கா நிக்கும்போதே நெனச்சேன்.. அந்தப் புள்ளை உன்னை சீக்கிரமே காறித்துப்பீட்டுப் போகப்போறான்னு… எல்லாமே நடந்துருச்சு.. ஆனா இவ்வளவு சீக்கிரம் கட்டி ஆறே நாள்ல காறித் துப்பீருவான்னு நான் நெனைக்கவே இல்லடா தம்பி… எப்படியும்  ஆறுமாசம் ஒரு வருசமாவது தாக்குப் பிடிப்பான்னு நெனச்சேன்…

 

அண்ணா…

 

என்ன நொண்ணா..? நேத்து உங்கப்பா… அதாவது எங்க சித்தப்பன் கடைக்கு வந்துருந்தாரு.. கெழக்காலத் தோட்டத்துல புதுசாப்போட்ட போர்க்குழிக்கு குழிமோட்டார் வேணும்னு சொல்லீட்டுப் போக வந்துருந்தாரு.. அவரப்பார்த்தாத்தான்டா எனக்கு பாவமா இருக்குது… இந்த எடம் வந்தப்பவே உங்க அம்மாகிட்டே அவரு சொன்னாராமா.. ‘வேணாம் விசாலாட்சி.. கொஞ்சம் முன்னபின்ன லேட்டானாலும் நம்ம தகுதிக்குத் தகுந்தமாதிரியே பார்த்துக்கலாம்.. இல்லாதவனூட்டுச் சம்பந்தம் உன்னட சுபாவத்துக்குச் செட்டாகதுன்னு..’ ‘பையனுக்குப் புடிச்சுப்போச்சு.. கட்டுனா இந்தப் புள்ளையத்தான் கட்டுவேனு புடிவாதமா இருக்கான் பேசாம கட்டிவெச்சிருவோம் விடுங்கன்னு உங்கம்மா சொல்லுச்சாம். பேசாமக் கட்டிவெச்சிருவோம்னு சொல்லுச்சே… கல்யாணத்துக்கப்பறம் பேசாம இருந்திருந்தா இத்தனை பிரச்சனை வந்திருக்குமா? இல்லே.. நீதான் நொட்டுனா அந்தப் புள்ளையவேதான் நொட்டோனம்னு உறுதியா இருந்தியே… அதே உறுதியோட கல்யாணத்துகப்பறமும் அந்த புள்ளையோட சைடு நியாயத்துக்கெல்லாம் சப்போர்ட் பண்ணீருந்தீனா இத்தன பிரச்சனை வந்துருக்குமா..

 

அண்ணா..    

 

என்ன நொண்ணா.. நீ எதுவும் பேசப்படாது. நாந்தான் பேசுவேன்.. எப்படா தனியா சிக்குவான் புடிச்சு காய்ச்சியுடலாம்னு நெனச்சிட்டேயிருந்தேன். இன்னிக்குச் சிக்கீட்டே.. நான் சொல்லப் போறதெல்லாம் உன் நல்லதுக்குத்தான்டா தம்பி.. எல்லாத்தையும் பொறுமையாக் கேட்டுட்டுப்போயி ஆற அமர உக்காந்து யோசனை பண்ணிப் பாரு.. அர்த்தம் புரியும். அந்தப் புள்ளை வரமாட்டேனு அடம்புடிக்கிறதுக்கு உங்கம்மாவோட உருட்டு மெரட்டெல்லாம் ஒரு காரணமேயில்லை. இந்த உலகத்துல எந்த மாமியாருக்காரிதான் தன் மருமகளை நல்லமொறையா வெச்சிருக்கிறா..? உங்கம்மா மட்டும் வெச்சுக்கிறதுக்கு..? அவ வராம இருக்கறதுக்கு முக்கியக் காரணமே உன்னைப் புடிக்கலீங்கிறதுதான். உன்னை ஏன் அவுளுக்குப் புடிக்காமப் போச்சு தெரியுமா?

 

அண்ணா…

 

சொல்றங் கேளு.. தலையெது காலெதுன்னு தெரியாத அளவுக்கு நீ பீப்பாய் மாதிரி பீத்தச்சொரக்காயி மாதிரி இருக்கிறதுனாலயெல்லாம் அவுளுக்குப் புடிக்காமப் போகல.. அதையெல்லாம் ஏற்கனவே தெரிஞ்சுதானே கல்யாணம் பண்ணுனா..? அப்புறமெப்படி புடிக்காமப் போகும்?

 

நீ நெனைக்கறமாதிரி பர்ஸ்ட்நைட் அன்னைக்குப் முழுசாச் செய்யாம பாதீலயே ஒழுக்கீட்டுப் திரும்பிப் படுத்துக்கிட்டயே.. அதுனாலயும் அவளுக்கு உன்னைப் புடிக்காமப் போகலே.. இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்னு தோணுதா..? தெரியும்டா.. எல்லாம் தெரியும். இந்த விசயத்தை மெடிக்கல் மூர்த்திகிட்டச் சொல்லி தண்ணி ரொம்ப நேரம் வராம இருக்கறதுக்கான மாத்திரையை வாங்கீட்டுப் போனதும் தெரியும்.  ஏற்கனவே சளிபுடிச்சு மூக்கடச்சுக்கிட்டு இருந்ததால  இன்னிக்கு வேண்டாமேனு சொன்னதையெல்லாம் கேக்காம மாத்திரயைப் முழுங்கீட்டு அந்த புள்ளையப் போட்டு நசுக்கு நசுக்குனு நசுக்கி எடுத்து ஒரேயடியா மூச்சப்புடிக்கப் பார்த்ததும் தெரியும்..

 

அண்ணா.. அந்தக் கருமம்புடிச்ச நாயத்தையெல்லாம் வுட்டுத் தொலைங்ண்ணா.. நம்ம காம்ப்ளக்சுல வாடகைக்கு இருக்கறவனாச்சே நம்மாளாச்சேன்னு எதார்த்தமா நம்பி அந்த மெடிக்கல்காரங்கிட்டப் போயி யோசனை கேட்டதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். ஒருத்தர் பாக்கியில்லாம ஊருக்குள்ள எல்லாருகிட்டயுமே சொல்லிப் போட்டானாட்ட இருக்குது… இருக்கட்டுங்க… இன்னிக்குப்போயி அவனை தூக்கிப்போட்டு மிதிக்கறன் பாருங்க..

 

 எதுக்கு..? தெரியாம இருக்கற பாக்கி ஒண்ணுரெண்டு பேருக்கும் இந்த விசயம் தெரிஞ்சுபோயி அவுங்களும் பொச்சுல சிரிக்கிறதுக்கா.. தூக்கிப்போட்டு மிதிக்கறதும் வேண்டாம்.. பொழுதானா அவுங்கூட சேர்ந்து தண்ணியடிச்சிட்டு மப்புல நேருநெதானமில்லாம எல்லாத்தையும் உளறிக் கொட்றதும் வேண்டாம்.. புரியுதா..?

 

செரிங்ண்ணா..

 

அண்ணியோட சொந்தக்காரப் பொண்ணு ஒண்ணு காலேஜ்ல நந்தினிகூடத்தான் படிச்சிட்டிருக்குது. நாலு நாளைக்கு முன்னால ஒரு விஷேசத்துக்காக ஊருக்குப்போன அண்ணிகிட்ட அந்தப் பொண்ணு உங்க ரெண்டுபேரு சம்பந்தமாவும் பேசுச்சாம். அதுலயிருந்து என்ன தெரியவருதுனா நீ நெனைச்சிக்கிட்டு இருக்கிறமாதிரியான விசயங்கள் எதுவுமே காரணம் கிடையாது. சம்பந்தி விருந்தன்னிக்கு தன்னோட அப்பா அம்மா சொந்தக்காரங்களோட ஊருக்குப்போன நந்தினி அங்கியே தங்கிக்கிட்டதுக்குக் காரணம் அந்த  விருந்துல நடந்த சில விசயங்கள்தான். அதிலும் குறிப்பா அன்னிக்கு நீ நடந்துக்கிட்ட விதம்தான். அவளுக்கு இவ்வளவு பெரிய மனவிலகலை உண்டாக்கிருச்சு..

 

அன்னிக்கு அந்தளவுக்கு அப்படியெல்லா பெருசா எதுவும் நடக்கலியேங்ண்ணா… விருந்தெல்லாம் முடிஞ்சு கெளம்பும்போது பிரியஞ்சந்தோசமாத்தான் எல்லோரும் கிளம்பிப் போனாங்க. என்னையும் கிளம்பச் சொன்னாங்க.. ஏசி கட்டில் மெத்தையெல்லாம் இல்லாம அங்கபோயி நைட்டுத் தங்கறதுங்கிறது எனக்கும் சிரமம்தான். இருந்தாலும் எப்படியோ சமாளிச்சுக்கலாம்னு நானும் புறப்படறதுக்குத் தயாரானேன். ஆனா எங்கம்மாதான் ஆகாதுன்ட்ருச்சு. எங்கபையன் அங்கவந்து தங்கறதுக்கு செளகரியப்படாது வேணும்ன்னா உங்க பொண்ணை மட்டும் கூட்டீட்டுப் போங்க. இல்லீன்னா இங்கியே வுட்டுட்டுப் போங்க.. நாளைக்கு மதியவிருந்துக்கு வரும்போது பொண்ணுமாப்பிள்ளையைக் கூட்டீட்டு வந்துடறோம்னு சொல்லுச்சு…

 

செரி.. அதுக்கு நீயென்ன சொன்னே..?

 

நானென்ன சொன்னேன்? எங்கம்மா சொல்ல எதுத்து எங்கூட்ல யாரு பேசீடமுடியும்? காலைலயே போய்க்கலாம் நீயும் இரு நந்தினின்னு சொல்லிப் பார்த்தேன்.. அவ கேக்கல.. போயேதான் ஆகோணம்னு ஒரே புடிவாதமாப் போயிட்டா..

 

நீ என்ன சொல்லீருக்கோணம்னு தெரியுமா? உன்ற எடத்துல நான் இருந்திருந்தா என்ன சொல்லீருப்பேன் தெரியுமா? போய் பொண்ணு கேட்டு நிக்கும்போது அதெல்லாம் தெரியலையாக்கும்? பேசாமா வாயை மூடீட்டுக்கெடன்னு அம்மாவை அடக்கீட்டு நந்தினியோட அவ தாய்புள்ளையோட கெளம்பிப் போயிருப்பேன். செரி அதைவுடு.. அடுத்த நாள் பொண்ணு வீட்ல நடந்த சம்பந்தி விருந்துக்கு இங்கிருந்து எல்லாரும் கெளம்பிப் போனீங்களே.. அன்னிக்கு என்ன நடந்தது?

 

அன்னிக்கு விருந்தெல்லாம் முடிஞ்சு எல்லாரும் கெளம்ப ஆயத்தமாகும்போது நந்தினி வரமுடியாதுன்ட்டா… வேணும்னா உங்க பையன இங்க வுட்டுட்டுப் போங்க.. அத்தாப்பெரிய மாளிகைலயெல்லாம் வந்து வாழறதுக்கு தனக்கு செளரீயப்படாதுன்னு ஒரே போடா போட்டுட்டு உள்ளாறபோயி கதவைச் சாத்திக்கிட்டா.. அப்பறம் என்ன நடந்துதுன்னுதான் உங்களுக்கும் தெரியுமே.. உங்கவூட்லயிருந்து அண்ணியும் அந்த சம்பந்தி விருந்துக்கு வந்திருந்தாங்ளே..  

 

“ஆமாமாம்.. நடந்ததையெல்லாம் அண்ணி எங்கிட்ட சொன்னாதான். அந்தப் புள்ளை அன்னிக்கு அப்படிப் பேசுனதுல தப்பெதுவும் இல்லைன்னுதான் எனக்குத் தோணுது. மானமுள்ள எந்தப் பொண்ணா இருந்தாலும் அப்படித்தான் பேசீருப்பா.. கல்யாணம் பண்ணிவெச்சேதான் ஆகோணம்னு அந்தப் புள்ள சொன்னாளா? ஊருலகமெல்லாம் தேடியும் கெடைக்காம புள்ளைய மட்டும் கொடுத்தாப் போதும் வேறெதுவும் வேண்டாம்னு போயி ஒத்தக்கால்ல நின்னீங்க.. அந்தாளும் சொத்துக்கு ஆசப்பட்டு செரீன்னு பொண்ணக் குடுத்துட்டான். கட்டீட்டுவந்தா ஒழுக்கமா வெச்சுருக்கோணம். கொஞ்சம் பொறுத்திருந்தா தகுதிக்குத் தகுந்த எடமே அமஞ்சிருக்கும் அதுக்குள்ள அவசரப்பட்டு இல்லாதவனூட்டுக்குப் போயிட்டீங்களேன்னு குறுக்கால இருக்கற ஆளுக பேசறதையெல்லாம் காதுலயே வாங்கீருக்கக்கூடாது. எவனோ போறவன்வாரவன் சொன்னதையெல்லாம் நம்பீட்டு இங்க பொழப்பு பெருசு அங்க ஒண்ணுமில்லைங்கற மாதிரி இல்லாத லொள்ளு நாயமெல்லாம் பேசுனா கடைசில இப்படித்தான் ஆகும். நான் நெனச்சா எம்பையனுக்கு எண்ணி எட்டே நாள்ல உன்னையப்போல அம்பதுபேரக் கட்டிவெப்பேன்டின்னு உங்கம்மா சவால் வுட்டுட்டு வந்துதாமே..? இன்னிக்கு மாசம் மூணாகுது.. அம்பதுல இதுவரைக்கும் எத்தன கல்யாணம் பண்ணிவெச்சிருக்குது.?

 

அண்ணா..

 

இன்னிக்கு இந்தக் காலத்துல அதெல்லாம் அவ்வளவு சுலபமில்ல தம்பி. என்னிக்கு அந்தப் பொண்ணு உனக்குப் பொண்டாட்டியா ஆனாளோ அன்னிக்கே உன் பேருலயிருக்கற சொத்துக்கெல்லாம் வாரிசாவும் ஆகீட்டா.. உங்கம்மா நெனைக்கறமாதிரி நாலு பெரிய மனுசனுகளவெச்சுப்பேசி கொஞ்சம் பணத்தக்குடுத்து ஒதுக்கியுட்ரலாம்னா நடக்குமா என்ன? சட்டப்படி கோர்ட்லபோயி உண்டான நஷ்ட ஈடு கொடுத்துட்டு டைவர்ஸ் பண்ணிக்கட்டும்னு உன்ற மாமனாரு இப்ப தெம்பா சவால்வுட ஆரம்பிச்சிட்டாராம். அப்படி ஒருவேளை டைவர்ஸ் ஆச்சுனா அடுத்த நாளே நந்தினியைக் கட்டிக்கிறதுக்கு வாட்டசாட்டமான சூப்பருசூப்பரான மாப்பிள்ளைகளும் ரெடியா இருக்கானுங்களாம். புள்ளையும் நல்ல புள்ளை. அதுவும்போக முதல்புருசன் நஷ்டஈடாக் கொடுக்கப்போற பெரிய அமெளண்டோடவும் வருதுன்னா ஊருக்குப் பத்துப் பசங்க முப்பதைத் தாண்டியும் கல்யாணமில்லாம முண்டக் கட்டையாத் திரியற இந்தக் காலத்துல மாப்பிள்ளைங்க நீ நான்னு போட்டி போட்டுட்டு வரத்தானே செய்வாங்க..?

 

“அண்ணா.. என்னுங்ண்ணா என்னென்னெமோ சொல்றீங்க..? அப்படியெல்லா எதுவும் நடந்துச்சுன்னா என்னால தாங்கவே முடியாதுங்ண்ணா.. அப்புறம் எதுனாச்சும் பண்ணுனாலும் பண்ணிக்குவேன்..

 

“சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் தம்பி..  நிலமை இந்தக் காலத்துல பெண்களுக்கு எப்படி சாதகமா இருக்குதுங்கிறதை நீ உங்கம்மாவுக்கு எடுத்துச்சொல்லி புரியவெக்கோணங்கிறதுக்காகச் சொன்னேன். மத்தபடி அப்படியெல்லாம் எதுவும் நடக்காது.. நீ மனச வுட்றாத.. அப்படி நடக்கிறதுக்குத்தான் நாங்கள்லா வுட்ருவமா என்ன?...

 

மிந்துன வீரமெல்லாம் எங்கம்மாகிட்ட இப்ப இல்லீங்ண்ணா.. அன்னிக்கு வீடுவந்து சேர்ந்ததிலிருந்து ஒரு பத்துநாள்போல வக்கீலாபீசு வக்கீலாபீசா அலஞ்சிட்டெ இருந்தது. எல்லா வக்கீலுகளும் நீங்க அப்பழையா சொன்னீங்களே… அப்படித்தான் சொல்லீருப்பாங்க போலிருக்குது. இப்ப ஆந்துக்குச்சிங்ண்ணா.. குறுக்கிருக்கறவங்க பேச்சக் கேட்டு ரொம்ப ஓவரா ஆடீட்டமோ..? நம்ம பையன் வாழக்கையை நாமளே கெடுத்துட்டமோன்னெல்லம் யோசனை பண்றாப்ல தோணுதுங்ண்ணா..

 

அருமைடா தம்பி.. நல்லா உக்காந்து யோசனை பண்ணட்டும். ஒரு ஆறுமாசத்திக்கு விட்டுப் புடிப்போம். பிறகு நானே அண்ணியோட சொந்தக்காரப்பொண்ணுமூலமா நேரா நந்தினிகிட்டயே பேசி பைசூல் பண்ணியுடறேன். டைவர்ஸ் ஆனாத்தானே இன்னொருத்தன் வந்து கட்டமுடியும்? நீங்கதான் டைவர்ஸ்கேட்டு கோர்ட்டுக்கே போகலியே… இனி அவுங்களா டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்குப் போயி அத்துக்கிட்டாத்தான் உண்டு. அவுங்களுக்கு அந்தளவுக்கெல்லாம் வெவரமும் பத்தாது. வக்கீலுக்குச் செலவு பண்றளவுக்கு அங்க சூழ்நிலையும் இல்லே. நீ கவலைப்படாத தம்பி ஒரு ஆறு மாசத்திக்குப் பொறுமையா இரு.. எல்லாம் சரியாயிடும்..

 

உயரஉயரமான காற்றாலைக் காற்றாடிகள் சுற்றிக் கொண்டிருந்த வெற்று நிலங்களையெல்லாம் கடந்து அந்த அகலமான மண்பாதை சுற்றிலும் கம்பிவேலியிடப்பட்ட தோட்டத்தின் மூங்கில் படல்களாலான நுழைவு வாயிலுக்கு வந்து சேர்ந்திருந்தது. ரகு அண்ணனின் கைபேசி ஒலித்தது. காதில் வைத்தபடியே ‘சொல்லுங்க சண்முகம்..என்றார்.

 

சற்று நேரத்திற்குப் பிறகு ‘வெலைகிலையெல்லாம் பையங்கிட்டச் சொல்லீருந்தனுங்ளே.. அதுதான் பைனலுங் சண்முகம் அதுக்குக் கம்மியாக் குடுத்தாக் கட்டுபடியாகது.என்றார்.

 

இன்னிக்கு எருமைப்பாலு லிட்டரு அம்பதுரூவாய்க்கு சர்வசாதாரணமாப் போகுது.. ஆறுமாசமா நேரம் ரண்டுபுடி பாலுக்கு குடிச்சிருக்குதுனு கணக்குப் போட்டீங்னாக்கூட நான் சொல்றவெலை அந்த பால்காசுக்கே கம்மியாத்தான் இருக்கும்கிறது உங்களுக்கே தெரியும். ஒடச்செல்லாம் கேட்காதீங்க சண்முகம்.. அந்த வெலைக்கு கட்டும்னா அட்வான்ஸ் குடுத்துட்டுப் போங்க காலைலவந்து கன்னுக்குட்டியை ஆட்டோவுல ஏத்திக்கங்க..என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த ரகு அண்ணன் பேசப்பேசவே தொடர்பை சட்டெனத் துண்டித்தார். மேலும் போனை சுவிட்ச் ஆப்பும் செய்து டவுசர்சோப்புக்குள் போட்டுக்கொண்டார்.

 

“இந்தமாதிரி ஆளுககிட்டயெல்லாம் இப்படித்தான் டெக்னிக்கா நடந்துக்கோணம்.. தொடர்ந்து பேசீட்டேயிருந்தோம்னு வெய்யி… அவுனுக நம்மவிடவும் டெக்னிக்காப் பேசி வெலையை ஒடச்சு கீழே அதாளபாதாளத்துக்கு கொண்டுட்டு வந்துருவானுக.. எமகாதனுக..என்றார்.

 

“கன்னுக்குட்டியை எதுக்குங்ண்ணா விக்கறீங்க..? வளர்த்துலாமுங்ளே..என சாமிநாதன் ஆலோசனை நல்கினான்.

 

“அட ஏண்டாநீவேறெ.. கெடாரிக் கன்னா இருந்து வளர்த்துனாலும் ஆதாயமுண்டு.. கெடாக் கன்னை வளர்த்தி என்ன பண்றது..? பெருசானா இந்தமாதிரி எருமை சேர்றதுக்கு வுட்டு காசு பார்க்கலாம்னு வெய்யி.. ஆனா பூச்சிகெடாய்களை பராமரிக்கறதுக்கு நல்ல வலுவான ஆம்பிளையாளுகளா வேணுமே..? பண்ணையில இருக்கிற பையனொரு பொசுக்குட்டி.. அவுனுக்கு அந்தளவுக்கெல்லாம் சாமார்த்தியம் பத்தாது.. நானும் தோட்டத்துல எந்தநேரமும் இருக்கமுடியாது,கடைக்குப் போயாகோணம்.. அதனால இந்தக் கெடா வளர்த்துற பிசுனஸெல்லா நமக்கு ஒத்து வராதுடா..என்றபடியே  கேட்டாகப் போடப்பட்டிருந்த இரண்டு மூங்கில் படல்களில் இடப்புறமாக இருந்த படலை மட்டும் அகலத் திறந்து எருமையும் சாமிநாதனும் பின்தொடர ரகு அண்ணன் உள்ளே நுழைந்தார். தன்னை தணிவிக்கப்போகும் இணையின் இருப்பை எருமை முகர்ந்துவிட்டதுபோல. முக்கால்வாசி பெருமூச்சுக்காற்றும் கால்வாசி சப்தமும் கலந்த குரலொன்றை அடிவயிற்றிலிருந்து சீரான இடைவெளியில் வெளிப்படுத்த ஆரம்பித்தது.

 

“காலைல கொஞ்சம் நேரமே வந்திருந்தீங்கனா மொத ஆளா சேர்த்தீட்டுப் போயிருக்கலாம்.. ஏற்கனவே ரெண்டு எருமையைச் சேர்ந்துருச்சு.. இப்ப பாருங்க யோசனை பண்றதை..எனக் தோட்டத்துக்காரர் கூறினார். ரகு அண்ணனின் எருமை முதுகை நெளித்துக் கொடுத்தவாறு கண்கள்மின்ன நின்றபடியிருந்தது. நசியநீர் ஒழுகியபடியிருக்கும் அரையை முகர்ந்துவிட்டு தலையை இப்படியும் அப்படியுமாகத் திருப்பித்திருப்பி  சில வாய்சேஷ்டைகளைச் செய்த எருமைக்கிடா மேற்கொண்டு எதுவும் செய்யாததாக நேரத்தைக் கடத்தியபடியிருந்தது. திரண்டுகறுத்த ஆண்குறிக்குள்ளிருந்து விரைத்த நிலையில் வெளிப்படும் சிவந்த உட்கொடி போதுமான அளவு வெளிப்படவில்லை என்று தோன்றியது. எப்படியும் இன்னும் ஒரு நாழிகையாவது ஆகும்னு நெனைக்கிறேன் என்ற தோட்டத்துக்காரர் எருமை சேர்ந்தானதும் சத்தம்கொடு என ஆள்காரரிடம் சொல்லிவிட்டு ‘வாங்க.. வூட்டுக்குப்போயி ஒரு கிளாஸ் காபித்தண்ணியாவது குடிச்சிட்டு வருவோம்.. இங்கியே ஏன் நின்னுக்கிட்டுக் கிடக்காட்டி..?என்றார்.

 

தோட்டத்துக்காரரின் வீடு எருமைக்கட்டுத்தாரையிலிருந்து சற்று தள்ளி இருந்தது. வீட்டில் தோட்டத்துக்காரரின் மனைவியும் மகனும் மருமகளும் பேரனும் இருந்தனர். பேரனுக்கு இன்னும் ஒரு வயதுகூட முழுமையடைந்திருக்காது எனத் தோன்றியது. உள்வாசலின் இந்தமுனைக்கும் அந்த முனைக்குமாக நடைவண்டியை உருட்டிக் கொண்டிருந்தான். பேரனுக்கு நடைபழக்கிக் கொண்டிருந்த தோட்டத்துக்காரரின் மனைவி “வாங்கப்பனு வாங்க வாங்க.. அந்த திண்ணைல சித்த உக்காருங்க.. மருமகளைக் காப்பி கொண்டாரச்சொல்றேன்.. என்றாள்.

 

சத்தம்கேட்டு  வீட்டிற்குள்ளிருந்து வெற்றுடம்பும் கைலியுமாக எட்டிப்பார்த்த தோட்டத்துக்காரரின் மகனைக் கண்டதும் சாமிநாதன் திடுக்கிட்டான். அந்தப் பையன் சாமிநாதனின் சரீரத்தைவிடவும் பருத்ததும் திரண்டதும் கருத்ததுமான பெரிய தேகத்தைக் கொண்டிருந்தான். சற்று நேரத்திற்குப் பிறகு வீட்டிற்குள்ளிருந்து நீள்சதுரமான எவர்சில்வர் தட்டொன்றில் காபி டம்ளர்களை வைத்தபடி வெளிப்பட்ட அவன் மனைவியைக் கண்டதும் சாமிநாதன் மேலும் திடுக்கிட்டான். ரதியென்றால் ரதி அப்பேர்ப்பட்ட ரதியாக்கும் என யாரும் தன்னை மறந்து சொல்வார்கள் என்பதுபோல அந்தப்பெண் அவ்வளவு அழகாக இருந்தாள்.

 

டீசர்ட் ஒன்றை அணிந்தபடி வெளிப்பட்ட தோட்டத்துக்காரரின் மகன் நாற்காலியொன்றை எடுத்து உள்வாசலில் போட்டு அமர்ந்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்த இவர்களிடம் மழைபற்றி வெயில்பற்றி இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பது பற்றியெல்லாம் சகஜமாகப் பேசத் துவங்கினான்.

 

எலக்ட்ரிக்கல் கடைபோக ரகு அண்ணன் அரிசிக்கடையும் வைத்திருக்கிறார் என்பதைப்பற்றி அறிந்ததும் ‘எங்க பாப்பாவோட சொந்தக்காரரு ஒருத்தருகூட காங்கயத்துல ரைஸ்மில்லு ஒண்ணை லீசுக்குப் புடிச்சு நடத்தீட்டிருக்கறாரு.. அஞ்சுகிலோ பையிலயிருந்து எழுபத்தியஞ்சுகிலோ மூட்டை வரைக்கும் எந்தெந்த ரகத்துல என்னென்ன அளவுல வேணும்னாலும் மொத்தமா வேணும்னாலுஞ்செரி சில்லறையா வேணும்னாலுஞ்செரி… டாண்ணு சொன்னநேரத்திக்கு கடைக்கே கொண்டாந்து எறக்கீருவாரு.. ஐடியா இருந்தாச் சொல்லுங்க.. ஜாய்ன் பண்ணிவுடறேன்..என்றபடியே பாப்பா.. பாப்பா.. என்று சத்தமாகக் கூப்பிடத்துவங்கினான். ஏனுங் மச்சா.. கூப்பிட்டீங்ளாக்கு..?என்றபடியே வீட்டிற்குள்ளிருந்து வெளியேவந்த மனைவியிடம் ‘உங்க காங்கியத்து ரைஸ்மில்லு மாமனோட விசிட்டிங் கார்ட எடுத்துட்டு வா.. அண்ணனுக்கு வேணுமாமா..என்றான்.

 

விசிட்டிங்கார்டை பர்த்த ரகு அண்ணன் ‘அட.. இவுரு எனக்கும் நல்லா தெரிஞ்சவுருதானுங்க.. ஐஆர் இருவதுல குருணையும் டீலக்ஸபொன்னில இட்லி அரிசியும் கிட்டத்தட்ட பத்துவருசமா இவுருகிட்டத்தான் எடுத்துக்கிட்டு இருக்கேன்என்றார். இதைக்கேட்டதும் அந்தப் பெண்ணுக்கு சந்தோசம் தாங்கவில்லை. அந்த பையனுக்கும்தான். புருசன் பொண்டாட்டி இருவருமாக போட்டிபோட்டுக்கொண்டு அந்த ரைஸ்மில்காரரைப் பற்றிய மேலதிகத் தகவல்களை ரகுஅண்ணனிடம் பிரஸ்தாபிக்கத் துவங்கியிருந்தனர். அந்தப் பெண் நாற்காலியில் அமர்ந்திருந்த தன் புருசனுக்குப் பின்புறமாக அவளுடைய மார்புகள் அவனுடைய பின்னந்தலையில் உரசியும் உரசாத நிலையில் நின்றபடி வெகுசுவராசியமாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கப் பார்க்க சாமிநாதனுக்கு ஏக்கஏக்கமாக வந்தது. தானும் இதுபோல அமர்ந்திருக்க தனக்குப் பின்னால் உரசியும் உரசாத நிலையில் நந்தினியும் நின்றிருக்க வந்திருக்கும் விருந்தினர்களிடம் உற்சாகம் கொப்பளிக்கப் பேசுவதுபோன்ற காட்சியை கற்பனை செய்யத் துவங்கினான்.

 

கற்பனைத்தேரில் உலாப்போய்க் கொண்டிருந்த சாமிநாதனை வாசலில்வந்து நின்றபடி சத்தமிட்ட ஆள்காரரின் சத்தமான குரல் கீழே இறக்கி நிலத்திற்குக் கொண்டுவந்தது. “ஏனுங்.. கெடா சேர்ந்துருச்சுங்கோவ்.. நீங்க எருமையைப் புடிச்சிட்டுப் போலாமுங்..”.

 

வெயில் ஏறிவிட்டிருந்தது. உடல்வேட்கை தணிந்துவிட்டிருந்த எருமை எந்தவிதமான முரண்டும் பண்ணாமல்ஒரு நாய்க்குட்டியைப் போல ரகு அண்ணனைப் பின் தொடர்ந்தபடியிருந்தது. அடித்து முடுக்க வேண்டிய அவசியமெல்லாம் எதுவுமில்லாமல் ஆவாரங்குச்சியை கீழே எறிந்துவிட்டிருந்த சாமிநாதன் வெறுங்கைகளை வீசியபடி எருமைக்குப் பின்னால் நடந்து கொண்டிருந்தான். தோட்டத்துக்காரரின் மகனுக்கும் மருமகளுக்கும் இடையே நிலவிய அன்பும் அன்னியோன்யமும் மனசுக்குள் வந்துவந்து போனது. “இந்த பொம்பளைங்க மனசை மட்டும் யாராலும் புரிஞ்சிக்கவே முடியாதுங்ண்ணா..என்றான்.

 

என்னடா தம்பி சொல்றே..?

 

இல்லே.. அந்தப் பையனும்கூட தொந்தியும் தொப்பையுமா என்னையவிடவுமே பீத்தச்சொரக்காயி மாதிரித்தானே இருக்கான். ஆனாலும், அவம் பொண்டாட்டியப் பாருங்க..எவ்வளவு பிரியமா சந்தோசமா அவங்கூட குடும்பம் நடத்தீட்டிருக்கறான்னு.. இத்தனைக்கும் அந்தப் பொண்ணுக்கு என்னட பொண்டாட்டியவிடவுமே கொஞ்சம் நெறமும் அழகும் கூடுதல்னே சொல்லோணம்..

 

செரி.. இருந்துட்டுப் போச்சாறா வுடு… அவ புருசங்கூட சந்தோசமா பொழச்சிட்டும்தான் போச்சாறா வுடு.. இப்ப அதுக்கு என்ன?

 

 

 

இல்லீங்ண்ணா.. அந்தப் பையனைப் போலத்தான் நானும் இருக்கறேன். நந்தினியைப் போலத்தான் அந்தப் பொண்ணும் இருக்கறா.. நந்தினிக்கு என்னைப் புடிக்காமப்போயிருச்சு.. ஆனா, நந்தினி மாதிரியேயிருக்கிற அந்தப் பொண்ணுக்கு என்னை மாதிரியேருக்கிற அந்தப் பையனை ரொம்பப் புடிச்சிப் போச்சு.. இதையெல்லாம் எப்படீங்ண்ணா புரிஞ்சிக்கிறது..?

 

நந்தினிக்கு முக்கியமா உங்கம்மாகூடத்தானே தம்பி பிரச்சனை.. உங்கம்மாவத்தானே அவுளுக்குப் புடிக்காமப் போயிருச்சு.. உன்னைய இல்லையே..?

 

இல்லீங்ண்ணா.. ரெண்டுபேரும் ஒண்ணா இருக்கும்போதெல்லாம் சில சமயங்களில் நான் பீல் பண்ணீருக்கேன்.. என் பாடி அன்பிட்டா இருக்கறதுபத்தி அவ மனசுக்குள்ள ஓரமா கொஞ்சம் ஒரு ஒவ்வாமையும் இருக்கத்தான் செய்யிதுனு..

 

மனசும் மனசும் ஒண்ணாயிட்டா ஒடம்பு அழகெல்லாம் ஒரு மேட்டரே இல்ல தம்பி.. அதையுந்தவிர நீதான் வாக்கிங் ஜாக்கிங்ன்னு பாடிய பிட் பண்ண ஆரம்பிச்சிட்டியே..அப்புறம் என்ன? இனிமே எல்லாம் செரியாயிடும்

 

சின்ன வயசிலயிருந்தே வேணுங்கிற அளவுக்கு பாலும்தயிரும்நெய்யுமா குடிச்சிக்குடிச்சி வளர்ந்த ஒடம்புங்ண்ணா நம்முளுது. இந்த வாக்கிங் ஜாக்கிங்குக்கெல்லாம் நம்ம பாடி எந்த அளவுக்கு பிட்டாகும்னு தெரியலை.. அதையுந்தவிர வேறசில விசயங்களும் பண்ணுனாத்தான் இந்தப் பிரச்சனைகளெல்லாம் சரியாகும்னு திடீர்னு தோண ஆரம்பிச்சிருச்சுங்ண்ணா..

 

வேறசில விசயங்கள்னா..? ஏதாவது நந்தினிக்கு வசியம்கிசியம் வைக்கப் போறியா..?

 

இதுவும் ஒருவகைல வசியம்தானுங்ண்ணா.. வைக்கற வசியம் அல்ல.. வளர்த்துற வசியம். அந்த எருமைக்கெடா கன்னுக்குட்டியை ஏவாரிக்கு விக்கவேண்டாம். எனக்குக் குடுங்க.. நானே வளர்த்துக்கறேன்..

 

என்னடா தம்பி சொல்றே..?

 

அதாவதுங்ண்ணா.. நமக்கு எந்த மாதிரியான சந்தோசங்கள் வேணும்னாலுஞ்செரி.. அந்த சந்தோசங்களை அடையோணம்னா  மொதல்ல நம்மைச் சுத்தியிருக்கிற மத்தவங்கெல்லாம்  மத்த உசுருகளெல்லாம் அந்த சந்தோசங்களை அனுபவிக்கிறதுக்கு நம்மாலான ஏற்பாடுகளைப் பண்ணனும். சிம்பிளான லாஜிக்குதான். சின்ன வயசுல அப்பிச்சி சொன்னது. ஆனாப் பாருங்க.. இத்தனை நாளா இதுவொரு பெரிய விசயமாப் படலை.. எம்புத்திக்கு உறைக்கலை.. ஆனா, இன்னிக்கு எருமைக்கெடாக்காரர்  வீட்டுல அவுரு மகனும் மருமகனும் சந்தோசமா இருக்கறதைப் பார்த்ததும்தான் அப்பிச்சி சொன்னது எவ்வளவு பெரிய உண்மைன்னு பளிச்சுனு மனசிலாச்சு.. அதுனால..அந்த எருமைக்கெடாயை ஏவாரிக்கு விக்கவேண்டாம்ண்ணா… நானே வாங்கிக்கிறேன். நானே வளர்த்திக்கிறேன்.   

 

வெயிலைக் கும்புட்டா பொண்டாட்டி வந்துருவான்னு நம்புவது.. எருமைக் கெடாயை வளர்த்தால் குடும்பம் ஒன்றாகிவிடும் என கணக்குப் போடுவது.. எப்படித்தான் இவனுக்கு மட்டும் இப்படியெல்லாம் டிசைன்டிசைனாக நம்பிக்கைகள் உண்டாகிறதோ என ரகு அண்ணனுக்கு ஆச்சரியமாக இருந்தது.  எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சாமிநாதனை உற்சாகப் படுத்தும் தொனியில் ரகு அண்ணன் கூறினார். “அதுக்கென்னடா தம்பி.. இப்பவே வேணும்னாலும் வா.. எருமைக் கன்னைப் புடிச்சிக்கலாம்..